பைகள் அந்தக் காலத்தில்
இன்றைய யெகோவாவின் சாட்சிகள் சொத்துபோல பாவிக்கும் பொருள்களில் பைகளும் அடங்கும். கிறிஸ்தவ கூட்டங்களில் உபயோகிக்கும் புத்தகங்களைப் பத்திரமாக எடுத்துச் செல்லவும் உலகளாவிய பிரசங்க வேலையில் விநியோகிக்க பிரசுரங்களை நேர்த்தியாக கொண்டு செல்லவும் பைகள் உதவுகின்றன. பைபிள் கால பைகளைப் பற்றி என்ன? அந்தளவு பரவலாக புழக்கத்தில் அவை இருந்தனவா? அவை பார்வைக்கு எப்படி இருந்தன?
அந்தக் காலத்தில் பைகள் எத்தனையோ விதங்களில் பயன்பட்டன. அவை பல்வேறு விலங்குகளின் தோலினாலும் பின்னமுடிந்த பொருட்களாலும் தயாரிக்கப்பட்டன. தானியங்கள், வெவ்வேறு உணவுப் பொருட்கள், எடைக் கற்கள், விலையுயர்ந்த பொருட்கள், தங்க, வெள்ளிக் கட்டிகள், நாணயங்கள் என எதை வேண்டுமானாலும் கொண்டு செல்ல பயன்பட்டன; ஏன், தண்ணீரையும் திராட்சை ரசத்தையும்கூட அதில் கொண்டு சென்றனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!—யோசுவா 9:4; மத்தேயு 9:17.
எபிரெய மொழியில் வார்த்தைகளுக்கு பஞ்சமேயில்லை. எனவே பைகள், பர்ஸுகள், சிறு பைகள், மூட்டைகள் இவற்றை விவரிக்க விதவிதமான வார்த்தைகள் உபயோகிக்கப்பட்டன. ஆங்கில வார்த்தையான சாக் (சாக்குப்பை) சேக் என்ற எபிரெய வார்த்தையிலிருந்தே பிறந்தது; சணல் துணியைக் குறிப்பதற்கும், உணவும் தானியங்களும் வைக்கப்படும் சணலால் செய்யப்பட்ட சாக்குப் பைகளை குறிப்பதற்கும் பைபிள் இந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறது. இந்த வார்த்தையும், “பரப்பி வை” என்ற அர்த்தத்தைக் கொடுக்கும் வினைச்சொல்லிலிருந்து வரும் அம்டேசாத் என்ற எபிரெய வார்த்தையும் யோசேப்பின் சகோதரர்கள் எகிப்துக்குச் சென்றதைப் பற்றிய பதிவில் ஏறக்குறைய ஒரே அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. எகிப்திலிருந்து தானியத்தை கொண்டு செல்ல உபயோகிக்கப்பட்ட பைகளுக்கு இந்த இரண்டு வார்த்தைகளுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அம்டேசாத் என்பது பை எந்த வடிவில் இருந்தது என்பதைக் குறிப்பிடுவதற்கும் சேக் என்பது எதிலிருந்து அந்தப் பை தயாரிக்கப்பட்டது என்பதை விவரிப்பதற்கும் பயன்படுத்தப்பட்டதாக தோன்றுகிறது.—ஆதியாகமம் 42:25, 27, 28, 35.
பை—தாவீதுடையதும் நாகமானுடையதும்
கோலியாத்தை எதிர்கொள்ள தாவீது தயாராகையில் மேய்ப்பருக்குரிய தன் பையில் ஐந்து கூழாங்கற்களை எடுத்துக்கொண்டார். இது தோளில் தொங்கவிடும் (அடைப்ப) பையாக இருக்கலாம். (1 சாமுவேல் 17:40) இங்கு பயன்படுத்தப்பட்டுள்ள கேலை என்ற எபிரெய வார்த்தை களிமண்ணால், மரத்தால், உலோகத்தால் அல்லது தோலால் செய்யப்பட்ட ஒரு கலத்தை அல்லது பாத்திரத்தையும் குறிக்கலாம்.
