நீங்கள் பார்த்திருக்கும் அற்புதங்கள்!
“அற்புதம்” என்ற வார்த்தைக்கு, “தனிச்சிறப்பு வாய்ந்த அல்லது வியப்பான ஒரு சம்பவம், காரியம், அல்லது சாதனை” என்ற மற்றொரு அர்த்தமும் இருக்கிறது. இது போன்ற அற்புதங்களை நாம் எல்லோருமே பார்த்திருக்கிறோம். இவை கடவுளுடைய தலையீட்டினால் நிகழ்ந்தவை அல்ல.
இன்று மனிதர்கள் இயற்கை நியதிகளை கூடுதலாக புரிந்துகொண்டிருப்பதால், ஒரு காலத்தில் நினைத்துக்கூட பார்த்திராத காரியங்களிலெல்லாம் சாதனை படைத்திருக்கிறார்கள். உதாரணத்திற்கு, கம்ப்யூட்டர்கள், டிவி, விண்வெளி தொழில்நுட்பம் போன்ற துறைகளில் சுலபமாக செய்யப்பட்டிருக்கும் சாதனைகளை எல்லாம் நூறு ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் எட்டாக் கனியாகவே கருதியிருப்பார்கள்.
கடவுளுடைய சிருஷ்டிப்புகளில் காணப்படும் வியக்க வைக்கும் அநேக அறிவியல் வினோதங்களைப் பற்றி தங்களுக்கு அற்ப சொற்பமே தெரியுமென்று விஞ்ஞானிகள் சிலர் ஒப்புக்கொள்கிறார்கள்; அதன் காரணமாக, ஒரு காரியம் நிச்சயம் நடக்காது என்று தங்களால் அடித்துக்கூற முடியவே முடியாது என்றும் அவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். ஒரு காரியம் நடப்பதற்கு சாத்தியம் குறைவு என்று மட்டுமே அவர்கள் சொல்ல விரும்புகிறார்கள். இவ்வாறு, எதிர்காலத்தில் “அற்புதங்கள்” நடக்குமென அவர்களே ஒப்புக்கொள்கிறார்கள்.
‘இயற்கைக்கு அப்பாற்பட்ட ஊற்றுமூலத்தினால்’ நடக்கும் காரியங்களைச் சுட்டிக்காட்ட பொதுவாக “அற்புதம்” என்ற வார்த்தையைப் பயன்படுத்தினாலும், நாம் ஒவ்வொருவருமே அற்புதங்களைப் பார்த்திருப்பதாக சொல்லலாம். உதாரணத்திற்கு, சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் போன்றவற்றை நாம் பார்க்கிறோம். அவை எல்லாமே ‘இயற்கைக்கு அப்பாற்பட்ட ஒரு ஊற்றுமூலத்தினால்’ உண்டானவையாகும். அந்த ஊற்றுமூலம் சிருஷ்டிகர் அல்லாமல் வேறு யாராய் இருக்க முடியும்? மேலுமாக, நம் உடல் எவ்வாறு செயல்படுகிறது; நம் மூளை எவ்வாறு செயல்படுகிறது; கரு எவ்வாறு ஒரு குழந்தையாக வளர்ச்சியடைகிறது என்றெல்லாம் யாரால்தான் சொல்ல முடியும்? உடல் இயந்திரம் என்ற ஆங்கில நூல் இவ்வாறு குறிப்பிடுகிறது: “மத்திய நரம்பு மண்டல கட்டுப்பாட்டுடன் இணைந்து செயலாற்றும் மனித உடலமைப்பு, புலன்கள் கொண்ட சிக்கலான கருவியாகும், நடமாடும் தானியங்கி எஞ்ஜினாகும், ‘இனப்பெருக்கம்’ செய்யும் கம்ப்யூட்டராகும். எனவே அது ஓர் அற்புதமான, அதே சமயத்தில் எளிதில் புரிந்துகொள்ள முடியாத படைப்பாகும்.” ‘மனித உடலமைப்பைப்’ படைத்த கடவுள், ஓர் அற்புதத்தையே நிகழ்த்தி இருக்கிறார் என்பது மறுக்க முடியாத உண்மை. அந்த அற்புதம் இன்னமும் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறதே! வேறு விதமான அற்புதங்களும் உண்டு. அவற்றை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள், ஆனால் அவை அற்புதங்களென உணர்ந்திருக்க மாட்டீர்கள்.
