“என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்”
புத்துணர்வளிக்கும் பனித்துளிகள் போன்ற இளைஞர்
“என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” என்று இயேசு சொன்னபோது, தம்மைப் பின்பற்றுகிற இளைஞர்களையும் உட்படுத்தினார் என்பதில் சந்தேகமில்லை. (மத்தேயு 11:28) சிறுபிள்ளைகளை ஜனங்கள் அவரிடத்தில் கொண்டுவர ஆரம்பித்தபோது சீஷர்கள் அவர்களை தடுக்க முயன்றனர். ஆனால் இயேசுவோ, “சிறுபிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்; அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்” என்றார். இயேசு ‘அவர்களை அணைத்துக்கொண்டு, அவர்கள்மேல் கைகளை வைத்து, அவர்களை ஆசீர்வதிக்கவும்’ செய்தார். (மாற்கு 10:14-16) இளைஞரை இயேசு மதிப்பு வாய்ந்தவர்களாக கருதினார் என்பதில் சந்தேகமில்லை.
கடவுளை சேவிப்பதில் தலைசிறந்த முன்மாதிரிகளாய் திகழ்ந்த உண்மையுள்ள இளம் ஆண்களையும், பெண்களையும், வாலிபரையும், சிறுவர் சிறுமியரையும் பற்றி பைபிள் சொல்கிறது. புத்துணர்வளிக்கும் பனித்துளிகளைப் போன்ற ‘யெளவன ஜனத்தைப்’ பற்றி சங்கீதப் புத்தகம் முன்னறிவிக்கிறது. ‘வாலிபரும்,’ ‘கன்னிகைகளும்’ யெகோவாவின் நாமத்தை துதிப்பதைப் பற்றியும் அது சொல்கிறது.—சங்கீதம் 110:3; 148:12, 13.
இளைஞர்கள் செழித்தோங்குவதற்கான இடம்
இளைஞரை பனித்துளிகளுக்கு ஒப்பிடுவது பொருத்தமானதே; ஏனென்றால் பனி, மிகுந்த விளைச்சலோடும் ஆசீர்வாதத்தோடும் இணைத்துப் பேசப்படுகிறது. (ஆதியாகமம் 27:28) பனித்துளிகள் மென்மையானவை, புத்துணர்வளிப்பவை. கிறிஸ்து பிரசன்னமாயிருக்கும் இக்காலத்தில், பெரும் எண்ணிக்கையான இளம் கிறிஸ்தவர்கள் மனமுவந்து, ஆர்வத்துடன் தங்களை அளிக்கிறார்கள். புத்துணர்வளிக்கும் பனித்துளிகளைப் போல, அநேக இளம் ஆண்களும் பெண்களும் அகமலர்ச்சியோடு கடவுளுக்கு சேவை செய்கிறார்கள், தங்கள் சக வணக்கத்தாருக்கும் உதவி செய்கிறார்கள்.—சங்கீதம் 71:17.
கிறிஸ்தவ இளைஞர்கள் மற்றவர்களுக்கு மட்டுமே புத்துணர்வு அளிப்பவர்களாக இல்லை; கடவுளுடைய சேவையில் தாங்களும் புத்துணர்வு பெறுகிறார்கள். அவர்கள் செழித்தோங்குவதற்கு ஏற்ற சூழலை கடவுளுடைய அமைப்பு அளிக்கிறது. இளம் ஆண்களும் பெண்களும் உயர்ந்த ஒழுக்க நெறிகளை கடைப்பிடித்து வருவதால், கடவுளோடு நெருங்கிய உறவை அனுபவித்து மகிழ்கிறார்கள். (சங்கீதம் 119:9) சபையில் ஆரோக்கியமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு, நல்ல நண்பர்களையும் கண்டடைகிறார்கள். இவையாவும் திருப்தியான, அர்த்தமுள்ள வாழ்க்கைக்கு பங்களிக்கின்றன.
