அலெக்சாண்டிரியாவைச் சேர்ந்த ஃபிலோ வேதவசனங்களுக்கு சுயவிளக்கம் அளித்தவர்
மகா அலெக்சாந்தர் பொ.ச.மு. 332-ல் எகிப்தை தன்வசப்படுத்தினார். உலகையே வளைத்துப் பிடிக்க வேண்டுமென்ற நோக்குடன் அங்கிருந்து கிழக்கு நோக்கி செல்வதற்கு முன்பு அங்கு ஒரு பட்டணத்தை ஸ்தாபித்து அதற்கு அலெக்சாண்டிரியா என்று பெயர் சூட்டினார். அது கிரேக்க கலாச்சாரத்தின் மையமாக ஆனது. சுமார் பொ.ச.மு. 20-ல் இன்னொரு மாவீரர் அந்த மண்ணில் பிறந்தார். வாள், ஈட்டி போன்றவற்றிற்குப் பதிலாக தத்துவ ரீதியிலான நியாயவிவாதங்களை ஆயுதங்களாக இவர் பயன்படுத்தினார். இவர் அலெக்சாண்டிரியாவைச் சேர்ந்த ஃபிலோ என்று அழைக்கப்படுகிறார். யூத பின்னணியிலிருந்து வந்ததால் இவர் ஃபிலோ ஜூடியஸ் என்றும் அழைக்கப்படுகிறார்.
பொ.ச.மு. 607-ல் எருசலேமின் அழிவிற்குப் பிறகு யூதர்கள் பற்பல இடங்களுக்குச் சிதறிப் போனார்கள். இதன் விளைவாக அநேகர் எகிப்தில் குடியேறினார்கள். அவர்களில் ஆயிரக்கணக்கானோர் அலெக்சாண்டிரியாவில் வாழ்ந்து வந்தார்கள். எப்படியும் யூதருக்கும் கிரேக்கருக்கும் இடையே சண்டை சச்சரவுகள் இருக்கத்தான் செய்தன. யூதர்கள் கிரேக்க தெய்வங்களை வணங்க மறுத்தார்கள். கிரேக்கர்களோ எபிரெய வேத வாக்கியங்களை இகழ்ந்து பேசினார்கள். ஃபிலோ கிரேக்கரிடத்தில் கல்வி கற்றதாலும் யூத பின்னணியில் வளர்க்கப்பட்டதாலும் இவ்விரு தொகுதிகளுக்கும் இடையே இருந்த பிரச்சினையை நன்கு அறிந்திருந்தார். யூத மதமே உண்மையான மதமென அவர் நம்பினார். ஆனால் மற்றவர்களைப் போல் அல்லாமல், அவர் புறமதத்தவரை சாந்தமான முறையில் கடவுளிடம் ஈர்ப்பதற்கு முயன்றார். புறமதத்தவர் விரும்பி ஏற்றுக்கொள்ளும் விதத்தில் யூத மதத்தை மாற்ற விரும்பினார்.
பழைய எழுத்துக்களுக்கு புதிய அர்த்தம்
அலெக்சாண்டிரியாவிலிருந்த அநேக யூதர்களைப் போல ஃபிலோவுக்கும் கிரேக்க மொழியே தாய்மொழியாக இருந்தது. எனவே எபிரெய வேதாகமத்தின் கிரேக்க செப்டுவஜின்ட் மொழிபெயர்ப்பே அவரது படிப்பிற்கு முக்கிய புத்தகமாக அமைந்தது. செப்டுவஜின்ட்டை அவர் ஆராய்ந்தபோது அதில் தத்துவக் குறிப்புகள் இருப்பதையும் மோசே “தத்துவ ஞானிகளுக்கெல்லாம் ஞானி”யாக திகழ்ந்ததையும் அறிந்துகொண்டார்.
