உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
Tamil (Spoken)
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w26 ஜனவரி பக். 26-31
  • பைபிள் உண்மைகளைக் கனிவாகச் சொல்லுங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பைபிள் உண்மைகளைக் கனிவாகச் சொல்லுங்கள்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2026
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • உண்மைகளை எங்கே கண்டுபிடிக்கலாம்
  • உண்மைகளை ஏன் பேசுகிறோம்
  • உண்மைகளை எப்படிச் சொல்ல வேண்டும்
  • உண்மைகளை எப்போது சொல்ல வேண்டும்
  • எது உண்மை என்பதை உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2024
  • அடக்கத்தைக் காட்டுங்கள்​—நமக்கு எல்லாம் தெரியாது!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2025
  • முடிவுகள் எடுக்கும்போது யெகோவாவை நம்பியிருப்பதை காட்டுங்கள்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
  • அடிப்படை சத்தியங்கள் இப்போதும் நமக்கு உதவுமா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2025
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2026
w26 ஜனவரி பக். 26-31

மார்ச் 30–ஏப்ரல் 5, 2026

பாட்டு 76 உன் நெஞ்சம் துள்ளாதோ?

பைபிள் உண்மைகளைக் கனிவாகச் சொல்லுங்கள்

‘ யெகோவாவே சத்தியத்தின் கடவுள்’! —சங். 31:5.

என்ன கற்றுக்கொள்வோம்?

உண்மையைப் பேசும்போதும் பைபிள் உண்மைகளைச் சொல்லிக்கொடுக்கும்போதும் நாம் எப்படிச் சரியாகப் பேசலாம் என்று கற்றுக்கொள்வோம்.

1. யெகோவாவின் குடும்பத்தில் ஒருவராக இருக்க நாம் என்ன செய்ய வேண்டும்?

‘நீங்கள் எப்படிச் சத்தியத்துக்கு வந்தீர்கள்?’ யெகோவாவின் சாட்சியாக இருக்கும் ஒருவரைப் புதிதாகப் பார்க்கும்போது, நாம் முதலில் கேட்கிற சில கேள்விகளில் இதுவும் ஒன்று. சிலர் இந்தக் கேள்விக்கு, ‘நான் சத்தியத்தில்தான் வளர்க்கப்பட்டேன்’ என்று சொல்லலாம். வேறு சிலர், ‘நான் சமீபத்தில் சத்தியத்துக்கு வந்தேன்’ என்று சொல்லலாம். நாம் இப்படிச் சொல்வதற்குக் காரணம்—கடவுளுடைய வார்த்தையில் இருக்கிற சத்தியங்களின், அதாவது உண்மைகளின், அடிப்படையில்தான் நம் வாழ்க்கையே சுழல்கிறது. அந்த உண்மைகளை நேசித்து, அதன்படி வாழ்ந்தால்தான் யெகோவாவின் குடும்பத்தில் ஒருவராக நம்மால் இருக்க முடியும். நம் பேச்சிலும் நடத்தையிலும் நேர்மையாக இருப்பதும் அதில் உட்பட்டிருக்கிறது.—சங். 15:1-3.

2. (அ) இயேசுவைப் பற்றி மக்கள் என்ன தெரிந்துவைத்திருந்தார்கள்? (ஆ) அவர் சொல்லிக்கொடுத்த உண்மைகள் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தவிருந்தது?

2 இயேசு எப்போதும் உண்மையைத்தான் பேசினார். அவருடைய எதிரிகள் சிலசமயம் அவர் சொன்னதை ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும், அவர் எப்போதும் நேர்மையாகப் பேசினார் என்பதை அவர்கள் ஒத்துக்கொண்டார்கள். (மத். 22:16) தான் சொல்லிக்கொடுக்கும் உண்மைகள் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதைப் பற்றி இயேசு இப்படிச் சொன்னார்: “அப்பாவுக்கு விரோதமாக மகனையும், அம்மாவுக்கு விரோதமாக மகளையும், மாமியாருக்கு விரோதமாக மருமகளையும் பிரிக்க வந்தேன்.” (மத். 10:35) தானும் தன்னுடைய சீஷர்களும் சொன்ன செய்தியால் மக்கள் பிரிய வேண்டும் என்று இயேசு ஆசைப்படவில்லை; ஆனால், யதார்த்தத்தைச் சொன்னார். (மத். 23:37) அவருடைய செய்தி இந்த உலகத்தை இரண்டு தொகுதிகளாகப் பிரிக்கும் என்பது அவருக்குத் தெரியும்; பைபிள் சத்தியங்களை நேசிக்கிறவர்கள் ஒரு தொகுதி! அதை நேசிக்காதவர்கள் இன்னொரு தொகுதி!—2 தெ. 2:9-11.

