அன்பான ஒரு விவாக உறவினர் உறவில் மகிழ்ச்சி காணுதல்
ஆ
ரம்ப கட்டுரையில் குறிப்பிடப்பட்ட, கவலையில் ஆழ்ந்திருந்த மருமகள் ஃபுஜிக்கோ தன்னுடைய கணவரிடம் பேசி, கடைசியில் அவருடைய பெற்றோர் இருந்த அந்தக் குடியிருப்புப் பகுதியிலிருந்து பக்கத்து வீட்டிற்கு மாறிச் சென்றனர். ஆனால் காரியங்கள் அந்தளவுக்கு முன்னேற்றத்தைக் காணவில்லை. அவளுடைய மாமியார் மாமனாரின் தலையிடுதல் தொடர்ந்தது, அவளுடைய கவலையும் குறையவில்லை. அப்பொழுது ஒரு நாள் அவளை அந்நியர் ஒருவர் சந்திக்க வந்தார்.
அந்தச் சந்திப்பு ஃபுஜிக்கோவின் ஆள்தன்மையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதில் விளைவடைந்தது. இது மற்றவர்களோடு அவளுக்கு இருந்த உறவை முன்னேற்றுவித்தது. அவள் யெகோவாவின் சாட்சிகளுடன் பைபிளைப் படிக்க ஆரம்பித்தாள். காலப்போக்கில் அவளுடைய மனப்பான்மையில் அதிக மாற்றம் ஏற்பட்டதால், ‘அவளுடைய ஆள்தன்மையை இந்தளவுக்கு மாற்றியிருக்கும் அந்த மதம் எப்படிப்பட்டது’ என்பதைத் தான் நேரடியாகப் பார்த்து தெரிந்துகொள்வதற்காக அவளுடைய மாமனார் படிப்புகளில் கலந்துகொள்ள விரும்பினார்.
புதிய விவாக பந்தத்தை மதித்துணருதல்
வேதப்பூர்வமான விவாக ஏற்பாட்டைப் பற்றி பைபிள் ஒரு தெளிவான விவரிப்பை அளிக்கிறது. கடவுள் முதல் மனித ஜோடியைப் படைத்துவிட்டு அவர்களை ஒன்றாக இணைத்து, பின்வரும் நியமத்தை அவர்களுக்கு உறுதிப்படுத்தினார்: “இதனிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள்.” (ஆதியாகமம் 2:24) எனவே தாங்கள் ஒரு புதிய விவாக பந்தத்திற்குள் பிரவேசித்திருக்கிறார்கள் என்பதைப் புதிய தம்பதிகள் மதித்துணரவேண்டும். அவர்கள் தங்களுடைய விவாக உறவினர்களுடன் வாழ்ந்தாலும் அவர்கள் ஒரு தனித்தொகுதியாக ஒருவரிலொருவர் இணைந்திருக்கவேண்டும்.
என்றபோதிலும் தாயையும் தகப்பனையும் விட்டுவிடுதல் என்பது, பிள்ளைகள் விவாகம் ஆகும்போது தங்களுடைய பெற்றோருக்குத் தங்கள் முதுகைக் காண்பித்துவிடவேண்டும், அவர்களை இனி மதித்து நடக்கவேண்டிய அவசியமில்லை, அவர்களைக் கனப்படுத்தாமலிருக்கலாம் என்பதைக் குறிக்காது. “உன் தாய் வயதுசென்றவளாகும்போது அவளை அசட்டைப் பண்ணாதே” என்று பைபிள் அறிவுரை கூறுகிறது. (நீதிமொழிகள் 23:22) என்றபோதிலும், விவாகம் உறவுகளில் சில சிறு மாற்றங்களைத் தேவைப்படுத்துகிறது. குடும்பத்தின் ஒவ்வொரு அங்கத்தினரும் இதை நன்றாக மனதிற்கொள்ளும்போது, இளம் தம்பதிகள் தங்களுடைய பெற்றோரின் அனுபவத்திலிருந்தும் அவர்களுடைய ஞானத்திலிருந்தும் நன்மைப்பெறலாம்.