சீரியாவின் படைத் தலைவனாகிய நாகமான் தனக்கு வந்த கொடிய குஷ்டரோகத்திலிருந்து சுகமடைந்ததைப் பற்றி குறிப்பிடும் பதிவில் பேராசை பிடித்த கேயாசிக்கு, “இரண்டு தாலந்து வெள்ளியை இரண்டு பைகளிலே இரண்டு அலங்கார வஸ்திரங்களோடே கட்டி அவனுக்கு முன்பாகச் சுமந்துபோகத் தன் வேலைக்காரரான இரண்டுபேர்மேல் வைத்தான்” என நாம் வாசிக்கிறோம். (2 இராஜாக்கள் 5:23, திருத்திய மொழிபெயர்ப்பு) இங்கு பை என்பதற்கு பயன்படுத்தப்பட்டிருக்கும் எபிரெய வார்த்தை சாரிட். ஒரு தாலந்து என்பது ஏறக்குறைய 34 கிலோவுக்குச் சமம்; எனவே, ஒரு தாலந்தையும் ஒரு மாற்று வஸ்திரத்தையும் கொள்ளும் அளவுக்கு அந்தச் சாக்கு பெரியதாக இருந்திருக்கும் என்பது புரிந்துகொள்ளத்தக்கதே. ஒவ்வொரு சாக்கையும் நிறைக்கும் போது அது ஒருவர் சுமந்து செல்லும் அளவுக்கு கனமாக இருந்திருப்பதைக் குறித்து ஆச்சரியப்பட வேண்டியதில்லை. சாரிட் எப்போதுமே மிகப் பெரிய பையைக் குறிப்பிடுவதற்கு பயன்படுத்தப்படவில்லை. ஏனெனில் கர்வம்பிடித்த சீயோன் குமாரத்திகள், தங்கள் பகட்டான உடைகளுடன் சிறு பைகளையும் வைத்திருந்ததைக் குறிப்பிடுவதற்கு இதே வார்த்தையே பயன்படுத்தப்பட்டிருக்கிறது.—ஏசாயா 3:16, 22, தி.மொ.
வியாபாரியின் பை
அந்தக் காலத்து வியாபாரிகள் பயன்படுத்திய பை, சமீப காலம் வரைக்கும் கீழை நாடுகளில் வியாபாரிகள் உபயோகித்து வந்த பைகளைப் போலவே இருந்தது. எபிரெயுவில் இதற்கு கிஸ் என்று பெயர். சமீப கால பைகளின் அடிப்படையில் பார்க்கும் போது, அந்தப் பைகள், நெய்த பருத்தி, வளைத்து பின்னிய நாணல் புற்கள், அல்லது தோலில் செய்யப்பட்டிருக்கலாம். பொருள்களையோ, தானியங்களையோ, அல்லது விலையுயர்ந்த உலோகங்களையோ நிறுத்துக் கொடுப்பதற்கு வியாபாரிகளுக்குத் தேவைப்பட்ட எடைக் கற்களை கொண்டு செல்ல இவை பயன்படுத்தப்பட்டன. கிஸ்ஸைப் பற்றியதில் வியாபாரத்தில் ஏமாற்றுவதற்கு எதிராக மோசேயின் நியாயப்பிரமாணம் கொடுத்த எச்சரிக்கை குறிப்பிடுவதாவது: “உன் பையிலே பெரிதும் சிறிதுமான பலவித நிறை கற்களை வைத்திருக்க வேண்டாம்.” (உபாகமம் 25:13) “கள்ளத்தராசும் கள்ளப் படிக்கற்களுள்ள பையும் இருக்கும்போது, அவர்களைச் சுத்தமுள்ளவர்களென்று எண்ணுவேனோ?” என தம்முடைய தீர்க்கதரிசியின் மூலம் யெகோவா கேட்டார். (மீகா 6:11) இந்தக் கிஸ், பணத்தையும் விலைமதிப்பு மிக்கவற்றையும் கொண்டு செல்லும் பையாகவோ பணப் பையாகவோகூட பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.—ஏசாயா 46:6.
