மார்மன் சர்ச்—எல்லாவற்றையும் திரும்ப நிலைநாட்டுகிற ஒன்றா?
உடாவின் சால்ட் லேக் சிடியிலுள்ள மார்மன் ஆலயம், LDS-களுக்கு (பிற்காலப் புனிதர்கள்) அவர்களுடைய விசுவாசத்தின் பெருமையான அடையாளமாக இருக்கிறது. ஊக்கம், குடும்ப மதிப்புகள், நிதி சம்பந்தமாக தன்னிறைவு ஆகியவை மார்மன்களின் இலட்சியக்குறிகளாக இருக்கின்றன. தங்கள் பெயருள்ள அடையாள அட்டைகளை உடைய மார்மன் மிஷனரிகள் உலகெங்கும் காணப்படுகிறார்கள். ஆனால் மார்மன்களுக்கு புனிதமானதாக இருக்கும் சில உள் விவகாரங்கள் வெளியே உள்ளவர்களுக்கு மறைக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே அந்தச் சர்ச், பரபரப்பூட்டும் வதந்திகளுக்கு குறியிலக்காக இருக்கிறது. என்றாலும், ஒரு நியாயமான மதிப்பீடு, கீழ்த்தரமான கதைகளின் பேரிலல்ல, ஆனால் உண்மைகளின் பேரில் சார்ந்ததாக இருக்கவேண்டும். அதிகமாக இழித்துரைக்கப்பட்ட இந்த விசுவாசத்தைப் பற்றி நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
இன்று ஜோஸஃப் ஸ்மித்தின் சர்ச்
உண்மை சர்ச்சின் குருத்துவம் மற்றும் சட்டங்களுடன் கூடிய அதன் திரும்ப நிலைநாட்டப்படுதலே தங்கள் மதம் என்பதாக மார்மன்கள் நம்புகின்றனர். எனவேதான், அதன் அதிகாரப்பூர்வ பெயர், இயேசு கிறிஸ்துவின் பிற்காலப் புனிதர்களின் சர்ச். மார்மன் சர்ச்சில் குருக்கள் மற்றும் பாமர மக்களுக்கிடையே எவ்வித பிரிவும் இல்லை. மாறாக, 12 வயதில் தொடங்கி, தகுதியான ஒவ்வொரு ஆண் அங்கத்தினரும் சர்ச்சின் பல்வேறு வேலைகளில் ஈடுபடக்கூடும்; 16 வயதில் குருத்துவத்தையும் அடையக்கூடும்.
சர்ச் பதவிகளில் பெரும்பாலானவை சம்பளத்துக்கானவை அல்ல; LDS குடும்பங்கள், தங்கள் சபையால் அல்லது அதன் துணை அமைப்புகளால் ஆதரவளிக்கப்பட்ட அநேக திட்டங்களில் சேர்ந்துகொள்கின்றனர். சபையளவில், மூப்பர்கள், பிஷப்புகள், மற்றும் பிராந்திய (மாவட்ட) தலைவர்கள், சர்ச்சின் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட விவகாரங்களைக் கண்காணிக்கின்றனர். சால்ட் லேக் சிடியிலுள்ள 12 அப்போஸ்தலர்களாலான ஒரு குழு உலகளாவிய அதிகாரத்தைச் செலுத்துகிறது. கடைசியாக, தீர்க்கதரிசி, வருங்காலத்தைப் பார்ப்பவர், வெளிப்படுத்துகிறவர் என்பதாக மதிக்கப்படும் சர்ச்சின் தலைவரும் இரண்டு ஆலோசகர்களும் சர்ச்சின் தலைமைதாங்கி நடத்தும் அதிகாரத்தை ஏற்கின்றனர்; அது குருத்துவ செயலாண்மை குழு, அல்லது முதல் செயலாண்மை குழு என்றழைக்கப்படுகிறது.
வகுத்துரைக்கப்பட்டுள்ள பல சட்டங்கள், மதப் பற்றுள்ள மார்மன்களின் வாழ்க்கையில் செல்வாக்கு செலுத்துகின்றன. மனந்திரும்புதலையும் கீழ்ப்படிதலையும் அடையாளப்படுத்தும் முழுக்காட்டுதல், எட்டு வயதை அடைந்ததும் நடக்கக்கூடும். கழுவுதலும் அபிஷேகம் செய்தலும் அந்த விசுவாசியை சுத்திகரித்து புனித காரியத்துக்கென்று ஒதுக்கி வைக்கப்பட்டவராக்கக்கூடும். ஆலய தீக்கை வழங்கும் சடங்கு, தொடர்ச்சியான உடன்படிக்கைகளை, அல்லது வாக்குறுதிகளையும், தீங்கிலிருந்து ஒரு பாதுகாப்பாகவும் இரகசியமாக எடுத்துக்கொண்ட உறுதிமொழிகளின் நினைப்பூட்டுதலாகவும் அதற்குப்பின் எப்போதும் அணிந்துகொள்ள வேண்டியதுமான விசேஷித்த ஆலய உள்ளாடையையும் உட்படுத்துகிறது. மேலும், ஒரு மார்மன் தம்பதியின் குடும்பம் பரலோகத்தில் பழுதுபடாமல் இருந்து, அங்கு அவர்கள் தொடர்ந்து பிள்ளைகளைப் பெற்றுக்கொண்டு இருப்பதற்காக தங்கள் திருமணத்தை ஒரு ஆலயத்தில் “காலாகாலத்திற்கென்று” முறையாக செய்து முடிக்கக்கூடும்.
மார்மன் சர்ச், “சோம்பேறித்தனத்தின் சாபம் நீக்கப்படும்படி” நிறுவப்பட்ட அதன் சமூக நலத் திட்டத்திற்காக புகழ் பெற்றதாக இருக்கிறது. ஒவ்வொரு மாதமும் இரண்டு நேர உணவைத் தியாகம் செய்து, அவற்றின் மதிப்புத் தொகையை சர்ச்சுக்கு நன்கொடை அளிக்கும் உள்ளூர் அங்கத்தினர்களால் அது நிதியுதவி செய்யப்படுகிறது. மேலுமாக, அவர்களுடைய வருவாயில் கண்டிப்பாக பத்தில் ஒரு பங்கைக் கொடுப்பது அவசியமாக இருக்கிறது. மார்மன் மிஷனரிகளை ஆதரிப்பதற்கு குடும்பத்தினரும் நண்பர்களும் நிதியுதவிகளைச் செய்கின்றனர். இந்த மிஷனரிகள் பொதுவாக, இந்த வேலையில் சுமார் இரண்டு வருடங்களைச் செலவிடும் இளம் ஆண்களும் பெண்களுமாக இருக்கிறார்கள்.
சுய தியாகம், நெருங்கிய உறவுகளுள்ள குடும்பங்கள், குடிமக்களுக்குரிய கடமை உணர்வு ஆகியவை மார்மன் வாழ்க்கையின் அம்சங்களாகும். ஆனால் மார்மன் நம்பிக்கைகளைப் பற்றி என்ன?
