வெள்ளமும் வறட்சியும்—கடவுளின் செயல்களா?
“எனக்குத் தலைசுற்றுகிறது எனக்கு வயிற்றைப் பிரட்டுகிறது” பட்டினி கிடக்கும் போது எப்படியிருக்கும் என்பதை ஆப்பிரிக்க பெண் ஒருத்தி விழித்தெழு! நிருபரிடம் விவரிக்க முயற்சிசெய்கிறாள். தென் ஆப்பிரிக்காவில் வறட்சியால் பீடிக்கப்பட்ட ஒரு பகுதியில் வாழும் மற்றொருவர், “எங்களால் சிரிக்கவோ, அழவோ, பார்க்கவோ அல்லது சுவாசிக்கவோ முடியாத அளவுக்கு எங்களுடைய எல்லா பெலத்தையும் நாங்கள் இழந்து விடுகிறோம்” என்றார்.
அண்மையில், ஆப்பிரிக்காவில் மட்டுமே இவர்களைப் போன்ற இந்த அவல நிலையில் இருந்தவர்களின் எண்ணிக்கை 350 லட்சம் என்பதாக மதிப்பிடப்பட்டது. இவர்கள் பெரு நிலப்பகுதி முழுவதிலும் ஏற்பட்ட ஒரு வறட்சியில் பாதிக்கப்பட்டார்கள்.
இந்த வறுமை மற்றவர்களால் கவனிக்கப்படாமல் இல்லை. பெரும் அளவில் நிவாரண பணிகளை ஊக்குவிப்பதற்காகப், பட்டினியால் எலும்புக்கூடுகள் போன்று தோற்றமளித்த பெண்கள் மற்றும் குழந்தைகளின் கோரமான உருவப்படங்கள் பிரசுரிக்கப்பட்டு, செய்தி வானொலி வாயிலாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அனேகருக்கு உதவி மிகக் குறைவாகவோ அல்லது காலந்தாழ்ந்தோ கிடைத்தது. நிவாரணப் பணிகள் உயிரிழந்தவர்களை மீண்டும் கொண்டு வருவதோ அல்லது நொடித்துப் போன உழவர்களுக்குப் பொருளாதாரச் செழுமையை மீட்டுத் தருவதோ இல்லை.
ஒரு சிலர் உலர்ந்த உதடுகளோடு ஒரு துளி மழை நீருக்காகப் பிராத்தனை செய்யும் போது, மற்ற அனேகர் உயிருக்கும் உடைமைகளுக்கும் அதிகம் சேதம் விளைவிப்பதாகச் சிலர் கருதும் இயற்கையின் ஆபத்தான வெள்ளத்தினால் துன்பமனுபவிக்கிறார்கள். சரித்திரத்தில் அழிவுகள்; பஞ்சங்கள் என்ற புத்தகம் “அனேகமாக பயிர்கள் அழிவதற்குக் காரணம் . . . அதிகமான தண்ணீராகவே இருந்திருக்கிறது” என்று குறிப்பிடுகிறது.
உதாரணமாக, சீனாவின் மஞ்சள் நதி மேடான நெடுஞ்சாலையைப் போல கடலை நோக்கி வளைந்து செல்கிறது. கீழே சமவெளியில் வாழும் உழவர்களுக்கு, அதன் வரம்புகளின் அருகேயுள்ள அகழிகள் பாதுகாப்பாக இருக்கின்றன. ஆனால் வெள்ளக் காலங்களில் இந்த மதில்கள் உடைந்து சமவெளி பயங்கரமான கடலாக மாறிவிடுகிறது. நூற்றாண்டுகள் பலவற்றினூடாக, லட்சக்கணக்கான சீனர்கள் வெள்ளத்தில் மாண்டு போயிருக்கிறார்கள். பூமியில் வேறு எந்த இயற்கையின் நாச வேலையைக் காட்டிலும் மஞ்சள் நதியே அதிகமான துன்பத்துக்குக் காரணமாக இருந்திருக்கிறது!
தொழில் துறையின் நுண்ணறிவின் மத்தியிலும் வெள்ளமும் வறட்சியும் ஓயாது வந்து தலையிட்டுக் கொண்டிருக்கின்றன. அவற்றின் பயங்கரத்தை நீங்கள் நேரடியாக அனுபவித்திருந்தாலும் அனுபவித்திராவிட்டாலும் நீங்கள் பாதிக்கப்படுகிறீர்கள். ஏனென்றால் வெள்ளத்தினாலும் வறட்சியினாலும் உணவு பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால் விலைவாசி விஷமாக ஏறுகிறது. இந்த விபத்துக்களை எதிர்படுகையில் மனிதன் உதவியற்றவனாக இருப்பதால், இவை பொதுவாக கடவுளின் செயல்கள் என்பதாக அழைக்கப்படுகின்றன. ஆனால் இவ்விதமாகச் சொல்வது எவ்வளவு உண்மையாக இருக்கிறது?
