சிரிலும் மெத்தோடியஸும் எழுத்துக்களை உருவாக்கிய பைபிள் மொழிபெயர்ப்பாளர்கள்
“எங்கள் நாட்டு மக்கள் ஞானஸ்நானம் பெற்றுவிட்டனர், ஆனாலும் எங்களுக்குப் போதிக்க யாருமில்லை. எங்களுக்கு கிரேக்கும் புரியாது, லத்தீனும் புரியாது. . . . எழுத்துக்களும் தெரியாது, அவற்றின் அர்த்தமும் தெரியாது; ஆகவே வேதாகமத்திலுள்ள வார்த்தைகளையும் அவற்றின் அர்த்தத்தையும் சொல்லி கொடுக்க போதகர்களை அனுப்பி வையுங்கள்.”—ராஸ்டிஸ்லாவ், மொராவியா இளவரசன், பொ.ச. 862.
இன்று ஸ்லாவிய மொழிகளைப் பேசும் 43.5 கோடிக்கும் அதிகமானோருக்கு அவரவர் மொழியில் பைபிள்கள் உள்ளன.a இதில் 36 கோடி பேர் சிரிலிக் எழுத்துக்களைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் 12 நூற்றாண்டுகளுக்கு முன்னால் இவர்களுடைய மூதாதையர் பேசிய மொழிக்கு எழுத்து வடிவமே இல்லை, அதற்கு எழுத்துத் தொகுதியும் இல்லை. அண்ணன் தம்பிகளான சிரிலும் மெத்தோடியஸும் சேர்ந்து இந்த நிலைமையையே மாற்றிவிட்டனர். இந்த இரண்டு சகோதரர்களின் துணிச்சலான, புதுமையான முயற்சி பைபிளை பாதுகாப்பதிலும் அது எல்லாருக்கும் கிடைக்கும்படி செய்வதிலும் எந்தளவுக்கு வரலாற்றில் சாதனை படைத்திருக்கிறது என்பதை பைபிளை நேசிப்பவர்கள் புரிந்துகொள்வர். இந்த சகோதரர்கள் இருவரும் உண்மையில் யார், இவர்கள் எதிர்ப்பட்ட இடையூறுகள் என்ன?
“தத்துவஞானி”யும் கவர்னரும்
சிரிலும் (பொ.ச. 827-869, இயற்பெயர் கான்ஸ்டன்டைன்) மெத்தோடியஸும் (பொ.ச. 825-885) கிரீஸிலுள்ள தெசலோனிகாவில் உயர் குடியில் பிறந்தனர். தெசலோனிகாவில் அப்போது இரண்டு மொழிகள் பேசப்பட்டு வந்தன; அங்கு வசித்தவர்கள் கிரேக்க மொழியையும் ஒரு வகை ஸ்லாவிய மொழியையும் பேசினர். அநேக ஸ்லாவியர் மத்தியில் வாழ்ந்ததாலும், சுற்றிலுமிருந்த ஸ்லாவிய இனத்தவரோடு நெருங்கிய கூட்டுறவு வைத்திருந்ததாலும் தெற்கத்திய ஸ்லாவியர்களின் மொழியை நன்றாக அறிந்துகொள்ள சிரிலுக்கும் மெத்தோடியஸுக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கலாம். அவர்களுடைய அம்மாவும் ஸ்லாவிய இனத்தை சேர்ந்தவரே என்பதாக மெத்தோடியஸின் வாழ்க்கை சரிதையை எழுதிய ஒருவர் குறிப்பிடுகிறார்.