மார்மன்களும் பைபிளும்
“பைபிள் சரியாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கிற வரைக்கும் நாங்கள் அதைக் கடவுளுடைய வார்த்தையாக நம்புகிறோம்,” என்பதாக மார்மன் விசுவாசத்தின் பிரிவுக்கூறுகளுடைய எட்டாம் பிரிவுக்கூறு குறிப்பிடுகிறது. ஆனால் அது மேலுமாகக் குறிப்பிட்டது: “மார்மனின் புத்தகமும் கடவுளுடைய வார்த்தை என்பதாக நாங்கள் நம்புகிறோம்.” இருந்தாலும், மற்ற வேத எழுத்துக்கள் ஏன் தேவைப்படுகின்றன என்று அநேகர் யோசிக்கின்றனர்?
மூப்பர் ப்ரூஸ் ஆர். மக்காங்கீ வலியுறுத்தினார்: “[மார்மன்கள்] செய்வதைப்போல பூமியிலுள்ள வேறு எந்த மக்களும் பைபிளை அவ்வளவு உயர்ந்த மதிப்புடன் கருதுவதில்லை. . . . ஆனால் இரட்சிப்புக்குத் தேவையான எல்லா காரியங்களும் பைபிளில் இருப்பதாக . . . நாங்கள் நம்புவதில்லை.” எண்ணற்ற வித்தியாசமான மத உட்பிரிவுகளும் சர்ச்சுகளும் “பைபிள் போதுமானதாக இல்லை என்பதற்குச் சான்றளிக்கின்றன” என்று மார்மன்களைப் பற்றியதென்ன? என்ற ஆங்கில துண்டுப்பிரசுரத்தில் கார்டன் பி. ஹிங்க்லீ என்ற தலைவர் எழுதினார்.
பைபிளிலிருந்து சில பகுதிகள் நீக்கப்பட்டிருப்பதாகவும் மொழிபெயர்ப்புக் குறைகள் இருப்பதாகவும் சொல்லப்படுவதன் காரணமாக அதன் நம்பகத்தன்மையைக் குறித்து LDS எழுத்தாளர்கள் ஆழ்ந்த சந்தேகங்களைத் தெரிவிக்கின்றனர். மார்மன் அப்போஸ்தலனாகிய ஜேம்ஸ் இ. டால்மாஜ், விசுவாசத்தின் பிரிவுக்கூறுகளைப் பற்றிய ஓர் ஆய்வு (ஆங்கிலம்) என்ற தன்னுடைய புத்தகத்தில் இவ்வாறு உந்துவிக்கிறார்: “அப்படியானால், சத்தியத்திற்கும் மனிதரின் குறைகளுக்கும் இடையிலுள்ள வித்தியாசத்தைக் கண்டுணருவதற்கு வாசகர் எப்போதுமே ஆவியின் வெளிச்சத்தை நாடுவதுடன், மதிப்புடனும் ஜெப சிந்தையோடும் பைபிள் வாசிக்கப்படுவதாக.” ஆர்ஸன் ப்ராட் என்ற ஆரம்பகால மார்மன் அப்போஸ்தலர் ஒருவர் இன்னும் ஒரு படி மேலே சென்றார்: “முழு பைபிளிலும் ஒரு வசனம்கூட கறைபடுதலுக்குத் தப்பியிருக்கிறதா என்று யாருக்குத் தெரியும்?”
என்றாலும், இந்த விஷயத்தின்பேரில் மார்மன்கள் எல்லா உண்மைகளையும் அறிந்திருப்பதாகத் தோன்றவில்லை. வருடங்களினூடே பைபிள் வாசகங்கள் மீண்டும்மீண்டுமாக நகல் எடுக்கப்பட்டு மொழிபெயர்க்கப்பட்டிருப்பது உண்மையே. இருந்தாலும், அவசியப்படுகிற அதன் கறைபடாத தூய்மைக்குரிய அத்தாட்சிகள் மேலெழும்பி நிற்கின்றன. ஆயிரக்கணக்கான ஆரம்பகால எபிரெய மற்றும் கிரேக்க கையெழுத்துப் பிரதிகள், அதிக அண்மை காலத்து பைபிள் நகல்களுடன் ஒப்பிட்டு ஆராயப்பட்டிருக்கின்றன. உதாரணமாக, பொ.ச.மு. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் காலம் கணக்கிடப்பட்ட ஏசாயாவின் சவக் கடல் சுருள், அதற்குப் பின் ஆயிரத்துக்கும் மேலான ஆண்டுகள் சென்றதாகக் காலம் கணக்கிடப்பட்ட ஒரு கையெழுத்துப் பிரதியுடன் ஒப்பிடப்பட்டது. முக்கியமான தவறுகள் நுழைந்திருக்கின்றனவா? அதற்கு எதிரிடையாக, கண்டுபிடிக்கப்பட்ட ஒருசில முரண்பாடுகள் “தெளிவாகவே எழுதுவதில் தெரியாமல் விட்டுப்போன தவறுகளையும் எழுத்துப்பிழைகளையுமே முக்கியமாகக் கொண்டிருந்தன” என்று ஒரு அறிஞரின் ஆய்வு குறிப்பிட்டது. a
ஒரு வாழ்நாட்கால தீவிர ஆய்விற்குப்பின், பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தின் முன்னாள் இயக்குநர் சர் ஃப்ரெட்ரிக் கென்யான் இவ்வாறு சான்றளித்தார்: “கிறிஸ்தவன் தன் கையில் முழு பைபிளையும் எடுத்து வைத்துக்கொண்டு, நூற்றாண்டுகளினூடே தலைமுறை தலைமுறையாக எவ்வித இழப்புமின்றி கடத்தப்பட்டுவந்த கடவுளுடைய உண்மையான வார்த்தையை வைத்திருப்பதாக பயமோ தயக்கமோ இன்றி சொல்ல முடியும்.” இவ்வாறு, சங்கீதக்காரனுடைய வார்த்தைகள் இன்றும் உண்மையாக இருக்கின்றன: “கர்த்தருடைய சொற்கள் மண்குகையில் ஏழுதரம் உருக்கி, புடமிடப்பட்ட வெள்ளிக்கொப்பான சுத்த சொற்களாயிருக்கிறது.” (சங்கீதம் 12:6) உண்மையில் நமக்கு இதைவிட அதிகம் தேவைப்படுகிறதா?
மார்மன் புத்தகம், 2 நீஃபை 29:6-ல், “ஒரு பைபிள், எங்களுக்கு ஒரு பைபிள் இருக்கிறது, வேறு எந்த பைபிளும் எங்களுக்குத் தேவையில்லை என்று சொல்கிறவன் பேதை,” என்று இழிந்துரைக்கிறது. என்றபோதிலும், கலாத்தியர் 1:8-லுள்ள பவுலின் கண்டிப்பான வார்த்தைகளை அநேக மார்மன்கள் ஆழ்ந்து சிந்தித்திருக்கிறார்கள்: “நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.”
அந்தப் புதிய வேதமானது, பைபிளில் அறிவிக்கப்பட்டிருப்பதற்கு அப்பாற்பட்டது அல்ல, ஆனால் அது ஒரு தெளிவுபடுத்துதலாகவும், அதன் குறையை நிரப்புவதுமாகவே இருக்கிறதென்று LDS அறிஞர்கள் விளக்குகின்றனர். “இரண்டுக்கும் இடையே எவ்வித பகைமையும் இல்லை,” என்று ப்ரிகாம் யங் பல்கலைக்கழகத் தலைவர் ரெக்ஸ் இ. லீ எழுதுகிறார். “பைபிள் மற்றும் மார்மன் புத்தகம் ஆகிய இரண்டுமே இரட்சிப்பிற்கான ஒரே திட்டத்தைக் கற்பிக்கின்றன.” இந்தப் புத்தகங்களுக்கிடையில் இசைவு இருக்கிறதா? இரட்சிப்பிற்கான மார்மன் திட்டத்தைக் கவனியுங்கள்.
