குணமுள்ள கடவுள் யெகோவாவை அறிந்துகொள்ளுங்கள்
கடவுளைப் பற்றிய இந்துக்களின் கருத்தை மற்ற மத கோட்பாடுகளோடு ஒப்பிடுகிறவராய், இந்தியாவைச் சேர்ந்த டாக்டர் ராதாகிருஷ்ணன் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: “எபிரெயர்களின் கடவுள் வித்தியாசமானவர். அவர் குணமுள்ளவராகவும் வரலாற்றில் சுறுசுறுப்பாக பங்கேற்பவராகவும் வளர்ந்துவரும் இந்த உலகின் மாற்றங்களிலும் தற்செயல் நிகழ்வுகளிலும் அக்கறையுள்ளவராகவும் இருக்கிறார். அவர் நம்மோடு தொடர்பு வைத்துக்கொள்ளும் ஒருவர்.”
பைபிளின் கடவுளுடைய எபிரெய பெயரான יהוה என்பது பொதுவாக, “யெகோவா” என்று மொழிபெயர்க்கப்படுகிறது. அவர் மற்ற எல்லா கடவுட்களுக்கும் மேலானவர். அவரைப்பற்றி நமக்கு என்ன தெரியும்? பைபிள் காலங்களில் மனிதர்களோடு எவ்வாறு செயல்தொடர்பு கொண்டார்?
யெகோவாவும் மோசேயும் “முகமுகமாய்”
மோசேயால் சொல்லர்த்தமாக கடவுளைப் பார்க்க முடியாவிட்டாலும் யெகோவாவுக்கும் அவருடைய ஊழியனாகிய மோசேக்கும் இடையே “முகமுகமாய்” ஒரு நெருக்கம் இருந்தது. (உபாகமம் 34:12; யாத்திராகமம் 33:20) மோசே இளைஞனாய் இருக்கையில், அந்தச் சமயத்தில் எகிப்தில் அடிமைப்பட்டிருந்த இஸ்ரவேலரோடு அவருடைய இதயம் இருந்தது. “தேவனுடைய ஜனங்களோடே துன்பத்தை அநுபவிப்பதையே தெரிந்துகொண்டு” பார்வோனுடைய குடும்பத்தின் ஒரு அங்கத்தினனாக வாழும் வாழ்க்கையை அவர் நிராகரித்துவிட்டார். (எபிரெயர் 11:25) இதன் விளைவாக, யெகோவா மோசேக்கு அநேக விசேஷ சிலாக்கியங்களைக் கொடுத்தார்.
பார்வோனின் குடும்பத்தில் ஒரு அங்கத்தினராக, “மோசே எகிப்தியருடைய சகல சாஸ்திரங்களிலும் கற்பிக்கப்பட்”டிருந்தார். (அப்போஸ்தலர் 7:22) ஆனால் இஸ்ரவேல் தேசத்தாரை வழிநடத்திச் செல்வதற்கு, அவர் மனத்தாழ்மை, பொறுமை, சாந்தம் ஆகிய குணங்களை வளர்த்துக்கொள்வதும்கூட அவசியமாயிருந்தது. மீதியானில் ஒரு மேய்ப்பனாக இருந்த 40 ஆண்டுகளில் இதை வளர்த்துக்கொண்டார். (யாத்திராகமம் 2:15-22; எண்ணாகமம் 12:3) யெகோவா கண்ணுக்குப் புலப்படாதவராகவே இருந்தபோதிலும், மோசேக்கு தம்மையும் தம்முடைய நோக்கங்களையும் வெளிப்படுத்தினார்; தேவதூதர்கள் மூலம் கடவுள் பத்து கற்பனைகளை அவரிடம் கொடுத்தார். (யாத்திராகமம் 3:1-10; 19:3–20:20; அப்போஸ்தலர் 7:53; எபிரெயர் 11:27) “ஒருவன் தன் சிநேகிதனோடே பேசுவதுபோல, கர்த்தர் [யெகோவா] மோசேயோடே முகமுகமாய்ப் பேசினார்” என்பதாக பைபிள் நமக்குச் சொல்லுகிறது. (யாத்திராகமம் 33:11) ஆம், யெகோவாதாமே இவ்வாறு சொன்னார்: “நான் அவனுடன் முகமுகமாகவும் பிரத்தியட்சமாகவும் பேசுகிறேன்.” என்னே அருமையான, நெருக்கமான உறவை மோசே தன்னுடைய காணக்கூடாத ஆனால் குணமுள்ள கடவுளோடு அனுபவித்து மகிழ்ந்தார்!—எண்ணாகமம் 12:8.