அப்போஸ்தலனாகிய பவுல் தன்னுடைய மிஷனரி பயணங்களில் தன்னோடு அழைத்துசென்ற, நற்பெயர் பெற்ற தீமோத்தேயு தன்னுடைய யூத தாயாகிய ஐனிக்கேயாளால் வளர்க்கப்பட்டான். என்றபோதிலும், அவனுடைய பாட்டி லோவிசாளும் அவனுடைய வாழ்க்கைப் போக்கினை நெறிப்படுத்துவதில் ஒரு பங்கைக் கொண்டிருந்தாள் என்பது தெளிவாக இருக்கிறது. (2 தீமோத்தேயு 1:5; 3:15) பிள்ளைகளைப் பயிற்றுவிப்பதில் பாட்டிமார்கள் தலையிட்டு, அவர்களுடைய பெற்றோர்களுடையதிலிருந்து வித்தியாசப்பட்ட தராதரங்களை அவர்களுக்கு அமைத்திட உரிமைப்பெற்றவர்களாயிருக்கிறார்கள் என்று சொல்லுவதற்கில்லை. பிள்ளைகளைப் பயிற்றுவிப்பதில் முதிய தலைமுறையினர் இளைய தலைமுறையினருக்கு உதவிட தகுந்த ஒரு முறை இருக்கிறது.—தீத்து 2:3–5.
“உண்மையிலேயே ஞானமுள்ள பெண்”
பிள்ளைப் பயிற்றுவிப்பு போன்ற உணர்ச்சிகளைப் பாதிக்கும் ஒரு பிரச்னையைக் கையாளுவதில் இரண்டு தலைமுறைகள் ஒன்றுபடுவதென்றால், இருவருமே ஞானமாகச் செயல்படவேண்டும். “புத்தியுள்ள ஸ்திரீ [உண்மையிலேயே ஞானமுள்ள பெண், NW] தன் வீட்டைக் கட்டுகிறாள்,” என்று நீதிமொழிகள் சொல்லுகிறது, “புத்தியில்லாத ஸ்திரீயோ தன் கைகளில் அதை இடித்துப்போடுகிறாள்.” (நீதிமொழிகள் 14:1) ஒரு பெண் தன்னுடைய வீட்டை எப்படிக் கட்டக்கூடும்? பேச்சுத்தொடர்புதானே தன்னுடைய மருமகள் ஃபுஜிக்கோவுடன் தனக்கிருந்த உறவை இணைப்பதற்கு உதவியது என்று டொமிக்கோ கூறுகிறாள். “பேசப்படுவது இரகசியமாக வைக்கப்படாவிட்டால் திட்டங்கள் சித்தியாமற்போம்,” என்று பைபிள் ஆலோசனைக்கூறுகிறது.—நீதிமொழிகள் 15:22, NW.
பேச்சுத்தொடர்பு என்பது, மற்றவர்களுடைய உணர்ச்சிகளை மதியாமல் உங்கள் மனதிலுள்ள எல்லாவற்றையும் உளறிக்கொட்டிவிடுவதைக் குறிக்காது. இந்த இடத்தில்தான் ஞானம் வருகிறது. மற்றவர்கள் சொல்வதற்கு “ஞானமுள்ள ஒருவன் செவிகொடுப்பான்.” சிலசமயங்களில் உங்களுடைய விவாக உறவினர்கள் ஏதாவது சொல்ல நினைப்பார்கள், ஆனால் பேசுவதற்குத் தயங்கக்கூடும். விவேகமாயிருந்து, ‘அவர்களுடைய யோசனையை மொண்டெடுங்கள்.’ பிறகு ‘யோசித்துப்’ பேசுங்கள்.—நீதிமொழிகள் 1:5; 15:28; 20:5.