3. இந்தக் கட்டுரையில் எதைப் பற்றிப் பார்ப்போம்?

3 இயேசு மாதிரியே நாம் நேர்மையாக இருக்க முயற்சி செய்கிறோம்; எல்லா சமயத்திலும் உண்மையைப் பேசுகிறோம். ஒருவேளை, நாம் சொல்வது மற்றவர்களுக்குப் பிடிக்கவில்லை என்றாலும், நாம் உண்மையைத்தான் பேசுவோம். அதேமாதிரி, பைபிளில் இருக்கிற உண்மைகளையும் நாம் மற்றவர்களுக்குச் சொல்கிறோம். அது சிலசமயங்களில் மக்களுக்குப் பிடிக்கவில்லை என்றாலும், அதைச் சொல்கிறோம். அதற்காக, அவற்றை எப்போது சொல்ல வேண்டும்... எப்படிச் சொல்ல வேண்டும்... என்பதைப் பற்றியெல்லாம் கொஞ்சம்கூட யோசிக்க தேவையில்லை என்று அர்த்தமா? இல்லை! இந்தக் கட்டுரையில், ஒரு முக்கியமான கேள்விக்கு முதலில் பதிலைப் பார்ப்போம்: ‘உண்மைகளை எங்கே கண்டுபிடிக்கலாம்?’ பிறகு, அதோடு சம்பந்தப்பட்ட இந்தக் கேள்விக்கும் பதிலைப் பார்ப்போம்: ‘பைபிள் உண்மைகளை நாம் ஏன், எப்படி, எப்போது பேச வேண்டும்?’ இந்தக் கேள்விகளுக்குப் பதில் தெரிந்துகொள்ளும்போது, உண்மைகளை நம்மால் கனிவாகச் சொல்ல முடியும், அதாவது சாதுரியமாக, பொருத்தமான நேரம் பார்த்து சொல்ல முடியும்.

உண்மைகளை எங்கே கண்டுபிடிக்கலாம்

4. யெகோவா உண்மைகளின் ஊற்று என்று எப்படிச் சொல்கிறோம்?

4 யெகோவாதான் உண்மைகளின் ஊற்று! அவர் சொல்வது எல்லாமே உண்மை. உதாரணத்துக்கு எது சரி, எது தவறு என்பதைப் பற்றி அவர் சொல்லியிருப்பதெல்லாம் உண்மை. (சங். 19:9; 119:142, 151) எதிர்காலத்தைப் பற்றி அவர் சொல்லியிருப்பதெல்லாம் உண்மையிலேயே நடக்கும். (ஏசா. 55:10, 11) கொடுத்த வாக்கை அவர் என்றைக்குமே காப்பாற்றாமல் இருந்ததில்லை. (எண். 23:19) சொல்லப்போனால், அவரால் பொய் சொல்லவே முடியாது. (எபி. 6:18) அதனால்தான் யெகோவாவை ‘சத்தியத்தின் கடவுள்,’ அதாவது ‘உண்மையுள்ள கடவுள்,’ என்று பைபிள் சொல்கிறது.—சங். 31:5, அடிக்குறிப்பு.

