மார்ச் 16-22, 2026
பாட்டு 20 உங்கள் செல்ல மகனை தியாகம் செய்தீர்கள்
மீட்புவிலை நமக்கு ஏன் தேவை?
“மரணத்தை உண்டாக்கும் இந்த உடலிலிருந்து யார் என்னைக் காப்பாற்றுவார்?”—ரோ. 7:24.
என்ன கற்றுக்கொள்வோம்?
மீட்புவிலையால் நமக்கு மன்னிப்பு கிடைக்கிறது, குணமாவோம் என்ற நம்பிக்கை கிடைக்கிறது, யெகோவாவிடம் திரும்பவும் நல்ல பந்தத்தை வைத்துக்கொள்ள வாய்ப்பு கிடைக்கிறது. எப்படி என்று கற்றுக்கொள்வோம்.
1-2. எதிலிருந்து நாம் காப்பாற்றப்பட வேண்டும், ஏன்? (ரோமர் 7:22-24) (படத்தையும் பாருங்கள்.)
இந்தக் காட்சியை மனதில் ஓடவிடுங்கள்: ஒரு கட்டிடம் இடிந்து விழுந்துகிடக்கிறது. இடிபாடுகளுக்கு நடுவில் ஒருவர் சிக்கியிருக்கிறார். அவர் உயிரோடுதான் இருக்கிறார். ஆனால், இடிபாடுகளிலிருந்து அவரால் வெளியே வர முடியவில்லை. அவரால் செய்ய முடிந்ததெல்லாம் உதவிக்காகக் கத்துவதும், யாராவது வந்து காப்பாற்றும்வரை காத்திருப்பதும்தான்!
2 இதேமாதிரி ஒரு சூழ்நிலையில் நாம் ஒவ்வொருவரும் இருக்கிறோம். எந்த விதத்தில்? படைப்பாளருக்கு எதிராக ஆதாம் கலகம் செய்தபோது, அவன் பாவியாக ஆனான். அவனிடம் இருந்த பாவத்தன்மையை அவனுடைய பிள்ளைகளுக்கும் கடத்திவிட்டான். அதனால், மனிதர்கள் எல்லாருமே பாவம் என்ற இடிபாட்டில் சிக்கியிருக்கிறார்கள். அதன் விளைவுகளில் இருந்து அவர்களால் தங்களையே காப்பாற்றிக்கொள்ள முடியாது. மனிதர்களிடம் இருக்கிற பாவத்தன்மையைப் பற்றி அப்போஸ்தலன் பவுல் ரோமர்களுக்கு எழுதிய கடிதத்தில் விவரித்தார். (ரோமர் 7:22-24-ஐ வாசியுங்கள்.) “மரணத்தை உண்டாக்கும் இந்த உடலிலிருந்து யார் என்னைக் காப்பாற்றுவார்?” என்று கதறினார். வழிவழியாக கடத்தப்பட்ட பாவம் என்ற இடிபாட்டில் பவுல் சிக்கியிருந்தார். அது கடைசியில் மரணத்தில்தான் கொண்டுபோய் விடும் என்பதைத் தெரிந்திருந்தார். (ரோ. 6:23) பவுல் இருந்த அதே நிலையில்தான் நாமும் இருக்கிறோம். அதாவது, யாராவது ஒருவர் காப்பாற்ற வேண்டிய நிலையில் இருக்கிறோம்.
இடிபாடுகளில் மாட்டிக்கொண்ட ஒரு நபர் போல், நாமும் வழிவழியாக வந்த பாவத்தில் சிக்கியிருக்கிறோம், யாராவது நம்மைக் காப்பாற்ற வேண்டும்! (பாராக்கள் 1-2)
3. மீட்புவிலை எப்படியெல்லாம் நம்மைக் காப்பாற்றும்?
