நீங்கள் கூடுதலான பகுத்துணர்வை வளர்க்கக்கூடுமா?
பகுத்துணர்வு என்பது, “ஒரு காரியத்திலிருந்து மற்றொரு காரியத்தை வேறுபடுத்திக் காணும் மனதின் வல்லமை அல்லது திறமை” ஆகும். அது “கூர்மையான நியாயம் காணும் திறமை” அல்லது “காரியங்கள் அல்லது கருத்துக்களின் வித்தியாசங்களை மனதால் உணரும் ஆற்றலாக”வும்கூட இருக்கலாம். இவ்வாறு வெப்ஸ்டர்ஸ் யூனிவெர்சல் டிக்ஷ்னரி சொல்கிறது. தெளிவாகவே, பகுத்துணர்வு என்ற பண்பு விரும்பத்தக்க ஒரு பண்பு ஆகும். அதன் மதிப்பு சாலொமோனின் வார்த்தைகளில் காணப்படுகிறது: “ஞானம் உன் இருதயத்தில் பிரவேசித்து, அறிவு உன் ஆத்துமாவுக்கு இன்பமாயிருக்கும்போது, . . . கெட்ட வழியிலிருந்து உன்னை விடுவிக்க பகுத்துணர்வு உன்னைக் காப்பாற்றும்.”—நீதிமொழிகள் 2:10-12, NW.
ஆம், பகுத்துணர்வு ‘கெட்ட வழியை’ எதிர்ப்பதற்கு நமக்கு உதவிசெய்யும், அது இன்றைக்கு ஏராளமாக உள்ளது. மேலும் அது மற்ற அநேக நன்மைகளையும் கொண்டுவருகிறது. உதாரணமாக, பிள்ளைகள் பெற்றோரிடம், ‘நீங்கள் என்னை புரிந்துகொள்வதில்லை!’ என்று அடிக்கடி சொல்வதைக் கேட்கின்றனர். சிறிது ஆழமாக துருவிக் கேட்பதோடு, பகுத்துணர்வுள்ள பெற்றோர் தங்கள் பிள்ளைகளைத் தொந்தரவுபடுத்தும் உணர்ச்சிகளையும் பிரச்சினைகளையும் அவர்களைச் சொல்ல வைப்பது எப்படி என்பதை அறிந்திருக்கின்றனர். (நீதிமொழிகள் 20:5) பகுத்துணர்வுள்ள கணவன் எல்லா உண்மைகளையும் அறிந்துகொள்ளாமல் அவசரமாக முடிவுகள் எடுப்பதற்கு பதிலாக, தன் மனைவி சொல்வதை செவிகொடுத்துக் கேட்டு அவளுடைய சிந்தனைகள் மற்றும் உணர்ச்சிகளின் பேரில் உட்பார்வையைப் பெற்றுக்கொள்வார். மனைவியும் அதேபோன்று தன் கணவருக்கு செய்வாள். இவ்வாறு, “வீடு ஞானத்தினாலே கட்டப்பட்டு, விவேகத்தினாலே நிலைநிறுத்தப்படும்.”—நீதிமொழிகள் 24:3.