கட்டப்பட்ட, சீல் வைத்த மூட்டைகள்
ட்செரோர் என்ற எபிரெய வார்த்தை “கட்டி வை” என்ற அர்த்தத்தைக் கொடுக்கும் வினைச்சொல்லிலிருந்து வருகிறது. இது, சாதாரண சுருக்குப்பைப் போன்றது. அதில் நூலையோ கயிறையோ கட்டுவதற்கு பயன்படுத்துகிறார்கள். இதனால் அதை ஒரு சிறிய மூட்டையைப் போல அல்லது பையினுடைய வாயை சேர்த்து வைத்து கட்டுவதை விவரிக்கிறது. இப்படிப்பட்ட பைகளில் தான் யோசேப்பு தன் சகோதரர்கள் வாங்கிச் சென்ற தானியத்திற்கான பணத்தை திரும்பவும் வைத்து கட்டியிருந்தார்; ஒவ்வொரு சாக்குப் பையிலும் “பணமுடிப்பு” இருந்ததாக அந்தப் பதிவு குறிப்பிடுகிறது.—ஆதியாகமம் 42:35.
ஆலய காணிக்கைப் பெட்டிக்கு வரும் பணம் இப்படிப்பட்ட சாக்குகளிலேயே கட்டப்பட்டன; ஆனால் ஒரே அளவுள்ள மூட்டைகளாக கட்டப்பட்டன. அந்தக் காலத்தில் வியாபார கொடுக்கல் வாங்கல் விவகாரங்கள் பெரும் தொகையை உட்படுத்தின; நாணயங்கள் சில சமயங்களில் நிறுக்கப்பட்டு அத்தகைய மூட்டைகளிலோ சாக்குகளிலோ போட்டு கட்டப்பட்டன. இப்படி கட்டப்பட்ட முடிச்சுகளில் சீல் வைக்கப்பட்டது. தேவைப்பட்டால், எழுதிக் கொடுத்த பின்னர் ஒருவர் கையிலிருந்து மற்றொருவர் கைக்கு மாறலாம். உடைக்கப்படாத சீல் அதிலிருந்த வெள்ளி, தங்கம் அல்லது மற்ற உலோகங்கள் பத்திரமாக இருப்பதற்கு உறுதியளித்தது. யோபு 14:17-ல் இத்தகைய வர்ணனையைத் தான் யோபு உபயோகித்து கடவுளிடம் சொல்கிறார்: “என் மீறுதல் ஒரு கட்டாகக் கட்டப்பட்டு முத்திரை போடப்பட்டிருக்கிறது, என் அக்கிரமத்தை ஒருமிக்கச் சேர்த்தீர்.” தாவீதைக் கொல்வதற்கு எந்த எதிரியாவது அவரைப் பின்தொடர்ந்தால் அவருடைய “தேவனாகிய கர்த்தரின் ஆதரவில் இருக்கிற ஜீவனுள்ளோருடைய கட்டிலே [அவருடைய உயிர்] கட்டப்பட்டிருக்கும்” என்று சொல்வதன்மூலம் யெகோவா நிச்சயம் தாவீதைப் பாதுகாப்பார் என்பதில் தனக்கிருக்கும் நம்பிக்கையை அபிகாயில் வெளிப்படுத்தினாள்.—1 சாமுவேல் 25:29.
பர்ஸுகள்—கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில்
பர்ஸுகள், கச்சைப் பைகள், உணவுப் பைகள் என அநேகத்தைப் பற்றி கிறிஸ்தவ கிரேக்க வேதாகமம் விலாவாரியாக குறிப்பிடுகிறது. பர்ஸ் என்பது பணம் வைக்கும் பர்ஸையோ சிறு சுருக்குப் பையையோ குறிக்கலாம்; தங்கத்தை, வெள்ளியை, தாமிரத்தை, நாணயத்தை அல்லது வேறு பொருள்களைக் கொண்டு செல்ல ஆண்களும் பெண்களும் இதைப் பயன்படுத்தினர். (லூக்கா 10:4) பெண்கள் வேலைப்பாடு மிக்க ஆடம்பரமான பர்ஸுகளையோ ஹேண்ட் பேக்கையோ உபயோகித்தனர்; அவை ஒருவேளை நீளமானவையாய் வட்ட வடிவில் இருந்திருக்கலாம். சாரிட், கிஸ் என்ற எபிரெய வார்த்தைகள் இத்தகைய பர்ஸைக் குறிப்பிடவே பயன்படுத்தப்பட்டன. (ஏசாயா 3:22; 46:6, தி.மொ.) பண்டைய காலத்தில் தோல், பின்னிய நாணல்கள், அல்லது பருத்தி ஆகியவற்றினால் பர்ஸுகள் செய்யப்பட்டன. அவற்றின் வாய் பகுதியை சுருக்கிக் கட்ட தோல் வார்கள் அல்லது கயிறுகள் பயன்படுத்தப்பட்டன.