3 “மரணத்தை உண்டாக்கும் இந்த உடலிலிருந்து யார் என்னைக் காப்பாற்றுவார்?” என்று கேட்ட பிறகு, நம்பிக்கை தரும் ஒரு விஷயத்தை பவுல் சொன்னார். “நம்முடைய எஜமானாகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் கடவுளுக்கு நன்றி!” என்று சொன்னார். (ரோ. 7:25) அதாவது, இயேசுவின் மீட்புவிலைa மூலம் யெகோவா நம்மைக் காப்பாற்றியிருக்கிறார் என்று அவர் சொல்ல வந்தார். அந்த மீட்புவிலையால்தான், (1) யெகோவாவிடமிருந்து நமக்கு மன்னிப்பு கிடைக்கிறது, (2) பாவ நிலையில் இருந்து குணமாவோம் என்ற நம்பிக்கை கிடைக்கிறது, (3) மனிதர்களால் திரும்பவும் படைப்பாளரோடு ஒரு நல்ல பந்தத்தை வைத்துக்கொள்ள முடிகிறது. இப்படியெல்லாம் மீட்புவிலை நம்மைக் காப்பாற்றுகிறது. இவற்றைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்க்கும்போது, ‘நம்பிக்கை தருகிற கடவுளான’ யெகோவாமேல் இருக்கும் அன்பு இன்னும் அதிகமாகும். (ரோ. 15:13) இயேசு கிறிஸ்துவுக்கும் இன்னும் நன்றியோடு இருப்போம்; ஏனென்றால், அவருடைய “மீட்புவிலையால் நமக்கு விடுதலை . . . கிடைத்திருக்கிறது.”—கொலோ. 1:14.
மன்னிப்பு கிடைக்கிறது
4-5. நம் எல்லாருக்குமே ஏன் மீட்புவிலை தேவை? (பிரசங்கி 7:20)
4 பாவத்திலிருந்து மன்னிப்பு கிடைக்க வேண்டும் என்றால், நமக்கு மீட்புவிலை தேவை. குறையுள்ள மனிதர்கள் எல்லாருமே பேச்சில் அல்லது நடந்துகொள்கிற விதத்தில் பாவம் செய்கிறார்கள். (பிரசங்கி 7:20-ஐ வாசியுங்கள்.) சில விதமான பாவங்கள் ரொம்பவே மோசமானவை. உதாரணத்துக்கு, மணத்துணைக்குத் துரோகம் செய்வதும் கொலை செய்வதும் திருச்சட்டத்தின்படி மரண தண்டனைக்குரிய குற்றங்கள். (லேவி. 20:10; எண். 35:30, 31) ஆனால் நிறைய பாவங்கள் அந்தளவுக்கு மோசமானவையாக இல்லாமல் இருக்கலாம். இருந்தாலும், அவையும் பாவம்தான்! “என் வாயால் பாவம் செய்யாதபடி, நான் கவனமாக நடந்துகொள்வேன்” என்று சங்கீதக்காரராகிய தாவீது சொன்னார். (சங். 39:1) அப்படியென்றால், நாம் பேசும் சில விஷயங்கள்கூட பாவம் ஆகிவிடலாம்.—யாக். 3:2.
5 ‘அன்றைக்கு இப்படிச் சொல்லிவிட்டேனே!’ ‘இப்படிச் செய்துவிட்டேனே!’ ‘இந்தத் தவறைச் செய்யாமல் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்!’ என்றெல்லாம் யோசித்திருக்கிறீர்களா? சொல்லக் கூடாத, செய்யக் கூடாத விஷயங்களைக் கண்டிப்பாக நாம் எல்லாருமே செய்திருப்போம்! அதனால்தான், “‘எங்களிடம் பாவம் இல்லை’ என்று சொன்னால், நம்மையே ஏமாற்றிக்கொள்கிறவர்களாக இருப்போம்; நமக்குள் சத்தியம் இருக்காது” என்று பைபிள் சொல்கிறது.—1 யோ. 1:8.
6-7. எதன் அடிப்படையில் யெகோவா நம் பாவங்களை மன்னிக்கிறார்? (படத்தையும் பாருங்கள்.)
