நிஜமான கடவுளில் நம்பிக்கை வைக்கிறீர்களா?
ராபர்ட் இ. பியரி என்ற ஆய்வுப்பயணி ஓர் ஆர்க்டிக் பிரதேசத்தை 1906-ல் கண்டதாக அறிக்கையிட்டார். அவர் வட அமெரிக்காவின் வடமேற்கு முனையிலுள்ள கேப் கால்கேட்டிலிருந்து பார்த்தபோது, தூரத்தில் வெள்ளை சிகரங்கள் இருப்பதுபோல் தெரிந்தது.
அப்பகுதிக்கு க்ராக்கர் லான்ட் என பெயர் சூட்டினார்; க்ராக்கர் என்பது அவருடைய ஆய்வுப் பயணத்திற்கு நிதியுதவி அளித்தவர்களில் ஒருவருடைய பெயர். சுமார் ஏழு ஆண்டுகளுக்கு பிறகு, அப்பிரதேசத்திற்கு ஆய்வுப்பயணம் மேற்கொள்வதற்காக அமெரிக்கன் மியூசியம் ஆஃப் நேச்சுரல் ஹிஸ்டரி ஒரு குழுவை ஏற்பாடு செய்தது. இந்த ஆய்வுக் குழுவினர், மலைகளும் பள்ளத்தாக்குகளும் பனிபடர்ந்த சிகரங்களும் கொண்ட ஒரு பிரதேசத்தைக் கண்டு மெய்சிலிர்த்துப் போனார்கள்! ஆனால் பிறகுதான் புரிந்தது, தாங்கள் காண்பது வெறும் ஆர்க்டிக் கானல்நீர் என்பது. பியரியும் இதே மாயத்தோற்றத்தைக் கண்டுதான் ஏமாந்து போயிருந்தார். இப்பொழுது இவர்களும் நிஜமல்லாத ஒன்றிற்காக நேரத்தையும் சக்தியையும் பணத்தையும் விரயமாக்கியிருந்தார்கள்.
இன்று அநேகர் நிஜமென தாங்கள் நினைக்கும் தெய்வங்களுக்காக தங்கள் நேரத்தையும் சக்தியையும் அர்ப்பணம் செய்கிறார்கள். இயேசுவின் அப்போஸ்தலர்களுடைய காலத்தில் ஹெர்மீஸ், ஜியஸ் போன்ற தெய்வங்களை மக்கள் வழிபட்டார்கள். (அப்போஸ்தலர் 14:11, 12, NW) இன்று உலகில் ஷின்டோ மதம், இந்து மதம் போன்ற பல மதங்களைச் சேர்ந்தவர்கள் வழிபடும் கடவுட்களின் எண்ணிக்கை கோடிகளை தாண்டுகிறது. பைபிள் சொல்கிறபடியே உண்மையில் “தெய்வங்கள் பலவும் ஆண்டவர்கள் பலரும்” இருக்கிறார்கள். (1 கொரிந்தியர் 8:5, 6, பொது மொழிபெயர்ப்பு) இவை யாவும் நிஜமான கடவுட்களாக இருக்க முடியுமா?
“இரட்சிக்க முடியாத” கடவுட்கள்
உதாரணமாக, வழிபாட்டில் உருவங்களையோ சின்னங்களையோ பயன்படுத்துவதைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள். விக்கிரகங்களை நம்புகிறவர்கள் அல்லது அவற்றின் மூலம் ஜெபம் செய்கிறவர்கள் அவற்றை இரட்சகர்களாக பார்க்கின்றனர்; ஆசீர்வாதங்கள் வழங்குவதற்கு அல்லது ஆபத்திலிருந்து பாதுகாப்பதற்கு தேவையான மீமானிட சக்தி அவற்றிற்கு இருப்பதாக நம்புகின்றனர். ஆனால் உண்மையில் அவற்றால் இரட்சிக்க முடியுமா? அத்தகைய வழிபாட்டுப் பொருட்கள் சம்பந்தமாக சங்கீதக்காரன் இவ்வாறு பாடினார்: “அஞ்ஞானிகளுடைய விக்கிரகங்கள் வெள்ளியும் பொன்னும், மனுஷருடைய கைவேலையுமாயிருக்கிறது. அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது, அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது. அவைகளுக்குக் காதுகளிருந்தும் கேளாது, அவைகளுடைய வாயிலே சுவாசமுமில்லை.” உண்மையில் அவை “இரட்சிக்க முடியாத” கடவுட்களே.—சங்கீதம் 135:15-17; ஏசாயா 45:20, NW.
விக்கிரகங்களை உருவாக்குகிறவர்கள் தங்களுடைய கைவேலைப்பாடுகளுக்கு உயிரும் சக்தியும் இருப்பதாக சொல்வது உண்மையே. விக்கிரகங்களை வழிபடுபவர்களும் அவற்றில் நம்பிக்கை வைக்கிறார்கள். ஏசாயா தீர்க்கதரிசி கூறியபடி, அவர்கள் “அதைத் [ஒரு விக்கிரகத்தை] தோளின்மேல் எடுத்து, அதைச் சுமந்து, அதை அதின் ஸ்தானத்திலே வைக்கிறார்கள்.” மேலும், “அங்கே அது நிற்கும்; தன் இடத்தைவிட்டு அசையாது; ஒருவன் அதை நோக்கிக் கூப்பிட்டால், அது மறுஉத்தரவு கொடுக்கிறதுமில்லை, அவன் இக்கட்டை நீக்கி அவனை இரட்சிக்கிறதுமில்லை.” (ஏசாயா 46:7) விக்கிரகத்தை வழிபடுபவர்கள் அதன்மீது எவ்வளவு நம்பிக்கை வைத்தாலும் அது உயிரற்றதாகவே இருக்கும் என்பதுதான் உண்மை. அவ்வாறு செதுக்கப்பட்ட உருவங்களும் வார்க்கப்பட்ட சிலைகளும் ‘வீணான தெய்வங்களே.’—ஆபகூக் 2:18, NW.
