பனியும் தீயும் உள்ள தேசத்தில் சகிப்புத்தன்மையோடு பிரசங்கம் செய்தல்
ஐஸ்லாந்து வட அமெரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையே வட அட்லான்டிக்கில் அமைந்துள்ளது. இது ஆர்க்டிக் வட்டத்திற்கு சற்றுகீழ் இருந்தாலும், இதன் சீதோஷ்ணநிலை எதிர்பார்க்கப்படுவதைவிட வெதுவெதுப்பானதாக இருக்கிறது; வளைகுடா நீரோட்டங்களின் வெப்ப நீரோட்டத்திற்கு நன்றி. ஐஸ்லாந்து பனியும் தீயும் உள்ள தேசம் என்று அழைக்கப்படுகிறது, ஏனென்றால் இது ஐரோப்பாவின் மிகப் பெரிய பனிவயலை உடையதாக இருப்பதோடு, அடிக்கடி தீப்பிழம்பைக் கக்கும் உலகப் புகழ்பெற்ற எரிமலைப் பகுதிகளில் ஒன்றையும் கொண்டிருக்கிறது. இதன் பல வெந்நீர் ஊற்றுகள், தீப்பிழம்பையும் கந்தகத்தையுமே கக்கும் எரிமலைப் பகுதிகளாகிய கந்தக சுரங்க எரிமலைகள் மிகப் பிரபலமானவை.
ஐரோப்பாவின் இந்த இரண்டாவது பெரிய தீவில் 2,60,000 மக்கள் வாழ்கிறார்கள்; இவர்கள் வைக்கிங்குகளின் வாரிசுகள், 1,100 ஆண்டுகளுக்கு முன்னர் இங்குக் குடியேறினர். வைக்கிங் காலத்தின் ஸ்காண்டிநேவிய மொழியாகிய பழைய நோர்ஸ் மொழியாகத்தான் ஐஸ்லாந்து மொழியும் அடிப்படையில் இருக்கிறது. இது மாற்றமடையாமல் தொடர்ந்து இருந்து வருகிறது, ஏனென்றால் 13-ஆம் நூற்றாண்டில் பெரும்பாலும் எழுதப்பட்ட பழமைக் காவியங்களை ஆவலோடு படிக்கும் பழமை விரும்பிகளாக ஐஸ்லாந்து மக்கள் இருந்தார்கள்.
பைபிள் ஐஸ்லாந்து மொழியில் 16-ஆம் நூற்றாண்டில் மொழிபெயர்க்க ஆரம்பிக்கப்பட்டது. “புதிய ஏற்பாடு” 1540-ல் வெளியானது, முழு பைபிள் 1584-ல் வெளிவந்தது. ஐஸ்லாந்து மக்களுள் 90 சதவிகிதத்திற்கு மேலானோர் இவான்ஜலிக்கல் லூத்தரன் திருச்சபையைச் சார்ந்தவர்கள்; இதுவே அரசாங்க மதமுமாகும். கிட்டத்தட்ட அனைத்து வீடுகளிலும் பைபிள் இருந்தாலும், அது கடவுளுடைய வார்த்தை என்பதை வெகுசிலரே நம்புகின்றனர். பெரும்பாலான ஐஸ்லாந்து மக்கள் மதம் சார்ந்த கட்டுப்பாடற்ற கருத்துகளை உடையவர்களாக இருக்கிறார்கள். பொதுவாகத் தன்னிச்சையான சிந்தனையாளர்களாக இருக்கிறார்கள்.
நற்செய்தி ஐஸ்லாந்தை எட்டுகிறது
இராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியை முதன்முதல் கேட்ட ஐஸ்லாந்தியர் அப்போது கனடாவில் வாழ்ந்துகொண்டிருந்தனர். அவர்களில் ஒருவர் ஜார்ஜ் ஃபிளைனர் லிண்டல் ஆவார். அவருடைய பெற்றோர் ஐஸ்லாந்திலிருந்து வந்தவர்கள்; இவர் ஐஸ்லாந்து மொழிப் பேசினார். யெகோவா தேவனுக்குத் தன்னுடைய வாழ்க்கையை ஒப்புக்கொடுத்தப்பின் வெகுசீக்கிரமே அவர் நற்செய்தியின் முழுநேர பிரசங்கியானார். அவருக்கு நாற்பது வயதாயிருந்தபோது, 1929-ல், பனியும் தீயும் உள்ள தேசத்திற்கு நற்செய்தியை எடுத்துச்சென்றார்.
