உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g98 10/22 பக். 28-29
  • உலகை கவனித்தல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உலகை கவனித்தல்
  • விழித்தெழு!—1998
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • மெக்ஸிகோவில் காட்டுத் தீ
  • உடற்பயிற்சியும் ஆயுட்காலமும்
  • சிறகுள்ள திருடனா?
  • மரபணுப் பொறியியல்
  • பண்ணைத் தயாரிப்புகளுக்கு என்ன குறைச்சல்?
  • சமையலறை இல்லாத வீடுகள்
  • குற்றச்செயலும் இனவெறியும்
  • ஜாக்கிரதை, மைக்ரோ சிப் கவனிக்கிறது!
  • சீனாவில் அபூர்வ மான் மறுபடியும் தலைக்காட்டுகிறது
  • ஞாபகசக்தி விளையாட்டுகள்
  • கங்கையாற்றில் திருவிழா
  • நமது மரபணுக்களால் நாம் முன்விதிக்கப்பட்டிருக்கிறோமா?
    விழித்தெழு!—1996
  • மரபுவழிக் கோட்பாட்டியல் புரட்சி வளர்ந்துவரும் அக்கறையுடன் மிகப்பெரிய வாக்குறுதி
    விழித்தெழு!—1990
  • நெருப்பின் இரு முகங்கள்
    விழித்தெழு!—2002
  • யாரை குறைசொல்வது உங்களையா உங்கள் ஜீன்களையா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2002
மேலும் பார்க்க
விழித்தெழு!—1998
g98 10/22 பக். 28-29

உலகை கவனித்தல்

மெக்ஸிகோவில் காட்டுத் தீ

மெக்ஸிகோவில் அடுத்தடுத்து ஏற்பட்ட காட்டுத் தீ ஏப்ரல் மாத மத்திபத்திற்குள் சுமார் 3,00,000 ஏக்கர் நிலத்தை அழித்துவிட்டது. அது, “ஓர் சூழலியல் பேரழிவு” என்பதாக விவரிக்கப்படுகிறது. இதற்குள் மெக்ஸிகோவில் ஏறக்குறைய 6,800 தீ விபத்துகள் ஏற்பட்டிருந்தன என்று மெக்ஸிகோ கூட்டரசு அரசாங்கத்தின் செயலர் ஜூலியா காராபியாஸ் லீயோ கூறினார். கடந்த 57 வருடங்களில் ஏற்படாத அளவுக்கு தீ விபத்துக்கள் ஏற்பட்டதால் இதை தீ விபத்துக்களின் சீஸன் என்று அழைத்தார். அந்நாட்டில் தட்பவெப்ப நிலை சராசரியைவிட அதிகமாகவும் மழை பெய்வது குறைவாகவும் இருந்ததென்றாலும், பெரும்பாலான தீ விபத்துக்களுக்கு “மனிதர்களே காரணம். அவர்களின் அறியாமையும், பொறுப்பற்ற தன்மையும், அதோடு சேர்ந்து அவர்களது குற்றச்செயலும் காரணமாக இருந்தன” என்று எல் யுனிவர்சல் என்ற செய்தித்தாள் அறிவிக்கிறது. “ஏறக்குறைய மூன்று நாட்களில் நாம் இழந்த செடி கொடிகளையும் மிருக வகைகளையும் மறுபடியும் பெறுவதற்கு சுமார் பத்து வருடங்கள் எடுக்கலாம்” என்று இயற்கை வளங்கள் கமிட்டியின் மண்டல இயக்குநரான ஆக்டாபியோ எஸ்கோபார் லோபெஸ் கூறினார்.