பகுத்துணர்வு சூழ்நிலைமைகளை வெற்றிகரமாக கையாளுவதற்கு ஒரு நபருக்கு உதவுகிறது. நீதிமொழிகள் 17:27 சொல்கிறது: “அறிவாளி தன் வார்த்தைகளை அடக்குகிறான்; விவேகி குளிர்ந்த மனமுள்ளவன்.” பகுத்துணர்வுள்ள ஒரு நபர் ஆலோசியாது கண்மூடித்தனமாக எல்லா சூழ்நிலைமைகளுக்குள்ளும் துணிகரமாக செயல்படமாட்டார். தன்னை ஈடுபடுத்திக்கொள்வதற்கு முன்பு, நிகழக்கூடிய விளைவுகளை அவர் கவனமாக சிந்தித்துப் பார்க்கிறார். (லூக்கா 14:28, 29) அவர் மற்றவர்களோடு சமாதானமான உறவுகளையும்கூட அனுபவிக்கிறார், ஏனென்றால் “விவேகமுள்ள வாய்” அவர் தன்னுடைய வார்த்தைகளை கவனமாகத் தேர்ந்தெடுக்கும்படி அவரை வழிநடத்துகிறது. (நீதிமொழிகள் 10:19; 12:8) ஆனால், அதிமுக்கியமாக, பகுத்துணர்வுள்ள ஒரு நபர் தன் சொந்தக் குறைபாடுகளை மனத்தாழ்மையோடு ஒப்புக்கொள்கிறார், வழிநடத்துதலுக்காக மனிதர்களை நோக்கியிராமல் கடவுளையே நோக்கியிருக்கிறார். இது யெகோவாவுக்குப் பிரியமாயிருக்கிறது, மேலும் பகுத்துணர்வை வளர்த்துக்கொள்வதற்கு மற்றொரு காரணமாய் இருக்கிறது.—நீதிமொழிகள் 2:1-9; யாக்கோபு 4:6.
இஸ்ரவேலர் பகுத்துணர்வில் குறைவுபட்டனர்
பகுத்துணர்வை பிரயோகிக்கத் தவறியதன் ஆபத்து இஸ்ரவேலரின் ஆரம்பகால சரித்திரத்தில் நடந்த ஒரு சம்பவத்தில் காணப்படுகிறது. அந்த சமயத்தைக் குறித்து சிந்தித்துப் பார்க்கையில் பரிசுத்த ஆவியினால் எவப்பட்ட சங்கீதக்காரன் பின்வருமாறு சொன்னார்: “எங்கள் பிதாக்கள் எகிப்திலே உம்முடைய அதிசயங்களை உணராமலும் [“எந்தவித உட்பார்வையும் காண்பிக்காமலும்,” NW], உம்முடைய கிருபைகளின் திரட்சியை நினையாமலும் போய், சிவந்த சமுத்திர ஓரத்திலே கலகம்பண்ணினார்கள்.”—சங்கீதம் 106:7.
மோசே இஸ்ரவேலரை எகிப்திலிருந்து வெளியே வழிநடத்திச்சென்றபோது, யெகோவா தம் ஜனங்களை விடுவிப்பதற்கு ஏற்கெனவே தம் வல்லமையையும் தம் தீர்மானத்தையும் காண்பித்திருந்தார், அந்த வல்லமைவாய்ந்த உலக வல்லரசின் மீது பத்து வாதைகளைக் கொண்டுவருவதன் மூலம் அவர் அதை செய்தார். பார்வோன் இஸ்ரவேலரை போக அனுமதித்த பிறகு, மோசே அவர்களை சிவந்த சமுத்திரத்தின் கரைக்கு வழிநடத்திச் சென்றார். இருந்தபோதிலும், எகிப்திய சேனைகள் அவர்களைப் பின்தொடர்ந்து அணிவகுத்துச் சென்றன. இஸ்ரவேலர் சிக்கிக்கொண்டது போலவும் அவர்கள் புதிதாகக் கண்டடைந்த சுயாதீனம் குறுகிய காலத்துக்கு மட்டுமே நிலைத்திருந்தது போலவும் தோன்றியது. ஆகையால் பைபிள் பதிவு இவ்வாறு சொல்கிறது: “இஸ்ரவேல் புத்திரர் தங்கள் கண்களை ஏறெடுத்துப்பார்த்து, எகிப்தியர் தங்களுக்குப் பின்னே வருகிறதைக் கண்டு, மிகவும் பயந்தார்கள்; அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள் . . . நீர் எங்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினதினால், எங்களுக்கு இப்படிச் செய்தது என்ன? . . . நாங்கள் வனாந்தரத்திலே சாகிறதைப்பார்க்கிலும் எகிப்தியருக்கு வேலைசெய்கிறது எங்களுக்கு நலமாயிருக்குமே என்றார்கள்.”—யாத்திராகமம் 14:10-12.