ஒரேயொரு நபருக்கு என்னே ஒரு பிரமாண்டமான வேலை! வடக்கிலிருந்து தெற்காகச் சுமார் 320 கிலோமீட்டரும் கிழக்கிலிருந்து மேற்காக சுமார் 500 கிலோமீட்டரும் ஐஸ்லாந்து பரவியிருக்கிறது. குடாக்கடல்கள் மற்றும் வளைகுடாக்களை உள்ளடக்கிய கடற்பகுதி ஏறக்குறைய 6,400 கிலோமீட்டர் நீளமுடையதாக இருக்கிறது. அந்தச் சமயத்தில், அங்கு சரியான சாலைகள் இல்லை, நிஜமாகவே எந்தவித மோட்டார் வண்டிகளும் இல்லை அல்லது வேறு எந்த நவீன போக்குவரத்து வசதிகளும் இல்லை. ஆனாலும், சகோதரர் லிண்டல், தீவு முழுவதும் ஊழியத்தைப் பத்தே வருடங்களில் செய்துமுடித்தார், ஆயிரக்கணக்கான புத்தகங்களை விநியோகித்தார். கடலோரங்களில் படகுகளில் பிரயாணஞ்செய்தார். அவர் பண்ணைகள் நிறைந்த நிலப் பகுதிக்கு விஜயம்செய்தபோது, இரண்டு குதிரைகளைப் பயன்படுத்தினார்; ஒன்று அவரைச் சுமந்து செல்வதற்கும், மற்றொன்று அவருடைய புத்தகங்களையும், அவருக்குரிய பொருள்களையும் சுமந்து செல்வதற்குமாகப் பயன்படுத்தினார்.
ஐஸ்லாந்தில், சுமார் 18 வருடங்களாக சகோதரர் லிண்டல் மட்டுமே சாட்சியாக இருந்தார். அவருடைய கடினமான உழைப்பின் மத்தியிலும், அந்தச் சமயத்தில் ராஜ்யத்திற்கான நிலைநிற்கையை எடுப்பவர் யாரையும் அவர் காணவில்லை. அவருடைய நீண்ட, தனிமை வாசம் மார்ச் 25, 1947-ல் முடிவிற்கு வந்தது: அப்போது உவாட்ச்டவர் பைபிள் ஸ்கூல் ஆப் கிலியடின் முதல் பட்டதாரிகள் வந்தனர். அறுவடைக்கு அதிகமான வேலையாட்களுக்காக அவர் செய்த ஜெபங்களுக்கு இறுதியில் யெகோவா பதிலளித்தபோது, அவருடைய சந்தோஷத்தை நீங்கள் கற்பனைசெய்துபார்க்கமுடியும். (மத்தேயு 9:37, 38) சகோதரர் லிண்டல், 1953-ல் கனடாவுக்குத் திரும்பிவரும்வரைத் தன்னுடைய சேவையை ஐஸ்லாந்தில் தொடர்ந்தார்.
அறுவடைக்கு அதிகமான வேலையாட்கள்
வந்த மிஷனரிகள், 1947-ல், இரண்டு டேனிஷ் சகோதரர்களாவர். இன்னுமதிகமான மிஷனரிகள் இரண்டு வருடங்கள் கழித்து வந்தனர். அவர்கள் பிரசங்க வேலையை, ஐஸ்லாந்துக்கு வந்த நண்பர்களோடுகூட சேர்ந்து தொடர்ந்து செய்தபோது, ஆயிரக்கணக்கான பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. ஐஸ்லாந்து மக்கள் பலர் பேராவலோடு வாசிப்பவர்கள், ஆனால் நற்செய்திக்கு அநேகர் பிரதிபலிக்கவில்லை. பொறுமையான சகோதரர்கள், 27 வருடங்களாக நடுதல் மற்றும் நீர்ப்பாய்ச்சல் வேலையைச் செய்தபிறகு, தங்களுடைய உழைப்பின் பலன்களைக் காண ஆரம்பித்தனர். ஏழு புதியவர்கள் 1956-ல் ராஜ்யத்திற்காக நிலைநிற்கையெடுத்து, தங்களுடைய வாழ்க்கையை யெகோவாவிற்கு ஒப்புக்கொடுத்தனர்.
