சத்தியத்தின்படி கடவுளை வணங்குதல்
கடவுள் ஏற்றுக்கொள்ளத்தக்க வழிபாடு சத்தியத்தின்மீது ஆதாரமிடப்பட்டிருக்க வேண்டும். (யோவான் 4:23) மெய் வணக்கத்தார் ‘சத்தியத்துக்குத் தூணும் ஆதாரமுமாயிருக்கிற ஜீவனுள்ள தேவனுடைய சபையை’ சேர்ந்தவர்கள் என பைபிள் அடையாளம் காட்டுகிறது. (1 தீமோத்தேயு 3:15) கடவுளுடைய சபையாக இருப்பவர்கள் கடவுளுடைய வார்த்தையை சத்தியமாக நம்புவது மட்டுமல்லாமல், அதற்கு இசைவாக நடக்கிறார்கள், அதை ஆதரிக்கிறார்கள், உலகம் முழுவதும் அதை தெரியப்படுத்துகிறார்கள்.—மத்தேயு 24:14; ரோமர் 10:9-15.
பைபிள் கல்வியை போதிப்பதற்கு யெகோவாவின் சாட்சிகள் பெயர் பெற்றவர்கள். இப்பொழுது அந்த வேலை 200-க்கும் அதிகமான நாடுகளில் செய்யப்பட்டு வருகிறது. அவர்கள் பைபிளைப் படித்து, அதை சத்தியம் என்றே கற்பிக்கின்றனர்—மனித தத்துவங்களால் கலப்படம் செய்வதில்லை. பைபிள் அடிப்படையிலான அவர்களுடைய போதனைகளை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? யெகோவாவின் சாட்சிகளுக்கு விரோதமாக புரளிகள் இருப்பதால், அநேகர் அவர்களுக்குச் செவிகொடுக்க தயங்குகின்றனர். ஆனால் அவர்கள் பிரசங்கிப்பது சத்தியமா இல்லையா என்பதை நேர்மையான மக்கள் தாங்களாகவே தீர்மானிக்கும்படி சாட்சிகள் அழைப்புவிடுக்கின்றனர். இப்படிப்பட்ட இன்றியமையாத தீர்மானத்தை, காற்றுவாக்கில் கேள்விப்பட்டதன் அடிப்படையில் செய்யக் கூடாது. யெகோவாவின் சாட்சிகளுடைய போதனைகளை தனிப்பட்ட விதமாய் ஆராய்ந்திருக்கிற பலர் வெகுவாய் பயனடைந்திருக்கின்றனர்.
சத்தியத்தைப் பற்றிய அறிவு பயத்தை ஒழித்துக்கட்டுகிறது
உதாரணமாக, ஏயூகேனியாவின் விஷயத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அவள் கத்தோலிக்க வீட்டில் கண்டிப்புடன் வளர்க்கப்பட்டிருந்த ஒரு பெண். 1979-ல், போப்பின் மெக்ஸிகோ விஜயத்தின்போது அதற்கான ஏற்பாடுகளைக் கவனித்துக்கொண்டவர்களில் அவளுடைய அப்பாவும் ஒருவர். ஏயூகேனியா தன் நண்பர்களைப் பார்க்கச் சென்றபோது, யெகோவாவின் சாட்சிகளைச் சந்திக்க நேரிட்டது. அவர்களுடைய உதவியால், பைபிள் என்ன சொல்கிறது என்பதை மிகவும் கவனமாய் அலசிப்பார்க்க ஆரம்பித்தாள். அவள் சொல்கிறாள்: “முதலில் பயந்து நடுங்கினேன். சத்தியத்தை என்னவோ கண்டுபிடித்திருந்தேன்! ஆனால் இத்தனை காலம் நம்பி வந்ததெல்லாம் தவறு என்றல்லவா அர்த்தம். என்னுடைய வீட்டார், நண்பர்கள், எனக்குப் பிரியமானவர்கள்—எல்லாருடைய நம்பிக்கையுமே தவறு. ஒரே பதற்றமாக இருந்தது. நான் புதிதாக கண்டுபிடித்திருந்த சத்தியத்தைப் பற்றி என்னுடைய வீட்டார் கேள்விப்பட்டால் என்ன செய்வார்களோ என்ற சதா யோசனை வேறு. நாளாக ஆக, என்னை வாட்டியெடுத்த இந்த உணர்ச்சிகளை யெகோவாவின் உதவியோடு சமாளிக்க ஆரம்பித்தேன். ஒருநாள் குடும்ப நண்பர் ஒருவரிடம் மனம்விட்டு பேச முடிவுசெய்தேன். அவர் ஒரு தியாலஜி புரொபஸர். சத்தியத்தைக் கண்டுபிடிப்பதற்கான என்னுடைய ஆசையை அவரிடம் சொன்னேன். அவர் சொன்னார், ‘நீ சத்தியத்தைத் தெரிந்துகொள்ளணுமா, யெகோவாவின் சாட்சிகளிடம் போ.’”