அப்பா இறந்த பிறகு, சிரில் பைசாண்டிய பேரரசின் தலைநகரான கான்ஸ்டான்டிநோப்பிளுக்கு சென்றார். அங்கே அரச குலத்தார் செல்லும் பல்கலைக்கழகத்தில் அவர் படித்தார், பிரபல கல்விமான்களோடு பழகினார். ஆசிய கலாச்சாரமிக்க இடத்தில் ஹேகியா சோஃபியா என்ற பிரசித்தி பெற்ற சர்ச் கட்டடத்திலிருந்த நூலகத்தின் நூலகராகவும், பின்னர் தத்துவவியல் பேராசிரியராகவும் பணியாற்றினார். அவருடைய கல்வி அறிவே சிரிலுக்கு தத்துவஞானி என்ற பட்டப்பெயரை பெற்று தந்தது.
இதற்கிடையில் மெத்தோடியஸ் தன் அப்பாவைப் போலவே அரசியல் நிர்வாகத்தில் பணியைத் தொடர்ந்தார். பைசாண்டிய மாகாணத்தில் பெரும்பாலான ஸ்லாவியர் வாழ்ந்த எல்லைப் பகுதிக்கு அவர் கவர்னராக நியமிக்கப்பட்டார். ஆனால், அவர் ஆசியா மைனரிலுள்ள பித்தினியாவிலிருந்த துறவி மடத்தில் சேர்ந்துவிட்டார். பொ.ச. 855-ல், சிரிலும் அம்மடத்தில் அவரோடு சேர்ந்துகொண்டார்.
பொ.ச. 860-ல் கான்ஸ்டான்டிநோப்பிளின் திருச்சபை மதகுரு அயல் நாட்டு பணிக்காக இந்த இரண்டு சகோதரர்களையும் அனுப்பி வைத்தார். இவர்களை, கருங்கடலுக்கு வடகிழக்கே வாழ்ந்துவந்த கசார் இனத்தவரிடம் அனுப்பி வைத்தார். இந்த இனத்தவர், இஸ்லாமிய, யூத, கிறிஸ்தவ மதங்களில் எதை தேர்ந்தெடுப்பது என தெரியாமல் குழப்பத்தில் இருந்த சமயம் அது. அங்கு செல்லும் வழியில் கிரிமியாவில் கெர்சோனிஸ் என்ற இடத்தில் சிரில் கொஞ்ச காலம் தங்கினார். அங்கேதான் இவர் எபிரெயு, சமாரிய மொழிகளைக் கற்று எபிரெய இலக்கண புத்தகம் ஒன்றை கசார் மக்களின் மொழியில் மொழிபெயர்த்தார் என்பது சில கல்விமான்களின் கருத்து.
மொராவியாவிலிருந்து வந்த அழைப்பு
பொ.ச. 862-ல் மொராவிய (இன்று, கிழக்கத்திய செக்கியா, மேற்கத்திய ஸ்லோவாகியா, மேற்கத்திய ஹங்கேரி) இளவரசன் ராஸ்டிஸ்லாவ், பைசாண்டிய பேரரசர் மூன்றாம் மைக்கேலிடம் ஆரம்ப பாராவிலுள்ள அந்த வேண்டுகோளை விடுத்தார். அதாவது வேதாகமத்தைக் கற்றுக்கொடுக்க போதகர்களை அனுப்பி வைக்கும்படி கேட்டிருந்தார். மொராவியாவிலிருந்த ஸ்லாவிய மொழிகள் பேசும் குடியினர் ஏற்கெனவே கிழக்கு ஃப்ரான்கிய ராஜ்யத்திலிருந்து (இப்போது ஜெர்மனி, ஆஸ்திரியா) வந்த மிஷனரிகளிடமிருந்து சர்ச்சின் போதனைகளைக் கேட்டிருந்தனர். ஆனால் ராஸ்டிஸ்லாவ், ஜெர்மானிய இனத்தவரின் அரசியல், மத சம்பந்தமான செல்வாக்கைக் குறித்து கவலைப்பட்டார். எனவே கான்ஸ்டான்டிநோப்பிளுடன் மத பிணைப்பை ஏற்படுத்திக்கொண்டால், அரசியல் ரீதியிலும் மத ரீதியிலும் தன் நாட்டின் சுயாட்சியை காத்துக்கொள்ள முடியும் என நம்பினார்.