ஒரு புத்தகம்கூட ஓர் அற்புதமாக இருக்க முடியுமா?
பைபிளைப் போன்று வேறு எந்தவொரு புத்தகமும் அமோகமாக வினியோகிக்கப்படவில்லை. பைபிளை ஓர் அற்புதம் என்று நீங்கள் கருதுகிறீர்களா? இன்று அது நம் கையில் இருக்கிறதென்றால் ‘இயற்கைக்கு அப்பாற்பட்ட ஒரு ஊற்றுமூலம்தான்’ அதற்குக் காரணமென்று நம்மால் சொல்ல முடியுமா? பைபிள் என்ற இந்தப் புத்தகம் மனிதர்களால் எழுதப்பட்டது என்பது உண்மையே. ஆனால் அவர்கள் தங்களுடைய சொந்த எண்ணங்களை அல்ல, கடவுளுடைய எண்ணங்களையே அதில் எழுதியதாக குறிப்பிட்டார்கள். (2 சாமுவேல் 23:1, 2; 2 பேதுரு 1:20, 21) இதை சற்று சிந்தித்துப் பாருங்கள். அந்த எழுத்தாளர்கள் சுமார் 40 பேர்; 1,600 வருட காலப்பகுதியில் வாழ்ந்தவர்கள்; வெவ்வேறு பின்னணிகளைச் சேர்ந்தவர்கள். சிலர் மேய்ப்பர்களாகவும் இராணுவ வீரர்களாகவும் மீன் பிடிப்பவர்களாகவும் அரசாங்க ஊழியர்களாகவும் மருத்துவர்களாகவும் ஆசாரியர்களாகவும் அரசர்களாகவும் இருந்தவர்கள். ஆனாலும்கூட அவர்களால் சத்தியமும் உண்மையுமான ஒன்றுபட்ட செய்தியை அறிவிக்க முடிந்தது.
யெகோவாவின் சாட்சிகள் பைபிளைக் கவனமாக வாசித்து, ஆராய்ந்து பார்ப்பதால் அதை ‘மனுஷர் வசனமாக ஏற்றுக்கொள்ளாமல், தேவ வசனமாகவே ஏற்றுக்கொள்கிறார்கள்.’ (1 தெசலோனிக்கேயர் 2:13) பைபிளில் முரண்பாடுகளாகக் கருதப்படுபவை எவ்வாறு உண்மையில் அதன் பொதுவான செய்தியோடு ஒத்திசைந்திருக்கின்றன என்பதை பல ஆண்டுகளாக அவர்கள் அச்சிடும் பிரசுரங்கள் விளக்குகின்றன. பைபிளின் நூலாசிரியர் கடவுளே என்பதற்கு அதிலுள்ள ஒத்திசைவு சான்றளிக்கிறது.a
பைபிளை அழித்துப் போடுவதற்குத் தீவிர முயற்சிகள் பல மேற்கொள்ளப்பட்டன. வேறெந்த புத்தகத்தை அழித்துப் போடுவதற்கும் அப்படிப்பட்ட தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதில்லை. இருந்தாலும், பைபிள் இன்று வரை அழியாதிருக்கிறது. பகுதியாகவோ முழுமையாகவோ அது 2,000-க்கும் அதிகமான மொழிகளில் இன்று கிடைக்கிறது. அது ஒரு புத்தகமாகப் பாதுகாக்கப்பட்டதும் அதில் எந்த மாற்றங்களும் செய்யப்படாமல் பாதுகாக்கப்பட்டதும்தானே கடவுளுடைய தலையீடு இருந்ததைக் காட்டுகிறது. பைபிள் உண்மையில் ஓர் அற்புதமே!
