அவர் ஏன் தனது முன்னுரிமைகளை மாற்றிக்கொண்டார்
பிரிட்டனிலிருந்து விழித்தெழு! நிருபர்
காதுக்கினிய பாட்டுச்சத்தம் திடீரென காற்றை நிரப்பியது. பளிங்கு போன்ற தெளிவுள்ள இன்னிசை முடிவே இல்லாததுபோல் தொடர்ந்து ஒலித்தது. நான் வாயடைத்து நின்றேன். “அது ஒரு நைட்டிங்கேல்!” என்பதாக ஜெரமி மெதுவாக சொன்னார். சிறுகாட்டின் ஓரத்தைச் சுற்றி மெதுவாக நாங்கள் சென்று, அந்த இனிமையான சத்தத்தை எழுப்பிய பறவையைக் கவனிக்க பெருமுயற்சி செய்தோம். பின்பு, புதர்களுக்குள்ளிருந்த, எளிதில் கவனிக்கப்பட முடியாத, கூச்ச சுபாவமுள்ள, வெளிர் ப்ரவுன் நிறப் பறவையைக் கண்டோம். நாங்கள் கடைசியில் அவ்விடத்தைவிட்டு சென்றபோது, “அதைப் பார்த்தது மனநிறைவளிப்பதாக இருந்தது. வெகு சிலரே எப்போதாவது அதைப் பார்க்கின்றனர்,” என்பதாக ஜெரமி சொன்னார்.
இங்கிலாந்தின் தொலைவான கிழக்கு பகுதிகள் ஒன்றில் இருக்கும் பறவைகள் பாதுகாப்பிற்கான ராயல் சொஸைட்டியின் (Royal Society for the Protection of Birds [RSPB]) 2,000 ஏக்கர் நிலப்பரப்புள்ள சரணாலயமே மின்ஸ்மிர். அதன் வார்டனாக இருக்கும் ஜெரமியோடு அந்த நாளைக் கழிப்பதற்காக நான் வந்திருந்தேன். இரண்டாவது உலகப் போரின்போது, வட கடலின் இந்த எல்லைப்பகுதி ஜெர்மானிய படையெடுப்பின் சாத்தியத்தைத் தடை செய்யும்படி வெள்ளத்தால் மூடப்பட்டிருந்தது. அதன் காரணமாக, கோரைப்புல் வெளிகள் உண்டாயின, வெள்ளம் நிறைந்த புல்வெளிகளில் சதுப்பு நிலப் பறவைகள் குடியேற ஆரம்பித்தன. 1947-ல் கோணல் மூக்கு உள்ளானின் (avocets) நான்கு ஜோடிகள் கூடு கட்டியபோது சந்தோஷம் அதிகரித்தது, ஏனெனில் இந்தப் பறவை இனம் பிரிட்டனில் 100 வருடங்களுக்கும் மேலாக இனப்பெருக்கம் செய்யவில்லை.
RSPB விரைவில் அந்த இடத்தை வாங்கியது, இப்போது அது சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பாதுகாப்பிடமாக இருக்கிறது. கோரைப்புல் வெளிகள் மாத்திரமல்லாமல் உப்புத்தண்ணீர் ஏரிகள் மற்றும் நல்லதண்ணீர் ஏரிகள்—மிகப் பெரியது ஸ்க்ரேப் என்பதாக அழைக்கப்படுகிறது—கூழாங்கற்பரப்பு, மணற்குன்றுகள், சதுப்பு நிலங்கள், பசும்புல் நிலங்கள், கரம்பு நிலம், இலையுதிர் காடுகள் மற்றும் ஊசி இலை காடுகள் ஆகியவையும் பறவைகள் வாசம்பண்ணும் இடங்களாகும். 330-க்கும் அதிகமான பறவையினங்கள் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன, அவற்றில் சுமார் 100, சரணாலயத்தில் இனப்பெருக்கம் செய்துவருகின்றன. பறவை வாழ்வின் இந்தப் பல்வகைக்கு முக்கிய காரணம், கிழக்கு கடற்கரைப் பகுதியினூடே உள்ள புலம்பெயர் வழிகள் ஆகும்; ஆனால் திறம்பெற்ற நிர்வாகமும் இதில் பங்களித்திருக்கிறது.
