உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w01 7/1 பக். 12-17
  • கொடுப்பதில் சந்தோஷம் காணுங்கள்!

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • கொடுப்பதில் சந்தோஷம் காணுங்கள்!
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2001
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • கொடுப்பதால் வரும் சந்தோஷம்
  • நித்தியகால நண்பர்களை சம்பாதித்தல்
  • பொக்கிஷங்களை பரலோகத்தில் சேர்த்து வைத்தல்
  • சத்தியத்தை விரும்புகிறவர்களைத் தேடுதல்
  • உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள்
  • நற்செய்தியை அறிமுகப்படுத்துதல்—சந்தோஷத்துடன்
    நம் ராஜ்ய ஊழியம்—1991
  • சந்தோஷமுள்ள ஒரு ஜனம்—ஏன்?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1988
  • சந்தோஷம்​—கடவுள் தரும் ஒரு குணம்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)-2018
  • சந்தோஷமுள்ள கடவுளுடன் மகிழ்ச்சியாயிருங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2001
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2001
w01 7/1 பக். 12-17

கொடுப்பதில் சந்தோஷம் காணுங்கள்!

“வாங்குகிறதைப் பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம் [“சந்தோஷம்,” Nw].” ​—⁠அப்போஸ்தலர் 20:⁠35.

1. கொடுப்பதால் வரும் சந்தோஷத்தை யெகோவா எப்படி காட்டுகிறார்?

சத்தியத்தை அறிவதால் கிடைக்கும் சந்தோஷமும் அதனால் பெறும் நன்மைகளும் கடவுள் தரும் விலைமதிப்புமிக்க பரிசுகள். யெகோவாவை அறிகிறவர்கள் மகிழ்ச்சியடைவதற்கு பல காரணங்கள் உள்ளன. ஆனாலும், பரிசை பெற்றுக்கொள்வதில் மட்டுமல்ல கொடுப்பதிலும் மகிழ்ச்சி உண்டு. யெகோவா ‘நன்மையான எந்த ஈவையும் பூரணமான எந்த வரத்தையும்’ அளிப்பவர். அவர் ‘நித்தியானந்த தேவன்.’ (யாக்கோபு 1:17; 1 தீமோத்தேயு 1:11) அவர் தமக்குச் செவிகொடுக்கிற யாவருக்கும் ஆரோக்கியமான போதனை அளிக்கிறார்; தங்களுடைய பிள்ளைகள் அன்பான ஆலோசனைக்குக் கீழ்ப்படிகையில் பெற்றோர் சந்தோஷப்படுவது போலவே அவரும் தம் போதனைக்குக் கீழ்ப்படிவோரைக் காண்கையில் மகிழ்ச்சியடைகிறார்.​—⁠நீதிமொழிகள் 27:11.

2. (அ) கொடுப்பதைப் பற்றி இயேசு என்ன சொன்னார்? (ஆ) பைபிள் சத்தியத்தை மற்றவர்களுக்கு போதிக்கையில் எப்படிப்பட்ட சந்தோஷத்தைப் பெறுகிறோம்?

2 அவ்வாறே, இயேசுவும் பூமியில் இருக்கையில் தம்முடைய போதகத்திற்கு செவிசாய்த்தவர்களைக் கண்டபோது மகிழ்ச்சியடைந்தார். இயேசுவின் வார்த்தைகளை அப்போஸ்தலனாகிய பவுல் இவ்வாறு குறிப்பிட்டார்: “வாங்குகிறதைப் பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம் [“சந்தோஷம்,” NW].” (அப்போஸ்தலர் 20:35) பைபிள் சத்தியத்தை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்கையில் நாம் பெறும் சந்தோஷம், நம்முடைய மத நம்பிக்கைகளை ஒருவர் ஏற்றுக்கொள்வதால் வருவதல்ல. ஆனால் நிஜமான, நித்திய நன்மை தரும் ஒன்றை அவருக்கு அளிக்கிறோம் என்ற சந்தோஷத்தையே நாம் பெறுகிறோம். ஆவிக்குரிய விதத்தில் அள்ளி வழங்குவதன் மூலம், இப்போது மட்டுமின்றி, நித்தியமாய் ஜனங்கள் நன்மையடைய நாம் அவர்களுக்கு உதவலாம்.​—⁠1 தீமோத்தேயு 4:8.

கொடுப்பதால் வரும் சந்தோஷம்

3. (அ) மற்றவர்களுக்கு ஆவிக்குரிய உதவி அளிப்பதில் அப்போஸ்தலர்களாகிய பவுலும் யோவானும் எவ்வாறு சந்தோஷத்தை வெளிப்படுத்தினார்கள்? (ஆ) நம் பிள்ளைகளுக்கு பைபிள் சத்தியத்தைக் கற்றுக்கொடுப்பது ஏன் அன்புக்கு அடையாளமாக இருக்கிறது?

