இளைஞர் கேட்கின்றனர் . . .
அம்மாவும் அப்பாவும் ஏன் எப்பொழுதும் சண்டை போட்டுக்கொண்டே இருக்கிறார்கள்?
எனக்கு என் குடும்பத்தில் ஏகப்பட்ட பிரச்னைகள், எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. என் அப்பா தன்னால் கூச்சலிடமுடிகிற ஒவ்வொரு சிறிய காரியத்துக்கும் கூச்சல் போட விரும்புகிறார். என்னுடைய அம்மா மற்ற ஒவ்வொரு சிறு காரியத்துக்கும் கூச்சல் போடுகிறாள். என் அப்பா வேலையிலிருந்து வீட்டுக்கு வருகையில் சாப்பிடுவதற்கு எதுவும் கிடைக்காவிட்டால், என் அம்மாவிடம் கூச்சல் போட ஆரம்பித்து விடுகிறார்.—12 வயது சிறுமி.
என்னுடைய பெற்றோர் விவாகரத்து பெறுவதைக் குறித்து எனக்கு மிகவும் கவலையாக இருக்கிறது. நிச்சயமாகவே, நான் இருவரையும் நேசிக்கிறேன். எல்லாச் சமயங்களிலும் அவர்கள் இருவரோடும் நான் இருக்க விரும்புகிறேன், ஆனால் பண விஷயங்கள் குறித்தும் மற்ற அநேக விஷயங்கள் குறித்தும் அவர்கள் சண்டைப் போட்டுக் கொள்கிறார்கள்.—10 வயது சிறுவன்.
நீங்கள் காண்கிறவிதமாகவே, பெற்றோர் நேசிப்பவர்களாகவும் ஒருவரிலொருவர் அக்கறையுள்ளவர்களாயிருக்கவும் எதிர்பார்க்கப்படுகின்றனர். அவர்கள் எல்லா வகையிலும் ஞானமுள்ளவர்களாயும், எல்லாம் அறிந்தவர்களாயும், தயவும் கரிசனையுமுடையவர்களாயும் இருக்க எதிர்பார்க்கப்படுகின்றனர். எல்லாக் காரியங்களிலும் அவர்கள் முழுமையாக கருத்து ஒருமித்திருக்க எதிர்பார்க்கப்படுகின்றனர். சிறு கருத்து வேற்றுமை அவர்களுக்கிருக்குமானால், அவர்கள் உங்கள் காதுக்கு எட்டாதபடி, காரியங்களை சாந்தமாகவும் அமைதியாகவும் கலந்து பேசும்படி எதிர்பார்க்கப்படுகின்றனர்.
ஆனால் ஒருவேளை பெற்றோர் சில சமயங்களில் கருத்தில் மாறுபடுகிறவர்களாக, எப்பொழுதும் சாந்தமாகவும் அமைதியாகவும் அப்படிச் செய்யாமலும் இருப்பதைக் கண்டு நீங்கள் திகிலடைந்திருக்கலாம். இவர்கள் உங்கள் பெற்றோராயிருக்கின்றனர், அவர்கள் சண்டைப் போடுவதைப் பார்ப்பது, வார்த்தைகளால் விவரிக்க முடிவதைக் காட்டிலும் அதிக ஆழமான துயரத்தை உங்களுக்கு ஏற்படுத்துகிறது. தன் பெற்றோர் சண்டைப் போடுகையில், “சில சமயங்களில், எனக்குள் சின்னாபின்னமாவது போல நான் உணர்ந்திருக்கிறேன்” என்பதாக ஓர் இளைஞன் ஒப்புக்கொண்டான்.
பெற்றோர் ஏன் சண்டை போடுகின்றனர்
நிச்சயமாகவே தாய்மார்கள் எப்பொழுதும் ‘தயையுள்ள போதகத்தைத் தங்கள் நாவின் மேல்’ கொண்டிருந்து, ஒருபோதும் கடுமையான ஒரு வார்த்தையை வாயினால் பேசாமலிருந்தால், அது மிக நேர்த்தியாக இருக்கும். (நீதிமொழிகள் 31:26) தகப்பன்மார்கள் தங்கள் மனைவிகளிடத்தில் ஒருபோதும் “கசந்து” கொள்ளாமலிருந்தால், அது இன்னும் அதிக நேர்த்தியானதாக இருக்கும். (கொலோசெயர் 3:19) ஆனால் பைபிள் சொல்லுகிறது: “நாம் எல்லாரும் அநேக விஷயங்களில் தவறுகிறோம்; ஒருவன் சொல்தவறாதவனானால் அவன் பூரண புருஷன்.”—யாக்கோபு 3:2.