இஸ்ரவேல் தேசத்தின் ஆரம்பகால வரலாற்றோடுகூட, மோசே நியாயப்பிரமாண சட்ட தொகுப்பை அதனுடைய எல்லா பிரிவுகளோடும்கூட சேர்த்து பதிவுசெய்தார். மற்றொரு மதிப்புமிக்க சிலாக்கியமும்கூட அவரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது—அது ஆதியாகம புத்தகத்தை எழுதுவதாகும். அந்தப் புத்தகத்தின் பிற்பகுதி அவருடைய சொந்தக் குடும்பத்தில் திருத்தமாக அறியப்பட்டிருந்த வரலாறாக இருந்ததால் அதைப் பதிவு செய்வது ஓரளவு சுலபமாக இருந்தது. ஆனால் மனிதனின் மிகப் பழமையான வரலாற்றின் விவரங்களை மோசே எங்கிருந்து பெற்றுக்கொண்டார்? அவருடைய முற்பிதாக்கள் பாதுகாத்து வைத்திருந்த எழுத்துவடிவிலிருந்த பண்டைய ஆவணங்களை மோசே சொந்தமாக வைத்திருந்து அவற்றிலிருந்து தகவலைப் பெற்றிருக்கலாம். மறுபட்சத்தில், வாய்மொழி வாயிலாக கடத்தப்பட்ட விவரங்களையோ அல்லது யெகோவாவிடமிருந்து தெய்வீக வெளிப்படுத்துதல்களை நேரடியாகவோ அவர் பெற்றுக்கொண்டிருக்கலாம். மோசே இதன் சம்பந்தமாக தன்னுடைய கடவுளோடு அனுபவித்து மகிழ்ந்த தனிப்பட்ட உறவை எல்லா காலங்களிலும் வாழ்ந்துவந்திருக்கும் மதிப்புக்குரிய மனிதர்கள் நீண்ட காலமாகவே வெளிப்படையாக ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.
எலியா நம்பின குணமுள்ள கடவுள்—யெகோவா
எலியா தீர்க்கதரிசியும்கூட யெகோவாவைக் குணமுள்ள ஒரு கடவுளாக அறிந்திருந்தார். எலியா மெய் வணக்கத்துக்காக வைராக்கியமுள்ளவராக இருந்தார்; மேலும், கானானியரின் எல்லா கடவுட்களிலும் முக்கிய கடவுளாக இருந்த பாகால் வணக்கத்தாரின் பெரும் பகைக்கும் எதிர்ப்புக்கும் இலக்கானவராக ஆனபோதிலும் யெகோவாவை சேவித்து வந்தார்.—1 இராஜாக்கள் 18:17-40.
இஸ்ரவேலின் அரசன் ஆகாபும் அவனுடைய மனைவி யேசபேலும் எலியாவைக் கொல்ல வகைதேடினார்கள். தன் உயிருக்குப் பயந்து, எலியா சவக்கடலுக்கு மேற்கே பெயெர்செபாவுக்கு ஓடினார். அங்கே அவர் வனாந்தரத்தில் சுற்றித்திரிந்து தான் சாகும்படி வேண்டிக்கொண்டார். (1 இராஜாக்கள் 19:1-4) எலியாவை யெகோவா கைவிட்டுவிட்டாரா? அவர் இனிமேலும் தம்முடைய உண்மையுள்ள ஊழியனில் அக்கறையுள்ளவராக இல்லையா? எலியா ஒருவேளை அவ்விதமாக நினைத்திருக்கலாம், ஆனால் அவர் நினைத்தது எவ்வளவு தவறு! பின்னால் யெகோவா அவரிடம் அமைதியாக பேசி, “எலியாவே, இங்கே உனக்கு என்ன காரியம்”? என்று கேட்டார். திடீரென்று இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகள் வெளிப்படுவதைக் கண்டப்பிறகு, “எலியாவே, இங்கே உனக்கு என்ன காரியம் என்கிற சத்தம் அவனுக்கு உண்டாயிற்று.” நம்பிக்கைக்குப் பாத்திரமான தம்முடைய ஊழியக்காரனை உற்சாகப்படுத்தும் பொருட்டு எலியாவிடம் இந்தத் தனிப்பட்ட அக்கறையை யெகோவா காண்பித்தார். எலியா செய்வதற்கு இன்னும் அதிகமான வேலையை கடவுள் வைத்திருந்தார், எலியா அந்த அழைப்புக்கு ஆர்வத்தோடு பிரதிபலித்தார்! எலியா தன்னுடைய வேலை நியமிப்புகளை உண்மையுடன் நிறைவேற்றினார், தன்னுடைய குணமுள்ள கடவுளாகிய யெகோவாவின் பெயரைப் பரிசுத்தப்படுத்தினார்.—1 இராஜாக்கள் 19:9-18.
