நிஜமான கடவுளாகிய யெகோவாவில் நம்பிக்கை வையுங்கள்
நிர்மலமான கருமைநிற வானில் நூற்றுக்கணக்கான விண்மீன்கள் கண்சிமிட்டிக் கொண்டிருப்பதை பார்த்திருக்கிறீர்களா? அவை அங்கிருப்பதற்கான காரணத்தை உங்களால் கூற முடியுமா?
அமைதி தவழும் அருமையான இரவு வேளையில், பூர்வ இஸ்ரவேலை அரசாண்ட தாவீது ராஜாவிடம் விண்மீன்கள் உரையாடின. அவை அவரை இவ்வாறு எழுதத் தூண்டின: “வானங்கள் இறைவனின் மாட்சிமையை வெளிப்படுத்துகின்றன; வான்வெளி அவர்தம் கைகளின் வேலைப்பாட்டை விவரிக்கின்றது.” (திருப்பாடல்கள் [சங்கீதம்] 19:1, பொ.மொ.) ஆம், படைப்பு அல்ல, படைப்பாளரே “மாட்சியும் மாண்பும் வல்லமையும் பெற” தகுதி பெற்றவர்.—திருவெளிப்பாடு [வெளிப்படுத்துதல்] 4:11, பொ.மொ.; ரோமர் 1:25.
“எல்லாவற்றையும் உண்டுபண்ணினவர் தேவன்” என பைபிள் கூறுகிறது. (எபிரெயர் 3:4) உண்மையில், மெய்க் கடவுளாகிய “யேகோவா என்னும் நாமத்தையுடைய தேவரீர் ஒருவரே பூமியனைத்தின் மேலும் உன்னதமானவர்.” (சங்கீதம் 83:17) அவர் கானல்நீர்—பொய்த்தோற்றம்—அல்ல. இயேசு கிறிஸ்து தம் பரலோகத் தகப்பனாகிய யெகோவாவைப் பற்றி இவ்வாறு சொன்னார்: “என்னை அனுப்பினவர் சத்தியமுள்ளவர் [“நிஜமானவர்,” NW].”—யோவான் 7:28.
யெகோவா —நோக்கங்களை நிறைவேற்றுபவர்
கடவுளுடைய ஒப்பற்ற பெயராகிய யெகோவா என்பது எபிரெய வேதாகமத்தில் மட்டுமே சுமார் 7,000 தடவை காணப்படுகிறது. அந்தப் பெயரே அவர் நிஜமானவர் என்பதை சுட்டிக்காட்டுகிறது. கடவுளுடைய பெயரின் அர்த்தம் “ஆகும்படி செய்கிறவர்.” நோக்கங்களை நிறைவேற்றுகிறவர் என்பதை யெகோவா தேவன் இதன் மூலம் குறிப்பிடுகிறார். கடவுளுடைய பெயரைக் குறித்து மோசே கேட்டபோது, யெகோவா அதன் அர்த்தத்தை இவ்வாறு விளக்கிக் கூறினார்: “நான் என்னவாக நிரூபிப்பேனோ அவ்வாறே நிரூபிப்பேன்.” (யாத்திராகமம் 3:14, NW) “நான் என்னவாக விரும்பினாலும் அவ்வாறாவேன்” என ராதர்ஹாம் மொழிபெயர்ப்பு குறிப்பிடுகிறது. யெகோவா தமது நீதியான நோக்கங்களையும் வாக்குறுதிகளையும் மெய்ப்பித்துக் காட்டுவதற்கு எப்படியெல்லாம் ஆக வேண்டுமோ அப்படியெல்லாம் ஆகிறார். இதன் காரணமாக, சிருஷ்டிகர், பிதா, சர்வலோக பேரரசர், மேய்ப்பர், சேனைகளின் யெகோவா, ஜெபத்தைக் கேட்கிறவர், நியாயாதிபதி, மகத்தான போதகர், மீட்பர் போன்ற அநேக பட்டப்பெயர்களை சூடியிருக்கிறார்.—நியாயாதிபதிகள் 11:27; சங்கீதம் 23:1; 65:2; 73:28; 89:26; ஏசாயா 8:13; 30:20; 40:28; 41:14; NW.