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கிரேக்க அறிஞர்கள் தங்களுடைய பழைய புராணங்களில் சொல்லப்பட்டிருந்த தேவர் தேவியரின் கதைகளையும் ராட்சதர் பேய்களின் கதைகளையும் நம்ப மறுத்திருந்தனர். பிற்பாடு இந்தக் கதைகளுக்கு புது அர்த்தம் கொடுக்கத் தொடங்கினர். அவர்கள் கையாண்ட முறையைக் குறித்து இலக்கிய வித்துவான் ஜேம்ஸ் டிரமன்ட் இவ்வாறு சொல்கிறார்: “தத்துவஞானிகள் புராணக் கதைகளில் புதைந்துள்ள நுட்பமான அர்த்தங்களைக் கண்டறிய தொடங்குவார்கள். புராணக் கதைகளின் ஆசிரியர்கள் கிளர்ச்சியூட்டும் அடையாள மொழியில் வெறுப்பூட்டும் அபத்தமான விஷயங்களை எழுதியிருக்கிறார்கள்; இவற்றிற்கு தத்துவ ஞானிகள் ஏதோ கருத்தாழமிக்க அர்த்தத்தைத் தர முயலுவார்கள்.” இவ்வாறு அர்த்தமளிக்கும் முறைக்கு தொடர் உருவக விளக்கம் என்று பெயர். வேதவசனங்களுக்கு விளக்கமளிக்க ஃபிலோ இம்முறையைத்தான் பயன்படுத்த முயன்றார்.
உதாரணத்திற்கு, செப்டுவஜின்டின் பாக்ஸ்டர்ஸ் மொழிபெயர்ப்பில் ஆதியாகமம் 3:22-ஐ கவனியுங்கள். அது இவ்வாறு சொல்கிறது: “ஆண்டவராகிய கர்த்தர் தோல் ஆடைகளை உண்டாக்கி ஆதாமுக்கும் அவன் மனைவிக்கும் உடுத்தினார்.” உன்னதமான கடவுள் மனிதர்களுக்கு ஆடைகளை உண்டாக்குவது அவரைத் தரக்குறைவாக்குகிறது என கிரேக்கர்கள் நினைத்தார்கள். எனவே ஃபிலோ அந்த வசனத்தில் உருவகம் இருந்ததாக இவ்வாறு விளக்கினார்: “மனித உடலின் சருமமே தோல் ஆடைகள் என உருவகமாக சொல்லப்பட்டிருக்கிறது. ஏனென்றால் முதலில் கடவுள் அறிவாற்றலை படைத்து அதனை ஆதாம் என்று அழைத்தார். பிறகு உயிரியக்கத்தை படைத்து அதனை உயிர் என்று அழைத்தார். இறுதியாக உடலையும் படைத்து அதனை தோல் ஆடைகள் என்று உருவகமாக அழைத்தார்.” இப்படியாக ஆதாமுக்கும் ஏவாளுக்கும் கடவுள் உடுத்துவித்ததை சிந்தனைக்குரிய தத்துவமாக்க ஃபிலோ முயன்றார்.
ஆதியாகமம் 2:10-14-ஐயும் கவனியுங்கள். அங்கு ஏதேன் தோட்டத்தில் பாய்ந்தோடிய நதியைப் பற்றியும் அந்தத் தோட்டத்திலிருந்து பிரிந்துசென்ற நான்கு ஆறுகளைப் பற்றியும் விவரிக்கப்பட்டுள்ளது. இந்த இயற்கை நிலப்பரப்பின் விவரிப்பில் புதைந்துள்ள ஆழமான அர்த்தத்தை கண்டுபிடிக்க ஃபிலோ முயற்சி செய்தார். தோட்டத்தைக் குறித்து தன்னுடைய கருத்தை தெரிவித்த பிறகு இவ்வாறு சொன்னார்: “ஒருவேளை இந்த வரிகளுக்கும்கூட தொடர் உருவக விளக்கம் இருக்கலாம். காரணம், நான்கு ஆறுகளும் நான்கு பண்புகளைக் குறிக்கின்றன.” பைசோன் ஆறு விவேகத்தையும், கீகோன் ஆறு மனத்தெளிவையும், இதெக்கேல் ஆறு மனவுரத்தையும், ஐபிராத்து ஆறு நீதியையும் குறிக்கிறது என்று அவர் ஊகித்தார். இவ்வாறு, நிலவியல் விளக்கம் மறைந்து தொடர் உருவக விளக்கம் தோன்றியது.
