படிப்புக் கட்டுரை 46
பாட்டு 17 ‘நீங்கள் சொன்னதை செய்வேன்!’
இயேசு—அனுதாபமுள்ள நம் தலைமைக் குரு
“ நம்முடைய தலைமைக் குரு நம் பலவீனங்களைக் குறித்து அனுதாபப்பட முடியாதவர் அல்ல.”—எபி. 4:15.
என்ன கற்றுக்கொள்வோம்?
இயேசு காட்டும் அனுதாபமும் கரிசனையும் அவரை எப்படி ஒரு சிறந்த தலைமைக் குருவாக ஆக்குகிறது என்றும், அவர் செய்யும் சேவையிலிருந்து நாம் எப்படி நன்மையடைகிறோம் என்றும் பார்ப்போம்.
1-2. (அ) யெகோவா தன்னுடைய மகனை எதற்காகவெல்லாம் பூமிக்கு அனுப்பினார்? (ஆ) இந்தக் கட்டுரையில் நாம் எதைப் பற்றிப் பார்ப்போம்? (எபிரெயர் 5:7-9)
கிட்டத்தட்ட 2,000 வருஷங்களுக்கு முன்பு, யெகோவா தன்னுடைய செல்ல மகனைப் பூமிக்கு அனுப்பினார். அதற்கு ஒரு காரணம், மனிதர்களைப் பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் மீட்டு, சாத்தானால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சரிசெய்வதற்காக. (யோவா. 3:16; 1 யோ. 3:8) அதோடு, ஒரு மனிதராக இயேசுவுக்குக் கிடைக்கிற அனுபவம், அவரை ஒரு அனுதாபமுள்ள... கரிசனையுள்ள... தலைமைக் குருவாக ஆக்கும் என்பதும் யெகோவாவுக்குத் தெரியும். கி.பி. 29-ல் ஞானஸ்நானம் எடுத்தப் பிறகு, இயேசு தலைமைக் குருவாகச் சேவை செய்ய ஆரம்பித்தார்.a
2 பூமியில் இயேசுவுக்குக் கிடைத்த அனுபவம், அனுதாபமுள்ள ஒரு தலைமைக் குருவாக ஆவதற்கு அவருக்கு எப்படி உதவியது என்பதைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம். தன்னுடைய பொறுப்பைச் செய்ய இயேசு எப்படி ‘பரிபூரணமாக்கப்பட்டார்,’ அதாவது பொருத்தமானவராக ஆக்கப்பட்டார், என்பதை நாம் நன்றாகப் புரிந்துகொண்டால் யெகோவாவிடம் நெருங்கிப் போவதும், அவரிடம் ஜெபம் செய்வதும் நமக்குச் சுலபமாக இருக்கும்; நம் பாவங்களால் அல்லது பலவீனங்களால் சோர்ந்துபோய் இருந்தாலும் அப்படிச் செய்ய முடியும்.—எபிரெயர் 5:7-9-ஐ வாசியுங்கள்.
கடவுளுடைய செல்ல மகன் பூமிக்கு வருகிறார்
3-4. பூமிக்கு வந்தபோது எவ்வளவு பெரிய மாற்றங்களை இயேசு சந்தித்தார்?