5. ‘உண்மையுள்ள கடவுளான’ யெகோவாவைக் கண்டுபிடிப்பது ஏன் கஷ்டம் இல்லை? விளக்குங்கள். (அப்போஸ்தலர் 17:27)

5 ‘உண்மையுள்ள கடவுளான’ யெகோவாவைக் கண்டுபிடிப்பது, அதாவது தெரிந்துகொள்வது, கஷ்டம் என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால் அது உண்மை இல்லை! அவர் இருக்கிறார் என்பதற்கான ஆதாரங்கள் நம்மைச் சுற்றி கொட்டிக்கிடக்கின்றன. (ரோ. 1:20) அத்தேனே நகரத்தில் இருந்த கிரேக்க ஞானிகள் சிலரிடம் அப்போஸ்தலன் பவுல் பேசியபோது, மனிதர்கள் கடவுளைத் தேடி “கண்டுபிடிக்க வேண்டும்” என்று கடவுளே ஆசைப்படுவதாகவும், “நம் ஒருவருக்கும் [கடவுள்] தூரமானவராக” இல்லை என்றும் சொன்னார். (அப்போஸ்தலர் 17:27-ஐ வாசியுங்கள்.) சொல்லப்போனால், உண்மைகளைத் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிற மனத்தாழ்மையான ஆட்களை யெகோவா தன் பக்கம் ஈர்க்கிறார்.—யோவா. 6:44.

6. பைபிளில் இருக்கிற சில உண்மைகள் என்ன, அதைத் தெரிந்துகொண்டதை நினைத்து நீங்கள் ஏன் சந்தோஷப்படுகிறீர்கள்?

6 யெகோவாவைக் கண்டுபிடிப்பதற்கு ஒரு வழி—பைபிளைப் படிப்பது! பைபிளை எழுதியவர்கள் கடவுளுடைய சக்தியால் தூண்டப்பட்டு அதை எழுதினார்கள். (2 பே. 1:20, 21) அதனால், அதில் இருப்பது எல்லாமே உண்மை; அதை நாம் தாராளமாக நம்பலாம். உதாரணத்துக்கு, இந்தப் பிரபஞ்சமும் உயிரும் எப்படி உருவானது என்பதைப் பற்றி பைபிள் சொல்வதை நாம் நம்பலாம். (ஆதி. 1:1, 26) நாம் ஏன் பாவம் செய்கிறோம்... நமக்கு ஏன் கஷ்டங்களும் மரணமும் வருகின்றன... என்பதைப் பற்றி பைபிள் சொல்வதையும் நம்பலாம். (ரோ. 5:12; 6:23) ‘பொய்க்குத் தகப்பனான’ சாத்தானால் வந்திருக்கிற எல்லா பாதிப்புகளையும் யெகோவா தன்னுடைய மகன் மூலமாகச் சரிசெய்வார் என்று பைபிள் சொல்வதையும் முழுமையாக நம்பலாம். (யோவா. 8:44; ரோ. 16:20) இயேசு, கெட்டவர்களை அழிப்பார்... இறந்தவர்களை உயிரோடு கொண்டுவருவார்... பூமியைப் பழைய நிலைமைக்கு மாற்றுவார்... எல்லாரும் பரிபூரணமாவதற்கு உதவுவார்... என்ற பைபிள் வாக்குறுதிகளை நாம் தாராளமாக நம்பலாம். (யோவா. 11:25, 26; 1 யோ. 3:8) இந்த உண்மைகளை யெகோவா நமக்குச் சொல்லிக்கொடுத்திருக்கிறார். இதைப் பற்றி மற்றவர்களுக்குச் சொல்லிக்கொடுக்கிற ஒரு அருமையான வாய்ப்பையும் நமக்குக் கொடுத்திருக்கிறார். இது உண்மையிலேயே ஒரு பெரிய பாக்கியம்!—மத். 28:19, 20.

உண்மைகளை ஏன் பேசுகிறோம்

7-8. நாம் என்ன உள்நோக்கத்தோடு உண்மைகளைச் சொல்கிறோம் என்பது முக்கியமா? உதாரணம் சொல்லுங்கள். (மாற்கு 3:11, 12) (படங்களையும் பாருங்கள்.)

