என்ன செய்தியை அவர்கள் கேட்கிறார்கள்?
என்ன விதமான ஓர் உலகில் நீங்கள் வாழ விரும்புவீர்கள்? என்னவிதமான எதிர்காலத்தை உங்களுடைய பிள்ளைகளுக்காக நீங்கள் விரும்புகிறீர்கள்? நீங்கள் பரிபூரண ஆரோக்கியத்துடன் இருந்து மரிக்காமல் இருக்க முடிந்தால், அதை நீங்கள் தெரிந்து கொள்வீர்களா?
அந்தக் கேள்விகளுக்கு எவ்விதமாக பதிலளிப்பீர்கள்? மத அல்லது அரசியல் பின்னணி என்னவாயிருப்பினும், பெரும்பாலான மக்கள், அமைதியும் நிறைவுமுள்ள ஓர் உலகில் வாழ விரும்புவார்கள். இலஞ்ச ஊழலுக்கு இடமில்லாத மற்றும் தனிச்சலுகைக்குரியவருக்கு ஒரு சட்டமும் ஏழைக்கு மற்றொரு சட்டமுமாக இல்லாத பரிபூரண நீதியும் ஒத்திசைவுமுள்ள ஓர் உலகை அவர்கள் வரவேற்பார்கள்.
மேலும் உங்கள் பிள்ளைகளுக்கு ஏராளமாக உணவையும் இனிமையான ஓர் இல்லத்தையும் நல்ல கல்வியையும் கொண்டிருக்க நீங்கள் விரும்புவீர்கள் என்பதில் சந்தேகமில்லை. வேறு வார்த்தையில் சொன்னால், உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் நிலையான ஓர் எதிர்காலத்தை நீங்கள் உறுதி செய்து கொள்ள விரும்புவீர்கள். வாய்ப்பு அளிக்கப்படுமேயானால், பரிபூரண ஆரோக்கியத்தை உடையவர்களாக இருந்து உங்களுடைய எல்லா ஆரோக்கியமான ஆசைகளையும் விருப்பங்களையும் நிறைவேற்றிக் கொள்வதற்கு போதிய காலம் உயிரோடிருப்பதையும் அமைதியான, பரதீஸான பூமியின் மீது நித்திய ஜீவனை அனுபவித்துக் களிப்பதையும்கூட தெரிந்து கொள்வீர்கள்.
இவை அனைத்தும் சாத்தியமற்ற கனவு அல்ல. கிழக்கு ஐரோப்பிய தேசங்கள் உட்பட, உலகம் முழுவதிலும் யெகோவாவின் சாட்சிகள் பிரசங்கித்து வரும் பைபிளின் செய்தியாக இது இருக்கிறது.
எதிர்காலத்துக்காக பைபிளின் நடைமுறையான நம்பிக்கை
அநேக நூற்றாண்டுகளுக்கு முன்பாக பதிவு செய்யப்பட்ட பைபிளின் நம்பத்தகுந்த தீர்க்கதரிசனங்கள் நம்முடைய 20-ம் நூற்றாண்டு சம்பவங்களை முன்னறிவித்தன. நம்முடைய ‘யுத்தங்களும் யுத்தங்களின் செய்திகளும்’; ‘ஓரிடத்தை தொடர்ந்து அடுத்த இடத்தில் நிலநடுக்கங்களும் பஞ்சங்களும்’; ‘வெளியேற வழி தெரியாத தேசங்களின் தத்தளிப்பும், பூமியின் மீது நேரிடப் போகிற சம்பவங்களை பயந்து எதிர்பார்த்திருக்கிறதினால் மனிதர் சோர்ந்து போவதும்; நம்முடைய பூமி பாழாக்கப்பட்டு கெடுக்கப்படுவதும்.’—லூக்கா 21:10–33; வெளிப்படுத்துதல் 11:18.