சிரிலையும் மெத்தோடியஸையும் மொராவியாவுக்கு அனுப்பி வைக்க பேரரசர் தீர்மானித்தார். கல்வியிலும், போதிப்பதிலும், மொழியிலும் கரைகண்ட இந்த இரண்டு சகோதரர்கள் இந்தப் பணிக்கு ஏக பொருத்தமானவர்களாக இருந்தனர். மொராவியாவுக்கு இவர்களை அனுப்பி வைக்க பேரரசர் இவர்களிடம் இவ்வாறு சொன்னதாக ஒன்பதாவது நூற்றாண்டைச் சேர்ந்த வாழ்க்கை சரிதை எழுத்தாளர் எழுதினார்: “உங்கள் இருவருக்குமே சொந்த ஊர் தெசலோனிகா. தெசலோனிகாவைச் சேர்ந்த அனைவரும் சுத்தமான ஸ்லாவிய மொழி பேசுகிறவர்கள்.”
எழுத்துக்களும் பைபிள் மொழிபெயர்ப்பும் உருவாகின்றன
புறப்படுவதற்கு பல மாதங்களுக்கு முன்னே சிரில், ஸ்லாவிய மொழிக்கு எழுத்து வடிவம் கொடுக்கும் பணியில் தீவிரமாய் இறங்கிவிட்டார். மொழியின் ஒலிகளை கூர்ந்து கேட்கும் திறமை அவருக்கு இருந்தது. ஆகவே கிரேக்க, எபிரெய எழுத்துக்களை பயன்படுத்தி ஸ்லவோனிய மொழியின் ஒவ்வொரு ஒலிக்கும் எழுத்து வடிவம் கொடுக்க முயன்றார்.b இந்த எழுத்துக்களை உருவாக்குவதற்குத் தேவையான ஆரம்ப வேலைகளை பல ஆண்டு காலம் அவர் ஏற்கெனவே செய்து வைத்திருக்கலாம் என சில ஆய்வாளர்கள் நம்புகின்றனர். மேலும் சிரில் உருவாக்கிய எழுத்துகளின் சரியான வடிவத்தைப் பற்றிய சந்தேகம் இன்னும் இருந்து வருகிறது.—“சிரிலிக் அல்லது க்ளகோலிடிக்—எது?” என்ற பெட்டியைக் காண்க.
அதே சமயத்தில் பைபிள் மொழிபெயர்ப்பிலும் சிரில் மும்முரமாக ஈடுபட்டிருந்தார். அவரே உருவாக்கியிருந்த புதிய எழுத்துக்களை பயன்படுத்தி “ஆதியிலே வார்த்தை இருந்தது . . . ” என்ற யோவான் சுவிசேஷத்தின் முதல் சொற்றொடரை அவர் கிரேக்கிலிருந்து ஸ்லவோனிய மொழிக்கு மொழிபெயர்த்தார் என்று பாரம்பரியம் கூறுகிறது. அதன்பின் சிரில் நான்கு சுவிசேஷங்களையும் பவுலின் நிருபங்களையும் சங்கீத புத்தகத்தையும் மொழிபெயர்த்தார்.
தன்னந்தனியாக இந்த மொழிபெயர்ப்பு வேலையை செய்து வந்தாரா? மெத்தோடியஸும் இவருக்கு உதவியிருக்க வேண்டும். மேலுமாக, த கேம்பிரிட்ஜ் மெடூவல் ஹிஸ்டரி என்ற புத்தகம் இவ்வாறு கூறுகிறது: “கிரேக்க கல்வி பயின்ற ஸ்லாவிய பரம்பரையினர் இவருக்கு உதவியிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. மிகப் பழமையான மொழிபெயர்ப்புகளை ஆராய்கையில், . . . நன்கு வளர்ச்சியடைந்த ஸ்லவோனிய மொழி பயன்படுத்தப்பட்டிருப்பதற்கு சிறந்த அத்தாட்சி உள்ளது. ஆகவே இதை உருவாக்கியவர்களே ஸ்லாவியர்களாகத்தான் இருந்திருக்க முடியும்.” பைபிளின் மீதமுள்ள பகுதிகளை மெத்தோடியஸ் மொழிபெயர்த்து முடித்தார். இதை குறித்து இப்போது சிந்திப்போம்.