7 நாம் ஏற்கனவே பார்த்த மாதிரி, யெகோவாவின் குடும்பத்தில் இருக்க வேண்டுமென்றால், உண்மையைப் பேச வேண்டும். ஆனால், யெகோவாவைச் சந்தோஷப்படுத்த வேண்டுமென்றால் நேர்மையாகப் பேசினால் மட்டும் போதாது. காரணம்? ஏன் அப்படிப் பேசுகிறோம் என்பதையும் அவர் பார்க்கிறார். அதாவது, நம் உள்நோக்கத்தை அவர் பார்க்கிறார். இயேசு இந்தப் பூமியில் இருந்தபோது நடந்த ஒரு சம்பவத்தைப் பார்க்கலாம். (மாற்கு 3:11, 12-ஐ வாசியுங்கள்.) கலிலேயா கடலுக்குப் பக்கத்தில் அவர் பிரசங்கித்துக்கொண்டு இருந்தபோது ஒரு பெரிய கூட்டம் அவரைப் பார்க்க வந்தது. அதில், பேய் பிடித்த சிலரும் இருந்தார்கள். அவர்கள் இயேசு முன்னால் விழுந்து, “நீங்கள் கடவுளுடைய மகன்” என்று சொல்லிக் கத்தினார்கள். அந்தப் பேய்கள் ஏன் இயேசுவைப் பற்றிய உண்மையைச் சொன்னது? ஒருவேளை, சுற்றியிருந்த மக்களின் நம்பிக்கையைச் சம்பாதிக்க அவை நினைத்திருக்கலாம். அந்த மக்களை யெகோவாவிடமிருந்து பிரித்து, தங்கள் பக்கம் ஈர்த்துக்கொள்ள அவை நினைத்திருக்கலாம். அந்தப் பேய்கள் சொன்னது உண்மையாக இருந்தாலும், அவற்றின் உள்நோக்கம் சரியில்லை; சுயநலமாக இருந்தது. அவற்றின் உள்நோக்கம் இயேசுவுக்குத் தெரிந்திருந்ததால், அந்தப் பேய்களால் அவரை ஏமாற்ற முடியவில்லை. தன்னைப் பற்றி அவை பேசியது அவருக்குப் பிடிக்கவும் இல்லை. சொல்லப்போனால், அவரைப் பற்றி யாரிடமும் சொல்லக் கூடாது என்று அந்தப் பேய்களிடம் கட்டளை போட்டார்.

8 இந்தப் பதிவிலிருந்து என்ன கற்றுக்கொள்கிறோம்? நாம் என்ன உள்நோக்கத்தோடு உண்மைகளைச் சொல்கிறோம் என்பதை யெகோவா பார்க்கிறார். அதனால், பைபிளில் இருக்கிற உண்மைகளைச் சொல்லிக்கொடுக்கும்போது நம்முடைய உள்நோக்கம் சுத்தமாக இருக்க வேண்டும். அந்த உண்மைகளைச் சொல்லிக்கொடுப்பதால் வரும் புகழை நம் பக்கம் திருப்பாமல், யெகோவா பக்கம் திருப்ப வேண்டும்.—மத். 5:16; அப்போஸ்தலர் 14:12-15-ஐ ஒப்பிடுங்கள்.

ஒரு சகோதரி ஒரு இளம் பெண்ணுக்கு பைபிள் படிப்பு நடத்துகிறார். இந்தக் காட்சி, இரண்டு விதமாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. 1. அந்தச் சகோதரி பைபிளை மேஜைமேல் தலைகீழாக வைத்துவிட்டு, தன்னைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறார். 2. சகோதரி பைபிளைத் திறந்து வைத்திருக்கிறார், மாணவருக்கு பைபிள் வசனத்தைக் காட்டுகிறார்.

பைபிள் உண்மைகளைக் கற்றுக்கொடுக்கும்போது, மக்களின் கவனத்தை யார் பக்கம் திருப்புகிறீர்கள்? (பாராக்கள் 7-8)


9. நாம் என்ன செய்யக் கூடாது, ஏன்?

