மார்ச் 23-29, 2026
பாட்டு 18 மீட்புவிலைக்கு நன்றி!
மீட்புவிலைக்கு நீங்கள் எப்படி நன்றி காட்டுவீர்கள்?
“கிறிஸ்துவின் அன்பு எங்களைத் தூண்டியெழுப்புகிறது.”—2 கொ. 5:14.
என்ன கற்றுக்கொள்வோம்?
மீட்புவிலைக்கு நன்றியோடு இருப்பதை நாம் ஒவ்வொருவரும் எப்படிக் காட்டலாம் என்று கற்றுக்கொள்வோம்.
1-2. இயேசு கொடுத்த மீட்புப் பலி என்ன செய்ய நம்மைத் தூண்ட வேண்டும், ஏன்? (2 கொரிந்தியர் 5:14, 15) (படத்தையும் பாருங்கள்.)
இடிந்துவிழுந்த ஒரு கட்டிடத்தின் இடிபாட்டிலிருந்து உங்களை ஒருவர் காப்பாற்றுகிறார் என்று வைத்துக்கொள்வோம். கண்டிப்பாக அவருக்கு நீங்கள் நன்றிக்கடன்பட்டிருப்பீர்கள். உங்களோடு சேர்த்து இன்னும் நிறைய பேரை அவர் காப்பாற்றியிருந்தாலும், உங்களுடைய நன்றியை அவரிடம் தனிப்பட்ட விதமாகச் சொல்ல துடிப்பீர்கள். ஏனென்றால், அவர் உங்களைக் காப்பாற்றியதை நீங்கள் லேசாக எடுத்துக்கொள்ளவில்லை.
2 போன கட்டுரையில் பார்த்த மாதிரி, வழிவழியாக வந்த பாவம் என்ற இடிபாட்டில் இருந்து நம்மையே நாம் காப்பாற்றிக்கொள்ள முடியாது. இயேசு கொடுத்திருக்கிற மீட்புப் பலிதான் நம்மைக் காப்பாற்றுகிறது. அதன் மூலமாக, (1) நம் பாவங்களுக்கு மன்னிப்பு கிடைக்கிறது, (2) பாவ நிலையில் இருந்து முழுமையாகக் குணமாவோம் என்ற நம்பிக்கை கிடைக்கிறது (3) யெகோவாவோடு மறுபடியும் ஒரு நல்ல பந்தத்தை வைத்துக்கொள்ள முடிகிறது. மீட்புவிலையால், யெகோவா கொண்டுவரப்போகிற புதிய உலகத்தில் என்றென்றும் வாழ்கிற நம்பிக்கை நமக்குக் கிடைத்திருக்கிறது. மக்கள்மேல் இயேசு வைத்திருக்கிற அன்பையும் மீட்புவிலை காட்டுகிறது. ஒரு மனிதனாக வருவதற்கு பல காலங்களுக்கு முன்பே இயேசுவுக்கு அந்த அன்பு இருந்தது. (நீதி. 8:30, 31) “கிறிஸ்துவின் [அந்த] அன்பு எங்களைத் தூண்டியெழுப்புகிறது” என்று அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (2 கொரிந்தியர் 5:14, 15-ஐ வாசியுங்கள்.) அப்படியென்றால், இயேசு காட்டியிருக்கிற அன்பு, அவருக்குக் கைமாறு செய்ய நம்மையும் தூண்ட வேண்டும். அவர் செய்த தியாகத்தை நாம் லேசாக எடுத்துக்கொள்ளவில்லை என்பதையும் காட்ட தூண்ட வேண்டும்.
இடிபாடுகளில் இருந்து காப்பாற்றப்பட்டிருந்தாலும் சரி, வழிவழியாக வந்த பாவத்தில் இருந்து காப்பாற்றப்பட்டிருந்தாலும் சரி, நம்மை மீட்டவருக்கு நாம் நன்றிக்கடன்பட்டிருக்கிறோம் (பாராக்கள் 1-2)
3. மீட்புவிலைக்கு ஏன் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழியில் நன்றி காட்ட வாய்ப்பு இருக்கிறது?
