குணமுள்ள கடவுள்மீது நீங்கள் நம்பிக்கை வைக்கமுடியுமா?
“ஒரு கிறிஸ்தவனாக இருப்பதற்கு நீங்கள் கடவுளை நம்பவேண்டியதில்லை . . . ஒரு புதிய புரட்சியின் பாகமாக நாம் இருக்கிறோம், ஆனால் 21-ம் நூற்றாண்டிலோ, பாரம்பரிய கருத்தில் ஒரு கடவுளை சர்ச் கொண்டிருக்காது” என்பதாக பிரிட்டிஷ் பல்கலைக்கழகத்தின் மூத்த மதகுரு ஒருவர் விளக்கினார். குறைந்தபட்சம் நூறு பிரிட்டிஷ் பாதிரிமார்கள் ஆதரிக்கும் சீ ஆஃப் ஃபெய்த் (Sea of Faith) என்ற இயக்கத்தின் சார்பாக இவர் பேசிக்கொண்டிருந்தார். இந்த “கிறிஸ்தவ நாத்திகர்கள்,” மதம் என்பது மனிதனின் படைப்பே என்றும், இதன் ஒரு உறுப்பினர் குறிப்பிட்டபடி, கடவுள் என்பது வெறும் “கற்பனை உருவமே” என்றும் உறுதியாக கூறுகின்றனர். இயற்கைக்கு அப்பாற்பட்ட ஒரு கடவுளைப் பற்றி இனிமேலும் அவர்கள் சிந்திப்பதில்லை.
“கடவுள் மரித்துவிட்டார்” என்பது 1960-களின் பிரபலமான ஒரு கோஷம். இது 19-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜெர்மன் நாட்டு தத்துவஞானி பிரெட்ரிக் நிட்டாஷியின் கருத்துக்களைப் பிரதிபலித்தது. இது, அநேக இளைஞருக்கு தாங்கள் விரும்பியதைச் செய்வதற்கும், ஒழுக்கக் கட்டுப்பாடின்றி பாலுறவில் ஈடுபடுவதற்கும் போதைப் பொருளை துர்ப்பிரயோகம் செய்வதற்கும் ஒரு சாக்காக இருந்தது. ஆனால் இப்படிப்பட்ட ஒரு சுயாதீனம் ஹிப்பிக்கள் என்றழைக்கப்பட்ட இவர்களை மகிழ்ச்சிதரும் அதிக திருப்தியான ஒரு வாழ்க்கைக்கு வழிநடத்தியதா?
அதே பத்தாண்டில் ஆங்கலிக்கன் பிஷப் ஜான் ஏ. டி. ராபின்சன் என்பவர் ஹானஸ்ட் டு காட் என்ற சர்ச்சைக்குரிய ஒரு புத்தகத்தைப் பிரசுரித்தார். கடவுள் என்பவர், “மனித அனுபவத்தின் ஆழத்தில் ஒரு பரிமாணமேயன்றி வேறு ஒன்றுமில்லை” என்பதாக அவரைப்பற்றி நினைத்ததற்காக அவருடைய சக திருச்சபை குருக்கள் அநேகர் அவரைக் குறைகூறினர். இறையியல் பேராசிரியர் கீத் வார்ட் இவ்வாறு கேட்டார்: “கடவுளில் நம்பிக்கை என்பது இப்பொழுது அறிவாளிகளால் தள்ளிவிடப்பட்டிருக்கும் பழங்காலத்திய மூடநம்பிக்கையா?” தன்னுடைய கேள்விக்கு தானே பதிலளிப்பவராய் அவர் இவ்வாறு சொன்னார்: “கடவுளைப் பற்றிய பாரம்பரிய கருத்தின் அறிவை திரும்பப் பெறுவதைவிட மதத்தில் இன்று அதிக முக்கியமானது வேறு எதுவும் இல்லை.”
துன்பமும் குணமுள்ள ஒரு கடவுளும்
குணமுள்ள ஒரு கடவுளில் நம்பிக்கை வைத்திருக்கும் அநேகர் தாங்கள் காணும் சோகங்களையும் துன்பங்களையும் தங்களுடைய இந்த நம்பிக்கையோடு சம்பந்தப்படுத்திப் பார்ப்பதைக் கடினமாகக் காண்கிறார்கள். உதாரணமாக, ஸ்காட்லாந்திலுள்ள டென்பிளேனில் மார்ச் 1996-ல் 16 சிறு பிள்ளைகள் தங்கள் ஆசிரியையோடு சேர்ந்து சுட்டுக்கொல்லப்பட்டனர். மிகவும் கலங்கிப்போன ஒரு தாய், “என்னால் கடவுளுடைய சித்தத்தைப் புரிந்துகொள்ள முடியவில்லை” என்பதாகச் சொன்னார். அந்தப் பிள்ளைகளின் பள்ளிக்கு வெளியே மலர்ச்செண்டுகளோடு வைக்கப்பட்டிருந்த ஒரு கார்டில் அந்த சோக சம்பவத்தின் வேதனை வெளிப்படுத்தப்பட்டிருந்தது. அதில் “ஏன்?” என்ற ஒரு வார்த்தையே இருந்தது. இதற்குப் பதிலளிப்பவராய் டென்பிளேன் கத்தீட்ரல் ஊழியர் ஒருவர், “இதற்கு எந்த விளக்கமும் இல்லை. இது ஏன் நடந்திருக்கவேண்டும் என்பதற்கு நம்மால் பதிலளிக்கமுடியாது” என்றார்.
அதே ஆண்டின் பிற்பகுதியில் சர்ச் ஆஃப் இங்கிலாந்தின் பிரபலமான இளம் மதகுரு ஒருவர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். “கடவுளுடைய கதவண்டையில் ஏன்? ஏன்? என்ற கேள்விகளோடு சுத்தியால் அடித்து” லிவர்பூலின் தலைமை குரு பேசியதை அதிர்ச்சியில் ஆழ்ந்துவிட்ட சபையார் கேட்டனர் என சர்ச் டைம்ஸ் அறிக்கைச் செய்தது. இந்த மதகுருவுக்கும்கூட குணமுள்ள ஒரு கடவுளிடமிருந்து ஆறுதலான செய்தி கிடைக்கவில்லை.
அப்படியானால், நாம் எதை நம்ப வேண்டும்? குணமுள்ள ஒரு கடவுளில் நம்பிக்கை வைப்பது நியாயமானது. மேலே எழுப்பப்பட்டிருக்கும் கருத்தை ஈர்க்கும் கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்கு இது முக்கியமாகும். பின்வரும் கட்டுரையில் அளிக்கப்பட்டிருக்கும் அத்தாட்சியை சிந்தித்துப் பார்க்கும்படியாக நாங்கள் உங்களை அழைக்கிறோம்.
[பக்கம் 3-ன் படம்]
கார்டில் “ஏன்?” என்ற கேள்வி
[படத்திற்கான நன்றி]
NEWSTEAM No. 278468/Sipa Press