3 நம்மில் நிறைய பேர், வாழ்க்கையில் மாற்றங்களைச் சந்தித்திருப்போம். உதாரணத்துக்கு, ஆசையாக வாழ்ந்த வீட்டையும், குடும்பத்தையும், நண்பர்களையும் விட்டுவிட்டு வேறொரு இடத்துக்குப் போக வேண்டிய நிலைமை நமக்கு வந்திருக்கலாம். அதுபோன்ற மாற்றங்கள் உண்மையிலேயே சவாலாக இருக்கும். ஆனால், எந்த மனிதருமே இயேசு அளவுக்கு ஒரு மாற்றத்தைச் சந்தித்திருக்க மாட்டார். பரலோகத்தில் இருந்த கடவுளுடைய மகன்களிலேயே அவர்தான் ரொம்ப முக்கியமானவராக இருந்தார். யெகோவாவின் அன்பு மழையில் தினம் தினம் நனைந்தார். யெகோவாவுடைய “வலது பக்கத்தில்” எப்போதுமே சந்தோஷமாகச் சேவை செய்தார். (சங். 16:11; நீதி. 8:30) ஆனாலும் பிலிப்பியர் 2:7 சொல்கிறபடி, அவரிடம் இருந்த “எல்லாவற்றையும் விட்டுவிட்டு,” அதாவது பரலோகத்தில் அவருக்கு இருந்த உயர்ந்த அந்தஸ்தை விட்டுவிட்டு, மனசார பூமிக்கு வந்தார். பூமியில் இருக்கிற பாவமுள்ள மனிதர்களோடு வாழ்வதற்காக வந்தார்.
4 இயேசு பிறந்த சமயத்திலும், அவர் குழந்தையாக இருந்த சமயத்திலும் அவரைச் சுற்றி எப்படிப்பட்ட சூழ்நிலை இருந்தது என்று யோசித்துப் பாருங்கள். இயேசு பிறந்த பிறகு அவருடைய அப்பா-அம்மா எளிமையான பலியைத்தான் கொடுத்தார்கள். இதிலிருந்து, அவர் ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தார் என்று தெரிகிறது. (லேவி. 12:8; லூக். 2:24) இயேசுவின் பிறப்பைப் பற்றிக் கேள்விப்பட்ட ஏரோது ராஜா, அவரைக் கொல்வதற்கு முயற்சி செய்தான். அந்தப் பொல்லாத ராஜாவின் சூழ்ச்சியிலிருந்து தப்பிப்பதற்காக இயேசுவின் குடும்பம் கொஞ்ச நாளைக்கு எகிப்தில் அகதிகளாக இருக்க வேண்டியிருந்தது. (மத். 2:13, 15) பரலோகத்தில் அவர் வாழ்ந்த வாழ்க்கைக்கும் இந்த வாழ்க்கைக்கும் எவ்வளவு வித்தியாசம்!
5. பூமியில் இயேசு எவற்றையெல்லாம் கவனித்தார், அனுதாபமுள்ள தலைமைக் குருவாக ஆவதற்கு அது எப்படி அவரைத் தயார்படுத்தியது? (படத்தையும் பாருங்கள்.)
5 பூமியில் இருந்தபோது, தன்னைச் சுற்றி இருந்தவர்கள் பட்ட கஷ்டங்களை இயேசு கவனித்தார். அன்பானவர்களை மரணத்தில் பறிகொடுக்கிற வலியையும்கூட அனுபவித்தார். ஒருவேளை, அவருடைய வளர்ப்பு அப்பா யோசேப்பு இறந்ததைக்கூட அவர் பார்த்திருக்கலாம். அவர் ஊழியம் செய்த சமயத்தில், தொழுநோயாளிகளையும், கண் தெரியாதவர்களையும், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களையும், பிள்ளைகளைப் பறிகொடுத்தப் பெற்றோர்களையும் சந்தித்தார். அவர்களைப் பார்த்தபோது இயேசுவின் மனம் மெழுகாய் உருகியது. (மத். 9:2, 6; 15:30; 20:34; மாற். 1:40, 41; லூக். 7:13) உண்மைதான், பரலோகத்தில் இருந்தபோதே மனிதர்கள் பட்ட கஷ்டங்களை அவர் பார்த்திருக்கிறார். இருந்தாலும், இப்போது பூமியில் ஒரு மனிதராக, மனிதர்களுடைய இடத்தில் இருந்தே அவர்களுடைய கஷ்டங்களைப் பார்த்தார். (ஏசா. 53:4) பூமியில் இயேசுவுக்குக் கிடைத்த இந்த அனுபவங்கள், மனிதர்களுடைய உணர்வுகளையும் அவர்களுக்கு வரும் விரக்தி, வலி போன்றவற்றையும் புரிந்துகொள்ள உதவியது. மனிதர்களுக்குப் பொதுவாக வரும் உணர்ச்சிகளை அவரும் அனுபவித்தார். துக்கம், வேதனை, களைப்பு அவருக்கும் வந்தது.