ஆம், உங்கள் பெற்றோர் அபூரணராயிருக்கின்றனர். பொதுவாக, அவர்கள் ‘அன்பினால் ஒருவரையொருவர் தாங்கிக்’ கொண்டு இருக்கலாம். (எபேசியர் 4:2) ஆனால் அவ்வப்போது எரிச்சல் வளர்ந்து கூச்சலின் உருவில் அவை வெளிப்படுகையில் அது உங்களை ஆச்சரியங்கொள்ளச் செய்யக்கூடாது.
இவை “கையாளுவதற்கு கடினமான காலங்களாக” இருப்பதையும்கூட மறந்துவிடாதீர்கள். (2 தீமோத்தேயு 3:1, NW) பிழைப்பு நடத்துவதன் அழுத்தம், தேவைகளைப் பூர்த்தி செய்வது, வேலை செய்யுமிடத்தின் சூழ்நிலையோடு போரடுவது—இந்த எல்லாக் காரியங்களும் விவாகத்தின் மீது அழுத்துகின்ற சிரமத்தை வைக்கின்றன. பெற்றோர் இருவரும் உலகப்பிரகாரமான வேலைகளைக் கொண்டிருக்கையில் விசேஷமான அழுத்தங்கள் இருக்கின்றன. வெறுமென யார் சமைப்பது, சுத்தம் செய்வது என்பதைத் தீர்மானிப்பது தானே, கருத்துவேற்றுமைக்கு மூலகாரணமாகிவிடலாம்.
அவர்களுடைய சண்டை உங்களை எவ்வாறு உணரச்செய்யக்கூடும்
உங்கள் பெற்றோரின் கருத்து வேற்றுமைகளைத் தூண்டியது எதுவாக இருப்பினும், அவர்கள் தர்க்கம் செய்வதைக் கேட்பது உங்களை நிலைகுலைந்துபோகச் செய்யக்கூடும். பிள்ளைகள் “தங்கள் பெற்றோரை உயர்வான நிலைகளுக்கு உயர்த்தும் மனச்சாய்வுடையவர்கள். ஓர் இளம் பிள்ளை தன்னுடைய அம்மாவை அல்லது அப்பாவை அவனுடைய அல்லது அவளுடைய சொந்த தனியியல்பான பண்புகளை அல்லது பலவீனங்களைக் கொண்ட ஒரு தனி நபராக அல்ல, ஆனால் தன் தேவைகளை நிறைவேற்றி தன்னைப் பாதுகாப்பதற்காக மட்டுமே பூமியின் மீது விழும்படிச் செய்யப்பட்ட பாறைப் போன்று உறுதிமிக்க ஒரு நிறுவனமாகவே கருதுகிறான்,” என்பதாக எழுத்தாளர் லின்டா பர்ட் ஃபிராங்கி விளக்குகிறார். உங்கள் பெற்றோர் சண்டைப் போடுவதைப் பார்ப்பது, துயர்மிகுந்த ஓர் உண்மையை மனதில் பதிய வைக்கிறது: நீங்கள் நினைத்தது போல உங்கள் பெற்றோர் “பாறைப் போன்று உறுதிமிக்கவர்கள்” அல்ல. இது பெரிதளவில் உங்கள் உணர்ச்சி சம்பந்தமான பாதுகாப்பின் அஸ்திபாரங்களையே ஆட்டங்கொள்ளச் செய்து எல்லாவிதமான பயங்களையும் எழும்பச் செய்யக்கூடும்.
விவாகம் மற்றும் குடும்ப பத்திரிகை அறிவிப்பதாவது: “அண்மையில் நடத்தப்பட்ட பிள்ளைகளின் தேசீய சுற்றாய்வில், பேட்டி காணப்பட்ட தொடக்கப் பள்ளி வயது பிள்ளைகளில் பாதிக்கும் மேலானவர்கள், தங்கள் பெற்றோர் தர்க்கம் செய்யும்போது பயப்படுவதாகச் சொன்னார்கள்.” சின்டி என்ற பெயர் கொண்ட ஓர் இளம் பெண் இவ்விதமாகச் சொல்கிறாள்: “அவ்வப்போது என் அம்மாவும் அப்பாவும் அதிகமாக தர்க்கம் செய்வார்கள். நான் மிகவும் பயந்துபோய் என் படுக்கைக்குச் சென்றுவிடுவேன். அது எப்போது முடியும் என்று யோசிக்கிறேன்.”
