“கண்ணீர் வடிக்கும்” மரமும் அதன் பல்வகை பயனுள்ள “கண்ணீரும்”
“நோவை ஆற்றப் பிசின் தைலம் போடுங்கள்” என்கிறது எரேமியா 51:8. மிகவும் இதமானதும் குணப்படுத்தும் குணமுடையதுமான இந்த தைலத்தின் பிறப்பிடத்தை தேடி நாம் ஏஜியன் கடலிலுள்ள கையாஸுக்கு செல்ல வேண்டியுள்ளது.
கோ டை காலத்தின் ஆரம்பத்தில், கையாஸிலுள்ள விவசாயிகள் அறுவடைக்காக மிக விநோதமான முறையில் தயாராகிறார்கள். இலையுதிராமல் பச்சைப்பசேலென புதர்களைப் போலிருக்கும் ரூமிமஸ்தகி குங்கிலியம் அல்லது பூனைக்கண் குங்கிலிய மரங்களைச் சுற்றி உள்ள நிலப்பகுதியைப் பெருக்கிவிட்டு, வெண்களிமண்ணால் ஒரு அடித்தளம் அமைக்கிறார்கள். பின்னர் விவசாயிகள் அந்த மரப் பட்டைகளை கீறிவிட்டு, மரங்களை ‘கண்ணீர் வடிக்க’ வைக்கிறார்கள். மெல்லிய பசையாகிய ‘கண்ணீர்’ அதில் வடிய ஆரம்பிக்கிறது. இரண்டு மூன்று வாரங்கள் கழித்து, சொட்டும் பசை துளிகள் கெட்டியாகின்றன. நேரடியாக மரத்திலிருந்தோ கீழேயுள்ள களிமண் அடித்தளத்திலிருந்தோ விவசாயிகள் அவற்றை சேமிக்கிறார்கள். பூனைக்கண் குங்கிலிய பசை எனப்படும் இந்தக் ‘கண்ணீர்,’ நறுமண குங்கிலிய பிசின் தைலம் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.
ஆனாலும், அறுவடைக்கு முன் பொறுமையும் கடின உழைப்பும் அவசியம். முறுக்கேறி நிற்கும் சாம்பல் நிற அடிமரங்கள் மிக மெதுவாகவே வளர்கின்றன. ஒரு மரம் அதன் முழு முதிர்ச்சியை, அதாவது, சாதாரணமாக இரண்டிலிருந்து மூன்று மீட்டர் உயரம் வளர்வதற்கு 40 முதல் 50 வருடங்கள் எடுக்கும்.
அடிமரத்தை கீறிவிடுவது, ‘கண்ணீரை’ சேகரிப்பது ஆகிய வேலைகள் போக, நறுமண பசையை தயாரிப்பதிலும் அதிக வேலை உட்பட்டுள்ளது. பூனைக்கண் குங்கிலிய ‘கண்ணீரை’ விவசாயிகள் சேகரித்த பின்னர், அவர்கள் அதை அரித்து, கழுவி எடுத்து, அளவு வாரியாகவும் தர வாரியாகவும் பிரிக்கிறார்கள். பின்னர் இந்த நறுமண பசை மேலும் சுத்திகரிக்கப்பட்ட பிறகே அநேக காரியங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.
இந்த அருந்தாவரத்தின் வரலாறு
பூனைக்கண் குங்கிலியம் அல்லது ரூமிமஸ்தகி குங்கிலியம் என்பதன் கிரேக்க வார்த்தை “பற்களை கடித்தல்” என்ற அர்த்தம் தருகிறது. பண்டைய காலந்தொட்டே இந்த பூனைக்கண் குங்கிலிய பிசின், வாய் துர்நாற்றத்தை போக்கும் சூயிங் கம்மாக பயன்பட்டிருப்பதை ஒருவேளை இந்த பெயர் அர்த்தப்படுத்தலாம்.
பூனைக்கண் குங்கிலியத்தைப் பற்றிய மிகப் பழமையான தகவல் பொ.ச.மு. ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த கிரேக்க சரித்திராசிரியர் ஹிராடட்டஸிடமிருந்து கிடைக்கிறது. அப்பாலடாரஸ், டையஸ்கோரடிஸ், தீயாஸ்காரீதிஸ், தீயஃப்ராஸ்டஸ், ஹிப்பாக்ரட்டிஸ் ஆகியோர் பூனைக்கண் குங்கிலியத்தின் மருத்துவ பயன்களைப் பற்றி சொன்ன மற்ற பண்டைய எழுத்தாளர்களும் மருத்துவர்களும் ஆவர். மத்தியதரைக் கடற்கரையோரம் எங்கும் பூனைக்கண் குங்கிலிய மரங்கள் வளர்கிற போதிலும், சுமார் பொ.ச. 50-லிருந்து, பூனைக்கண் குங்கிலிய பிசின் தயாரிக்கும் பணி பெரும்பாலும் கையாஸுக்கு மட்டும் உரியதானது. ரோமர்கள், ஜெனவர்கள், ஆட்டமன் துருக்கியர்கள் என கையாஸைக் கைப்பற்றியவர்களுக்கும் பூனைக்கண் குங்கிலிய பிசினே முக்கிய குறியாக இருந்தது.