கடந்த பத்து வருடங்களாக, ராஜ்ய பிரஸ்தாபிகளின் எண்ணிக்கை இரண்டு மடங்குக்கும் மேலானது. இப்பொழுது மொத்தமாக 280 ராஜ்ய பிரஸ்தாபிகளைக் கொண்ட ஏழு சபைகளும் ஒரு தனித் தொகுதியும் இருக்கின்றன. இந்தச் சபைகளை விஜயம்செய்ய தீவைச் சுற்றி நாம் ஒரு பிரயாணம் செல்லலாமே.
தலைநகரைச் சுற்றி
அந்த வருடங்களில் சகித்திருந்த சகோதரர்களும் சகோதரிகளும் அபரிமிதமாக ஆசீர்வதிக்கப்பட்டிருக்கின்றனர். தலைநகரமாகிய, ரைக்யாவிக்-ல் இப்போது இரண்டு செழித்தோங்கும் சபைகள் இருக்கின்றன. அவர்கள், 1975-ல் பிரதிஷ்டை செய்யப்பட்ட கிளை அலுவலகம் அமைந்துள்ள அதே கட்டடத்தில் உள்ள ஓர் அருமையான ராஜ்ய மன்றத்தில் கூடிவருகிறார்கள்.
ஃபிரத்ரிக், ஏடா என்பவர்கள், 1956-ல் முழுக்காட்டப்பட்ட ஏழுபேரில் இருந்தனர். “மிஷனரிகள் வாழ்ந்த மாடிவீட்டுப் பகுதியில் நாங்கள் கூட்டங்களை நடத்திக்கொண்டிருந்தது எனக்கு ஞாபகம் வருகிறது,” என்று சொல்கிறார் ஃபிரத்ரிக். “அங்கு 12 நாற்காலிகள் போடுவதற்கு போதுமான இடமிருந்தது, ஆனால் சில சமயங்களில் வழக்கத்திற்கு அதிகமான எண்ணிக்கையினர் வந்தபோது, பக்கத்திலிருந்த சிறிய அறைக் கதவைத் திறந்து பயன்படுத்துவோம். இரண்டு சபைகள் இன்று ராஜ்ய மன்றத்தை நிரப்புவதைக் காண்பது எவ்வளவு வித்தியாசமாக இருக்கிறது!”
ஆரம்பத்தில் அசெம்பிளிகள் நடந்தபோது, ஃபிரத்ரிக் உணவு சேவை இலாகாவைக் கவனித்துவந்தார். “பெரும்பாலான வேலைகளை நானே செய்தேன்; சில சமயங்களில் ஒவ்வொரு நாளும் நிகழ்ச்சிநிரலில் மூன்று அல்லது நான்கு பாகங்களைக் கையாளுவது வழக்கமாகி இருந்தது. அடுப்பறையில் வேலைசெய்து கொண்டிருக்கும்போது, நான் அந்த வேலைக்கேற்ற மேலாடை (ஏப்ரன்) அணிந்துகொள்வேன். ஒரு பேச்சைக் கொடுக்கும் நேரம் வரும்போது, என் மேல்சட்டையைப் போட்டுக்கொண்டு மன்றத்திற்குள் விரைவேன். சகோதரர்கள் பல முறை, என்னுடைய மேலாடையைக் (ஏப்ரனைக்) கழற்றும்படி எனக்கு ஞாபகப்படுத்தவேண்டியதிருந்தது. இப்போது, 400-லிருந்து 500-வரையான எண்ணிக்கையை அசெம்பிளியில் நாங்கள் காண்கிறோம்; இது நிகழ்ச்சிநிரலில் பங்கெடுக்கும் நல்ல மூப்பர்களை உட்படுத்துகிறது. மேலுமாக உணவுசேவை இலாகாவில் அநேக மனமுவந்தளிக்கும் உதவியாளர்களும் இருக்கிறார்கள்.”
