பைபிளின் கருத்து
அப்போஸ்தலன் பவுல் பெண்களுக்கு எதிராக எழுதினாரா?
அப்போஸ்தலன் “பவுலுடைய போதனைகள் கிறிஸ்தவ . . . சர்ச்சுக்குள் பெண்களுக்கு எதிராக காண்பிக்கப்படும் பாரபட்சங்களில் பெரும்பாலானவற்றிற்கு அடிப்படையாக பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.” நியூ ஜீலாந்தின் ஆக்லாண்டைச் சேர்ந்த நீதிபதி சசிலி ரஷ்டன் ஒரு கட்டுரையில் இவ்வாறு சொன்னார். சைப்ரஸில் 1993-ன் தொடக்கத்தில் நடந்த காமன்வெல்த் சட்ட மாநாட்டில் இது வாசிக்கப்பட்டது. “தீமோத்தேயுவுக்கு அவர் எழுதின கடிதம்,” அவர் மேலும் கூறினார், “அவருடைய எண்ணத்தை வெளிப்படுத்துகிறது: ‘உபதேசம்பண்ணவும், புருஷன்மேல் அதிகாரஞ் செலுத்தவும், ஸ்திரீயானவளுக்கு நான் உத்தரவு கொடுக்கிறதில்லை; அவள் அமைதலாயிருக்கவேண்டும்.’”—1 தீமோத்தேயு 2:12.
பெண்களின் பங்கு அல்லது ஸ்தானம் சம்பந்தமாக பவுல் எழுதியபோது, வெளிப்படுத்தப்பட்டது ஏதோ அவருடைய சொந்தக் கருத்துதானா, அல்லது அவர் கடவுளால் ஏவப்பட்டு எழுதினாரா? காரியங்களை முழுமையாக நோக்குகையில், பவுலின் அந்த நிருபங்கள் அல்லது கடிதங்கள் உண்மையிலேயே பெண்களுக்கு எதிரான ஒரு பாரபட்சத்தைப் பிரதிபலிக்கின்றனவா? பவுல் தீமோத்தேயுவுக்கு எழுதின, மேலே மேற்கோள்காட்டப்பட்ட வார்த்தைகள் என்ன அர்த்தத்தில் பொருந்துகின்றன?
பவுலின் தகுதிகள்
கிறிஸ்தவ கிரேக்க வேத எழுத்துக்களின் 27 புத்தகங்களில் 14 புத்தகங்கள் பவுலால் எழுதப்பட்டவையாக கருதப்படுகின்றன. பல மொழிகளில் பேசுவதற்கான அவருடைய அற்புதகரமான திறமை அவர் மீது பரிசுத்த ஆவியின் கிரியை இருந்திருக்கிறது என்பதைக் குறித்துக் காட்டுகிறது. அதுமட்டுமல்லாமல் அசாதாரண தரிசனங்கள் அவருக்குக் கிடைத்துள்ளதாக அவர் சான்றளித்துள்ளார். (1 கொரிந்தியர் 14:18; 2 கொரிந்தியர் 12:1-5) அவருடைய சுய-தியாக, முழு-ஆத்துமாவோடுகூடிய மற்றும் அன்பான எடுத்துக்காட்டு, அவருக்கும் அவருடைய காலத்தில் வாழ்ந்த கிறிஸ்தவர்களுக்கும் இடையில் அனலான சகோதர பாசத்தின் ஒரு நெருங்கிய கட்டு உருவாவதற்கு காரணமாக இருந்தது. (அப்போஸ்தலர் 20:37, 38) அவர் பெண்களைப்பற்றி சொன்னவற்றையும் உட்பட, அவர் எழுதினவை, ‘உபதேசத்துக்கு பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிற தேவ ஆவியினால் அருளப்பட்ட வேதவாக்கியங்களின்’ பாகமாக இருக்கின்றன.—2 தீமோத்தேயு 3:16, 17.
பவுலின் கடிதங்களில் பெண்கள்
பவுல் பெண்களை அங்கீகரித்ததும் அவர்களுக்காக வைத்திருந்த நன்மதிப்பும் அவர் எழுதியவை முழுவதிலும் போதுமானளவு தெளிவாக இருக்கின்றன. சபையிலும் குடும்பத்திலும் அவர்கள் வகிக்கும் பல வகையான பங்குகளைப்பற்றி அவர் மீண்டும் மீண்டும் குறிப்பிடுகிறார். அவருடைய கடிதங்கள் ஒன்றில், கிறிஸ்தவ மேய்ப்பன் ஒருவனின் விரும்பத்தக்க பண்புகளை பாலூட்டும் ஒரு தாயின் குணங்களுக்கு ஒப்பாக வைத்துப் பேசினார்.—1 தெசலோனிக்கேயர் 2:7.