“நான் இங்கே 1975-ல் வந்தேன், ஏனென்றால் மின்ஸ்மிர் அசாதாரணமான சவாலை அளித்தது. 1966 முதற்கொண்டு கோணல் மூக்கு உள்ளான், RSPB-ன் சின்னமாகவும் கடைசியில் அதன் லோகோவாகவும் ஆனது. மின்ஸ்மிர் ஒவ்வொரு வருடமும் 80,000 பார்வையாளர்களை வரவேற்பதாய், இப்போது RSPB-ன் பிரமாண்டமான சரணாலயமாக அநேகரால் கருதப்படுகிறது,” என்பதாக ஜெரமி என்னிடம் சொன்னார்.
ஆரம்ப சவால்
நாங்கள் நடந்துசென்றபோது ஜெரமி இவ்வாறு தொடர்ந்தார்: “பள்ளியில் என் ஆர்வம் தூண்டப்பட்டது. அங்கே நான் பறவைகளுக்கு வளையம் போட கற்றுக்கொண்டேன், இடப்பெயர்ச்சியைக் குறித்தும் படித்தேன். 1960-களின் பிற்பகுதிக்குள்ளாக, ஒவ்வொரு வருடமும் பொழுதுபோக்காக 12,000-லிருந்து 20,000 பறவைகளுக்கு வளையம் போட்டுக்கொண்டிருந்தேன். அதன்பின், பறவையியலுக்கான பிரிட்டிஷ் ட்ரஸ்டைச் சேர்ந்த க்ரிஸ் மீட், சஹாராவினூடே புலம்பெயரும் பறவைகளுக்கு வளையம்போடுவதற்காக அவர் மேற்கொள்ளவிருந்த பயணத்தில் தன்னுடன் சேர்ந்துகொள்ளும்படி என்னை அழைத்தார். 6-லிருந்து 18 மீட்டர் நீளமுள்ள மிக மெல்லிய கறுப்புநிற வலை அதற்கு பயன்படுத்தப்படுகிறது. அது தளர்ந்தவாறு தொங்கவிடப்படுகிறது, பறவைகளால் பார்க்கமுடியாதபடி அது மரங்களைப் பின்னணியாகக்கொண்டு கவனமாக வைக்கப்படுகிறது. பறவைகள் காயமடைவதில்லை, அவை வலையிலிருந்து எடுக்கப்படும்போது, பொதுவாக மோனல் உலோகத்தால் செய்யப்பட்ட ஒரு சிறிய அடையாள வளையம் அவற்றின் கால் ஒன்றைக் கவ்வும்படி போடப்படுகிறது. a பறவைகளை விடுவிப்பது ஒரு கலையாகும். பறவைகளை வளையமிடுபவர், நீங்கள் சிலசமயம் தொலைக்காட்சியில் பார்க்கும்விதமாக அவற்றை காற்றிலே வீசி பறக்கவிடுவதில்லை. அவை எப்போது பறந்துசெல்ல விருப்பப்படுகின்றனவோ அப்போது அவையே பறந்துபோகும்படி விட்டுவிடுகிறார். உதாரணத்திற்கு, ஸ்விஃப்ட்ஸ் பறவைகள் (swifts) ஒருவருடைய கம்பளித் துணியைப் பற்றிக்கொண்டு எப்போது விருப்பப்படுகின்றனவோ அப்போதுதான் பறந்து செல்கின்றன.
