ஓர் ஆணின் வேலை
“ரோபா, ஸாபாடோ, காஸா, ஈ கோமீடா!” ஓர் ஆண் தன் குடும்பத்திற்குக் கொடுக்கவேண்டிய நான்கு அடிப்படை காரியங்களையும் வரிசைப்படுத்திக் கூறும் ஒரு பழைய ஸ்பானிய பாட்டின் வார்த்தைகள் இவை: உடைகள், காலணிகள், இருப்பிடம் மற்றும் உணவு. அநேக பொறுப்புள்ள ஆண்கள் பெருமையுடன் அந்தப் பாரத்தைச் சுமக்க முயற்சிசெய்கின்றனர்.
இருப்பினும், நீங்கள் ஒரு குடும்பத்தை உடையவராக இருந்தால், அதைவிட முக்கியமான உங்கள் குடும்பத்தின் ஆவிக்குரிய தேவைகளைக் கவனிக்கிறீர்களா? அல்லது அநேக ஆண்களைப்போல நீங்களும், வீட்டில் மத காரியங்களைக் கவனிப்பது உண்மையில் ஓர் ஆணின் வேலையல்ல என்பதாக நினைக்கிறீர்களா? சில பண்பாட்டு அமைப்புகளில், கடவுளைப்பற்றியும் பைபிளைப்பற்றியும் தங்களுடைய பிள்ளைகளுக்குக் கற்பிப்பதற்கு ஆண்கள் நேரத்தை எடுத்துக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதுகூட கிடையாது.
தன்னுடைய குடும்பத்தில், கடவுள்மேல் அன்பையும் அவருடைய தராதரங்களுக்கு ஓர் ஆழ்ந்த போற்றுதலையும் புகட்டும் உத்தரவாதத்தைக் குறிப்பாக அந்த வீட்டின் ஆணின்மீது கடவுளுடைய வார்த்தை சுமத்துகிறது. உதாரணமாக, எபேசியர் 6:4-ல், வேதவார்த்தைகள் கிறிஸ்தவ ஆண்களை பின்வருமாறு அறிவுறுத்துகின்றன: “பிதாக்களே, நீங்களும் உங்கள் பிள்ளைகளைக் கோபப்படுத்தாமல், கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும் அவர்களை வளர்ப்பீர்களாக.”
சிலர் இந்த வார்த்தைகளில் பழக்கப்பட்டிருந்தாலும், இந்த வேதவார்த்தை குறிப்பாக தகப்பனுக்கு, வீட்டின் ஆணின் கவனத்திற்கு என்பதாக முழுமையாக போற்றாமல் இருக்கக்கூடும். எடுத்துக்காட்டாக, ஸ்பானிய மற்றும் போர்ச்சுகீஸிய மொழியைப் பேசும் நபர்கள் எபேசியர் 6:4-ன் வார்த்தைகள் தகப்பனுக்கும் தாய்க்குமாக இருவருக்கும் எழுதப்பட்டதாகப் புரிந்துகொள்ளக்கூடும். இந்த மொழிகளில் “தகப்பன்மார்” என்பதற்கான வார்த்தையும் “பெற்றோர்” என்பதற்கான வார்த்தையும் ஒன்றாக இருக்கிறது. இருப்பினும், எபேசியர் 6-ம் அதிகாரத்தின் 1-ம் வசனத்தில், அப்போஸ்தலன் பவுல் “பெற்றோர்” என்று அர்த்தம் கொள்ளும் கோநியுஸ் என்பதிலிருந்துவரும் கோநியுஸின் என்ற கிரேக்க வார்த்தையைப் பயன்படுத்துவதன்மூலம் தகப்பன் மற்றும் தாயாகிய இருவரையும் குறிப்பிடுகிறார். ஆனால் 4-ம் வசனத்தில் “தகப்பன்மார்” என்று அர்த்தப்படுத்தும் பேட்டீராஸ் என்ற கிரேக்க வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆம், எபேசியர் 6:4-ல், பவுல் தன்னுடைய வார்த்தைகளைக் குடும்பத்திலுள்ள ஆணுக்கே எழுதினார்.
