ராஜ்ய அறிவிப்பாளர் அறிக்கை
“மறக்கப்பட்ட பலியாட்கள்” நினைவுகூரப்படுகிறார்கள்
சுவிட்சர்லாந்திலுள்ள பெர்ன் நகரத்தில், 2001-ன் தொடக்கத்தில் நடைபெற்ற “மறக்கப்பட்ட பலியாட்கள்” என்ற கண்காட்சிக்கு பதினைந்து வயதான ஹைகாஸ் என்ற ஒரு யெகோவாவின் சாட்சி சென்றிருந்தான். நாசிக்கள், யெகோவாவின் சாட்சிகளை துன்புறுத்தியதைப் பற்றிய கண்காட்சி அது. அதை பார்த்துவிட்டு போகும்போது ஹைகாஸ் இறுதியில் சொன்னது இதுதான்: “நாசிக்களுடைய ஆட்சியின் கீழ் யெகோவாவின் சாட்சிகள் மிருகத்தனமாக துன்புறுத்தப்பட்டதையும் கொடுமைகளை அனுபவித்ததையும் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அந்தச் சம்பவங்கள் சம்பந்தப்பட்ட உண்மையான ஆவணங்களையும் படங்களையும் இப்போதுதான் முதன்முறையாக பார்க்கிறேன். கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள், அவற்றை நேரில் கண்டவர்களின் அறிக்கைகள், சரித்திர ஆசிரியர்களின் விளக்கக் குறிப்புகள் இவையெல்லாமே என் மனதிலும் இருதயத்திலும் ஆழமாக பதிந்துவிட்டன.”
சில நாட்களுக்கு பிறகு, வகுப்பு மாணவர்களுக்காக ஒரு ரிப்போர்ட்டை தயாரிக்கும்படி ஹைகாஸிடம் சொல்லப்பட்டபோது, “யெகோவாவின் சாட்சிகள்—நாசி ஆட்சியில் மறக்கப்பட்ட பலியாட்கள்” என்ற தலைப்பை அவன் தேர்ந்தெடுத்தான். அந்தத் தலைப்பில் ரிப்போர்ட்டை தயாரிக்க ஆசிரியரும் சம்மதித்தார். ஆனால் மதசார்பற்ற பிற பிரசுரங்களிலிருந்தும் சில குறிப்புகளை அதில் சேர்க்க வேண்டுமென்று சொன்னார். ஹைகாஸும் சந்தோஷமாக ஒத்துக்கொண்டான். “நாசிக்களின் காலத்திலிருந்த யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி குறிப்பிடும் சில புத்தகங்களை நான் புரட்டிப் பார்த்து, அவற்றின் சுருக்கத்தை எழுதியிருந்தேன். அதோடு ‘மறக்கப்பட்ட பலியாட்கள்’ என்ற கண்காட்சியில் என்னைக் கவர்ந்த கருத்துக்களையும் அதில் விவரித்திருந்தேன். இந்த 43 பக்க ரிப்போர்ட்டில் விளக்கப் படங்களையும் ஃபோட்டோக்களையும்கூட சேர்த்திருந்தேன்.”
நவம்பர் 2002-ல், ஹைகாஸ் தன்னுடைய பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள், குடும்பத்தினர் ஆகியோருக்கு முன்பாக தான் தயாரித்த ரிப்போர்ட்டை வாசித்தான். அதற்கு பிறகு கேள்வி-பதில் நேரம் இருந்தது. அது அவனுடைய பைபிள் சார்ந்த நம்பிக்கைகளை விளக்க சந்தர்ப்பமளித்தது. அப்போது அங்கு அமர்ந்திருந்த ஒரு பெண் ஏன் இந்தத் தலைப்பை அவன் தேர்ந்தெடுத்தான் என்று கேட்டாள். அதற்கு அவன், அநேக சரித்திரப் புத்தகங்கள் யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி குறிப்பிடுவதில்லை என்றும், யெகோவாவின் சாட்சிகள் தங்களுடைய கிறிஸ்தவ விசுவாசத்தை எப்படி தைரியமாய் காத்துக் கொண்டார்கள் என்பதை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டுமென்பது தன் விருப்பம் என்றும் விளக்கினான். அவன் அளித்த ரிப்போர்ட் மற்றவர்களை எவ்வாறு பாதித்தது?
“என்னுடைய பள்ளி மாணவர்களுக்கு ஒரே ஆச்சரியம். யெகோவாவின் சாட்சிகள் இந்தளவு பயங்கரமான விதத்தில் துன்புறுத்தப்பட்டார்கள் என்பது அவர்கள் யாருக்குமே தெரிந்திருக்கவில்லை. அதுமட்டுமல்ல, நாசி சித்திரவதை முகாமில் போடப்பட்டிருந்த யெகோவாவின் சாட்சிகள் பிரத்தியேகமான ஒரு அடையாளத்தை, அதாவது ஊதா நிற முக்கோணத்தை அவர்களுடைய சட்டையில் அணிந்திருந்தார்கள் என்பதும் அநேகருக்கு தெரிந்திருக்கவில்லை” என்று ஹைகாஸ் சொன்னான்.
இந்த ரிப்போர்ட்டை அளித்த பிறகு, தன்னுடைய சக மாணவர்களிடம் பேசுவதற்கான நிறைய வாய்ப்புகள் ஹைகாஸுக்கு கிடைத்தன. அதோடு இரத்தம் ஏற்றுவது, மதுபானம் அருந்துவது, ஒழுக்க நெறிகளை கடைப்பிடிப்பது போன்றவற்றில் யெகோவாவின் சாட்சிகளுடைய பைபிள் சார்ந்த நிலைநிற்கை என்ன என்பதை எடுத்துக் காட்டவும் அவனுக்கு வாய்ப்புகள் கிடைத்தன. “அதற்குப் பிறகு, என் ஸ்கூல்ல ஒருத்தர்கூட என்னை கேலியும் செய்யவில்லை கிண்டலும் செய்யவில்லை” என்றான் அவன். அதுபோக, அவனுடைய ரிப்போர்ட் இப்போது பள்ளி நூலகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. யெகோவாவின் சாட்சிகளுடைய தைரியமான நிலைநிற்கையை அது எப்போதும் நினைப்பூட்டிக் கொண்டே இருக்கும்.