“அது மனதைக் கவர்ந்த ஓர் அனுபவமாக இருந்தது. அதற்காக நான் ஆறு வாரம் விடுமுறை எடுக்க வேண்டியதாயிற்று, ஆகவே என் வேலையை இழந்தேன்! அதன் விளைவாக, ஒரு மாற்றத்திற்காக எனக்குப் பிடித்தமான வேலையை—இயற்கையை, குறிப்பாக பறவைகளைப் பராமரிக்கும் வேலையை—நாட நான் முடிவுசெய்தேன். 1967-ல் RSPB என்னை அதில் சேர்ந்துகொள்ளும்படி அழைத்தபோது நான் மெய்சிலிர்த்துப்போனேன்.”
பறவைபாட்டுகள் மற்றும் கூவுதல்களின் மதிப்பு
ஒரு பறவையின் இனத்தை நீங்கள் எவ்வாறு கண்டறிவீர்கள்? சிலசமயங்களில் தோற்றத்தினால், ஆனால் பறவையினுடைய பாட்டின் மூலமாகவோ அல்லது கூவுதலின் மூலமாகவோ அதைச் செய்வது அதிக நம்பத்தகுந்ததாக இருக்கும். இந்த விஷயத்தில் ஜெரமியின் திறமை நன்கு அறியப்பட்ட ஒன்று. ஜெரமியால் “பறவைகளின் இனத்தை அவற்றின் பாட்டுகளின் மூலமாக மாத்திரமல்லாமல் குரலிசைப்புகளுக்கிடையே காற்றை அவை உறிஞ்சும் முறையை வைத்தும்கூட கண்டறிய முடியும் என்பதை என்னால் உறுதியோடு சொல்ல முடியும்!” என்பதாக இயற்கோட்பாட்டாளரான டேவிட் டாம்லின்சன் வியந்து பாராட்டி எழுதினார்.
ஜெரமி இவ்வாறு விளக்கினார்: “பறவைகள் ஒன்றுக்கொன்று பேசிக்கொள்ளும். ஒவ்வொரு கூவுதலும் வித்தியாசமான ஒன்றை அர்த்தப்படுத்துகிறது. உதாரணத்திற்கு, கொன்றுதின்னும் விலங்குகள் அந்த வட்டாரத்தில் இருந்தால், கோணல் மூக்கு உள்ளான்களும் கணந்துள்களும் கல்லுகளும் (gulls), ரெட்ஷான்க்குகளும் (redshanks) அவற்றிற்கே உரிய தனித்தன்மைவாய்ந்த விதத்தில் கூவுகின்றன; ஆனால் அவை அனைத்தும், ‘அருகாமையில் ஒரு நரி இருக்கிறது!’ என்ற ஒரே அர்த்தத்தை உடையனவாய் இருக்கின்றன. ஆழ்ந்த தூக்கத்திலிருந்து நான் எழுந்தாலும் பறவை இனத்தின் கூவுதலை வைத்து உடனடியாக நரி எங்கேயிருக்கிறது என்பதை என்னால் அறிந்துகொள்ள முடியும். ஆனால் நரிகளுக்கும் அற்புதமான செவி ஆற்றல் உள்ளது என்பதை மறந்துவிடாதீர்கள். குறிப்பிட்ட ஒரு வருடத்தில் டர்ன்கள் (terns) ஏன் வெற்றிகரமாக இனப்பெருக்கம் செய்யவில்லை என்பதை யோசித்துக்கொண்டிருந்தோம், பின்பு, பொறிக்கப்படுவதற்கு சற்று முன்னதாகத்தானே முட்டை ஓடுகளுக்குள்ளிருந்து குஞ்சுகள் கத்துவதை ஒரு நரி கேட்டுக்கொண்டிருந்தது என்பதைக் கண்டுபிடித்தோம். அவை இருக்கும் இடத்தை கண்டறிந்தவுடனேயே நரி அவற்றை சாப்பிட்டுவிட்டது!”