ஏயூகேனியா பயந்தபடியே நடந்தது, அவளுடைய வீட்டார் அவளை வீட்டைவிட்டு துரத்திவிட்டார்கள். சாட்சிகளோ அவளுக்குத் தொடர்ந்து ஆவிக்குரிய உதவியை கொடுத்து வந்தார்கள். அவள் சொல்கிறாள்: “சத்தியத்தின் சார்பாக துணிந்து நிற்க எனக்கு பலம் கிடைத்தது. இதற்காக போராடுவது தகுதியானதுதான் என்று உணர்ந்தேன். யெகோவாவின் சாட்சிகள் எனக்கு அளித்த ஆதரவை மறக்கவே முடியாது. கிறிஸ்தவ சபையில் எல்லாரும் என்னை அன்பாக நடத்தினார்கள். கடவுளுடைய அமைப்போடு நெருங்கி வந்தேன்; இதனால், தன்னந்தனியாக எப்படி சமாளிக்கப்போகிறேனோ என்ற பயம் விலகியது.”
மற்றொரு உதாரணத்தை கவனியுங்கள். அது சாப்ரீனா என்ற பெண்ணைப் பற்றியது. அவளது வீட்டில், பைபிளை தவறாமல் குடும்பமாக கலந்தாலோசிப்பது வழக்கம். சொல்லப்போனால், அவர்கள் ஒரு வகையான ‘குடும்ப மதத்தை’ உருவாக்கினார்கள். பல்வேறு மதத்தைச் சேர்ந்தவர்களுடன் பழகி அவர்களுடைய தவறுகளை அம்பலப்படுத்துவதே அவளுடைய பழக்கம். ஒரு சமயம் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவர் பைபிள் படிப்பு நடத்த முன்வந்தார்; அவர்களுடைய நம்பிக்கைகளை தவறென நிரூபிக்கும் எண்ணத்தோடு அந்தப் படிப்பை சாப்ரீனா உடனடியாக ஏற்றுக்கொண்டாள். அவள் சொல்கிறாள்: “ஒரு வருஷத்திற்கும் மேல் படித்தப் பிறகு, ‘என்னுடைய சத்தியத்தை’ இழந்துபோவேனோ என்று பயந்தேன். நான் தொடர்பு கொண்டிருந்த பல மதங்களின் போலித்தனத்தை என்னால் எளிதில் அம்பலப்படுத்த முடிந்தது. ஆனால் யெகோவாவின் சாட்சிகளுடைய விஷயத்தில் ஒன்றும் பலிக்கவில்லை.”
சாப்ரீனாவின் பயம், யெகோவாவின் சாட்சிகளுடன் பைபிள் படிப்பதை நிறுத்திவிடும்படி செய்தது. ஆனால் அவள் ஆவிக்குரிய விதத்தில் வெறுமையாக உணர்ந்தாள். ஆகவே அந்தப் படிப்பை மீண்டும் தொடர தீர்மானித்து, கடைசியில் புதிதாக கண்டுபிடித்த இந்தச் சத்தியத்தை ஏற்றுக்கொண்டாள். சாப்ரீனா தான் கற்றுக்கொண்டதை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்பும் நிலைக்கு முன்னேறினாள். யெகோவாவின் சாட்சிகளோடு சேர்ந்து வீட்டுக்கு வீடு ஊழியம் செய்யவும் அவர்களிடம் அனுமதி கேட்டாள். சாப்ரீனா விளக்குகிறாள்: “யெகோவாவின் சாட்சிகளுடன் சேர்ந்து பிரசங்கிப்பதற்கு அனுமதி கொடுப்பதற்கு முன்பு, என்னிடம் கேட்டார்கள்: ‘நீங்கள் உண்மையிலேயே யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக விரும்புகிறீர்களா?’ ‘இல்லை!’ என்று நான் பதிலளித்தேன். மீண்டும் பயம் என்னை கவ்விக்கொண்டது.” கடைசியாக, தொடர்ந்து எல்லா கூட்டங்களுக்கும் ஆஜராகி, கடவுளுடைய ஜனங்கள் எவ்வாறு பைபிள் நியமங்களைப் பின்பற்றுகிறார்கள் என்பதை உன்னிப்பாக கவனித்த பிற்பாடு, இதுதான் உண்மையிலேயே சத்தியம் என்ற முடிவுக்கு வந்தாள் சாப்ரீனா. அவள் முழுக்காட்டப்பட்டு, இப்பொழுது ஒரு முழுநேர பிரசங்கியாக இருக்கிறாள்.