இஸ்ரவேல் தேசத்தை யெகோவா நிராகரித்துவிட்டதைத் தொடர்ந்து, அவர் இனிமேலும் பூமியிலுள்ள தம்முடைய ஊழியர்களிடம் தனிப்பட்ட விதமாக பேசுவது கிடையாது. அவர்களிடம் அவருடைய தனிப்பட்ட அக்கறை குறைந்துவிட்டது என்பதை இது அர்த்தப்படுத்துவது கிடையாது. தம்முடைய பரிசுத்த ஆவியின் மூலம் அவர் இன்னும் அவர்களைத் தம்முடைய ஊழியத்தில் வழிநடத்தியும் பலப்படுத்தியும் வந்திருக்கிறார். உதாரணத்துக்கு சவுல் என்பதாக முன்னாளில் அறியப்பட்டிருந்த அப்போஸ்தலன் பவுலை எடுத்துக்கொள்ளுங்கள்.
பரிசுத்த ஆவி பவுலை வழிநடத்துகிறது
சவுல் சிலிசியா நாட்டின் முக்கிய பட்டணமாகிய தர்சுவிலிருந்து வந்தார். அவருடைய பெற்றோர் எபிரெயர்கள், அவரோ ஒரு ரோம குடிமகனாக பிறந்திருந்தார். என்றபோதிலும், சவுலின் வளர்ப்பு பரிசேயர்களின் கண்டிப்பான கொள்கைகளின்படியே இருந்தது. பின்னால் எருசலேமில் பிரசித்திப்பெற்ற நியாயப்பிரமாண போதகரான “கமாலியேலின் பாதத்தருகே” போதிக்கப்படும் வாய்ப்பைப் பெற்றவராக இருந்தார்.—அப்போஸ்தலர் 22:3, 26-28.
யூத பாரம்பரியங்களுக்காக சவுல் கொண்டிருந்த தவறான வைராக்கியத்தின் காரணமாக, இயேசு கிறிஸ்துவை பின்பற்றுவோருக்கு எதிராக நடத்தப்பட்ட கொடூரமான ஏற்பாடுகளுக்கு உடந்தையாக இருந்தார். முதல் கிறிஸ்தவ உயிர்த்தியாகியாக இருந்த ஸ்தேவானின் கொலையிலும்கூட இவருக்குப் பங்கு இருந்தது. (அப்போஸ்தலர் 7:58-60; 8:1, 3) முற்காலங்களில் தான் தூஷிக்கிறவனாயும் துன்பப்படுத்துகிறவனாயும் கொடுமை செய்கிறவனாயும் இருந்ததாக பின்னால் ஒப்புக்கொள்கிறபோதிலும், “[அவர்] அறியாமல் அவிசுவாசத்தினாலே அப்படிச் செய்தபடியினால் இரக்கம் பெற்”றார்.—1 தீமோத்தேயு 1:13.