சிருஷ்டிப்பின் பதிவு, ஆபேலைக் காயீன் கொலை செய்த சம்பவம், நோவா காலத்தில் உண்டான ஜலப்பிரளயம், பாபேலில் மொழிகள் குழம்பிப் போனது, நியாயப்பிரமாணத்தின் பல நியமங்கள் இவற்றையெல்லாம் ஆராய்ந்து பார்க்க தொடர் உருவக விளக்கத்தை ஃபிலோ பயன்படுத்தினார். இதற்கு முந்திய பத்தியில் பார்த்த உதாரணத்தின்படி, அவர் வேத வசனங்களின் சொல்லர்த்தமான அர்த்தத்தை முதலில் ஏற்றுக்கொண்டு, பிறகு அடையாள அர்த்தத்தில் அவருடைய விளக்கத்தை அளிப்பார்; “இவற்றை ஒருவேளை தொடர் உருவகமாக நாம் கருத வேண்டியிருக்கலாம்” என்று சொல்லி அவ்விளக்கத்தை அளிப்பார். ஃபிலோவின் பதிவுகளில், உருவகங்களே பளிச்சென தெரிகின்றன, ஆனால், வருத்தகரமாக, வசனங்களின் தெளிவான அர்த்தம் மறைந்துவிடுகிறது.
கடவுள் யார்?
கடவுள் இருக்கிறார் என்பதை நிரூபிக்க ஃபிலோ வலிமையான உதாரணத்தை பயன்படுத்தினார். நிலம், நதிகள், கிரகங்கள், நட்சத்திரங்கள் இவற்றைப் பற்றியெல்லாம் பேசிய பிறகு தன் வாதத்தை இவ்வாறு முடித்தார்: “படைப்புகளிலேயே பூமிதான் மிக அழகாகவும் திறமையாகவும் படைக்கப்பட்டிருக்கிறது. பரிபூரண அறிவும் சாதனை படைப்பதில் ஆற்றலுமிக்க யாரோ ஒருவர் அதனைப் படைத்திருப்பது போல் தெரிகிறது. இப்படித்தான், கடவுள் இருக்கிறார் என்ற முடிவுக்கு நாம் வந்திருக்கிறோம்.” இது நியாயமான விவாதம்.—ரோமர் 1:20.
ஆனால் ஃபிலோ சர்வ வல்லமையுள்ள கடவுளின் பண்புகளை விளக்கியபோது, உண்மையை விட்டு வெகு தூரம் சென்றுவிட்டார். கடவுளுக்கு “குறிப்பிடத்தக்க பண்புகள் ஏதுமில்லை” என்றும் கடவுள் நம் “சிந்தனைக்கு எட்டாதவர்” என்றும் கூறினார். “இன்னும் ஒருபடி அதிகமாக சென்று கடவுளுடைய பண்புகளைப் பற்றி தெரிந்துகொள்ள ஆராய்ச்சிகள் செய்வது முட்டாள்தனம்” என்று சொல்லி கடவுளைப் பற்றி தெரிந்துகொள்ள எடுக்கும் முயற்சிகளைக் கண்டனம் செய்தார். அவருடைய இந்தக் கருத்து பைபிளின் அடிப்படையிலானது அல்ல. மாறாக புறமத தத்துவ ஞானியான பிளேட்டோவினால் தோற்றுவிக்கப்பட்டது.
கடவுள் நம் சிந்தனைக்கு கொஞ்சம்கூட எட்டாதவராக இருப்பதால் அவருக்கு ஒரு தனிப்பட்ட பெயரை வைத்து அழைக்கவே முடியாது என்று ஃபிலோ சொன்னார். “எனவே உண்மையிலேயே உயிருள்ள கடவுளாக இருக்கும் ஒருவருக்கு எந்தப் பெயரும் சூட்ட முடியாது என்பதே நியாயமானது” என்றார் ஃபிலோ. இது எப்பேர்ப்பட்ட ஒரு முரண்பாடு அல்லவா!
கடவுளுக்கு தனிப்பட்ட பெயர் இருக்கிறது என்பதை சங்கீதம் 83:17-ல் பைபிள் இவ்வாறு தெளிவாக சொல்கிறது: ‘யெகோவா என்னும் நாமத்தையுடைய தேவரீர் ஒருவரே பூமியனைத்தின் மேலும் உன்னதமானவர்.’ கடவுள் இவ்வாறு சொல்வதாக ஏசாயா 42:8 (திருத்திய மொழிபெயர்ப்பு) குறிப்பிடுகிறது: “நானே யெகோவா, என் நாமம் இதுவே.” அப்படியென்றால் ஃபிலோ ஒரு யூதனாக இந்த வசனங்களை அறிந்திருந்தும் ஏன் கடவுளுக்கு பெயரில்லை என்று போதித்தார்? ஏனென்றால் பைபிளில் குறிப்பிடப்படும் அணுக முடிந்த கடவுளைப் பற்றி அவர் பேசவில்லை. மாறாக கிரேக்க தத்துவத்தின் அணுக முடியாத, பெயரற்ற கடவுளைப் பற்றியே அவர் பேசினார்.
