அந்த மிகப் பெரிய சுவர்—ஒரு பேரரசனின் சொப்பனத்திற்கு நினைவுச் சின்னம்
ஒரு நாள் அது கண்டிப்பாக நிகழவேண்டியதாக இருந்தது. தன்னுடைய வீட்டைச் சுற்றி ஒரு சுவர் கட்டப்பட வேண்டும் என்று அந்த மனிதன் கட்டளையிட்டான். அந்த மனிதன் ஒரு பேரரசன். சீனா முழுவதும் அவனுடைய வீடு! ஆனால் அந்த முடிமன்னன் யார்? இப்படிப்பட்ட ஒரு பாதுகாப்பு அரணைக் கட்டுவதற்குத் தன்னுடைய முழு சாம்ராஜ்யத்தை ஏன் அவன் ஒன்று திரட்டினான்?
இந்தக் கேள்விகளுக்கு விடையளிக்க நாம் போரிடும் அரசுகள் என்றழைக்கப்பட்ட சீனருடைய வரலாற்றின் காலப்பகுதியைப் பார்க்க வேண்டும். (பொ.ச.மு. 403-222) ஆனால் ஒன்றை நினைவிற் கொள்ளவேண்டும். சில சமயங்களில் உண்மை வரலாற்றைப் புராணக்கதையிலிருந்து பிரித்துப்பார்ப்பது கடினமான காரியம். சீனாவானது சிறுசிறு ராஜ்யங்களாகவும் அல்லது அரசுகளாகவும் பிரிவுற்றிருந்தது, மற்றும் அவர்கள் மத்தியில் அடிக்கடி போர் மூண்டது. இந்த ஒரு கலவரத்தோடு கூட வடக்கு திசையிலிருந்த அச்சுறுத்தக்கூடிய நாடோடிகளான “காட்டுமிராண்டிகள்” தெற்கத்திய நாட்டின் அதிக வளமான விளைச்சல்களைச் சூறையாடுவதற்குத் தொடர்ந்து முயற்சித்து வந்தனர். எனவே தங்களைக் காத்துக்கொள்ள அநேக அரசுகள் சுவர்களைக் கட்டுவதில் ஈடுபட துவங்கின.
இந்த அரசியல் போராட்டங்கள் முதலில் ச்சீன் என்றழைக்கப்பட்ட ஒரு சிறு அரசனுடைய எழுச்சியை பார்வையிலிருந்து மறைத்துவிட்டது. ஆனால் நாகரீக நயமுள்ள சீனர்களால் அவமதிக்கப்பட்ட படிப்படியாக வலியதாக்கும் தன்மைபடைத்த இந்த அரசு அனைத்தையும், ஆனால் சச்சரவுகளில் ஈடுபட்டிருந்த ஆறு ராஜ்யங்களையும் கைப்பற்றியது.
பொ.ச.மு. 246-ல் பதிமூன்று வயது இளவரசன் செங், ச்சீன் பட்டணத்தின் அரசுரிமையை ஏற்றுக்கொண்டான். தனது கொடுமையான ஆட்சியின் கீழ், ஐக்கியப்பட்ட ஒரு சாம்ராஜ்யத்தை உண்டுபண்ண அவன் கற்பனைசெய்து மற்ற ராஜ்யங்களை எதிர்த்துத் தாக்குவதில் அவன் சிறிதும் தாமதிக்காமல் சுறுசுறுப்பாக ஈடுபட்டான். அதன் பின்பு பொ.ச.மு. 221-ற்குள்ளாக சீனர்களின் கடைசி அரசுகள் ச்சீன் அரசின் இராணுவத்திடம் வீழ்ச்சியடைந்தது. கடந்தகால சீன அரசர்கள் கனவில் கூட காணத்துணியாத காரியத்தைக் கடைசியில் ச்சீன் நாட்டு அரசன் அடைந்தான். அவன் சீனாவின்—அனைத்திற்கும் பிரபுவாக—இருந்தான்! இந்த மகிழ்ச்சி ஆரவாரமுள்ள செங் என்பவன் ஒரு புதிய பட்டத்தைத் தனக்குத் தரித்துக் கொண்டான்: ச்சீன் ஷி ஹாங் டை அல்லது சீன அரசர் குலத்தில் முதல் முடி மன்னன் என்பதே அந்தப் பட்டம்.