பறவைகளைப் பார்வையிடும் கலை
பிரிட்டனில் உள்ள திறம்பெற்ற பறவை-பார்வையாளர் ஒருவரால் ஒரு வருடத்தில் 220 வித்தியாசமான இனங்களை பதிவு செய்ய முடியும். தென்படும் அரிய பறவைகளைப் பதிவு செய்ய முயற்சி செய்யும் ட்விட்ச்சர்ஸ் (twitchers) என்று அழைக்கப்படும் பறவை-பார்வையாளர்களால், 320 பறவைகளைக் கண்டறிய முடியும். b அரிய பறவை காணப்படுகிறது என்ற செய்தி, நாட்டைக் கடந்துசென்று தாங்களாவே அதைப் பார்க்கும்படி அவர்களைத் தூண்டும். ஜெரமி அதிக திருப்தியுடன் இருந்திருக்கிறார். “ஓர் அரிய இனத்தைப் பார்ப்பதற்கு 16 கிலோமீட்டருக்கும் அதிகமாக நான் பயணம் செய்யமாட்டேன்,” என்பதாக அவர் மனம்விட்டு சொன்னார். “உண்மையில், நான் பயணப்பட்டுப்போய் பார்த்தது மூன்றே மூன்றுதான்: நட்க்ராக்கர் (nutcracker), இளமஞ்சள் மார்புள்ள சான்ட்பைப்பர் (sandpiper), கிரேட் பஸ்டர்ட் (great bustard); அனைத்தும் 16 கிலோமீட்டருக்கு குறைவான தூரம். 500 இனங்களை நான் நன்றாக அறிந்திருந்தாலும், கடுகளவு மாத்திரம்தான் எனக்கு தெரியும் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. உலகம் முழுவதுமாக சுமார் 9,000 பறவை இனங்கள் இருக்கின்றன என்பது உங்களுக்கு தெரியுமா!”
சதுப்பு நிலங்களை நோக்கி எங்கள் பைனாக்குலர்களை நாங்கள் திருப்பியபோது, தணியாத ஆர்வத்துடன் ஜெரமி இவ்வாறு கூடுதலாக சொன்னார்: “முக்கியமாக மின்ஸ்மிரில் நான் செலவிட்ட 16 வருடங்களைக் காட்டிலும் அதிக சந்தோஷமான அல்லது அதிக பலன்தரும் வாழ்க்கையை நான் நினைத்தும்கூட பார்த்திருக்க முடியாது!” நான் அவரைப் பார்த்தேன், தி டைம்ஸ் என்ற லண்டன் பத்திரிகையில் சமீபத்தில் வெளிவந்திருந்த கட்டுரை ஞாபகத்திற்கு வந்தது. அது சொன்னதாவது: “மின்ஸ்மிர் அவரது [ஜெரமியினது] வெற்றிகரமான சாதனை, அவரது வாழ்க்கைப் படைப்பு.” ஜெரமி மின்ஸ்மிரை விட்டுச் செல்லவிருந்தார். ஏன்?
விதைகளும் வளர்ச்சியும்
அந்நாளின் ஆரம்பத்தில், கோணல் மூக்கு உள்ளானின் அசாதாரணமான இனச்சேர்க்கை காட்சியை நாங்கள் பார்த்திருந்தோம். “அதன் அழகிற்கான பெருமை, ஏதோவொரு பரிணாம பிழைப்புக்குப் போய்சேர முடியாது. ஆனால் சில வருடங்களுக்கு முன்பு, கடவுள் இருப்பதை நம்புகிறீர்களா என்று என்னிடம் கேட்கப்பட்டபோது ‘அதைப் பற்றி எதுவுமே எனக்கு தெரியாது—அதை எப்படி கண்டுபிடிப்பது என்றும்கூட எனக்கு தெரியவில்லை!’ என்று ஒப்புக்கொண்டது எனக்கு ஞாபகம் இருக்கிறது. ஆகவே பைபிளை ஆராயும்படி உற்சாகப்படுத்தப்பட்டபோது நான் உடனடியாக ஏற்றுக்கொண்டேன். அதைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாததால் அதை ஆராய்ந்து பார்ப்பது எந்த விதத்திலும் நட்டமளிக்காது, ஒருவேளை நன்மை தருவதாய்கூட இருக்கலாம் என்பதாக நான் நினைத்தேன். இப்போது, நான் கற்றுக்கொண்டிருப்பவற்றின் பயனாக முழுநேர ஊழியனாக ஆவதற்கு மின்ஸ்மிரை விட்டுச்செல்கிறேன்,” என்று ஜெரமி குறிப்பிட்டார்.