3 மீட்புவிலை என்ற அன்பான ஏற்பாட்டுக்கு நீங்கள் எப்படி நன்றி காட்ட நினைக்கிறீர்கள்? நீங்கள் சொல்கிற பதில், மற்றவர்கள் சொல்கிற பதிலிலிருந்து வித்தியாசமாக இருக்கலாம். ஏன் என்று புரிந்துகொள்ள இந்த உதாரணத்தைப் பாருங்கள்: மூன்று நபர்கள் ஒரு இடத்துக்குப் பயணம் செய்ய முடிவு செய்கிறார்கள். ஒவ்வொருவரும் வெவ்வேறு ஊரிலிருந்து தங்கள் பயணத்தை ஆரம்பிக்கிறார்கள். அப்படியென்றால், அவர்கள் தேர்ந்தெடுக்கிற வழி கண்டிப்பாக வித்தியாசமாக இருக்கும். அதேமாதிரிதான், மீட்புவிலைக்கு நன்றி காட்ட வேண்டும் என்ற குறிக்கோளை அடைய நீங்கள் தேர்ந்தெடுக்கிற “வழி,” மற்றவர்களுடைய வழியிலிருந்து வித்தியாசமாக இருக்கலாம். யெகோவாவுக்கும் உங்களுக்கும் இருக்கிற பந்தத்தில் நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து அது மாறலாம். அந்த மூன்று நபர்களைப் போல் இருக்கும் மூன்று தொகுதிகளைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம். (1) பைபிள் மாணவர்கள், (2) ஞானஸ்நானம் எடுத்த கிறிஸ்தவர்கள், (3) யெகோவாவின் மந்தையைவிட்டு விலகிப்போனவர்கள். ஒவ்வொருவரும் தங்கள் நன்றியை எப்படிக் காட்டலாம் என்றும் பார்ப்போம்.
பைபிள் மாணவர்கள்
4. பைபிள் மாணவர்கள் செய்கிற எதையெல்லாம் யெகோவா கவனிக்கிறார்?
4 நீங்கள் பைபிளைப் படித்துக்கொண்டு இருந்தால் இதை யோசித்துப் பாருங்கள்: நல்ல செய்தியை நீங்கள் ஏற்றுக்கொண்டதே, யெகோவா உங்களை தன் பக்கம் ஈர்த்திருக்கிறார் என்பதைக் காட்டுகிறது. அதாவது, நீங்கள் அவரோடு நல்ல பந்தத்தை வைத்துக்கொள்ள அவர் ஆசைப்படுகிறார் என்பதைக் காட்டுகிறது. (யோவா. 6:44; அப். 13:48) யெகோவா “இதயத்தை ஆராய்கிறவர்.” அப்படியென்றால், அவரைப் பற்றித் தெரிந்துகொள்ள நீங்கள் எடுக்கிற முயற்சிகளை அவர் பார்க்கிறார்; அவருக்குப் பிடித்த மாதிரி உங்களை மாற்றிக்கொள்ள நீங்கள் எடுக்கிற முயற்சிகளைப் பார்த்து சந்தோஷப்படுகிறார். (நீதி. 17:3; 27:11) மீட்புவிலையால்தான் உங்களால் யெகோவாவோடு ஒரு நல்ல நட்பை வைத்துக்கொள்ள முடிகிறது. (ரோ. 5:10, 11) அதை என்றுமே லேசாக எடுத்துக்கொள்ளாதீர்கள்.
5. பிலிப்பியர் 3:16 சொல்வது போல் பைபிள் மாணவர்கள் என்ன செய்யலாம்?
5 பைபிள் மாணவர்களே, மீட்புவிலைக்கு நீங்கள் எப்படி நன்றி காட்டலாம்? ஒரு வழி, பிலிப்பியர்களுக்கு பவுல் கொடுத்த இந்த ஆலோசனைக்குக் கீழ்ப்படிவது: “முன்னேற்றப் பாதையில் நாம் எதுவரை போயிருந்தாலும் சரி, அதே பாதையில் தொடர்ந்து சீராக நடக்க வேண்டும்.” (பிலி. 3:16) இந்த ஆலோசனைக்கு ஏற்றபடி, வாழ்வுக்கான பாதையில் தொடர்ந்து சீராக நடக்க முயற்சி செய்யுங்கள். உங்கள் முன்னேற்றத்துக்குத் தடையாக வர எதையுமே அனுமதிக்காதீர்கள்.—மத். 7:14; லூக். 9:62.