என்றபோதிலும் இந்த எல்லாச் சம்பவங்களும் இன்னும் அநேகமும் கடவுளுடைய வாக்குப்பண்ணப்பட்ட புதிய உலகமும்கூட சமீபித்துவிட்டது என்பதற்கு நிச்சயமான அறிகுறியாக இருக்கின்றன. இது “புதிய வானத்தையும் புதிய பூமியையும்” அதாவது பரலோக அரசாங்கமான ஒரு புதிய ஆட்சியையும் ‘நீதி வாசமாயிருக்கப் போகும்’ மாற்றப்பட்ட பூமிக்குரிய சமுதாயத்தையும் உட்படுத்துகிறது. ‘வருத்தமும் மரணமும் துக்கமும்’ இல்லாத ஒரு புதிய உலகை அது அர்த்தப்படுத்துகிறது.—ஏசாயா 65:17–25; 2 பேதுரு 3:13; வெளிப்படுத்துதல் 21:1–4.
எத்தனை உண்மை மனதுள்ளதாகவும் கடமையுணர்ச்சியுடையதாகவும் இருந்தபோதிலும் எந்த ஓர் அரசியல் அமைப்பும் இப்படிப்பட்ட ஒரு திட்டத்தை நிறைவு செய்ய திறமையற்றதாக இருப்பது தெளிவாக இருக்கிறது. சர்வலோகத்தின் பேரரசரும் கர்த்தருமாகிய யெகோவா தேவன் மாத்திரமே இதை செய்து முடிக்க விருப்பத்தையும் வல்லமையையும் உடையவராக இருக்கிறார். அந்தக் காரணத்துக்காகவே அவருடைய குமாரனாகிய கிறிஸ்து இயேசு தம்மைப் பின்பற்றியவர்களிடம் பின்வருமாறு ஜெபிக்கும்படியாகக் கற்பித்தார்: “பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக. உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக.”—மத்தேயு 6:9, 10.
சர்வலோகத்தில், சமாதானத்தை நேசிக்கும் மனித குடும்பத்தால் குடியிருக்கப்பட்ட ஒரு பிரகாசிக்கும் மணிக்கல்லாக பூமி இருக்க வேண்டும் என்பது கடவுளுடைய சித்தமாக இருக்கிறது. இதைச் செய்வதற்கு கடவுள் விரைவில் நடவடிக்கை எடுப்பார். எல்லாத் தூய்மைக் கேட்டையும் தூய்மைக் கேடு செய்பவர்களையும் பூமியிலிருந்து அகற்றிப் போடுவதற்கான சுத்திகரிக்கும் ஒரு நடவடிக்கையாக அது இருக்கும். சரீர தூய்மைக்கேடாக இருந்தாலும் அல்லது ஒழுக்கத் தூய்மைக்கேடாக இருந்தாலும் எல்லாத் தூய்மைக்கேடும் பூமியிலிருந்து அகற்றப்படும். யார் மீந்திருப்பார்கள்? இயேசு சொன்னார்: “சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; (மகிழ்ச்சியுள்ளவர்கள், NW) அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக் கொள்ளுவார்கள்.”—மத்தேயு 5:5; வெளிப்படுத்துதல் 16:14–16.
கடவுளுடைய ஆசீர்வாதத்தைக் கொண்டிருக்கப் போகும் சாந்தகுணமுள்ளவர்கள் மத்தியில் நீங்கள் இருக்க விரும்புவீர்களா? அப்படியென்றால், உங்கள் வட்டாரத்திலுள்ள யெகோவாவின் சாட்சிகளோடு தொடர்பு கொண்டு எந்தவித எதிர்பார்ப்புமின்றி ஓர் இலவச வீட்டு பைபிள் படிப்பை நடத்துமாறு கேளுங்கள். “தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம்” என்னவென்பதை நீங்களே தெரிந்து கொள்ளுங்கள். பின்னர் அதைச் செய்யுங்கள்.—ரோமர் 12:2. (g91 1/8)