மெய்க் கடவுள் மட்டுமே யெகோவா என்ற இந்தப் பெயரை சூடிக்கொள்ள முடியும், ஏனெனில் தங்களுடைய திட்டங்கள் வெற்றியடையும் என மனிதரால் ஒருபோதும் உறுதியளிக்க முடியாது. (யாக்கோபு 4:13, 14) யெகோவாவால் மட்டுமே இவ்வாறு கூற முடியும்: “மழையும் பனியும் வானத்திலிருந்து இறங்கி வருகின்றன; அவை நிலத்தை நனைத்து, முளை அரும்பி வளரச் செய்து, விதைப்பவனுக்கு விதையையும் உண்பவனுக்கு உணவையும் கொடுக்காமல், அங்குத் திரும்பிச் செல்வதில்லை. அவ்வாறே, என் வாயிலிருந்து புறப்பட்டுச் செல்லும் வாக்கும் இருக்கும். அது என் விருப்பத்தைச் செயல்படுத்தி, எதற்காக நான் அதை அனுப்பினேனோ அதை வெற்றிகரமாக நிறைவேற்றாமல் வெறுமையாய் என்னிடம் திரும்பி வருவதில்லை.”—ஏசாயா 55:10, 11, பொ.மொ.
மனிதருடைய பார்வையில் சாத்தியமற்றதாக தோன்றும் விஷயம்கூட யெகோவாவின் பார்வையில் நிஜமானதாக இருக்கிறது; அந்தளவுக்கு அவர் தம்முடைய நோக்கத்தை நிச்சயத்துடன் நிறைவேற்றுகிறார். ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு போன்றவர்கள் மரித்த பின்பும், இயேசு அவர்களைக் குறிப்பிட்டு இவ்வாறு சொன்னார்: “அவர் [யெகோவா] மரித்தோரின் தேவனாயிராமல், ஜீவனுள்ளோரின் தேவனாயிருக்கிறார்.” (லூக்கா 20:37, 38) உண்மையுள்ள அந்த மூன்று முற்பிதாக்களும் மரித்துவிட்டனர்; ஆனாலும் அவர்களை உயிர்த்தெழுப்பும் கடவுளுடைய நோக்கம் அவ்வளவு உறுதியாக நிறைவேறவிருந்ததால், அவருடைய பார்வையில் அவர்கள் உயிருள்ளவர்கள் போல் இருந்தார்கள். பூர்வ காலத்தில் வாழ்ந்த இந்த உண்மையுள்ள ஊழியர்களை யெகோவா மீண்டும் உயிருக்குக் கொண்டுவருவது, பூமியின் மண்ணினாலே முதல் மனிதனை படைத்ததைவிட அவருக்கு கடினமாக இராது.—ஆதியாகமம் 2:7.
கடவுள் தாம் நோக்கம் கொண்டிருப்பதை நிறைவேற்றுகிறவர் என்பதற்கு அப்போஸ்தலனாகிய பவுல் மற்றொரு உதாரணத்தை அளிக்கிறார். பைபிளில் ஆபிரகாம், ‘அநேக ஜாதிகளுக்குத் தகப்பன்’ என அழைக்கப்படுகிறார். (ரோமர் 4:16, 17) ஆபிராம் சந்தானம் இல்லாதிருந்தபோதே யெகோவா அவருடைய பெயரை ஆபிரகாம் என மாற்றினார், அதன் அர்த்தம் “திரளானோருக்குத் தகப்பன்.” வயதான ஆபிரகாமுக்கும் அவரது மனைவி சாராளுக்கும் பிள்ளைகளைப் பிறப்பிக்கும் சக்தியை அற்புதமாக மீண்டும் கொடுப்பதன் மூலம் யெகோவா அந்தப் பெயரின் அர்த்தத்தை மெய்மையாக்கினார்.—எபிரெயர் 11:11, 12.