6. மாற்றங்களைச் செய்வது கஷ்டமாக இருந்தால் பைபிள் மாணவர்கள் என்ன செய்யலாம்? (உபாகமம் 30:11-14) (படத்தையும் பாருங்கள்.)
6 பைபிளிலிருந்து சமீபத்தில் கற்றுக்கொண்ட ஒரு விஷயத்தை ஏற்றுக்கொள்வது உங்களுக்குக் கஷ்டமாக இருக்கிறதா? அப்படியென்றால், அதைப் பற்றி இன்னும் ஆராய்ச்சி செய்து பாருங்கள். அதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள உதவ சொல்லி ஜெபம் செய்யுங்கள். (சங். 86:11) அப்படிச் செய்தும் அதைப் புரிந்துகொள்வது கஷ்டமாக இருந்தால், அதைப் பற்றிக் கொஞ்ச நாளுக்கு யோசிக்காதீர்கள். அதற்காக, பைபிள் படிப்பு படிப்பதை நிறுத்திவிடாதீர்கள். ஒருவேளை, பிற்பாடு உங்களால் அந்த விஷயத்தைப் புரிந்துகொள்ள முடியலாம். தவறு என்று பைபிள் சொல்லும் ஒரு விஷயத்தை விட்டுவிடுவது உங்களுக்குக் கஷ்டமாக இருக்கிறதா? பாவ இயல்புள்ள மனிதர்களால் செய்ய முடியாததை யெகோவா ஒருபோதும் எதிர்பார்க்க மாட்டார் என்பதை மறந்துவிடாதீர்கள். யெகோவாவுக்குப் பிடித்த மாதிரி உங்களால் கண்டிப்பாக வாழ முடியும். (உபாகமம் 30:11-14-ஐ வாசியுங்கள்.) உங்களுக்கு உதவி செய்வதாக அவர் வாக்குக் கொடுத்திருக்கிறார். (ஏசா. 41:10, 13; 1 கொ. 10:13) அதனால், முயற்சியைக் கைவிட்டுவிடாதீர்கள். உங்களுக்கு இருக்கிற சவாலைப் பற்றியே யோசித்துக்கொண்டு இல்லாமல், மீட்புவிலை உட்பட யெகோவா உங்களுக்காகச் செய்திருக்கிற எல்லா ஏற்பாடுகளுக்கும் எப்படி நன்றி காட்டலாம் என்று யோசியுங்கள். அவர்மேல் உங்களுக்கு இருக்கிற அன்பு அதிகம் ஆக ஆக, “அவருடைய கட்டளைகள் பாரமானவை அல்ல” என்பதை நீங்களே புரிந்துகொள்வீர்கள்.—1 யோ. 5:3.a
முடியாததை யெகோவா உங்களிடம் எதிர்பார்க்க மாட்டார். தன்னுடைய தராதரங்களின்படி வாழ அவர் உங்களுக்கு உதவுவார் (பாரா 6)
7. சத்தியத்தில் வளர்க்கப்படுகிற இளம் பிள்ளைகள் எதை யோசித்துப் பார்க்கலாம்?