ஜெரமியின் சகோதரரான மைக்கேல் பத்து வருடங்களாக பயனியராய் இருந்துவந்திருக்கிறார். “பயனியர்” என்பது முழுநேர சுவிசேஷகர்களை குறிப்பிடுவதற்காக யெகோவாவின் சாட்சிகளால் பயன்படுத்தப்படும் ஒரு பதமாகும். நாங்கள் அமர்ந்து டீ அருந்திக்கொண்டிருந்தபோது, தன் சகோதரருடன் சேர்ந்துகொள்வதைக் குறித்த தன் திட்டங்களை ஜெரமி விவரிக்க ஆரம்பித்தார். “என் உடன்வேலையாட்கள் அனைவரும் நான் எடுத்திருக்கும் தீர்மானத்தை மதிக்கின்றனர். RSPB-ஐச் சேர்ந்தவர்கள் அக்கறையுள்ளவர்களாகவும் நலம் கருதுகிறவர்களாகவும் இருக்கின்றனர். அவர்கள் எனக்கு முழு ஆதரவும் கொடுத்து நேஷனல் மெரிட் அவார்டுக்காக என்னை பரிந்துரையும் செய்திருக்கின்றனர்,” என்பதாக ஜெரமி விளக்கினார்.
ஆயினும் சில குறைகூறுதல்களும் இருந்தன என்பது எனக்கு தெரிந்திருந்தது.
சமநிலைக்கான தேவை
“பெரும்பாலான ஆட்கள் ஆதரவாக இருந்திருக்கின்றனர், ஆனால் மற்றவர்களோ, கவலைக்குரிய விதமாக, இங்கே நான் செய்யும் வேலையைக் குறித்து தவறான கருத்தை உடையவர்களாய் இருப்பதாகத் தோன்றுகிறது,” என்பதாக ஜெரமி மனம்விட்டுச் சொன்னார். “இயற்கைக்கு அருகாமையில் இருந்து, வனவிலங்குகளை பேணிக்காத்து இவ்வாறு அவற்றின் பராமரிப்பிற்காக உழைப்பதே ஆவிக்குரிய தன்மைக்கு மிகப் பெரிய பாதுகாப்பு என்பதாக அவர்கள் நினைக்கின்றனர். இது பரதீஸுக்குள் நுழைவதற்கு சமமாக உள்ளது, ஆகவே ஏன் அதை விட்டுவிட வேண்டும் என்பதாக அவர்கள் என்னிடம் சொல்கின்றனர்.