“கடவுள் இப்போது இருப்பதுபோல, மனிதன் ஆகக்கூடும்”
“நமக்கு ஞாபகம் இல்லையென்றாலும், இந்த வாழ்க்கைக்கு முன்னர் நாம் ஆவிகளாக இருந்தோம்,” என்று லீ விளக்குகிறார். நித்தியத்திற்குமாக படிப்படியாய் முன்னேறும் இந்த LDS நம்பிக்கையின்படி, கண்டிப்பான கீழ்ப்படிதலின் மூலமாக ஒரு மனிதன் கடவுளைப்போல்—கடவுளைப் போன்ற ஒரு சிருஷ்டிகராக—ஆகக்கூடும். “நாம் இப்போது இருப்பதுபோல கடவுள்தாமே ஒருகாலத்தில் இருந்தார்; அவர் உயர்த்தப்பட்ட ஒரு மனிதனாக இருந்து, தொலைவிலுள்ள பரலோகத்திலே சிங்காசனத்தில் வீற்றிருக்கிறார். உங்களுக்கு முன்னர் எல்லா கடவுட்களும் செய்திருந்ததுபோல, . . . நீங்கள்தாமே கடவுட்களாக இருப்பது எப்படி என்று நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும்” என்று ஜோஸஃப் ஸ்மித் குறிப்பிட்டார். மார்மன் தீர்க்கதரிசி லாரென்ஸோ ஸ்நோ சொன்னார்: “மனிதன் இப்போது இருப்பதுபோல கடவுள் ஒருகாலத்தில் இருந்தார்; கடவுள் இப்போது இருப்பதுபோல மனிதன் ஆகக்கூடும்.”
அப்படிப்பட்ட எதிர்காலம் பைபிளின் பக்கங்களில் கொடுக்கப்பட்டிருக்கிறதா? ஏதேன் தோட்டத்தில் பிசாசாகிய சாத்தானால் கொடுக்கப்பட்ட ஆதாரமற்ற வாக்குறுதி மட்டுமே தெய்வத்தன்மையை அளிப்பதாக பதிவுசெய்யப்பட்டுள்ள ஒரே பதிவாகும். (ஆதியாகமம் 3:5) கடவுள் ஆதாமையும் ஏவாளையும் பூமியில் வாழும்படி படைத்து, இங்கு என்றென்றுமாக மகிழ்ச்சியுடன் வாழக்கூடிய ஒரு பரிபூரண மனித குடும்பத்தை உருவாக்கும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டதாக பைபிள் காண்பிக்கிறது. (ஆதியாகமம் 1:28; 3:22; சங்கீதம் 37:29; ஏசாயா 65:21-25) ஆதாமின் மனப்பூர்வமான கீழ்ப்படியாமை பாவத்தையும் மரணத்தையும் உலகிற்குக் கொண்டுவந்தது.—ரோமர் 5:12.
முன்னாள் ஆவிகளாகிய ஆதாமும் ஏவாளும் பாவமின்றி இருந்திருந்தால், அவர்கள் பிள்ளைகளின்றியும் சந்தோஷமின்றியும் பரதீஸில் தனியாக இருந்திருப்பார்கள் என்று மார்மன் புத்தகம் சொல்லுகிறது. ஆகவே திருமணமான முதல் தம்பதியின் பாவத்தைப் பற்றிய அதன் கருத்து விளக்கம், பாலின உறவு மற்றும் குழந்தைப்பேற்றையும் உட்படுத்தியது. “மனிதர் உருவாகும்படியாக ஆதாம் அந்த ஒழுக்கங்கெட்ட காரியத்தைச் செய்தான்; மேலும் சந்தோஷத்தைக் கொண்டிருப்பதற்காகவே மனிதர் இருக்கின்றனர்.” (2 நீஃபை 2:22, 23, 25) இவ்வாறாக ஒரு பாவமுள்ள பூமியில் வாழ்வதற்கான—பரிபூரணத்திற்கும் தெய்வத்துவத்திற்கும் அவசியமான ஒரு படி—ஒரு வாய்ப்பிற்காக பரலோகத்திலுள்ள ஆவிகள் காத்திருப்பதாகச் சொல்லப்படுகின்றன. என்ஸைன் என்ற LDS பத்திரிகை சொல்கிறது: “ஆதாமும் ஏவாளும் செய்ததை இகழ்ச்சியுடன் நோக்குவதற்கு மாறாக மிகுந்த போற்றுதலுடன் நாம் நோக்குகிறோம்.”
“[மனிதன் ஆவி ரூபத்தில் இருந்தான் என்ற] இந்தக் கோட்பாட்டை பைபிளில் மிகவும் தெளிவற்ற விதத்திலேயே கண்டுணர முடிகிறது . . . ஏனென்றால் அநேக தெளிவானதும் விசேஷித்ததுமான காரியங்கள் பைபிளிலிருந்து எடுக்கப்பட்டுவிட்டன,” என்று ஜோஸஃப் ஸ்மித்தின் உடன்பிறந்தாருடைய பேரன் ஜோஸஃப் ஃபீல்டிங் ஸ்மித் கூறுகிறார். மேலுமாக அவர் குறிப்பிடுகிறார்: “இந்த நம்பிக்கை, மே 6, 1833-ல் சர்ச்சுக்குக் கொடுக்கப்பட்ட ஒரு வெளிப்படுத்துதலை சார்ந்திருக்கிறது.” ஆகவே, பைபிளின் அதிகாரத்தை ஏற்றுக்கொள்கிறபோதிலும், ஒத்திசைவில்லாத நிலைமை ஏற்படுகையில், LDS கோட்பாடு அவசியமாகவே தங்கள் தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளுக்கு அதிக முக்கியத்துவத்தைக் கொடுக்கிறது.
மார்மன் புத்தகம்—விசுவாசத்தின் மூலாதாரம்
“பூமியிலுள்ள புத்தகமனைத்திலும் மிகவும் சரியானதும், எங்கள் மதத்தின் மூலாதாரமும்” என்று மார்மன் புத்தகத்தை ஜோஸஃப் ஸ்மித் போற்றிப்புகழ்ந்தார். பொற்தகடுகளின் ஒரு தொகுதியே அவருடைய எழுத்துக்களுக்கு ஊற்றுமூலமாக இருந்ததாகச் சொல்லப்பட்டது. பதினொரு மார்மன்கள் அந்தத் தகடுகளைப் பார்த்ததாகச் சான்றளித்தனர். அந்தப் பத்திரம் எழுதப்பட்டு முடிந்தபோதோ, அந்தத் தகடுகள் பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக ஸ்மித் சொன்னார். இதன் காரணமாக அந்த வாசகங்களை சோதித்தாராய்வதற்கு அவை இல்லை.