3 ஆம், ஆவிக்குரிய பரிசுகளை கொடுப்பதில் யெகோவாவையும் இயேசுவையும் போலவே கிறிஸ்தவர்களும் மகிழ்ச்சியடைகிறார்கள். கடவுளுடைய வார்த்தையின் சத்தியத்தை மற்றவர்கள் கற்றுக்கொள்ள உதவி செய்வதில் அப்போஸ்தலன் பவுல் சந்தோஷப்பட்டார். தெசலோனிக்கேயிலுள்ள சபைக்கு அவர் இவ்வாறு எழுதினார்: “எங்களுக்கு நம்பிக்கையும் சந்தோஷமும் மகிழ்ச்சியின் கிரீடமுமாயிருப்பவர்கள் யார்? நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வரும்போது அவருடைய சந்நிதானத்திலே நீங்களல்லவா அப்படியிருப்பீர்கள்; நீங்களே எங்களுக்கு மகிமையும் சந்தோஷமுமாயிருக்கிறீர்கள்.” (1 தெசலோனிக்கேயர் 2:19, 20) அதே போலவே அப்போஸ்தலனாகிய யோவானும் தன்னுடைய ஆவிக்குரிய பிள்ளைகளைப் பற்றி எழுதினார்: “என் பிள்ளைகள் சத்தியத்திலே நடக்கிறார்கள் என்று நான் கேள்விப்படுகிற சந்தோஷத்திலும் அதிகமான சந்தோஷம் எனக்கு இல்லை.” (3 யோவான் 4) நம் பிள்ளைகள் ஆவிக்குரிய பிள்ளைகளாக வளர்வதற்கு உதவுவதில் கிடைக்கும் சந்தோஷத்தையும் சிந்தித்துப் பாருங்கள்! பிள்ளைகளை “கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும்” வளர்ப்பது பெற்றோரின் அன்புக்கு அடையாளம். (எபேசியர் 6:4) தங்களுடைய இளம் பிள்ளைகளின் நித்திய நலனில் இருக்கும் அக்கறையை பெற்றோர் இதன்மூலம் காட்டுகிறார்கள். பிள்ளைகள் கீழ்ப்படிகையில் பெற்றோர் அதிக சந்தோஷத்தையும் திருப்தியையும் அடைகிறார்கள்.

4. ஆவிக்குரிய கொடுத்தலில் கிடைக்கும் சந்தோஷத்தை எந்த அனுபவம் மெய்ப்பித்துக் காட்டுகிறது?

4 டெல் என்பவர் முழுநேர ஊழியர். ஐந்து குழந்தைகளுக்குத் தாய். டெல் இவ்வாறு கூறுகிறார்: “அப்போஸ்தலனாகிய யோவான் அனுபவித்த சந்தோஷத்தை என்னால் நன்றாக புரிந்துகொள்ள முடிகிறது. ஏனென்றால், என்னுடைய பிள்ளைகளில் நாலு பேர் ‘சத்தியத்தில் நடப்பதால்’ நானும் அதிக சந்தோஷப்படுகிறேன். குடும்பங்கள் மெய் வணக்கத்தில் ஒன்றுபட்டிருப்பது, யெகோவாவுக்கு கனத்தையும் மகிமையையும் சேர்ப்பதை அறிந்திருக்கிறேன். ஆகவே, என் பிள்ளைகளுக்கு சத்தியத்தை புகட்ட நான் எடுக்கும் பிரயாசங்களை அவர் ஆசீர்வதிப்பதைக் காண்பதில் அதிக திருப்தியடைகிறேன். குடும்பமாக பரதீஸிய பூமியில் முடிவில்லா வாழ்க்கையை அனுபவிக்கப் போகும் எதிர்பார்ப்பு, அதிக நம்பிக்கையை அளித்து கஷ்டங்களோ இடையூறுகளோ எது வந்தாலும் சகித்து நிற்க என்னைத் தூண்டுகிறது.” வேதனைதரும் விஷயம் என்னவெனில் டெல்லின் ஒரு மகள் கிறிஸ்தவ தராதரத்தை மீறியதால் சபை நீக்கம் செய்யப்பட்டாள். இருந்தாலும், நம்பிக்கை இழந்துவிடாமலிருக்க டெல் தொடர்ந்து பாடுபடுகிறார். “என் மகள் கண்டிப்பாக ஒரு நாள் மனம் மாறி யெகோவாவைத் தேடி வருவாள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. மற்ற பிள்ளைகள் தொடர்ந்து யெகோவாவை உண்மையோடு சேவிப்பதால் நான் அவருக்கு நன்றி கூறுகிறேன். உண்மையில் இந்த சந்தோஷமே எனக்கு பக்கபலமாக இருந்திருக்கிறது” என்று சொல்கிறார்.​—⁠நெகேமியா 8:10.

