பிள்ளைகளுக்கு என்ன ஆஸ்தியை விட்டுச் செல்ல கடமைப்பட்டிருக்கிறீர்கள்?
தென் ஐரோப்பாவில் வசிக்கும் பாவ்லாஸ் ஒரு குடும்பஸ்தர், ஆனால் தன்னுடைய மனைவி, 13 மற்றும் 11 வயது மகள்கள், 7 வயது மகன் ஆகியோருடன் அவர் நேரம் செலவிடுவது வெகு அபூர்வம். தன் கனவை நனவாக்குவதற்கு கைநிறைய சம்பாதிக்க வேண்டியிருப்பதால் வாரத்தில் ஏழு நாட்களுமே இரண்டு நீண்ட ஷிப்டுகளில் வேலை செய்கிறார். தன்னுடைய மகள்களுக்கு ஆளுக்கொரு அப்பார்ட்மென்ட் வாங்கித் தருவதும் தன்னுடைய மகனுக்கு சிறு தொழில் ஒன்றை ஆரம்பித்துத் தருவதுமே அவருடைய கனவு. அவருடைய மனைவி ஸொஃபீயா தன் பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கைக்குத் தேவையான லினன்கள், கிச்சன் சாமான்கள், பீங்கான் பொருட்கள், ஸில்வர் ஐட்டங்கள் ஆகியவற்றை சேர்த்து வைக்கிறார். அவர்கள் ஏன் இவ்வளவு பாடுபடுகிறார்கள் என்று கேட்டபோது “எல்லாம் எங்கள் பிள்ளைகளுக்காகத்தான்!” என இருவரும் ஒரே சமயத்தில் பதிலளித்தார்கள்.
பாவ்லாஸையும் ஸொஃபீயாவையும் போலவே இன்று அநேகப் பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளின் வாழ்க்கை நன்றாக அமைவதற்கு தங்களாலான மிகச் சிறந்ததை செய்கிறார்கள். சிலர் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்துக்காக பணத்தை சேமித்து வைக்கிறார்கள். மற்றவர்கள் தங்களுடைய பிள்ளைகள் போதிய கல்வி அறிவைப் பெறும்படியும், பிற்காலத்தில் உதவியாக இருக்கும் தொழில் திறமைகளைக் கற்கும்படியும் பார்த்துக் கொள்கிறார்கள். பெரும்பாலான பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு தாங்கள் அளிக்கும் இப்படிப்பட்ட பரிசுகளையெல்லாம் அன்பின் சின்னங்களாக கருதுகிறார்கள்; என்றாலும் இவற்றை அளிப்பது உறவினர்கள், நண்பர்கள், சுற்றுமுற்றும் இருப்பவர்கள் ஆகியோருடைய எதிர்பார்ப்புகளின்படி வாழ்வதை அநேக சமயங்களில் பெரும் சுமையாக ஆக்கிவிடுகிறது. எனவே அக்கறையுள்ள பெற்றோர்கள், ‘எங்கள் பிள்ளைகளுக்கு எந்தளவு செய்ய நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோம்?’ என்று சரியாகவே கேட்கிறார்கள்.
எதிர்காலத்துக்காக ஏற்பாடுகளை செய்தல்
கிறிஸ்தவ பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்கு தேவையான உடைமைகளைச் சேர்த்து வைப்பது இயல்பானது மட்டுமல்ல, அது வேதப்பூர்வமானதும்கூட. அப்போஸ்தலனாகிய பவுல், “பெற்றாருக்குப் பிள்ளைகளல்ல, பிள்ளைகளுக்குப் பெற்றார்களே பொக்கிஷங்களைச் [அதாவது, உடைமைகளைச்] சேர்த்து வைக்க வேண்டும்” என்று அவருடைய காலத்திலிருந்த கிறிஸ்தவர்களுக்கு சொன்னார். (2 கொரிந்தியர் 12:14) மேலும், பிள்ளைகளைக் கவனிப்பது பெற்றோர்களின் முக்கிய கடமையாக இருக்கிறதென்று பவுல் சொன்னார். “ஒருவன் தன் சொந்த ஜனங்களையும், விசேஷமாகத் தன் வீட்டாரையும் விசாரியாமற்போனால், அவன் விசுவாசத்தை மறுதலித்தவனும், அவிசுவாசியிலும் கெட்டவனுமாயிருப்பான்” என்று அவர் எழுதினார். (1 தீமோத்தேயு 5:8) பைபிள் காலங்களில் கடவுளுடைய ஊழியர்கள் ஆஸ்தியை முக்கியமானதாக கருதினார்கள் என்பதற்கு ஏகப்பட்ட பைபிள் பதிவுகள் இருக்கின்றன.—ரூத் 2:19, 20; 3:9-13; 4:1-22; யோபு 42:15.