யார் பொறுப்பு?
“உலகளாவிய வளர்ச்சி மற்றும் சுற்றுப்புறச் சூழல் பிரச்னைகளைப் பற்றிய செய்தி மற்றும் தகவல் பணித்துறை”யான நிலவுலக நுண்ணாய்வு, இயற்கை விபத்துக்கள் கடவுளின் செயல்களா அல்லது மனிதனின் செயல்களா என்ற தலைப்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. இது, வெள்ளங்களின் சராசரி எண்ணிக்கை உலகம் முழுவதிலும் 1960 களில் வருடத்துக்கு 15.1 ஆக இருந்தது. 1970 களில் 22.2 ஆக உயர்ந்திருக்கிறது என்றும், அதே காலப்பகுதியில் வறட்சிகளும் கூட வருடத்துக்கு 5.2 ஆக இருந்தது 9.7 ஆக உயர்ந்திருக்கிறது என்றும் தெரிவித்தது. ஆனால் இந்த விபத்துக்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆறு மடங்குக்கும் மேல் அதிகரித்திருப்பதே அதிக கவலைக்கிடமாக உள்ளது.
நிலவுலக நுண்ணாய்வு அறிக்கை சொல்கிறது: “விபத்துக்கள் அதிகமாக மனிதனால் உண்டுபண்ணப்படுகிறவையே. அளவுக்கு அதிகமான அல்லது வெகு குறைவான மழையைவிட, சுற்றுப் புறச்சூழலும் வள ஆதாரங்களும் அதிகமாகத் தவறாகப் பயன்படுத்தப்படுவதே சில விபத்துக்களுக்கு (வெள்ளம், வறட்சி, பஞ்சம்) காரணமாக இருக்கின்றது . . . விபத்துக்கள், தடை செய்யப்படக்கூடிய மற்றும் அனேக சமயங்களில் தடை செய்யப்பட்டுமுள்ள சமூக மற்றும் அரசியல் சம்பவங்களாக இருக்கின்றன. வளர்ச்சியடையாதத் தேசங்களில் ஏழ்மையிலுள்ளவர்கள் தங்களுடைய நிலத்தை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தவும் ஆபத்தான இடங்களில் வாழவும் வேண்டிய நிர்பந்தம் ஏற்படும்போது இந்த விபத்துக்களினால் உயிரிழப்பவர்கள் அனேகராகின்றனர்.”
மனிதனின் செயல்கள் எவ்விதமாக கடவுளுடைய செயல்கள் என்றழைக்கப்படுகின்றவற்றைக் கொண்டு வந்திருக்கின்றன என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். 1942 மே மாதம் ஓர் இரவில் 330 மில்லியன் டன்கள் தண்ணீர் ஜெர்மனியின் மேற்கு பகுதியிலுள்ள பள்ளத்தாக்கிற்குள் வந்து விழுந்தது. கடவுளின் செயலா? இல்லை. இரண்டாவது உலகப் போரின் போது, பிரிட்டிஷ் போர் கப்பல்கள் மோனி மற்றும் ஈடர் அணைக்கட்டுகளின் மீது குண்டு வெடித்ததன் விளைவாக இது ஏற்பட்டிருந்தது. சுமார் 1294 பேர் வெள்ளத்தில் மூழ்கினார்கள். அதில் பெரும்பாலானவர்கள் படைத்துறையில் சம்பந்தப்படாத ஆட்களாவர்.
