இளைஞர் கேட்கின்றனர் . . .
உடற்கட்டுக்கு நான் கவனம் செலுத்த வேண்டுமா?
“ஏய் ஒல்லிக் குச்சி!” இப்படி ஒரு கேலிச் சொல், முகம் பார்க்கும் கண்ணாடியில் நீங்கள் ஏற்கெனவே கவனித்ததை உறுதி செய்கிறது—உங்கள் வயதிலிருக்கும் மற்றவர்களைப் போல உங்கள் உடல் பருமனாக இல்லை. அல்லது ஒருவேளை நீங்கள் சற்றுப் பருமனாக இருப்பதால் கேலி செய்யப்படலாம். எப்படியிருந்தாலும், நீங்கள் உங்கள் உடற்கட்டுக்குக் கவனம் செலுத்துவதைப் பற்றிப் பொறுப்புணர்ச்சியோடு சிந்தித்திருக்கலாம்.
இக்காலத்தில், அனேக ஆண்களும்—அதிகமாகி வரும் எண்ணிக்கையில் பெண்களும்—உடற்கட்டுக்குக் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். நல்ல ஒரு கட்டமைப்பைக் கொண்டிருக்க விரும்புவதில் தவறேதும் இல்லை அல்லது அது அசாதாரணமானதும் இல்லை. நாம் அனைவரும் கவர்ச்சியாகத் தோன்றவே விரும்புகிறோம், பெற்றோர்கள் பத்திரிக்கை இதைச் சுட்டிக் காண்பிக்கிறது: “வளரிளமைப் பருவத்திலுள்ள ஒருவனுடைய தோற்றம் முக்கியமற்றதாக இல்லை. உடலின் சுய ரூபத்தின் ஒரு பாகமாக இருக்கிறது. அது ஒரு நபரின் தன்னம்பிக்கையையும் அவன் வாழ்க்கையில் என்ன செய்கிறான் மற்றும் என்ன செய்யாமல் இருக்கிறான் என்பதையும் பாதிக்கக்கூடும்.” ஆனால் உடற்கட்டை அபிவிருத்தி செய்ய பயிற்சி எடுப்பதுதான் இதற்கு விடையாக இருக்குமா?
முதலாவதாகக் கவனிக்கப்பட வேண்டிய காரியங்கள்
“உடல் தோற்றத்தின் விஷயத்தில் நீங்கள் பார்ப்பது எப்பொழுதும் உண்மையாக இருப்பதில்லை” என்பதாக யேல் பல்கலைக்கழக குழந்தை ஆராய்ச்சி மையத்தின் மருத்துவர் ஜேம்ஸ் P. கோமர் சொல்லுகிறார். வேறு வார்த்தைகளில் சொல்லப்போனால், நாம் உண்மையில் இருப்பதைவிட நம்மை உயரமானவராக அல்லது குட்டையானவராக அல்லது பருமனாக அல்லது ஒல்லியாக இருப்பதாக நாம் நினைத்துக் கொள்கிறோம்.
ஒருவேளை உங்களுடைய உடலைப் பற்றித் தவறான ஒரு கருத்தை உடையவராக இருப்பதால் நீங்கள் உண்மையில் உடற்கட்டைக் குறித்துக் கவனம் செலுத்துவது அவசியமில்லாமல் இருக்குமா? உங்களுடைய பெற்றோர்களையோ, ஒரு நல்ல நண்பரையோ அல்லது உங்களுடைய குடும்ப மருத்துவரையோ ஏன் கேட்டு அவர்களுடைய அபிப்பிராயத்தைத் தெரிந்து கொள்ளக் கூடாது? கொஞ்சம் காலத்தை விட்டுப்பாருங்கள்! சிலருக்கு மற்றவர்களை விட சதைப் பிடிக்க கொஞ்சம் காலம் எடுக்கலாம். இதைத் தவிர, உங்கள் உண்மை நண்பர்கள் நீங்கள் இருக்கும் விதமாகவே உங்களை விரும்பலாம்.