ச்சீன் ஷி ஹாங் டை என்ற இந்த மனிதன் தன்னுடைய பேரரசை ஐக்கியப்படுத்துவதற்குரிய பேரார்வத்தாலும் மற்றும் ஒழுக்கயீனத்துடன் தன் முனைப்பான ஆட்டிப்படைக்கும் தன்மையாலும் தூண்டப்பட்டவனாக இருந்தான். ஒரு புறம் அவன் ஒரு அரசியல் மேதையாக புகழ்ந்துரைக்கப்பட்டான். அவன் தன் அரசை ஒரே மையம் நோக்கி ஒருமுகப்படுத்தினான். எழுத்துவடிவ சீன மொழியில் வித்தியாசமில்லாமல் இருக்கும்படி ஒழுங்கு படுத்தினான். நாணய முறைகளைச் சீர் திருத்தம் செய்தான். தன்னுடைய தலைநகரான ஹசியன யாங்கிலிருந்து ஆரம்பிக்கக்கூடிய விரிவான நெடுஞ்சாலை ஒன்றை அமைத்தான்.
மறுபட்சத்தில் வரலாறு இந்த மனிதனுடைய துயரார்ந்த நிலைமைகளையும் சித்தரிக்கிறது. ச்சீன் ஷி ஹாங் டை மரண திகில் பீடிக்கப்பட்டவனாயிருந்தான். அவனைக் கொலைசெய்வதற்கு எடுக்கப்பட்ட அனேக முயற்சிகள், இழுப்பு நோயால் (Hysteria) பாதிக்கப்படுமளவுக்கு அவனுடைய பயத்தை மிகுதியாக்கிவிட்டது. எனவே மிகுதியான சாம்ராஜ்ய இல்லங்கள் கட்டப்பட வேண்டும் என்று அவன் கட்டளையிட்டான். இதன் விளைவாக தலைநகரில் மட்டும் சுமார் 270 இல்லங்கள் கட்டப்பட்டு புறம்பே தென்படாத குகை பாதைகளைக் கொண்டு அந்த இல்லங்கள் இணைக்கப்பட்டன. எனவே அடிக்கடி தாக்கப்படும் இந்த மன்னர் இரகசியமாக இடம் மாறி செல்வதற்கும் ஒவ்வொரு இரவும் வித்தியாசப்பட்ட இடங்களில் தூங்குவதற்கும் வசதியாக இருந்தது.
ஓர் பேரரசனின் சொப்பனம், ஓர் பேரரசின் மனக்கிலி
அதிகாரப்பூர்வமான சீனருடைய வரலாற்றில் பொ.ச.மு. 214-ம் ஆண்டு ச்சீன் ஷி ஹாங் டை தன்னுடைய பேரரசின் வடக்குபுற எல்லை முழுவதிலும் குறுக்கே ஒரு திரையை அமைக்கும் எண்ணத்துடன் வெளிவந்தான். இந்தப் புதிய மனக்கற்பனையைத் தனது அரசவைக் கட்டிட வல்லுனர்கள் முன்னிலையில் அதிக கிளர்ச்சியோடு வருணிப்பதைக் கற்பனை செய்து பாருங்கள். ‘நாம் ஒரு சுவரைக் கட்டுவோம்!’ அவன் அப்படிச் சொன்னதாகச் சொல்லப்படுகிறது. அநேக இடங்களில் இந்தச் சுவர் 24 அடி உயரமுள்ளதாயிருக்க வேண்டும்.a அதன் உச்சியானது, எட்டு போர் வீரர்கள் இணையாக ஒரே வரிசையில் நடந்து வரும் அளவுக்கு அகலமானதாயிருக்க வேண்டியதாயிருந்தது. இந்த விசித்திரமான மாபெரும் பணியின் பாரம் ச்சீன் அரசின் தனிச் சிறப்பு வாய்ந்த தளராது உழைப்பவராகிய இராணுவதளபதி மெங் டியன் என்பவர் மீது விழந்தது. அவர் தன்னுடைய சேனையை ஒன்று திரட்டி தன் எஜமானரின் சொப்பனத்தை நிறைவேற்றுவதற்கு அந்தக் கூட்டத்தைக் கூட்டிச் சென்றார்.