7 சத்தியத்தில் வளர்க்கப்படுகிற இளம் பிள்ளைகளே, நீங்களும் பைபிள் மாணவர்கள்தான். சொல்லப்போனால், உங்கள் அப்பா-அம்மாவுக்கு நீங்கள்தான் ரொம்ப முக்கியமான பைபிள் மாணவர். “கடவுளிடம் நெருங்கி வாருங்கள், அப்போது அவர் உங்களிடம் நெருங்கி வருவார்” என்று பைபிள் சொல்கிறது. (யாக். 4:8; 1 நா. 28:9) யெகோவாவிடம் நெருங்கிப் போவதற்கு நீங்கள் முதலில் முயற்சி எடுக்கும்போது பதிலுக்கு அவரும் உங்களிடம் நெருங்கி வருவார். உங்களை அவர் தன்னுடைய மக்களில், பத்தோடு பதினொன்றாகப் பார்ப்பதில்லை. ஒவ்வொருவரையுமே அவர் தனிப்பட்ட விதமாக தன் பக்கம் ஈர்த்திருக்கிறார். சத்தியத்தில் வளர்க்கப்படும் உங்கள் விஷயத்திலும் அதுதான் உண்மை! நீங்கள் யெகோவாவோடு ஒரு நெருக்கமான நட்பை வைத்துக்கொள்வதற்கு எது வழிசெய்திருக்கிறது? மீட்புவிலைதான்! அதை லேசாக எடுத்துக்கொள்ளாதீர்கள். (ரோ. 5:1, 2) இந்த வருஷ நினைவுநாளில் கலந்துகொள்வதற்கு முன்பு, இயேசுவின் மரணத்தால் உங்களுக்கு என்ன நன்மை கிடைத்திருக்கிறது என்று யோசித்துப் பாருங்கள். அப்படி யோசித்தால், அதற்கு நன்றி காட்டுகிற மாதிரி குறிக்கோளை வைக்கவும் அதை அடையவும் நீங்கள் தூண்டப்படுவீர்கள்.b
ஞானஸ்நானம் எடுத்த கிறிஸ்தவர்கள்
8. ஞானஸ்நானம் எடுத்த கிறிஸ்தவர்கள், மீட்புவிலைமீது இருக்கிற விசுவாசத்தை எப்படிக் காட்டியிருக்கிறார்கள்?
8 நீங்கள் ஞானஸ்நானம் எடுத்த கிறிஸ்தவரா? அப்படியென்றால், மீட்புவிலைமீது உங்களுக்கு விசுவாசம் இருப்பதை நீங்கள் ஏற்கனவே நிறைய விதங்களில் காட்டியிருக்கிறீர்கள். உதாரணத்துக்கு, யெகோவாவிடம் நெருங்கிப் போகவும் அவருடைய நெறிமுறைகள்படி வாழவும் நீங்கள் முயற்சி எடுத்திருக்கிறீர்கள். இயேசுவின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து, பைபிளிலிருந்து கற்றுக்கொண்ட விஷயங்களை மற்றவர்களிடம் சொல்லியிருக்கிறீர்கள். யெகோவாவுக்கு உங்களை அர்ப்பணித்து ஞானஸ்நானம் எடுத்திருக்கிறீர்கள். ஒருவேளை, உண்மை வணக்கத்தின் பக்கம் உறுதியாக இருப்பதன் காரணமாக உங்களுக்கு எதிர்ப்புகள் வந்திருந்தால், அதை நீங்கள் தாக்குப்பிடித்திருப்பீர்கள். (2 தீ. 3:12) இப்படி நீங்கள் விசுவாசத்தோடு சகித்திருப்பது, யெகோவாமேல் உங்களுக்கு இருக்கிற அன்பையும் மீட்புவிலைமேல் இருக்கிற நன்றியுணர்வையும் காட்டுகிறது.—எபி. 12:2, 3.
9. ஞானஸ்நானம் எடுத்த கிறிஸ்தவர்கள் எந்த விஷயத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்?
9 ஞானஸ்நானம் எடுத்த கிறிஸ்தவர்களாக, ஒரு விஷயத்தில் நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நாட்கள் போகப்போக, மீட்புவிலையை நாம் லேசாக எடுத்துக்கொள்ள வாய்ப்பிருக்கிறது. எப்படி? முதல் நூற்றாண்டில், எபேசுவில் இருந்த கிறிஸ்தவர்களைப் பற்றி யோசித்துப் பாருங்கள். உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசு, அவர்கள் காட்டிய சகிப்புத்தன்மைக்காக அவர்களைப் பாராட்டினார். அதேசமயத்தில், “உன்னிடம் ஒரு குறை இருக்கிறது. ஆரம்பத்தில் இருந்த அன்பை நீ விட்டுவிட்டாய்” என்றும் சொன்னார். (வெளி. 2:3, 4) இயேசுவின் வார்த்தைகள் காட்டுவதுபோல், ஒரு கிறிஸ்தவர் காலங்கள் போகப்போக வணக்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களைக் கடமைக்காகச் செய்ய ஆரம்பித்துவிடலாம். ஜெபம் செய்வது, கூட்டங்களுக்குப் போவது, ஊழியத்துக்குப் போவது போன்றவற்றை, யெகோவாமேல் இருக்கிற அன்பினால் செய்யாமல் பழக்கதோஷத்தால் செய்துகொண்டு இருக்கலாம். யெகோவாமேல் உங்களுக்கு இருக்கும் அன்பு, ஆரம்பத்தில் இருந்த மாதிரி இப்போது இல்லை என்று தோன்றினால் நீங்கள் என்ன செய்யலாம்?