அவர்கள் ஏற்கெனவே யெகோவாவின் வல்லமைவாய்ந்த பத்து முக்கியமான வெளிக்காட்டுதல்களை பார்த்திருந்ததை நாம் நினைவுக்குக்கொண்டு வரும்வரை அவர்களுக்கு ஏற்பட்ட பயம் புரிந்துகொள்ளத்தக்கதாகத் தோன்றலாம். 40 வருடங்களுக்குப் பின்பு மோசே அவர்களுக்கு என்ன நினைப்பூட்டினாரோ அதை அவர்கள் நேரடியாக பார்த்து அறிந்திருந்தனர்: “கர்த்தர் எங்களைப் பலத்த கையினாலும், ஓங்கிய புயத்தினாலும், மகா பயங்கரங்களினாலும், அடையாளங்களினாலும், அற்புதங்களினாலும், எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார்.” (உபாகமம் 26:8) எனவே, சங்கீதக்காரன் எழுதினதுபோல், இஸ்ரவேலர்கள் மோசேயின் வழிநடத்துதலுக்கு எதிராக செயல்பட்டபோது, ‘அவர்கள் எந்த உட்பார்வையும் காண்பிக்கவில்லை.’ இருப்பினும், யெகோவா, எகிப்திய சேனைகளின்மீது அதிர்ச்சியூட்டும் தோல்வியை ஏற்படுத்தினதன் மூலம் தம் வாக்குத்தத்தத்தை உண்மையோடு நிறைவேற்றினார்.—யாத்திராகமம் 14:19-31.
சோதனைகளை நாம் சந்தேகத்தோடு எதிர்ப்பட்டோம் என்றால், நம்முடைய விசுவாசமும்கூட அதே போல் தடுமாற்றம் அடையும். எப்போதும் நாம் காரியங்களை சரியான கோணத்தில் நோக்குவதற்கு பகுத்துணர்வு உதவிசெய்யும், நம்மை எதிர்க்கும் எவரைக்காட்டிலும் யெகோவா எவ்வளவு பெரியவராயிருக்கிறார் என்பதை ஞாபகத்தில் வைக்க உதவும். யெகோவா ஏற்கெனவே நமக்காக செய்திருக்கும் காரியங்களை மனதில் வைக்கவும்கூட பகுத்துணர்வு நமக்கு உதவும். ‘தம்மில் அன்புகூருகிற யாவரையும் காப்பாற்றுகிறவர்’ என்ற உண்மையை நாம் மறந்துபோகாமல் இருக்கும்படி அது நமக்கு உதவிசெய்யும்.—சங்கீதம் 145:18-20.
ஆவிக்குரிய பகுத்துணர்வை பெற்றுக்கொள்ளுதல்
பகுத்துணர்வு நாம் வயதாகிக்கொண்டே செல்கையில் தானாகவே வந்துவிடாது. அதை வளர்த்துக்கொள்ள வேண்டும். பகுத்துணர்வு பெற்றிருந்ததற்காக உலகப்புகழ் பெற்றிருந்த ஞானமுள்ள ராஜாவாகிய சாலொமோன் இவ்வாறு சொன்னார்: “ஞானத்தைக் கண்டடைகிற மனுஷனும், புத்தியைச் [“பகுத்துணர்வை,” NW] சம்பாதிக்கிற மனுஷனும் பாக்கியவான்கள். அதின் வர்த்தகம் வெள்ளி வர்த்தகத்திலும் அதின் ஆதாயம் பசும்பொன்னிலும் உத்தமமானது.” (நீதிமொழிகள் 3:13, 14) சாலொமோன் எங்கிருந்து பகுத்துணர்வை பெற்றுக்கொண்டார்? யெகோவாவிடமிருந்து. என்ன ஆசீர்வாதம் வேண்டுமென்று யெகோவா சாலொமோனை கேட்டபோது, சாலொமோன் இவ்வாறு பதிலளித்தார்: “உமது ஜனங்களை நியாயம் விசாரிக்கவும், நன்மைதீமை இன்னதென்று வகையறுக்கவும், அடியேனுக்கு ஞானமுள்ள இருதயத்தைத் தந்தருளும்.” (1 இராஜாக்கள் 3:9) ஆம், சாலொமோன் யெகோவாவை தன்னுடைய உதவியாளராக நோக்கியிருந்தார். அவர் பகுத்துணர்வுக்காக கேட்டார், யெகோவா வழக்கத்துக்கு மாறாக அசாதாரணமான அளவு அவருக்கு கொடுத்தார். அதன் விளைவு? “சகல கிழக்கத்திப் புத்திரரின் ஞானத்தையும் எகிப்தியரின் சகல ஞானத்தையும் பார்க்கிலும் சாலொமோனின் ஞானம் சிறந்ததாயிருந்தது.”—1 இராஜாக்கள் 4:30.
