எமது வாசகரிடமிருந்து
தலைசிறந்த கலைஞர் “தலைசிறந்த கலைஞரைத் தேடி” (நவம்பர் 8, 1995) என்ற தலைப்பின்கீழ் வெளியிட்டிருந்த தொடர்கட்டுரைகளுக்காக உங்களுக்கு நன்றி. ஒரு கலைஞனாய் இருக்கும் நான், அக் கட்டுரைகளை மிகவும் உயர்வாய் மதிக்கப்படத்தகுந்தவையாய் உணர்ந்தேன். கடவுளுடைய பல்வகைப்பட்ட படைப்புகள், சங்கீதங்களின் செய்யுட்கலை வடிவம், அழகிய வார்த்தைகளையுடைய பைபிள் பகுதிகள் இவையனைத்தும் யெகோவா கலையைப் படைப்பவர் மட்டுமல்லாமல், அதில் இன்புறுபவர் என்றும் காட்டுகின்றன!
பி. ஆர்., ஐக்கிய மாகாணங்கள்
30 ஆண்டுகளுக்கும் மேலாக கலையில் ஈடுபாடுடையவனாய் இருந்திருக்கும் நான், அத்தகைய நேர்த்தியான கட்டுரையைத் தயாரிப்பதில் பங்குகொண்ட அனைவருக்கும் என் போற்றுதலைத் தெரிவிக்க விரும்புகிறேன்! அது நம் மகத்தான கடவுளாகிய யெகோவாவையும், அவரது சக்திவாய்ந்த படைப்புத்திறன்களையும் பற்றிய மறுக்க முடியாத உண்மையையும் நியாய விவாதத்தையும் கொண்ட ஒன்பது பக்கங்களாகும்.
பி. எம்., ஐக்கிய மாகாணங்கள்
மார்மன்கள் “மார்மன் சர்ச்—எல்லாவற்றையும் திரும்ப நிலைநாட்டுகிற ஒன்றா?” (நவம்பர் 8, 1995) என்ற கட்டுரையை மிகுந்த ஆவலுடன் வாசித்தேன். நான் ஒரு மார்மன் குடும்பத்தில் வளர்க்கப்பட்டேன், மேலும் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவனாக ஆவதற்கு முன்பாக ஒரு மார்மனாக முழுக்காட்டுதல் பெற்று, குருத்துவ நியமிப்பைப் பெற்றிருந்தேன். என்றபோதிலும், ஒரு கூற்றை நான் குறிப்பாகக் கவனித்தேன். “திருமணமான முதல் தம்பதியின் பாவத்தைப் பற்றிய அதன் கருத்து விளக்கம், உடலுறவு மற்றும் பிள்ளைப்பேற்றையும் உட்படுத்தியது” என்று மார்மன் கருத்தைப் பற்றிக் கூறுகிறீர்கள். எனக்குத் தெரிந்தவரை, ஆதாமும் ஏவாளும் சொல்லர்த்தமான பழத்தைத் தின்றதன் மூலமாகவே பாவம் செய்தனர் என்று நாங்கள் கற்பிக்கப்பட்டோம்.
டி. ஏ., ஐக்கிய மாகாணங்கள்
இக் கூற்று ஏதாவது குழப்பத்தை ஏற்படுத்தியிருக்குமேயானால், அதற்காக நாங்கள் வருந்துகிறோம். “மார்மன் புத்தகம்” கூறும் விவரப்பதிவின்படி, ஒருவர் இவ்வாறு அர்த்தம் கொள்ளலாமென்றாலும் மார்மன்கள் உடலுறவு கொள்வதையே பாவமாகக் கருதினர் என்று நம்பியதாக நாங்கள் அர்த்தப்படுத்தவில்லை. (2 நீஃபை 2:22, 23, 25) மாறாக, அந்தப் பாவம் பாலுறவை “உட்படுத்தியது” என்று நாங்கள் குறிப்பிட்டிருந்தோம். எப்படி? மார்மன் இறையியலின்படி, மனித இனவிருத்திக்கு அது வழிவகுத்தது என்று கூறும் விதத்தில் அவ்வாறிருந்தது. புரூஸ் ஆர். மக்கோன்கீ என்பவரால் எழுதப்பட்ட “மார்மன் கோட்பாடு” என்ற புத்தகத்தின்படி, ஆதாம் பாவம் செய்ததற்கு முன்னதாக, “குழந்தைகளைக் கொண்டிருக்க முடியவில்லை. . . . முன்குறிக்கப்பட்ட திட்டத்தின்படி, ஆதாம் வீழ்ந்துவிடுபவனாய் இருந்தான் . . . மரிக்கும் தன்மையுள்ளவனாக அவன் இப்பொழுது பிள்ளைகளைக் கொண்டிருப்பான்.” அதற்கு முரணாக, பிள்ளைகளைப் பிறப்பிப்பதற்கென ஆதாம் பாவம் செய்ய வேண்டியிருந்தது என்று பைபிள் கற்பிக்கவில்லை. (ஆதியாகமம் 1:28) அல்லது அவர்கள் பாவத்தில் வீழ்ந்துவிட்டது கடவுளின் முன்குறிக்கப்பட்ட திட்டம் என்றும் கூறவில்லை. அதற்குப் பதிலாக, சுதந்திரமாய் வாழும்படியான அவர்களின் சொந்த விருப்பத்தாலேயே அவர்கள் பாவம் செய்தனர் என்று அது சொல்கிறது. (பிரசங்கி 7:29) ஆகவே, தங்களின் விருப்பப்படியே விசுவாசிக்கும் மார்மன்களின் உரிமைகளை நாங்கள் மதிக்கிறபோதிலும், “மார்மன்களின் புத்தகம்” போதிக்கும் போதனைகள் கொஞ்சமும் பைபிளோடு ஒத்துப்போவதில்லை என்பதை இவ் விஷயம் விளக்குகிறது.—ED.