‘ஜீவனும் வல்லமையுமுள்ள’ ஓர் அற்புதம்
அற்புத சுகப்படுத்தல்கள், உயிர்த்தெழுதல்கள் என அன்று நடந்த அற்புதங்கள் இன்று நடப்பதில்லை. ஆனால் வரவிருக்கும் கடவுளுடைய புதிய உலகில் இது போன்ற அற்புதங்கள் உலகளவில் மீண்டும் நடக்குமென நாம் நிச்சயமாயிருக்கலாம். அவை நிரந்தர பரிகாரத்தை அளிக்கும். இப்போது நம்மால் புரிந்துகொள்ள முடியாத விதத்தில் அவை நடைபெறும்.
அற்புதமாய் நமக்குக் கிடைத்திருக்கும் பைபிள்தானே இன்று அற்புதங்களை நிகழ்த்தும் சக்தி படைத்தது. ஆளுமையை மாற்றிக்கொள்ள அது மக்களுக்கு உதவுகிறது. (பக்கம் 8-ல், “கடவுளுடைய வார்த்தையின் வல்லமை” என்ற பெட்டியிலுள்ள உதாரணத்தைக் காண்க.) எபிரெயர் 4:12 இவ்வாறு சொல்கிறது: “தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது.” ஆம், உலகமுழுவதிலும் வாழ்ந்துவரும் 60 லட்சத்துக்கும் அதிகமானோர், தங்களுடைய வாழ்க்கையை அடியோடு மாற்றியிருப்பதற்கு பைபிள் முக்கிய காரணமாக இருந்திருக்கிறது. அவர்களுடைய வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக ஆக்கியிருக்கிறது. ஒளிமயமான ஓர் எதிர்கால நம்பிக்கையை அளித்திருக்கிறது.
உங்களுடைய வாழ்க்கையிலும் பைபிள் ஓர் அற்புதம் நிகழ்த்துவதை நீங்கள் காண விரும்புகிறீர்களா?
[அடிக்குறிப்பு]
a முரண்பாடுகள் என்று சொல்லப்படுபவை எவ்வாறு உண்மையில் ஒன்றுக்கொன்று இசைவாக இருக்கின்றன என்பதைக் காண விரும்பினால், யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட பைபிள்—கடவுளுடைய வார்த்தையா, மனிதனுடையதா? என்ற ஆங்கில புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள நிறைய உதாரணங்களை வாசித்துப் பாருங்கள்.
[பக்கம் 7-ன் பெட்டி/படம்]
மரித்திருந்தாரா உயிரோடிருந்தாரா?
‘போர்ச்சேவகரில் ஒருவன் ஈட்டியினாலே அவருடைய விலாவில் குத்தினான்; இரத்தமும் தண்ணீரும் புறப்பட்டது’ என்று யோவான் 19:33, 34 சொல்கிறது. இந்தச் சமயத்தில் இயேசு உயிரோடில்லை. ஆனால் அவர் உயிரோடிருந்தார் என மத்தேயு 27:49, 50-ல் சில மொழிபெயர்ப்புகள் குறிப்பிடுகின்றன. ஏன் இந்த வேறுபாடு?