கடவுளைச் சேவிக்கவேண்டும் என்ற உண்மையான ஆசையினால் சவுல் தூண்டப்பட்டார். தமஸ்குவுக்குப் போகும் வழியில் சவுல் மனமாற்றம் அடைந்ததைத் தொடர்ந்து, யெகோவா அவரை அசாதாரணமான வழியில் பயன்படுத்தினார். ஆரம்ப கால கிறிஸ்தவ சீஷனாகிய அனனியாவை, பவுலுக்கு உதவிசெய்யும்படி உயிர்த்தெழுப்பப்பட்ட கிறிஸ்து கட்டளையிட்டார். அதற்குப்பின்பு பவுல் (சவுல் ஒரு கிறிஸ்தவராக அறியப்பட்டபோது இருந்த ரோம பெயர்) ஐரோப்பாவிலும் ஆசியா மைனர் பகுதிகளிலும் அவருடைய நீண்டகால பயன்மிகுந்த ஊழியத்தை செய்துமுடிக்க யெகோவாவின் ஆவியால் வழிநடத்தப்பட்டார்.—அப்போஸ்தலர் 13:2-5; 16:9, 10.
பரிசுத்த ஆவியின் அதே வழிநடத்துதலை இன்று அடையாளம் கண்டுகொள்ள முடியுமா? ஆம், முடியும்.
யெகோவாவின் தனிப்பட்ட அக்கறைக்கு நாத்திகம் தடையாக இல்லை
ஜோசப் எஃப். ரதர்போர்டு உவாட்ச் டவர் சொஸைட்டியின் இரண்டாவது தலைவராக இருந்தார். அவர் 1906-ல் ஒரு பைபிள் மாணாக்கராக—அந்தச் சமயத்தில் யெகோவாவின் சாட்சிகள் இப்படித்தான் அறியப்பட்டிருந்தனர்—முழுக்காட்டப்பட்டார். அடுத்த ஆண்டு சங்கத்தின் சட்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டு, ஜனவரி 1917-ல் அதன் தலைவராக ஆனார். இருந்தபோதிலும், ஒரு சமயம் இந்த இளம் வழக்கறிஞர் ஒரு நாத்திகனாக இருந்தார். அவர் எவ்விதமாக யெகோவாவின் இப்படிப்பட்ட ஆர்வமுள்ள ஒரு கிறிஸ்தவ ஊழியனாக ஆனார்?
ஜூலை 1913-ல், அ.ஐ.மா., மாசசூட்ஸ், ஸ்பிரிங்பீல்டில் நடத்தப்பட்ட ஒரு சர்வதேச பைபிள் மாணாக்கர் சங்கத்தின் மாநாட்டில் அக்கிராசினராக ரதர்போர்டு சேவித்தார். த ஹோம்ஸ்டெட் என்ற உள்ளூர் செய்தித்தாளின் நிருபர் ரதர்போர்டை பேட்டி கண்டார், இது அந்த மாநாட்டின் சிறப்பம்ச அறிக்கை ஒன்றில் மறுஅச்சு செய்யப்பட்டது.
அந்தச் சமயத்தில் ரதர்போர்டு திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டிருந்தார், அவர் பாப்டிஸ்டு மதப் பிரிவைச் சேர்ந்தவர், ஆனால் அவர் திருமணம் செய்துகொள்ளவிருந்த அந்தப் பெண் பிரிஸ்பிட்டேரியன். ரதர்போர்டின் பாதிரியார், “அவள் இன்னும் முழுக்காட்டப்படாதபடியால் நரக அக்கினிக்கும், அவர் முழுக்காட்டப்பட்டிருந்தபடியால் நேராக பரலோகத்துக்கும் செல்லவிருப்பதை சொன்னபோது, அவருடைய பகுத்தறியும் திறனுள்ள மனது கலகம் செய்து தான் ஒரு நாத்திகரானார்” என்பதாக ரதர்போர்டு விளக்கினார்.
குணமுள்ள ஒரு கடவுளில் ரதர்போர்டு அவருடைய விசுவாசத்தை மறுபடியும் கட்டியமைப்பதற்கு பல வருடங்கள் கவனமாக ஆராய்ச்சி செய்வது தேவைப்பட்டது. “மனதுக்கு திருப்தி அளிக்க முடியாதவற்றுக்கு இருதயத்தை திருப்திப்படுத்த எந்த உரிமையுமில்லை” என்பதே உண்மையாக இருக்கவேண்டும் என்பதன் அடிப்படையில் தான் யோசித்ததாகச் சொன்னார். கிறிஸ்தவர்கள், “தாங்கள் நம்பும் வேதவாக்கியங்கள் உண்மையாக இருப்பதைக் குறித்து அவர்கள் நிச்சயமாயிருக்க வேண்டும்” என்பதாக ரதர்போர்டு விளக்கினார். “தாங்கள் நின்றுகொண்டிருக்கும் அந்த அஸ்திபாரத்தை அறிந்தவர்களாக இருக்கவேண்டும்” என்பதாக அவர் மேலுமாகச் சொன்னார்.—2 தீமோத்தேயு 3:16, 17-ஐக் காண்க.