இதற்கு ஐந்து வருடங்களுக்கு முன்னர், ஹீரோஷீமா மற்றும் நாகசாகியின் மீது போடப்பட்ட அணுகுண்டுகளைக் காட்டிலும் அதிகமாக நாசத்தை உண்டுபண்ணியதாகச் சிலர் கருதும் ஒரு விபத்து ஏற்பட்டது! ஸ்டக்ஹோம் சர்வதேசீய சமாதான ஆராய்ச்சி நிலையத்தின் அறிக்கையைப் பற்றிக் குறிப்பிட்டு புதிய விஞ்ஞானி பத்திரிக்கை பின்வருமாறு சொன்னது: “மஞ்சள் நதியின் ஹீஆய்யுவான்கோவ் (Huayuankow) அகழி சுரங்கவெடியினால் தகர்த்தெறியப்பட்டதால் தானே 1938-ல் ஜப்பானிய பட்டாளம் சீனாவுக்குள் முன்னேறிச் செல்ல முடியாமல் போயிற்று. ஆனால் இது தானே பல நூறாயிரக்கணக்கான சினர்களை மூழ்கடித்தது மாளவும் செய்தது.” இன்னும் லட்சக்கணக்கானோர் தங்கள் வீடுகளை இழந்தனர்.
அதேவிதமாகவே ஒரு ஆப்பிரிக்கச் செய்தித் தாள் பின்வருமாறு குற்றஞ்சாட்டியது: “[வறட்சியினால்] வரும் எல்லா வேதனைக்கும் வானிலையை நாம் குற்றஞ்சாட்ட முடியாது . . . ஆப்பிரிக்காவில் விரிகுடாவிலிருந்து அட்லான்டிக் கரை வரையாகவும் மொசாம்பிக்கிலும் நடைபெற்ற போர்கள், உழவர்களைத் தங்களுடைய நிலங்களை விட்டு ஓடும்படியாக விரட்டி அடித்திருக்கிறது” உதாரணமாக எத்தியோப்பியாவின் வறட்சியைத் தீவிரமாக்கியிருப்பது மேய்ச்சல் நிலங்களை அழித்துவிட்டிருக்கும் பல வருட உள்நாட்டுப் போர்களே.
கடவுளா அல்லது பேராசையா?
நவீன தொழில் துறை முன்னேற்றதின் காரணமாக உழவர்களால் இப்பொழுது பரந்து கிடக்கும் நிலப் பகுதிகளை உழ முடிகிறது—உயிரின வாழ்க்கைச் சூழல் ஆய்வாளர்கள் உழக்கூடாது என்பதாகச் சொல்லும் நிலப்பகுதிகளையும் கூட இவர்கள் உழுகிறார்கள். வட அமெரிக்காவில் உயர்ந்த சமவெளிப் பகுதிகளைக் குறித்து நேஷனல் ஜியாகிரப்பிக் (National Geograpic) பின்வருமாறு சொன்னது: “நில தரகர்களும் நெருக்கடி நிலையிலிருக்கும் கால் நடை வளர்ப்புப் பண்ணையாளர்களும் கோதுமையை பயிரிடுவதற்காக நூறாயிரக்கணக்கான ஏக்கர்கள் மேய்ச்சல் நிலத்தை உழுதுவிடுகிறார்கள் . . . இந்த மண் உலர்ந்திருக்கும் போது, எளிதில் இது வீசியடிக்கப்படுகிறது. சமவெளிகளில் நீடித்த வறட்சி, காலப் போக்கில் ஏற்படும் ஒன்றாக இருக்கிறது. புழுதிகாடு பாலைவனம் (1930 களின் போது ஐக்கிய மாகாணங்களில் வறட்சியால் பீடிக்கப்பட்ட ஒரு பகுதி) இவ்விதமாகவே உருவானது.
ஏற்கெனவே அந்தப் பகுதியிலுள்ள சில மேய்ச்சல் நிலங்கள் வேலி கம்பம் வரையாக மண் போர்வையால் மூடப்பட்டுள்ளது. இவ்விதமாக பாதிக்கப்பட்ட கால் நடை வளர்ப்புப் பண்ணையாளர் ஒருவர் பின்வருமாறு சொன்னார்: “இது கடவுளின் செயல் இல்லை. இது பேராசையின் ஒரு செயலாக இருக்கிறது. கடவுள் ஒரு கலப்பையை வைத்துக் கொண்டில்லை.” மோகன்தாஸ் காந்தி இதை வெகு அழகாகச் சொன்னார்: “அனைவரின் தேவைக்கும் போதுமானது இருக்கிறது ஆனால் அனைவரின் பேராசைக்கும் போதுமானது இங்கு இல்லை.”