10. தீமோத்தேயுவுக்கு பவுல் கொடுத்த ஆலோசனையை நீங்கள் எப்படிக் கடைப்பிடிக்கலாம்? (1 தீமோத்தேயு 4:13, 15)
10 வணக்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களை ‘ஆழமாக யோசித்துக்கொண்டு இருக்கும்படியும் அவற்றிலேயே மூழ்கியிருக்கும்படியும்’ அப்போஸ்தலன் பவுல் தீமோத்தேயுவிடம் சொன்னார். (1 தீமோத்தேயு 4:13, 15-ஐ வாசியுங்கள்.) நாமும் இந்த ஆலோசனைக்கு ஏற்றபடி, வணக்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களை இன்னும் நன்றாகச் செய்ய என்ன செய்யலாம் என்று யோசிக்கலாம். அப்போது, நாம் ‘யெகோவாவின் சக்தியால் நிறைந்து ஆர்வத்துடிப்போடு செயல்படுவோம்.’ (ரோ. 12:11) உதாரணத்துக்கு, கூட்டங்களுக்கு நன்றாகத் தயாரித்துவிட்டுப் போகும்போது நம்மால் இன்னும் நன்றாகக் கவனிக்க முடியும். அதேமாதிரி, தனிப்பட்ட படிப்பு படிப்பதற்கு, தனிமையான... அமைதியான... ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்தால், படிக்கிற விஷயங்களை ஆழமாக யோசித்துப் பார்க்க முடியும். நெருப்பு கொழுந்துவிட்டு எரிய, விறகுகளைப் போட்டுக்கொண்டே இருக்க வேண்டும். அதேமாதிரி, மீட்புவிலை உட்பட, யெகோவா நமக்காகச் செய்திருக்கிற எல்லாவற்றின் மேலும் நமக்கு இருக்கிற நன்றியுணர்வு கொழுந்துவிட்டு எரிய, வணக்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களை நாம் செய்துகொண்டே இருக்க வேண்டும். அதோடு, யெகோவாவின் சாட்சிகளாக நமக்குக் கிடைத்திருக்கிற சில விசேஷமான ஆசீர்வாதங்களைப் பற்றி நினைவுநாளுக்கு முந்தின சில வாரங்களில் யோசிக்கலாம். இப்படியெல்லாம் செய்யும்போது, யெகோவாவோடு நெருக்கமாவதற்கு வழிசெய்த மீட்புவிலைமீது நமக்கு நன்றியுணர்வு கண்டிப்பாக அதிகமாகும்.
11-12. ஆர்வம் குறைந்ததுபோல் தோன்றினால், கடவுளுடைய சக்தியை நீங்கள் இழந்துவிட்டதாக நினைக்க வேண்டுமா? விளக்குங்கள். (படத்தையும் பாருங்கள்.)
11 ‘முன்பு இருந்த ஆர்வம் இப்போது எனக்கு இல்லை’ என்று உங்களுக்குத் தோன்றுகிறதா? அப்படியென்றால், சோர்ந்துவிடாதீர்கள்! யெகோவாவின் சக்தியை இழந்துவிட்டதாகவும் நினைத்துக்கொள்ளாதீர்கள். கொரிந்துவில் இருந்த கிறிஸ்தவர்களுக்கு பவுல் தன்னுடைய ஊழியத்தைப் பற்றி என்ன சொன்னார் என்று பாருங்கள்: “அதை விருப்பமில்லாமல் செய்தால்கூட, என்னிடம் ஒரு நிர்வாகப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருக்கிறது” என்றார். அதாவது, ஊழியம் செய்யும் பொறுப்பு தன்னிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது என்று சொன்னார். (1 கொ. 9:17) நமக்கு என்ன பாடம்?