6 மீட்புவிலையின் அடிப்படையில் யெகோவாவால் நம்முடைய பாவங்களை மன்னிக்க முடியும். (எபே. 1:7) ஆனால், மீட்புவிலை இருக்கிறது என்பதற்காக, மனிதர்கள் பாவம் செய்யும்போது அதை யெகோவா லேசாக எடுத்துக்கொள்வார் என்று அர்த்தம் கிடையாது. சொல்லப்போனால், பாவத்தை அவர் வெறுக்கிறார். (ஏசா. 59:2) அவருடைய பரிபூரண நீதியின்படி, மனிதர்களுடைய பாவத்தை மன்னிப்பதற்கு அவருக்கு ஒரு காரணம், அல்லது அடிப்படை தேவைப்படுகிறது. அதுதான் மீட்புவிலை!
7 திருச்சட்டத்தின்படி, இஸ்ரவேலர்கள் தங்களுடைய பாவப் பரிகாரத்துக்காக மிருகங்களைப் பலியாகக் கொடுக்க வேண்டியிருந்தது. (லேவி. 4:27-31; 17:11) அந்தப் பலிகள், பிற்பாடு கொடுக்கப்படவிருந்த மிகச் சிறந்த பலியான இயேசுவின் பலிக்கும், அதனால் கிடைக்கவிருந்த நன்மைகளுக்கும் நிழலாக இருந்தன. யெகோவா நம்முடைய பாவங்களை மன்னிப்பதற்கான சட்டப்பூர்வ அதிகாரத்தை இயேசுவின் பலி கொடுக்கிறது. அந்தப் பலியின் மதிப்பை பவுல் புரிந்துவைத்திருந்தார். கொரிந்தியர்களுக்கு அவர் எழுதிய வார்த்தைகளிலிருந்து அது தெரிகிறது. கொரிந்துவில் இருந்த கிறிஸ்தவர்கள் முன்பு செய்த பாவங்களைப் பட்டியல் போட்ட பிறகு, பவுல் இப்படிச் சொன்னார்: “நம் எஜமானாகிய இயேசு கிறிஸ்துவின் பெயராலும் கடவுளுடைய சக்தியாலும் சுத்தமாகக் கழுவப்பட்டீர்கள், பரிசுத்தமாக்கப்பட்டீர்கள், நீதிமான்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டீர்கள்.”—1 கொ. 6:9-11.
பாவப் பரிகாரத்துக்காகச் செலுத்தப்பட்ட மிருக பலிகள், இயேசுவின் மீட்புப் பலிக்கும் அதனால் கிடைக்கும் நன்மைகளுக்கும் நிழலாக இருந்தன (பாராக்கள் 6-7)
8. இந்த வருஷ நினைவுநாளுக்காகத் தயாராகும்போது நீங்கள் எதைப் பற்றி யோசித்துப் பார்க்கலாம்?
8 இந்த வருஷ நினைவுநாளுக்காகத் தயாராகும்போது, யெகோவா கொடுக்கிற மன்னிப்பால் உங்களுடைய வாழ்க்கை எவ்வளவு நன்றாக ஆகியிருக்கிறது என்பதை யோசித்துப் பாருங்கள். கடந்த காலத்தில் செய்த பாவங்களுக்காக நீங்கள் மனம் திருந்தியிருந்தால், இன்னமும் அதை நினைத்து குற்ற உணர்வில் தவிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால், மீட்புவிலை நமக்காகக் கொடுக்கப்பட்டிருக்கிறது! இருந்தாலும், யெகோவாவின் மன்னிப்பை ஏற்றுக்கொள்வது உங்களுக்குக் கஷ்டமாக இருக்கிறதா? ‘அவரால் என்னை மன்னிக்க முடிந்தாலும், என்னால் என்னை மன்னிக்க முடியாது’ என்று உங்களுக்குத் தோன்றுகிறதா? அப்படியென்றால், இதை மறந்துவிடாதீர்கள்: மன்னிக்கிறவர் யெகோவாதான்! நியாயந்தீர்க்கிற அதிகாரத்தை அவர் தன்னுடைய மகனுக்குக் கொடுத்திருக்கிறார். யாருக்கு மன்னிப்பு கிடைக்க வேண்டும்... யாருக்குக் கிடைக்கக் கூடாது... என்பதை முடிவு செய்கிற அதிகாரம் உங்களுக்கோ வேறெந்த மனிதருக்கோ கொடுக்கப்படவில்லை. யெகோவா “ஒளியில் இருப்பதுபோல் நாமும் ஒளியில் நடந்தால், . . . அவருடைய மகனான இயேசுவின் இரத்தம் எல்லா பாவங்களிலிருந்தும் நம்மைச் சுத்தமாக்கும்” என்று பைபிள் சொல்கிறது. (1 யோ. 1:6, 7) பைபிளில் இருக்கிற மற்ற உண்மைகளை நாம் எந்தளவுக்கு நம்புகிறோமோ அதேமாதிரி இந்த விஷயத்தையும் தாராளமாக நம்பலாம். மீட்புவிலையின் அடிப்படையில் நம் பாவங்களை மன்னிக்க யெகோவாவுக்குச் சட்டப்பூர்வ அதிகாரமும் இருக்கிறது; நம்மை ‘மன்னிக்கத் தயாராகவும் இருக்கிறார்.’—சங். 86:5.