என்றபோதிலும், வீட்டு விலங்குகளை வளர்ப்பவர்கள் தானே பேராசைமிக்கவர்கள் என்பதாக சிலர் சொல்வார்கள். சிலர், அத்தனை அனேக மிருகங்களை வைத்திருப்பதால் நிலத்தை அளவுக்கு அதிகமாக மேய்த்து விடுகிறார்கள். பல வருடங்களாக அவர்கள் இதைச் செய்து தப்பித்துக் கொண்டிருந்தாலும், வறட்சி ஏற்படும்போது அதிகமாக மேய்க்கப்படும் நிலங்கள் நிரந்தரமானப் பாலைவனமாக மாறிவிடக்கூடும். சகாரா பாலைவனத்தின் எல்லைப் பகுதியில் என்ன நடந்தது என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். இந்த நூற்றாண்டின் முற்பகுதியில் தண்ணீர் வசதியைப் பெருக்குவதற்கு ஆயிரக்கணக்கான கிணறுகள் இங்கு தோண்டப்பட்டன. ஆப்பிரிக்காவில் வீட்டு விலங்குகளை வளர்த்தவர்களுக்கு இது மகிழ்ச்சியாக இருந்தது. ஏனென்றால் அவர்கள் தங்களுடைய வீட்டு விலங்குகளைப் பெருக்கிக் கொண்டார்கள். ஆனால் கூடுதலான இந்த விலங்குகளுக்குப் போதிய மேய்ச்சல் நிலம் இருக்கவில்லை!
“1968-ல் வறட்சி ஏற்பட்டபோது, சாகெல் ஏற்கெனவே பாதிக்கப்பட்ட நிலையில் தானே இருந்தது.” என்பதாக நம்முடைய வறண்ட பூமி—உலகின் உணவு நெருக்கடி என்ற புத்தகம் குறிப்பிடுகிறது. “புல் மறைந்தபோது, கால்நடைகளின் உணவுக்காக மந்தையை மேய்ப்பவர்கள் மரங்களைத் தரித்துப் போட்டார்கள். வறட்சி நிலை நீடித்தது. புல் வெளிகளும் உழவர்களின் நிலங்களும் பாலைவனமாக மாற ஆரம்பித்தன.” புதிய விஞ்ஞானி பத்திரிக்கையின் பிரகாரம் “சகாரா கடந்த 50 வருடங்களில் தெற்கு நோக்கி 6,50,000 சதுர கிலோ மீட்டர்கள் (2,50,000 சதுர மைல்) விரிவாகிவிட்டிருக்கிறது.” இது ஸ்பயினையும் போர்ச்சுகலையும் சேர்த்தால் கிடைக்கும் நிலப்பகுதியை விட பெரிதாக இருக்கிறது!
வீடுகளைக் கட்டுவதற்காக, உயிரின வாழ்க்கைச் சூழலின் பின்விளைவுகளை அசட்டை செய்து மரங்களை வெட்டி வீழ்த்துகிறவர்கள் இருக்கிறார்கள். “உலகம் முழுவதிலும் எடுத்துக்கொண்டால், இந்த வாக்கியத்தை நீங்கள் வாசிப்பதற்கு எடுத்துக் கொள்ளும் நேரத்தில் மூன்று ஹெக்டர்கள் [7.4 a.] காடு மறைந்து விட்டிருக்கும் . . . மரங்களின் இழப்பு, ஆற்றல் மற்றும் கட்டடங்களுக்குத் தேவையான மூஸ் பொருட்களின் இழப்பைக் காட்டிலும் அதிகமாக இருக்கிறது. காடுகளின் அழிவு, சட்டப்படி இயங்கி வரும் நீர்சுழற்சிகளை அழித்துவிடுகிறது. ஓடைகளும் ஆறுகளும் சேறாவதற்கும் பூமிக்கு அடியிலுள்ள நீர் குறைவதற்கும் வெள்ளப் பெருக்கு தீவிரமாவதற்கும் வறட்சி காலத்தின் போது தண்ணீர் பஞ்சம் அதிகமாவதற்கும் இது காரணமாயிருக்கிறது” என்பதாக தென் ஆப்பிரிக்காவிலுள்ள பைட்டாமாரிங்ஸ்பர்க்கின் இயற்கை வள நிறுவனத்தின் நிர்வாகி பேராசிரியர் ஹாங்ஸ் சொல்லுகிறார்.