தன்னைச் சுற்றி இருந்தவர்களுடைய வேதனைகளையும் உணர்ச்சிகளையும் இயேசு புரிந்துகொண்டு, கரிசனையோடு நடந்துகொண்டார் (பாரா 5)
இயேசு மக்கள்மேல் அனுதாபம் காட்டினார்
6. ஏசாயா தீர்க்கதரிசி பயன்படுத்திய சொல்லோவியங்களில் இருந்து இயேசு காட்டிய அனுதாபத்தையும் கரிசனையையும் பற்றி என்ன தெரிந்துகொள்கிறோம்? (ஏசாயா 42:3)
6 மற்றவர்களால் கொடுமைப்படுத்தப்பட்ட மக்களிடமும் பரிதாபமான நிலையில் இருந்த மக்களிடமும் இயேசு ரொம்ப அனுதாபத்தோடு நடந்துகொண்டார். அப்படி நடந்துகொண்டதால் ஏசாயா மூலம் யெகோவா சொன்ன தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றினார். எபிரெய வேதாகமம் சிலசமயங்களில் செழிப்பான, பலம்படைத்த மக்களை தாராளமாகத் தண்ணீர் பாய்ச்சப்பட்ட தோட்டத்துக்கும் உயரமான உறுதியான மரங்களுக்கும் ஒப்பிட்டுப் பேசுகிறது. (சங். 92:12; ஏசா. 61:3; எரே. 31:12) ஆனால் ஏழை-எளிய, ஒடுக்கப்பட்ட மக்களை, மிதிபட்ட நாணலுக்கும் மங்கியெரிகிற திரிக்கும் ஒப்பிட்டுப் பேசுகிறது. அவற்றால் பெரிதாக எந்தப் பிரயோஜனமும் இருக்காது. (ஏசாயா 42:3-ஐ வாசியுங்கள்; மத். 12:20) ஆனால் அப்படிப்பட்டவர்களிடமும், அதாவது மற்றவர்களால் தாழ்வாகப் பார்க்கப்பட்ட சாதாரண மக்களிடமும், இயேசு அன்போடும் கரிசனையோடும் நடந்துகொள்வார் என்பதை ஏசாயா தீர்க்கதரிசி பயன்படுத்தியிருக்கும் இந்தச் சொல்லோவியங்கள் காட்டுகின்றன.
7-8. ஏசாயா தீர்க்கதரிசனத்தை இயேசு எப்படி நிறைவேற்றினார்?
7 “மிதிபட்ட எந்த நாணலையும் ஒடித்துப்போட மாட்டார். மங்கியெரிகிற எந்தத் திரியையும் அணைக்க மாட்டார்” என்று ஏசாயா சொன்ன வார்த்தைகளை இயேசுவுக்குப் பொருத்தி மத்தேயு தன் சுவிசேஷத்தில் எழுதினார். மிதிபட்ட நாணல் மாதிரியும் மங்கியெரிகிற திரி மாதிரியும் எந்த நம்பிக்கையும் இல்லாத நிலையில் இருந்த மக்களுக்காக இயேசு அற்புதங்களைச் செய்தார். உதாரணத்துக்கு, உடல் முழுக்க தொழுநோய் இருந்த மனிதனை எடுத்துக்கொள்ளுங்கள். ‘குணமாகி திரும்பவும் குடும்பத்தோடும் நண்பர்களோடும் சந்தோஷமாக இருப்பேன்’ என்ற நம்பிக்கையே அவனுக்கு இருந்திருக்காது. ஆனால், அவனை இயேசு குணப்படுத்தினார். (லூக். 5:12, 13) காது கேட்காத, பேச்சு குறைபாடோடு இருந்த மனிதனை எடுத்துக்கொள்ளுங்கள். மற்றவர்கள் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்வதைப் பார்த்தபோது அவனுக்கு எவ்வளவு கஷ்டமாக இருந்திருக்கும்! அவனுக்கு ஒன்றுமே புரிந்திருக்காது. அவனையும் இயேசு குணப்படுத்தினார். (மாற். 7:32, 33) ஆனால், இதுமட்டுமல்ல இயேசு இன்னும் நிறைய செய்தார்.