நித்தியகால நண்பர்களை சம்பாதித்தல்

5. சீஷராக்கும் இந்த வேலைக்கு நம்மையே கொடுக்கும்போது, எதை அறிந்துகொள்வது நமக்கு திருப்தியை அளிக்கிறது?

5 கிறிஸ்தவ சீஷர்களை உருவாக்கி, யெகோவாவையும் அவர் எதிர்பார்ப்பவற்றையும் அவர்களுக்கு கற்றுக்கொடுக்கும்படி இயேசு தம்மை பின்பற்றுகிறவர்களுக்கு கட்டளையிட்டார். (மத்தேயு 28:19, 20) மக்கள் சத்தியத்தைக் கற்றுக்கொள்வதற்கு யெகோவாவும் இயேசுவும் தன்னலம் கருதாமல் உதவியுள்ளார்கள். ஆகவே ஆரம்பகால கிறிஸ்தவர்களைப் போலவே, சீஷராக்கும் இந்த வேலையில் தன்னலம் கருதாமல் ஈடுபடுகையில் யெகோவாவையும் இயேசுவையும் பின்பற்றும் திருப்தி கிடைக்கிறது. (1 கொரிந்தியர் 11:1) இவ்வாறு சர்வ வல்லமையுள்ள கடவுளோடும், அவருடைய நேச குமாரனோடும் ஒத்துழைக்கையில் நம் வாழ்க்கையும் அர்த்தமுள்ளதாகிறது. கடவுளுடைய ‘உடன் வேலையாட்களில்’ ஒருவராக கருதப்படுவது எப்பேர்ப்பட்ட சந்தோஷத்தைத் தருகிறது! (1 கொரிந்தியர் 3:9) நற்செய்தியைப் பிரசங்கிக்கும் இந்த வேலையில் தேவதூதரும் பங்குகொள்கிறார்கள் என்பது சிலிர்ப்பூட்டுவதாக இல்லையா?​—⁠வெளிப்படுத்துதல் 14:6, 7.

6. ஆவிக்குரிய கொடுத்தலில் பங்குகொள்ளும்போது யார் நமது நண்பராகிறார்கள்?

6 சொல்லப்போனால், ஆவிக்குரிய கொடுத்தலில் பங்கு கொள்வதன்மூலம் கடவுளுடைய உடன் வேலையாட்கள் என்பதைக் காட்டிலும் நாம் ஒருபடி மேலே செல்கிறோம்​—⁠நாம் அவருடன் நித்தியகால நட்பையும் அனுபவிக்க ஆரம்பிக்கிறோம். விசுவாசத்தினாலே ஆபிரகாம் யெகோவாவுடைய நண்பன் என அழைக்கப்பட்டார். (யாக்கோபு 2:23) கடவுளுடைய சித்தத்தைச் செய்ய பிரயாசப்படும்போது நாமும் கடவுளுடைய நண்பராகலாம். அப்போது நாம் இயேசுவுக்கும் நண்பராகிறோம். அவர் தம்முடைய சீஷர்களிடம் இவ்வாறு சொன்னார்: “நான் உங்களைச் சிநேகிதர் என்றேன், ஏனெனில் என் பிதாவினிடத்தில் நான் கேள்விப்பட்ட எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தேன்.” (யோவான் 15:15) அதிக பிரபலமானவர்களின் அல்லது உயர் அதிகாரிகளின் நண்பர்கள் என அறியப்படுவதில் பலரும் சந்தோஷப்படுகிறார்கள். ஆனால், நாமோ இந்த அண்டத்திலேயே மிக உயர்ந்த இருவரின் நண்பர் என அறியப்படலாம்!

7. (அ) ஒரு சகோதரி தனக்கு உண்மையான சிநேகிதியை எப்படி பெற்றார்? (ஆ) உங்களுக்கு இதுபோன்ற அனுபவம் இருந்திருக்கிறதா?