இதற்கு ஒரு உதாரணத்தை இமய மலையில் காணலாம். “மலை அடிவார குன்றுகளிலுள்ள காடுகள் வேகமாக மறைந்து கொண்டிருக்கின்றன. இதன் விளைவாக தென் ஆசியாவில் வெள்ளப் பெருக்கு மோசமாகி வருகிறது. 1973-ல் பாக்கிஸ்தானில் ஏற்பட்ட ஒரு வெள்ளப் பெருக்கு சேமித்து வைக்கப்பட்டிருந்த தானியங்களை அழித்தது. 1947-ல் பங்ளாதேஷிலும் இந்தியாவிலும் வறட்சியைப் போலவே வெள்ளப் பெருக்கும் பயிர்களுக்குச் சேதம் விளைவித்தது” என்பதாக நம்முடைய வறண்ட பூமி—உலகின் உணவு நெருக்கடி என்ற புத்தகம் குறிப்பிடுகிறது.
தெய்வீகத் தண்டனையா?
முன்னால் குறிப்பிடப்பட்ட நிலவுலக நுண்ணாய்வு அறிக்கை, வெள்ளம் மற்றும் வறட்சியின் அழிவுண்டாக்கும் பாதிப்புக்களுக்குக் கடவுள் அல்ல ஆனால் மனிதனே பொறுப்பாக இருக்கிறான் என்ற முடிவுக்கு வந்தது குறித்து ஆச்சரியப்படுவதற்கில்லை. உண்மைதான், அணு ஆயுத பரிசோதனைப் போன்றவற்றின் மூலமாக சுற்றுப்புறச் சூழலை மனிதன் பழுதடையச் செய்து வானிலை அமைப்புகளை மாற்றியிருக்கிறான் என்பதாக நினைப்பவர்கள் சிலர் இருந்தபோதிலும், வானிலைகள் மனிதனின் கட்டுப்பாட்டின் கீழில்லை. என்றபோதிலும் நிலவுலக நுண்ணாய்வு அறிக்கை சொல்லும் விதமாகவே: ‘சில விபத்துக்கள் ஏற்படுவதை அதிக சாதகமாக்குவதற்காக ஜனங்கள் தங்கள் சுற்றுப்புறச்சூழலை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஆபத்துக்களில் அதிகமாகப் பாதிக்கப்படும் வகையில் அவர்கள் நடந்து கொள்கிறார்கள். வளர்ச்சியடையாத தேசங்களில் எண்ணிக்கையில் பெருகிவரும் மக்கள், நிலத்தில் அளவுக்கு அதிகமாகப் பயிர் செய்யவும், காடுகளை அழிக்கவும், மிதமிஞ்சி நிலத்தைப் பயன்படுத்தவும் வற்புறுத்தப்படுகின்றனர். இது வெள்ளப் பெருக்குக்கும் வறட்சிக்கும் சாதகமாக அமைந்து விடுகிறது.”
ஆனால் மனிதன் பூமியைத் தவறாக நிர்வகித்து வருவதற்காக அவனைத் தண்டிக்க கடவுள் இந்த விபத்துக்களைப் பயன்படுத்துவதாக இருக்கலாம் அல்லவா? என்பதாகச் சிலர் கேட்கக்கூடும் கடந்த காலங்களில் இப்படிப்பட்ட விபத்துக்களைக் கடவுள் பயன்படுத்தியிருக்கிறார் என்பதாகப் பைபிள் காட்டுகிறதல்லவா? ஆனால் நோவாவின் நாளில் கடவுள் ஜலப்பிரளயத்தைக் கொண்டு வருவதற்கு முன்னால் அதைக் குறித்து எச்சரிக்கும்படியாகச் செய்தார் என்பது நினைவிலிருக்கட்டும். நீதிமானான நோவாவையும் அவனுடைய குடும்பத்தையும் கடவுள் மரணத்திலிருந்து காப்பாற்றினார். (ஆதியாகமம் 6:13, 14, 17) அண்மைக் காலங்களில் நடந்து வரும் விபத்துக்களின் விஷயத்தில் இது உண்மையாக இல்லை. ஏனென்றால் சில சமயங்களில் கடவுளின் உண்மையுள்ள ஊழியர்களும் கூட இதனால் துன்பங்களையும் மரணத்தையும் அனுபவித்திருக்கிறார்கள்.
என்றபோதிலும் மனிதன் பூமியைக் கெடுத்துக் கொண்டிருப்பதைக் குறித்துக் கடவுள் உண்ர்ச்சியற்றவராக இருக்கிறார் என்பதை இது அர்த்தப்படுத்துவதில்லை. கடவுள் குறித்த காலத்தில் தம்முடைய ராஜ்யத்தின் மூலமாக தண்டனையைக் கொண்டுவருவார் என்பதாகப் பைபிள் காண்பிக்கிறது. என்ன சம்பவிக்கும் என்பதைப் பைபிள் விவரிக்கிறது: “அந்த ராஜாக்களின் நாட்களிலே [இன்றைய அரசாங்கங்கள்] பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை [அவருடைய பரலோக அரசாங்கத்தை] எழும்பப் பண்ணுவார் . . . அது அந்த ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி நிர்மூலமாக்கி, தானோ என்றென்றைக்கும் நிற்கும்.”—தானியேல் 2:44.