“இராஜாளியைத் தாக்கும் காகங்களைப்போல”
பொ.ச. 863-ல் சிரிலும் மெத்தோடியஸும் மொராவியாவில் தங்கள் பணியை ஆரம்பித்தனர். அங்கிருந்த மக்கள் இவர்களை அன்போடு ஏற்றுக்கொண்டனர். பைபிள், ஆராதனை புத்தகங்கள் ஆகியவற்றை மொழிபெயர்ப்பதோடு தாங்கள் புதிதாக உருவாக்கியிருந்த ஸ்லவோனிய எழுத்துக்களை உள்ளூர்வாசிகளின் ஒரு தொகுதிக்கும் அவர்கள் கற்றுக்கொடுத்தனர்.
ஆனால் அது அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. ஸ்லவோனிய மொழி பயன்படுத்துவதை மொராவியாவிலிருந்த ஃப்ரான்கிய பாதிரிமார் கடுமையாக எதிர்த்தனர். வழிபாட்டில் லத்தீன், கிரேக்கு, எபிரெயு ஆகிய மொழிகளை மட்டும் பயன்படுத்த வேண்டும் என்ற மும்மொழி கொள்கையை அவர்கள் ஆணித்தரமாய் ஆதரித்தனர். தாங்கள் புதிதாக எழுத்துரு கொடுத்த மொழியை போப் ஆதரிப்பார் என்ற நம்பிக்கையில் சகோதரர்கள் இருவரும் பொ.ச. 867-ல் ரோமுக்குப் பயணப்பட்டனர்.
பயணத்தின் இடையே வெனிஸில் சிரிலும் மெத்தோடியஸும் மும்மொழி கொள்கையினரான லத்தீன் பாதிரிமாரின் மற்றொரு தொகுதியினரோடு மோத வேண்டிய நிலை ஏற்பட்டது. சிரிலின் வாழ்க்கை சரிதையை எழுதிய இடைக்கால எழுத்தாளர் ஒருவர், உள்ளூர் பிஷப்புகளும் பாதிரிமாரும் துறவிகளும், “இராஜாளியைத் தாக்கும் காகங்களைப்போல” அவரை வார்த்தைகளால் தாக்கியதாக கூறுகிறார். “அந்தப்படி எக்காளமும் விளங்காத சத்தமிட்டால் எவன் யுத்தத்திற்கு ஆயத்தம்பண்ணுவான்? அதுபோல, நீங்களும் தெளிவான பேச்சை நாவினால் வசனியாவிட்டால் பேசப்பட்டது இன்னதென்று எப்படித் தெரியும்? ஆகாயத்தில் பேசுகிறவர்களாயிருப்பீர்களே” என சிரில் அவர்களுக்கு 1 கொரிந்தியர் 14:8, 9-ஐ மேற்கோள் காட்டி பதிலடி கொடுத்ததாக பதிவு சொல்கிறது.
ஒருவழியாக சகோதரர்கள் இருவரும் ரோமை அடைந்தபோது, இரண்டாம் போப் அட்ரியன் என்பவர் ஸ்லவோனிய மொழியை பயன்படுத்துவதை முழுமையாய் ஆதரித்தார். சில மாதங்களுக்குப் பின்பு, ரோமில் இருக்கையிலேயே சிரில் கடுமையாய் நோய்வாய்ப்பட்டுவிட்டார். இரண்டு மாதங்களுக்குள், தன் 42-வது வயதில் காலமானார்.