7 அதோடு, கடவுளைப் பற்றி அறிந்துகொள்ள நாம் மக்களுக்கு உதவுகையில் அவர்களும் நம் நண்பராகிறார்கள், இதுவும் நமக்கு விசேஷ மகிழ்ச்சியைத் தருகிறது. ஐக்கிய மாகாணங்களில் வசிக்கும் ஜோன், தெல்மா என்ற பெண்ணுடன் பைபிள் படிப்பு ஆரம்பித்தார். குடும்பத்தாரின் எதிர்ப்பின் மத்தியிலும் தெல்மா விடாமுயற்சியுடன் பைபிள் படித்து ஒரு வருடத்திற்குப்பின் முழுக்காட்டுதல் பெற்றாள். ஜோன் இவ்வாறு எழுதுகிறார்: “முழுக்காட்டுதல் பெற்றதோடு எங்கள் கூட்டுறவு முடிந்துவிடவில்லை; கடந்த சுமார் 35 வருடங்களாக எங்களுடைய நட்பு தொடர்கிறது. ஊழியத்திற்கும் மாநாடுகளுக்கும் எப்போதுமே நாங்கள் சேர்ந்தே சென்றோம். நாளடைவில் 800 கிலோமீட்டர் தொலைவில் புதிய வீட்டிற்கு நான் குடிமாறினேன். ஆனாலும், பாசத்தை வெளிப்படுத்தும், இதயத்தைத் தொடும் கடிதங்களை தெல்மா தொடர்ந்து எழுதுகிறாள். அவளுடைய கடிதங்களில் எல்லாம் அவள் என்னை அடிக்கடி நினைப்பதாக சொல்கிறாள்; நான் அவளுக்கு நல்ல சிநேகிதியாகவும், முன்மாதிரியாகவும் இருப்பதற்காகவும், பைபிள் சத்தியத்தை கற்றுக்கொடுத்ததற்காகவும் அதிக நன்றியுள்ளவளாக இருப்பதை குறிப்பிட தவறுவதில்லை. யெகோவாவைப் பற்றி கற்றுக்கொள்ள நான் உதவியதன் பெரும் பலனாகவே இப்படியொரு நெருங்கிய சிநேகிதி எனக்குக் கிடைத்திருக்கிறாள்.”

8. என்ன நம்பிக்கையான மனநிலை ஊழியத்தில் நமக்கு பெரிதும் உதவும்?

8 நாம் சந்திப்பவர்களில் பலர் யெகோவாவின் வார்த்தைக்கு ஏதோ கொஞ்சம் ஆர்வம் காட்டலாம் அல்லது அறவே ஆர்வம் காட்டாதவர்களாக இருக்கலாம். ஆனாலும், சத்தியத்தைக் கற்றுக்கொள்ள விரும்பும் ஒருவரை எப்படியாவது கண்டுபிடிக்க வேண்டும் என்ற எண்ணம் சகித்துக்கொள்ள நமக்கு உதவலாம். ஜனங்கள் அசட்டை செய்வது நம்முடைய விசுவாசத்திற்கும் சகிப்புத்தன்மைக்கும் சவால்விடலாம். இருந்தாலும், நம்பிக்கையான மனநிலையை காத்துக்கொள்வது நமக்கு உதவும். குவாதமாலாவைச் சேர்ந்த ஃபாஸ்டோ என்பவர் இவ்வாறு கூறினார்: “நான் மற்றவர்களுக்கு சாட்சி கொடுக்கும்போது, செவிசாய்ப்பவர் ஆவிக்குரிய சகோதரனாக அல்லது சகோதரியாக மாறினால் எப்படியிருக்கும் என நினைப்பதுண்டு. நான் சந்திப்பவர்களில் ஒருவராவது நாளடைவில் கடவுளுடைய வார்த்தையின் சத்தியத்தை ஏற்றுக்கொள்வார் என்று நினைத்துக்கொள்வேன். இந்த நினைப்புதான் கடவுளுடைய வார்த்தையை தொடர்ந்து பிரசங்கிக்க எனக்கு கைகொடுக்கிறது, உண்மையான சந்தோஷத்தையும் தருகிறது.”

பொக்கிஷங்களை பரலோகத்தில் சேர்த்து வைத்தல்

9. பரலோகத்திலே பொக்கிஷத்தை சேர்த்து வைப்பதைப் பற்றி இயேசு என்ன சொன்னார், இதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?

