‘அரராத் தேசத்தில்’ மெய் வணக்கத்துக்கு உச்ச நீதிமன்றம் ஆதரவு
நரைத்த தலைமுடியுடன் ஆர்மீனியாவை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தை அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் நிற்கிறார். அவருடைய சுதந்திரமும் அவருடைய சகவிசுவாசிகள் பலரின் சுதந்திரமும் ஆபத்தில் இருக்கிறது. தன்னுடைய நம்பிக்கைகளை விளக்க பைபிளிலிருந்து அவர் மேற்கோள் காட்டுவதை நீதிமன்றத்தில் அனைவரும் கேட்கின்றனர். இந்த விசாரணை அந்த தேசத்தில் மெய் வணக்கத்துக்கு எப்படி மகத்தான வெற்றி தேடித் தந்தது என்பதை புரிந்துகொள்ள இதற்கு வழிநடத்திய சம்பவங்களை நாம் பார்க்கலாம்.
ஆர்மீனியா துருக்கிக்கு கிழக்கே நீண்ட காகஸஸ் மலைத்தொடருக்கு தெற்கே அமைந்துள்ளது. இங்கே 30 லட்சத்துக்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். இந்நாட்டின் தலைநகரான ஏரேவனிலிருந்து பார்த்தால் அரராத் மலையின் இரண்டு சிகரங்கள் கண்கொள்ளா காட்சியாக கண்முன் நிற்கின்றன. பூகோள ஜலப்பிரளயத்துக்குப்பின் நோவாவின் பேழை இங்குதான் வந்து தங்கியது என்று பாரம்பரியம் கூறுகிறது.—ஆதியாகமம் 8:4.a
ஆர்மீனியாவில் யெகோவாவின் சாட்சிகள் 1975 முதற்கொண்டு ஊழியம் செய்துவருகிறார்கள். 1991-ல் முன்னாள் சோவியத் யூனியனிலிருந்து ஆர்மீனியா சுதந்திரம் பெற்றபின், மத அமைப்புகளை பதிவு செய்வதற்காக ஆன்மீக விவகாரங்களுக்கான ஸ்டேட் கவுன்சில் ஒன்று ஏற்படுத்தப்பட்டது. ஆனால் இந்த கவுன்சில் யெகோவாவின் சாட்சிகளை ஒரு மத அமைப்பாக பதிவு செய்ய தொடர்ந்து மறுத்து வந்திருக்கிறது. கிறிஸ்தவ நடுநிலை விவகாரமே இதற்கு முக்கிய காரணம். இதனால், 1991 முதற்கொண்டு ஆர்மீனியாவிலுள்ள 100-க்கும் அதிகமான இளம் சாட்சிகள் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறார்கள்; ராணுவ சேவை சம்பந்தமாக பைபிள் அடிப்படையில் எடுத்த நிலைநிற்கைக்காக பெரும்பாலோர் சிறை தண்டனையும் பெற்றிருக்கிறார்கள்.
லையோவா மார்காரியன் என்பவரின் மத சம்பந்தமான நடவடிக்கைகளை விசாரிக்கும்படிகூட அரசு தரப்பு வழக்குரைஞர் அலுவலகத்திடம் இந்தக் கவுன்சில் கேட்டுக்கொண்டது. லையோவா மார்காரியன் ஒரு கிறிஸ்தவ மூப்பர். இவர் உள்ளூர் அணு மின் நிலையத்தில் வழக்கறிஞராக வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்தார். இவர் ஒரு கடின உழைப்பாளி. கடைசியாக, சகோதரர் மார்காரியன் 244 சட்டப்பிரிவின்கீழ் குற்றஞ்சாட்டப்பட்டார். யெகோவாவின் சாட்சிகளையும் மற்ற மத தொகுதிகளையும் தடைசெய்து, மொத்தமாக ஒழித்துக்கட்டிவிட வேண்டும் என்பதற்காக குருஷேவ் காலத்தில் சோவியத் யூனியனில் இயற்றப்பட்டிருந்த சட்டமே அது.