குணமாவோம் என்ற நம்பிக்கை கிடைக்கிறது
9. நாம் செய்கிற தவறுகளோடு சேர்த்து பாவம் என்பது வேறு எதையும் குறிக்கிறது? (சங்கீதம் 51:5, அடிக்குறிப்பு)
9 பைபிளில், “பாவம்” என்ற வார்த்தை செயல்களை மட்டுமே குறிப்பதில்லை, அது ஒரு நிலையையும் குறிக்கிறது. நாம் கருவில் உருவான நொடியிலிருந்தே இந்த நிலையில்தான் இருக்கிறோம். (சங்கீதம் 51:5-ஐயும் அடிக்குறிப்பையும் வாசியுங்கள்.) அதாவது, பாவ நிலையோடுதான் நாம் பிறக்கிறோம். இந்த நிலை இருப்பதால், தவறு செய்ய வேண்டும் என்ற எண்ணம் நமக்கு வருகிறது. யெகோவா நம்மை எப்படிப் படைத்தாரோ அந்தமாதிரி நம் உடலால் செயல்பட முடிவதில்லை; நமக்கு வியாதிகள் வருகின்றன, வயதாகிறோம், கடைசியில் மரணத்தைத் தழுவுகிறோம். எந்தத் தவறும் செய்யாத பிஞ்சு குழந்தைகள்கூட உடம்பு முடியாமல் இறந்துபோவதற்கு இதுதான் காரணம். நல்லவர்கள் கெட்டவர்கள் என எல்லாருமே கஷ்டப்பட்டு சாவதற்கும் இதுதான் காரணம். ஆதாமின் வம்சத்தில் வந்த எல்லாருமே இந்தப் பாவ நிலையைச் சொத்தாக வாங்கி வந்திருக்கிறார்கள்.
10. பாவ நிலை ஆதாம்-ஏவாளை எப்படிப் பாதித்தது?
10 பாவ நிலை முதல் மனித ஜோடியை எப்படிப் பாதித்தது என்று யோசித்துப் பாருங்கள். அவர்களுடைய மனதுக்குள் திடீர் கலக்கத்தை அது ஏற்படுத்தியது. யெகோவாவுக்கு எதிராக கலகம் செய்த பிறகு, கடவுளுடைய சட்டத்தை, அதாவது அவர்களுடைய ‘இதயத்தில் எழுதப்பட்டிருந்த’ சட்டத்தை, மீறியதால் வந்த விளைவுகளை அவர்கள் உடனடியாகவே சந்தித்தார்கள். (ரோ. 2:15) தங்களுக்குள் வித்தியாசமான மாற்றம் ஏற்படுவதை அவர்களால் உணர முடிந்தது. அது நல்ல விதமான மாற்றம் இல்லை! உடலின் சில பாகங்களை மறைக்க வேண்டும் என்று அவர்களுக்குத் தோன்றியது. ஒரு குற்றவாளியைப் போல படைப்பாளரிடம் இருந்து ஓடி ஒளிந்துகொண்டார்கள். (ஆதி. 3:7, 8) வாழ்க்கையில் முதல் முறையாக குற்ற உணர்வு, பயம், பாதுகாப்பின்மை, வலி, மற்றும் அவமானத்தை அவர்கள் ஒட்டுமொத்தமாக அனுபவித்தார்கள். அவர்களுடைய கடைசி மூச்சுவரை இப்படிப்பட்ட உணர்வுகளோடு அவர்கள் போராட வேண்டியிருந்தது.—ஆதி. 3:16-19.