பேசும் சமயம் மிகவும் முக்கியம். “ஏற்ற சமயத்தில் சொன்ன வார்த்தை வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட பொற்பழங்களுக்குச் சமானம்” என்று பைபிள் நீதிமொழி சொல்லுகிறது. (நீதிமொழிகள் 25:11) மற்றவரைப் பாதிக்கும் கருத்துகளை வெளிப்படுத்துவதற்குத் தாங்கள் சரியான சமயத்திற்குக் காத்திருப்பதாக டொக்கிக்கோவும் அவர்களுடைய மருமகளும் கூறுகிறார்கள். “ஏதோ ஒரு காரியத்தை என் மருமகளிடம் குறிப்பிட விரும்பினால், அதைக் குறித்துப் பேசுவதற்கு முன்பு நான் யோசிக்க முயற்சி செய்கிறேன்” என்கிறார் டொக்கிக்கோ. “குறிப்புகளை என் மனதில் வைத்துக்கொள்வேன்; அவள் நல்ல மனநிலையில் இருக்கும்போது, பசியின்றி இருக்கும்போது பேசுவேன். நீங்கள் பசியாயிருக்கும்போது எளிதில் எரிச்சலடைந்துவிடுவீர்கள்.”
ஞானமுள்ள ஒரு பெண் தன்னுடைய விவாக உறவினர்களைப் பற்றிக் குறைபேசுவதைத் தவிர்ப்பாள். “நாம் மாமியார்களாக இருந்தாலுஞ்சரி, அல்லது மருமகள்மார்களாக இருந்தாலுஞ்சரி, மற்றவர்களைப்பற்றி நாம் என்ன தவறாகப் பேசினாலும், அது அவர்களுடைய செவிகளை எப்படியாவது எட்டிவிடும்,” என்கிறார் சுமீ டனக்கா, ஒரு ஜப்பானிய எழுத்தாளர். இவர் தன்னுடைய மாமியாருடன் 30 ஆண்டுகள் வாழ்ந்தவர். மாறாக, விவாக உறவினரைப் பற்றி நேரடியாகவும் மறைமுகமாகவும் நல்லவிதத்தில் பேசுவதையே அவர் பரிந்துரை செய்கிறார்.
என்றபோதிலும், உங்களுடைய விவாக உறவினர்கள் உங்கள் முயற்சிக்குச் சாதகமாகப் பிரதிபலிக்கவில்லையென்றால், அப்போது என்ன?
மன்னிக்கிறவர்களாயிருங்கள்
காரியங்கள் வேறு ஒருவரால் செய்யப்படுமானால் அல்லது சொல்லப்படுமானால் அது எந்தப் பிரச்னையையும் ஏற்படுத்துவதில்லை, ஆனால் அதே காரியங்கள் அநேக சமயங்களில் விவாக உறவினர்களுக்குள்ளே கடுமையான பிரச்னைகளை ஏற்படுத்திவிடுகின்றன. நாம் எல்லாருமே அபூரணராயிருப்பதாலும், “சொல் தவறுவதாலும்,” நாம் சில சமயங்களில் ‘பட்டயக்குத்துகள் போல் யோசனையற்று பேசிவிடக்கூடும்.’ (யாக்கோபு 3:2; நீதிமொழிகள் 12:18) இருந்தாலும், யோசனையில்லாமல் பேசப்படும் ஒவ்வொரு வார்த்தைக்கும் நாம் நிலையிழந்துவிடுவது ஞானமான செயலல்ல.
விவாக உறவினர்கள் பிரச்னைகளை மேற்கொண்டவர்கள் பின்வரும் பைபிள் ஆலோசனைக்குச் செவிகொடுத்திருக்கிறார்கள்: “ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர் பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், . . . ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.” (கொலோசெயர் 3:13) உண்மைதான், உங்கள் விவாக உறவினர்களால் ஏற்படும் பிரச்னைகளைத் தாங்கி மன்னிப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல, விசேஷமாக குறைபட்டுக்கொள்வதற்குக் காரணம் இருக்குமானால். ஆனால் அப்படிச்செய்வதற்கான ஒரு பலமான ஊக்குவிப்புக்குக் காரணம், அப்படிச் செய்வதன்மூலம் நம்முடைய தப்பிதங்களுக்கு நாம் கடவுளிடமிருந்து மன்னிப்பைப் பெறுவோம் என்பதே.—மத்தேயு 6:14, 15.