என்றாலும், பிள்ளைகளுக்கு மிகப் பெரிய ஆஸ்தியை அளிக்கும் முயற்சியில் பெற்றோர் சிலசமயம் மூழ்கிவிடுவார்கள். ஏன் அப்படி? தென் ஐரோப்பாவிலிருந்து அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்த மானலிஸ் என்ற தகப்பன் அதற்கான ஒரு காரணத்தை சொல்கிறார்: “இரண்டாம் உலக யுத்தத்தின் நாசங்களையும், பஞ்சம், வறுமை போன்றவற்றையும் அனுபவித்த பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளின் வாழ்க்கையை மேம்படுத்துவதில் உறுதியாயிருக்கிறார்கள். . . . மட்டுக்கு மீறிய பொறுப்புணர்வு காரணமாகவும், பிள்ளைகளின் வாழ்க்கையை சிறந்த விதத்தில் அமைத்துத் தர வேண்டுமென்று ஆசைப்படுவதன் காரணமாகவும் சிலசமயங்களில் பெற்றோர் தங்களுக்குத் தாங்களே கேடு விளைவித்துக் கொள்கிறார்கள்” என்று அவர் சொல்கிறார். சொல்லப்போனால், சில பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளுக்கு சொத்துசுகங்களைச் சேர்த்து வைக்க வேண்டுமென்பதற்காக தங்களுடைய அத்தியாவசிய தேவைகளைக்கூட விட்டுக்கொடுத்துவிட்டு தியாக வாழ்க்கை வாழ்கிறார்கள். ஆனால் பெற்றோர்கள் அப்படி செய்வது ஞானமான காரியமா?
‘மாயையும் பெரிய தீங்கும்’
பூர்வ இஸ்ரவேலின் ராஜாவான சாலொமோன், ஆஸ்தியைக் குறித்து ஓர் எச்சரிப்பை விடுத்தார். “சூரியனுக்குக் கீழே நான் பட்ட பிரயாசத்தையெல்லாம் வெறுத்தேன்; எனக்குப் பின் வரப்போகிறவனுக்கு அதை நான் வைத்துப்போக வேண்டியதாகுமே. அவன் புத்திமானாயிருப்பானோ, மூடனாயிருப்பானோ, அதை யார் அறிவார்? ஆகிலும் சூரியனுக்குக் கீழே நான் பிரயாசப்பட்டு ஞானமாய்ச் சம்பாதித்த சகல வஸ்துக்களின்பேரிலும் அவன் அதிகாரியாவான்; இதுவும் மாயையே. . . . ஒருவன் புத்தி, யுக்தி, நிதானத்தோடு பிரயாசப்படுகிறான்; ஆகிலும் அப்படிப் பிரயாசப்படாதிருந்த வேறொருவனுக்கு அவன் அதைச் சொந்தமாக விட்டுவிட வேண்டியதாகும்; இதுவும் மாயையும் பெரிய தீங்குமாய் இருக்கிறது.”—பிரசங்கி 2:18-21.
சாலொமோன் விளக்குகிறபடி, ஆஸ்தியைப் பெற்றுக்கொள்கிறவர்கள் தாங்களாகவே கஷ்டப்பட்டு அதைச் சேர்க்காததால், அதன் முழு மதிப்பையும் உணராமல் இருக்கலாம். விளைவு? பிள்ளைகளுக்காக பெற்றோர் கஷ்டப்பட்டு சேர்த்து வைத்ததையெல்லாம் அவர்கள் முட்டாள்தனமாக கையாண்டு விடலாம். அப்படி கடினமாக உழைத்து சம்பாதித்ததை அவர்கள் ஊதாரித்தனமாகவும் செலவு செய்துவிடலாம். (லூக்கா 15:11-16) அது எப்பேர்ப்பட்ட “மாயையும் பெரிய தீங்குமாய்” இருக்கும்!
ஆஸ்தியும் பேராசையும்
பெற்றோர்கள் சிந்தித்து பார்ப்பதற்கு வேறொன்றும் இருக்கிறது. சில கலாச்சாரங்களில் பரம்பரைச் சொத்துகள், கல்யாணச் சீதனங்கள் போன்றவற்றிற்கு ரொம்பவே கவனம் செலுத்துவார்கள். அப்படிப்பட்ட இடங்களில் பிள்ளைகள் பேராசைப் பிடித்தவர்களாக ஆகிவிடலாம்; ஆம், தங்கள் பெற்றோரின் சக்திக்கு மீறி நிலத்தை அல்லது வரதட்சணையைக் கொடுக்க சொல்லி வற்புறுத்தலாம். “இரண்டு, மூன்று மகள்களை உடைய தகப்பனா, ஐயகோ!” என்கிறார் கிரீஸை சேர்ந்த லூகாஸ் என்ற ஒரு தகப்பன் நக்கலாக. அவர் சொல்கிறதாவது: “அப்பா தங்களுக்கு கொடுக்கும் பொருட்களை, மற்ற பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு ‘தாராளமாக’ சேர்த்து வைத்திருக்கும் பொருட்களோடு மகள்கள் ஒப்பிட்டுப் பார்க்கலாம். போதுமான வரதட்சணை கொடுக்க வழியில்லையென்றால் தங்களுக்கு கல்யாணமாவதே கடினம் என்பதை அவர்கள் சுட்டிக்காட்டலாம்.”