11. நம்முடைய பாவ நிலை நம்மை எப்படிப் பாதிக்கிறது?
11 பாவ நிலையால் முதல் ஜோடிக்கு வந்த பாதிப்புகள் நம் எல்லாருக்குமே வந்திருக்கிறது. மனதளவில் நமக்கு ஏற்படுகிற கலக்கத்துக்கும் உடலளவில் ஏற்படுகிற பாதிப்புகளுக்கும் ஆணிவேர் அதுதான். சில விஷயங்களை மாற்ற நாம் எவ்வளவுதான் முயற்சி செய்தாலும், நம்மால் அதை முழுமையாகச் சரிசெய்ய முடிவதில்லை. ஏனென்றால், நாம் ‘வீணான வாழ்க்கை வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்.’ (ரோ. 8:20) தனி நபர்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த மனிதவர்க்கத்துக்கே இந்த நிலைதான்! சுற்றுச்சூழலைப் பாதுகாக்க, குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த, வறுமையை ஒழிக்க, தேசங்களுக்கு இடையில் சமாதானத்தைக் கொண்டுவர மனிதர்கள் எவ்வளவோ முயற்சிகள் எடுக்கிறார்கள். அந்த முயற்சிகளால் சில முன்னேற்றங்கள் இருந்தாலும், பெரும்பாலும் அவை வீணாகத்தான் போகின்றன. இந்தப் பாவ நிலையிலிருந்து மனிதர்களை மீட்புவிலை எப்படிக் காப்பாற்றுகிறது?
12. மீட்புவிலை நமக்கு என்ன நம்பிக்கையைக் கொடுக்கிறது?
12 ‘அழிவுக்குரிய அடிமைத்தனத்திலிருந்து விடுதலை செய்யப்படுவோம்’ என்ற நம்பிக்கை மீட்புவிலையால் நமக்குக் கிடைக்கிறது. (ரோ. 8:21) புதிய உலகத்தில் பரிபூரணமாக ஆன பிறகு, உடலளவிலும் மனதளவிலும் நமக்கு எந்தக் குறைபாடுகளும் இருக்காது; மனச்சோர்வு இருக்காது. குற்றவுணர்வு, பயம், பாதுகாப்பின்மை, வலி, அவமானம் போன்ற சிறையிலிருந்து நாம் முழுமையாக விடுதலை ஆகியிருப்போம். இந்தப் பூமியைப் பராமரிப்பதற்கும், எல்லாரும் சேர்ந்து சமாதானமாக வாழ்வதற்கும் நாம் எடுக்கிற முயற்சிகள் அப்போது வீண்போகாது. நம்மை மீட்டெடுத்த ‘சமாதானத்தின் அதிபதியான’ இயேசு கிறிஸ்துவின் ஆட்சியில், நம்முடைய எல்லா முயற்சிகளுக்கும் வெற்றிக் கிடைக்கும்.—ஏசா. 9:6, 7.
13. இந்த வருஷ நினைவுநாளுக்காகத் தயாராகும்போது, நீங்கள் எதைப் பற்றிக்கூட யோசித்துப் பார்க்கலாம்?