‘ஆரோக்கியமும் புத்துணர்ச்சியும்’
கிறிஸ்தவ இளைஞர்கள் தங்களை ‘பனித்துளிகளாக’ கருதுகிறார்களா? சபை காரியங்களில் சுறுசுறுப்பாக ஈடுபட்டு, ஊழியத்தில் ஒரு மாதத்திற்கு 70 மணிநேரத்திற்கும் அதிகமாக சந்தோஷமாய் செலவிடுகிற டான்யாவிடம் கேட்டுப் பார்க்கலாம். அவள் எப்படி நினைக்கிறாள்? “எனக்கு புதுத்தெம்பும் உற்சாகமும் கிடைத்திருப்பதாக உணருகிறேன்” என அவள் கூறுகிறாள். “என் வாழ்வில் யெகோவாவையும் அவரது பூமிக்குரிய அமைப்பையும் பெற்றிருப்பது எனக்கு ‘ஆரோக்கியமும் புத்துணர்வும்’ அளித்திருக்கிறது.”—நீதிமொழிகள் 3:8, NW.
ஆரியல் என்பவரும் முழுநேர ஊழியராக சேவை செய்யும் ஓர் இளைஞர். சபையிலிருந்து பெறும் ஆவிக்குரிய போஷாக்கிற்கு அதிக போற்றுதலை காட்டுகிறார். “கிறிஸ்தவ கூட்டங்களுக்கும் மாநாடுகளுக்கும் அசெம்பிளிகளுக்கும் சென்று, யெகோவாவின் ஆவிக்குரிய பந்தியிலிருந்து சாப்பிடுகையில் அது உண்மையில் ஆவிக்குரிய விதத்தில் எனக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது” என அவர் குறிப்பிடுகிறார். “என்னுடன் சேர்ந்து வேலை செய்பவர்கள் உலகம் முழுவதிலும் இருக்கிறார்கள் என்று அறியும்போது அது எனக்கு தெம்பு அளிக்கிறது.” புத்துணர்வின் ஒரே பிறப்பிடம் எது என்பதைப் பற்றி விவரிக்கையில் அவர் கூறுவதாவது: “முக்கியமாக, இந்த உலகம் மக்கள் மீது ஏற்படுத்தும் பயங்கரமான விளைவுகளைப் பற்றி கேட்கும்போதோ பார்க்கும்போதோ, யெகோவாவை நண்பராக கொண்டிருப்பது எனக்கு அதிக புத்துணர்வை அளிக்கிறது.”—யாக்கோபு 2:23.
இருபது வயதான அபிஷை, முழுநேர ஊழியராகவும் சபையில் உதவி ஊழியராகவும் சேவை செய்து வருகிறார். அவர் தன் அனுபவத்தை இவ்வாறு கூறுகிறார்: “நான் புத்துணர்வு பெற்றவனாய் உணர்வதற்குக் காரணம், இன்று இளைஞர்கள் எதிர்ப்படும் பல பிரச்சினைகளை எப்படி சமாளிக்கலாம் என்பதை நான் அறிந்திருக்கிறேன். யெகோவாவை முழு ஆத்துமாவோடு சேவிப்பதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்பதற்கு கவனம் செலுத்த பைபிள் சத்தியம் எனக்கு உதவி செய்திருக்கிறது.”
டீனேஜ் பருவம் அரும்புவிட ஆரம்பிக்கையில் சின்ன சின்ன விஷயத்திற்கெல்லாம் ஆன்ட்வான் கோபப்படுவார். ஒருசமயம் தன்னுடைய வகுப்பு மாணவனை நாற்காலியால் விளாசிவிட்டார்; மற்றொருவனையோ பென்சிலால் குத்தினார். ஆன்ட்வான் புத்துணர்வுள்ளவராய் இருக்கவில்லை! ஆனால் பைபிளின் போதனை அவரது நடத்தையை மாற்றியது. இப்போது 19-ம் வயதில் ஓர் உதவி ஊழியராயும் முழுநேர ஊழியராயும் சபையில் பணியாற்றுகிறார். அவர் கூறுவதாவது: “யெகோவாவைப் பற்றிய அறிவை பெற வாய்ப்பு அளித்ததற்காகவும் தன்னடக்கமுள்ளவனாய் இருப்பதன் அவசியத்தைப் புரிந்துகொண்டு என் வாழ்க்கைப் போக்கை மாற்ற உதவி செய்ததற்காகவும் நான் அவருக்கு நன்றி தெரிவிக்கிறேன். இவ்வாறு, பல பிரச்சினைகளை நான் தவிர்த்திருக்கிறேன்.”