உடற்பயிற்சியும் ஆயுட்காலமும்

“ஒரு மாதத்திற்கு ஆறு தடவை சுமார் அரைமணிநேரம் விறுவிறுப்பாக நடந்தாலே போதும், [இளவயதில்] ஏற்படும் மரணம் 44 சதவிகிதம் குறைவதாக தோன்றுகிறது” என மனிதரின் ஆயுட்காலத்தைப் பற்றி செய்யப்பட்ட ஒரு சமீபத்திய ஆராய்ச்சியைப் பற்றி தி நியூ யார்க் டைம்ஸ் அறிக்கை செய்கிறது. பின்லாந்திலுள்ள ஆராய்ச்சியாளர்கள் ஏறக்குறைய 8,000 இரட்டையர்களை சுமார் 19 வருடங்களாக தொடர்ந்து கவனித்து வந்தனர். “எந்த உடலுழைப்புமே செய்யாத தங்கள் உடன்பிறந்த இரட்டையரோடு ஒப்பிடுகையில்,” எப்போதாவது உடற்பயிற்சி செய்பவர்கள்கூட “மரிப்பதற்கான சாத்தியம் 30 சதவிகிதம் குறைவு” என்பதைக் கண்டுபிடித்தனர். உடற்பயிற்சியின் பயனை நிர்ணயம்செய்ய மரபுவழி பண்புகளும்கூட கருத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டதால் இந்த ஆராய்ச்சி முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த ஆராய்ச்சியில் உட்படாத ஏரோபிக்ஸ் ஆராய்ச்சியாளரான ஸ்டீவ் ஃபாரெல் கூறினார்: “உங்கள் உடல் உழைப்பை அதிகரித்தால், மரபணுக்களில் குறையிருந்தாலும்கூட நீங்கள் அதிக காலம் வாழமுடியும் என்பதை இந்த ஆராய்ச்சி எந்தச் சந்தேகத்திற்கும் இடமின்றி நிரூபிக்கிறது.”

சிறகுள்ள திருடனா?

தென் ஆப்பிரிக்காவில் பறவைகளைப் பயன்படுத்தி வைரம் கடத்தப்படுவதை போலீஸார் கண்டுபிடித்திருக்கின்றனர். அரசுக்கு சொந்தமான வைரச் சுரங்கத்தில் வேலை செய்பவர்கள் தங்கள் வீட்டில் வளர்க்கும் புறாக்களை உணவுப் பாத்திரங்களுக்குள் அல்லது பேன்ட் பாக்கெட்டுகளுக்குள் வைத்து சுரங்கத்திற்குள் கொண்டு வந்துவிடுகின்றனர் என போலீஸார் கூறுகின்றனர். அங்கு அந்தப் புறாக்களின் உடலில் வைரத்தை கட்டி வெளியே விட்டுவிடுவதாக லாஸ் ஏஞ்சலிஸ் டைம்ஸ் அறிவிக்கிறது. வைரங்களைச் சுமந்துகொண்டு அந்தப் புறாக்கள் பல கிலோமீட்டர் பயணம் செய்யமுடியும். கடந்த பல வருடங்களில் கடத்தல் வைரம் சுமந்துசென்ற நான்கு பறவைகள் பிடிபட்டிருக்கின்றன. ஒரு சந்தர்ப்பத்தில், சிறகுகளுக்கு அடியில் ஆறு காரெட் பட்டைத் தீட்டப்படாத வைரம் கட்டி வைக்கப்பட்டிருந்த ஒரு புறா பிடிபட்டது. இவ்வாறு புறாக்களை வைத்து கடத்தியதற்காக இதுவரை சுமார் 70 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். அந்தப் பூர்வகால ஆற்றுப்படுகையில் தோண்டி எடுக்கப்படும் வைரங்களில் 3-ல் ஒன்று நாணயமற்ற வேலையாட்களால் திருடப்படுவதாக கம்பெனியின் அதிகாரிகள் மதிப்பிடுகின்றனர் என அந்தச் செய்தித்தாள் கூறியது.