ஏன் இவ்வளவு வித்தியாசம்?
சிலர் கேட்கலாம், ‘ஏன் யெகோவாவின் சாட்சிகளுடைய போதனைகள் மற்ற மதங்களிலிருந்து ரொம்ப வித்தியாசமாக இருக்கிறது?’ சாட்சிகள் என்ன நம்புகிறார்கள் என்பதை சற்று சுருக்கமாக தெரிந்துகொள்வது, அவர்கள் உண்மை மனமுள்ள கிறிஸ்தவர்கள், பைபிளைக் கவனமாக பின்பற்றும் மாணாக்கர்கள் என்பதை அறிந்துகொள்ள உங்களுக்கு உதவும். அவர்களுடைய அடிப்படை நம்பிக்கைகளைப் பற்றிய சுருக்கமான தகவல் மேலே கொடுக்கப்பட்டுள்ளது; அவற்றை உங்களுடைய சொந்த பைபிளில் பார்க்கும்படி நாங்கள் உற்சாகப்படுத்துகிறோம்.
யெகோவாவின் சாட்சிகள் என்ன நம்புகிறார்கள் என்பதையும் பைபிள் போதிப்பதை எவ்வாறு பின்பற்றுகிறார்கள் என்பதையும் கூர்ந்து ஆராய்வதன் மூலம், சத்தியம் தரும் விடுதலையால் நீங்கள் ஆசீர்வதிக்கப்படுவீர்கள். (யோவான் 17:17) சத்தியத்திற்காக பயப்படவேண்டிய அவசியமே இல்லை. இயேசுவின் வாக்குறுதியை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்: ‘சத்தியத்தை அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்.’—யோவான் 8:32.
[பக்கம் 6-ன் பெட்டி]
யெகோவாவின் சாட்சிகளைப் பற்றிய சில அடிப்படை நம்பிக்கைகள்
◯ யெகோவாவே சர்வ வல்லமையுள்ள கடவுள். பைபிளின் பூர்வ மூலப் பிரதிகளில் அவருடைய தனிப்பட்ட பெயர் 7,000 தடவைக்கும் மேல் காணப்படுகிறது.—சங்கீதம் 83:17.
◯ இயேசு கிறிஸ்து கடவுளுடைய குமாரன், மனிதவர்க்கத்திற்காக தம்முடைய ஜீவனைத் தர பூமிக்கு வந்தார். (யோவான் 3:16, 17) சுவிசேஷங்களில் உள்ளபடி, இயேசு கிறிஸ்துவின் போதனைகளை யெகோவாவின் சாட்சிகள் பின்பற்றுகிறார்கள்.
◯ யெகோவாவின் சாட்சிகள் என்ற இந்தப் பெயர் ஏசாயா 43:10-ன் (திருத்திய மொழிபெயர்ப்பு) அடிப்படையிலானது, அது இவ்வாறு சொல்கிறது: “நீங்களே என் சாட்சிகள், . . . இது யெகோவாவின் திருவாக்கு.”
◯ “பரமண்டல ஜெபத்தில்” ஜனங்கள் ஜெபிக்கிற அந்த ராஜ்யம், ஒரு பரலோக அரசாங்கம்; பைபிள் வாக்குறுதி அளிக்கும் பரதீஸை கொண்டுவருவதற்கு இந்த உலகிலுள்ள எல்லா துன்பத்தையும் வேதனையையும் அது விரைவில் நீக்கிவிடும்.—ஏசாயா 9:6, 7; தானியேல் 2:44; மத்தேயு 6:9, 10; வெளிப்படுத்துதல் 21:3, 4.
◯ கடவுளுடைய சித்தத்தைச் செய்யும் அனைவரும் அந்த ராஜ்யத்தின் ஆசீர்வாதங்களை என்றென்றும் அனுபவிக்கும் வாய்ப்பை பெறுவர்.—யோவான் 17:3; 1 யோவான் 2:17.
◯ பைபிள் சொல்வதற்கு இசைய கிறிஸ்தவர்கள் தங்களுடைய நடத்தையை மாற்றியமைக்க வேண்டும். நேர்மையாக இருப்பதற்கும், சுத்தமான, நெறிதவறாத வாழ்க்கை வாழ்வதற்கும், தங்களுடைய அயலகத்தாரிடம் அன்புகூருவதற்கும் முயல வேண்டும்.—மத்தேயு 22:39; யோவான் 13:35; 1 கொரிந்தியர் 6:9, 10.
[பக்கம் 5-ன் படம்]
200-க்கும் அதிகமான நாடுகளிலுள்ள மக்களுக்கு யெகோவாவின் சாட்சிகள் பைபிள் சத்தியத்தை தெரியப்படுத்துகிறார்கள்