அவற்றிலுள்ள எழுத்துப்பொறிப்புகள் சிலவற்றின் நகல் காண்பிக்கப்பட்டு, அவற்றை நம்பத்தக்கவை என்றும் மொழிபெயர்ப்பு திருத்தமானது என்றும் அறிவித்த பேராசிரியர் சார்ல்ஸ் ஆன்தன் என்ற ஒருவரைப் பற்றி பெரும் விலையுள்ள முத்து (ஆங்கிலம்) (பக்கம் 20-லுள்ள பெட்டியைப் பார்க்க) சொல்லுகிறது. ஆனால் அந்தத் தகடுகளின் மூலத்தைக் குறித்துச் சொல்லப்பட்டபோது அவர் தன்னுடைய கருத்தில் பின்வாங்கினார் என்று அந்தப் பதிவு சொல்லுகிறது. என்றபோதிலும், “உலகிற்கு இழக்கப்பட்டதாக இருந்த அந்த அறிவை,” அந்தத் தகடுகளின் மொழியை மொழிபெயர்ப்பதற்கான வரத்தை தான் மட்டுமே கொண்டிருந்தார் என்ற ஸ்மித்தின் உரிமைபாராட்டலுடன் இந்தப் பதிவு இசைவற்று இருப்பதாகத் தோன்றுகிறது. தன்னால் வாசிக்கமுடியாததும், அதன் காரணமாக மொழிபெயர்க்கக்கூடாததுமாக இருந்த ஒரு வாசகத்தை பேராசிரியர் ஆன்தன் சரியென உறுதிசெய்ய முடியுமா?
ஜோஸஃப் ஸ்மித்தின் காலத்தில் ஏற்கெனவே பழைமையானதாகக் கருதப்பட்ட ஷேக்ஸ்பியரின் பாணியிலான ஆங்கிலத்தில் எழுதப்பட்ட கிங் ஜேம்ஸ் மொழிபெயர்ப்பு பைபிளிலிருந்து மார்மன் புத்தகம் அதிகமான மேற்கோள்களைப் பயன்படுத்துகிறது. புத்தகங்களிலெல்லாம் “மிகவும் சரியான” இந்த மார்மன் புத்தகம், தவறுகள் நிறைந்ததாகச் சொல்லப்பட்டதும் பின்னர் ஸ்மித் திருத்தியமைக்க முனைந்ததுமான பைபிள் மொழிபெயர்ப்பிலிருந்து குறைந்தது 27,000 வார்த்தைகளையாவது நேரடியாக எடுத்துப் பயன்படுத்தியிருப்பது சில வாசகர்களுக்கு குழப்பமூட்டியிருக்கிறது.—பெட்டியைப் பார்க்க, பக்கம் 24.
மார்மன் புத்தகத்துடைய முதல் பதிப்பை தற்போதைய பதிப்புகளுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது அநேக மார்மன்களுக்கு ஆச்சரியத்திற்குரிய ஓர் உண்மையை—“கடவுளுடைய வரத்தாலும் வல்லமையாலும் . . . மொழிபெயர்க்கப்பட்டது” என்பதாகச் சொல்லப்படும் புத்தகம்தானே இலக்கணம், எழுத்துக்கூட்டுதல், பொருள் ஆகியவற்றில் எண்ணற்ற மாற்றங்களை அடைந்திருக்கிறது என்பதை—வெளிப்படுத்துகிறது. உதாரணமாக, “நித்திய பிதா” யார் என்பதைக் குறித்து குழப்பம் இருப்பதாகத் தோன்றுகிறது. முதல் பதிப்பின்படி, 1 நீஃபை 13:40-ல், “தேவ ஆட்டுக்குட்டியே நித்திய பிதா.” ஆனால் “தேவ ஆட்டுக்குட்டி, நித்திய பிதாவின் மகன்” என்று பிற்பட்ட பதிப்புகள் சொல்லுகின்றன. (நேரெழுத்துக்கள் எங்களுடையவை.) மார்மன் புத்தகத்துடைய 1830-ன் மூல கையெழுத்துப் பிரதிகள் இரண்டும் இன்னும் இருக்கின்றன. இயேசு கிறிஸ்துவின் பிற்காலப் புனிதர்களின் திரும்ப ஒழுங்கமைக்கப்பட்ட சர்ச் வைத்திருக்கும் அந்த இரண்டு மூலங்களில் ஒன்றில், “மகன்” என்ற வார்த்தை வரிகளுக்கு இடையில் சேர்க்கப்பட்டிருக்கிறது.
கோட்பாடும் உடன்படிக்கைகளும் (ஆங்கிலம்) என்ற மார்மன் வேதத்தைக் குறித்து, LDS அறிஞராகிய லின்டன் டபிள்யூ. குக் என்பவரின் தீர்க்கதரிசியாகிய ஜோஸஃப் ஸ்மித்தின் வெளிப்படுத்தல்கள் (ஆங்கிலம்) என்ற புத்தகம் முன்னுரையில் இவ்வாறு விவரிக்கிறது: “அவற்றைப் பிரசுரிப்பதற்காக ஏற்பாடு செய்யும்படி நியமிக்கப்பட்ட அந்தக் குழுக்களால் சில வெளிப்படுத்துதல்கள் திருத்தியமைக்கப்பட்டிருப்பதால் அந்த வாசகங்களில் குறிப்பிடத்தக்க கூட்டல்களும் கழித்தல்களும் கவனிக்கப்பட்டிருக்கின்றன.” கட்டளைகளின் புத்தகம் (ஆங்கிலம்) 4:2-ல் அப்படிப்பட்ட ஒரு மாற்றம் காணப்படுகிறது; அது ஸ்மித்தைப் பற்றி இவ்வாறு சொன்னது: “அவருக்கு அந்தப் புத்தகத்தை மொழிபெயர்க்கும் வரம் இருக்கிறது . . . அவருக்கு வேறு எந்த வரத்தையும் கொடுக்கமாட்டேன்.” ஆனால் அந்த வெளிப்படுத்துதல் 1835-ல் மீண்டும் அச்சடிக்கப்பட்டபோது, கோட்பாடும் உடன்படிக்கைகளும் என்பதில் அது இவ்வாறு வாசித்தது: “அது முடியும்வரை நான் உமக்கு வேறு எந்த வரத்தையும் கொடுக்கமாட்டேன்.”—5:4.
வரலாற்றுப் புதிர்கள்
பொ.ச.மு. 600-ல், சுமார் 20 யூதர்கள் எருசலேமைவிட்டு அமெரிக்காவிற்குச் சென்றதாகவும், 30-க்கும் குறைவான வருடங்களுக்குள் அவர்கள் பெருகி இரண்டு தேசத்தாராகப் பிரிந்தனர் என்றும் சொல்லப்படுவதை ஏற்றுக்கொள்வது சிலருக்குக் கடினமாக இருக்கிறது! (2 நீஃபை 5:28) அங்கு சென்றடைந்து 19 வருடங்களுக்குள், இந்தச் சிறிய தொகுதி “சாலொமோன் கட்டிய ஆலயத்தைப் போன்றதும் . . . , அதன் வேலைப்பாட்டில் மிகவும் சிறந்ததுமான” ஆலயத்தைக் கட்டியதாக எண்ணப்படுகிறது—உண்மையிலேயே ஒரு கடினமான வேலை! எருசலேமில் சாலொமோனின் ஆலயத்துடைய ஏழு வருட கட்டுமான பணிக்கு கிட்டத்தட்ட 2,00,000 பணியாளர்கள், கலைஞர்கள், மற்றும் கண்காணிகள் தேவைப்பட்டனர்.—2 நீஃபை 5:16; ஒப்பிடுக: 1 இராஜாக்கள் 5, 6.