“தெளிவாகவே, இந்த வேலை ஆவிக்குரிய அம்சத்தைக் கொண்டிருக்கிறது, ஆனால் அது ஆவிக்குரிய தன்மையோடு ஒன்றாகிவிடுவதில்லை. ஆவிக்குரிய தன்மை தனிப்பட்ட ஓர் உடைமை, வளர்த்துக்கொள்வதற்கு அதிக நேரத்தை தேவைப்படுத்தும் ஒரு பண்பு. கிறிஸ்தவ சபையோடு கூட்டுறவுகொண்டு, அதைப் பேணி, கட்டியெழுப்புவதையும் கட்டியெழுப்பப்படுவதையும் இது உட்படுத்துகிறது. இயேசு கிறிஸ்து எதைச் செய்யமுடியாது என்று சொன்னாரோ—இரண்டு எஜமான்களை சேவிப்பது—அதைச் செய்ய நான் முயற்சி செய்து வந்திருப்பதாக சிலசமயங்களில் உணர்ந்திருக்கிறேன். மிகப் பாதுகாப்பான சுற்றுச்சூழல் கிறிஸ்தவ சபையின் மத்தியில்தான் உள்ளது என்பதையும் அதை அனுபவிப்பதற்கான வழி பயனியர் ஊழியம் செய்வதில் உள்ளது என்பதையும் இப்போது நான் உணருகிறேன்!”
பேணிக்காத்தலின் முன்னுரிமைகள்
“என்னை தப்பாக நினைக்காதீர்கள். ஒரு வார்டனாக, பேணிக்காக்கும் வேலையைச் செய்வது சில சமயங்களில் மனமடிவை உண்டாக்குவதாக இருந்தாலும்கூட, அது மனங்கவர்வதும் வெகுமதியளிப்பதுமான ஓர் அனுபவம். உதாரணத்திற்கு, இப்பகுதியில் PCB மற்றும் மெர்குரியின் தூய்மைக்கேடு கவலையுண்டாக்கும் அளவில் உள்ளது. விலாங்கு மீன்கள் அவற்றை உண்டாக்குகின்றன என்பதாக நாங்கள் சந்தேகித்தாலும் உண்மையிலேயே அதற்கான காரணம் எங்களுக்குத் தெரியாது. c ஆனால் சமநிலையை சரிப்படுத்த என்னால் செய்ய முடிந்ததெல்லாம் வெகு குறைவே. சூழலியல் நிபுணர் என்று சொல்லப்படத்தக்கவர் எவருமே இல்லை. நாம் எல்லாரும் தடுமாறிக்கொண்டே முடிந்தளவு கற்றுக்கொள்கிறோம். நமக்கு வழிநடத்துதல் தேவை. நாம் எவ்வாறு வாழ வேண்டும் என்பதையும் பூமி மற்றும் அதன் பல்வகை வாழ்வை எவ்வாறு பேண வேண்டும் என்பதையும் நம் சிருஷ்டிகர் ஒருவரே அறிவார்.”
மெதுவாக, ஜெரமி தன் உணர்ச்சிகளை இவ்வாறு சுருக்கமாக சொன்னார்: “வனவிலங்குகளைப் பாதுகாப்பதற்காக நான் என் வாழ்க்கையை யெகோவாவிற்கு ஒப்புக்கொடுக்கவில்லை; அவற்றை தாமே பராமரித்துக்கொள்வதற்கு முழுமையான திறம்பெற்றவராக அவர் இருக்கிறார். அவரது ராஜ்யத்தின் மூலம், வனவிலங்கை எல்லா காலத்திற்கும் தாம் விரும்பும் வகையில் நாம் நிர்வகிக்கும்படி அவர் பார்த்துக்கொள்வார். என் உடன்மானிடர்களைப் பராமரிக்கும் உத்தரவாதத்தை நான் நிறைவேற்ற வேண்டுமென்றால் ராஜ்யத்தின் நற்செய்தியைப் பிரசங்கிப்பது இப்போது முன்னுரிமையைப் பெற வேண்டும்.”
நான் சமீபத்தில் ஜெரமியை மீண்டும் சந்தித்தேன். சரணாலயத்தில் அந்தச் சந்தோஷமான நாளை நாங்கள் ஒன்றாக சேர்ந்துகழித்து இப்போது மூன்று வருடங்கள் ஆகியிருந்தன. தான் நேசித்த மின்ஸ்மிரிலிருந்து எட்டு கிலோமீட்டர் தூரத்தில் இப்போது அவர் தன் சகோதரரோடு சந்தோஷமாக பயனியர் ஊழியம் செய்துவருகிறார். ஆனால் அவரைப் புரிந்துகொள்வது இன்னும் சில ஆட்களுக்குக் கடினமாய் இருப்பதாக அவர் என்னிடம் சொன்னார். உங்களுக்கு கடினமாக இருக்கிறதா? ஜெரமிக்கு, அது வெறுமனே முன்னுரிமைகளைக் குறித்த ஒரு காரியமாக மாத்திரமே இருந்தது.