அந்தச் சுவர் வெளிப்படையான தோற்றத்துடன் வடக்கு திசையிலுள்ள அஞ்சப்படும் எதிரிகளிடமிருந்து தற்காப்புக்காக கட்டப்படுவதால் அதன் நெடுகிலும் எதிரிகளின் நடமாட்டத்தைக் கண்காணிப்பதற்காகக் காவற்காக்கும் கோபுரங்கள் தேவைப்பட்டன. எனவே மெங் டியன் என்பவர் இந்தப் பிரமாண்டான காவலர் கோபுரங்களை அமைக்க முனைந்தார். இது தரை மட்டத்தில் 40 அடி சதுரமும் உயரத்தில் 30 அடி சதுரமாக குறுகி செல்வதாக இருந்தது. அவைகள் இரண்டு அம்பு வீச்சுகள் தூரத்தில் தள்ளி கட்டப்பட்டிருந்தன. எனவே வில்வீரர் கோபுரங்களிலிருந்து அந்தச் சுவரின் ஒவ்வொரு அங்குலத்தையும் தற்காக்க முடிந்தது. அந்தத் தேசத்தினூடே மலையின் உச்சிகளிலும் மற்றும் பள்ளத்தாக்கு நுழைவாயில்களிலும் மொத்தம் 25,000 கோபுரங்கள் எழுந்தன.
எங்கெல்லாம் கூடுமோ அங்கெல்லாம், முந்திய அரசு விட்டு சென்றிருந்த சுவர்களையும் கோபுரங்களையும் மெங் டியன் பயன்படுத்தி அவற்றுடன் இணைத்துவிட்டார். பின்பாக அதைச் சீனர்கள் வான் லீ சாங் செங் அல்லது பத்தாயிரம் லீ நீளமான சுவர் என்றழைத்தார்கள். (சீனர்களுடைய லீ என்பது ஒரு மைலில் சுமார் மூன்றிலொன்றாக இருந்தது அல்லது அரை கிலோமீட்டர்.)b என்றபோதிலும் உண்மையில் அந்தச் சுவர் ஏறத்தாழ 1,850 மைல்கள் நீளமுள்ளதாக இருந்தது. பின் தொடர்ந்து வந்த சந்ததியினர் இந்த மதில் சுவரைக் கட்டினார்கள். அதை அநேக திசைகளில் வளைத்து இணைத்தார்கள். மற்றும் நீட்டினார்கள். ச்சீன் அரசாங்கத்தால் செய்யப்பட்ட சமீப சுற்றாய்வின்படி “தொலைதூரமான அல்லது மலைப்பிரதேசமான பிராந்தியங்களில் அந்தச் சுவரின் எஞ்சியுள்ள பாகங்களில் தடயங்கள் அதன் நீளம் சுமார் 10,000 கிலோ மீட்டர்கள் என்று காட்டுகிறது” இவ்வாறாக சைனா ரீகன்ஸ்ட்ரக்ட்ஸ் அறிக்கை செய்கிறது.
அந்தச் சுவரின் சில பகுதிகள் மாபெரும் சதுர கருங்கற்களால் 14 அடி நீளமும் 4 அடி அகலமுமுள்ள முன் பாகத்தில் 2 முதல் 5 அடி தடித்த கற்களால் அஸ்திபாரமிடப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது. மிங் அரசகுலத்து கட்டிட கலைஞர்களால் 16-ம் நூற்றாண்டில் கையாளப்பட்ட கட்டிட முறைகளுக்கு ஒத்ததாயிருந்தது. அதற்குள்ளிருந்த இடைவெளியானது இடித்துப் பொடியாக்கபட்ட மண்ணினால் நிரப்பப்பட்டது. மற்றும் மேம்படுகையில் செங்கற்களைக் கொண்ட சாலை அமைக்கப்பட்டது. அந்தச் சுவர் மேற்கு திசை நோக்கி செல்லுகையில் வெகு சொற்பமான கற்களே கிடைக்கக்கூடிய மிகப்பரந்த செழிப்பான சம வெளியை அது கடந்து சென்றது. எனவே எது கிடைத்ததோ—லோயெஸ் என்றழைக்கப்பட்ட பண்படுத்தப்பட்ட மஞ்சள் நிறமான மண்—அதை மட்டுமே பயன்படுத்த வேண்டிய நிர்பந்தம் கட்டிட கலைஞர்களுக்கு ஏற்பட்டது. மர சட்டங்களில் ஈரமாக்கப்பட்ட லோயெஸ் என்ற மண்ணை நிரப்புவதன் மூலம் சில பகுதிகள் கட்டப்பட்டன. மற்ற சில பகுதிகளில் இந்த லோயெஸ் மண்ணை இருபுறமும் செதுக்கி எடுப்பதன் மூலம் நடுவில் நின்ற மண்மேடு தானே சுவராக விடப்பட்டது. இந்தப் பகுதிகளில் இடிந்த கற்குவியல் மட்டுமே இன்று மிதமாக விடப்பட்டிருக்கிறது.
