எமது வாசகரிடமிருந்து
மார்மன்கள் “மார்மன் சர்ச்—எல்லாவற்றையும் திரும்ப நிலைநாட்டுகிற ஒன்றா?” (நவம்பர் 8, 1995) என்ற கட்டுரையை நான் வாசித்தபோது என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை. போர்களில் பங்கேற்க நீங்கள் மறுப்பதற்காக உங்களை மெய்க் கிறிஸ்தவர்களென்று நீங்களே அழைத்துக்கொள்கிறீர்கள். ஆனால் இரண்டாம் உலகப் போரில் போரிட்டு ஹிட்லரால் துன்புறுத்தப்பட்டுவந்த யூதர்களுக்கு உதவின மார்மன்களை எண்ணி நான் பெருமிதமடைகிறேன். இச் சமயத்தில், அறுபது லட்சம் யூதர்கள் இறந்ததை வெறுமனே பார்த்துக்கொண்டு இருந்ததைத் தவிர எதை யெகோவாவின் சாட்சிகள் செய்துவந்தனர்?
ஜி. டி., ஜெர்மனி
நாசிக்களுக்கு எதிராக ஐக்கிய மாகாணங்கள் மற்றும் பிரிட்டனிலிருந்த மார்மன்கள் போரிட்டனர் என்பது மெய்யே. ஆனால் ஜெர்மனியில்தானே அவ்விதமாக செய்யவில்லை. இங்கிலாந்தின் ஸ்டாஃப்போர்ட்ஷயர் யுனிவர்சிட்டியைச் சேர்ந்த சரித்திராசிரியர் கிரிஸ்டீன் கிங்கின் “தி நாஸி ஸ்டேட் அண்ட் தி நியூ ரிலிஜன்ஸ்” என்ற புத்தகம் அறிக்கை செய்கிறது: “மார்மன்கள் ராணுவ பணிகளில் சேர்ந்துகொண்டனர்; 1940 வாக்கில் ஜெர்மன் படையில் அறுநூறு மார்மன்கள் இருந்தனர். . . . மார்மனிஸம், நேஷனல் சோஷலிஸம் ஆகியவற்றின் ‘இணையான இலக்குகளை’ மார்மன்கள் தொடர்ந்து அழுத்திக்காட்டிவந்தனர். . . . மார்மன் தலைவர்கள் சிலர் நேஷனல் சோஷலிஸத்தின் மிக எளிய தத்துவங்களைத் தங்கள் சபைகளில் கற்பிக்க ஆரம்பித்து, அத் தலைவருக்காக ஆராதனை செய்து, ‘தெய்வத்தால் அழைக்கப்பட்டவர்’ என்று அவரைப் பற்றிப் பேச ஆரம்பித்தனர். . . . நாசிக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த மார்மன்களில் இருவரைப் பற்றிய விஷயம் மட்டுமே அறிக்கை செய்யப்பட்டுள்ளது.” என்றபோதிலும், ஒரு தொகுதியாக யெகோவாவின் சாட்சிகள் நாசி ஆட்சியை ஆதரிக்க மறுத்தனர். இவ்வாறு, அவர்கள் ஹிட்லரின் அரசால் மோசமான துன்புறுத்தலுக்கு இலக்கானார்கள். ஆயிரக்கணக்கானோர் சித்திரவதை முகாம்களில் சிறைதண்டனை அனுபவித்தனர், பலர் அங்கு இறந்தனர். எமது ஆகஸ்ட் 22, 1995, இதழைக் காண்க.—ED.
போட்டோ மாற்றம் “விஞ்ஞானப் புனைகதை—நம் எதிர்காலத்தின் கண்ணோட்டமா?” (டிசம்பர் 8, 1995) என்ற தொடர்கட்டுரை முற்றிலும் அனுபவிக்கத்தக்கதாய் இருந்தது. என்றபோதிலும், பக்கம் 3-ல் இருந்த ஜூல்ஸ் வர்னின் படம், 19-வது நூற்றாண்டு கலைஞரும் எழுத்தாளருமான உவில்லியம் மோரிஸின் படத்தைப்போல் தோன்றுகிறது.