மார்மன் புத்தகத்தைக் கவனமாக வாசிப்போர், சரியான காலவரிசைப்படி இல்லாததாகத் தோன்றும் குறிப்பிட்ட சம்பவங்களைக் குறித்து குழம்பியிருக்கிறார்கள். உதாரணமாக, அப்போஸ்தலர் 11:26 சொல்லுகிறது: “முதல்முதல் அந்தியோகியாவிலே சீஷர்களுக்குக் கிறிஸ்தவர்கள் என்கிற பேர் வழங்கிற்று.” ஆனால் ஆல்மா 46:15, பொ.ச.மு. 73-ல் நடந்ததாகச் சொல்லப்படும் சம்பவங்களை விவரிக்கையில், கிறிஸ்து பூமியில் வந்ததற்கு முன்னரே கிறிஸ்தவர்கள் அமெரிக்காவில் இருந்ததாகச் சொல்லுகிறது.
மார்மன் புத்தகம், கோட்பாடு சம்பந்தமான ஆய்வு என்பதைவிட சரித்திரப்பூர்வமான விவரப்பதிவாகவே இருக்கிறது. “அது இவ்வாறு நடந்தது” என்ற கூற்று சுமார் 1,200 தடவைகள் சமீபத்திய பதிப்பில் காணப்படுகிறது—1830 பதிப்பில் சுமார் 2,000 தடவைகள் காணப்படுகிறது. பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ள அநேக இடங்கள் இன்னும் இருக்கின்றன; என்றாலும், மார்மன் புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ள கிம்கிம்னோ மற்றும் ஸீஸ்ராம் போன்ற கிட்டத்தட்ட அனைத்து இடங்களும் அறியப்படாதவை.
வட அமெரிக்க கண்டத்தினூடே உள்ள ஏராளமான குடியேற்றங்களைப் பற்றி மார்மன் பதிவு சொல்லுகிறது. ஹெலாமன் 3:8 வாசிக்கிறது: “அது இவ்வாறு நடந்தது, அவர்கள் முழு பூமியையும் நிரப்பும்வண்ணமாக . . . பெருகி பரவினார்கள்.” மார்மன் 1:7-ன்படி, தேசம் “கட்டடங்களால் நிரம்பி இருந்தது.” பரப்பிக்கிடந்த இந்த நாகரிகங்களின் இடிபாடுகள் எங்கிருக்கின்றன என்பதாக அநேக மக்கள் யோசிக்கின்றனர். பொற்காசுகள், வாள்கள், கேடயங்கள், அல்லது மார்க்கவசங்கள் போன்ற நீஃபைட் கலைப்பொருட்கள் எங்கே இருக்கின்றன?—ஆல்மா 11:4; 43:18-20.
அப்படிப்பட்ட கேள்விகளை ஆராய்கையில், மார்மன் ரெக்ஸ் இ. லீ என்பவரின் வார்த்தைகளை மார்மன் விசுவாசத்தின் அங்கத்தினர்கள் கவனமாகச் சிந்தித்துப் பார்ப்பது நல்லது: “மார்மன் மதத்தின் நம்பகத்தன்மை, அந்தச் சர்ச்சானது அதன் அடை பெயரை எந்தப் புத்தகத்திலிருந்து பெற்றது என்பதைப் பொறுத்து அது உண்மையானதாக அல்லது பொய்யானதாக நிரூபிக்கப்படுகிறது.” வெறும் ஓர் உணர்ச்சிப்பூர்வ ஜெப அனுபவத்திற்கு மாறாக ஆதாரப்பூர்வமான வேத அறிவை அடிப்படையாகக் கொண்ட ஒரு விசுவாசம், உண்மைமனதுள்ள மார்மன்களுக்கும் கிறிஸ்தவர்களாக உரிமைபாராட்டிக்கொள்ளும் அனைவருக்கும் ஒரு சவாலை அளிக்கிறது.
திரும்ப நிலைநாட்டப்படுதலுக்கு அடிப்படை
ஜோஸஃப் ஸ்மித்தைச் சுற்றியிருந்த ஆவிக்குரிய குழப்பமே, அவருடைய நாளிலிருந்த சண்டையிடும் மத உட்பிரிவுகளை அவர் வெறுத்தொதுக்கும்படி செய்தது. அவருடைய காலத்துக்கு முன்னரும், பின்னரும், அவருடைய காலத்தின் போதும், மதிப்புமிக்க மற்ற மனிதர் உண்மையான விசுவாசத்திற்கு திரும்பும்படி நாடியிருக்கின்றனர்.
உண்மைக் கிறிஸ்தவத்திற்கான மாதிரி என்ன? ‘நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்துவரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப்போனது’ கிறிஸ்து அல்லவா? (1 பேதுரு 2:21) இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை, LDS இறைமையியலுடன் முற்றிலும் முரண்பட்டு நிற்கிறது. இயேசு துறவியாக இல்லாதபோதிலும், அவருடைய எளிய வாழ்க்கை, செல்வம், மகிமை, அல்லது அரசியல் அதிகாரத்தைத் திரட்டிக் குவிப்பதற்கான எவ்வித ஆசையும் இல்லாததாக இருந்தது. அவர் ‘உலகத்தாராக இல்லாததால்’ துன்புறுத்தப்பட்டார். (யோவான் 17:16) கிறிஸ்துவின் ஊழியத்தினுடைய மிக முக்கியமான இலக்கு அவருடைய பிதாவாகிய யெகோவாவை மகிமைப்படுத்துவதும் அவருடைய பெயரைப் பரிசுத்தப்படுத்துவதுமாக இருந்தது. இயேசுவின் உண்மையான சீஷர்களைக் குறித்தும் அதுவே உண்மையாக இருக்கிறது. அவர்களுடைய சொந்த இரட்சிப்பை இரண்டாவதான முக்கியத்துவமுடையதாகவே அவர்கள் கருதுகின்றனர்.
இயேசு கடவுளுடைய வார்த்தையைப் போதித்தார்; வெளிப்படையாக அதிலிருந்து மேற்கோள்காட்டி, அதற்கிசைவாக வாழ்ந்தார். பைபிளைக் குறித்து ப்ரிகாம் யங் சொன்னார்: “இந்தப் புத்தகத்தை நாங்கள் எங்களுக்கு வழிகாட்டியாக, எங்கள் செயல்பாட்டுக்குரிய நியமமாக எடுத்துக்கொள்கிறோம்; எங்கள் விசுவாசத்திற்கு அஸ்திவாரமாக அதை நாங்கள் எடுத்துக்கொள்கிறோம். அது இரட்சிப்பிற்கான வழியைக் குறித்துக்காட்டுகிறது.” (பிரசங்கங்களின் பத்திரிகை [ஆங்கிலம்], தொகுதி XIII, பக்கம் 236) ஆகவே அவர் இவ்வாறு உந்துவித்தார்: “பைபிளை எடுத்துக்கொண்டு, பிற்காலப் புனிதர்களின் மதத்தை அதோடு ஒப்பிட்டு, அது சோதனையில் சகித்து நிற்குமா என்று பாருங்கள்.” (ப்ரிகாம் யங்கின் பிரசங்கங்கள் [ஆங்கிலம்]) மார்மன் விசுவாசம் மட்டுமல்ல, ஆனால் கிறிஸ்தவமாக உரிமைபாராட்டும் எல்லா மதங்களுமே இந்தச் சோதனைக்கு உட்பட வேண்டும்; ஏனென்றால் இயேசு சொன்னார்: ‘உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுவார்கள்.’—யோவான் 4:23.