ரைக்யாவிக்கிற்கு மிக அருகில் இருக்கும் சபை கெஃப்லவிக், மேற்கில் ஏறக்குறைய 50 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. போகும்வழி எரிமலைக் குழம்பு வயல்கள் வழியாக நம்மைக் கொண்டுபோகிறது. ஐஸ்லாந்தின் பத்து சதவிகித நிலப்பகுதி எரிமலைக் குழம்புகளினால் மூடப்பட்டிருக்கிறது. இப்படிப்பட்ட வயல்களில் முதலில் வளரும் தாவரங்கள் கற்பாசி, பாசி போன்றவை; ஆனால் எரிமலையின் பழைய குழம்பு வயல்களில் காட்டுப் பெரிகளையும் (berries) தாழவளரும் புதர்ச்செடிகளையும் நீங்கள் காணலாம்.
கெஃப்லவிக்கில் உள்ள சபை, 19 பிரஸ்தாபிகளை உடையதாகும்; 1965-ல் உருவாக்கப்பட்டது. இதற்கருகில், சர்வதேச விமான நிலையம் இருக்கிறது, ஐ.மா. இராணுவத்தளமும் இங்கு இருக்கிறது. இராணுவத்தளத்தில் சாட்சிகள் வீட்டுக்கு வீடு செல்ல ஒருபோதும் அனுமதிக்கப்படாவிட்டாலும், பல பைபிள் படிப்புகள் அங்கு நடத்தப்பட்டிருக்கின்றன. கணிசமானவர்கள் சத்தியத்தைக் கற்றுக்கொண்டனர்.
மற்றொரு சபை செல்ஃபாஸ்-ல் இருக்கிறது; ரைக்யாவிக்கிற்கு கிழக்கே 55 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. இங்கு ஐஸ்லாந்தின் மிகப் பெரிய பால்பண்ணையையும் உட்படுத்தும், ஆடுமாடுகளோடு பசுமை நிறைந்த பண்ணைகளைக் கொண்டிருக்கும் தேசப்பகுதியை நாம் காண்கிறோம். வழியில், கண்ணைக் கவரும் பள்ளத்தாக்கிலுள்ள சிறிய நகரமாகிய கிவிரஜெர்த்தி-ஐக் கடந்துபோகிறோம். தூரத்திலிருந்து பள்ளத்தாக்கு எங்கும் வெப்பநீர் ஊற்றுகளிலிருந்து வரும் தூண்கள் வடிவில் நீராவியை நாம் காண்கிறோம். தேசத்திலுள்ள மிகப் பரவலான வெப்பப் பகுதிகளில் இது ஒன்று; இப்படிப்பட்ட மூலங்களைப் பயன்படுத்தவும், சூடான அறைத் தக்காளிகள், வெள்ளரிக்காய்கள், விதவிதமான பூக்கள் போன்றவற்றைக் கொடுக்கவும் பல அருஞ்செடிகொடிகளை வளர்க்கப் பயன்படும் கண்ணாடிக் கூடுகள் கட்டப்பட்டிருக்கின்றன.