இந்தக் கட்டுரையில் ஏற்கெனவே அறிமுகப்படுத்தப்பட்ட மானலிஸ் சொல்கிறார்: “தன்னுடைய வருங்கால மாமனார், மகளுக்கு ஏதாவது ஒன்றை தருவதாக வாக்குறுதி தரும் வரையில், அதாவது வழக்கமாக ஒரு நிலத்தையோ அல்லது ரொக்கத்தையோ தருவதாக சொல்லும் வரையில் ஓர் இளைஞன் கல்யாணத்தை இழுத்தடிக்கக்கூடும். அது ஒரு விதமான மிரட்டலாகவும்கூட மாறி விடலாம்.”
எல்லா விதமான பேராசைகளையும் பைபிள் எச்சரிக்கிறது. “ஆரம்பத்திலே துரிதமாகக் [“பேராசையால்,” NW] கிடைத்த சுதந்தரம் [அதாவது, ஆஸ்தி] முடிவிலே ஆசீர்வாதம் பெறாது” என்று சாலொமோன் எழுதுகிறார். (நீதிமொழிகள் 20:21) அதைத்தான் அப்போஸ்தலன் பவுல் வலியுறுத்திக் காட்டினார்: “பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது.”—1 தீமோத்தேயு 6:10; எபேசியர் 5:5.
“ஆஸ்தியோடே ஞானம்”
ஆஸ்திக்கு ஓரளவு மதிப்பு இருப்பது உண்மைதான். ஆனால் பொருட்செல்வங்களைவிட ஞானத்திற்குத்தான் அதிக மதிப்பு இருக்கிறது. “சுதந்தரத்தோடே [அதாவது, ஆஸ்தியோடே] ஞானம் நல்லது; . . . இதினாலே பிரயோஜனமுண்டு . . . ஞானம் கேடகம், திரவியமும் கேடகம்; ஞானம் தன்னை உடையவர்களுக்கு ஜீவனைத் தரும்; இதுவே அறிவின் மேன்மை” என்று சாலொமோன் ராஜா எழுதினார். (பிரசங்கி 7:11, 12; நீதிமொழிகள் 2:7; 3:21) உண்மைதான், தேவைப்படுவதைப் பெற்றுக்கொள்ள பணம் உதவிசெய்கிறது, அதை வைத்திருப்பவருக்கு ஓரளவு பாதுகாப்பையும் அளிக்கிறது, என்றாலும் அது கைவிட்டுப் போகக்கூடிய ஒரு நிலையும் ஏற்படலாம். மறுபட்சத்தில், ஞானமானது—பிரச்சினைகளைச் சமாளிக்க அல்லது குறிப்பிட்ட சில இலட்சியங்களை அடைய அறிவை பயன்படுத்தும் திறனானது—முட்டாள்தனமான தீர்மானங்களை எடுப்பதிலிருந்து ஒரு மனிதனை பாதுகாக்கலாம். சரியான தேவ பயத்தின் அடிப்படையில் ஞானத்தை காண்பிக்கும்போது சீக்கிரத்தில் வரவிருக்கிற கடவுளுடைய புதிய உலகில் ஒருவர் நித்திய வாழ்க்கையைப் பெற்றுக்கொள்ள உதவலாம். எப்பேர்ப்பட்ட அருமையான ஆஸ்தி அது!—2 பேதுரு 3:13.
அப்படிப்பட்ட ஞானத்தைப் பயன்படுத்தி கிறிஸ்தவ பெற்றோர்கள் எது எதற்கெல்லாம் முதலிடம் கொடுக்க வேண்டுமென்பதை தங்களுக்கும் தங்கள் பிள்ளைகளுக்கும் தீர்மானிக்கிறார்கள். (பிலிப்பியர் 1:10, NW) பிள்ளைகளுக்கு சேர்த்து வைக்கப்பட்டுள்ள பொருளுடைமைகள், ஆவிக்குரிய காரியங்களைவிட அதிக முக்கியமாகி விடக்கூடாது. இயேசு தம்மை பின்பற்றியவர்களை இவ்வாறு ஊக்குவித்தார்: “முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்.” (மத்தேயு 6:33) எனவே, தங்களுடைய குடும்பத்திற்காக ஆவிக்குரிய இலக்குகளை வைக்கும் கிறிஸ்தவ பெற்றோர்கள் நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம். ஞானியான சாலொமோன் ராஜா இவ்வாறு எழுதினார்: “நீதிமானுடைய தகப்பன் மிகவும் களிகூருவான்; ஞானமுள்ள பிள்ளையைப் பெற்றவன் அவனால் மகிழுவான். உன் தகப்பனும் உன் தாயும் சந்தோஷப்படுவார்கள்; உன்னைப் பெற்றவள் மகிழுவாள்.”—நீதிமொழிகள் 23:24, 25.