பணத்தைப் பற்றிய சண்டைகள்—விவாக துணைவர்களுக்கிடையே வாக்குவாதத்துக்குப் பொதுவான ஒரு பேச்சுப்பொருள்—உங்கள் குடும்பம் நிதி சம்பந்தமாக ஒரு நொடிப்பை எதிர்ப்படுகிறது என்ற பயத்தை உருவாக்கக்கூடும். சண்டையின் மைய கவனம் நீங்களாக இருந்தால் (‘நீங்கள் உறுதியாக இல்லாவிட்டால் அவன்/அவள் சீரழிந்த பிள்ளையாகப் போகிறான்!’) சண்டைக்கு நீங்கள்தானே எப்படியோ காரணமாக இருப்பதாக பயப்படவும் செய்யலாம்.
அற்பமாகத் தோன்றுகிற காரியங்களைக் குறித்து ஓயாத சண்டைகளும்கூட மனஅமைதியை குலைக்கின்றன. (‘வீட்டுக்கு வந்தபின் இரவு உணவு தயாராக இல்லாதிருப்பது குறித்து எனக்கு எரிச்சலாகவும் சலிப்பாகவும் இருக்கிறது!’) இப்படிப்பட்ட ஓயாத சண்டைகள் அநேகமாக உங்கள் பெற்றோரிடையேயுள்ள ஆழமான வன்மத்திலிருந்து தோன்றுவதாக இருக்கிறது. அவர்கள் விவாகரத்து நீதிமன்றத்திடமாக போய்க்கொண்டிருக்கிறார்கள் என்பதாக நீங்கள் கவலைப்பட ஆரம்பிப்பது புரிந்துகொள்ளப்படத்தக்கதே. அச்சுறுத்தும் வகையில் தோன்றும் நிகழக்கூடிய திடீர் வெடிப்பின் அச்சுறுத்தல் “வீட்டில் உங்களை அசெளகரியமாக உணரச் செய்து, உங்கள் நண்பர்களை அருகில் கொண்டிருக்கும் நிலைக்குள்ளாவதை ஏற்க மனமில்லாதவர்களாகச் செய்யக்கூடும்.”—சாரா கில்பர்ட் எழுதிய வீட்டில் தொந்தரவு.
உங்கள் பெற்றோரின் சண்டைகள் மனமொடியச் செய்யும் உண்மைத்தன்மைகளை உட்படுத்தும் சண்டைகளையும்கூட உருவாக்கக்கூடும். விவாகம் மற்றும் குடும்ப பத்திரிகை குறிப்பிடும் வண்ணமாக, “ஒரு பெற்றோரிடம் நெருக்கமாக இருப்பது மற்றொருவரால் ஒதுக்கப்படும் அபாய நேர்வை அறிமுகப்படுத்துகிறது.” ஒருவர் பக்கமாகச் சேர்ந்து ஆதரிப்பதாகத் தோன்றும் எதையும் சொல்லவும் அல்லது செய்யவும் பயந்து, உங்கள் பெற்றோரின் அருகில் இருக்கையில் நீங்கள் சண்டைக்குள் இழுக்கப்படுவீர்கள் என்று அஞ்சி எரிச்சலாக உணரக்கூடும்.
‘அவர்கள் விவாகரத்து செய்துகொள்ளப் போகிறார்களா?’