வெளிப்புறத்தோற்றம் முக்கியமானதாக இருந்த போதிலும், அதுவே எல்லாமாக இல்லை. அனேக குமாரர்களுள்ள ஒரு குடும்பத்திடமாக அவர்களில் ஒருவரை ராஜாவாக அபிஷேகம் பண்ணுவதற்குக் கடவுள் பூர்வ இஸ்ரவேலின் ஒரு தீர்க்கதரிசியை அனுப்பியபோது, அவன் அவர்களில் திடகாத்திரமான ஒரு குமாரனைப் பார்த்து, கடவுள் சரியான மனிதனைத் தெரிந்து கொண்டதாக நினைத்தான். “யெகோவா சாமுவேலை நோக்கி: நீ இவனுடைய சரீர வளர்ச்சியைப் பார்க்க வேண்டாம் . . . மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்; மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; யெகோவாவோ இருதயத்தைப் பார்க்கிறார்.” என்றார். (1 சாமுவேல் 16:7) ஒரு தேசத்தை நன்றாக ஆளுவதற்கு ஒரு நல்ல உடலமைப்பைக் காட்டிலும் அதிகம் தேவைப்படுகிறதல்லவா?
“ஆனால்,” நீங்கள் சொல்லலாம், “என்னை மற்றவர்கள் கேலி செய்யாமல், அவர்களில் ஒருவராக என்னை ஏற்றுக்கொள்வதற்காக என்னுடைய வயதிலுள்ள மற்றவர்களைப் போலவே நான் தோற்றமளிக்க விரும்புகிறேன்.” உண்மைதான் தன்னுடைய தோற்றத்தின் காரணமாக எவரும் கிண்டல் செய்யப்பட விரும்புவதில்லை. என்றபோதிலும் உடற்கட்டமைப்புக்குக் கவனம் செலுத்துவது உங்களுடைய பிரச்னையைத் தீர்த்து விடுமா? ஒரு மாணவனான பில் விளக்கும் விதமாகவே: “என்னுடைய பள்ளியில் 80 சதவிகித பையன்கள் பாரம் தூக்கி பயிற்சி செய்கிறார்கள். இது அர்த்தமற்றதாக இருக்கிறது. ஏனென்றால் தராதரங்கள் உயர்ந்து கொண்டே போகின்றன. யாராலும் தூக்க முடியாதுபோய் விடும்போது, ஒரு சமயம் திடகாத்திரமான மார்பில்லாமலிருந்தவர்கள், இப்பொழுது திருப்தியற்றவர்களாகவே உணருவார்கள். அது உயர்ந்து கொண்டே போகிறது.”
உடற்கட்டுக்குக் கவனம் செலுத்துவது போட்டிக்குரியதாகிவிடும் போது, எப்பொழுதும் மற்றவர்களைவிட நல்ல உடல்வாகுள்ள சிலர் இருப்பார்கள். ஆகவே பாரம் தூக்கி பயிற்சி செய்து உங்கள் உடற்கட்டை வளர்ப்பதற்கு நீங்கள் எவ்வளவோ நேரத்தைச் செலவழித்துவிட்டு கடைசியாக ஏமாற்றமடைந்தவராக உங்களுடைய நண்பர்களோடு ஒப்பிடும்போது பின்தங்கிய நிலையிலேயே இருக்கக்கூடும். “ஆனால் நான் ஆரோக்கியமாகவாவது இருப்பேனே. உடல் நலம் குன்றாதிருப்பது நல்லது தானே” என்று நீங்கள் சொல்லக்கூடும்.
“அற்ப பிரயோஜனமுள்ளது”
உடற்கட்டுக்குக் கவனம் செலுத்துவதில் அவ்வளவு பயனில்லை என்பதாக ஒரு கிறிஸ்தவ இளைஞன் உணர்ந்த போதிலும், பாரம் தூக்குவது உட்பட உடற்பயிற்சி ஒரு ஆரோக்கியமான சரீரத்துக்கு உதவக்கூடும் அந்தக் காரணத்தினால் தானே பைபிளும் கூட “சரீர முயற்சி [ஒரு உடற்பயிற்சி வல்லுநராக பயிற்றுவித்தல் அல்லது உடற்பயிற்சியில் ஈடுபடுதல் போன்ற ஓரளவுக்கு] பிரயோஜனமுள்ளது.” என்று சொல்கிறது. (1 தீமோத்தேயு 4:8) மருத்துவ ஆராய்ச்சிகள் இதை ஒப்புக் கொள்கின்றன. மைக்கும் இதை ஒப்புக்கொள்கிறான்.