மொராவியாவிலும் தற்போதைய ஸ்லோவாகிய பகுதியில் இருந்த நேட்ரா நகரைச் சுற்றியிருந்த இடங்களிலும் வேலை செய்வதற்கு திரும்பிப் போகும்படி மெத்தோடியஸை இரண்டாம் போப் அட்ரியன் ஊக்குவித்தார். அந்த இடங்களில் தன் செல்வாக்கை அதிகரிக்க எண்ணி, மெத்தோடியஸிடம் ஸ்லவோனிய மொழியைப் பயன்படுத்துவதற்கு அங்கீகார கடிதங்களை கொடுத்தனுப்பினார்; அத்தோடு இவரை தலைமை பிஷப்பாகவும் நியமித்தார். ஆனால் பொ.ச. 870-ல், நேட்ராவின் இளவரசன் ஸ்வாட்டோப்ளக் உதவியோடு, ஃப்ரான்கிய பிஷப் ஹெர்மான்ரிக் என்பவர் மெத்தோடியஸை சிறைபிடித்தார். தென் கிழக்கு ஜெர்மனியில் துறவிமடம் ஒன்றில் கைதியாக இரண்டரை ஆண்டுகளை மெத்தோடியஸ் கழித்தார். கடைசியாக, இரண்டாம் போப் அட்ரியனுக்குப் பிறகு வந்த எட்டாவது போப் ஜான், மெத்தோடியஸை விடுவிக்க ஆணையிட்டு தன் ஆட்சிப்பகுதியில் மீண்டும் அவரை பிஷப்பாக நியமித்தார். வழிபாட்டில் ஸ்லவோனிய மொழி பயன்படுத்துவதற்கு போப்பின் ஆதரவு உண்டு என்பதை இவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
ஆனால் ஃப்ரான்கிய பாதிரிமாரின் எதிர்ப்பலை இன்னும் ஓய்ந்தபாடில்லை. தான் சர்ச்சை எதிர்ப்பவன் அல்ல என்பதை மெத்தோடியஸ் வெற்றிகரமாக நிரூபித்து அந்தக் குற்றச்சாட்டிலிருந்து தப்பினார். சர்ச்சில் ஸ்லவோனிய மொழியை பயன்படுத்துவதில் தவறேதுமில்லை என்ற போப்பாணை பத்திரத்தை எட்டாம் போப் ஜானிடமிருந்தும் இறுதியில் பெற்றுக்கொண்டார். மெத்தோடியஸ் தன் வாழ்நாளை “பிரயாணம் செய்வதிலும், வறுமையிலும், துன்பத்திலும், பகைமையின் தாக்குதலிலும், இம்சையிலுமே செலவிட்டார் . . . பயங்கரமான சிறைவாசத்தையும்” அனுபவித்தார் என்பதை இன்றைய இரண்டாம் போப் ஜான் பால் ஆமோதிக்கிறார். இதில் வேடிக்கை என்னவென்றால், ரோமுடன் நல்லுறவை வைத்திருந்த பிஷப்புகளும் இளவரசர்களுமே இதற்குக் காரணமாய் இருந்தனர்.
முழு பைபிளின் மொழிபெயர்ப்பு
தணியாத எதிர்ப்பின் மத்தியிலும் பல சுருக்கெழுத்தாளர்களின் உதவியோடு மெத்தோடியஸ் பைபிளின் மீதமுள்ள பகுதிகளை ஸ்லவோனிய மொழியில் மொழிபெயர்த்து முடித்தார். இந்த மாபெரும் வேலையை அவர் எட்டே மாதங்களில் முடித்து சாதனை படைத்ததாக பாரம்பரியம் கூறுகிறது. ஆனால் மக்கபேயரின் தள்ளுபடியாகம புத்தகங்களை இவர் மொழிபெயர்க்கவில்லை.