9 நம் பிள்ளைகளானாலும் சரி மற்றவர்களானாலும் சரி சீஷராக்குவது என்பது எப்போதும் அவ்வளவு எளிதல்ல. இதற்கு நேரம், பொறுமை, விடாமுயற்சி தேவைப்படலாம். சந்தோஷத்தை தராத, நிலையற்ற செல்வத்தை ஏராளமாக சேர்ப்பதற்காக கடினமாக உழைக்க பலரும் விரும்புகிறார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள். ஆவிக்குரிய செல்வத்தை சேர்ப்பதே நல்லது என இயேசு தமக்குச் செவிகொடுத்தோரிடம் சொன்னார். “பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்க வேண்டாம்; இங்கே பூச்சியும் துருவும் அவைகளைக் கெடுக்கும்; இங்கே திருடரும் கன்னமிட்டுத் திருடுவார்கள்: பரலோகத்திலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவையுங்கள்; அங்கே பூச்சியாவது துருவாவது கெடுக்கிறதும் இல்லை; அங்கே திருடர் கன்னமிட்டுத் திருடுகிறதும் இல்லை” என அவர் கூறினார். (மத்தேயு 6:19, 20) சீஷராக்கும் முக்கிய வேலையில் பங்கு கொள்வது உள்ளிட்ட ஆவிக்குரிய இலக்குகளை நாடுவதன்மூலம், நாம் கடவுளுடைய சித்தத்தை செய்கிறோம், அவர் நமக்கு பலனளிப்பார் என்ற திருப்தியை அடைகிறோம். “தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்கு தேவன் அநீதியுள்ளவரல்லவே” என அப்போஸ்தலனாகிய பவுல் எழுதினார்.​—⁠எபிரெயர் 6:10.

10. (அ) இயேசுவுக்கு ஆவிக்குரிய பொக்கிஷங்கள் இருந்தது ஏன்? (ஆ) இயேசு எவ்வாறு தம்மையே கொடுத்தார், அதனால் மற்றவர்களுக்குக் கிடைத்த பெரும் பலன் என்ன?

10 சீஷராக்க ஊக்கமாக உழைக்கும்போது, இயேசு சொன்னதற்கு இசைவாக நாம் ‘பரலோகத்திலே பொக்கிஷங்களை’ சேர்த்து வைக்கிறோம். இது பெற்றுக்கொள்வதினால் வரும் சந்தோஷத்தை நமக்கு அளிக்கிறது. தன்னலமின்றி கொடுப்பதால் முடிவில் அபரிமிதமாக ஆசீர்வாதத்தைப் பெறப் போவது நாம்தான். இயேசுதாமே எண்ணற்ற வருடங்கள் யெகோவாவை உண்மையோடு சேவித்திருந்தார். அப்படியானால் அவர் பரலோகத்தில் எந்தளவுக்கு பொக்கிஷங்களை சேர்த்து வைத்திருப்பார் என்பதைக் கொஞ்சம் சிந்தித்துப்பாருங்கள்! இருந்தாலும், இயேசு தம்முடைய விருப்பங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அப்போஸ்தலனாகிய பவுல் இவ்வாறு எழுதினார்: ‘[இயேசு] நம்மை இப்பொழுதிருக்கிற பொல்லாத பிரபஞ்சத்தினின்று விடுவிக்கும்படி நம்முடைய பிதாவாகிய தேவனுடைய சித்தத்தின்படியே நம்முடைய பாவங்களுக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்.’ (கலாத்தியர் 1:4) ஊழியத்தில் இயேசு தன்னலம் கருதாமல் தம்மைத்தாமே கொடுத்தது மட்டுமின்றி, மற்றவர்களும் பரலோகத்தில் பொக்கிஷங்களை சேர்த்து வைப்பதற்கு தம் உயிரையே மீட்கும் பலியாக கொடுத்தார்.

11. பொருள் சம்பந்தமான பரிசுகளைவிட ஆவிக்குரிய பரிசுகள் ஏன் மேலானவை?

11 கடவுளைப் பற்றி மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுக்கையில் அழியாத ஆவிக்குரிய பொக்கிஷங்களை சேர்த்து வைப்பது எப்படி என்பதை அறிந்துகொள்ள நாம் அவர்களுக்கு உதவுகிறோம். இதைக் காட்டிலும் என்ன மிகச் சிறந்த பரிசை நீங்கள் கொடுக்க முடியும்? உங்கள் நண்பருக்கு விலைமதிப்புள்ள கடிகாரத்தையோ காரையோ அல்லது ஒரு வீட்டையோ பரிசாக கொடுத்தால் அவர் ஒருவேளை நன்றியோடு ஏற்றுக்கொண்டு அதிக சந்தோஷப்படலாம். அந்தப் பரிசைக் கொடுத்ததில் உங்களுக்கும் சந்தோஷம் கிடைக்கலாம். ஆனால், 20, 200, 2,000 வருடங்களுக்குப்பின் அந்த பரிசு எப்படி இருக்கும்? மறுபட்சத்தில், யெகோவாவை ஒருவர் சேவிப்பதற்கு உதவ உங்களையே நீங்கள் கொடுத்தீர்களானால், அவன்[ள்] காலமெல்லாம் அந்த பரிசு தரும் பலனைப் பெறலாம்.

சத்தியத்தை விரும்புகிறவர்களைத் தேடுதல்

12. மற்றவர்களுக்கு ஆவிக்குரிய உதவியளிக்க பலர் எவ்வாறு தங்களையே அளித்திருக்கிறார்கள்?

