அன்பு அவசியம் தேவை
வயது, பண்பாடு, மொழி, இனம் ஆகியவை எதுவாக இருந்தாலும், எல்லா மனிதருமே அன்புக்காக ஏங்குகிறார்கள். அந்த அன்பு கிடைக்காவிட்டால் அவர்கள் சந்தோஷமாக இருக்க முடிவதில்லை. மருத்துவ ஆராய்ச்சியாளர் ஒருவர் இவ்வாறு எழுதினார்: “நமக்கு சுகத்தையும் சுகவீனத்தையும், சோகத்தையும் சந்தோஷத்தையும், துன்பத்தையும் ஆறுதலையும் அளிக்கும் அடிப்படை அம்சங்கள் அன்பும் அன்யோன்யமுமே. இந்த குணமுள்ள ஒரு புதிய மருந்து மட்டும் இருந்தால், ஒருவேளை நாட்டிலுள்ள எல்லா டாக்டர்களுமே தங்கள் நோயாளிகளுக்கு இந்த மருந்தைத்தான் சிபாரிசு செய்வார்கள். அப்படி சிபாரிசு செய்யாமல் இருப்பது தகாத செயலாகக்கூட கருதப்படும்.” என்றாலும், அன்பும் பாசமும் நிறைந்த உறவுகளைப் பெற வேண்டுமென்ற மனிதனின் ஆசைக்கு தற்போதைய சமுதாயம் முக்கியத்துவம் கொடுப்பதில்லை; மாறாக, அதன் மீடியாவும் பிரபல நட்சத்திரங்களும் பணம், பதவி, புகழ், செக்ஸ் ஆகியவற்றிற்கே அதிமுக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். உலகப் பிரகாரமான லட்சியங்களை அடைவதும் அந்தஸ்துள்ள வேலையைப் பெற்றிருப்பதுமே முக்கியம் என்றும், இவற்றை வைத்துத்தான் ஒருவர் வாழ்க்கையில் எந்தளவு வெற்றி சிறந்திருக்கிறார் என்பதை சொல்ல முடியும் என்றும் படித்த மேதாவிகள் பலர் அழுத்திக் கூறுகிறார்கள். உண்மைதான், கல்வி கற்பதும் திறமைகளை வளர்ப்பதும் முக்கியமானவையே; ஆனால் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் நேரத்தை கொடுக்க முடியாமல் போகுமளவுக்கு கடிவாளம் போட்டதுபோல் அவற்றை மட்டுமே நாடித்தேடுவது அவசியம்தானா? ஒருவருக்கு திறமைகள் நிறைய இருந்தும் அன்பு இல்லையென்றால், அவர் “சத்தமிடுகிற வெண்கலம் போலவும், ஓசையிடுகிற கைத்தாளம் போலவும்” இருக்கிறார் என மனித சுபாவத்தை கூர்ந்து கவனித்திருந்த பூர்வ கல்விமான் ஒருவர் எழுதினார். (1 கொரிந்தியர் 13:1) இப்படிப்பட்ட ஜனங்கள் பெரிய செல்வந்தர்கள் ஆகலாம், பேரும் புகழும் பெறலாம், ஆனால் ஒருபோதும் உண்மையான சந்தோஷத்தைக் காண மாட்டார்கள்.
மனிதர்களைப் பற்றி நன்கு தெரிந்து வைத்திருப்பவரும், அவர்கள்மீது விசேஷ பாசத்தை வைத்திருப்பவருமான இயேசு கிறிஸ்து, கடவுள்மீதும் அயலகத்தார்மீதும் அன்பு செலுத்துவது அதிமுக்கியமென தம் போதனைகளில் வலியுறுத்தினார். ‘உன் தேவனாகிய யெகோவாவிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக . . . உன்னிடத்தில் நீ அன்புகூருவது போலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக’ என அவர் சொன்னார். (மத்தேயு 22:37-39) இந்த வார்த்தைகளை யார் கடைப்பிடிக்கிறார்களோ அவர்கள்தான் உண்மையில் இயேசுவின் சீஷர்களாக இருக்க முடியும். ஆகவே, “நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்” என அவர் சொன்னார்.—யோவான் 13:35.
அப்படியானால், இன்றைய உலகில் ஒருவர் எவ்வாறு அன்பை வளர்க்க முடியும்? பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு அன்பைப் பற்றி எவ்வாறு கற்றுத்தர முடியும்? இந்தக் கேள்விகளுக்கு அடுத்த கட்டுரை பதிலளிக்கும்.
[பக்கம் 3-ன் படங்கள்]
பேராசையின் பிடியில் சிக்கியிருக்கும் இவ்வுலகில் அன்பை வளர்ப்பது பெரிய சவால்