மைக்கும் கூட பருவ வயதில் இருந்த போது “பலசாலியாகவும் ஆண்மையுடனும்” தோற்மளிப்பதற்காக உடற்கட்டுக்குக் கவனம் செலுத்தியதாகத் தெரிவிக்கிறான். என்றபோதிலும் 36 வயதில், அவன் வேறொரு காரணத்துக்காகப் பாரம் தூக்கி பயிற்சி செய்ய ஆரம்பித்தான். ஆறு வருடங்களுக்கு மேலாக, உட்கார்ந்தபடியே வேலை செய்து கொண்டிருந்து விட்டு, 25 பவுண்டுகள் (11 கிலோ) எடை கூடி விட்டதால், பாரம் தூக்குவது அழுத்தத்தை நீக்குவதற்கும் கூடுதலான எடையைக் குறைப்பதற்கும் பெரும் உதவியாக இருப்பதை அவன் கண்டான். “இப்பொழுது மனதின் பிரகாரமாகவும் சரீர பிரகாரமாகவும் நான் சுகமாக இருக்கிறேன். இழந்து போன பெலத்தை நான் மீண்டும் பெற்றுக்கொண்டு விட்டேன். கூடுதலான எடையையும் நான் குறைத்து விட்டேன்” என்பதாக அவன் சொல்கிறான். என்றபோதிலும் அவன் விழித்தெழுவிடம்: “அதே சமயத்தில் அதைச் சரியான இடத்தில் நீங்கள் வைக்க வேண்டும்” என்று சொன்னான். அவன் ஏன் அவ்விதமாகச் சொல்கிறான்?
அவன் விளக்குகிறான்: “கொஞ்சம் உடற்பயிற்சி செய்வது பிரயோஜனமாக இருக்கிறது. வாரத்துக்கு இருமுறை நான் சுமார் 45 நிமிடங்களே இதற்குச் செலவழிக்கிறோன். ஏனென்றால் வாழ்க்கையில் செய்வதற்கு அதிக முக்கியமான காரியங்கள் இருக்கின்றன. இந்தச் சமநிலைக்கானத் தேவையைக் குறித்து, முன்னால் குறிப்பிடப்பட்ட பில் அவனுடைய பள்ளித் தோழர்களின் விஷயத்தைப் பின்வருமாறு சொல்கிறான்: “ஒவ்வொரு நாளும் எல்லோரும் ஒரு மணி நேரம் இதற்காகச் செலவிடுகிறார்கள். இந்த நேரத்தில் அதிகமாக மகிழ்ச்சியைத் தருவதும் பிரயோஜனமுள்ளதாகவும் இருக்கும் காரியங்களை அவர்கள் செய்ய முடியும்.” ஆகவே தீங்கற்றதாக ஆரம்பித்த ஏதோ ஒன்றில் நாம் மட்டுமீறிய உற்சாகத்தை வளர்த்துக் கொள்ளும் சாத்தியம் இருக்கிறது.
ஆபத்துக்களும் அபாயங்களும்
ஆம், ஆபத்துக்களும் அபாயங்களும் இருக்கின்றன. பாரம் தூக்கும் உடற்பயிற்சியைப் பற்றிய ஒரு கட்டுரையில் சேன்ஜிங் டைம்ஸ் பின்வருமாறு சொன்னது: “அபாயங்களின் பட்டியலில் முதலில் வருவது, நீங்கள் தூக்கும் போது உடல் வளைகையில் முதுகின் கீழ்ப்புறத்தில் ஏற்படும் சுளுக்காக இருக்கிறது. மேலுமாக முழங்கால் முட்டின் குருத்தெலும்பில் நீர் சேருவதும் பொதுவாக இதனால் வருகிறது.” மேலுமாகத் தசை நாண்களின் வீக்கமும் எலும்பு மூட்டு வீக்கமும் ஏற்படும் அபாயம் உள்ளது. விசேஷமாக எலும்பு மூட்டு வீக்கம், தோள் மூட்டில் ஏற்படலாம். சேன்ஜிங் டைம்ஸ் கட்டுரையின் பிரகாரம், “பாரம் தூக்கிப் பயிற்சி செய்பவர்கள் பருவ வயதின் பிற்பட்ட ஆண்டுகளில் அல்லது 20 வயதுகளின் முற்பகுதியில் இருந்தாலும் கூட” இந்த அபாயங்கள் சாதாரணமாக இருக்கின்றன.