பொழுதுபோக்கு துறையைச் சேர்ந்த பிரபல நட்சத்திரங்களையும், விளையாட்டு வீரர்களையும், அரசியல் தலைவர்களையும், மதத் தலைவர்களையும் இதய தெய்வங்களாக மனதில் வைத்து ‘பூஜிப்பது’ இன்று சர்வ சாதாரணம். பணத்தை பூஜிப்பவர்களுக்கும் பஞ்சமே இல்லை. இந்த விக்கிரகங்கள் ஒவ்வொன்றுக்கும் அவற்றிற்கு இல்லாத பண்புகள் இருப்பதுபோல் காட்டப்படுகிறது. அவற்றை நம்புகிறவர்கள் எதிர்பார்க்கும் அனைத்தையும் அவை அளிப்பதில்லை, அளிக்கவும் முடியாது. உதாரணமாக, பல பிரச்சினைகளுக்கு செல்வமே பரிகாரம் என தோன்றலாம், ஆனால் செல்வத்தின் செல்வாக்கு வஞ்சனையானது. (மாற்கு 4:18) ஓர் ஆய்வாளர் இவ்வாறு கேட்டார்: “அநேக மக்களால் மிகவும் விரும்பப்படுகிற, எல்லா பிரச்சினைகளுக்கும் சஞ்சீவியாக கருதப்படுகிற ஒன்றை நாம் பெற்றுக்கொள்கையில், ஏமாற்றம் முதல் கடும் வேதனை வரை பலவித பாதிப்புகள் ஏற்படுவது ஏனோ?” ஆம், ஒருவர் செல்வத்தை நாடித் தேடுகையில், உடல் ஆரோக்கியம், திருப்திகரமான குடும்ப வாழ்க்கை, நெருங்கிய நட்புகள், அல்லது படைப்பாளருடன் உள்ள அருமையான உறவு போன்ற உண்மையிலேயே மதிப்புமிக்க காரியங்களை இழக்க வேண்டியிருக்கலாம். அவரது கடவுள் ‘பொய்யான விக்கிரகமே’ என்பது அம்பலமாகும்!—யோனா 2:8, NW.
‘மறு உத்தரவு கொடுப்பார் இல்லை’
நிஜமல்லாத ஒன்றை நிஜமானதாக குறிப்பிடுவது முட்டாள்தனம். தீர்க்கதரிசியாகிய எலியாவின் நாட்களில் பாகால் தெய்வத்தை வணங்கியவர்கள் கசப்பான அனுபவத்தின் மூலம் இதைக் கற்றுக்கொண்டார்கள். பரலோகத்திலிருந்து அக்கினியை வரவழைத்து மிருக பலியை பட்சித்துப் போடச் செய்வதற்கு பாகாலுக்கு வல்லமை இருப்பதாக அவர்கள் உறுதியாக நம்பினார்கள். சொல்லப்போனால் அவர்கள், “பாகாலே, எங்களுக்கு உத்தரவு அருளும் என்று காலை தொடங்கி மத்தியானமட்டும் பாகாலின் நாமத்தைச் சொல்லிக் கூப்பிட்டார்கள்.” கேட்கும் காதுகளும் பேசும் வாயும் பாகாலுக்கு இருந்ததா? பதிவு தொடர்ந்து இவ்வாறு சொல்கிறது: “ஒரு சத்தமும் பிறக்கவில்லை, மறு உத்தரவு கொடுப்பாரும் இல்லை.” உண்மையில், “கவனிப்பாரும் இல்லை.” (1 இராஜாக்கள் 18:26, 29) பாகால் நிஜமானதோ உயிருள்ளதோ செயல்படக்கூடியதோ அல்ல என்பது நிரூபணமானது.
அப்படியானால் நிஜமான கடவுளை அறிந்து அவரை வழிபடுவது எவ்வளவு முக்கியம்! ஆனால் அவர் யார்? அவரை நம்புவது நமக்கு எப்படி நன்மை பயக்கும்?
[பக்கம் 3-ன் படங்கள்]
ஏதேனும் பிரதேசம் கண்ணில் தென்படுகிறதா என தொடுவானத்தை நோக்கி கவனமாகப் பார்க்கிறார் பியரியின் கூட்டாளி இகின்யா
ராபர்ட் இ. பியரி
[படங்களுக்கான நன்றி]
Egingwah: From the book The North Pole: Its Discovery in 1909 Under the Auspices of the Peary Arctic Club, 1910; Robert E. Peary: NOAA
[பக்கம் 4-ன் படங்கள்]
இந்த உலகத்தில் பூஜிக்கப்படுபவற்றால் அநேகர் வஞ்சிக்கப்படுகிறார்கள்