13 பாவ நிலையிலிருந்து காப்பாற்றப்படும்போது வாழ்க்கை எவ்வளவு அருமையாக இருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள். ஒவ்வொரு நாளும் கண்விழிக்கும்போது, மனம் சந்தோஷத்தில் நிறைந்திருக்கும். உங்களுக்கோ உங்கள் உறவுகளுக்கோ, வியாதி வந்துவிடுமோ பசி-பட்டினி இருக்குமோ என்ற பயம் இருக்காது; மரணத்தைப் பற்றிய கவலையே இருக்காது. “நம் முன்னால் வைக்கப்பட்டிருக்கிற நம்பிக்கையைப் பலமாகப் பிடித்துக்கொண்டு” இருந்தால், இப்போதேகூட உங்களால் ஓரளவு நிம்மதியாக இருக்க முடியும். “அந்த நம்பிக்கை நம் உயிருக்கு நங்கூரம் போன்றது; அது உறுதியானது, நம்பகமானது.” (எபி. 6:18, 19) கப்பல் கவிழ்ந்துவிடாமல் இருக்க நங்கூரம் எப்படி உதவுமோ, அதேபோல் உங்கள் விசுவாசம் கவிழ்ந்துவிடாமல் இருக்க அந்த நம்பிக்கை உதவும். சோதனைகள் புயல்போல் தாக்கும்போது, தொடர்ந்து சகித்திருக்க அது பலம் கொடுக்கும். தன்னை ‘ஊக்கமாகத் தேடுகிறவர்களுக்கு [யெகோவா] பலன் கொடுக்கிறார்’ என்பதிலும் நீங்கள் உறுதியாக இருக்கலாம். (எபி. 11:6) இப்போது உங்களுக்குக் கிடைக்கும் ஆறுதலும், எதிர்கால நம்பிக்கையும் மீட்புவிலையால்தான் கிடைத்திருக்கிறது.
யெகோவாவோடு திரும்பவும் நல்ல பந்தத்தில் இருக்க வழிசெய்கிறது
14. யெகோவாவோடு நமக்கு இருக்கிற பந்தத்தை பாவம் எப்படிப் பாதித்திருக்கிறது, ஏன்?
14 ஆதாம்-ஏவாள் பாவம் செய்த சமயத்திலிருந்து, மனிதர்கள் கடவுளுக்கு அன்னியர்களாக ஆகிவிட்டார்கள், அதாவது அவரிடமிருந்து பிரித்து வைக்கப்பட்ட ஒரு நிலையில் இருக்கிறார்கள். கடவுளுக்கும் ஒட்டுமொத்த மனிதர்களுக்கும் இடையில் இருக்கிற உறவு துண்டிக்கப்பட்டிருக்கிறது என்று பைபிள்கூட சொல்கிறது. (ரோ. 8:7, 8; கொலோ. 1:21) ஏனென்றால், கடவுளுடைய பரிபூரண தராதரத்தின்படி அவரால் பாவத்தைக் கண்டும்காணாமல் இருக்க முடியாது. யெகோவாவைப் பற்றி பைபிள் இப்படிச் சொல்கிறது: “மிகவும் பரிசுத்தமான உங்களுடைய கண்கள் தீமையைப் பார்த்து ரசிக்காதே! அக்கிரமங்களை உங்களால் சகிக்க முடியாதே!” (ஆப. 1:13) பாவம், கடவுளுக்கும் மனிதர்களுக்கும் இடையே ஒரு பெரிய பிளவை ஏற்படுத்திவிட்டது. இந்தப் பிளவையும் தாண்டி, யெகோவாவோடு மனிதர்கள் ஒரு நல்ல பந்தத்தை வைத்துக்கொள்ள வேண்டுமென்றால், ஒரு பாலம் நமக்குத் தேவைப்படுகிறது. மீட்புவிலை அந்தப் பாலமாகச் செயல்படுகிறது; அதாவது, மனிதர்கள் மறுபடியும் யெகோவாவோடு நல்ல பந்தத்தை வைத்துக்கொள்ள வழிசெய்கிறது.
15. மீட்புவிலை எதைப் பூர்த்தி செய்தது, அதனால் கிடைத்த பலன் என்ன?