அந்த அப்போஸ்தலனின் கடிதங்களில் அவருடைய கிறிஸ்தவ சகோதரிகளில் அநேகர் பெயரிட்டுக் குறிப்பிடப்பட்டிருக்கின்றனர். அவர்கள் அவருடைய அனலான பாராட்டுதலுக்கு உரியவர்களாக திகழ்கின்றனர். ரோமிலுள்ள சபை அங்கத்தினருக்கு அவர் அனுப்பிய வாழ்த்துக்களில், ‘கர்த்தருக்குள் மிகவும் பிரயாசப்படுகிற’ ஒருசில பெண்களுக்குக் குறிப்பாக எழுதியவையும் உட்படுகின்றன. (ரோமர் 16:12) எயோதியாள் மற்றும் சிந்திகேயாள் சம்பந்தமாக, அவர் பிலிப்பியிலுள்ள சகோதரர்களுக்கு, “சுவிசேஷ விஷயத்தில் என்னோடேகூட மிகவும் பிரயாசப்பட்ட . . . அவர்களுக்கு உதவியாயிருக்கும்படி” உற்சாகப்படுத்தினார். (பிலிப்பியர் 4:3) பவுல் தீமோத்தேயுவுக்கு எழுதின தன்னுடைய கடிதத்தில், அந்த இளைஞனின் பாட்டி லோவிசாள் மற்றும் தாய் ஐனிக்கேயாளின் எடுத்துக்காட்டான விசுவாசத்தை ஒத்துக்கொண்டார்.—2 தீமோத்தேயு 1:5.
முறையாக, பவுலின் கிறிஸ்தவ சகோதரிகள் அவரைப்பற்றி எப்படி உணர்ந்தார்கள் என்பதற்கான குறிப்புகள் ஏதேனும் இருக்கின்றனவா? அவர் தனிப்பட்ட நெருக்கமான உறவுகொண்டிருந்த மணமான ஒரு தம்பதியாகிய ஆக்கில்லா மற்றும் பிரிஸ்கில்லாவைப்பற்றி அவர் நன்றியுணர்வோடு எழுதினார். அதில் அவர் ஆக்கில்லா மட்டுமல்லாமல் அவனுடைய மனைவி பிரிஸ்கில்லாவும் “[அவருடைய] பிராணனுக்காகத் தங்கள் கழுத்தைக் கொடுத்தவர்கள்,” என்று நற்சான்றளித்தார்.—ரோமர் 16:3, 4.
பெண்களுக்கு எதிரான பாரபட்சமா?
“முதிர்வயதுள்ளவனைக் கடிந்துகொள்ளாமல், அவனைத் தகப்பனைப்போலவும், பாலிய புருஷரைச் சகோதரரைப்போலவும், முதிர்வயதுள்ள ஸ்திரீகளைத் தாய்களைப்போலவும், பாலிய ஸ்திரீகளை எல்லாக் கற்புடன் சகோதரிகளைப்போலவும் பாவித்து, புத்திசொல்லு.” (1 தீமோத்தேயு 5:1, 2) தீமோத்தேயுவுக்கு எழுதப்பட்ட பவுலின் இந்த வார்த்தைகள் பெண்வர்க்கத்துக்கான முழுமையான மரியாதையைப் பிரதிபலிக்கவில்லையா? பவுல் சபையில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமான கனத்தைக் கொடுத்தார். அவர் எழுதினார், “யூதனென்றும் கிரேக்கனென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை, ஆணென்றும் பெண்ணென்றுமில்லை; நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள்.”—கலாத்தியர் 3:28.
திருமணத்தில் கடவுளால் நியமிக்கப்பட்ட பங்குகளைப்பற்றி பவுல் எழுதினார்: “மனைவிகளே, கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறதுபோல, உங்கள் சொந்தப் புருஷருக்குங் கீழ்ப்படியுங்கள். கிறிஸ்து சபைக்குத் தலையாயிருக்கிறதுபோல, புருஷனும் மனைவிக்குத் தலையாயிருக்கிறான்; அவரே சரீரத்திற்கும் இரட்சகராயிருக்கிறார்.” (எபேசியர் 5:22, 23; ஒப்பிடவும்: 1 கொரிந்தியர் 11:3.) ஆம், கணவன் மனைவிக்கான அவரவருடைய பங்குகள் வித்தியாசப்படுகின்றன. ஆனால் ஒரு துணை மற்ற துணையைவிட தாழ்ந்தவர் என்று இது அர்த்தப்படுத்தவில்லை. அந்தப் பங்குகள் இணைந்து முழுமையாக்குபவையாக இருக்கின்றன. ஒவ்வொரு பங்கையும் நிறைவேற்றுவதானது ஒரு சவாலாக இருக்கிறது. ஆனால் மேற்கொண்டால் அந்தச் சவால் குடும்ப நலனை வளர்க்கிறது. மேலுமாக, கணவன் தலைமைத்துவத்தைக் கையாளவேண்டியது ஒடுக்குதல் முறையிலோ அன்பற்ற வகையிலோ அல்ல. பவுல் தொடர்ந்து எழுதினார்: “புருஷர்களும் தங்கள் மனைவிகளைத் தங்கள் சொந்தச் சரீரங்களாகப் பாவித்து, அவர்களில் அன்புகூரவேண்டும்,” அவர்களுக்காக பெரிய தியாகங்களையும் செய்யத் தயாராக இருக்கவேண்டும். (எபேசியர் 5:28, 29) பிள்ளைகள் தகப்பன், தாய் இருவருக்குமே கீழ்ப்படிந்து நடக்கவேண்டி இருந்தது.—எபேசியர் 6:1, 2.