[அடிக்குறிப்புகள்]
a மேலுமான தகவலுக்கு, உவாட்ச் டவர் பைபிள் அண்ட் ட்ராக்ட் சொஸைட்டியால் பிரசுரிக்கப்பட்ட பைபிள்—கடவுளுடைய வார்த்தையா மனிதனுடையதா? (ஆங்கிலம்) என்பதைப் பார்க்கவும்.
[பக்கம் 20-ன் பெட்டி]
மார்மன் பரிசுத்த எழுத்துக்கள்
பைபிள் மற்றும் மார்மன் புத்தகம் ஆகியவற்றோடுகூட பிற்காலப் புனிதர்கள் எண்ணற்ற மற்ற எழுத்துக்களை ஏற்றுக்கொள்கின்றனர்.
கோட்பாடும் உடன்படிக்கைகளும்: இது அடிப்படையில், கடவுளிடமிருந்து வந்த வெளிப்படுத்துதல்கள் என்பதாக ஜோஸஃப் ஸ்மித் கூறியவற்றின் தொகுப்பாக இருக்கிறது. கோட்பாட்டு மற்றும் வரலாற்று ரீதியில் வளர்ச்சிகள் தேவைப்படுத்தியபோது இவை சிலவேளைகளில் திருத்தியமைக்கப்பட்டிருக்கின்றன.
பெரும் விலையுள்ள முத்து: பைபிள் புத்தகமாகிய ஆதியாகமம், மத்தேயு 24-ம் அதிகாரம் ஆகியவற்றின்பேரில் ஜோஸஃப் ஸ்மித்தின் திருத்தங்கள், மற்றும் ஸ்மித்தின் சொந்த சரித்திரம் இந்தப் புத்தகத்தில் இருக்கின்றன. ஸ்மித் 1835-ல் வாங்கிய ஒரு நாணற்சுவடியை அவர் மொழிபெயர்த்ததும் அதில் இருக்கிறது. ஒரு பீடத்தின்மேல் ஆபிரகாமை ஒரு ஆசாரியன் பலிசெலுத்த முயன்றபோது ஒரு தூதன் அவரை எப்படி காப்பாற்றினார் என்பதைப் பற்றி சொன்ன ஆபிரகாமின் சொந்த எழுத்து அது என்று அவர் அறிவித்தார். அந்த நாணற்சுவடி 1967-ல் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டு, எகிப்திய பழம்பொருள் ஆய்வாளர்கள் பலரால் பரிசோதிக்கப்பட்டது. “ஜோஸஃப் ஸ்மித்தின் மொழிபெயர்ப்பு என்பதாகச் சொல்லப்படுவதில் ஒரு வார்த்தைகூட இந்தச் சுவடியில் உள்ளவற்றுடன் எவ்வித ஒப்புமையையும் கொண்டிருக்கவில்லை,” என்று அவர்கள் கண்டதாக ஒரு அறிக்கை சொல்லுகிறது. அது இறந்தவர்களுடன்கூட புதைக்கும் உயிர்த்தல்களின் புத்தகம் (ஆங்கிலம்) என்ற எகிப்தியரின் சவ அடக்க பத்திரம் என்று கண்டுபிடிக்கப்பட்டது. “ஏரி” என்பதற்கான எகிப்திய புனித எழுத்தை மொழிபெயர்க்க அவர் 136 வெவ்வேறு ஆங்கில வார்த்தைகளைப் பயன்படுத்தினார் என்று ஸ்மித்தின் மூல உரை காண்பிக்கிறது.
ஜோஸஃப் ஸ்மித்தின் பைபிள் மொழிபெயர்ப்பு: 1830-ல், கிங் ஜேம்ஸ் மொழிபெயர்ப்பு பைபிளைத் திருத்தியமைக்கும் மொழிபெயர்ப்பைத் தொடங்கினார், அதை ஒருபோதும் முடிக்கவில்லை. அவர் சுமார் 3,400 வசனங்களைத் திருத்தி அமைத்து, ‘வருங்காலத்தைப் பார்ப்பதில் தகுதிவாய்ந்தவராக’ தன் சொந்த வருகையைக் குறித்த ஒரு தீர்க்கதரிசனத்தை ஆதியாகமத்தின் கடைசியில் உட்படுத்தியதோடு நிறைய காரியங்களைச் சேர்த்தார். அது சரியானது என்று ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், ப்ரிகாம் யங்கைப் பின்பற்றாத ஸ்மித்தின் விதவையிடம் அந்தக் கையெழுத்துப்பிரதி இருந்ததால் சால்ட் லேக் சர்ச் அரிதாகவே அதிலிருந்து மேற்கோள் காட்டுகிறது.
மேலுமான “ஏவப்பட்ட” கோட்பாடுகள்: எந்தவொரு சமயத்திலும் சர்ச்சின் வாழ்ந்துகொண்டிருக்கும் தீர்க்கதரிசியின் மூலமாக இவை கொடுக்கப்படக்கூடும்; மேலும் பரிசுத்த பைபிளுக்கு சமமான அதிகாரமுடையவையாய் இவை இருக்கின்றன. 1844-ல் அளிக்கப்பட்ட அரசன் ஃபாலட் பிரசங்கம் ஒரு உதாரணம். மூப்பர் அரசர் ஃபாலட்டுக்கு இந்த சவ அடக்கப் பேச்சை ஸ்மித் கொடுத்தார்; தெய்வமாக்கப்பட்ட மனிதன் மற்றும் மனிதனாக்கப்பட்ட தெய்வ கோட்பாட்டை அதில் விளக்கினார். பிரசங்கங்களின் பத்திரிகை என்பதில் ஸ்மித், யங், மற்றும் 19-ம் நூற்றாண்டைச் சேர்ந்த மார்மன் நிபுணர்களுடைய பேச்சுக்களின் தொகுப்பு காணப்படுகிறது.
[பக்கம் 21-ன் பெட்டி]
மார்மன் நம்பிக்கையில் கடவுட்களின் குடும்பம்
கடவுள்: எல்லா கடவுட்களின் பிதா, அவருக்கு மாம்சமும் எலும்புமுள்ள ஓர் உடல் இருக்கிறது.—கோட்பாடும் உடன்படிக்கைகளும் 130:22.
எலோஹிம்: சிலவேளைகளில் ஒரு தனிநபராக குறிப்பிடப்பட்டது. பூமியை ஒழுங்கமைத்த கடவுட்களின் ஒரு குழுவாகவும் விவரிக்கப்பட்டது.—கோட்பாடும் உடன்படிக்கைகளும் 121:32; பெரும் விலையுள்ள முத்து, ஆபிரகாம் 4:1; பிரசங்கங்களின் பத்திரிகை, தொகுதி I, பக்கம் 51.