இளம் கிறிஸ்தவர்களின் புத்துணர்ச்சி அளிக்கும் மனப்பான்மையை மற்றவர்களும் கவனிக்கிறார்கள். மாட்டியோ என்பவர் இத்தாலியை சேர்ந்த இளம் கிறிஸ்தவர். வகுப்பில் யாரேனும் கெட்ட வார்த்தை பேசினால் அவர் ஒரு சிறுதொகையை அபராதமாக செலுத்த வேண்டும் என அவருடைய டீச்சர் தீர்மானித்தார். கொஞ்ச நாள் கழித்த பிற்பாடு, இந்தச் சட்டத்தை நீக்கும்படி பிள்ளைகள் கேட்டார்கள். ஏனென்றால், “கெட்ட வார்த்தையை பேசாமல் எங்களால் இருக்கவே முடியாது” என்று அவர்கள் சொன்னார்கள். “ஆனால் டீச்சரோ, நீங்கள் சொல்வது சரியல்ல என்று சொன்னார்கள்; அதோடு யெகோவாவின் சாட்சியாக என்னை ஒரு முன்மாதிரியாக அவர்களுக்கு எடுத்துக்காட்டி, என்னுடைய பேச்சு சுத்தமாக இருப்பதைப் பற்றி முழு வகுப்புக்கும் முன்பாக புகழ்ந்தார்கள்” என கூறுகிறார் மாட்டியோ.
தாய்லாந்தில் அடங்காத பிள்ளைகள் நிறைந்த ஒரு வகுப்பில், 11 வயதுடைய ராட்யாவும் இருந்தான். அவனுடைய டீச்சர் மாணவர்களுக்கு முன்பு அவனை நிறுத்தி அவனுடைய நடத்தையைப் பற்றி மெச்சி இவ்வாறு கூறினார்: “நீங்கள் எல்லாரும் ஏன் இவனைப் போலவே இருக்கக் கூடாது? அவன் படிப்பில் கெட்டிக்காரன், நடத்தையிலும் ஒழுக்கமானவன்.” அதற்குப் பின்பு, “உங்களுடைய நடத்தையில் நீங்கள் முன்னேற வேண்டும் என்றால் ராட்யாவைப் போல நீங்களும் ஒரு யெகோவாவின் சாட்சியாக வேண்டும் என நான் நினைக்கிறேன்” என்று மாணவர்களிடம் கூறினார்.
ஆயிரக்கணக்கான கிறிஸ்தவ இளைஞர்கள் யெகோவாவைப் பற்றி அதிகமதிகமாய் அறிந்துகொண்டு அவருடைய சித்தத்தை செய்வதைக் காண்பது மகிழ்ச்சிக்குரியது. இந்த அருமையான இளைஞர்கள் வயதுக்கு மிஞ்சிய ஞானத்தைக் காண்பிக்கிறார்கள். அவர்களுடைய தற்போதைய வாழ்க்கையில் வெற்றி சிறப்பதற்கு உதவுவதோடு வரப்போகும் புதிய உலகில் மகத்தான எதிர்காலத்தையும் கடவுள் அவர்களுக்கு அளிக்க முடியும். (1 தீமோத்தேயு 4:8) இந்த உலகம் ஆவிக்குரிய விதத்தில் தரிசாக கிடக்கிறது; அதில் நிறைந்திருக்கும் வெறுப்பும் விரக்தியும் அடைந்த இளைஞர்களோடு ஒப்பிட கிறிஸ்தவ இளைஞர்கள் புதுப்பொலிவுடன் காணப்படுகிறார்கள்!