பல்வகை பயனுள்ள பூனைக்கண் குங்கிலியம்
வயிற்றுப்போக்கு, மூட்டு அழற்சி உள்ளிட்ட பல்வேறு நோய்களை குணப்படுத்த பண்டைய எகிப்திய மருத்துவர்கள் பூனைக்கண் குங்கிலியத்தை பயன்படுத்தினார்கள். நறுமணப் பொருளாகவும் இறந்த உடலை தைலமிட்டு பதனப்படுத்துவதற்கும் இதை பயன்படுத்தினார்கள். அதன் மருத்துவ குணங்களுக்காகவும் சிங்காரித்துக் கொள்வதற்கும் இறந்த உடலை பதனப்படுத்துவதற்கும் பயன்படுத்தப்பட்டதாக பைபிள் குறிப்பிடும் ‘கிலேயாத்தின் பிசின் தைலம்’ இந்த பூனைக்கண் குங்கிலிய மரத்திலிருந்தும் தயாரிக்கப்பட்டிருக்கலாம். (எரேமியா 8:22; 46:11) பரிசுத்த காரியங்களுக்கு மட்டுமே பயன்படுத்தும்படி மட்டுப்படுத்தப்பட்ட நறுமண பரிசுத்த தூபவர்க்கத்தை தயாரிக்கும் கலவையில் இருந்த குங்கிலியத்தை தந்த மரமும் இந்த பூனைக்கண் குங்கிலிய மரங்களின் குடும்பத்தைச் சேர்ந்ததாகவே இருந்திருக்கலாம் என்றும்கூட சொல்லப்படுகிறது.—யாத்திராகமம் 30:34-36.
இன்று இந்த பூனைக்கண் குங்கிலிய பிசின், ஆயில் பெய்ன்டிங் படங்களையும் ஃபர்னிச்சர்களையும் இசைக் கருவிகளையும் பாதுகாக்கும் மெருகெண்ணெய்யில் உள்ளது. காப்புப் பொருளாகவும் நீர்த்தடுப்பு பொருளாகவும் இது பயன்படுகிறது; துணிகளின் வண்ணச்சாயங்களிலும் கலைஞர்களின் வண்ணப்பூச்சுகளிலும் நிலைத்திருக்கும் நிறமளிப்பதற்கு சிறந்ததோர் ஏதுவாக கருதப்படுகிறது. பசைகளிலும் தோல் பதனிடுதலிலும் பூனைக்கண் குங்கிலியம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதன் சுகந்த வாசனை, இன்னும் பிற இயல்புகள் காரணமாக பூனைக்கண் குங்கிலியம் சோப்புகளிலும், சிங்காரப் பொருட்களிலும், நறுமண பொருட்களிலும் சேர்க்கப்படுகிறது.
உலகெங்கிலும் மருந்துகளின் 25 அதிகாரப்பூர்வ பட்டியல்களில் பூனைக்கண் குங்கிலியம் இடம்பெற்றுள்ளது. அரபு நாடுகளிலுள்ள பாரம்பரிய மருந்துகளில் இது இன்று வரையாக பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. பல் மருத்துவ பூச்சுகளிலும் மருந்து காப்ஸ்யூல்களின் உள்ளுறை பூச்சுகளிலும் பூனைக்கண் குங்கிலியம் பயன்படுத்தப்படுகிறது.
நறுமண பிசின் தைலத்திற்கு ஒரு ஊற்றுமூலமாக இருந்து, “கண்ணீர் வடிக்கும்” பூனைக்கண் குங்கிலிய மரத்தின் பல்வகை பயனுள்ள “கண்ணீர்” நூற்றாண்டுகளாக இதமானதாகவும் ஆற்றுவதாகவும் இருந்து வந்திருக்கிறது. எரேமியா தீர்க்கதரிசனம் நல்ல காரணத்துடனேயே இப்படி சொல்கிறது: “நோவை ஆற்றப் பிசின் தைலம் போடுங்கள்.”
[பக்கம் 31-ன் படங்கள்]
கையாஸ்
பூனைக்கண் குங்கிலிய அறுவடை
பூனைக்கண் குங்கிலிய ‘கண்ணீரை’ கவனமாக சேகரித்தல்
[படங்களுக்கான நன்றி]
Chios and harvest line art: Courtesy of Korais Library; all others: Kostas Stamoulis