இந்தப் பகுதியில் சிறிய ஆனால் சுறுசுறுப்பான, 19 ராஜ்ய பிரஸ்தாபிகளையுடைய ஒரு சபை இருக்கிறது. சீக்குருத்தூர் என்பவரும், குவோத்துரூன் சுவாவா என்பவளும் ரைக்யாவிக்கிலிருந்து, 1988-ல் சபை உண்டாக்கப்பட்ட சமயத்தில், இந்தச் சிறிய தொகுதியினருக்கு ஆதரவளிக்க வந்தனர். சீக்குருத்தூர் மட்டுமே மூப்பராக இருக்கிறார். அவர் யெகோவாவின் சாட்சியாக ஆவதற்கு ஏறக்குறைய பத்து வருடங்களுக்கு முன்பு மிகப் பிரபலமான இசைப் பாடகராக இருந்தார்; வித்தியாசமான இசைக் குழுக்களில் மத்தளங்கள் (drums) அடிப்பவர். இன்று அவர் ஒரு ஜன்னல் சுத்தஞ்செய்பவராக வாழ்க்கை நடத்துகிறார்; இசையும் கற்றுத் தருகிறார். மகிழ்விப்பவராக (entertainer) இருந்த அவருடைய வாழ்க்கைப் பாணி, போதை மருந்து துர்ப்பிரயோகம், அளவுக்கதிகமாக மது அருந்துதல், முறிந்த திருமண வாழ்க்கை போன்ற பல பிரச்னைகளை அவருக்குக் கொண்டுவந்திருக்கிறது. அவர் இப்பொழுது வாழ்க்கையில் நோக்கத்தையுடையவராகவும் யெகோவாவைச் சேவிப்பவராகவும் இருப்பதால் எவ்வளவு திருப்தியுள்ளவராக இருக்கிறார்!
கிழக்குக்கோடியில்
செல்ஃபாஸிலிருந்து புறப்பட்டு, பெரும்பாலும் குறுகலான கரடுமுரடான சரளைக்கல் சாலைகளில், 680 கிலோமீட்டர் தூரத்திற்கு பிரயாணத்தை நாம் தொடர்கிறோம். கிழக்குக் கரையோரமுள்ள ராத்தார்ஃபியார்த்தூர் என்ற நகரிலுள்ள அடுத்த சபையை நோக்கி நாம் செல்கிறோம். அரைமணி நேரத்திற்குள், ஐஸ்லாந்திலுள்ள மிகப் பிரபலமான எரிமலை ஹேக்கலா நம் கண்ணுக்குத் தென்படுகிறது. இந்த நூற்றாண்டில் இது நான்கு முறை வெடித்திருக்கிறது.
வெஸ்ட்மெனாயார்-ல் (வெஸ்ட்மேன் தீவுகள்) அதிகக் கேடுவிளைவித்த எரிமலை வெடிப்பு 1973-ல் நடந்தது. சில மணிநேரங்களுக்குள் அங்கிருந்து ஏறத்தாழ எல்லா 5,300 மக்களும் தரைநிலப் பரப்பிற்கு பாதுகாப்பாக எடுத்துச்செல்லப்பட்டனர். நகரம் புதிப்பிக்கப்பட்ட பின்பு, நகரவாசிகளில் அநேகர் கொஞ்சங்கொஞ்சமாகத் திரும்பி வந்தனர். அங்கு இப்போது இரண்டு சாட்சிகள் வசிக்கின்றனர்; இந்தச் சிறிய சமூகத்தில் உள்ள மக்களுக்கு நற்செய்தியைப் பிரசங்கிக்கின்றனர். இன்னும் இரண்டு மணிநேரங்கள் பிரயாணஞ்செய்து ஐஸ்லாந்தின் பனிவயல்களில் மிகப் பெரியதாயிருக்கும், 8,300 சதுர கிலோமீட்டர் பரப்பளவை உடைய புகழ்பெற்ற வத்னாயோகுல்-ன் ஓர் அழகான தோற்றத்தினால் வரவேற்கப்படுகிறோம். இந்தப் பாதையில், நாம் கண்ணைக்கவரும் பல நீர்வீழ்ச்சிகளையும் நதிகளையும் கடந்துபோகிறோம்.