சீனாவின் மிக உயர்ந்த மலைகளை அளவிட்ட அந்த மிகப் பெரிய சுவர் மிகத் தாழ்வான பள்ளத்தாக்குகளில் மூழ்கி காணப்பட்டது. பின்பு சுட்டெரிக்கும் பாலைவன சமவெளிகளில் அந்தச் சுவர் கடந்து சென்றது. கிழக்கு திசையில் எலும்பைக் குளிரச் செய்யும் காற்று மற்றும் முகம் பார்க்க முடியாத அளவுக்குக் கடும் பனிப் பொழிவு வேலையாட்களை வாதித்தது. மேற்கு திசையில் கடுமையான பாலைவன சூரிய வெப்பமும் அரிப்பூட்டும் மணற் புயலும் அவர்களை வேதனைப்படுத்தியது. ஏறக்குறைய மனித சக்தியையும் மீறி அரும்பாடுபட்ட பல்லாயிரக்கணக்கான தொழிலாளிகளின் வேதனைகளை அந்தக் கட்டிடம் எடுத்துப் பேசுகிறது. போதுமான அளவுக்கு விரைவாக உழைக்காத ஆட்கள், பஞ்சத்தாலும் இடர்பாடுகளாலும் மாண்டவர்களோடே கூட உயிரோடு அகழிகளுக்குள் அலட்சியமாக தூக்கியெறியப்பட்டார்கள். “பூமியிலேயே அதிக நீளமான பிரேதக் குழி” என்ற கொடிய சிறப்புப் பட்டத்தை அந்தச் சுவர் சம்பாதித்திருக்கிறது. ஏனெனில் அதனுடைய எழுச்சியால் 4,00,000 பேர் மாண்டிருக்கின்றனர்.
அங்கு மாண்டவர்களுள் சீனாவின் அறிஞர்களில் அநேகரும் அடங்கும். அந்தப் பேரரசின் அரசியல் உறுதிக்கு அபாயம் விளைவிப்பவர்களாக அவர்கள் பழி சுமத்தப்பட்டார்கள். அந்த மன்னன் ஈடுபட்ட மாபெரும் சீரமைப்புத் திட்டத்தைக் குறித்த அவர்களுடைய மானிய நிலம் சார்ந்த கருத்துக்களும் குறைகூறல்களும் பொ.ச.மு. 213-ம் ஆண்டில் அவமானப்படுத்தக்கூடிய விதத்தில் “நூல்களை எரிப்பதற்கும் மற்றும் பட்டதாரிகளைப் புதைப்பதற்கும்,” வழிநடத்தியது. இது ச்சீன் ஹாங் டை பின்வரும் தலைமுறைகளுக்கான தனது பெயரைக் கெடுத்துக் கொண்டான். அந்தச் சுவர் கட்டும் பணியால் விளைவடைந்த உயிரிழப்புகளுக்காக இந்நாள் வரையிலுமாக நாட்டுப்பாடல்கள் துயரத்தை வெளிப்படுத்துகின்றன. உண்மையிலேயே ஒரு மனக்கிலி!
ஒரு அரசகுலம் பொடிந்து விழுகிறது
ஆனால் ஓயாது தொல்லைப்படுத்தும் ஒரு கேள்வி இருந்து கொண்டிருக்கிறது. இப்படிப்பட்டதோர் நினைவுச் சின்னம் கட்டும் முயற்சியில் ஒரு பேரரசர் ஏன் தனது பேரரசை வேண்டுமென்றே அழிக்க வேண்டும்? மேலோட்டமாக பார்க்கையில், பாதுகாப்பு ஒரு காரணமாக தோன்றக்கூடும். ஒரு சில காலத்திற்கு நாடோடி மரபினர் உள்ளே பிரவேசிப்பதைத் திறமையாகத் தடுத்து நிறுத்தியது. உண்மையே. ஆனால் சீன ராஜ்யம் அதன் உச்சி நிலையிலிருந்ததை—தனது கைக்கு எட்டிய அனைத்தின் மீதும் வெற்றி கொள்வதில் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்த ஒரு சக்தி வாய்ந்த போர் இயந்திரத்தைப் பற்றி—ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள் அடுத்தப்படியாக அது எங்கே தனது ஆற்றல்களைச் செலுத்த முடியும்? ஒருவேளை நாடோடிகளைக் காட்டிலும் அந்தப் பேரரசர் இந்த மிகத்திரளான அமைதியற்ற படைகளைக் குறித்தே அதிகப்படியான பயத்திலிருந்திருக்க வேண்டும்.