கூடுதலாகப் பெண்கள் மிதமிஞ்சிய உடற்பயிற்சியில் ஈடுபடும் போது மாதவிடாயின் செயல் முறையின் ஆற்றல் குறைவதற்கு அல்லது அது பொது நிலையிலிருந்து வேறுபடுவதற்குரிய சாத்தியமிருப்பதை மனதில் கொள்ள வேண்டும். பெரும்பாலான பெண்களின் சுரப்பு நீர் மற்றும் பிறப்பு மூல அமைப்பு அவர்களைத் தசை முறுக்குள்ளவர்களாக இருக்கும்படி செய்வது கிடையாது. ஆகவே தசை முறுக்குள்ள ஒரு உடலை உருவாக்குவதற்காகப் பாரம் தூக்கி அவர்கள் பயிற்சி செய்வார்களேயானால் பெரும்பாலான ஆட்களைவிட இவர்கள் அதிக நேரம் பயிற்சி செய்ய வேண்டும்.
பெண்களுக்கு உடலில் ஆண்களைவிட அதிகமான கொழுப்புச் சத்து உள்ளது. சில பெண்கள் தங்கள் உடலில் இயற்கையாக இருக்கும் கொழுப்புச் சத்தைக் குறைத்து ஒல்லியான தசை முறுக்குள்ள தோற்றமுடன் இருப்பதற்காக உணவு கட்டுப்பாட்டின் விஷயத்தில் கண்டிப்பாக இருக்கிறார்கள். என்றபோதிலும் பொருத்தமில்லாத ஊட்டமுறையில் நல்ல சத்துணவு இல்லாமல் போகும் ஆபத்துக்கள் வரக்கூடும். நல்ல உடற்கட்டுள்ள பிரபலமான ஒரு பெண்ணின் தோற்றத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில், நியூஸ் வீக் பின்வருமாறு சொன்னது: “அவளுடைய எல்லா தசை முறுக்கோடும் கூட அவள் வெளிறிப் போய் சோர்வாகவும் அசல் ஒரு நோயாளி போலவும் தோற்றமளிக்கிறாள்.”
சுய தோற்றத்தை வழிபடுவது
உடற்கட்டமைப்பில் ஈடுபாடுள்ளவர்கள் இதை “மட்டு மீறிய உணர்ச்சி விளையாட்டு” என்று அழைத்திருக்கிறார்கள்.” அதில் இருப்பது என்னவென்றால், எல்லைக் கோட்டை முன்னால் தள்ளிக் கொண்டே போய் நீங்கள் எவ்வளவு பருமனாக முடியும் என்பதைப் பார்ப்பதே” என்பதாக உடற்கட்டமைப்பில் ஈடுபாடுள்ள ஒருவர் சொல்கிறார். டைம் பத்திரிக்கையில் ஒரு கட்டுரையில், உடற்கட்டமைப்பில் அதிக ஈடுபாடுள்ளவர்கள், “ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் இதில் வெறியர்களாக இருக்கிறார்கள். தன்னை பூஜிப்பதற்கு ஒருவர் இவ்வளவாக வதைத்துக் கொள்ளும்போது, ஒரு கட்டத்துக்குப் பின் இது ஒரு மத சம்பந்தமான வெறியைப் போலாகி விடுகிறது” என்று லான்ஸ் மாரோ குறிப்பிட்டிருந்தார்.
தன்னை பூஜிப்பது என்பது தன்னையும் தன் உடல் தோற்றத்தையும் வழிபடுவதாக இருக்கிறது. உடற்கட்டமைப்பில் ஒரு ஈடுபாடு இதுபோன்ற ஒரு சுய வழிபாடாக எளிதில் மாறிவிடக்கூடும். என்றாலும் பைபிள் பின்வருமாறு புத்தி சொல்லுகிறது: “[எந்த விதமான] விக்கிரகாராதனைக்கும் விலகி ஓடுங்கள்”—1 கொரிந்தியர் 10:14; 1 யோவான் 2:15-17.
நீங்கள் என்ன செய்வீர்கள்?