புத்த மதம், தாவோ மதம், கன்ஃபூசிய மதம் மற்றும் ஷின்டோ மதம் போன்ற மதங்கள் பரம்பரையாக பின்பற்றப்படும் மக்கள் வாழும் கீழை நாடுகளிலுங்கூட அநேகர் பைபிளைப் படித்து இரக்கமுள்ள சிருஷ்டிகரைப் பற்றிய சத்தியத்தைப் போற்றவந்திருக்கின்றனர். அப்படிப்பட்ட போற்றுதல் மேற்கொள்ளமுடியாத கசந்துகொள்ளுதலாகத் தோன்றிய உணர்ச்சிகளை மேற்கொள்வதற்கும் உதவியிருக்கின்றது.
“அன்பு ஒருக்காலும் ஒழியாது”
விவாக உறவினர்களுடன் ஒரு மகிழ்ச்சியான உறவைக் கொண்டிருப்பதற்கு ஓர் உறுதியான அஸ்திவாரம் தேவை. வயதான அல்லது வியாதியான ஒரு விவாக உறவினருக்குக் கடமையுணர்ச்சியின் அடிப்படையில் உதவுவது எல்லாச் சமயத்திலும் சிறந்த உறவை அமைத்திடுவதில்லை. தன்னுடைய மாமியார் புற்றுநோயால் இறந்தபோது ஹரூக்கோ இதைக் கற்றுக்கொண்டாள். அவள் ஒரு நாளின் பெரும் பகுதியை மருத்துவமனையில்தான் செலவழிக்கவேண்டியிருந்தது, அத்துடன், தன்னுடைய சொந்த குடும்பத்தையும் கவனித்துக்கொண்டாள். அவள் அந்தளவுக்கு மன அழுத்தத்தின்கீழ் இருந்ததால் தன்னுடைய தலைமுடியில் ஏராளமானவற்றை இழந்துவிட்டாள்.
ஒருநாள் தன்னுடைய மாமியாரின் நகங்களை வெட்டிக்கொண்டிருக்கும்போது, தெரியாமல் அவளுடைய சதையை வெட்டிவிட்டாள். “என்னைப்பற்றி உனக்கு கொஞ்சங்கூட அக்கறை கிடையாது!” என்று மாமியார் சீறினாள்.
போற்றுதலில்லாத அந்த வார்த்தைகளைக் கேட்டு அதிர்ச்சியுற்றவளாய், ஹரூக்கோவால் தன் அழுகையை நிறுத்த முடியவில்லை. அந்த வார்த்தைகள் தன்னை அந்தளவுக்கு வேதனையில் ஆழ்த்தியதற்குக் காரணம், தான் மாமியாருக்குச் செய்துவந்த எல்லாமே ஒரு கடமையுணர்வின் அடிப்படையில்தான் இருந்தன என்பதை அவள் பின்னர் உணர ஆரம்பித்தாள். தன்னுடைய சேவைக்கு அன்பையே ஊக்குவிக்கும் சக்தியாகக் கொண்டிருக்கவேண்டும் என்று தீர்மானித்தாள். (எபேசியர் 5:1, 2) இது தன்னுடைய வேதனையுணர்ச்சிகளை மேற்கொள்ள அவளுக்கு உதவியது, மற்றும் தன்னுடைய மாமியாரின் மரணபரியந்தம் அவளுடன் தன்னுடைய உறவைப் புதுப்பித்துக்கொள்ள முடிந்தது.
ஆம், பைபிளில் விளக்கப்படும் அன்பு குடும்ப சச்சரவுகளை அமைதிப்படுத்திட உதவும் அடிப்படைத் தன்மையாக இருக்கிறது. இதைக் குறித்து பவுல் அப்போஸ்தலன் என்ன சொன்னான் என்பதை வாசித்துப்பார்த்து, நீங்கள் இதனை ஒப்புக்கொள்வதில்லையா என்று பாருங்கள். “அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது,” என்று அவன் எழுதினான். “அன்புக்குப் பொறாமையில்லை; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது, அயோக்கியமானதைச் செய்யாது, தற்பொழிவை நாடாது, சினமடையாது, தீங்கு நினையாது, அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும். சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும்.” பவுல் இந்த வார்த்தைகளை மேலுமாகக் கூட்டியதில் ஆச்சரியமில்லை: “அன்பு ஒருக்காலும் ஒழியாது.” (1 கொரிந்தியர் 13:4–8) இப்படிப்பட்ட அன்பை நீங்கள் எவ்விதம் வளர்க்கலாம்?