சாலையில் பத்து மணிநேரங்களைச் செலவழித்தப்பிறகு, நாம் போய்ச் சேரவேண்டிய இடத்தை அடைகிறோம். ராத்தார்ஃபியார்த்தூரில் ஐஸ்லாந்தின் மிகப் புதிய சபையின் 12 பிரஸ்தாபிகளைச் சந்திக்கிறோம். ஒரு மிஷனரி இல்லம் 1988-ன் பிற்பகுதியில் நிறுவப்படும்வரை, சாட்சிகள் யாரும் இந்தப் பகுதியில் வாழவில்லை. ஐஸ்லாந்தில் 1963-லிருந்து சேவைசெய்துவரும் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த மிஷனரி தம்பதியாகிய ஜெல்-ம் ஈரிஸ்-ம், இந்த நாட்டுப்புறப் பகுதியிலுள்ள 15,000 மக்களுக்கு மத்தியில் ஊழியஞ்செய்ய நியமிக்கப்பட்டிருக்கின்றனர். கடற்கரையோரமாகச் சுமார் 500 கிலோமீட்டர் தூரம் பரவியிருக்கும் சிறிய மீன்பிடிக்கும் தொழில்செய்யும் கிராமங்களில் பலர் வாழ்கிறார்கள்.
ஜெல் சொல்கிறார்: “ஐஸ்லாந்தின் இந்தப் பகுதியில் நடைபெறும் ராஜ்ய வேலையை யெகோவா அபரிமிதமாக ஆசீர்வதித்திருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை. ஜனவரி 1, 1993-ல் ஒரு சபை உண்டாக்கப்பட்டது. நன்றாக முன்னேற்றமடையும் தனிப்பட்டவர்களோடு பல அருமையான பைபிள் படிப்புகளை நாங்கள் நடத்திவருகிறோம். சகோதரர் லிண்டல் குதிரையில் பயணஞ்செய்த காலமெல்லாம்போய் பயண வசதிகள் மாறிவிட்டிருந்தாலும், இருண்ட பனிக்கால மாதங்களில் பனி நிறைந்த சாலைகள் வழியாக மலைகளின்மீது பயணஞ்செய்வது எப்போதும் அவ்வளவு எளிதாக இல்லை; நான்கு சக்கர கட்டுப்பாடுள்ள ஜீப் மூலமாகவும் கடினமாக இருக்கிறது. ஒரு சமயம் இது தூக்கியெறியப்பட்டு, இரண்டு அல்லது மூன்று தடவைகளுக்குமேல் சரிவில் உருண்டது. காயங்கள் இல்லாமல் தப்பித்ததில் நாங்கள் எவ்வளவு சந்தோஷப்பட்டோம்!”
ஐஸ்லாந்தில் 30 வருடங்களாக இருந்துவிட்டு ஈரிஸ் சொல்கிறாள்: “மற்ற நாடுகளிலிருந்து உதவிசெய்வதற்கு பலர் பல ஆண்டுகளாக வந்திருக்கின்றனர். பெரும்பான்மையினர் வேறுபட்ட காரணங்களுக்காக விட்டுச்செல்ல வேண்டியிருந்தாலும், அவர்கள் விதை விதைப்பு மற்றும் தண்ணீர் பாய்ச்சும் வேலையில் நிச்சயமாகவே ஒரு பெரிய பங்கை வகித்திருக்கின்றனர். அறுப்பு வருவதைக் காணும் சிலாக்கியத்தைப் பெற்றவர்களாக இப்போது நாங்கள் இருக்கிறதால், இங்கு தொடர்ந்து இருக்க முடிவதைக் குறித்து நாங்கள் சந்தோஷப்படுகிறோம். யெகோவா தம்முடைய வேலையை இங்கும் விரைவுப்படுத்துகிறார்.”
பெரும்பாலான அதிகரிப்பிற்கு காரணம், புதியவர்கள் தங்களுடன் வேலைசெய்யும் கூட்டாளிகளுக்குச் சாட்சி கொடுப்பதினாலாகும். ஆட்லி மிஷனரிகளிடமிருந்து சத்தியத்தைக் கற்றுக்கொண்டார். அவர் வேலைசெய்த கட்டடம் கட்டும் சங்கத்தில் மற்றவர்களோடு பேச ஆரம்பித்தார். அவருடைய உடன்வேலையாட்களில் இருவர் பிரசங்க வேலையில் பங்குகொள்கின்றனர். ஒருவர் அவருடைய மனைவியோடுங்கூட நவம்பர் 1992-ல் முழுக்காட்டப்பட்டார். மூன்றாவது ஓர் உடன்வேலை பார்ப்பவர் சாட்சிகளுடன் பைபிள் படித்துவருகிறார்.