வாதனையின் கழுமரத்தில் இரவு முழுவதும் ஒரு குற்றவாளி தொங்கவிடப்படுவதை மோசேயின் நியாயப்பிரமாணச் சட்டம் தடை செய்தது. (உபாகமம் 21:22, 23) எனவே இயேசுவின் காலங்களில், கழுவேற்றப்பட்ட ஒரு குற்றவாளி இரவு வரை உயிரோடிருந்தால், அவன் சீக்கிரத்தில் இறப்பதற்கு அவனுடைய கால்களை முறிப்பது வழக்கமாயிருந்தது. அவ்வாறு கால்களை முறித்ததால், நேராக நிமிர முடியாமலும் சரியாக சுவாசிக்க முடியாமலும் குற்றவாளி சீக்கிரத்தில் இறந்தான். இயேசுவின் பக்கத்தில் கழுவேற்றப்பட்ட அந்த இரண்டு குற்றவாளிகளின் கால்களை போர்ச்சேவகர்கள் முறித்தாலும் இயேசுவின் கால்களை முறிக்காமல் விட்டுவிட்டது அவர் மரித்துவிட்டார் என்று அவர்கள் நினைத்ததைக் காட்டுகிறது. இயேசு மரித்துவிட்டதை உறுதிசெய்வதற்கும், உயிர்த்தெழுந்துவிட்டார் என்ற பேச்சு பிற்காலத்தில் அடிபடாமல் இருப்பதற்கும் அந்தப் போர்ச்சேவகன் அவருடைய விலாவில் குத்தியிருக்கலாம்.
ஆனால் இந்தச் சம்பவங்களை வித்தியாசமான வரிசைக்கிரமத்தில் மத்தேயு 27:49, 50 (பொது மொழிபெயர்ப்பு, அடிக்குறிப்பு) விவரிக்கிறது. அது இவ்வாறு சொல்கிறது: ‘வேறொருவன் ஓர் ஈட்டியை எடுத்து அவருடைய விலாப்பக்கத்தில் குத்த, இரத்தமும் தண்ணீரும் வடிந்தன.’ ‘இயேசு, மீண்டும் உரத்த குரலில் கத்தி உயிர் விட்டார்.’ இந்த சாய்வெழுத்துக்கள் பூர்வ பைபிள் கையெழுத்துப் பிரதிகள் எல்லாவற்றிலும் காணப்படுவதில்லை. யோவானின் சுவிசேஷத்திலிருந்து எடுக்கப்பட்ட இந்த வார்த்தைகள் சரியான இடத்தில் இல்லாமல் இடையில் ஏதோவொரு இடத்தில் பின்னர் நுழைக்கப்பட்டிருக்கலாம் என்று வல்லுநர்கள் நம்புகிறார்கள். எனவே அநேக மொழிபெயர்ப்புகளில் இந்த வாக்கியம் அடைப்பு குறிகளிலோ, விளக்கமான அடிக்குறிப்பிலோ காணப்படுகிறது. சில மொழிபெயர்ப்புகளில் அந்த வாக்கியம் முற்றிலும் நீக்கப்பட்டிருக்கிறது.
புதிய உலக மொழிபெயர்ப்புக்கு அடிப்படையாக இருக்கும் பிரதிகளில், அதாவது வெஸ்ட்காட், ஹார்ட் என்பவர்கள் எழுதிய பிரதிகளில், அந்த வாக்கியம் இரட்டை பகர அடைப்புக் குறிகளில் கொடுக்கப்பட்டிருக்கிறது. “வேதபாரகர்களின் ஊகத்தினால்தான் அந்த வாக்கியம் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும்” என்ற குறிப்பும் கொடுக்கப்பட்டிருக்கிறது.
பெரும்பாலான அத்தாட்சிகள் யோவான் 19:33, 34-ல் சொல்லப்பட்டிருக்கும் குறிப்பு உண்மை என்றே காட்டுகின்றன. ரோம போர்ச்சேவகன் ஈட்டியினாலே இயேசுவினுடைய விலாவில் குத்திய சமயத்தில், அவர் ஏற்கெனவே மரித்திருந்தார்.
[பக்கம் 8-ன் பெட்டி/படம்]
கடவுளுடைய வார்த்தையின் வல்லமை
பிளவுற்ற குடும்பத்தில் வளர்ந்த டெட்லஃப் டீனேஜ் பருவத்திலேயே போதை பொருட்களுக்கும், மதுபானத்திற்கும், ஹெவி மெட்டல் இசைக்கும் அடிமையானார்.b ஸ்கின்ஹெட் என்று பொதுவாக அழைக்கப்படும் ரவுடி கும்பலில் சேர்ந்தார். அவருடைய முரட்டுத்தனத்தால் விரைவில் போலீசாரின் பிடியில் சிக்கினார்.