ஆம், இன்றும்கூட, ஒரு நாத்திகரோ அல்லது அறியொணாமைக் கொள்கையினரோ வேதாகமத்தை ஆராய்ந்து, விசுவாசத்தைப் படிப்படியாக பலப்படுத்தி யெகோவா தேவனோடு ஒரு நிலையான தனிப்பட்ட உறவை வளர்த்துக்கொள்வது கூடிய காரியமாகும். பைபிளை நித்திய ஜீவனுக்கு வழிநடத்தும் அறிவு என்ற உவாட்ச் டவர் பிரசுரத்தின் உதவியோடு கவனமாக படித்த பிறகு, ஒரு இளம் மனிதன் இவ்வாறு ஒப்புக்கொண்டார்: “இந்தப் படிப்பை துவங்கும்போது, எனக்கு கடவுளில் நம்பிக்கை இருக்கவில்லை, ஆனால் இப்பொழுது பைபிளைப் பற்றிய அறிவு என்னுடைய மனதை முழுவதுமாக மாற்றியிருக்கிறது. நான் யெகோவாவை அறிந்துகொள்ளவும் அவரில் நம்பிக்கை வைக்கவும் ஆரம்பித்திருக்கிறேன்.”
‘மதிகெட்டவனும்’ கடவுளும்
“கடவுள் இருப்பதை நிரூபிக்கவோ அல்லது விவாதிக்கவோ வேண்டும் என்று பழைய ஏற்பாட்டின் [எபிரெய வேதாகமம்] எழுத்தாளர் எவருக்குமே தோன்றவில்லை” என்பதாக எ டிக்ஷ்னரி ஆஃப் த பைபிள்-ல் டாக்டர் ஜேம்ஸ் ஹேஸ்டிங்ஸ் சொல்லுகிறார். “கடவுள் இருப்பதை மறுதலிக்கும் அல்லது அதை நிரூபிப்பதற்கு விவாதங்களைப் பயன்படுத்தும் மனச்சாய்வு பொதுவாக பண்டைய உலகில் இருக்கவில்லை. அந்த நம்பிக்கை மனித மனதுக்கு இயல்பானதாயும் எல்லா மனிதருக்கும் பொதுவானதாயும் இருந்தது.” அந்தச் சமயத்தில் இருந்த எல்லா மனிதரும் கடவுள் பயமுள்ளவர்களாக இருந்தனர் என்பதை இது நிச்சயமாகவே அர்த்தப்படுத்துவதில்லை. ஆம், நிச்சயமாக அர்த்தப்படுத்துவதில்லை. சங்கீதம் 14:1, 53:1 ஆகிய இரண்டுமே ‘மதிகெட்டவனைப்’ பற்றி குறிப்பிடுகின்றன, அல்லது கிங் ஜேம்ஸ் வர்ஷன் சொல்லுகிறபடி, ‘யெகோவா இல்லை’ என்று தன் இருதயத்தில் சொல்லிக்கொண்ட ‘மதிகெட்டவன்’ பற்றி குறிப்பிடுகிறது.
கடவுள் இல்லை என்று மறுதலிக்கும் இந்த மதிகெட்டவன் எப்படிப்பட்ட ஆளாக இருக்கிறான்? அவன் புத்திக்கூர்மையில் பேதை இல்லை. மாறாக, நேவல் என்ற எபிரெய வார்த்தை ஒழுக்க குறைவைச் சுட்டிக்காட்டுகிறது. எபிரெய பேராசிரியர் எஸ். ஆர். ட்ரைவர் த பேரலல் சால்டர் என்பதற்கு எழுதிய குறிப்புரையில், குறைபாட்டுக்கு காரணம், “பகுத்துணர முடியாமை அல்ல, ஆனால் ஒழுக்க மற்றும் மத சம்பந்தமான உணர்வின்மையாக, உணர்வோ அல்லது அறிவு உணர்ச்சியோ முழுவதும் இல்லாமை”யாக இருக்கிறது என்று சொல்கிறார்.