மார்மன்களோடு எப்படிப்பட்ட விஷயங்களைப் பேசவேண்டும் என்று உண்மையிலேயே அறியாதிருந்த நான், அவர்களைப் பற்றிய உண்மையான தகவலைப் பெற்றிருப்பதாக கூறமுடியும், இக் கட்டுரைகளுக்காக நன்றி. ஒன்றோடொன்று முரண்பட்டிருப்பதைக் காணாமலேயே, பைபிள், மார்மன்களின் புத்தகம் ஆகிய இரண்டுமே கடவுளிடமிருந்து பெறப்பட்டதாக மார்மன்கள் எப்படி நம்ப முடியும்?
ஜே. எம்., ஐக்கிய மாகாணங்கள்
கம்ப்யூட்டர் ஆபாசம் “உலகை கவனித்தல்” பகுதியில் வெளியிடப்பட்டிருந்த “கம்ப்யூட்டர் ஆபாசம் பிள்ளைகளுக்கு கிடைக்கிறது” (நவம்பர் 8, 1995) என்ற செய்திக்காக என் நன்றியைத் தெரிவிக்கிறேன். நான் இதை வாசிக்கையில், என் இதயம் கிட்டத்தட்ட நின்றுவிட்டது! இதுபோன்ற புரோகிராம்கள் எந்தளவுக்கு கேடு விளைவிக்கும் தன்மையுள்ளவை என்றும் சிறுபிள்ளைகளை இவை எவ்வாறு எட்டமுடியும் என்றும் உண்மையிலேயே காட்டியது. அத்தகைய கம்ப்யூட்டர் நுட்பத்தோடு தொடர்புடைய நேர்நிலையான மற்றும் எதிர்மறையான அம்சங்களை மதிப்பீடு செய்ய கிறிஸ்தவர்களுக்கு இக் கட்டுரை உதவும்.
டி. பி., ஐக்கிய மாகாணங்கள்
உணவு-தொடர்பான நோய் “உணவின் மூலம் பரவும் நோயிலிருந்து உங்களைப் பாதுகாப்பீர்” (நவம்பர் 22, 1995) என்ற உங்கள் கட்டுரையை நான் அனுபவித்தேன். நான் தொழில்ரீதியில் ஒரு தலைமை சமையற்காரன், ஆகவே ஒரு குறிப்பைச் சேர்க்க விரும்புகிறேன். பக்குவமாய் வேகாத இறைச்சியை விரும்பி உண்ணும் ஒருவருக்கு, உணவின் மூலம் பரவும் நோயைத் தவிர்ப்பது சாத்தியமற்றதாய் இருக்கலாம். அதிக வெப்பநிலையில் இறைச்சியை வேக வைப்பது இறைச்சியிலுள்ள நீர்ச்சத்தை எடுத்துப்போடுவதால், ஜீரணிப்பதை அது கடினமாக்கலாம் என்பது உண்மையே. இறைச்சியை முற்றிலுமாக வேக வைத்து, அதே சமயத்தில் அதன் ஈரப்பதத்தையும் தக்கவைத்துக் கொள்வதற்கு ஒரு சிறந்த முறையானது, கொஞ்சம் நீர் சேர்த்து நீண்ட நேரம் வேக வைப்பது அல்லது கொழுப்புடனும் நீருடனும் சேர்த்து, மூடிய கலத்தில் மெதுவாக வேக வைப்பது.
ஜே. பி. கே., ஐக்கிய மாகாணங்கள்
அச் சமையற்குறிப்புக்கு நன்றி.—ED.