8 இயேசுவின் காலத்தில் இருந்த பெரும்பாலான யூதர்களுக்கு ஒரு நம்பிக்கை இருந்தது. ஒருவருக்கு வரும் வியாதிகள் அல்லது உடல் குறைபாடுகள், அவர் அல்லது அவருடைய பெற்றோர் செய்த பாவத்துக்கான தண்டனை என்று நம்பினார்கள். (யோவா. 9:2) இந்த மாதிரி ஒரு தப்பான எண்ணம் இருந்ததால், கஷ்டப்படும் மக்களை மற்றவர்கள் கேவலமாகவும் எதற்கும் பிரயோஜனம் இல்லாதவர்களைப் போலவும் நடத்தினார்கள். ஆனால், அப்படிப்பட்டவர்களை இயேசு குணப்படுத்தினார்; யெகோவாவுக்கு அவர்கள்மேல் அக்கறை இருக்கிறது என்பதையும் புரியவைத்தார். இப்படி, ஏசாயாவின் தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றினார். இதிலிருந்து நமக்கு என்ன நம்பிக்கை கிடைக்கிறது?
9. நம் தலைமைக் குரு, பாவமுள்ள மனிதர்கள்மேல் அனுதாபப்படுகிறார் என்பதை எபிரெயர் 4:15, 16 எப்படிக் காட்டுகிறது?
9 எபிரெயர் 4:15, 16-ஐ வாசியுங்கள். நம்மிடமும் இயேசு எப்போதும் அனுதாபத்தோடு நடந்துகொள்வார் என்று நாம் உறுதியாக நம்பலாம். அனுதாபமுள்ள ஒரு நபர் எப்படி நடந்துகொள்வார்? மற்றவர்களுடைய உணர்ச்சிகளைப் புரிந்துகொள்வார், அவர்களுடைய கஷ்டத்தைப் பார்க்கும்போது அவருடைய மனம் துடிக்கும். “அனுதாபம்” என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிற கிரேக்க வார்த்தையின் அர்த்தம், மற்றவர்களுடைய சோகத்திலும் வேதனையிலும் பங்குகொள்வதைக் குறிக்கிறது. எபிரெயர் 10:34-ல் சிறையில் இருக்கிறவர்களுக்கு அனுதாபம் காட்டுவதைப் பற்றிச் சொல்லும்போது இதே கிரேக்க வார்த்தையைத்தான் பவுல் பயன்படுத்தியிருக்கிறார். இயேசு செய்த அற்புதங்களைப் பற்றிப் படிக்கும்போது, மக்கள்மேல் அவருக்கு எவ்வளவு கரிசனை இருந்தது என்பதைப் பார்க்க முடிகிறது. ஏதோ கடமைக்காக அவர் மக்களைக் குணப்படுத்தவில்லை. உண்மையிலேயே அவர்கள்மேல் அக்கறை வைத்திருந்தார்; அவர்களுக்கு உதவ ஆசைப்பட்டார். தொழுநோயாளி ஒருவனை இயேசு குணப்படுத்திய விதத்தை யோசியுங்கள். அவர் நினைத்திருந்தால், தூரத்தில் இருந்தே அவனைக் குணப்படுத்தியிருக்கலாம். ஆனால், அவனைத் தொட்டுக் குணப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு வந்தது. ஒருவேளை, எத்தனையோ வருஷங்களுக்குப் பிறகு இயேசுதான் முதல் தடவையாக அவனைத் தொட்டிருப்பார்! காது கேட்காத ஒரு மனிதனை இயேசு குணப்படுத்தியதை யோசித்துப் பாருங்கள். அவனுடைய இடத்திலிருந்து இயேசு யோசித்ததால், கூட்டத்தாருடைய சத்தம் இல்லாத தனிமையான ஒரு இடத்துக்குக் கூட்டிக்கொண்டு போய், அவனைக் குணப்படுத்தினார். மோசமான பாவத்தைச் செய்து, மனம் திருந்திய பெண்ணிடம் இயேசு எப்படி நடந்துகொண்டார் என்று யோசியுங்கள். அவள் தன்னுடைய கண்ணீரால் இயேசுவின் பாதங்களைக் கழுவி, கூந்தலால் அதைத் துடைத்தாள். ஒரு பரிசேயன் அவளை ரொம்ப தாழ்வாகப் பார்த்தபோது இயேசு அவனைக் கண்டித்து, அந்தப் பெண்ணுக்கு ஆதரவாகப் பேசினார். (மத். 8:3; மாற். 7:33; லூக். 7:44) உடல் குறைபாடோடு இருந்தவர்களையும் மோசமான பாவங்களைச் செய்தவர்களையும் இயேசு ஒதுக்கித்தள்ளவில்லை. அவர்கள் தன்னிடம் வருவதற்கு ஏற்ற மாதிரி பாசமாக நடந்துகொண்டார். அவர்கள்மேல் அன்பு வைத்திருந்ததைக் காட்டினார். இயேசு நம்மிடமும் அதேமாதிரி அனுதாபத்தோடு நடந்துகொள்வார் என்று நாம் உறுதியாக நம்பலாம்.
நம் தலைமைக் குருவைப் பின்பற்றுகிறோம்
10. காது கேட்காதவர்களுக்கும் கண் தெரியாதவர்களுக்கும் உதவ எந்தெந்த பிரசுரங்களைப் பயன்படுத்தலாம்? (படங்களையும் பாருங்கள்.)
10 இயேசுவின் சீஷர்களாக நாமும் அவரை மாதிரியே அன்பு, கரிசனை, அனுதாபம் போன்ற குணங்களைக் காட்ட கடினமாக முயற்சி செய்கிறோம். (1 பே. 2:21; 3:8) காது கேட்காதவர்களையும், கண் தெரியாதவர்களையும் நம்மால் குணப்படுத்த முடியாது என்பது உண்மைதான். ஆனால், அவர்கள் யெகோவாவிடம் நெருங்கி வர நம்மால் உதவ முடியும். பைபிள் பிரசுரங்களை 100-க்கும் அதிகமான சைகை மொழிகளில் நாம் வெளியிடுகிறோம். பார்வை குறைபாடு இருக்கிறவர்களுக்கு உதவ, 60-க்கும் அதிகமான மொழிகளில் பிரெய்ல் பிரசுரங்களை வெளியிடுகிறோம். நம்முடைய வீடியோக்களின் ஆடியோ விவரிப்பு, 100-க்கும் அதிகமான மொழிகளில் தயாரிக்கப்படுகின்றன. கண் தெரியாதவர்களும் காது கேட்காதவர்களும், யெகோவாவிடமும் இயேசுவிடமும் நெருங்கி வருவதற்கு இவையெல்லாம் உதவுகின்றன.