12 பவுலுக்கும் சில நேரங்களில் ஊழியம் செய்கிற ஆர்வம் குறைந்தது. ஆனாலும், ஊழியம் செய்வதை விட்டுவிடக் கூடாது என்பதில் அவர் உறுதியாக இருந்தார். நீங்களும் அவரைப் போலவே இருங்கள்; உங்களுக்குள் இருக்கிற ஆர்வத் தீ மங்கலாக எரிந்தாலும், சரியானதைச் செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருங்கள். செயல்படுவதற்கான “ஆர்வத்தையும் வல்லமையையும்” கொடுக்க சொல்லி யெகோவாவிடம் ஜெபம் செய்யுங்கள். (பிலி. 2:13) யெகோவாவோடு உங்களை நெருக்கமாக்கும் விஷயங்களைத் தொடர்ந்து செய்யுங்கள். அப்படிச் செய்யும்போது, மெல்ல மெல்ல யெகோவாமேல் உங்களுக்கு இருக்கும் அன்பு பலமாகும். உங்கள் இதயத்தில் இருக்கிற ஆர்வத் தீ கொழுந்துவிட்டு எரியும்.
சில நேரம் ஆர்வமே இல்லையென்றாலும், வணக்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களைச் செய்வதை நிறுத்திவிடாதீர்கள் (பாராக்கள் 11-12)
13. நாம் ‘விசுவாசத்தில் நிலைத்திருக்கிறோமா’ என்பதை எப்படித் தொடர்ந்து சோதித்துப் பார்க்கலாம்?
13 “நீங்கள் விசுவாசத்தில் நிலைத்திருக்கிறீர்களா என்பதை எப்போதும் சோதித்துப் பாருங்கள். நீங்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதைத் தெரிந்துகொள்ள உங்களையே எப்போதும் ஆராய்ந்து பாருங்கள்” என்று 2 கொரிந்தியர் 13:5 சொல்கிறது. இந்த ஆலோசனையின்படி, நம்மை நாமே அவ்வப்போது சோதித்துப் பார்ப்பது நல்லது. ஒருவேளை, இந்தக் கேள்விகளைக்கூட கேட்டுக்கொள்ளலாம்: ‘கடவுளுடைய அரசாங்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு என் வாழ்க்கையில் முதலிடம் கொடுக்கிறேனா?’ (மத். 6:33) ‘நான் கெட்டதை வெறுக்கிறேன் என்பதை நான் தேர்ந்தெடுக்கிற பொழுதுபோக்கு காட்டுகிறதா?’ (சங். 97:10) ‘சகோதர சகோதரிகள் மத்தியில் அன்பும் ஒற்றுமையும் வளர நான் உதவுகிறேனா?’ (எபே. 4:2, 3) நினைவுநாள் சமயத்தில், யெகோவா செய்திருக்கிற மீட்புவிலை ஏற்பாட்டைப் பற்றி பொதுவாக நாம் யோசித்துப் பார்ப்போம். ஆனால், நம்மையே நாம் ஆராய்ந்து பார்ப்பதற்கும், நமக்காக வாழாமல் கிறிஸ்துவுக்காக வாழ்கிறோமா என்பதை யோசித்துப் பார்ப்பதற்கும்கூட இது ஒரு நல்ல சமயம்.c
மந்தையைவிட்டு விலகிப்போன ஆடுகள்
14. சில கிறிஸ்தவர்கள் என்ன காரணங்களால் சபையைவிட்டு விலகிப்போயிருக்கிறார்கள்?
14 சில கிறிஸ்தவர்கள், ஒருசில மாதங்களோ பல வருஷங்களோ யெகோவாவுக்கு உண்மையாகச் சேவை செய்த பிறகு, சபையைவிட்டு விலகிப்போயிருக்கிறார்கள். சிலர், ‘வாழ்க்கைக் கவலைகளில்’ மூழ்கிப்போய் அப்படிச் செய்திருக்கலாம். (லூக். 21:34) வேறுசிலர், ஒரு சகோதரரோ சகோதரியோ சொன்ன அல்லது செய்த ஒரு விஷயத்தால் காயப்பட்டு அப்படி விலகிப்போயிருக்கலாம். (யாக். 3:2) இன்னும் சிலர், மோசமான ஒரு பாவத்தைச் செய்ததாலும், உதவி கேட்க தயங்கியதாலும் மந்தையைவிட்டு போயிருக்கலாம். இந்த மாதிரி ஏதாவது ஒரு காரணத்துக்காக நீங்கள் சபையைவிட்டு விலகிப்போயிருந்தால் என்ன செய்யலாம்? யெகோவா செய்திருக்கிற மீட்புவிலை என்ற அன்பான ஏற்பாடு, என்ன செய்ய உங்களை தூண்டும்?