பகுத்துணர்வைத் தேடுவதற்கு நாம் எங்கே செல்ல வேண்டும் என்பதை சாலொமோனின் அனுபவம் காண்பிக்கிறது. சாலொமோனைப் போன்று நாமும் யெகோவாவை நோக்கியிருக்க வேண்டும். எவ்வாறு? யெகோவா தம்முடைய வார்த்தையாகிய பைபிளை அளித்திருக்கிறார், அது நமக்கு அவருடைய சிந்தனையின் பேரில் உட்பார்வை அளிக்கிறது. நாம் பைபிளை வாசிக்கும்போது, மதிப்புவாய்ந்த அறிவு என்னும் சுரங்கத்துக்குள் தோண்டி ஆவிக்குரிய பகுத்துணர்வு என்னும் கற்களை எடுக்கிறோம். நம்முடைய பைபிள் வாசிப்பிலிருந்து சேகரித்து வைக்கும் தகவலை நாம் தியானிக்க வேண்டும். பிறகு சரியான தீர்மானங்களைச் செய்வதற்கு அது பயன்படுத்தப்படலாம். காலப்போக்கில் ‘நன்மை தீமை இன்னதென்று பகுத்துணர்வதற்கு’ உதவும்படி ‘புரிந்துகொள்ளும் ஆற்றலில் நாம் முழுமையாக வளர்ச்சியடைந்தவர்களாக’ ஆகும் அளவுக்கு நம்முடைய பகுத்தறியும் ஆற்றல்கள் வளர்ச்சியடைகின்றன.—1 கொரிந்தியர் 14:20, NW; ஒப்பிடுக: எபிரெயர் 5:14; 1 கொரிந்தியர் 2:10.
யெகோவா சாலொமோனுக்கு கொடுத்த பகுத்துணர்விலிருந்து நாம் இன்றும்கூட பயனடையலாம் என்பது அக்கறைக்குரியதாய் இருக்கிறது. எவ்வாறு? நீதிமொழிகள் வடிவில் ஞானத்தை வெளிப்படுத்திக் காண்பிப்பதில் சாலொமோன் தேர்ச்சி பெற்றவரானார், அவை தெய்வீக ஞானத்தால் ஏவப்பட்டெழுதப்பட்ட சுருக்கமான நீதிமொழிகள். இப்படிப்பட்ட பெரும்பாலான பழமொழிகள் பைபிள் புத்தகமாகிய நீதிமொழிகளில் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கின்றன. அப்புத்தகத்தை படிப்பது சாலொமோனின் பகுத்துணர்விலிருந்து நாம் பயனடைய நமக்கு உதவுகிறது, நாமே பகுத்துணர்வை வளர்த்துக்கொள்ளவும்கூட உதவி செய்கிறது.