நம் பிரசுரங்கள் 1,000-க்கும் அதிகமான மொழிகளில் கிடைக்கின்றன
இடது: 100-க்கும் அதிகமான சைகை மொழிகள்
வலது: 60-க்கும் அதிகமான மொழிகளில் பிரெய்ல் பிரசுரங்கள்
(பாரா 10)
11. எல்லா பின்னணியைச் சேர்ந்த மக்களுக்கும் கரிசனை காட்டுவதில், யெகோவாவின் அமைப்பு எப்படி இயேசு மாதிரியே நடக்கிறது? (அப்போஸ்தலர் 2:5-7, 33) (படங்களையும் பாருங்கள்.)
11 எல்லா விதமான பின்னணியைச் சேர்ந்தவர்களுக்கும் நல்ல செய்தியைச் சொல்வதற்கு யெகோவாவின் அமைப்பு கடினமாக உழைக்கிறது. இயேசு உயிர்த்தெழுந்து பரலோகத்துக்குப் போன பிறகு என்ன நடந்தது என்று யோசித்துப் பாருங்கள். அவர் தன்னுடைய சீஷர்கள்மேல் கடவுளுடைய சக்தியைப் பொழிந்தார். அப்போது, பெந்தெகொஸ்தே பண்டிகைக்காக ஒன்றுகூடி வந்திருந்த எல்லா மக்களாலும் “தங்களுடைய மொழிகளில்” நல்ல செய்தியைக் கேட்க முடிந்தது. (அப்போஸ்தலர் 2:5-7, 33-ஐ வாசியுங்கள்.) இயேசுவின் வழிநடத்துதலின் கீழ், இன்றும் யெகோவாவின் அமைப்பு 1,000-க்கும் அதிகமான மொழிகளில் பைபிள் பிரசுரங்களைத் தயாரிக்கிறது. அவற்றில் சில மொழிகளை, உலகத்தில் கொஞ்சம் பேர் மட்டுமே பேசுகிறார்கள். உதாரணத்துக்கு, வடக்கு மற்றும் தெற்கு அமெரிக்காவில் வாழ்கிற பழங்குடி மக்கள் பேசும் மொழிகளை எடுத்துக்கொள்ளுங்கள். இந்த மொழிகளைப் பேசுகிறவர்களின் மக்கள் தொகை ரொம்பவே கொஞ்சம்தான். இருந்தாலும், அவர்களுக்கும் நல்ல செய்தி போய்ச் சேர வேண்டும் என்பதற்காக 160-க்கும் அதிகமான அப்படிப்பட்ட மொழிகளில் நம் பிரசுரங்கள் தயாரிக்கப்படுகின்றன. நம் பிரசுரங்கள், 20-க்கும் அதிகமான ரோமானிய மொழிகளிலும் கிடைக்கின்றன. அந்த மொழிகளைப் பேசுகிற ஆயிரக்கணக்கான மக்கள் சத்தியத்தின் பக்கம் வந்திருக்கிறார்கள்.
இடது: 160-க்கும் அதிகமான அமெரிக்க பழங்குடி மொழிகள்
வலது: 20-க்கும் அதிகமான ரோமானிய மொழிகள்
(பாரா 11)
12. யெகோவாவின் அமைப்பு வேறென்ன உதவிகளையெல்லாம் செய்கிறது?
12 நல்ல செய்தியைச் சொல்லும் வேலையை மட்டுமல்ல, இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளையும் அமைப்பு செய்கிறது. இழப்பைச் சந்தித்த சகோதர சகோதரிகளுக்கு உதவ ஆயிரக்கணக்கான வாலண்டியர்கள் கடினமாக உழைக்கிறார்கள். அதுமட்டுமல்ல, மக்கள் ஒன்றுகூடிவந்து யெகோவாவின் அன்பைப் பற்றிக் கற்றுக்கொள்வதற்காக எளிமையான மன்றங்களைக்கூட அமைப்பு கட்டித் தருகிறது.
நம் தலைமைக் குருவால் உங்களுக்கு உதவ முடியும்
13. இயேசு நமக்கு உதவுகிற சில வழிகள் என்ன?