15. மந்தையைவிட்டு விலகிப்போனவர்கள்மேல் இன்னும் அக்கறை இருப்பதை யெகோவா எப்படிக் காட்டுகிறார்? (எசேக்கியேல் 34:11, 12, 16)
15 மந்தையில் இருந்து விலகிப்போனவர்களைப் பற்றி யெகோவா என்ன நினைக்கிறார் என்பதை யோசித்துப் பாருங்கள். யெகோவா அவர்கள்மேல் கோபமாக இல்லை; அவர்களை மறந்துவிடவும் இல்லை. அதற்குப் பதிலாக, காணாமல்போன ஆடுகளைத் தேடிப் போகிற மாதிரி அவர்களைத் தேடுகிறார். அவர்களுக்கு உணவு கொடுக்கிறார், தன்னிடம் திரும்பி வர உதவுகிறார். (எசேக்கியேல் 34:11, 12, 16-ஐ வாசியுங்கள்.) உங்களுக்கும் யெகோவா இதையெல்லாம் செய்கிறார்! இந்தக் கட்டுரையை நீங்கள் படித்துக்கொண்டிருப்பதே, அவருக்குப் பிடித்ததைச் செய்ய வேண்டும் என்ற மனசு உங்களுக்கு இருப்பதைக் காட்டுகிறது. ஆரம்பத்தில் உங்களுடைய நல்ல மனசைப் பார்த்து யெகோவா உங்களை சத்தியத்தின் பக்கம் இழுத்தார். அப்படியென்றால், இப்போது உங்கள் மனசைப் பார்த்து, சத்தியத்தின் பக்கம் உங்களை மறுபடியும் இழுக்காமல் இருப்பாரா?
16. தொலைந்துபோன ஆடுகள் யெகோவாவிடம் திரும்பி வருவதற்கு எவையெல்லாம் உதவி செய்யும்? (படத்தையும் பாருங்கள்.)
16 யெகோவாவிடம் திரும்பி வந்துவிடுங்கள் சிறு புத்தகத்தில் உற்சாகத்தைத் தரும் இந்த வார்த்தைகள் இருக்கின்றன: “நீங்கள் திரும்பிவர வேண்டும் என்று யெகோவா ஆசை ஆசையாகக் காத்திருக்கிறார். கவலைகளைச் சமாளிக்கவும், கோபதாபங்களை சரி செய்யவும், சுத்தமான மனசாட்சியால் கிடைக்கும் நிம்மதியைப் பெற்றுக்கொள்ளவும் அவர் உதவுவார். அப்படி உதவும்போது, சீக்கிரமாகவே சபையில் இருக்கும் எல்லாரோடும் சேர்ந்து அவரை வணங்க வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு வரும்.” உங்களுக்கு உதவ மூப்பர்களும் ஆசையாக இருக்கிறார்கள். அவர்கள் உங்களுக்கு “காற்றுக்கு ஒதுங்கும் இடமாக இருப்பார்கள். புயலிலிருந்து பாதுகாக்கும் புகலிடமாக இருப்பார்கள்.” (ஏசா. 32:2) மீட்புவிலைக்கு நீங்கள் நன்றியோடு இருக்கிறீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும். அந்த நன்றியை நீங்கள் காட்டுவதற்கு இந்தக் கேள்வியைக் கேட்டுக்கொள்ளுங்கள்: “யெகோவாவோடு இருக்கிற ‘பிரச்சினையைச் சரிசெய்ய’ நான் என்ன படிகளை எடுக்கலாம்?” (ஏசா. 1:18; 1 பே. 2:25) ஒருவேளை, ராஜ்ய மன்றத்தில் ஏதாவது ஒரு கூட்டத்தில் உங்களால் கலந்துகொள்ள முடியுமா? யெகோவாவிடம் திரும்பி வருவதற்கு உதவ சொல்லி ஒரு மூப்பரிடம் கேட்ட முடியுமா? ஒருவேளை, கொஞ்ச நாட்களுக்கு உங்களோடு பைபிளைப் படிக்க மூப்பர்கள் ஒருவரை ஏற்பாடு செய்யலாம். யெகோவாவிடம் திரும்ப வருவதற்கும் மீட்புவிலைக்கு நன்றி காட்டுவதற்கும் நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளையும் யெகோவா கண்டிப்பாக ஆசீர்வதிப்பார்.
உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்: “யெகோவாவோடு இருக்கிற ‘பிரச்சினையைச் சரிசெய்ய’ நான் என்ன படிகளை எடுக்கலாம்?” (பாரா 16)
நீங்கள் எப்படி நன்றி காட்டப்போகிறீர்கள்?
17-18. நினைவுநாளுக்கு முன்பு இருக்கும் காலத்தை நீங்கள் எப்படி ஞானமாகப் பயன்படுத்தலாம்?
17 தன்மேல் “விசுவாசம் வைக்கிற யாரும் அழிந்துபோகாமல் முடிவில்லாத வாழ்வைப் பெற வேண்டும் என்பதற்காக” மீட்புவிலை கொடுக்கப்பட்டது என்று இயேசு சொன்னார். (யோவா. 3:16) மனிதர்களைப் பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் காப்பாற்றுவதற்காக யெகோவாதான் இந்த ஏற்பாட்டைச் செய்தார். இதை நாம் யாருமே லேசாக எடுத்துக்கொள்ளக் கூடாது. (ரோ. 3:23, 24; 2 கொ. 6:1) யெகோவாவும் இயேசுவும் நம்மேல் காட்டியிருக்கிற அன்பைப் பற்றி யோசிக்க, நினைவுநாளுக்கு முன்பு இருக்கும் நாட்கள், ஒரு நல்ல சமயமாக இருக்கும். அவர்கள் காட்டிய அன்பு, நம் நன்றியுணர்வைச் செயலில் காட்ட நம்மைத் தூண்டும்.
18 மீட்புவிலைக்கு நீங்கள் எப்படி நன்றி காட்டப்போகிறீர்கள்? உங்கள் பதில் மற்றவர்கள் சொல்கிற பதிலிலிருந்து வித்தியாசமாக இருக்கலாம். ஆனால் இதை மறந்துவிடாதீர்கள்: லட்சக்கணக்கானவர்கள் “தங்களுக்காக வாழாமல் தங்களுக்காக இறந்து உயிரோடு எழுப்பப்பட்டவருக்காகவே” வாழ்கிறார்கள். (2 கொ. 5:15) அவர்களில் ஒருவராக நீங்களும் வாழ முயற்சி எடுக்கும்போது, யெகோவா உங்களைக் கண்டிப்பாக ஆசீர்வதிப்பார்!
பாட்டு 14 ராஜாதி ராஜனை போற்றுவோம்
a பைபிள் படிப்பு படிக்கும்போது, இன்றும் என்றும் சந்தோஷம்! புத்தகத்தின் ஒவ்வொரு பாடத்தின் கடைசியில் இருக்கும் “குறிக்கோள்” என்ற பெட்டியை நன்றாகப் பயன்படுத்துங்கள். நன்றாக முன்னேற அது உங்களுக்கு உதவும்.
b யெகோவாவோடு உங்களுக்கு இருக்கும் பந்தம் இன்னும் பலமாவதற்கு, டிசம்பர் 2017 காவற்கோபுரத்தில் வந்த “இளம் பிள்ளைகளே, ‘உங்களுடைய மீட்புக்காக உழைத்து வாருங்கள்’” என்ற கட்டுரையைப் பாருங்கள்.
c யெகோவாவுக்கு நன்றியோடு இருக்க நீங்கள் இன்னும் என்னவெல்லாம் செய்யலாம் என்று தெரிந்துகொள்ள, ஜூன் 15, 1995 காவற்கோபுரத்தில் வந்த “கடவுளை சேவிக்க எது உங்களைத் தூண்டுகிறது?” என்ற கட்டுரையைப் பாருங்கள்.