12 ஆவிக்குரிய விதத்தில் கொடுப்பதால் வரும் சந்தோஷத்தைப் பெற யெகோவாவின் ஜனங்கள் பூமியின் கடைமுனை மட்டும் சென்றிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கானோர் மிஷனரி ஊழியத்திற்காக தங்களுடைய வீடுகளையும் குடும்பத்தாரையும் விட்டு பிரிந்து மற்ற நாடுகளுக்குச் சென்றிருக்கிறார்கள். அவர்கள் அங்கு புதிய மொழிகளையும் கலாச்சாரத்தையும் பழகிக்கொள்ள வேண்டியிருந்திருக்கிறது. மற்றவர்களோ தங்கள் நாட்டிலேயே ராஜ்ய பிரசங்கிப்பாளர் அதிகம் தேவைப்படும் இடங்களுக்கு மாறிச் சென்றிருக்கிறார்கள். இன்னும் சிலர் தங்கள் நாட்டில் குடியேறியவர்களுக்கு பிரசங்கிப்பதற்காக பிற நாட்டு மொழியை கற்றிருக்கிறார்கள். உதாரணமாக, அமெரிக்காவில் நியூ ஜெர்ஸியிலுள்ள ஒரு தம்பதியினர் தங்களுடைய இரண்டு பிள்ளைகளையும் யெகோவாவின் சாட்சிகளுடைய தலைமை அலுவலகத்தில் சேவை செய்கிற அளவுக்கு வளர்த்து ஆளாக்கினர். பின்பு, பயனியர் சேவையை ஆரம்பித்து சீன மொழியைக் கற்றுக்கொண்டனர். மூன்று வருட காலத்தில் அவர்கள் அருகிலுள்ள கல்லூரியில் பயிலும் சீன மொழி பேசும் 74 பேருக்கு பைபிள் படிப்புகளை நடத்தினர். சீஷராக்கும் வேலையில் அதிக சந்தோஷத்தைப் பெற ஏதாவது ஒரு வழியில் உங்கள் ஊழியத்தை விஸ்தரிக்க முடியுமா?

13. உங்களுடைய ஊழியம் அதிக பலன் தருவதற்கு நீங்கள் என்ன செய்யலாம்?

13 ஒரு பைபிள் படிப்பாவது கிடைக்காதா என்ற ஏக்கம் ஒருவேளை உங்களுக்கு இருக்கலாம், ஆனால் இதுவரையிலும் பைபிள் படிப்பு நடத்த முடியாமல் போயிருக்கலாம். சில தேசங்களில் ஆர்வமுள்ளவர்களை கண்டுபிடிப்பதே பெரும்பாடு. ஒருவேளை நீங்கள் சந்திப்பவர்கள் பைபிளில் ஆர்வம் காட்டாதவர்களாக இருக்கலாம். அப்படியானால், யெகோவாவும் இயேசு கிறிஸ்துவும் இந்த வேலையில் அதிக ஆர்வம் காட்டுவதையும், அவர்கள் செம்மறியாட்டைப் போன்றோரிடத்திற்கு உங்களை வழிநடத்துவதையும் அறிந்து உங்களுடைய விருப்பத்தை எப்போதும் ஜெபத்தில் தெரிவிக்கலாம். உங்கள் சபையில் அதிக அனுபவம் வாய்ந்தவர்களிடம் அல்லது ஊழியத்தில் அதிக பலன்களைப் பெறுபவர்களிடம் ஆலோசனை கேளுங்கள். கிறிஸ்தவ கூட்டங்களில் கிடைக்கும் பயிற்சியையும் ஆலோசனைகளையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். பிரயாண கண்காணிகளிடமிருந்தும் அவர்களுடைய துணைவியாரிடமிருந்தும் ஆலோசனையைப் பெற்றுக் கொள்ளுங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக உங்கள் முயற்சியைக் கைவிடாதீர்கள். ஞானவான் ஒருவர் இவ்வாறு எழுதினார்: “காலையிலே உன் விதையை விதை, மாலையிலே உன் கையை நெகிழவிடாதே; . . . எது வாய்க்குமோ . . . என்றும் நீ அறியாயே.” (பிரசங்கி 11:6) அதே சமயத்தில், நோவா, எரேமியா போன்ற உண்மையுள்ளவர்களையும் நினைவில் கொள்ளுங்கள். அவர்கள் பிரசங்கித்தவற்றிற்கு சிலரே செவிகொடுத்த போதிலும் அவர்கள் ஊழியத்தில் வெற்றி கண்டனர். எல்லாவற்றிற்கும் மேலாக அது யெகோவாவைப் பிரியப்படுத்தியது.

உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள்

14. தம்மை சேவிக்கும் முதியவர்களை யெகோவா எவ்வாறு கருதுகிறார்?

14 நீங்கள் நினைக்கும் அளவுக்கு ஊழியத்தில் ஈடுபட சூழ்நிலை அனுமதிக்காமல் இருக்கலாம். உதாரணமாக, யெகோவாவின் சேவையில் உங்களால் முடிந்ததைச் செய்வதற்கு முதிர்வயது முட்டுக்கட்டையாக இருக்கலாம். இருந்தாலும், ஞானி என்ன எழுதினார் என்பதை நினைத்துப் பாருங்கள்: “நீதியின் வழியில் உண்டாகும் நரைமயிரானது மகிமையான கிரீடம்.” (நீதிமொழிகள் 16:31) யெகோவாவின் சேவைக்காகவே அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கை அவரது உள்ளத்தை குளிர்விக்கிறது. மேலுமாக பைபிள் இவ்வாறு கூறுகிறது: ‘உங்கள் முதிர்வயது வரைக்கும் நான் [யெகோவா] அப்படிச் செய்வேன்; இனிமட்டும் நான் உங்களைத் தாங்குவேன்; நான் அப்படிச் செய்துவந்தேன்; இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன்.’ (ஏசாயா 46:4) தம்மை உண்மையோடு நம்பியிருப்போரை தாங்கி ஆதரிப்பதாக நம் அன்பான பரலோக தகப்பன் வாக்குறுதி அளிக்கிறார்.

15. உங்களுடைய சூழ்நிலைகளை யெகோவா புரிந்துகொள்கிறார் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறதா? ஏன் அவ்வாறு சொல்கிறீர்கள்?

15 ஒருவேளை நீங்கள் வியாதியினாலோ, அவிசுவாசியான துணைவரின் எதிர்ப்பினாலோ, குடும்ப பாரத்தினாலோ அல்லது சிக்கலான பிரச்சினைகளினாலோ கஷ்டப்பட்டு வரலாம். நம்முடைய வரையறைகளையும் சூழ்நிலைகளையும் யெகோவா அறிவார். அப்படியிருந்தும் நாம் அவரை சேவிப்பதற்கு ஊக்கமாக முயற்சி எடுப்பதால் அவர் நம்மை நேசிக்கிறார். மற்றவர்களைவிட நாம் செய்வது குறைவாக இருந்தாலும் அவர் நம்மை நேசிக்கிறார். (கலாத்தியர் 6:4) நாம் அபூரணர் என்பதை அவர் அறிவார், ஆகவே அவர் நம்மிடம் எதிர்பார்ப்பவற்றில் நியாயமுள்ளவராக இருக்கிறார். (சங்கீதம் 147:11) நம்மால் முடிந்த மிகச் சிறந்ததை செய்வோமானால், கடவுளுடைய பார்வையில் நாம் மதிப்புமிக்கவர்கள் என்றும் நம்முடைய உண்மையுள்ள செயல்களை அவர் மறந்துவிட மாட்டார் என்றும் உறுதியாக இருக்கலாம்.​—⁠லூக்கா 21:1-4.

16. ஒரு சீஷனை உருவாக்குவதில் சபையார் அனைவரும் என்னென்ன வழிகளில் பங்குகொள்கிறார்கள்?

16 சீஷராக்கும் வேலை, ஒரு குழுவாக செய்யப்படும் வேலை என்பதையும் நினைவில் வையுங்கள். ஒரு துளி மழையால் ஒரு செடி வளர்ந்துவிட முடியாததைப் போலவே ஒரே நபரால் ஒரு சீஷரை உருவாக்க முடியாது. சாட்சி ஒருவர் ஆர்வமுள்ளவரைக் கண்டுபிடித்து பைபிள் படிப்பு நடத்தலாம் என்பது உண்மைதான். ஆனால் அந்தப் புதியவர் ராஜ்ய மன்றத்திற்கு வருகையில் சபையினர் அனைவரும் சத்தியத்தைப் புரிந்துகொள்ள அவருக்கு உதவுகின்றனர். சகோதரர்கள் காட்டும் அன்பு கடவுளுடைய ஆவி செயல்படுவதைக் காட்டுகிறது. (1 கொரிந்தியர் 14:24, 25) குழந்தைகளும், டீனேஜர்களும் சொல்லும் ஆர்வமூட்டும் பதில்கள், இவர்கள் இந்த உலகத்தின் இளைஞர்களிலிருந்து வித்தியாசப்பட்டவர்கள் என்பதை புதியவர்களுக்கு உணர்த்துகிறது. வியாதிப்பட்டவர்களும், பலவீனரும், முதியோரும் சபைக் கூட்டத்திற்கு வந்திருப்பது, சகிப்புத்தன்மை என்றால் என்ன என்பதை புதியவர்களுக்குக் கற்பிக்கிறது. நமக்கு வயதோ அல்லது மற்ற குறைபாடுகளோ தடையாக இருந்தாலும், புதியவர்களுக்கு உதவுவதில் நாம் அனைவருமே முக்கிய பங்களிக்கையில் பைபிள் சத்தியத்திடம் அவர்களது அன்பு அதிகரித்து முழுக்காட்டுதல் எடுக்கும் அளவுக்கு முன்னேறுகிறார்கள். நாம் ஊழியத்தில் செலவிடும் ஒவ்வொரு மணிநேரமும், ஒவ்வொரு மறுசந்திப்பும், ராஜ்ய மன்றத்திற்கு வந்திருக்கும் ஆர்வமுள்ளவரிடம் உரையாடும் ஒவ்வொரு சந்தர்ப்பமும் அவ்வளவு முக்கியமல்லாததாக தோன்றலாம். ஆனால் இவையாவும் யெகோவா நிறைவேற்றி வரும் மாபெரும் வேலையின் பாகமாகும்.