9 நமக்குப் புகழ் சேர்த்துக்கொள்ளாமல் இருக்க வேண்டிய இன்னொரு சூழ்நிலையைப் பார்க்கலாம். நாம் ரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டிய ஒரு விஷயத்தை, பொறுப்பில் இருக்கும் ஒரு சகோதரர் நம்மிடம் சொல்கிறார் என்று கற்பனை செய்யுங்கள். அந்தத் தகவலை நாம் மற்றவர்களிடம் சொல்லிவிடுகிறோம் என்று வைத்துக்கொள்ளலாம். நாம் சொன்ன விஷயம் உண்மை என்று பிற்பாடு தெரியவரும்போது, அதைக் கேட்டவர்கள் நம்மைப் பார்த்து அசந்துபோய்விடலாம். நிறைய ரகசியமான விஷயங்கள் நமக்குத் தெரியும் என்றுகூட நினைத்துக்கொள்ளலாம். அவர்களுடைய பார்வையில் நாம் ரொம்ப பெரிய ஆட்கள் போல் தெரியலாம். ஆனால், யெகோவா நம்மைப் பார்த்து சந்தோஷப்படுவாரா? நிச்சயமாக இல்லை! (நீதி. 11:13) ஏன்? முதலில், ரகசியமாக வைக்க வேண்டிய ஒரு விஷயத்தை நாம் மற்றவர்களிடம் சொல்லியிருக்கிறோம். அதுமட்டுமல்ல, நாம் சொன்ன விஷயம் உண்மையாக இருந்தாலும், அதைத் தவறான உள்நோக்கத்தோடு சொல்லியிருக்கிறோம்.

உண்மைகளை எப்படிச் சொல்ல வேண்டும்

10. “கனிவாக” பேசுவது எதைக் குறிக்கிறது? (கொலோசெயர் 4:6)

10 கொலோசெயர் 4:6-ஐ வாசியுங்கள். கொலோசெயில் வாழ்ந்த கிறிஸ்தவர்களிடம் அப்போஸ்தலன் பவுல், அவர்களுடைய பேச்சு “எப்போதும் கனிவாக” இருக்க வேண்டும் என்று சொன்னார். இதற்கு என்ன அர்த்தம்? கிரேக்க மொழியில் இதற்குப் பயன்படுத்தப்பட்டிருக்கும் வார்த்தைகள், நம் பேச்சு மற்றவர்களுக்குப் பிரயோஜனமாக மட்டுமல்ல, அது அன்பாகவும் மனதைத் தொடுகிற விதத்திலும் இருக்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது.

11-12. உண்மைகளைச் சொல்லிக்கொடுக்கும்போது நாம் ஏன் கவனமாக இருக்க வேண்டும்? உதாரணத்தோடு விளக்குங்கள். (படங்களையும் பாருங்கள்.)

11 பைபிளில் இருக்கிற உண்மைகளை மற்றவர்களுக்குச் சொல்லிக்கொடுக்கும்போது, பவுல் கொடுத்த ஆலோசனையின்படி நாம் கனிவாகப் பேச வேண்டும். பைபிளில் இருக்கிற உண்மைகள் அகத்தையும் புறத்தையும் பிரிக்கும் ஒரு கூர்மையான வாள் மாதிரி இருக்கிறது என்று பைபிளே சொல்கிறது. வேறு வார்த்தையில் சொன்னால், ஒருவருடைய உணர்வுகளும் உள்நோக்கங்களும் உண்மையிலேயே எப்படி இருக்கின்றன என்பதை பைபிளால் வெளிப்படுத்த முடியும். (எபி. 4:12) ஒருவேளை, நாம் பைபிளைத் திறமையாகப் பயன்படுத்தவில்லை என்றால், மற்றவர்களுடைய மனதைக் காயப்படுத்திவிடலாம்; தேவையில்லாத வாக்குவாதங்களும் வரலாம். எப்படி?