13 இயேசு ஒரு நல்ல மேய்ப்பராக இருப்பதால், நாம் ஒவ்வொருவரும் யெகோவாவிடம் நெருங்கிப் போவதற்கு என்ன தேவையோ அதைச் செய்கிறார். (யோவா. 10:14, 15; எபே. 4:7) வாழ்க்கையில் வரும் சில சூழ்நிலைகளால், மிதிபட்ட நாணல் மாதிரியோ, மங்கியெரிகிற திரியை மாதிரியோ நாம் உணரலாம். தீராத வியாதியாலோ, நாம் செய்த தவறுகளாலோ, சகோதர சகோதரிகள் இடையில் ஏற்படுகிற விரிசல்களாலோ நாம் ரொம்பவே சோர்ந்துபோகலாம். நமக்கு இப்போது இருக்கிற கஷ்டங்களைத் தாண்டி, எதிர்கால நம்பிக்கையின்மீது கவனத்தை வைப்பது போராட்டமாக இருக்கலாம். ஆனால் இதை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்: உங்கள் வேதனைகளை இயேசு பார்க்கிறார்! உங்கள் ஆழ்மனதில் இருக்கிற உணர்ச்சிகளைப் புரிந்துகொள்கிறார்! அவருக்கு உங்கள்மேல் கரிசனை இருப்பதால், அவர் உங்களுக்கு ஆசையாக உதவுகிறார். எப்படி? நீங்கள் பலவீனமாக இருக்கும்போது கடவுளுடைய சக்தியைப் பயன்படுத்தி அவரால் உங்களைப் பலப்படுத்த முடியும். (யோவா. 16:7; தீத். 3:6) அதோடு, அவர் “மனிதர்களைப் பரிசுகளாக” கொடுத்திருக்கிறார். அவர்களையும் சகோதர சகோதரிகளையும் பயன்படுத்திக்கூட அவரால் உங்களைப் பலப்படுத்த முடியும்.—எபே. 4:8.
14. சோர்ந்துபோகும்போது நாம் எதைப் பற்றி யோசிக்கலாம்?
14 உங்களுக்குள் எரிகிற நெருப்பு அணைந்துவிட்டதுபோல், அல்லது உங்களுடைய மனம் நொறுங்கிவிட்டதுபோல் தோன்றுகிறதா? அப்படியென்றால், தலைமைக் குருவாக இயேசு உங்களுக்காக என்னவெல்லாம் செய்கிறார் என்று யோசித்துப் பாருங்கள். உயிரைக் கொடுப்பதற்காக மட்டுமல்ல, பாவமுள்ள மனிதர்கள் படுகிற கஷ்டங்களை நன்றாகப் புரிந்துகொள்வதற்காகவும்தான் யெகோவா இயேசுவைப் பூமிக்கு அனுப்பினார். நம்முடைய பாவங்களையோ பலவீனங்களையோ நினைத்து சோர்ந்துபோகும்போது, “சரியான சமயத்தில்” நமக்கு உதவ இயேசு தயாராகவும் ஆசையாகவும் இருக்கிறார் என்பதை ஞாபகம் வைத்துக்கொள்ளலாம்.—எபி. 4:15, 16.
15. யெகோவாவுடைய மந்தையைவிட்டு வழிதவறிப்போன ஒருவருக்கு எப்படி உதவி கிடைத்தது?