மிகுந்த வல்லமையையும் அதிகாரத்தையும் பெற்ற இயேசு கிறிஸ்து நிஜமான விஷயங்களை மனிதருடையதைக் காட்டிலும் உயர்ந்த நோக்குநிலையிலிருந்து பேசினார். இயேசுவின் உற்ற நண்பர் லாசரு மரித்திருந்தாலும், அவர் தம் சீஷர்களிடம் இவ்வாறு சொன்னார்: “நம்முடைய சிநேகிதனாகிய லாசரு நித்திரையடைந்திருக்கிறான், நான் அவனை எழுப்பப்போகிறேன்.” (யோவான் 11:11) மரித்தவரை வெறுமனே உறங்குபவராக இயேசு ஏன் சொன்னார்?
லாசருவின் ஊராகிய பெத்தானியாவுக்கு இயேசு வந்து சேர்ந்தபோது, அவரை அடக்கம் செய்திருந்த கல்லறைக்குச் சென்றார். அதன் முகப்பில் வைக்கப்பட்டிருந்த கல்லை எடுத்துப் போடும்படி சொன்னார். சத்தமாக ஜெபம் செய்த பின்பு, “லாசருவே, வெளியே வா” என்று கட்டளையிட்டார். சூழ்ந்து நிற்பவர்கள் கல்லறையை பார்த்தவாறு நிற்க, “மரித்தவன் வெளியே வந்தான். அவன் கால்களும் கைகளும் பிரேதச் சீலைகளினால் கட்டப்பட்டிருந்தது, அவன் முகமும் சீலையால் சுற்றப்பட்டிருந்தது.” அதன்பின், “இவனைக் கட்டவிழ்த்துவிடுங்கள்” என இயேசு சொன்னார். (யோவான் 11:43, 44) இயேசு லாசருவை உயிர்த்தெழுப்பினார்—மரித்து நான்கு நாட்களான பிறகு மீண்டும் உயிருக்குக் கொண்டுவந்தார்! தம் சிநேகிதன் நித்திரையடைந்திருக்கிறான் என கிறிஸ்து சொன்னபோது அவர் உண்மையை திரித்துக் கூறவில்லை. யெகோவா மற்றும் இயேசுவின் நோக்குநிலையில் மரித்த லாசரு வெறுமனே உறங்குபவரைப் போலவே இருந்தார். ஆம், இயேசுவும் அவருடைய பரலோகத் தகப்பனும் நிஜமான விஷயங்களில் அக்கறை காட்டுகிறார்கள்.
நமது எதிர்பார்ப்புகளை யெகோவா மெய்மையாக்க முடியும்
ஏமாற்றும் விக்கிரகங்களுக்கும் நிஜமான கடவுளுக்கும் எத்தகைய வேறுபாடு! விக்கிரகங்களை வழிபடுகிறவர்கள், தாங்கள் பூஜிப்பவைகளுக்கு மீமானிட சக்தி இருக்கிறதென தவறாக கூறுகிறார்கள். இந்த விக்கிரகங்களுக்கு எந்தளவுக்கு பக்தியைக் காட்டினாலும் அவை அற்புத திறமைகளை பெறுவதில்லை. மறுபட்சத்தில், யெகோவா தேவனால், நீண்ட காலத்திற்கு முன்பு மரித்த தம் ஊழியர்களை உயிருடன் இருப்பவர்களைப் போல் சரியாகவே குறிப்பிட முடியும், ஏனெனில் அவரால் அவர்களுக்கு மீண்டும் உயிரை கொடுக்க முடியும். “யெகோவா மெய்யான தெய்வம்,” அவர் ஒருபோதும் ஜனங்களை வஞ்சிப்பதில்லை.—எரேமியா 10:10, திருத்திய மொழிபெயர்ப்பு.