மரபணுப் பொறியியல்

மனிதரிலுள்ள சிக்கல் வாய்ந்த பண்புகளையும் கோளாறுகளையும் கட்டுப்படுத்துவதாக நம்பப்படும் மரபணுக்களைப் பற்றி கடந்த பத்தாண்டில் விஞ்ஞானிகள் பல விஷயங்களைக் கண்டுபிடித்திருக்கின்றனர். இதன் காரணமாக என்றாவது ஒருநாள், மனிதனால் மரபணுக்களைத் திறம்பட்ட விதத்தில் உபயோகித்து தேவையற்ற பண்புகளை நீக்கமுடியும் என சில விஞ்ஞானிகள் நம்புகின்றனர். உதாரணமாக, நம்முடைய சந்ததியினர் நம்மைவிட அதிக புத்திசாலிகளாகவும், அதிக பலசாலிகளாகவும், பல நூறு வருடங்கள் வாழவும் முடியும் என பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் உயிரியல் நிபுணராக இருக்கும் லீ சில்வர் அடித்துக் கூறியதாக தி நியூ யார்க் டைம்ஸ் அறிவிக்கிறது. இருந்தாலும், அறிவியலின் முடிவு என்ற ஆங்கில புத்தகத்தின் எழுத்தாளரான ஜான் ஹார்கன் கூறுகிறார்: “மரபணுப் பொறியியலின் மூலம் நாம் விரும்பும் மனித குணங்களை உருவாக்க முடியும் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். ஆனால், இதைத் தொடர்ந்து மேற்கொண்ட எந்த ஆராய்ச்சியும் சிக்கல் வாய்ந்த பண்புகளுக்கும் மரபணுக்களுக்கும் தொடர்பு இருக்கிறது என்ற கூற்றை ஆதரிக்கவில்லை.” ஆகவே ஹார்கன் கூறுகிறார்: “விஞ்ஞானம் உண்மையில் சாதித்திருப்பதையும் சாதிக்க தவறியிருப்பதையும் கருத்தில் கொண்டால், விஞ்ஞானத்திடம் எதை எதிர்பார்க்கலாம், எதை எதிர்பார்க்கக்கூடாது என்பதை விஞ்ஞானிகளாலும் பத்திரிகையாளர்களாலும் மக்களுக்கு தெளிவாகவும் நியாயமாகவும் எடுத்துரைக்க முடியும்.”

பண்ணைத் தயாரிப்புகளுக்கு என்ன குறைச்சல்?

நிலத்தின் வளம் குறைந்திருப்பதால் இன்று கிடைக்கும் பழங்களிலும் காய்கறிகளிலும் ஊட்டச்சத்து குறைந்திருக்கிறதா? இல்லை என்றே மண்ணியல் ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். யுனிவர்சிட்டி ஆஃப் கலிபோர்னியா பர்க்லே வெல்னஸ் லெட்டர் கூறுகிறது: “தாவரங்களில் இருக்கும் வைட்டமின்களை அவைதாமே தயாரிக்கின்றன.” ஆகவே, தேவையான தாதுப் பொருட்கள் நிலத்தில் இல்லையென்றால் தாவரங்கள் சரியாக வளராது. அந்தத் தாவரத்தில் பூ பூக்காமல் போகும் அல்லது வாடிப்போய் செத்துவிடும். இதைத் தவிர்ப்பதற்கும் நிலத்திற்கு தேவையான தாதுப் பொருட்களைத் திரும்ப அளிப்பதற்கும்தான் விவசாயிகள் உரங்களை உபயோகிக்கின்றனர். வெல்னஸ் லெட்டர் மேலுமாக கூறுகிறது: “நீங்கள் வாங்கும் பழங்களும் காய்கறிகளும் பார்ப்பதற்கு செழிப்பாக இருந்தால், அதில் இருக்கவேண்டிய ஊட்டச்சத்து இருக்கிறது என்பதில் உங்களுக்கு துளிகூட சந்தேகம் வேண்டாம்.”

சமையலறை இல்லாத வீடுகள்

ஆஸ்திரேலியாவில் வசிப்பவர்கள் ஐம்பது சதவீத உணவை ஹோட்டல்களில்தான் சாப்பிடுகிறார்கள் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. இந்த டிரெண்டு அவ்வளவு பிரபலமாக ஆகியிருப்பதால் சிட்னியிலுள்ள சில அப்பார்ட்மெண்டுகள் சமையலறைகள் இல்லாமலேயே கட்டப்படுகின்றன என்று த கூரியர்-மெயில் அறிக்கை செய்கிறது. அதுமட்டுமல்ல, ஆஸ்திரேலியாவில் வசிப்பவர்கள் உணவு தயாரிப்பதற்காக சராசரியாக 20 நிமிடம் மட்டுமே செலவு செய்கின்றனர். ஆகவே, அங்குள்ள சூப்பர் மார்கெட்டுகள் தாங்கள் விற்கும் உணவு வகைகளை மாற்றியமைத்துக்கொள்ள வேண்டியிருந்திருக்கிறது. ஐக்கிய மாகாணங்களில் தொடங்கிய ஒரு பழக்கத்தை ஆஸ்திரேலியாவும் பின்பற்றுகிறது என சிட்னியிலுள்ள ஒரு சங்கிலி தொடர் சூப்பர் மார்க்கெட்டின் மானேஜர் கூறினார். ஐக்கிய மாகாணங்களில் வசிப்போர் பெரும்பாலும் ஹோட்டல்களில்தான் அடிக்கடி உணவு சாப்பிடுகிறார்கள்.