யூதேயாவில் பிரசங்கிக்கும்படி தம்முடைய சீஷர்களை இயேசு அனுப்பினார்; அந்தப் பயணத்தில் கச்சைப் பையையோ உணவுப் பையையோ தங்களுடன் எடுத்துச் செல்ல வேண்டாம் என்றும் வழக்கம்போல உடன் இஸ்ரவேலர்கள் அவர்களை உபசரித்து கவனித்துக் கொள்ளும்படி யெகோவா பார்த்துக் கொள்வார் என்றும் அவர் சொன்னார். (மத்தேயு 10:9, 10, NW) கச்சைப் பை (நிஜமாகவே ‘கச்சை’; கிரேக்கில் ஜோனி) பணம் வைக்கும் ஒருவித கச்சை அல்லது பெல்ட். இடைக் கச்சையில் பணத்தை எடுத்துச் செல்வதற்கு வசதியாக ஒரு குழிவான இடம் இருக்கும். அல்லது துணியால் செய்யப்பட்ட மடிப்புகள் உள்ள இடைக் கச்சையாக இருக்கையில் அந்த மடிப்புகளுக்கு இடையில் பணத்தை வைத்துக் கொள்வர்.
பீரா என்ற கிரேக்க வார்த்தையே உணவுப் பை என்பதாக மொழிபெயர்க்கப்படுகிறது; தோள்களில் சுமந்து செல்ல வசதியான அதைப் போன்ற ஒன்றையே பயணிகள் உபயோகித்தனர். இத்தகைய மேய்ப்பர்கள் உபயோகிக்கும் பையை தாவீதும் உபயோகித்தார். உணவு, உடை, இன்னும் மற்ற பொருள்களை அதில் கொண்டு செல்லலாம்.
காலத்தால் அழியாத பர்ஸுகள்
“முத்துகளைப் பார்க்கிலும் [“பை நிறைய உள்ள,” NW] ஞானத்தின் விலை உயர்ந்தது” என்பதை இன்று லட்சக்கணக்கானோர் உணர்ந்திருக்கின்றனர். (யோபு 28:18) இந்த ஞானத்தை மற்றவர்களும் பெற, யெகோவாவின் சாட்சிகள், கிறிஸ்தவ சுவிசேஷ ஊழியத்தில் பயனளிக்கும் விதத்தில் தங்கள் பைகளையும் பர்ஸுகளையும் உபயோகிக்கின்றனர். சங்கீதக்காரன் முன்னறிவித்ததையே அவர்கள் செய்கின்றனர், “[பை நிறைய] அள்ளித்தூவும் விதையைச் சுமக்கி”றார்கள்; அதாவது, கடவுளுடைய ராஜ்யம் பூங்காவனம் போன்ற நிலைமையை இப்பூமியில் மீண்டும் தலைதூக்க வைக்கும் என்ற சந்தோஷமான செய்தி அடங்கிய கடவுளுடைய சத்திய வசனத்தை அவர்கள் எல்லாருக்கும் கொண்டு செல்கின்றனர். சத்தியத்தைத் தேடுபவர்கள் கடவுளுடைய ஞானத்தை தங்களுடையதாய் ஆக்கிக் கொள்ளும்போது தங்கள் பிரயாசத்தின் பலனை “கெம்பீரத்தோடே” அறுவடை செய்வார்கள்.—சங்கீதம் 126:6.
ஆவிக்குரிய காரியங்களின் ஒப்பற்ற மதிப்பை வலியுறுத்துபவராக, “பழமையாய்ப் போகாத பணப்பைகளையும் குறையாத பொக்கிஷத்தையும் பரலோகத்திலே உங்களுக்குச் சம்பாதித்துவையுங்கள்” என இயேசு தம்மைப் பின்பற்றுபவர்களுக்குக் கூறினார். பர்ஸோ, பையோ, சாக்குப் பையோ, மூட்டையோ நிரம்பி வழியும் அளவுக்குக் கிடைக்கும் பரலோக பொக்கிஷம் உண்மையான பாதுகாப்பையும் கொடுக்கும், நித்தியத்திற்கும் நிலைத்திருக்கும்.—லூக்கா 12:33.