12 இந்தச் சூழ்நிலையைக் கற்பனை செய்யுங்கள்: கடவுள்பக்தியுள்ள ஒருவரை ஊழியத்தில் சந்திக்கிறீர்கள். அவர் சிலைகளை வைத்து ஜெபம் செய்யும் ஒருவர். கிறிஸ்மஸ், ஈஸ்டர் போன்ற பண்டிகைகளைக் குடும்பமாகக் கொண்டாடுகிறவர். உயிரில்லாத சிலைகளிடம் ஜெபம் செய்வது முட்டாள்தனம் என்று பைபிளைப் பயன்படுத்தி நம்மால் அவரிடம் காட்ட முடியும். கிறிஸ்மஸ், ஈஸ்டர் மாதிரியான பண்டிகைகள் பொய் மதத்திலிருந்து வந்திருக்கின்றன என்பதையும் நிரூபிக்க முடியும். (ஏசா. 44:14-20; 2 கொ. 6:14-17) ஆனால், முதல் தடவை பேசும்போதே அதைப் பற்றியெல்லாம் அவரிடம் சொன்னால் எப்படி இருக்கும்? நாம் சொல்வது உண்மையாகவே இருந்தாலும், கடவுளுடைய வார்த்தையைத் திறமையாகப் பயன்படுத்துகிறவர்களாக இருக்க மாட்டோம்.

ஒரு தம்பதி ஒரு நபருக்கு அவருடைய வீட்டு வாசலில் நின்று சாட்சி கொடுக்கிறார்கள். அந்த நபருடைய குடும்பம் கிறிஸ்மஸ் மரத்தை அலங்கரிக்கிறார்கள். இரண்டு அணுகுமுறைகள் காட்டப்பட்டிருக்கின்றன. 1. jw.org வெப்சைட்டில் இருக்கும் “கிறிஸ்மஸ் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?” என்ற கட்டுரையை அந்தத் தம்பதி அந்த நபருக்குக் காட்டுகிறார்கள். அவர் தன் கைகளைக் கட்டிக்கொண்டு முகத்தைக் கடுகடுப்பாக வைத்துக்கொண்டு அதைப் பார்க்கிறார். 2. jw.org வெப்சைட்டில் இருக்கும் “ஒரு நல்ல அப்பாவாக இருப்பது எப்படி” என்ற ஆங்கில கட்டுரையை அந்தத் தம்பதி அந்த நபரிடம் காட்டுகிறார்கள். சிரித்த முகத்தோடு அவர் கவனிக்கிறார்.

பைபிள் உண்மைகளை எப்படித் திறமையாகக் கற்றுக்கொடுக்கலாம்? (பாராக்கள் 11-12)a


13. நம் பேச்சை எப்படி இன்னும் சுவையானதாக ஆக்கலாம்?

13 நம் பேச்சு “சுவையாக” இருக்க வேண்டும் என்றும் பவுல் சொன்னார். அதற்காக, நாம் உண்மைகளை மாற்றி சொல்ல வேண்டும் என்றோ மறைக்க வேண்டும் என்றோ அவர் அர்த்தப்படுத்தவில்லை. கேட்கிறவர்களுக்கு ‘ருசியாக’ இருக்கிற மாதிரி அதைச் சொல்ல வேண்டும் என்றுதான் பவுல் சொன்னார். (யோபு 12:11) இது ஒருவேளை சவாலாக இருக்கலாம். நாம் சாப்பிடும் உணவை எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு வகையான உணவு நமக்கு சுவையாக இருக்கிறது என்பதற்காக, அது மற்றவர்களுக்கும் சுவையாக இருக்கும் என்று நாம் நினைத்துக்கொள்ள வாய்ப்பிருக்கிறது. பேசுகிற விஷயத்திலும் நாம் அப்படி நினைத்துவிடலாம். நம் பேச்சு நமக்குப் பிடித்திருக்கிறது என்பதற்காக மற்றவர்களுக்கும் அது பிடிக்கும் என்று நாம் நினைத்துக்கொள்ளலாம். ஆனால் அது உண்மையில்லை! உதாரணத்துக்கு சில கலாச்சாரங்களில், மனதில் பட்டதையெல்லாம் சட்டென்று சொல்லிவிடுவது பழக்கமாக இருக்கலாம்; பெரியவர்களிடம்கூட அப்படிப் பேசுவது பழக்கமாக இருக்கலாம். ஆனால், அப்படிப்பட்ட பேச்சை ஏற்றுக்கொள்வது மற்ற கலாச்சாரத்தைச் சேர்ந்தவர்களுக்குக் கஷ்டமாக இருக்கலாம். தங்களிடம் மரியாதையில்லாமல் பேசுவதுபோல் அவர்கள் உணரலாம். “ஒவ்வொருவருக்கும் எப்படிப் பதில் சொல்ல வேண்டும்” என்பதை நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்று பவுல் சொன்னார். அப்படியென்றால், நம்முடைய பேச்சு நமக்கு ருசியாக இருந்தால் மட்டுமே போதாது. அதாவது, நம்முடைய கலாச்சாரத்துக்கும் விருப்பத்துக்கும் ஏற்ற மாதிரி இருந்தால் மட்டுமே போதாது; அது மற்றவர்களுக்கும் ருசியாக இருக்க வேண்டும்.