இருந்தபோதிலும் அந்தச் சுவர் கட்டும் பணியானது அந்தப் பேரரசுக்கு ஒரு பாழாக்கும் அடியாக இருந்தது. அந்தச் சுவரின் தென்திசையில் கலக படைகள் வளர ஆரம்பித்தன. அந்தப் பேரரசின் மிதமிஞ்சிய செலவை உட்படுத்திய இந்தத் திட்டத்தினால் ஒடுக்கும் வரிசுமை சுமத்தப்பட்டதன் காரணமாக குடியானவர்களின் கிளர்ச்சிகள் வெடித்தெழுந்தன. சாவாமைக்காக அவ்வளவு கடுமையாக போராடின அந்த மனிதன் பொ.ச.மு. 210-ல் மரணமடைந்தான். இதன் விளைவாக ஏற்பட்ட ஆதிக்க போராட்டம் அந்தப் பேரரசை பாழிடங்களாக வீழ்ச்சியடையும்படி செய்தது. அந்த வல்லமை மிகுந்த ச்சீன் அரச பரம்பரை பொ.ச.மு. 221-207 வரையில் 14 வருடங்கள் மட்டுமே நீடித்தது என்ற போதிலும் அந்தக் குறுகிய ஆட்சி சீனாவின் மிக விரிவான பல நிகழ்ச்சிகளைக் கண்கூடாகக் கண்டது.
அந்த ச்சீன் அரசன் மனிதனின் மிகப் பெரிய சத்துருவாகிய மரணத்தை எப்படித் தவிர்க்க முடியவில்லையோ அதுபோலவே அந்தப் பேரரசின் சொப்பனத்தை நிறைவேற்றுவதற்கு கடுமையாக உழைத்த அந்த லட்சக் கணக்கானோருக்குப் பாராட்டுச் சின்னமாக அவன் கட்டிய அந்தப் பண்டைய சுவர்களில் கொஞ்சமே மீந்திருக்கிறது. இப்பொழுது வரையாக நிலைத்திருக்கக்கூடிய அந்தக் கவனத்தைக் கவரும் சுவரின் பகுதிகளும் மற்றும் இன்று உல்லாச பயணிகளால் பார்க்கக் கூடியதும் 16-ம் நூற்றாண்டில் மிங் பேரரசின் மன்னன் வான் லீ என்பவனால் கட்டப்பட்டது. (g86 5/22)
[அடிக்குறிப்புகள்]
a 1 foot = 0.3 meter.
b 1 mile = 1.6 kilometers.
[பக்கம் 25-ன் பெட்டி]
அந்த மிகப் பெரிய சுவர் எவ்வளவு பெரியதாயிருந்தது?
◻ அந்த மூலமுதற் சுவரை நீட்டி வைத்தால் அதன் நீளம் பசிபிக் மாகடலிலிருந்து வட அமெரிக்க மலைத்தொடர் மீது வந்தால் மிசிசிப்பி வரையிலுமாக இருக்கும் அல்லது பிரான்சிலுள்ள பிரிட்டனி முனையிலிருந்து வடக்கு ஐரோப்பா வழியாக வந்தால் மாஸ்கோ வரையிலுமாக இருக்கும்.
◻ நடுநிலக் கோட்டில் உலகை ஒரு முறை சுற்றி வரக்கூடிய—25,000 மைல்கள் தொலைவுள்ள எட்டு அடி உயரமும் மூன்று அடி தடிப்புமான அல்லது (பருமனான) ஒரு சுவரைக் கட்டுவதற்குப் போதுமான பொருட்களை அந்த மிகப் பெரிய சுவர் கொண்டிருக்கிறது.
[பக்கம் 24-ன் வரைப்படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
மங்கோலியா
ஜியாஃகுவான் கணவாய்
சீனா
லின்டாவ்
யான்மென்ஃகுவான்
ஷான்ஹாய்ஃகுவான் கணவாய்
கொரியா
குவின்ஷிஹிஃகுவாங் ஆட்சியின்போது கட்டப்பட்ட சுவர்
மிங் முடியரசின் ஆட்சியின்போது கட்டப்பட்ட சுவர்