யெகோவா தம்முடைய நினைவில் நிற்பவர்களை உரிய காலத்தில் உயிர்த்தெழுப்புவார்—மீண்டும் உயிருக்குக் கொண்டுவருவார்—என்பதை அறிவது எவ்வளவாய் ஆறுதலளிக்கிறது! (அப்போஸ்தலர் 24:15) ஆம், உயிர்த்தெழுதல் என்பது அந்த நபருக்கு இருந்த எல்லா பண்புகளோடும் மீண்டும் அவரை உயிருக்குக் கொண்டுவருவதை உட்படுத்துகிறது. மரித்தவர்களின் பண்புகளை நினைவில் வைத்து அவர்களை உயிர்த்தெழுப்புவது, எல்லையற்ற ஞானமும் வல்லமையும் படைத்த படைப்பாளருக்கு ஒரு பெரிய பிரச்சினை அல்ல. (யோபு 12:13; ஏசாயா 40:26) யெகோவா அன்பே உருவானவர்; ஆதலால் தம்முடைய பரிபூரண நினைவாற்றலை பயன்படுத்தி மரித்தோரை அதே ஆள்தன்மையில் பூங்காவனம் போன்ற பரதீஸிய பூமியில் மீண்டும் உயிருக்குக் கொண்டுவருவார்.—1 யோவான் 4:8.
சாத்தானிய உலகின் முடிவு நெருங்க நெருங்க, மெய்க் கடவுளை நம்புகிறவர்களுக்கு எதிர்காலம் நிச்சயமாகவே பிரகாசமாக மிளிர்கிறது. (நீதிமொழிகள் 2:21, 22; தானியேல் 2:44; 1 யோவான் 5:19) சங்கீதக்காரன் நமக்கு இவ்வாறு உறுதியளிக்கிறார்: “இன்னுங் கொஞ்ச நேரந்தான், அப்போது துன்மார்க்கன் இரான்; . . . சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்.” (சங்கீதம் 37:10, 11) குற்றச்செயலும் வன்முறையும் கடந்தகால காரியங்களாகிவிடும். நீதி நிலவும், பொருளாதார நெருக்கடிகள் மறைந்துவிடும். (சங்கீதம் 37:6; 72:12, 13; ஏசாயா 65:21-23) சமுதாய, இன, குல வேறுபாடுகள் பூண்டோடு அழிக்கப்படும். (அப்போஸ்தலர் 10:34, 35) போர்களும், போர்க் கருவிகளும் இனிமேலும் இரா. (சங்கீதம் 46:9) அப்போது, “வியாதிப்பட்டிருக்கிறேன் என்று நகரவாசிகள் சொல்வதில்லை.” (ஏசாயா 33:24) அனைவரும் பரிபூரணராக, துடிப்பான ஆரோக்கியத்தோடு விளங்குவர். (வெளிப்படுத்துதல் 21:3, 4) விரைவில் இந்தப் பூமியில் பரதீஸ் மெய்மையாகிவிடும். யெகோவா அதற்கான நோக்கம் கொண்டிருக்கிறார்!
ஆம், பைபிள் அடிப்படையிலான எல்லா எதிர்பார்ப்புகளும் சீக்கிரத்தில் நிறைவேறப் போகின்றன. யெகோவாவை முழுமையாக நம்ப முடியும் எனும்போது, இந்த உலகத்தார் பூஜிக்கும் காரியங்களால் ஏமாற்றப்படுவதற்கு நாம் ஏன் இடமளிக்க வேண்டும்? “எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும்” வேண்டும் என்பதே அவருடைய சித்தம். (1 தீமோத்தேயு 2:3, 4) இந்த ஒழுங்குமுறையின் கானல்நீர் அல்லது மாயத்தோற்றங்களுக்கும் அதன் கடவுட்களுக்கும் நமது நேரத்தையும் வளங்களையும் அர்ப்பணம் செய்வதற்கு பதிலாக, நிஜமான கடவுளைப் பற்றிய அறிவில் முன்னேறி முழு இருதயத்தோடும் அவரை நம்புவோமாக.—நீதிமொழிகள் 3:1-6; யோவான் 17:3.
[[பக்கம் 6-ன் படம்]
யெகோவா மற்றும் இயேசுவின் நோக்குநிலையில் லாசரு வெறுமனே உறங்குகிறவராய் இருந்தார்
[[பக்கம் 7-ன் படங்கள்]
பூமியில் பரதீஸ் விரைவில் மெய்மையாகும்