அப்படியானால், இந்த விஷயத்தைப் பொறுப்புணர்ச்சியுடன் சிந்தித்துப் பாருங்கள். கடைசியாக நீங்கள் செய்வது உங்களுடைய சொந்தத் தீர்மானமாக இருக்க வேண்டும். இதை உங்களுடைய பெற்றோர் அறிந்தவர்களாயும் அவர்கள் இதற்கு ஒப்புதலளித்தும் இருக்க வேண்டும். (எபேசியர் 6:1-3) குறிப்பாக உங்களுடைய உள்ளெண்ணங்களை நேர்மையாக அலசிப் பார்ப்பதன் முக்கியத்துவத்தைக் காண தவறிவிடாதீர்கள். “உடற்கட்டமைப்பை” நாங்கள் பின்வருமாறு தொகுத்துரைக்கிறோம்: “போட்டிக்குரிய பந்தய காட்சிக்காக உடலமைப்பைப் பெரிதாக்குவது” ஒருவேளை இதுவே உங்களுடைய இரகசியமான உள்ளெண்ணமாக இருக்கிறதா?—ரோமர் 12:1, 2
நீங்கள் பாரம் தூக்கிப் பயிற்சி செய்ய தீர்மானித்தால் அதற்காக நீங்கள் செலவிடும் நேரத்திலும் முயற்சியிலும், சமநிலையின் அவசியத்தை மறந்து விடாதீர்கள். “சரீர ஒடுக்கத்தை”ப் பற்றிப் பைபிள் சாதகமாக பேசுவதில்லை என்பதை மறந்துவிடாதீர்கள். (கொலோசெயர் 3:23) தவிர மிதமிஞ்சிய எதுவும் காயத்தை உண்டுபண்ணுகிறது.
பாரம் தூக்கிப் பயிற்சி செய்கையில் ஒருபோதும் தனிமையில் அவ்விதமாகச் செய்யாதீர்கள்! இந்த விதியை சிலர் முட்டாள்தனமாக மீறுவதால் கவலைக்கிடமான காயமும் அல்லது மரணமும் கூட ஏற்படக்கூடும். ஏற்பட்டுமிருக்கிறது. அதே விதமாகவே உங்களுக்கோ அல்லது உங்களுடைய பெற்றோருக்கோ உங்கள் உடல்நிலையைக் குறித்து சந்தேகமிருக்குமானால் ஒரு மருத்துவரை கலந்து பேசாமல், பாரம் தூக்குவதை உட்படுத்தும் பயிற்சிகளை நீங்கள் செய்யக்கூடாது.
உங்களுடைய கூட்டுறவுகளைக் குறித்தும் நீங்கள் கவனமாயிருப்பது இன்றியமையாததாகும். (1 கொரிந்தியர் 15:33) உங்களுடைய உடல் வளர்ச்சியைத் துரிதப்படுத்தத் தீங்கற்ற மருந்துகள் என்றழைக்கப்படுகிறவற்றை உட்கொள்ள சம்மதியாதீர்கள். ‘உங்களைக் குறித்து மிக உயர்வாக எண்ணிக் கொள்ளாதிருப்பதன் மூலம்,’ மிகவும் பிரபலமான “உடற்கட்டை” உடைய ஒரு நபராக ஆவதற்கு வரக்கூடிய விருப்பத்தை நீங்கள் துண்டித்துவிடலாம்.—ரோமர் 12:3
உடற்கட்டுக்குக் கவனம் செலுத்தினாலும் செலுத்தாவிட்டாலும்—எப்படியிருந்தாலும்—மனதை கட்டுவதற்கு நேரத்தையும் முயற்சியையும் கொடுக்கும் முக்கியத்துவத்தைப் பற்றி என்ன? கடவுளுடைய மற்றும் மனுஷருடைய தயவைப் பெறக்கூடிய ஆரோக்கியமுள்ள நன்றாக பயிற்றுவிக்கப்பட்ட மனதையும் இருதயத்தையும் வளர்த்துக் கொள்ள உங்களுடைய நேரத்தில் கொஞ்சத்தை ஏன் அதற்காகச் செலவிடக்கூடாது? இளைஞராக இருக்கையில் பலமுள்ளதாக ஆவதற்குப் பயிற்சிகளைப் பெற்றுக் கொள்ள காத்துக் கொண்டிருக்கும் மனது உங்களுக்கிருக்கிறது. எப்படியானாலும் “உடலை ஐசுவரியமுள்ளதாகச் செய்வது மனதே” என்றார் ஷேக்ஸ்பியர். (g86 12/22)
[பக்கம் 23-ன் சிறு குறிப்பு]
சில பெண்கள் ஒல்லியான தசைமுறுக்குள்ள தோற்றமுடன் இருப்பதற்காக உணவு விஷயத்தில் மிதமிஞ்சிய கட்டுப்பாடுடன் இருக்கிறார்கள்