[அடிக்குறிப்புகள்]
a மோனல் உலோகம் என்பது அதிக இழுதாங்கு வலிமையைப் பெற்றிருப்பதும் அரிமானத்தை எதிர்ப்பதுமான நிக்கல் மற்றும் செம்பின் ஓர் உலோகக்கலவை ஆகும்.
b ஐக்கிய மாகாணங்களில், லிஸ்டர்ஸ் என்ற பெயரில் ட்விட்ச்சர்ஸ் நன்றாக அறியப்படுகின்றன.
c PCB என்பது பாலிக்ளோரினேடெட் பைஃபினைல் என்ற ஒரு தொழிற்சாலைக் கழிவாகும்.
[பக்கம் 17-ன் பெட்டி/படம்]
சந்தோஷப் பரவசம்
நைட்டிங்கேலின் பாட்டைக் கேட்கும் 10 நபர்களில் ஒருவர்தான் அதைப் பார்ப்பார், ஆனால் ஒருமுறை கேட்டுவிட்டால் அந்தப் பாட்டை மறக்கவே முடியாது. “அது களங்கமற்ற பாட்டு, முழுமையானதும் நிறைவானதுமான பாட்டு” என்பதாக சைமன் ஜெங்கன்ஸ், லண்டனின் தி டைம்ஸ்-ல் எழுதினார். அடிக்கடி பறவை தொடர்ச்சியாக பாடுகிறது—அதில் ஒன்று, தொடர்ச்சியாக ஐந்து மணிநேரம் 25 நிமிடங்களுக்கு பாடியதாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அந்தப் பாட்டை எது தனித்தன்மைவாய்ந்ததாக ஆக்குகிறது? நைட்டிங்கேலினுடைய குரல்வளை, இசை சம்பந்தமாக மிகவும் திருத்தமானதாக இருக்கும் சுர அடுக்குகளையும் சேர்த்து நான்கு வித்தியாசமான சுரங்களை ஒரே சமயத்தில் உண்டாக்க முடியும். இதை, வாயை மூடிக்கொண்டோ அல்லது தன் இளம் குஞ்சிற்கு வாய் நிறைய உணவை வைத்துக்கொண்டோ அதனால் செய்ய முடியும். அது ஏன் அவ்வளவு தீவிரமாக பாடுகிறது? வெறும் அதன் மகிழ்ச்சிக்காகத்தான் என்பதாக கவனிப்போர் சிலர் சொல்கின்றனர். “நைட்டிங்கேலின் குரல்வளையைக் காட்டிலும் அதிசயமான ஒரு சிருஷ்டிப்பு இயற்கையில் இருக்கிறதா என்ன?” என்பதாக ஜெங்கன்ஸ் முடிக்கிறார்.
[படத்திற்கான நன்றி]
Roger Wilmshurst/RSPB
[பக்கம் 15-ன் படம்]
ஸ்க்ரேப்
[படத்திற்கான நன்றி]
Courtesy Geoff Welch
[பக்கம் 16-ன் படம்]
கருப்பு-தலையுள்ள கல்
[படத்திற்கான நன்றி]
Courtesy Hilary & Geoff Welch
[பக்கம் 16-ன் படம்]
கோணல் மூக்கு உள்ளான்
[பக்கம் 18-ன் படம்]
சான்ட்விச் டர்ன்
[பக்கம் 18-ன் படம்]
ரெட்ஷான்க்