வடதிசைப் பாதையில் செல்தல்
ராத்தார்ஃபியார்த்தூரிலிருந்து விட்டு புறப்பட்டு, மேற்கு நோக்கி நாம் செல்கிறோம். அடுத்த சபை, 300 கிலோமீட்டர் தூரத்திலுள்ள அகுரேரி நகரத்தில் இருக்கிறது. அங்கு, 1950-களின் தொடக்கத்தில் விசேஷித்த முழு நேர பிரசங்கிகள் ஊழியஞ்செய்வதற்கு நியமிக்கப்பட்டார்கள். அந்தத் தொடக்க காலத்திலிருந்தே நம் வேலை சில மதகுருக்களால் கடுமையாக எதிர்க்கப்பட்டது. யெகோவாவின் சாட்சிகளுக்கு எதிராக எச்சரிக்கும்படி உள்ளூர் செய்தித் தாள்களில் கட்டுரைகள் வெளியிடப்பட்டன. நகர மக்களில் பலர் ஆவிக்கொள்கையிலும் ஈடுபட்டிருந்தனர். ஆனால் பல்வேறுபட்ட பயனியர்கள் மற்றும் மிஷனரிகள் சகிப்புத்தன்மையோடும் பொறுமையோடும் செயல்பட்டதன் காரணமாக இன்று அங்கு 35 ராஜ்ய பிரஸ்தாபிகளையுடைய ஒரு சுறுசுறுப்பான, அன்பான சபை இருக்கிறது.
ஃபிரத்ரிக், இங்குள்ள மூப்பர்களில் ஒருவர். அவர் ஒரு மீனவராக இருந்தார். அவர், 1982-ல் மாவட்ட மாநாட்டிற்கு ஆஜராயிருந்த பிறகு, தான் கற்றுக்கொண்டிருப்பது சத்தியம் என்பதாக நம்பிக்கையோடு இருந்தார். அவர் தன்னுடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், உடன் வேலையாட்களுக்கும் சாட்சிக்கொடுக்கவேண்டும் என்ற திட தீர்மானத்தோடு அகுரேரிக்குத் திரும்பினார். ஃபிரத்ரிக் தான் அதிக நேரத்தை சபையோடு செலவழிப்பதற்காக, மீனவராகத் தன்னுடைய வேலையை விட்டுவிட திட்டங்களைத் தீட்டினார். அவர் தன்னுடைய தோழி ஹெல்கா-விடம், தான் ஒரு யெகோவாவின் சாட்சியாக மாறப் போவதால், அவர்கள் திருமணம் செய்துகொள்ளும்வரை இனிமேல் சேர்ந்து வாழ முடியாது என்று சொன்னார். ஃபிரத்ரிக் ‘விசுவாசத்தில் இல்லாத ஒருவரை’ திருமணம் செய்ய விரும்பாததால், அவள் பைபிள் படிக்கவேண்டும் என்று அவர் விரும்பினார். (1 கொரிந்தியர் 7:39) அவரை வியப்பில் ஆழ்த்தும் வண்ணமாக ஹெல்கா படிக்க ஆரம்பித்தாள். பிப்ரவரி 1983-ல் அவர்கள் திருமணம் செய்தனர். அதற்குப்பின் சிறிது காலத்தில் அவர்கள் முழுக்காட்டப்பட்டனர். காலப்போக்கில், ஃபிரத்ரிக்கின் அம்மாவும் தங்கையுங்கூட சத்தியத்தை ஏற்றுக்கொண்டனர்.