சாத்தியமில்லை. ஓரளவான அழுத்தம் எல்லா விவாகங்களையும் பின்தொடருகிறது என்பதாக பைபிள் குறிப்பிடுகிறது. 1 கொரிந்தியர் 7:28-ல் விவாகம் பண்ணுகிறவர்கள் “சரீரத்திலே உபத்திரவப்படுவார்கள்” அல்லது “இந்தச் சரீர வாழ்க்கையில் வேதனையையும் துக்கத்தையும்” (தி நியு இங்கிலீஷ் பைபிள்) கொண்டிருப்பார்கள் என்று பவுல் எச்சரிக்கிறான். ஆகவே பெற்றோர் கருத்தில் வேறுபடுவது, மிகவும் தீவிரமாக அவ்விதமாகச் செய்வதும்கூட அவர்கள் ஒருவரையொருவர் இனிமேலும் நேசிப்பதில்லை என்பதையோ அல்லது விவாகரத்து நிகழப்போகிறது என்பதையோ அர்த்தப்படுத்துவதில்லை. ஒருவரிலொருவர் ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ள ஆட்களும்கூட அவ்வப்போது சண்டைப் போட்டுக் கொள்ளக்கூடும் என்பதை பைபிள் காண்பிக்கிறது.
ஆபிரகாமின் மனைவியாகிய சாராள் மனைவிக்குரிய கீழ்ப்படிதலுக்கு கிறிஸ்தவ பெண்களுக்கு ஒரு முன்மாதிரியாகக் குறிப்பிடப்படுகிறாள். (1 பேதுரு 3:6) ஆனால் அடிமைப் பெண்ணாகிய ஆகாரின் மூலம் பிறந்த ஆபிரகாமின் குமாரனாகிய இஸ்மவேல், ஆபிரகாமின் மற்றொரு குமாரனாகிய ஈசாக்கின் நலனுக்கு அச்சுறுத்தலாக இருந்ததை அவள் உணர்ந்த போது அவள் தன்னுடைய உணர்ச்சிகளை ஆவேசமாக வெளிப்படுத்தினாள். “இந்த அடிமைப் பெண்ணையும் அவள் மகனையும் புறம்பே தள்ளும்; இந்த அடிமைப் பெண்ணின் மகன் என் குமாரனாகிய ஈசாக்கோடே சுதந்தரவாளியாயிருப்பதில்லை!” என்று சாராள் உணர்ச்சியோடு கூறினாள். (ஆதியாகமம் 21:9, 10) விவாக பந்த இறுக்கங்கள் கொழுந்துவிட்டெறிந்ததில் சந்தேகமில்லை! ஆனால் நீண்ட–கால சேதம் எதுவும் ஏற்படவில்லை. உண்மையில், கடவுளுடைய தூண்டுதலினால், ஆபிரகாம் அவளுடைய வேண்டுதல்படி செய்தான்!
அப்படியானால் உங்கள் பெற்றோரின் கருத்து வேற்றுமைகள், அவர்களைவிட உங்களுக்கு மிக அதிக முக்கியத்துவமுள்ளதாக தோன்றுவது மிகவும் சாத்தியமானதாகும். “சண்டையை நிறுத்துங்கள்!” என்பதாக கூச்சலிடுவதன் மூலம் பெற்றோரின் சண்டையை நிறுத்த முயன்றபோது இளம் பெண் மார்கரெட் இதைக் கண்டுபிடித்தாள். “நாங்கள் வெறுமென விவாதித்துக் கொண்டுதான் இருந்தோம்” என்பதாக அவள் சொல்லப்பட்டாள்.
குடும்பத்தில் ஏற்படும் பெரும்பாலான சீற்றங்கள் குறுகிய காலம் நீடித்திருப்பவையாகவும் வேகமாக மறைந்துவிடுகிறவையாகவும் இருக்கின்றன—விசேஷமாக உங்கள் பெற்றோர் கடவுள் பயமுள்ளவர்களாக இருந்து “ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்தது போல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்” என்ற புத்திமதியைப் பின்பற்றுவார்களேயானால், இது இப்படியாக இருக்கிறது. (எபேசியர் 4:32) ஆம், உங்கள் பெற்றோர் உங்களிடமிருந்து எந்த உதவியுமின்றியே அவர்களுடைய பிரச்னைகளை அநேகமாக தீர்த்துக் கொள்வார்கள்.