நம்முடைய பைபிள் படிப்பில் நமக்கு உதவியளிப்பதற்கு காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகள் போன்ற பைபிள் படிப்பு ஏதுக்களை நாம் உபயோகிக்கலாம். 116-க்கும் மேற்பட்ட வருடங்களாக ஆங்கில காவற்கோபும் பத்திரிகை நேர்மை இருதயமுள்ள நபர்களுக்கு யெகோவாவின் ராஜ்யத்தை அறிவித்து வந்திருக்கிறது. ஆங்கில விழித்தெழு! பத்திரிகையும் அதற்கு முன்பிருந்த பத்திரிகைகளும் 1919 முதற்கொண்டு உலக நிலைமைகளைக் குறித்து விளக்கம் கொடுத்துக்கொண்டு வருகிறது. காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! என்ற இந்த இரண்டு பத்திரிகைகளும் பைபிள் சத்தியங்களை ஆராய்ச்சிசெய்து படிப்படியான ஆவிக்குரிய அறிவொளியூட்டுதலை அளிக்கிறது, அது கிறிஸ்தவமண்டலத்தால் கற்பிக்கப்பட்டிருக்கும் தவறான கருத்துக்களாக இருந்தாலும்சரி அல்லது நம்முடைய சொந்த சிந்தனா முறைகளில் காணப்படும் தவறான கருத்துக்களாக இருந்தாலும்சரி, அது அவற்றை நாம் தெளிவாக அறிந்துகொள்ள நமக்கு உதவிசெய்கிறது.—நீதிமொழிகள் 4:18.
பகுத்துணர்வை வளர்த்துக்கொள்வதற்கு மற்றொரு உதவி சரியான கூட்டுறவாகும். சாலொமோன் ராஜாவின் பழமொழிகளில் ஒன்று இவ்வாறு சொல்கிறது: “ஞானிகளோடே சஞ்சரிக்கிறவன் ஞானமடைவான்; மூடருக்குத் தோழனோ நாசமடைவான்.” (நீதிமொழிகள் 13:20) வருந்தத்தக்கவிதத்தில், சாலொமோன் ராஜாவின் குமாரனான ரெகொபெயாம் இந்த நீதிமொழியை தன் வாழ்க்கையின் முக்கியமான கட்டத்தில் நினைவுகூரவில்லை. அவருடைய தகப்பனின் மரணத்திற்குப் பிறகு, இஸ்ரவேலின் கோத்திரத்தினர் அவரிடத்திற்கு வந்து தங்கள் சுமைகளை இலகுவாக்கும்படி கேட்டுக்கொண்டனர். முதலில் ரெகொபெயாம் முதியோரோடே ஆலோசனைபண்ணினார், அவர்கள் பகுத்துணர்வைக் காண்பித்து அவருடைய குடிமக்களுக்கு செவிகொடுத்துக் கேட்கும்படி அவரை உற்சாகப்படுத்தினர். பிறகு அவர் வாலிபரிடம் சென்றார். அவர்கள் அனுபவம் மற்றும் பகுத்துணர்வில் குறைவுபட்டிருந்தனர், இஸ்ரவேலர்களை பயமுறுத்துவதன் மூலம் அவர்களுக்கு பதில் கொடுக்கும்படி அவர்கள் ரெகொபெயாமை உற்சாகப்படுத்தினர். ரெகொபெயாம் வாலிபர் சொன்னதை கேட்டார். அதன் விளைவு? இஸ்ரவேலர் கலகம் செய்தனர், ரெகொபெயாம் தன் ராஜ்யத்தின் பெரும்பகுதியை இழந்துபோனார்.—1 இராஜாக்கள் 12:1-17.
பகுத்துணர்வை வளர்த்துக்கொள்வதில் பரிசுத்த ஆவியின் உதவியை நாடுவது ஒரு முக்கியமான பங்கை வகிக்கிறது. எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலையடைந்த பின்பு, இஸ்ரவேலரோடு யெகோவா கொண்டிருந்த தொடர்புகளை மறுபடியும் சிந்தித்துப் பார்த்தபோது பைபிள் எழுத்தாளராகிய நெகேமியா இவ்வாறு சொன்னார்: “அவர்களுக்கு அறிவை உணர்த்த உம்முடைய நல் ஆவியைக் கட்டளையிட்டீர்.” (நெகேமியா 9:20) யெகோவாவின் ஆவி நம்மை விவேகமுள்ளவர்களாகவும்கூட ஆக்கக்கூடும். உங்களுக்கு பகுத்துணர்வைக் கொடுப்பதற்கு யெகோவாவின் ஆவிக்காக நீங்கள் ஜெபிக்கையில், நம்பிக்கையோடே அதை செய்யுங்கள், ஏனென்றால் அவர் ‘யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாயும்’ இருக்கிறார்.—யாக்கோபு 1:5; மத்தேயு 7:7-11; 21:22.