17, 18. (அ) சீஷராக்கும் வேலையில் ஈடுபடுவதோடுகூட வேறு எந்த வழியிலும் நாம் கொடுப்பதில் சந்தோஷம் பெறலாம்? (ஆ) கொடுப்பதில் சந்தோஷம் காண்கையில் நாம் யாரைப் பின்பற்றுகிறோம்?

17 சீஷராக்கும் இந்த முக்கியமான வேலையில் மட்டுமல்லாமல் மற்ற வழிகளிலும் கொடுப்பதால் வரும் சந்தோஷத்தை கிறிஸ்தவர்களாகிய நாம் பெறலாம். மெய் வணக்கத்தை ஆதரிப்பதற்கும், தேவையிலுள்ளவர்களுக்கு உதவுவதற்கும் நன்கொடை அளிப்பதற்காக பணத்தை ஒதுக்கலாம். (லூக்கா 16:9; 1 கொரிந்தியர் 16:1, 2) மற்றவர்களை உபசரிக்கும் சந்தர்ப்பத்தை நாடலாம். (ரோமர் 12:13) “யாவருக்கும், விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும், நன்மைசெய்ய” முயலலாம். (கலாத்தியர் 6:10) கடிதம் எழுதுதல், தொலைபேசியில் உரையாடுதல், பரிசு கொடுத்தல், நடைமுறையான உதவியளித்தல், ஆறுதலாக நாலுவார்த்தை பேசுதல் போன்ற எளிதான ஆனால் முக்கியமான வழிகளிலும் நாம் மற்றவர்களுக்குக் கொடுக்கலாம்.

18 இவ்வாறு நாம் கொடுப்பதில் நம் பரலோகத் தகப்பனைப் பின்பற்றுவதை காண்பிக்கிறோம். மெய் கிறிஸ்தவர்களுக்கு அடையாளமான சகோதர அன்பையும் நாம் வெளிப்படுத்துகிறோம். (யோவான் 13:35) இக்காரியங்களை எல்லாம் நினைவில் வைப்பது, கொடுப்பதில் சந்தோஷம் காண நமக்கு உதவலாம்.

நீங்கள் விளக்க முடியுமா?

• ஆவிக்குரிய கொடுத்தலில் யெகோவாவும் இயேசுவும் என்ன முன்மாதிரி வைத்திருக்கிறார்கள்?

• நித்தியகால நண்பர்களை நாம் எவ்வாறு உருவாக்கலாம்?

• நம்முடைய ஊழியத்தை அதிக பயனுள்ளதாக்க என்ன படிகளை எடுக்கலாம்?

• கொடுப்பதில் சந்தோஷம் காண சபையார் அனைவரும் எவ்வாறு தோள்கொடுக்கலாம்?

[பக்கம் 13-ன் படங்கள்]

ஆலோசனைக்கு பிள்ளைகள் கீழ்ப்படிகையில் பெற்றோர் அதிக சந்தோஷத்தையும் திருப்தியையும் அடைகிறார்கள்

[பக்கம் 15-ன் படம்]

சீஷராக்குவதன்மூலம் உண்மை நண்பர்களை கண்டடையலாம்

[பக்கம் 16-ன் படம்]

முதிர்வயதில் யெகோவா நம்மை தாங்குகிறார்

[பக்கம் 17-ன் படங்கள்]

எளிதான ஆனால் முக்கியமான வழிகளிலும் கொடுப்பதால் வரும் சந்தோஷத்தை அடையலாம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்