மத நம்பிக்கைகளை பிரசங்கிக்கிறோம் என்ற பெயரில் ‘பதிவு செய்யப்படாத ஒரு மதத்தின் ஆராதனை கூட்டங்களுக்கு இளைஞரை கவர்ந்திழுத்து, சமுதாய கடமைகளை மறுக்கும்படி உறுப்பினர்களை தூண்டும்’ ஒரு மத தொகுதியை அமைப்பதோ அல்லது நடத்துவதோ குற்றம் என்று அந்தச் சட்டம் சொல்கிறது. தன் வாதத்துக்கு ஆதாரமாக, மெட்சாமோர் நகரில் சகோதரர் மார்காரியன் நடத்தும் கூட்டங்களில் வயது வராத சிறு பிள்ளைகள் இருப்பதை அந்த வழக்குரைஞர் சுட்டிக்காட்டினார். சபையிலுள்ள இளைஞர்கள் இராணுவ சேவையை மறுக்கும்படி சகோதரர் மார்காரியன் அவர்களை கட்டாயப்படுத்தியுள்ளார் என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.
விசாரணை ஆரம்பமாகிறது
2001, ஜூலை 20, வெள்ளிக்கிழமை அன்று, நீதிபதி மேன்வெல் சிமோன்யானின் தலைமையில் அமாவிர் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை ஆரம்பமானது. ஆகஸ்ட் வரை அது நீடித்தது. விசாரணையின்போது, தேசிய பாதுகாப்பு அமைச்சகத்தின் (முன்பு இரகசிய போலீசாராக இருந்த [KGB]) ஏஜென்ட்டுகளே சகோதரர் மார்காரியனுக்கு எதிராக என்ன எழுத வேண்டும் என்று சொன்னதாகவும் அவற்றை எழுதி கையெழுத்திடும்படி கட்டாயப்படுத்தியதாகவும் சாட்சி சொல்ல வந்தவர்கள் கடைசியில் ஒப்புக்கொண்டனர். பாதுகாப்பு அமைச்சக அதிகாரி ஒருவர் “யெகோவாவின் சாட்சிகள் நமது அரசுக்கும் நம்முடைய மதத்துக்கும் எதிரிகள்” என்று குற்றம்சாட்டும்படி சொன்னதாக ஒரு பெண் ஒப்புக்கொண்டார். தனிப்பட்ட விதமாக தனக்கு யெகோவாவின் சாட்சிகள் யாரையும் தெரியாது எனவும் தேசிய டெலிவிஷனில் அவர்களுக்கு எதிராக சொல்லப்படும் குற்றச்சாட்டுகளை மாத்திரமே தான் கேட்டிருப்பதாகவும் அந்தப் பெண் கூறினாள்.
சகோதரர் மார்காரியனின் முறை வந்தபோது, யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டங்களுக்கு வரும் சிறுவர்கள் அவர்களுடைய பெற்றோரின் அனுமதியுடன் வருவதாக குறிப்பிட்டார். மேலுமாக ராணுவத்தில் சேருவதும் சேராததும் ஒருவருடைய தனிப்பட்ட தீர்மானம் என்பதை விளக்கினார். வழக்குரைஞரின் குறுக்கு விசாரணை பல நாட்களுக்குத் தொடர்ந்தது. சகோதரர் மார்காரியன், அமைதியாக அவருடைய நம்பிக்கைகளைப் பற்றி கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பைபிளிலிருந்து பதிலளித்தார், அவை சரிதானா என வழக்குரைஞர் தன் சொந்த பைபிளில் அந்த வசனங்களை எடுத்துப் பார்த்தார்.
செப்டம்பர் 18, 2001-ல் மார்காரியன் “நிரபராதி” என்று நீதிபதி அறிவித்தார். அவர் செய்யும் வேலையில் “குற்றத்தின் சிறு தடயம்கூட இல்லை” என்று கூறினார். அசோசியேட்டட் பிரஸ்ஸில் இந்த வழக்கைக் குறித்து ஒரு பகிரங்கமான அறிக்கை வெளியானது. அது இவ்வாறு வாசித்தது: “ஆர்மீனியாவிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய ஒரு தலைவர் மதமாற்றும் குற்றத்திலிருந்தும் ராணுவ சேவையை தட்டிக்கழிக்கும்படி இளைஞரை கட்டாயப்படுத்தும் குற்றத்திலிருந்தும் இன்று விடுவிக்கப்பட்டார். இரண்டு மாத கால விசாரணைக்குப்பின், தலைவர் லிவான் மார்காரியனுக்கு [லையோவா மார்காரியனுக்கு] எதிராக போதுமானளவு சாட்சியங்கள் இல்லையென நீதிமன்றம் தெரிவித்தது. அவர் ஐந்தாண்டு கால சிறை தண்டனையிலிருந்து தப்பினார். . . . ஆர்மீனியாவின் அரசியல் சட்டம் மத உரிமைக்கு உத்தரவாதமளித்தாலும் புதிய தொகுதிகளை பதிவு செய்வது கடினம்; சட்டங்கள், அதிக செல்வாக்குள்ளதாக இருக்கும் ஆர்மீனியன் அப்போஸ்தல சர்ச்சுக்கே சாதகமாக உள்ளன.” 2001, செப்டம்பர் 18 அன்று நிருபர்களுக்கு வெளியிடப்பட்ட அறிக்கையில், ஐரோப்பாவின் பாதுகாப்புக்கும் ஒற்றுமைக்குமான அமைப்பு (OSCE) இவ்வாறு கூறியது: “OSCE அலுவலகம் தீர்ப்பை வரவேற்றாலும், முதலாவது இந்த வழக்கு விசாரணைக்கு வந்ததைக் குறித்து வருந்துகிறது.”