பைபிள் “அன்பை” கடவுளுடைய ஆவியின் “கனிகளின்” பாகமாக இருப்பதாய்ப் பட்டியலிடுகிறது. (கலாத்தியர் 5:22, 23) எனவே, இப்படிப்பட்ட அன்பை நீங்கள் விருத்தி செய்திட வேண்டுமானால், உங்களுடைய சொந்த முயற்சிகளுடன்கூட கடவுளுடைய ஆவியைக் கொண்டிருப்பதும் அவசியம். மேலும், பைபிளின் கடவுளாகிய யெகோவாவிடம், அவருடையதைப்போன்ற அன்பை உங்களுடைய சாயலுக்குக் கூட்டி வழங்கும்படி விண்ணப்பிக்கலாம். (1 யோவான் 4:8) உண்மைதான், இந்தக் காரியங்கள் அனைத்துமே, நீங்கள் அவருடைய வார்த்தையாகிய பைபிளைப் படித்து அவரைப்பற்றி கற்றுக்கொள்வதை தேவைப்படுத்துகிறது. ஃபுஜிக்கோவுக்கும் மற்றும் அநேகருக்கும் உதவியது போல யெகோவாவின் சாட்சிகள் உங்களுக்கு உதவிசெய்ய அதிக மகிழ்ச்சியுள்ளவர்களாயிருப்பார்கள்.
பைபிளில் நீங்கள் கற்றுக்கொண்டதைப் பொருத்திப் பிரயோகிக்கும்போது, நீங்கள் கடவுளோடு கொண்டிருக்கும் உறவு விருத்தியடைவது மட்டுமல்லாமல், உங்கள் விவாக உறவினர்கள் உட்பட உங்களைச் சுற்றியிருக்கும் எல்லாருடனும் உங்கள் உறவு விருத்தியடையும். பைபிள் வாக்களிக்கும் “எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானத்”தை நீங்கள் அனுபவிப்பீர்கள்.—பிலிப்பியர் 4:6, 7.
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்ட ஃபுஜிக்கோவும் மற்றவர்களும் அப்படிப்பட்ட சமாதானத்தை அனுபவிக்கமுடிந்தது—நீங்களும் அனுபவிக்கலாம். ஆம், யெகோவா தேவனை நோக்கியிருந்து, அவருடைய வார்த்தையாகிய பைபிளின் ஆலோசனையைப் பின்பற்றுவதன்மூலம் நீங்களுங்கூட உங்கள் விவாக உறவினர்களுடன் அன்பான ஓர் உறவை வளர்த்துக் காத்துக்கொள்ள முடியும். (g90 2/22)
[பக்கம் 8. 9-ன் பெட்டி]
கணவன் சமாதானம் பண்ணுகிறவரா அல்லது சமாதானம் கெடுப்பவரா?
ஒரே கூரையின்கீழ் இரண்டு அல்லது மூன்று தலைமுறைகள் வாழும்போது, குடும்ப சமாதானத்தைக் காத்துக்கொள்வது சம்பந்தமாகக் கணவன் வகிக்கும் பாகத்தை அசட்டைச் செய்வதற்கில்லை. தன்னுடைய உத்தரவாதத்தை உதறித்தள்ளும் கணவரைக் குறித்து, குடும்ப சமூகவியலில் ஒரு நிபுணராய்த் திகழும் கீயூஷு பல்கலைக்கழகப் பேராசிரியர் டோரூ ஆரிச்சி பின்வருமாறு எழுதுகிறார்:
“தம்பதிகள் [தாயோடு] வாழும்போது, தாய் மகனின் தேவைகளை உணர்ந்து, அப்படிப்பட்ட தேவைகளைப் பூர்த்திசெய்வதில் தன்னை அறியாமலேயே கவனம் செலுத்துகிறாள். மகன் எந்தவித தயக்கமுமின்றி அந்தக் கவனிப்பை ஏற்றுக்கொள்கிறான். மகன் தன்னுடைய மனைவியின் நிலையைக் குறித்து சற்று கூடுதலாக யோசனைசெய்து, தாயின் தலையிடுதல் சம்பந்தமாக தாயை அவளுடைய இடத்தில் வைப்பானானால், பிரச்னை தீர்ந்துவிடும். வருந்தத்தக்கக் காரியம், அநேக சமயங்களில் மகன் அதை உணருவதில்லை.”