உண்மைகளை எப்போது சொல்ல வேண்டும்

14. பூமியில் இருந்தபோது, இயேசு தனக்குத் தெரிந்த எல்லா விஷயங்களையும் சீஷர்களுக்குச் சொல்லிக்கொடுத்தாரா? விளக்குங்கள்.

14 இயேசு தன்னுடைய சீஷர்களிடம் எப்போதும் கனிவாகப் பேசினார். நிறைய விஷயங்களை அவர்களுக்கு அன்பாகச் சொல்லிக் கொடுத்தார். (மாற். 6:34) ஆனால் அவர்கள் கற்றுக்கொள்வதற்கு இன்னும் நிறைய விஷயங்கள் இருந்தன. தனக்குத் தெரிந்த எல்லாவற்றையும் இயேசு ஒரேசமயத்தில் சொல்லிக்கொடுத்துவிடவில்லை. அவர்களால் எவ்வளவு புரிந்துகொள்ள முடியும் என்பதை இயேசு தெரிந்துவைத்திருந்தார். சில உண்மைகளை அவர்கள் தெரிந்துகொள்வதற்கு அது சரியான சமயம் இல்லை என்பது அவருக்குத் தெரியும். சொல்லப்போனால், அந்த உண்மைகளையெல்லாம் சொன்னால் அவர்களால் புரிந்துகொள்ள முடியாது என்று சொன்னார். (யோவா. 16:12) இதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?

15. பைபிள் மாணவர்களிடம் நமக்குத் தெரிந்த எல்லா உண்மைகளையும் ஒரேசமயத்தில் சொல்ல வேண்டுமா? விளக்குங்கள். (நீதிமொழிகள் 25:11) (படத்தையும் பாருங்கள்.)

15 இயேசுவுடைய உதாரணத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? நமக்கு உண்மைகள் தெரியும் என்பதற்காக, எல்லாவற்றையும் ஒரேசமயத்தில் சொல்லிக்கொடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை. மக்களுடைய சூழ்நிலையை நாம் புரிந்து நடப்பதன் மூலம் நாமும் இயேசு மாதிரி நடந்துகொள்ளலாம். கிறிஸ்மஸ், ஈஸ்டர் பண்டிகைகளைக் குடும்பமாகக் கொண்டாடுகிற அந்த நபரை எடுத்துக்கொள்ளுங்கள். இந்தப் பண்டிகைகள் பொய் மதத்திலிருந்து வந்தன என்றும் அவற்றை கடவுள் வெறுக்கிறார் என்றும் நமக்குத் தெரியும். ஆனால், கிறிஸ்மஸ் பண்டிகைக்கு ஓரிரண்டு வாரங்களுக்கு முன்புதான் அவருக்கு நாம் பைபிள் படிப்பை ஆரம்பித்திருக்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். இந்தச் சமயத்திலேயே இந்தப் பண்டிகைகள் பொய் மதத்திலிருந்து வந்தன என்று பைபிளில் இருந்து காட்டினால் நம் பேச்சு கனிவாக இருக்குமா? அவர் கிறிஸ்மஸ் கொண்டாடுவதை உடனே விட்டுவிட வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயமாக இருக்குமா? உண்மைதான், பைபிள் மாணவர்கள் சிலர், படிக்கிற விஷயங்களுக்கு ஏற்ற மாதிரி தங்கள் வாழ்க்கையை உடனே மாற்றிக்கொள்வார்கள். ஆனால் வேறு சிலருக்கு, தாங்கள் யோசிக்கிற விதத்தையும் நடந்துகொள்கிற விதத்தையும் மாற்றிக்கொள்ள கொஞ்ச காலம் தேவைப்படும். பைபிள் மாணவர்களுக்கு எப்போது, எதைச் சொன்னால் பொருத்தமாக இருக்குமோ, அதாவது எப்போது அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியுமோ, அந்தச் சமயத்தில் சொல்ல வேண்டும். அப்படிச் செய்யும்போது, அவர்கள் முன்னேற நம்மால் உதவி செய்ய முடியும்.—நீதிமொழிகள் 25:11-ஐ வாசியுங்கள்.