சந்தேகமின்றி, அந்தக் குடும்பத்தில் முன்நின்று நடத்துவதற்கு ஆண் இல்லையென்றால், இந்தப் பொறுப்பை பெண் எடுத்துக்கொள்ள வேண்டும். யெகோவாவின் உதவியுடன், அநேக தாய்மார் தங்கள் பிள்ளைகளைச் சிட்சையிலும் யெகோவாவுக்குரிய போதனையிலும் வெற்றிகரமாக வளர்த்திருக்கின்றனர். இருப்பினும், ஒரு கிறிஸ்தவ ஆண் இருக்கும்போது அவனே முன்நின்று நடத்தவேண்டும். இந்தப் பொறுப்பை அவன் அசட்டை செய்தால், குடும்பத்திலுள்ள மற்றவர்கள் ஆவிக்குரிய ஊட்டச்சத்திற்காக ஒரு நல்ல திட்டத்தைக் காத்துக்கொள்வது அதிக கடினமாக இருக்கிறது. மேலும் அத்தகைய ஓர் ஆண், தான் அசட்டையாக இருந்ததற்கு யெகோவாவிடம் கணக்குக் கொடுக்கவேண்டும்.
கிறிஸ்தவ சபையில் கண்காணிகளுக்கும் உதவி ஊழியர்களுக்கும் அவர் கொடுத்துள்ள வேதப்பூர்வ தகுதிகளிலிருந்து, இந்த விஷயத்தைக்குறித்த கடவுளுடைய உணர்ச்சிகள் தெளிவாக இருக்கின்றன. அத்தகைய நிலைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவன் “தன் சொந்தக் குடும்பத்தை நன்றாய் நடத்துகிறவனும், தன் பிள்ளைகளைச் சகல நல்லொழுக்கமுள்ளவர்களாகக் கீழ்ப்படியப்பண்ணுகிறவனுமாயிருக்கவேண்டும்; (ஒருவன் தன் சொந்தக் குடும்பத்தை நடத்த அறியாதிருந்தால், தேவனுடைய சபையை எப்படி விசாரிப்பான்?)” என்று பைபிள் குறிப்பிடுகிறது.—1 தீமோத்தேயு 3:4, 5, 12; தீத்து 1:6.
குடும்பத்தின் ஆண் தன்னுடைய பிள்ளைகளின் ஆவிக்குரிய நலனிற்காக இன்பங்களையும் சொந்த வசதிகளையும் தியாகம் செய்ய மனமுள்ளவனாய் இருக்கவேண்டும். சில வேளைகளில், ஓர் ஒழுங்கான முறையில் அவனுடைய பிள்ளைகளுடன் ஒரு நியாயமான அளவு சமயத்தைச் செலவிடுவதற்காக, மற்ற வேலைகளுக்காக ஒதுக்கப்பட்டிருந்த நேரத்தைக் குறைக்கவேண்டியதாகவும் இருக்கக்கூடும். (உபாகமம் 6:6, 7) என்னவாக இருந்தாலும், கடவுளால் கொடுக்கப்பட்ட இந்த நியமிப்பை அவன் மற்றவர்களிடம் ஒப்புவித்துவிடமாட்டான். அவனுக்குக் குழந்தைகளிடம் உள்ள அன்பும் அக்கறையும் உடைகள், காலணிகள், இருப்பிடம் மற்றும் உணவு ஆகியவற்றிற்கு அப்பால் வெகு தூரம் செல்லும்.
பிள்ளைகளை “கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும்” வளர்ப்பது ஒரு பெரிய சவாலாக இருக்கிறது. ஆகவேதான் முக்கிய பொறுப்பு ஆணுடையதாக இருக்கிறது. ஒரு கிறிஸ்தவ தகப்பன் தன் வேலையை நன்றாகச் செய்யும்போது, தன்னுடைய கடவுள்பயமுள்ள பிள்ளைகளை யெகோவாவிடமிருந்து வந்த ஆசீர்வாதமாக அவன் கருதலாம். சங்கீதக்காரனோடு சேர்ந்து அவன் சொல்லலாம்: “வாலவயதின் குமாரர் பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பாயிருக்கிறார்கள். அவைகளால் தன் அம்பறாத்தூணியை நிரப்பின புருஷன் பாக்கியவான்.”—சங்கீதம் 127:5, 6. (w91 9/1)