“முதலில் அவர்கள் தர்க்கம் செய்கிறார்கள், பின்னர் அவர்கள் அடித்துக் கொள்கிறார்கள்”
என்றபோதிலும் விவாக சம்பந்தமான எல்லா இன்னல்களும் இத்தனை எளிதாக தீர்க்கப்படுவதில்லை. சுமார் 2,000 ஐ.மா. குடும்பங்களை வைத்து செய்யப்பட்ட ஏழு ஆண்டு கால ஆராய்ச்சி, “ஆண்டுதோறும் ஐக்கிய மாகாணங்களில் ஒவ்வொரு ஆறு தம்பதிகளில் ஒருவர் அவனுடைய அல்லது அவளுடைய துணைவருக்கு எதிராக குறைந்தபட்சம் ஒரு வன்முறையான செயலையாவது நடப்பிக்கிறார். . . . இது பெருமளவில் குறைந்த மதிப்பீடாக இருக்கும் சாத்தியம் அதிகமிருக்கிறது” என்பதை வெளிப்படுத்தியது. ஒரு பருவ வயது பையன் தன் பெற்றோரின் சண்டைகளை இவ்விதமாக சுருக்கமாகச் சொல்கிறான்: “முதலில் அவர்கள் தர்க்கம் செய்கிறார்கள், பின்னர் அவர்கள் அடித்துக் கொள்கிறார்கள்.”
இது உங்கள் வீட்டின் நிலைமையாக இருக்குமானால், அப்பொழுது உங்கள் பெற்றோரின் விவாகத்தில் நிச்சயமாகவே வினைமையான பிரச்னைகள் இருக்கின்றன. உங்களுடைய அல்லது உங்கள் பெற்றோரின் உடல் சம்பந்தமான பாதுகாப்புக்கும்கூட உண்மையான அச்சுறுத்தல் இருக்கலாம். குடிகாரனாயிருந்த அப்பாவோடு வழக்கமாகச் சண்டசெய்த அம்மாவைக் கொண்டிருந்த இளம் பெண் மாரி, நினைவுபடுத்தி சொல்கிறாள்: “எனக்கு பயமாக இருந்தது. அவர் என் அம்மாவை காயப்படுத்துவார் எல்லது அவள் அவரை காயப்படுத்திவிடுவாள் என்பதாக நான் நினைத்தேன்.”
சரீரத் தாக்குதலை செய்வதைத் தவிர்த்து ஆனால் ஒருவரையொருவர், “கசப்பும், கோபமும், மூர்க்கமும், கூக்குரலும், தூஷணமுமாக” வாய் வார்த்தையால் தாக்கிக்கொள்ளும் பெற்றோர்களும்கூட வினைமையான கவலைக்குரியவர்கள். (எபேசியர் 4:31) அதேவிதமாகவே பாலின அதிருப்தியை அல்லது ஒழுக்கமின்மையை சாடையாகக் குறிப்பிடும் வகையில் வார்த்தைகளில் கணைகளை எறியும் பெற்றோர் வினைமையான விவாகம் சம்பந்தப்பட்ட பிரச்னை இருக்கக்கூடும் என்பதற்கு தெளிவான அறிகுறிகளைத் தருகிறார்கள்.
ஒருசில குடும்பங்கள், குடிவெறி அல்லது போத மருந்து துர்ப்பிரயோகம் போன்று சண்டைகளுக்கு விசேஷமான காரணங்களையும்கூட கொண்டிருக்கின்றனர். அல்லது ஒரு பெற்றோர் கிறிஸ்தவராகவும் மற்றவர் அவிசுவாசியாகவும் இருக்கக்கூடும். இப்படிப்பட்ட நிலைமை ஒரு குடும்பத்தில் “பிரிவினையை உண்டாக்கும்” என்பதாக இயேசு கிறிஸ்து முன்னறிவித்தார். வினைமையான விவாக சம்பந்தமான அழுத்தம் ஏற்படலாம்.—மத்தேயு 10:35.
அப்படியென்றால், உங்கள் பெற்றோரின் விவாகம் உண்மையான ஆபத்திலிருப்பதாகத் தோன்றினால் நீங்கள் என்ன செய்யவேண்டும்? உதவியற்றவராக கவனித்துக் கொண்டிருப்பதைத் தவிர நீங்கள் செய்யக்கூடியது வேறு ஏதாவது இருக்கிறதா? இது எதிர்கால கட்டுரையின் பொருளாக இருக்கும். (g89 11/22)
[பக்கம் 17-ன் படம்]
விவாக உறவுகளில் கோபம் கொழுந்துவிட்டு எறிவது பருவ வயதினருக்கு வேதனையளிப்பதாக இருக்கிறது
[பக்கம் 18-ன் படம்]
பைபிள் நியமங்களைப் பொருத்துவது சமாதானத்தை மீண்டும் கொண்டு வருகிறது