சங்கீதக்காரன் இப்படிப்பட்ட ஒரு மனநிலையின் விளைவாக ஏற்படும் ஒழுக்க சீர்குலைவைத் தொடர்ந்து விவரிக்கிறார்: “அவர்கள் தங்களைக் கெடுத்து, அருவருப்பான கிரியைகளைச் செய்துவருகிறார்கள்; நன்மைசெய்கிறவன் ஒருவனும் இல்லை.” (சங்கீதம் 14:1) டாக்டர் ஹேஸ்டிங்ஸ் சுருக்கிக் கூறுவதாவது: “கடவுள் இவ்வுலகில் இல்லை என்றும் தீமைக்குத் தண்டனை இல்லை என்றும் நம்பிக்கொண்டு, மனிதர்கள் கெட்டுப்போய் அருவருப்பான கிரியைகளைச் செய்கின்றனர்.” தேவபக்தியற்ற நியமங்களை வெளிப்படையாக ஏற்றுக்கொண்டு, குணமுள்ள ஒரு கடவுளை அசட்டை செய்து, அவருக்கு எந்தக் கணக்கையும் கொடுக்க விருப்பமில்லாதவர்களாக இருக்கின்றனர். ஆனால், சங்கீதக்காரன் அவருடைய வார்த்தைகளை 3,000-க்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன்பாக எழுதியபோது இருந்தவிதமாகவே இப்படிப்பட்ட ஒரு சிந்தனை அத்தனை முட்டாள்தனமாயும் அறிவற்றதாயும் இருக்கிறது.
நம்முடைய குணமுள்ள கடவுளிடமிருந்து எச்சரிப்புகள்
இப்பொழுது நம்முடைய ஆரம்பக் கட்டுரையில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கே நாம் திரும்பச் செல்வோம். ஏன் அநேக ஆட்களால் இன்று உலகில் பரவலாக இருந்துவரும் துன்பத்தைத் குணமுள்ள ஒரு கடவுளோடு சம்பந்தப்படுத்திப் பார்க்க முடியவில்லை?
பைபிளில், “தேவனுடய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டு பேசி”ன தகவல் எழுத்து வடிவில் இருக்கிறது. (2 பேதுரு 1:21) குணமுள்ள கடவுளாகிய யெகோவாவைப் பற்றி அது மாத்திரமே நமக்கு வெளிப்படுத்துகிறது. மனித கண்களுக்குப் புலப்படாமல், மனித சிந்தனையை வழிநடத்தி கட்டுப்படுத்துவதில் வல்லவனாக இருக்கும் பொல்லாத ஆளுமையுள்ள பிசாசாகிய சாத்தானைப் பற்றியும்கூட அது நம்மை எச்சரிக்கிறது. நியாயமாகவே, குணமுள்ள ஒரு கடவுளில் நமக்கு நம்பிக்கை இல்லையென்றால், குணமுள்ள ஒரு பிசாசு அல்லது சாத்தானும்கூட இருப்பதை நாம் எவ்வாறு நம்புவோம்?
ஆவியினால் ஏவப்பட்ட அப்போஸ்தலன் யோவான் இவ்வாறு எழுதினார்: ‘பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்டவன் உலகமனைத்தையும் மோசம்போக்குகிறான்.’ (வெளிப்படுத்துதல் 12:9) பின்னால் யோவான் இவ்வாறு எழுதினார்: “நாம் தேவனால் உண்டாயிருக்கிறோமென்றும், உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறதென்றும் அறிந்திருக்கிறோம்.” (1 யோவான் 5:19) இந்தக் கூற்றுகள் இயேசுவின் வார்த்தைகளைப் பிரதிபலிக்கின்றன, இவற்றை யோவான்தானே தன்னுடைய சுவிசேஷத்தில் பதிவு செய்திருக்கிறார்: “இந்த உலகத்தின் அதிபதி வருகிறான், அவனுக்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை.”—யோவான் 14:30.