பல நூற்றாண்டுகளாக மெய்க் கிறிஸ்தவர்கள் கடவுளுடைய ராஜ்யத்துக்காகக் காத்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். ஏன், இயேசு தம்மைப் பின்பற்றியவர்களுக்கு: “பிதாவே, . . . உம்முடைய ராஜ்யம் வருவதாக” என்று ஜெபிக்கும்படியாகக் கற்றுக்கொடுத்தார். (லூக்கா 11:2) ஆனால் ஒரு பரலோக அரசாங்கத்தால் அழிவுண்டாக்கும் வெள்ளங்களையும் வறட்சிகளையும் தடுத்திட முடியும் என்று நம்புவதற்கு ஆதாரம் இருக்கிறதா? ஆம், நிச்சயமாகவே! ஒரு காரியமானது, வானிலையைக் கட்டுப்படுத்த விஞ்ஞான முயற்சிகள் இது வரையாக வெற்றியடையவில்லை. என்றபோதிலும் வானிலையைச் சீராக்க சிருஷ்டிகருக்கு வல்லமை இருக்கிறது. அவர் தம்முடைய பூர்வ ஜனங்களுக்குப் பின்வருமாறு வாக்களித்திருந்தார்! “நான் ஏற்ற காலத்தில் உங்களுக்கு மழை பெய்யப் பண்ணுவேன்; பூமி தன் பலனையும் வெளியிலுள்ள மரங்கள் தங்கள் கனியையும் கொடுக்கும்.”—லேவியராகமம் 26:4.
இந்த அரசாங்கத்துக்கு ராஜாவாக கடவுளால் நியமிக்கப்பட்ட உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசு கிறிஸ்துவுங்கூட வானிலையின் மீது தமக்கு வல்லமையிருப்பதைக் காண்பித்திருக்கிறார்! “பலத்த சுழல் காற்று” உண்டான ஒரு சமயத்தைப் பற்றிப் பைபிள் சொல்லுகிறது. அப்பொழுது இயேசு நித்திரையிலிருந்து எழுப்பப்பட்டார். “அவர் எழுந்து காற்றை அதட்டி, கடலைப் பார்த்து: இரையாதே, அமைதலாயிரு” என்றார். என்ன நடந்தது? “அப்பொழுது காற்று நின்று போய், மிகுந்த அமைதல் உண்டாயிற்று.” இது பயந்து போன அவருடைய சீஷர்களை, “இவர் யாரோ? காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே” என்று சொல்லத் தூண்டியது.—மாற்கு 4:36-41.
கடவுளுடைய ராஜ்ய ஆட்சியின் கீழ், அதே விதமாகவே பூமியின் வானிலை இயேசுவின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்திருந்து, இவ்விதமாக பரிபூரண சமநிலையில் அது வைக்கப்படும். பூமியின் உயிரின வாழ்க்கைச் சூழலைப் பற்றி என்ன? அங்கே பூமியிலிருந்து காடுகளை அழிக்கவோ அல்லது சுற்றுப்புறச் சூழலை அசுத்தப்படுத்தவோ பேராசைமிக்க மனிதர்கள் இருக்கமாட்டார்கள். பைபிள் சொல்கிறது: “சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறது போல், பூமி யெகோவாவை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்.” (ஏசாயா 11:9) அந்த ஆட்சியின் கீழ் மனிதவர்க்கத்தினர் பூமியின் உயிரின வாழ்க்கைச் சூழலைக் குலைக்காத வகையில் வீடுகளைக் கட்டி பூமியை அபிவிருத்தி செய்ய கற்றுக் கொள்வர் என்பதில் சந்தேகமில்லை. (ஏசாயா 65:21) இவ்விதமாக பூமி—ஒரு அழகிய இடமாக—மெய்யான ஒரு பரதீஸாக மாற்றப்படும்!—லூக்கா 23:43. (g86 6/22)
[பக்கம் 26-ன் படம்]
ஆப்பிரிக்காவிலுள்ள இது போன்ற பாலைவனங்கள் வேகமாக வளர்ந்து வருவது ஏன்?