சிரிலும் மெத்தோடியஸும் செய்த மொழிபெயர்ப்பின் தரத்தை இன்று துல்லியமாக மதிப்பிடுவது சுலபமல்ல. அந்த மொழிபெயர்ப்பின் ஆரம்பகால நகல்களின் கையெழுத்துப் பிரதிகளில் வெகு சிலவே இன்று இருக்கின்றன. மிக அபூர்வமான அந்தப் பண்டைய பிரதிகளை ஆராய்கையில் மொழிபெயர்ப்பு மிகவும் துல்லியமாகவும் இயல்பானதாகவும் இருப்பதாக மொழி அறிஞர்கள் கூறுகின்றனர். இந்த சகோதரர்கள் இருவரும், “பல புதிய சொற்களையும் சொற்றொடர்களையும் உருவாக்க வேண்டி இருந்தது . . . இவை அனைத்தையும் அவர்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தும் வண்ணம் வெகு துல்லியமாக செய்தனர்; ஸ்லாவிய மொழியின் சொற்கோவைகள் என்றுமில்லாத அளவுக்கு பெருக வழிசெய்தனர்” என்று நம்முடைய ஸ்லாவிக் பைபிள் என்ற ஆங்கில புத்தகம் கூறுகிறது.
அழியாத ஆஸ்தி
பொ.ச. 885-ல் மெத்தோடியஸின் மரணத்திற்குப்பின், ஃப்ரான்கிய எதிரிகள் இவருடைய சீஷர்களை மொராவியாவிலிருந்து வெளியேற்றினர். அவர்கள் பொஹிமியா, தென் போலந்து, பல்கேரியா ஆகிய நாடுகளில் அடைக்கலம் புகுந்தனர். ஆகவே சிரிலும் மெத்தோடியஸும் ஆற்றிய பணி தொடர்ந்தது, சொல்லப்போனால் பல இடங்களிலும் பரவியது. சகோதரர்கள் இருவரும் நிலையான எழுத்து வடிவம் கொடுத்து உருவாக்கிய ஸ்லவோனிய மொழி பரவலாகி, வளர்ச்சியடைந்து, பிற்பாடு பல மொழிகளாக பிரிந்தது. இன்று, 13 வித்தியாசப்பட்ட ஸ்லாவிய மொழிகளும் அவற்றின் பல கிளை மொழிகளும் உண்டு.
சிரிலும் மெத்தோடியஸும் பைபிளை மொழிபெயர்க்க மேற்கொண்ட துணிச்சலான முயற்சி மற்றொரு விதத்திலும் பலனளித்தது. இன்று பல்வேறு ஸ்லாவிய மொழி பைபிள்கள் கிடைக்க அதுவே காரணமானது. இந்த மொழிகளைப் பேசும் லட்சக்கணக்கானவர்கள் கடவுளுடைய வார்த்தையை தங்கள் மொழியில் வாசித்து பயனடைகின்றனர். பயங்கர எதிர்ப்பின் மத்தியிலும் “தேவனுடைய வசனமோ என்றென்றைக்கும் நிற்கும்” என்ற வார்த்தைகள் எத்தனை உண்மையாய் நிரூபித்திருக்கின்றன!—ஏசாயா 40:8.
[அடிக்குறிப்புகள்]
a ஸ்லாவிய மொழிகள் கிழக்கு மற்றும் மத்திய ஐரோப்பாவில் பேசப்படும் மொழிகள். இவற்றில் ரஷ்யன், யுக்ரேனியன், செர்பியன் போலிஷ், செக், பல்கேரியன் போன்ற மொழிகள் அடங்கும்.
b இந்தக் கட்டுரையில் பயன்படுத்தப்பட்டுள்ள “ஸ்லவோனிய மொழி” சிரிலும் மெத்தோடியஸும் தங்கள் சமய பணிக்கும் இலக்கிய படைப்புக்கும் பயன்படுத்திய ஸ்லாவிய மொழியைக் குறிக்கிறது. சிலர் இன்று “பழம் ஸ்லவோனிய மொழி” அல்லது “பழம் சர்ச்சின் ஸ்லவோனிக்” என்ற வார்த்தைகளை அதைக் குறிக்க பயன்படுத்துகின்றனர். பொ.ச. ஒன்பதாம் நூற்றாண்டில் ஸ்லாவிய மக்களின் மத்தியில் ஒரேவொரு பொது மொழி மட்டுமே பேசப்படவில்லை என்பதை மொழி அறிஞர்கள் ஒப்புக்கொள்கின்றனர்.