குற்றச்செயலும் இனவெறியும்

கிழக்கு ஐரோப்பாவிலிருந்தும், பால்கன் நாடுகளிலிருந்தும், அதிலும் குறிப்பாக அல்பேனியாவிலிருந்து வந்து குடியேறும் ஆட்கள்தான், சமீபத்தில் கிரீஸில் குற்றச்செயல் அதிகரித்திருப்பதற்கு காரணமென சிலர் கூறுகின்றனர். இவ்விதம் குற்றச்செயல் அதிகரித்திருப்பதால் அந்த நாட்டில், ஒருவிதமான ஸீனோஃபோபியா அதாவது “அந்நியர்களைக் கண்டாலே வெறுப்பு கலந்த பயம் ஏற்படுகிறது. அநேக சமயங்களில் இனவெறியை” தூண்டிவிடுகிறது என்று டா வீமா என்ற பத்திரிகைக்கு எழுதுபவரான ரிகார்டோஸ் சாமிரிடிஸ் கூறுகிறார். ஆனாலும், கிரீஸ் நாட்டவர் செய்யும் குற்றச்செயல்களைவிட வெளிநாட்டவர் ஒன்றும் அதிகம் செய்வதில்லை என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது. உதாரணமாக, “100 குற்றச்செயல்களில் 96-ஐ [கிரீஸ் மக்கள்] செய்கின்றனர்” என ஆராய்ச்சிகள் காட்டுவதாக அந்தச் செய்தித்தாள் அறிக்கை செய்கிறது. “பொருளாதார மற்றும் சமூக காரணங்களே குற்றச்செயல்களுக்கு அடிப்படை; ‘இனம்’ காரணம் அல்ல” என்கிறார் சாமிரிடிஸ். கிரீஸில் நடக்கும் குற்றச்செயல்கள் பற்றி செய்திகள் ஒருதலைப்பட்சமாக மட்டுமே அறிக்கை செய்வதால், “வெளிநாட்டவருக்கான பயத்தையும் இனவெறியையும் தொடர்ச்சியாக கிண்டிவிடுகின்றன” என்று அவர் குற்றம் சாட்டுகிறார்.

ஜாக்கிரதை, மைக்ரோ சிப் கவனிக்கிறது!

42,195 மீட்டர் தூரம் ஓடும் பாஸ்டன் மாரத்தன் ஓட்டப்பந்தயத்தில் இந்த வருடம் பங்குபெற்ற வீரர்கள் அனைவரும் கொஞ்சம் கூடுதலான சுமையைத் தூக்கிச் சென்றனர். அது வேறொன்றுமில்லை, ஒரு மைக்ரோ சிப்தான். வீரர்கள் அனைவருடைய வேகத்தையும் கவனிப்பதற்காக அவர்கள் உடையோடு ஒரு எலெக்டிரானிக் சிப் இணைக்கப்பட்டிருந்தது என இன்பர்மேஷன்வீக் பத்திரிகை கூறியது. “ஐந்து கிலோமீட்டர் இடைவெளிகளில் வைக்கப்பட்டிருந்த ரேடியோ அதிர்வெண் ரிசீவர்களால் கண்டுபிடிக்கப்படும்படி” அந்த சிப்கள் புரோகிராம் செய்யப்பட்டிருந்தன. பிறகு, வீரர்கள் ஓடும் வேகம் ஓட்டப்பந்தய தலைமை அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டன; அங்கே அவை இன்டர்நெட்டில் சேர்க்கப்பட்டன. இதனால் இரண்டு நன்மைகள். ஒன்று மாரத்தன் விசிறிகள் தங்களுக்கு விருப்பமான வீரர்களைத் தொடர்ந்து கவனிக்க முடியும். அதுமட்டுல்ல, முழு தூரத்தையும் ஓடாமல் குறுக்கு வழியில் ஏமாற்ற நினைக்கும் ஆசாமிகளும் இந்தப் புதிய தொழில்நுட்பத்தால் எளிதில் மாட்டிக்கொள்வார்கள்.