முந்தின படத்தில் காட்டப்பட்ட தம்பதி, அந்த நபரோடு “இன்றும் என்றும் சந்தோஷம்!” சிறுபுத்தகத்தை வைத்து அவருடைய வீட்டில் பைபிள் படிப்பு நடத்துகிறார்கள். பக்கத்தில், கிறிஸ்மஸ் மரம் இருக்கிறது.

உண்மைகளைச் சொல்லிக்கொடுக்கும்போது, எதை எப்போது சொல்ல வேண்டும் என்பதில் இயேசுவின் உதாரணத்தைப் பின்பற்றுங்கள் (பாரா 15)


16. பைபிள் மாணவர்கள் ‘தொடர்ந்து சத்தியத்தில் நடக்க’ நாம் எப்படி உதவலாம்?

16 யெகோவாவைப் பற்றிய உண்மைகளை மற்றவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பதால் நமக்குக் கிடைக்கிற சந்தோஷமே தனி! பைபிள் மாணவர்கள் ‘தொடர்ந்து சத்தியத்தில் நடக்க’ வேண்டுமென்றால், நாம் இந்த விஷயங்களைச் செய்ய வேண்டும்: நாம் அவர்களுக்கு ஒரு நல்ல உதாரணமாக இருக்க வேண்டும். (3 யோ. 3, 4) பைபிளில் இருக்கிற வாக்குறுதிகளை நாம் நம்புகிறோம் என்பதை நாம் வாழ்கிற விதம் காட்ட வேண்டும். உண்மைகளைச் சுத்தமான உள்நோக்கத்தோடு சொல்ல வேண்டும். உண்மைகளைச் சொல்லிக் கொடுக்கும்போது கனிவாகப் பேச வேண்டும்; அதாவது, மென்மையான... அன்பான... வார்த்தைகளைச் சரியான சமயத்தில் சொல்ல வேண்டும். நமக்குக் கிடைக்கிற புகழை யெகோவா பக்கம் திருப்ப வேண்டும். இப்படியெல்லாம் செய்தால், உண்மையுள்ள கடவுளான யெகோவாவை வணங்குகிறவர்கள் என்பதை நாம் நிரூபிப்போம்.

இந்த வசனங்களில் இருந்து என்ன கற்றுக்கொண்டீர்கள்?

  • அப்போஸ்தலர் 17:27

  • கொலோசெயர் 4:6

  • நீதிமொழிகள் 25:11

பாட்டு 160 மீட்பர் வந்தாரே!

a படவிளக்கம்: முதல் படத்தில், ஒரு சகோதரர் ஒருவருடைய வீட்டில் கிறிஸ்மஸ் மரம் இருப்பதைக் கவனிக்கிறார். கிறிஸ்மஸ், பொய் மதத்திலிருந்து தோன்றியது என்பதை விளக்கும் கட்டுரையைக் காட்டுகிறார். இரண்டாவது படத்தில், அப்பாக்களுக்கு உதவும் ஆலோசனைகள் இருக்கிற ஒரு கட்டுரையைக் காட்டுகிறார். இந்த இரண்டில், எது சிறந்ததாக இருக்கும்?

    தமிழ் (பேச்சு வழக்கு) பிரசுரங்கள் (2022-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • Tamil (Spoken)
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்