15 கடவுளுடைய மந்தையிலிருந்து வழிதவறிப் போனவர்களைத் தேடி கண்டுபிடிப்பதற்கும், அவர்களுக்கு உதவுவதற்கும்கூட இயேசு தன் மக்களை வழிநடத்துகிறார். (மத். 18:12, 13) ஸ்டெஃபானோ என்ற சகோதரருடைய அனுபவத்தைப் பார்க்கலாம்.b அவர் சபையிலிருந்து நீக்கப்பட்டு 12 வருஷங்கள் கழித்து கூட்டங்களில் கலந்துகொள்ள நினைத்தார். “கூட்டங்களுக்குத் திரும்பிவர எனக்குச் சங்கடமாக இருந்தது. இருந்தாலும், யெகோவாவுடைய அன்பான குடும்பத்தில் ஒருவராக இருக்க வேண்டும் என்று நான் ஆசைப்பட்டேன்” என்று அவர் சொல்கிறார். “என்னைச் சந்தித்துப் பேசிய மூப்பர்கள் என்னிடம் ரொம்ப அன்பாக நடந்துகொண்டார்கள். இருந்தாலும், ‘யெகோவாவிடம் திரும்பி வர எனக்கெல்லாம் தகுதியே இல்லை, பேசாமல் அப்படியே இருந்துவிடலாம்’ என்று சிலசமயம் எனக்குத் தோன்றியது. ஆனால் நான் முயற்சியைக் கைவிட்டுவிடக் கூடாது என்று யெகோவாவும் இயேசுவும் ஆசைப்படுவதை மூப்பர்கள் எனக்கு ஞாபகப்படுத்தினார்கள். நான் திரும்பவும் யெகோவாவின் குடும்பத்தில் ஒருவனாக ஆனபோது, சபையிலிருந்த எல்லாருமே என்னையும் என் குடும்பத்தையும் அன்பாக வரவேற்றார்கள். போகப் போக, என் மனைவியும் பைபிளைப் படிக்க ஒத்துக்கொண்டாள். இப்போது நாங்கள் குடும்பமாக யெகோவாவுக்குச் சேவை செய்கிறோம்” என்கிறார் ஸ்டெஃபானோ. மறுபடியும் சபையில் ஒருவராக ஆக, மனம் திருந்திய ஒருவருக்கு உதவி கிடைக்கும்போது, நம் தலைமைக் குரு எவ்வளவு சந்தோஷப்படுவார்!
16. அனுதாபமுள்ள ஒரு தலைமைக் குரு கிடைத்திருப்பதை நினைத்து நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?
16 பூமியில் வாழ்ந்த சமயம் முழுக்க, இயேசு எத்தனையோ பேருக்கு சரியான சமயத்தில் உதவி செய்திருக்கிறார். இன்றும்கூட தேவைப்படும் சமயத்தில் கண்டிப்பாக நமக்கு உதவி செய்வார் என்று நம்பலாம். புதிய உலகத்திலும், கீழ்ப்படிதலுள்ள மனிதர்களுக்குத் தொடர்ந்து உதவுவார்; பாவத்தாலும் பாவ இயல்பாலும் வந்திருக்கிற எல்லா பாதிப்புகளிலிருந்தும் முழுமையாக விடுதலையாக அவர்களுக்கு உதவுவார். யெகோவா, நம்மேல் இருக்கிற அன்பாலும் இரக்கத்தாலும் தூண்டப்பட்டு தன் மகனை அனுதாபமுள்ள ஒரு தலைமைக் குருவாக நியமித்திருக்கிறார். அதற்காக நாம் அவருக்கு எவ்வளவு நன்றியோடு இருக்க வேண்டும்!
பாட்டு 13 ஏசு நமக்கு முன்மாதிரி
a யூதர்களின் தலைமைக் குரு ஏற்பாட்டுக்குப் பதிலாக இயேசு எப்படித் தலைமைக் குருவாக ஆனார் என்பதைத் தெரிந்துகொள்ள, அக்டோபர் 2023 காவற்கோபுரத்தில், “யெகோவாவின் ஆன்மீக ஆலயத்துக்கு நன்றியோடு இருங்கள்” என்ற கட்டுரையில், பக். 26, பாரா. 7-9-ஐப் பாருங்கள்.
b பெயர் மாற்றப்பட்டுள்ளது.