ஆர். ஜி., ஐக்கிய மாகாணங்கள்
பல வாசகர்கள் இத் தவற்றைக் கண்டுபிடித்துள்ளனர். இது அலுவலக பணியாளரின் தவறாகும், மேலும் எங்கள் கோப்பிலிருந்த உவில்லியம் மோரிஸின் போட்டோ தவறாகப் பெயரிடப்பட்டிருந்தது. அவ்வாறு மாறிப்போனதற்காக நாங்கள் மன்னிப்பு கோருகிறோம்.—ED.
வியப்பூட்டும் அண்டம் “வியப்பூட்டும் அண்டம்—அது எங்கிருந்து ந்தது?” (ஜனவரி 22, 1996) என்ற உங்களது தொடர்கட்டுரையை நான் வாசித்தபிறகு, அண்டத்தின்மீதான தற்போதைய விஞ்ஞான ரீதியிலான கருத்தின் ஒரு மிகத் தெளிவான புரிந்துகொள்ளுதலைப் பெற்றேன். ஏராளமான செய்திக் குறிப்புகள், மூல ஆதாரங்கள், மேற்கோள்கள் ஆகியவற்றை திறமையாக நீங்கள் பயன்படுத்தியதன் மூலம் உங்களுடைய விஷயம் முக்கியப்படுத்திக் காட்டப்பட்டுள்ளது. ஓர் ஆசிரியராக, நீங்கள் அளித்த விஷயத்தை நல்ல விதத்தில் நான் பயன்படுத்துவேன்.
எம். பி., ஐக்கிய மாகாணங்கள்
பத்திரிகைகளில் அதைப்போன்ற கட்டுரைகளை நான் அடிக்கடி வாசித்திருக்கிறேன், ஆனால் அப்பேர்ப்பட்ட அதிசயங்களுக்காக ஒரு வடிவமைப்பாளருக்குப் புகழைச் செலுத்த அவை எப்பொழுதுமே தவறியிருக்கின்றன. அச் சூனியத்தை நிரப்பத் தேவையானதை உங்களுடைய கட்டுரைகள் அளித்திருக்கின்றன.
பி. பி., இத்தாலி
தகவல் நிஜமானதாய் மட்டுமல்லாமல், விசுவாசத்தைப் பலப்படுத்துவதாயும் இருந்தது. அது நமது கடவுளுக்கான—விந்தையான, வியப்பூட்டும் நம் அண்டத்தைத் தோற்றுவித்தவருக்கான—நம் போற்றுதலை வளர்த்தது!
சி. எஸ்., கிரீஸ்
அக் கட்டுரைகளை வாசிப்பது உண்மையிலேயே கிளர்ச்சியூட்டுவதாய் இருந்தது. எனக்கு வயது 14; அண்டத்தை எப்போதுமே பேரளவான வியப்போடு பார்த்திருக்கிறேன். இந்தப் படைப்பின் சிக்கலான தன்மையுடன் ஒப்பிடுகையில் மனிதரின் அற்பத்தன்மையை நான் புரிந்துகொள்ளும்படி இக் கட்டுரைகள் செய்தன.
எம். டி., போர்ச்சுகல்
அக் கட்டுரைகளை வழக்கத்துக்கு மாறான ஆர்வத்துடன் நான் வாசித்தேன். அப்படிப்பட்ட விஷயங்களை விழித்தெழு! வெளியிடுவதற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். அண்டத்தின் மர்மத்தைப் பற்றிய கூடுதலான உட்பார்வையை அது எனக்கு அளித்தது; குறிப்பாக எண்ணற்ற பால்மண்டலங்களை வெளிப்புறத்திலும் சூனியங்களை உட்புறத்திலும் கொண்ட, 10 கோடி ஒளியாண்டுகள் அளவுள்ள “குமிழ்”களின் நிரூபணம் தொடர்பான தகவலை எனக்கு அளித்தது. இது, நவீன நாளைய பேரிடிக் கொள்கைக்கு (big bang theory) ஒரு பிரச்சினையை எழுப்புகிறது! அண்டத்தைப் பற்றி உண்மையில் எந்தளவுக்குக் குறைந்த அறிவே நமக்கிருக்கிறது என்பதால் நான் கவரப்பட்டேன்.
டி. கே., செக் குடியரசு