நம்முடைய இறுதி இடம் அக்ரேன்ஸ், மூன்று மலைகள் பரந்திருக்கும் அழகான பல பள்ளத்தாக்குகளினூடே, அகுரேரியிலிருந்து 350 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. இங்கு சாலை நன்றாகப் போடப்பட்டிருக்கிறது: இது நாம் பயணஞ்செய்த கரடுமுரடான குறுகிய சரளைக்கல் சாலைகளைவிட இன்பகரமான பயணத்தைக் கொடுத்தது. ஐஸ்லாந்திலேயே மிகச் சிறிய சபையை—ஐந்து பிரஸ்தாபிகளையுடைய, அதில் இரண்டு பேர் மூப்பர்களாக இருக்கும்—சபையை நாம் அக்ரேன்ஸில் கொண்டிருக்கிறோம். மக்கெதோனிய அழைப்பிற்கு பிரதிபலித்த இரண்டு குடும்பங்களை அவர்கள் உள்ளடக்குகின்றனர். இவர்கள் ரைக்யாவிக்கிலிருந்த பெரிய சபைகளில் ஒன்றிலிருந்து வந்தவர்கள்; தேவை எங்கு அதிகமோ அங்கு சேவைசெய்வதற்காக இந்தச் சிறிய நகரத்தில் வாழ வந்திருக்கின்றனர். (அப்போஸ்தலர் 16:9, 10) இப்போது இரண்டுக்கு மேற்பட்ட வருடங்களாக, இந்தப் பிராந்தியத்தில் பொறுமையுடன் பிரசங்கஞ்செய்து வந்திருக்கின்றனர். காரியங்களை யெகோவா வளரப்பண்ணுவார் என்ற நம்பிக்கையோடே செயல்படுகின்றனர்.—1 கொரிந்தியர் 3:6.
அதிகரிப்பிற்கான பிரகாசமான எதிர்பார்ப்புகள்
கண்ணாடி அறைகள் பூமியின் வெப்ப சக்தியினாலும் செயற்கை மின்னொளியினாலும் அனல்படுத்தப்பட்டிருக்கையில், ஐஸ்லாந்தின் விவசாயிகள் பல்வேறுபட்ட பழங்கள், காய்கறிகள், பிற தாவரங்கள் ஆகியவற்றை வளர்க்க முடிந்தவர்களாக இருக்கிறார்கள். இதைப்போலவே, ஆவிக்குரிய சத்தியத்தினாலும், கனிவான அனலூட்டும் தூண்டுதலினாலும், யெகோவாவின் பரிசுத்த ஆவியின் ஆசீர்வாதத்தினாலும் சாட்சிகள் ஐஸ்லாந்து வயலில் ஆச்சரியமான பயன்களை அனுபவித்து வருகிறார்கள்.
இந்த வருடம் கிறிஸ்துவின் நினைவுநாள் ஆசரிப்பிற்கு 542 பேர் வந்திருந்தனர். கிட்டத்தட்ட 200 வீட்டுப் பைபிள் படிப்புகள் நடத்தப்படுகின்றன. கூடுதலாக, நியமிக்கப்படாத பிராந்தியங்களில் ஊழியஞ்செய்ய கொடுக்கப்படும் உற்சாகத்திற்கு வரும் சாதகமான பிரதிபலிப்பு, இந்தப் பரந்த தீவில் உள்ள செம்மறியாடுகளைப் போன்றவர்கள் அனைவரும் நல்ல மேய்ப்பராகிய இயேசு கிறிஸ்துவின் சத்தத்திற்குச் செவிகொடுப்பார்கள் என்ற நம்பிக்கையை நமக்குத் தருகிறது. (யோவான் 10:14-16) கடந்த 64 வருடங்களாகப் பனியும் தீயும் உள்ள தேசத்தில் நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்கு அப்படிப்பட்ட சகிப்புத்தன்மையையும் பொறுமையையும் காண்பித்த உண்மையுள்ள ராஜ்ய பிரஸ்தாபிகளுக்கு எப்பேர்ப்பட்ட ஓர் ஆனந்தம்!
[பக்கம் 24-ன் வரைப்படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
அகுரேரி
அக்ரேன்ஸ்
கெஃப்லவிக்
செல்ஃபாஸ்
வெஸ்ட்மெனாயார்
ராத்தார்ஃபியார்த்தூர்
ஹேக்கலா
கெய்சர்
வத்னாயோகுல்
ரைக்யாவிக்
[படத்திற்கான நன்றி]
Based on map by Jean-Pierre Biard