வேதப்பூர்வமான இந்தப் போதனை இப்பொழுது மக்கள் நம்பும் காரியத்திலிருந்து எவ்வளவு வித்தியாசமாக உள்ளது! “பிசாசைப் பற்றி பேசுவது இன்று முற்றிலும் நாகரிகமற்றதாக உள்ளது. கடவுள் நம்பிக்கையில்லாத நம்முடைய அறிவியல் சகாப்தம் சாத்தானுக்கு பணி ஓய்வை கொடுத்துவிட்டது” என்பதாக கேத்தலிக் ஹெரால்டு சொல்லுகிறது. ஆனால் இயேசுவோ தம்மைக் கொலைசெய்வதில் நோக்கமாயிருந்த மனிதர்களிடம் மிகவும் அழுத்தமாக பின்வருமாறு சொன்னார்: “நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்.”—யோவான் 8:44.
சாத்தானின் வல்லமையைப் பற்றிய பைபிளின் விளக்கம் நியாயமாகவும் புரிந்துகொள்ளத்தக்கதாகவும் இருக்கிறது. பெரும்பாலான ஆட்கள் சமாதானமாகவும் ஒற்றுமையாகவும் வாழ விரும்பியபோதிலும், பகைமை, போர்கள் மற்றும் (பக்கங்கள் 3 மற்றும் 4) டென்பிளேனில் செய்யப்பட்டது போல அர்த்தமற்ற வன்முறையினால் ஏன் இந்த உலகம் வாதிக்கப்பட்டு வருகிறது என்பதை அது தெளிவாக்குகிறது. மேலுமாக, நாம் போராட வேண்டிய சத்துரு சாத்தான் மாத்திரமே இல்லை. பிசாசுகளை அல்லது பேய்களைப்பற்றி—அதாவது மனிதவர்க்கத்தை தவறாக வழிநடத்தவும் தவறாக பயன்படுத்திக்கொள்ளவும் வெகு காலத்துக்கு முன்பே சாத்தானைச் சேர்ந்துகொண்ட பொல்லாத ஆவி சிருஷ்டிகளைப்பற்றி—பைபிள் நமக்கு கூடுதலான எச்சரிப்புகளைக் கொடுக்கிறது. (யூதா 6) இயேசு கிறிஸ்து பல தடவை இந்த ஆவிகளின் வல்லமையை எதிர்ப்பட்டார், அவற்றை அவர் மேற்கொள்ளக்கூடியவராகவும் இருந்தார்.—மத்தேயு 12:22-24; லூக்கா 9:37-43.
மெய்க் கடவுளாகிய யெகோவா இந்தப் பூமியை துன்மார்க்கத்திலிருந்து சுத்திகரித்து கடைசியாக சாத்தான் மற்றும் அவனுடைய பேய்களின் செயல்பாடுகளை முற்றிலும் ஒழித்துவிட நோக்கங்கொண்டிருக்கிறார். யெகோவாவைப் பற்றிய நம் அறிவின் அடிப்படையில், நாம் அவருடைய வாக்குறுதிகளில் உறுதியான விசுவாசத்தையும் நம்பிக்கையையும் வைக்க முடியும். அவர் சொல்கிறார்: “எனக்குமுன் ஏற்பட்ட தேவன் இல்லை; எனக்குப்பின் இருப்பதும் இல்லை. நான், நானே கர்த்தர் [யெகோவா]; என்னையல்லாமல் ரட்சகர் இல்லை.” யெகோவாவை அறிந்து அவரை வணங்கி அவரை சேவிக்கும் அனைவருக்கும் யெகோவா உண்மையிலேயே குணமுள்ள ஒரு கடவுளாக இருக்கிறார். இரட்சிப்புக்காக நாம் அவரை, ஆம் அவரை மாத்திரமே நோக்கியிருக்க முடியும்.—ஏசாயா 43:10, 11.
[பக்கம் 7-ன் படம்]
ஆதியாகமம் 1:1-ஐ ஆவியின் ஏவுதலினால் மோசே எழுதுவதை சித்தரிக்கும் 18-வது நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு செதுக்கப்பட்ட சித்திரம்
[பக்கம் 7-ன் படம்]
From The Holy Bible by J. Baskett, Oxford
[பக்கம் 8-ன் படம்]
இயேசு கிறிஸ்து பேய்களை பல தடவைகள் வெற்றிகொண்டார்