நிலையான ஆஸ்தி
பூர்வ இஸ்ரவேலர்கள் வழிவழியாக வந்த தங்களுடைய ஆஸ்தியை மிக முக்கியமானதாய் கருதினார்கள். (1 இராஜாக்கள் 21:2-6) என்றாலும், யெகோவா அவர்களிடம்: ‘இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிற இந்த வார்த்தைகள் உன் இருதயத்தில் இருக்கக்கடவது. நீ அவைகளை உன் பிள்ளைகளுக்குக் கருத்தாய்ப் போதித்து, நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக் குறித்துப் பேசு’ என்று நினைப்பூட்டினார். (உபாகமம் 6:6, 7) கிறிஸ்தவ பெற்றோர்களுக்கும் இதே போன்ற நினைப்பூட்டுதல் கொடுக்கப்பட்டிருக்கிறது: “கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும் அவர்களை [உங்கள் பிள்ளைகளை] வளர்ப்பீர்களாக.”—எபேசியர் 6:4.
பைபிளிலிருந்து போதனைகளை அளிப்பது தங்கள் குடும்பத்தை கவனிக்கும் பொறுப்பின் ஒரு பாகமாக இருக்கிறதென்பதை ஆவிக்குரிய கண்ணோட்டமுள்ள பெற்றோர்கள் உணருகிறார்கள். மூன்று பிள்ளைகளின் தகப்பனான ஆன்த்திரியாஸ் என்பவர் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “பிள்ளைகள் தங்களுடைய வாழ்க்கையில் கடவுளுடைய நியமங்களை கடைப்பிடிக்க கற்றுக்கொண்டால் எதிர்காலத்தில் எதையும் சந்திக்க தயாராயிருப்பார்கள்.” பிள்ளைகள் தங்களுடைய படைப்பாளரிடம் தனிப்பட்ட ஓர் உறவை ஏற்படுத்திக் கொள்ளவும் அதை வளர்த்துக் கொள்ளவும் உதவுவதுகூட இத்தகைய ஆஸ்தியில் அடங்கும்.—1 தீமோத்தேயு 6:19.
உங்களுடைய பிள்ளையின் ஆன்மீக எதிர்காலத்திற்காக என்ன ஏற்பாடுகளை செய்து தருவதென்று யோசித்துவிட்டீர்களா? உதாரணத்திற்கு, பிள்ளை முழுநேர ஊழியம் செய்து கொண்டிருந்தால் பெற்றோர் என்ன செய்யலாம்? முழுநேர ஊழியர் பண உதவியை உரிமையுடன் கேட்கக் கூடாது, அதை எதிர்பார்க்கவும் கூடாது என்பது உண்மைதான்; ஆனால் தொடர்ந்து முழுநேர சேவையில் இருப்பதற்கு உதவும் வகையில் அவருடைய அன்பான பெற்றோர் ‘அவருடைய தேவைக்கேற்ப அவரோடு பகிர்ந்துகொள்ள’ தீர்மானிக்கலாம். (ரோமர் 12:13, NW; 1 சாமுவேல் 2:18, 19; பிலிப்பியர் 4:14-18) இத்தகைய ஆதரிக்கும் மனப்பான்மையைக் காண்பிப்பது யெகோவாவை பிரியப்படுத்தும் என்பதில் சந்தேகமே இல்லை.
அப்படியானால், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு என்ன செய்ய கடமைப்பட்டிருக்கிறார்கள்? பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளுக்காக பொருளுடைமைகளை சேர்த்து வைப்பது போக சதாகாலத்திற்கும் அவர்களுக்கு நன்மையளிக்கக்கூடிய வளமிக்க ஆவிக்குரிய ஆஸ்தியை அவர்கள் பெறும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். அப்போது சங்கீதம் 37:18-லுள்ள வார்த்தைகள் உண்மையென நிரூபிக்கப்படும்: ‘உத்தமர்களின் நாட்களைக் கர்த்தர் அறிந்திருக்கிறார்; அவர்கள் ஆஸ்தி என்றென்றைக்கும் இருக்கும்.’
[பக்கம் 26, 27-ன் படங்கள்]
உங்கள் பிள்ளைகளுக்கு என்ன எதிர்காலத்தை மனதில் வைத்திருக்கிறீர்கள்?