வழக்கு தொடர்கிறது
ஆனாலும்கூட வழக்கை தொடுத்தவர்கள் மேல் முறையீடு செய்தார்கள். மேல் முறையீட்டு வழக்கு விசாரணை இன்னும் நான்கு மாதங்களுக்கு தொடர்ந்தது. விசாரணையின் ஆரம்பத்தில் சகோதரர் மார்காரியன் தன் பங்கில் சான்றளிப்பதற்கு நேரம் வந்தபோது, முதல் கேள்வியை அந்த விசாரணைக் குழுவிலிருந்த ஒரு நீதிபதி கேட்டார். சகோதரர் மார்காரியன் அதற்கு பதிலளிக்க துவங்கியபோதோ, குழுத்தலைவர் குறுக்கிட்டு நேருக்கு நேர் அவரைத் தாக்கிப் பேசினார். அதற்குப்பின், ஒரு கேள்விக்குக்கூட முழுமையாக பதிலளிக்க சகோதரர் மார்காரியனுக்கு அவர் வாய்ப்பு கொடுக்கவில்லை. எதிர்வாதத் தரப்பிலிருந்து கேட்ட பெரும்பாலான கேள்விகளுக்கு எந்தக் காரணமும் அளிக்காமல் பதிவிலிருந்து நீக்கியும்விட்டார். விசாரணையின்போது சாட்சிகளை எதிர்த்த மத வெறியர்கள் நீதிமன்ற அறைகளில் நிரம்பி வழிந்தார்கள். இவர்கள் சகோதரர் மார்காரியனை வாய்க்கு வந்தபடியெல்லாம் திட்டித் தீர்த்தார்கள். இதைத் தொடர்ந்து, விசாரணை பற்றிய பொய்யான, திரித்துக் கூறப்பட்ட செய்திகள் டெலிவிஷனில் ஒளிபரப்பப்பட்டன, சகோதரர் மார்காரியன் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டதாகக்கூட சொல்லப்பட்டது.
விசாரணை நடந்துகொண்டிருக்கும் போதே, மூன்று நீதிபதிகள் அடங்கிய குழுவின் தலைவர் மத விவகாரங்களுக்கான ஸ்டேட் கவுன்சிலிடமிருந்து வந்த ஒரு கடிதத்தை காட்டி பார்வையாளர்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். சகோதரர் மார்காரியனுக்கு எதிராக பிராசிக்யூட்டரின் அலுவலகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதில் கோரியிருந்தது. விசாரணையை கவனித்துக்கொண்டிருந்த சர்வதேச பார்வையாளர்கள் இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தனர். இதற்கு காரணம், கவுன்சில் ஆஃப் யூரோப்பில் உறுப்பினராவதற்கான விண்ணப்பத்தில், “எல்லா சர்ச்சுகளும் அல்லது மத சமுதாயங்களும், விசேஷமாக ‘பாரம்பரிய மதங்கள் அல்லாதவை’ என கருதப்படுபவையும் எந்த பாகுபாடுமில்லாமல் தங்கள் மதத்தை கடைப்பிடிப்பதை உறுதிப்படுத்தும்” பொறுப்பு இருப்பதாக ஆர்மீனியா ஒப்புக்கொண்டுள்ளது.