[பக்கம் 29-ன் பெட்டி]
சிரிலிக் அல்லது க்ளகோலிடிக்—எது?
சிரில் உருவாக்கிய எழுத்து தொகுதியின் வடிவம், பெரும் கருத்து வேறுபாடுகளுக்கு காரணமாய் இருந்திருக்கிறது. ஏனெனில் அது என்ன எழுத்துத் தொகுதியென்று உறுதியாக சொல்ல முடிவதில்லை என மொழி அறிஞர்கள் குறைகூறுகின்றனர். சிரிலிக் எழுத்துருக்கள் பெரும்பாலும் கிரேக்க எழுத்துக்கள் போலவே இருக்கும், கிரேக்கில் காணப்படாத ஸ்லவோனிய ஒலிகளுக்கு வடிவம் கொடுக்க உருவாக்கப்பட்ட குறைந்தது பன்னிரண்டு கூடுதலான எழுத்துக்களும் இதில் உண்டு. எனினும், மிகவும் பழமையான ஸ்லவோனிய கையெழுத்துப் பிரதிகள் சிலவற்றில் க்ளகோலிடிக் என்றழைக்கப்படும் மிக வித்தியாசமான எழுத்துக்கள் காணப்படுகின்றன. இவற்றைத்தான் சிரில் உருவாக்கியிருப்பார் என்பது அநேக கல்விமான்களின் கருத்து. சில க்ளகோலிடிக் எழுத்துக்கள் கிரேக்க அல்லது எபிரெய சாய்வெழுத்துக்களிலிருந்தும் சில எழுத்துக்கள் இடைக்கால எழுத்துக்களிலிருந்தும் (diacritics) உருவாகியிருந்தாலும் பெரும்பாலான எழுத்துக்கள் ஒரிஜினலான, சிக்கலான படைப்புகளாக உள்ளன. க்ளகோலிடிக் மிகவும் தனித்தன்மை வாய்ந்ததாக, புதிய படைப்பாக தோன்றுகிறது. ஆனால், சிரிலாக்கிலிருந்தே இன்றைய ரஷ்ய, உக்ரேனிய, செர்பிய, பல்கேரிய, மாசிடோனிய எழுத்துக்கள் தோன்றியுள்ளன. இதைத் தவிர இன்னும் 22 மொழிகள் இதிலிருந்து பிறந்துள்ளன. ஆனால் இவற்றில் சில ஸ்லவோனிய மொழியே இல்லை.
படம்-சிரிலிக் மற்றும் க்ளகோலிடிக் எழுத்துக்கள்
[பக்கம் 31-ன் தேசப்படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
பால்டிக் கடல்
(போலந்து)
பொஹிமியா (செக்கியா)
மொராவியா (கி. செக்கியா, மே. ஸ்லோவாகியா, மே. ஹங்கேரி)
நேட்ரா
கிழக்கு ஃபிரான்கிய ராஜ்யம் (ஜெர்மனி & ஆஸ்திரியா)
இத்தாலி
வெனிஸ்
ரோம்
மத்தியதரைக் கடல்
பல்கேரியா
கிரீஸ்
தெசலோனிகா
(கிரிமியா)
கருங்கடல்
கான்ஸ்டான்டிநோப்பிள் (இஸ்தான்புல்)
பித்தினியா
[பக்கம் 31-ன் படம்]
சிரிலிக் மொழியிலுள்ள ஸ்லவோனிய பைபிள், 1581
[படத்திற்கான நன்றி]
பைபிள்: Narodna in univerzitetna knjiz̆nica-Slovenija-Ljubljana