இயேசு: முழு பூமியின் கடவுளும் படைப்பாளரும், இரட்சகர்.—3 நீஃபை 9:15; 11:14.
யெகோவா: பழைய ஏற்பாட்டில் இயேசுவின் பெயர்.—ஒப்பிடுக: மார்மன் 3:22; மாரோனை 10:34; மற்றும் மார்மன் புத்தகத்தின் பொருளடக்க அட்டவணை.
திரித்துவம்: மூன்று வேறுபட்ட, தனித்த ஆவி ஆட்கள், மாம்சத்தாலும் எலும்பாலுமான பிதாவும் குமாரனும், பரிசுத்த ஆவியானவரும்.—ஆல்மா 11:44; 3 நீஃபை 11:27.
ஆதாம்: படைப்பு வேலையில் இயேசுவுக்கு உதவியாளர். ப்ரிகாம் யங் குறிப்பிட்டார்: “நம்முடைய தந்தையாகிய ஆதாம் ஏதேன் தோட்டத்திற்கு வந்தார் . . . அவருடைய மனைவிகளில் ஒருத்தியான ஏவாளைக் கொண்டு வந்தார். . . . அவர் நம் தந்தையும் நம் கடவுளுமாக இருக்கிறார்.” (பிரசங்கங்களின் பத்திரிகை, தொகுதி I, பக்கம் 50, 1854 பதிப்பு) ஆதாம் பாவம் செய்தபிறகு பூமியின் முதல் கிறிஸ்தவரானார். (பெரும் விலையுள்ள முத்து, மோசே 6:64-66; என்ஸைன், ஜனவரி 1994, பக்கம் 11) அவர் “நீண்ட ஆயுசுள்ளவர்” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 116) மேலும் சொல்லர்த்தமாக இயேசுவின் சரீரப்பிரகாரமான தந்தை.—பிரசங்கங்களின் பத்திரிகை, தொகுதி I, பக்கம் 51.
மிகாவேல்: பிரதான தூதனாகிய ஆதாமுக்கு மற்றொரு பெயர்.—கோட்பாடும் உடன்படிக்கைகளும் 107:54.
[பக்கம் 23-ன் பெட்டி]
மார்மன்களும் தேசப்பற்றும் அரசியலும்
ஜோஸஃப் ஸ்மித்—மார்மன் நம்பிக்கையின்படி தீர்க்கதரிசியும், வருங்காலத்தைப் பார்ப்பவரும், வெளிப்படுத்துகிறவருமானவர்—மேயராக, பொருளாளராக, துணை-படைத்தலைவராக, ஐ.மா. ஜனாதிபதிக்குரிய வேட்பாளராகவும் இருந்தார். அவருடைய முன்மாதிரியைப் பின்பற்றி, அநேக மார்மன்கள் அரசியல் நடவடிக்கைகளில் மும்முரமாகச் செயல்படுகின்றனர். சர்ச்சானது அதன் அமெரிக்க மரபுரிமையைக் குறித்து பெருமைப்படுகிறது; மேலும் ஐ.மா. அரசமைப்புச் சட்டம் எழுதப்படுவதை கடவுள் வழிநடத்தியதாக வலியுறுத்துகிறது. ப்ரிகாம் யங் சொன்னார்: “. . . கடவுளுடைய ராஜ்யம் அரசாட்சியை ஏற்கும்போது, ஐக்கிய மாகாணங்களின் கொடி, கறையின்றி விடுதலை மற்றும் சம உரிமைகளின் கொடிக்கம்பத்தில் எவ்வித அவமதிப்பும் இன்றி பெருமிதத்துடன் பறக்கும்.”
விசுவாசத்தின் பிரிவுக்கூறுகள் என்பதன் பிரிவுக்கூறு 12 இவ்வாறு குறிப்பிடுகிறது: “நாங்கள் அரசர்களுக்கும், ஜனாதிபதிகளுக்கும், ஆட்சியாளர்களுக்கும், நீதிபதிகளுக்கும் கீழ்ப்பட்டிருப்பதிலும், கீழ்ப்படிவதிலும், கனம்பண்ணுவதிலும், சட்டத்தைக் காத்துக்கொள்வதிலும் நம்பிக்கை வைத்திருக்கிறோம்.” அவர்களுடைய கீழ்பட்டிருத்தல் எதுவரைக்கும் செல்கிறது? ஐக்கிய மாகாணங்கள், முதலாம் உலகப் போரில் சேர்ந்துகொண்டபோது, மூப்பர் ஸ்டீஃபன் எல். ரிச்சர்ட்ஸ் வலியுறுத்தினார்: “இயேசு கிறிஸ்துவின் பிற்காலப் புனிதர்களின் சர்ச்சைவிடவும் ஐக்கிய மாகாணங்களின் அரசுக்கு அதிக உண்மையாக இருக்கும் மக்கள் வேறு எவருமில்லை.” “நாங்கள் போராடும்போது கடவுளுடைய வல்லமையால் வெற்றியடைவோம்,” என்று மற்றொரு மூப்பர் சொன்னார்.
பிரிவுக்கூறு 12, போர்க்களத்தின் மற்ற பக்கத்திற்கும் பொருந்தியது. ஸ்டாஃபர்ட்ஷைர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் கிறிஸ்ட்டீன் இ. கிங் எழுதினார்: “தங்கள் நாட்டிற்காக போரில் ஈடுபட்டு, அதன் வெற்றிக்காக ஜெபம் செய்யும்படி ஜெர்மனியிலுள்ள மார்மன்கள் உற்சாகமூட்டப்பட்டனர்.” பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க மார்மன் சகோதரர்களுக்கு எதிராக அல்ல, ஆனால் அரசாங்க பிரதிநிதிகளுக்கு எதிராக அவர்கள் போரிடுவதாக சர்ச் சொன்னது. “அவ்வாறு வேறுபடுத்துவது எளிதில் புரிந்துகொள்ளத்தக்கதாக இருந்தாலும், ஜெர்மனியிலுள்ள மார்மன்களின் ஒழுக்க மற்றும் மத ரீதியிலான சந்தேகங்களைப் பூசிவிடுவதற்கு ஏற்றதாக இருந்தது.”