அடுத்து வந்த வாரங்களில் விசாரணை தொடர்ந்தபோது, அங்கு அதிக பதற்றமான சூழ்நிலையே காணப்பட்டது. எதிராளிகள் நீதிமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் யெகோவாவின் சாட்சிகளைத் தாக்கி அவர்களுக்கு தொல்லைக் கொடுத்து வந்தார்கள். யெகோவாவின் சாட்சிகளாக இருக்கும் பெண்கள் முழங்காலுக்குக் கீழே உதைக்கப்பட்டார்கள். தாக்கப்பட்ட ஒரு யெகோவாவின் சாட்சி திருப்பி சண்டை போட மறுத்தபோது, பின்னாலிருந்து அவருடைய முதுகெலும்பை தாக்கினார்கள், அதனால் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதற்கிடையில், இந்த வழக்கில் தலைவராக ஒரு புதிய நீதிபதி நியமிக்கப்பட்டார். பார்வையாளர்களில் சிலர் எதிர்த்தரப்பு வழக்கறிஞரை மிரட்ட முயன்றபோதிலும் இந்த புதிய நீதிபதி நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார். எதிர்த்தரப்பு வழக்கறிஞரை மிரட்டி குரலெழுப்பிய ஒரு பெண்ணை போலீஸ் துணையோடு நீதிமன்றத்திலிருந்து வெளியேற்றவும் கட்டளையிட்டார்.
ஆர்மீனியாவின் உச்ச நீதிமன்றத்தில்
கடைசியாக, 2002 மார்ச் 7 அன்று, விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை அப்பீல் நீதிமன்றம் உறுதிசெய்தது. ஆனால் மிகவும் விசித்திரமான விஷயம் என்னவென்றால், இந்தத் தீர்ப்பு அறிவிக்கப்படுவதற்கு முந்தின நாள் மத விவகாரங்களுக்கான ஸ்டேட் கவுன்சில் கலைக்கப்பட்டது. மறுபடியுமாக பிராசிக்யூஷன் தீர்ப்பை மாற்றி எழுதும்படி அப்பீல் செய்தது. இந்த முறை அது ஆர்மீனியாவின் உச்ச நீதிமன்றமான கோர்ட் ஆஃப் கஸேஷனுக்கு அப்பீல் செய்தது. “குற்றவாளி என்ற தீர்ப்பை பெறுவதற்கு” இந்த வழக்கை மறுவிசாரணை செய்யும்படி திருப்பித்தர வேண்டுமென்று அரசுத்தரப்பு வழக்குரைஞர் கோரினர்.
ஏப்ரல் 19, 2002 காலை 11 மணிக்கு நீதிபதி மஹெர் காச்சாட்ரையான் தலைமையில் ஆறு அங்கத்தினர்களைக் கொண்ட நீதிபதிகளின் குழு கூடியது. பிராசிக்யூட்டரில் ஒருவர் தன்னுடைய ஆரம்ப அறிக்கையின் போது, முந்தின இரு நீதிமன்றங்களும் சகோதரர் மார்காரியனை குற்றவாளியாக தீர்க்க தவறியதை மிகுந்த கடுகடுப்புடன் தெரிவித்தார். ஆனால் இம்முறை, பிராசிக்யூட்டர் பேசும்போது நீதிபதிகளில் நால்வர் நடுவே குறுக்கிட்டு அவரிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டார்கள். சகோதரர் மார்காரியனுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்காக, யெகோவாவின் சாட்சிகளுடைய பிரசங்க ஊழியத்தையும் அவர்கள் பதிவு செய்யப்படாததையும் பிராசிக்யூட்டர் சுட்டிக்காட்டினார். இப்படி செய்வதன் மூலம் நீதிமன்றத்தில் தப்பெண்ணத்தை உருவாக்க அவர் முயற்சி செய்ததற்காக நீதிபதிகளில் ஒருவர் அவரை கடுமையாக சாடினார். ஆனால் அந்த இரண்டு காரணங்களுமே 244 சட்டப்பிரிவின்படி தவறானவை அல்ல. எனவே அந்த பிராசிக்யூட்டரின் செயல்களை, “குற்ற வழக்கைப் பயன்படுத்தி துன்புறுத்துதல்” என அந்த நீதிபதி விவரித்தார். மற்றொரு நீதிபதி ஐரோப்பிய நீதிமன்றம் தீர்ப்பளித்த பல்வேறு வழக்குகளைப் பற்றி குறிப்பிட்டார்; அவற்றில் யெகோவாவின் சாட்சிகள் “அறியப்பட்ட மதத்தார்” என ஏற்றுக்கொள்ளப்பட்டதையும், மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய ஒப்பந்தத்தினுடைய பாதுகாப்பின் கீழ் இருக்க அவர்கள் தகுதியானவர்கள் என்பதையும் குறிப்பிட்டார். இந்த சமயத்தில் யெகோவாவின் சாட்சிகள் தேசத்தையே கூறுபோடுகிறவர்கள் என பாதிரியார் ஒருவர் நீதிமன்றத்தில் கூப்பாடு போட்டார். அவரை அமைதியாக இருக்கும்படி நீதிமன்றம் ஆணையிட்டது.