15 “நம்முடைய பாவங்களுக்குப் பிராயச்சித்த பலி [இயேசு]தான்.” (1 யோ. 2:2) “பிராயச்சித்த பலி” என்பதற்கான கிரேக்க வார்த்தை “சமாதானப்படுத்துவதற்காக,” அல்லது திருப்திப்படுத்துவதற்காகக் கொடுக்கப்படுகிற ஒன்றைக் குறிக்கலாம். மீட்புவிலை எந்த விதத்தில் யெகோவாவைச் சமாதானப்படுத்தியது? தன்னுடைய சொந்த மகன் இறப்பதைப் பார்த்து யெகோவா ஆறுதலடைந்து சமாதானம் ஆகிவிட்டார் என்று அர்த்தமா? கிடையாது! இயேசு கொடுத்த மீட்புவிலை, யெகோவாவின் பரிபூரண நீதியைப் பூர்த்தி செய்தது. வேறு வார்த்தைகளில், அதைத் திருப்திப்படுத்தியது, அதாவது சமாதானப்படுத்தியது. அந்த மீட்புவிலையின் அடிப்படையில், தனக்கும் மனிதர்களுக்கும் இருக்கிற பந்தத்தை யெகோவாவால் மறுபடியும் சரிசெய்ய முடியும். (ரோ. 3:23-26) சொல்லப்போனால், இயேசுவின் மரணத்துக்கு முன்பு தன்னை உண்மையாக வணங்கியவர்களைக்கூட, யெகோவா நீதிமான்களாக “கருதினார்.” (ஆதி. 15:1, 6) யெகோவாவால் அதை எப்படிச் செய்ய முடிந்தது? தன்னுடைய மகன் மீட்புவிலையைக் கண்டிப்பாகக் கொடுத்துவிடுவார் என்பதில் அவருக்கு அவ்வளவு நம்பிக்கை இருந்ததால்தான், யெகோவாவால் அப்படிச் செய்ய முடிந்தது. (ஏசா. 46:10) மனிதர்கள் மறுபடியும் யெகோவாவோடு ஒரு நல்ல பந்தத்தை வைத்துக்கொள்வதற்கு மீட்புவிலை வழியைத் திறந்து வைத்தது.
16. இந்த வருஷ நினைவுநாளுக்காகத் தயாராகும்போது, இன்னும் எதைப் பற்றி நீங்கள் யோசித்துப் பார்க்கலாம்? (படத்தையும் பாருங்கள்.)
16 மறுபடியும் யெகோவாவோடு ஒரு நல்ல பந்தத்தை வைத்துக்கொள்ள முடிவதால், நம் வாழ்க்கை எவ்வளவு நன்றாக இருக்கிறது என்று யோசித்துப் பாருங்கள். இயேசு சொன்ன மாதிரி உங்களால் யெகோவாவை ‘அப்பா’ என்று கூப்பிட முடிகிறது. (மத். 6:9) அவரை ‘நண்பர்’ என்றுகூட சொல்ல முடிகிறது. ஆனால், யெகோவாவை ‘அப்பா’ அல்லது ‘நண்பர்’ என்று சொல்லும்போதெல்லாம், நம் மனதில் பயபக்தியும் மனத்தாழ்மையும் இருக்க வேண்டும். ஏன்? பாவ நிலையில் இருப்பதால், யெகோவாவோடு ஒரு நெருக்கமான பந்தத்தை நம்முடைய சொந்த முயற்சியால் சம்பாதித்துவிட முடியாது. மீட்புவிலையால்தான் அப்படியொரு பந்தத்தை நம்மால் வைத்துக்கொள்ள முடிகிறது. சொல்லப்போனால், இதற்கான ஏற்பாட்டைச் செய்ததே யெகோவாதான். “சித்திரவதைக் கம்பத்தில் சிந்தப்பட்ட இரத்தத்தால் சமாதானத்தை ஏற்படுத்தி, பூமியிலும் பரலோகத்திலும் இருக்கிற எல்லாவற்றையும் [இயேசு] மூலமாகத் தன்னோடு சமரசமாக்க” யெகோவாதான் ஏற்பாடு செய்திருக்கிறார். (கொலோ. 1:19, 20) அதனால்தான் இப்போதே—பாவ நிலையில் இருக்கும்போதே—யெகோவாவோடு ஒரு நல்ல பந்தத்தை நம்மால் வைத்துக்கொள்ள முடிகிறது.