ஹிட்லர் அதிகாரத்தைக் கைப்பற்றியபோது, முழு இருதயத்துடன்கூடிய ஆதரவு என்ற மார்மன் கொள்கை தொடர்ந்தது. “நாசிகள், மார்மன் சர்ச்சிலிருந்து எவ்வித எதிர்ப்பையோ குறைகூறுதலின் அறிகுறியையோ எதிர்ப்படவில்லை,” என்று டாக்டர் கிங் எழுதினார். இனத்தூய்மை மற்றும் நாட்டுப்பற்றில் மார்மன்கள் உறுதியாக இருப்பது சர்ச்சுக்கு விரும்பத்தக்கதாக இருந்தது; அநேக மார்மன்களுக்கு “தங்கள் விசுவாசத்திற்கும் நாசியர் ஆட்சிக்குரிய ஜெர்மன் குடியரசின் அரசியலுக்கும் இடையிலான தொடர்புகள் தெளிவாக இருந்தன.” ஹிட்லரை எதிர்க்க அநேக மார்மன்கள் துணிந்தபோது, மார்மன் அதிகாரிகளிடமிருந்து அவர்களுக்கு எவ்வித ஆதரவும் கிடைக்கவில்லை. “சர்ச்சானது நாட்டுப்பற்றுடையதாகவும் உண்மையானதாகவும் இருந்து நாசி அரசாங்கத்தின்மீது எவ்வித தாக்குதலையும் கண்டித்தது.” கருத்து வேறுபாடுகொண்ட ஒருவரை நாசிகள் கொன்றபிறகு, சர்ச் அவரை அவரது மறைவுக்குப்பின் சபையிலிருந்து விலக்கியும்கூட வைத்தது. b
மார்மன் புத்தகத்தில் ஆல்மா 26:32-ல் புகழப்பட்டவர்களிலிருந்து எவ்வளவு வித்தியாசப்பட்டது: “தங்கள் பகைவனின் உயிரைக் கொல்லுவதைவிடவும்கூட தங்கள் உயிரைத் தியாகம் செய்தனர்; தங்கள் சகோதரர்களிடமாக உள்ள அன்பின் காரணமாக தங்கள் போர்க் கருவிகளை பூமியின் ஆழத்தில் புதைத்திருக்கிறார்கள்.”
இயேசு பிலாத்துவிடம் இவ்வாறு நியாயங்காட்டிப் பேசினார்: “என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதானால் நான் யூதரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்படாதபடிக்கு என் ஊழியக்காரர் போராடியிருப்பார்களே.” (யோவான் 18:36) கடவுளின் சொந்தக் குமாரனின் பாதுகாப்பாக அவருடைய சீஷர்கள் போர்க்கருவிகளை எடுக்கக்கூடாதென்றால், அரசாங்கங்களுக்கு இடையிலான ஒரு போரைக் குறித்து சொல்லவே வேண்டாம். அவர்கள் தங்கள் பகைவரைக்கூட நேசிக்க வேண்டியவர்களாக இருந்தனர்.—மத்தேயு 5:44; 2 கொரிந்தியர் 10:3, 4.
தனிப்பட்டவர்களாகவும் ஒரு தொகுதியாகவும் கண்டிப்பான நடுநிலை வகிக்கும் உண்மைக் கிறிஸ்தவர்கள் இன்று இருக்கிறார்கள். தந்தைநாட்டில் தாய்மார் (ஆங்கிலம்) என்ற புத்தகம் சொன்னது: “யெகோவாவின் சாட்சிகள் ஸ்தாபிக்கப்பட்டது முதற்கொண்டே எவ்வித அரசிலிருந்தும் தீர்மானமாய் பிரிந்து நின்றார்கள்.” ஆகவே, ஹிட்லரின் திகிலூட்டும் ஆட்சியின்போது, அவர்கள், “நடைமுறையில் ஒவ்வொருவரும், நாசி அரசுக்கு எந்த வகையான கீழ்ப்படிதலைக் காண்பிக்கவும் தெளிவாகவே மறுத்தார்கள்.”
அவர்களில் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டபோதிலும், இயேசுவின் வார்த்தைகளை யெகோவாவின் சாட்சிகள் கவனமாக எடுத்துக்கொண்டார்கள்: “நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்.”—யோவான் 13:35.
b ஹெல்மூட் ஹ்யூபெனர் மறுபடியும் 1948-ல் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.
[பக்கம் 24-ன் பெட்டி]
பைபிளும் மார்மன் எழுத்துக்களும்—முரண்பாட்டில் ஓர் ஆய்வு
பைபிள்: சரியான இடம் அறியப்படவில்லை என்றாலும், ஐபிராத்து நதியின் அருகேயுள்ள மெசப்பொட்டேமியா பகுதியில் ஒருவேளை ஏதேன் தோட்டம் இருந்திருக்கும்.—ஆதியாகமம் 2:11-14.
கோட்பாடும் உடன்படிக்கைகளும்: அ.ஐ.மா.-வில் மிஸ்ஸௌரியில் ஜாக்ஸன் மாவட்டத்தில் ஏதேன் தோட்டம் இருந்தது.—கோட்பாடும் உடன்படிக்கைகளும் 57, தலைவர் ஜே. எஃப். ஸ்மித் விவரித்தபடி.
பைபிள்: ஆத்துமா இறக்கிறது.—எசேக்கியேல் 18:4; அப்போஸ்தலர் 3:23.
மார்மன் புத்தகம்: “ஆத்துமா ஒருபோதும் அழிய முடியாதது.”—ஆல்மா 42:9.
பைபிள்: இயேசு பெத்லகேமில் பிறந்தார்.—மத்தேயு 2:1-6.
மார்மன் புத்தகம்: இயேசு எருசலேமில் பிறக்கவேண்டியவராக இருந்தார்.—ஆல்மா 7:10.
பைபிள்: இயேசு பரிசுத்த ஆவியால் பிறப்பிக்கப்பட்டார்.—மத்தேயு 1:20.
பிரசங்கங்களின் பத்திரிகை: இயேசு பரிசுத்த ஆவியால் பிறப்பிக்கப்படவில்லை. ஆதாம் மரியாளுடன் உடலுறவுகொண்டதன் மூலம் அவர் மாம்சத்தில் பிறப்பிக்கப்பட்டார்.—பிரசங்கங்களின் பத்திரிகை, தொகுதி I, பக்கங்கள் 50-1.
பைபிள்: புதிய எருசலேம் பரலோகத்தில் இருக்கும்.—வெளிப்படுத்துதல் 21:2.
மார்மன் புத்தகம்: புதிய எருசலேம், பூமிக்குரியது, அ.ஐ.மா.-விலுள்ள மிஸ்ஸௌரியில் மனிதரால் கட்டப்படும்.—3 நீஃபை 21:23, 24; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 84:3, 4.
பைபிள்: கடவுளுடைய எண்ணங்களை எழுதும்படி பைபிள் எழுத்தாளர்கள் ஏவப்பட்டார்கள்.—2 பேதுரு 1:20, 21.
மார்மன் புத்தகம்: அதன் தீர்க்கதரிசிகள் தங்கள் சொந்த அறிவால் எழுதியதாகச் சொல்லப்படுகிறது.—1 நீஃபை 1:2, 3; ஜேக்கப் 7:26.
பைபிள்: தசமபாகம் செலுத்துதல் உட்பட மோசேயின் நியாயப்பிரமாணம், இயேசுவின் மரணத்தால் முடிவடைந்தது. நன்கொடைகள் கட்டாயத்தின்பேரில் அல்ல, மனமுவந்து கொடுக்கப்பட வேண்டும்.—2 கொரிந்தியர் 9:7; கலாத்தியர் 3:10-13, 24, 25; எபேசியர் 2:15.
கோட்பாடும் உடன்படிக்கைகளும்: “நிச்சயமாக . . . என்னுடைய மக்கள் தசமபாகம் செலுத்துவதற்கான நாளாக இது இருக்கிறது; ஏனென்றால் தசமபாகம் செலுத்துகிறவன் (அவருடைய [கர்த்தருடைய] வருகையின்போது) எரிக்கப்படமாட்டான்.”—கோட்பாடும் உடன்படிக்கைகளும் 64:23.
[பக்கம் 25-ன் படம்]
சால்ட் லேக் சிடியில் மார்மன் ஆலயத்தின் மேல் மாரோனையின் சிலை