பார்வையாளர்களின் மத்தியிலிருந்த லையோவா மார்காரியனை நீதிபதிகள் அழைத்தார்கள்; இது இந்த நீதிமன்றத்தில் சரித்திரம் காணாத சம்பவம். அப்போது பல்வேறு விஷயங்களில் யெகோவாவின் சாட்சிகளுடைய கிறிஸ்தவ நிலைநிற்கையைப் பற்றி சகோதரர் மார்காரியன் அருமையாக பேசியது சாட்சியாக அமைந்தது. (மாற்கு 13:9) சற்று நேரம் கூடி கலந்தாராய்ந்த பிறகு மீண்டும் நீதிமன்றம் தொடங்கியது, “நிரபராதி” என்ற தீர்ப்பை நீதிமன்றம் ஏகமனதாக அறிவித்தது. சகோதரர் மார்காரியன் அடைந்த நிம்மதியை அப்போது காண முடிந்தது. எழுத்தில் அளிக்கப்பட்ட தீர்ப்பில் நீதிமன்றம் பின்வருமாறு குறிப்பிட்டது: “நடப்பிலுள்ள சட்டத்தின்படி [லையோவா மார்காரியனின்] இந்த செயல் குற்றத்திற்குரியதாக கருதப்படவில்லை, இப்படிப்பட்ட குற்றச்சாட்டு ஆர்மீனியன் அரசியல் அமைப்பின் 23-வது சட்டப் பிரிவுக்கும் ஐரோப்பிய ஒப்பந்தத்தின் 9-வது பிரிவுக்கும் முரணானது.”
தீர்ப்பின் பிரதிபலிப்பு
வழக்குத் தொடுத்தவர்களின் சார்பாக தீர்ப்பு அளிக்கப்பட்டிருந்தால் ஆர்மீனியா முழுவதிலுமுள்ள அனைத்து சபைகளைச் சேர்ந்த யெகோவாவின் சாட்சி மூப்பர்களுக்கு எதிராகவும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும். ஆனால் நீதிமன்றத்தின் தெள்ளத் தெளிவான தீர்ப்பு அத்தகைய தொல்லைகள் எதுவும் ஏற்படாமல் பாதுகாக்கும் என நம்பப்படுகிறது. பாதகமான தீர்ப்பளிக்கப்பட்டிருந்தால் அதை சாக்காக வைத்துக்கொண்டு யெகோவாவின் சாட்சிகளின் மதத்தைப் பதிவு செய்ய விடாதபடி முட்டுக்கட்டை போடப்பட்டிருக்கும். இந்தப் பொய்யான சாக்குப்போக்கை நீதிமன்றம் தூக்கியெறிந்ததற்கு மனமார்ந்த நன்றி.
இந்த நாட்டிலுள்ள 7,000-க்கும் அதிகமான யெகோவாவின் சாட்சிகள் பதிவு செய்யப்பட்ட மதத்தாராக இருக்க அனுமதிக்கப்படுவார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இதற்கிடையில் ‘அரராத் தேசத்தில்’ மெய் வணக்கம் இன்னும் ஜீவிக்கிறது, தழைத்து வருகிறது.
[அடிக்குறிப்பு]
a ஆர்மீனியர்கள் தங்கள் தேசத்தை அரராத் மலையோடு சம்பந்தப்படுத்துவதற்கு இது ஒரு காரணம். பூர்வ காலத்தில், ஆர்மீனியா மிகப் பெரிய ராஜ்யமாக இருந்தது, அதன் எல்லைக்குள்தான் இந்த மலைகள் இருந்தன. இதன் காரணமாகவே ஏசாயா 37:38-ல் பைபிளின் கிரேக்க செப்டுவஜின்ட் மொழிபெயர்ப்பு ‘அரராத் தேசத்தை’ “ஆர்மீனியா” என்று கூறுகிறது. அரராத் மலை இப்போது துருக்கியின் கிழக்கு எல்லையில் அமைந்துள்ளது.
[பக்கம் 12-ன் படம்]
விசாரணையின் போது லையோவா மார்காரியன்
[பக்கம் 13-ன் படம்]
சகோதரர் மார்காரியனும் அவரது குடும்பத்தாரும்