யெகோவாவுக்கும் மனிதர்களுக்கும் இடையில் திரும்பவும் ஒரு நல்ல பந்தம் வருவதற்கு இயேசுவின் மரணம் மட்டுமே சட்டப்பூர்வ அதிகாரத்தைக் கொடுக்கிறது (பாரா 16)
மீட்புவிலை யெகோவாவின் இரக்கத்தின் அத்தாட்சி
17. யெகோவா இரக்கமுள்ளவர் என்பதை மீட்புவிலை எப்படிக் காட்டுகிறது? (எபேசியர் 2:4, 5)
17 யெகோவா “மகா இரக்கமுடைய கடவுள்” என்பதை மீட்புவிலை நிரூபிக்கிறது. ‘குற்றங்களால் நாம் செத்த நிலையில் இருந்தபோதிலும் . . . அவர் நமக்கு உயிர் தந்திருக்கிறார்.’ (எபேசியர் 2:4, 5-ஐ வாசியுங்கள்.) இடிபாடுகளில் சிக்கிய அந்த நபரைப் போலவே, “முடிவில்லாத வாழ்வைப் பெறுவதற்கேற்ற மனப்பான்மையோடு” இருக்கிறவர்கள், தங்கள் பிரச்சினைகளைத் தாங்களாகவே சரிசெய்ய முடியாது என்பதையும் தங்களுக்கு உதவி தேவை என்பதையும் புரிந்திருக்கிறார்கள். (அப். 13:48) அப்படிப்பட்டவர்கள் நல்ல செய்தியைக் கேட்பதற்கு வாய்ப்பு கொடுப்பதன் மூலம் யெகோவா அவர்களுக்கு உதவுகிறார். தன்னைப் பற்றியும் இயேசுவைப் பற்றியும் அவர்கள் தெரிந்துகொள்ளவும், பாவத்திலிருந்து மனிதர்களை விடுவிக்கும் மீட்புவிலையைப் பற்றித் தெரிந்துகொள்ளவும் உதவுகிறார். (யோவா. 17:3) ஆதாம்-ஏவாள் தவறு செய்தபோது, யெகோவாவின் நோக்கம் நிறைவேறாமல் போகும் என்று சாத்தான் மனக்கோட்டை கட்டியிருந்தால், அது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்!
18. மீட்புவிலையைப் பற்றி யோசித்துப் பார்க்கும்போது, எந்த முக்கியமான விஷயத்தையும் நாம் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும்?
18 மீட்புவிலையால் கிடைக்கிற நன்மைகளைப் பற்றி யோசிப்பதோடு சேர்த்து, யெகோவா அதை முக்கியமாக ஏன் கொடுத்தார் என்பதையும் நாம் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும்: நமக்கு நன்மை கிடைக்க வேண்டும் என்பதற்காக மட்டுமல்ல, ஏதேன் தோட்டத்தில் சாத்தான் எழுப்பிய கேள்விக்குப் பதிலடி கொடுப்பதற்காகத்தான் முக்கியமாக அதைக் கொடுத்தார். (ஆதி. 3:1-5, 15) மீட்புவிலை மூலமாக யெகோவா தன்னுடைய பெயரைப் பரிசுத்தப்படுத்துகிறார், அதன்மேல் சுமத்தப்பட்டிருந்த களங்கத்தை நீக்குகிறார். பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் நம்மைக் காப்பாற்றுவதன் மூலம் நம்மேல் அன்பு வைத்திருப்பதைக் காட்டுகிறார். நம்மேல் அவருக்கு அளவற்ற கருணை இருப்பதால், நாம் பாவ நிலையில் இருந்தால்கூட சாத்தானுக்குப் பதிலடி கொடுப்பதில் நமக்கும் ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கிறார். (நீதி. 27:11) மீட்புவிலைக்கு நாம் எப்படி நன்றி காட்டலாம்? அடுத்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
பாட்டு 19 எஜமானின் இரவு விருந்து
a வார்த்தையின் விளக்கம்: மீட்புவிலை என்பது அடிமைத்தனத்திலிருந்து விடுதலை செய்வதற்காக செலுத்தப்படும் ஒரு தொகையைக் குறிக்கிறது. இயேசுவின் உயிர்த்தியாகம்தான், கீழ்ப்படிதலுள்ள மனிதர்களை பாவம் மற்றும் மரணம் என்ற அடிமைத்தனத்திலிருந்து விடுதலை செய்யும் மீட்புவிலை.