அப்படியானால், தன்னுடைய குடும்பத்தில் சமாதானத்தை நிலைநாட்டுவதில் ஒரு கணவன் எவ்வாறு ஒரு மும்முரமான பங்கை வகிக்கலாம்? தான் பைபிள் நியமங்களைப் பொருத்தியது தன்னுடைய குடும்பத்திற்கு உதவியாயிருந்தது என்று மிட்சுஹரூ கூறுகிறார். “தாய்க்கும் அவளுடைய மகனுக்கும் இடையிலான பந்தம் மிகவும் பலமானது; அவன் பெரியவனாக இருந்தாலும் அப்படி இருக்கிறது,” என்பதை அவர் ஒப்புக்கொள்கிறார். எனவே “‘தன்னுடைய தாயையும் தகப்பனையும் விட்டு தன் மனைவியோடே இசைந்திருப்பதற்கு’ மகன் உள்ளார்ந்த முயற்சியை எடுக்கவேண்டும்.” பிள்ளைகளைக் கவனிப்பது மற்றும் பயிற்றுவிப்பது சம்பந்தமான காரியங்களைத் தன்னுடைய மனைவியிடம் மட்டுமே கலந்துபேசுவதன் மூலம் இந்த நியமத்தைப் பொருத்தினான்; வீட்டு வேலை சம்பந்தப்பட்ட காரியங்களுக்கு வரும்போது, அவளைத் தன்னுடைய தாயுடன் ஒப்பிட்டுப்பேசுவதில்லை. “இப்பொழுது நாங்களும் என்னுடைய பெற்றோரும் ஒருவரையொருவர் மதிக்கிறோம்,” என்று தொடர்ந்து கூறுகிறார். “தலையிடுதல் எங்கு விரும்பப்படுவதில்லை, உதவியும் ஒத்துழைப்பும் எங்கு போற்றப்படும் என்பதை நாங்கள் ஒவ்வொருவரும் அறிந்திருக்கிறோம்.”
‘தன்னுடைய மனைவியுடன் இசைந்திருப்பதோடுகூட’ கணவன் தன்னுடைய தாய்க்கும் மனைவிக்கும் மத்தியஸ்தனாகவும் இருக்க வேண்டும். (ஆதியாகமம் 2:24) அவன் காரியங்களை நன்கு செவிகொடுத்துக் கேட்கிறவனாகவும், அவர்கள் தங்களுடைய இருதயங்களை ஊற்றுவதற்கும் இடம்கொடுக்கவும் வேண்டும். (நீதிமொழிகள் 20:5) நிலைமைகளைச் சாதுரியமாகக் கையாளக் கற்றுக்கொண்ட ஒரு கணவன் முதலில் தன்னுடைய மனைவி எவ்விதம் உணருகிறாள் என்பதைக் கண்டுபிடிக்கிறான். பின்பு தன்னுடைய மனைவி இருக்கும்போது, உட்பட்டிருக்கும் பிரச்னைகளைக் குறித்து தன் தாயிடம் பேசுகிறான். இப்படியாகச் சமாதானம் பண்ணுகிற தன்னுடைய பாகத்தை நிறைவேற்றுகிறவனாய், மகன் வீட்டில் தான் நேசிக்கும் இரண்டு பெண்களுக்கும் இடையே சந்தோஷமான உறவை ஏற்படுத்த உதவக்கூடும்.
[பக்கம் 9-ன் படம்]
செவிகொடுத்துக் கேட்கும் செவிகளையும் பேச்சுத்தொடர்பையும் கொண்டிருங்கள்
[பக்கம் 10-ன் படம்]
கடமையுணர்ச்சி அல்ல, ஆனால் அன்பே அருமையான உறவுகளை வளர்க்கிறது