மணவாழ்க்கையின் நெருக்கங்களைக் குறித்து பவுல் எழுதிய வார்த்தைகளும் கவனிக்கத்தக்கவை. அதிலும் பட்சபாதமின்றி பவுல் எழுதினார்: “புருஷன் தன் மனைவிக்குச் செய்யவேண்டிய கடமையைச் செய்யக்கடவன்; அப்படியே மனைவியும் தன் புருஷனுக்குச் செய்யக்கடவள். மனைவியானவள் தன் சுயசரீரத்திற்கு அதிகாரியல்ல, புருஷனே அதற்கு அதிகாரி; அப்படியே புருஷனும் தன் சுயசரீரத்திற்கு அதிகாரியல்ல, மனைவியே அதற்கு அதிகாரி.”—1 கொரிந்தியர் 7:3, 4.
‘ஸ்திரீயானவள் அமைதலாயிருக்கவேண்டும்’
ஒன்று தீமோத்தேயு 2:12-ல் உள்ள, முதல் பாராவில் மேற்கோள்காட்டப்பட்ட பவுலின் வார்த்தைகளின் சம்பந்தமாக, பெண்கள் ‘அமைதலாயிருப்பதற்கான’ அவருடைய சிபாரிசு பெண்களுக்கு எதிரான ஒரு பாரபட்சத்தின் காரணமாக தோன்றிற்றா? இல்லை! தேவைப்படுகிற அந்த “அமைதல்” சபையில் போதித்து ஆவிக்குரிய அதிகாரம் செலுத்தும் சம்பந்தமாகவே இருந்தது. இது முன்பு குறிப்பிடப்பட்ட, தெய்வீக வழிநடத்துதலினால் வரையறுக்கப்பட்ட ஆண்-பெண் உறவுமுறைக்கு மரியாதை காண்பிப்பதற்காக இருக்கிறது.a
பெண்கள் தெய்வீக சத்தியத்தின் போதகர்களாக இருக்கமுடியாது என்று இது அர்த்தப்படுத்துவது கிடையாது. முதிர்வயதுள்ள பெண்கள் இளம் பெண்களுக்கு “நற்காரியங்களைப் போதிக்கிறவர்களுமாயிருக்க” உற்சாகப்படுத்தினார் பவுல். தீமோத்தேயுவுக்குப் போதித்த ஐனிக்கேயாள் மற்றும் லோவிசாளின் எடுத்துக்காட்டைப் பின்பற்றி, கிறிஸ்தவ தாய்மார்கள் தங்களுடைய பிள்ளைகளை தேவ வழிகளில் பயிற்றுவிக்க வேண்டியவர்களாய் இருக்கின்றனர். (தீத்து 2:3-5; 2 தீமோத்தேயு 1:5) இன்று, யெகோவாவின் சாட்சிகளுடைய சபைகளில், லட்சக்கணக்கான கிறிஸ்தவ பெண்கள் நற்செய்தியை வெளிப்படையாக பிரசங்கித்து ஆண்களையும் பெண்களையும் சீஷர்களாக்குகின்றனர். இதைச் செய்வதில் அவர்கள் எயோதியாள் மற்றும் சிந்திகேயாளின் எடுத்துக்காட்டைப் பின்பற்றி இவ்வாறு ஆவிக்குரிய திருப்தியைக் காண்கின்றனர்.—சங்கீதம் 68:11, NW; மத்தேயு 28:19; பிலிப்பியர் 4:2, 3.
ஆகவே, உங்களுடைய மதிப்பீடு என்ன? பவுல் எழுதிய காரியங்கள், எல்லாவற்றையும் முழுமையாக நோக்கும்போது, பெண்களுக்கு எதிரானவை என்ற பாரபட்ச குற்றச்சாட்டை சரியென காண்பிக்கின்றனவா?
[அடிக்குறிப்புகள்]
a 1 தீமோத்தேயு 2:11-ல் (நியூ இன்டர்நேஷனல் வர்ஷன்) காணப்படும் “அனைத்துக் கீழ்ப்படிதல்” என்ற சொற்றொடரைக் குறித்து, பைபிள் அறிஞர் W. E. வைன் கூறுகிறார்: “அந்தக் கட்டளை மனதையும் மனச்சாட்சியையும் கீழ்ப்படுத்துவதற்காகவோ அல்லது சொந்தத் தீர்மானம் எடுக்கும் பொறுப்பை கைவிடுவதற்காகவோ கொடுக்கப்படவில்லை; ‘எல்லாவற்றிலும் கீழ்ப்படிந்திருந்து’ என்ற சொற்றொடர், எ.டு., அடுத்த வசனத்திலுள்ளதுபோல, அதிகாரத்தைப் பறிப்பதற்கு எதிரான ஒரு எச்சரிக்கையாக இருக்கிறது.”