பகுத்துணர்வும் உட்பார்வையும்
புறஜாதியாரிடத்தில் சத்தியத்தைப் பிரசங்கித்தபோது அப்போஸ்தலனாகிய பவுல் பகுத்துணர்வைக் காண்பித்தார். உதாரணமாக, ஒரு சமயம் அவர் அத்தேனே பட்டணத்தில் இருக்கையில், அவர்களுடைய வழிபாட்டுக்குரிய விக்கிரகங்களை ‘கடந்து சென்றபோது கவனமாகப் பார்த்தார்.’ பவுல் விக்கிரகங்களால் சூழப்பட்டிருந்தார், அவர் தன் ஆவியிலே எரிச்சலடைந்தார். இப்போது அவர் ஒரு தீர்மானம் எடுக்க வேண்டியதாயிருந்தது. அவர் பாதுகாப்பான போக்கைப் பின்பற்றி அமைதலாக இருக்கவேண்டுமா? அல்லது பரவலாக காணப்பட்ட அவரை எரிச்சல்படுத்திய விக்கிரக வணக்கத்தைப் பற்றி அவர் வெளிப்படையாகப் பேச வேண்டுமா, அவ்வாறு செய்வது ஆபத்தானதாக இருந்தாலும்கூட?
பவுல் பகுத்துணர்வோடு செயல்பட்டார். “அறியப்படாத தேவனுக்கு” என்று பொறித்து வைக்கப்பட்டிருந்த ஒரு பலிபீடத்தை அவர் பார்த்திருந்தார். சாதுரியமாக பவுல் விக்கிரகங்களிடமாக அவர்களுக்கு இருந்த பக்தியை ஒப்புக்கொண்டு, அதற்குப் பிறகு “உலகத்தையும் அதிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின தேவனானவர்” என்ற பொருளை அறிமுகப்படுத்துவதற்கு அந்தப் பலிபீடத்தை பயன்படுத்தினார். ஆம், யெகோவா அவர்கள் அறிந்திராத ஒரு கடவுளாக இருந்தார்! அந்த விஷயத்தில் அவர்களுக்கு இருந்த கூருணர்ச்சியை பவுல் கவனித்து அவர்களுக்கு ஒரு மகத்தான சாட்சி கொடுத்தார். என்ன விளைவுடன்? பெரும்பாலான ஜனங்கள் சத்தியத்தை தழுவிக்கொண்டனர், “அவர்களில் மார்ஸ் மேடையின் நியாயாதிபதிகளில் ஒருவனாகிய தியொனீசியு என்பவனும், தாமரி என்னும் பேருள்ள ஒரு ஸ்திரீயும், இவர்களுடனே வேறு சிலரும் இருந்தார்கள்.” (அப்போஸ்தலர் 17:16-34, NW) பகுத்துணர்வைக் காண்பிப்பதில் பவுல் எப்பேர்ப்பட்ட முன்மாதிரியாயிருந்தார்!
பகுத்துணர்வு எளிதாகவோ அல்லது இயற்கையாகவோ வந்துவிடாது என்பதில் எந்தக் கேள்வியுமில்லை. ஆனால் பொறுமை, ஜெபம், ஊக்கமான முயற்சி, ஞானமான கூட்டுறவு, பைபிளைப் படித்து அதை தியானிப்பது, யெகோவாவின் பரிசுத்த ஆவியின் பேரில் சார்ந்திருப்பது ஆகியவற்றின் மூலம் நீங்களும்கூட பகுத்துணர்வை வளர்த்துக்கொள்ளலாம்.