1992-ல் வடகிழக்கு ஜெர்மனியில் மதுபானம் அனுமதிக்கப்படும் ஒரு ரெஸ்டாரன்ட்டில், பங்க் இசைக் குழுவினர் 35 பேரும், ஸ்கின்ஹெட் ரவுடிகள் 60 பேரும் பயங்கரமாக மோதிக் கொண்டார்கள். அப்போது பங்க் இசைக் குழுவைச் சேர்ந்த தாமஸ் என்பவர் படுகாயம் அடைந்ததால் உயிரிழந்தார். டெட்லஃப் உள்ளிட்ட அக்குழுத் தலைவர்களில் அநேகர் கைது செய்யப்பட்டார்கள். இந்த வழக்கு மீடியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சிறையிலிருந்து வெளி வந்த கொஞ்ச நாட்களில், டெட்லஃப் யெகோவாவின் சாட்சிகளிடமிருந்து ஒரு துண்டுப்பிரதியைப் பெற்றார். “வாழ்க்கையில் ஏன் இவ்வளவு பிரச்சினைகள்?” என்பதே அந்தத் துண்டுப்பிரதியின் தலைப்பாக இருந்தது. அதில் சொல்லப்பட்டிருப்பது சத்தியம் என்பதை அவர் உடனடியாகப் புரிந்துகொண்டார். சாட்சிகளோடு பைபிளைப் படிக்க ஆரம்பித்தார். இது அவருடைய வாழ்க்கையை அடியோடு மாற்றிவிட்டது. 1996-லிருந்து உற்சாகமிக்க யெகோவாவின் சாட்சியாக இருக்கிறார்.
கொல்லப்பட்ட தாமஸ் என்ற இளைஞனுடைய நண்பன் பெயர் செக்ஃப்ரெட். அவரும் ஒரு காலத்தில் பங்க் இசை வெறியர்தான். அவரும்கூட பின்னர் ஒரு யெகோவாவின் சாட்சியானார், இப்போது சபை மூப்பராக சேவித்து வருகிறார். ஒரு சமயம் செக்ஃப்ரெட் பைபிள் பேச்சைக் கொடுப்பதற்காக டெட்லஃபின் சபைக்குச் சென்றபோது, (தாமஸின் தாயும் அவ்வப்போது அங்கு கூட்டங்களுக்குச் செல்கிறார்) டெட்லஃப் அவரை விருந்துக்கு அழைத்தார். கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு முன்பு எலியும் பூனையுமாக இருந்த இவர்கள், இன்று சகோதர அன்பை வெளிக்காட்டுகிறார்கள்.
அதோடு, இவர்கள் இருவரும் பரதீஸிய பூமியில் தாமஸை வரவேற்க ஆவலாய் காத்திருக்கிறார்கள். டெட்லஃப் சொல்கிறார்: “அதை நினைத்தாலே கண்ணீர் பெருக்கெடுக்கிறது. நான் செய்த பாவத்துக்காக ரொம்பவே வேதனைப்படுகிறேன்.” யெகோவாவைப் பற்றி அறிந்துகொள்வதற்கும் பைபிள் தரும் நம்பிக்கையில் மகிழ்வதற்கும், மற்றவர்களுக்கு இப்போது உதவி செய்வது போல, அப்போது தாமஸிற்கும் உதவ வேண்டும் என்பதே இவர்கள் இருவருடைய விருப்பமாகவும் இருக்கிறது.
ஆம், இதுவே கடவுளுடைய வார்த்தையின் வல்லமை!
[அடிக்குறிப்பு]
b பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.
[பக்கம் 6-ன் படம்]
மனித உடல் ஓர் அற்புத படைப்பு
[படத்திற்கான நன்றி]
Anatomy Improved and Illustrated, London, 1723, Bernardino Genga