சீனாவில் அபூர்வ மான் மறுபடியும் தலைக்காட்டுகிறது

“50 வருடத்திற்கும் மேலாக, முற்றிலும் அழிந்து போய்விட்டதாக எண்ணப்பட்ட திபெத்தியன் சிகப்பு மான் மறுபடியும் தலைக்காட்டுகிறது. திபெத் சுயாட்சி பகுதியிலுள்ள ஷானன் மாவட்டத்தில் அது கண்டுபிடிக்கப்பட்டது” என சைனா டுடே அறிவிக்கிறது. சிகப்பு மான் சுமார் 1.2 மீட்டர் உயரமும் ஏறக்குறைய 110 கிலோ எடையும் உள்ளது. பல வருடங்களாக, அவற்றின் விலையேறப் பெற்ற கொம்புகளைப் பெற வேடர்கள் அவற்றைக் கொன்று குவித்திருக்கின்றனர். இதுபோதாதென்று யுத்தங்களும் சுற்றுச்சூழல் மாற்றங்களும்கூட அவற்றில் அதிகமானவற்றை அழித்துவிட்டன. இந்த அழகான மான்களில் இப்போது 200-க்கும் குறைவாகவே மீந்திருப்பதாக எண்ணப்படுகிறது. அழிந்துவரும் இனங்களின் பட்டியலில் இவையும் ஒன்று.

ஞாபகசக்தி விளையாட்டுகள்

முதல் ஐ.மா. தேசிய ஞாபகசக்தி சாம்பியன்ஷிப் போட்டியில் பங்குபெற்றோர் அனைவரும் ஐந்து ஞாபகசக்தி விளையாட்டுகளை விளையாடுவதன் மூலம் தங்கள் திறமைகளை சோதித்துக் கொண்டனர். அந்தச் சோதனைகளாவன: பொதுமக்களில் 100 பேருடைய முகங்களை ஞாபகம் வைப்பது, 50 அடிகளுள்ள ஒரு கவிதையை (நிறுத்தக்குறிகள் உட்பட) மனப்பாடம் செய்வது, 125 ஆங்கில பெயர்ச்சொற்களை (அகரவரிசையில்) நினைவுகூருவது, சம்பந்தமில்லாத எண்களின் ஒரு பட்டியலை மனப்பாடம் செய்வது, (கலைத்து, தலைகீழாக வைக்கப்பட்ட) 52 சீட்டுகளை நினைவுகூருவது ஆகியவையே. வாலெஸ் புஸ்டெல்லோ என்பவர், சம்பந்தமில்லாத 109 எண்களை நினைவுகூருவதன் மூலம் அனைவரையும் அசத்திவிட்டார். என்றபோதிலும், கடைசியில் வென்றது 26 வயது டாடியானா கூலிதான். விண்வெளி ஆராய்ச்சி செய்யும் ஒரு கம்பெனியில் சாட்டிலைட்டுகளுக்கு புரோகிராம் எழுதுபவராக வேலைப்பார்க்கும் அவருடைய அப்பாவும் அவரும் ஞாபகசக்தி விளையாட்டுகளை வீட்டில் விளையாடுவார்களாம். “பொதுவாக நான்தான் ஜெயிப்பேன்” என்று டாடியானா கூறுவதாக நியூ யார்க்கின் டெய்லி நியூஸ் அறிக்கை செய்கிறது.

கங்கையாற்றில் திருவிழா

ஏப்ரல் மாதத்தில், கும்ப மேளா திருவிழாவின் முடிவில் லட்சக்கணக்கான இந்துக்கள் கங்கையாற்றில் நீராடினார்கள். அழியா வரத்தை கொண்டாடும் ஓர் இந்து திருவிழாதான் இந்தக் கும்ப மேளா. இதை மூன்று மாதம் கொண்டாடுவார்கள். ஒருகாலத்தில் தேவர்களும் அசுரர்களும் தேவாமிர்தத்தைப் பெற சொர்க்கத்தில் சண்டையிட்டபோது அது இந்தியாவின் நான்கு நகரங்களில் விழுந்ததாக புராணம் உண்டு. அந்த நகரங்களில் இந்தத் திருவிழா மூன்று வருடத்திற்கு ஒரு தடவை சுழற்சி முறையில் கொண்டாடப்படுகிறது. முன்பு, இந்தியாவின் புனித நீரில் நீராட மக்கள் கூட்டம் அலைமோதியதில் அநேகர் இறந்திருக்கின்றனர்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்