ஆத்துமா என்பது என்ன?
ஆத்துமாவும் உடலும் வெவ்வேறு என்று ஃபிலோ போதித்தார். மனிதனுக்கு “உடலும் ஆத்துமாவும் இருக்கின்றன” என்று அவர் சொன்னார். ஆத்துமா அழியுமா? ஃபிலோவின் விளக்கத்தை கவனியுங்கள்: “நாம் உயிருடன் இருக்கும்போது நம் உடலும் உயிருடன் இருக்கும். நம் உடல் உயிருடன் இருக்கிறபோதிலும் நம் ஆத்துமா உயிரற்றதாக ஒரு கல்லறையில் புதைக்கப்பட்டிருப்பது போல் நம் உடலில் புதைக்கப்பட்டிருக்கும். ஆனால் நம் உடல் இறந்த பிறகு அந்தப் பொல்லாத சடலத்திலிருந்து ஆத்துமா விடுதலையாகி உகந்த வாழ்க்கை வாழும்.” ஆகவே ஃபிலோவைப் பொறுத்தவரை, ஆத்துமாவின் அழிவு அடையாளப்பூர்வமானது. அது உண்மையில் அழிவதே இல்லை; அது சாவாமை உள்ளது.
ஆனாலும், ஆத்துமாவைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது? ஆதியாகமம் 2:7 இவ்வாறு சொல்கிறது, “தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவ சுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்.” மனிதருக்குள் ஆத்துமா என ஒன்று இருப்பதில்லை. மாறாக அவர்களே ஆத்துமா என்பது பைபிளின் கருத்து.
ஆத்துமா அழியும் என்றுகூட பைபிள் சொல்கிறது. எசேக்கியேல் 18:4 இவ்வாறு கூறுகிறது: ‘பாவஞ்செய்கிற ஆத்துமா சாகும்.’ இந்த வசனங்களிலிருந்து, மனிதன் ஒரு ஆத்துமா என்ற சரியான முடிவுக்கு நாம் வரலாம். எனவே ஒரு மனிதன் மரிக்கும்போது ஆத்துமாவும் மரிக்கிறது.—யாக்கோபு 5:20.a
ஃபிலோ இறந்த பிறகு யூதர்கள் அவருடைய போதனைகளுக்கு அவ்வளவாக கவனம் செலுத்தவில்லை. எனினும் கிறிஸ்தவமண்டலம் அவருடைய போதனைகளைப் போற்றி புகழ்ந்தது. ஃபிலோ ஒரு கிறிஸ்தவராக மாறிவிட்டதாய் யூஸிபியஸும் மற்ற சர்ச் தலைவர்களும் நம்பினார்கள். ஜெரோம் அவரை சர்ச் ஃபாதர்களில் ஒருவராக கருதினார். யூதர்களுக்குப் பதிலாக விசுவாசதுரோக கிறிஸ்தவர்களே ஃபிலோவின் பதிவுகளை பாதுகாத்து வைத்தனர்.
ஃபிலோவின் பதிவுகள் மத புரட்சியை ஏற்படுத்தின. ஃபிலோவின் செல்வாக்கு, ஆத்துமா அழியாது என்ற வேதபூர்வமற்ற கொள்கையைப் பெயர்க் கிறிஸ்தவர்கள் ஏற்கும்படி செய்தது. லோகோஸ் (அல்லது, வார்த்தை) பற்றிய ஃபிலோவின் போதனை, விசுவாசதுரோக கிறிஸ்தவத்தின் பைபிள் சார்பற்ற திரித்துவ கோட்பாடு வளர அடிகோலியது.
மோசம் போகாதிருங்கள்
எபிரெய வேதாகமத்தை ஃபிலோ ஆராய்ச்சி செய்கையில் “சாதாரணமாக சொல்லப்பட்டிருப்பவற்றிற்கு பின்னால் மறைந்திருக்கும் எந்தவொரு உருவக அர்த்தத்தையும் விட்டுவிடாதிருக்கும்படி” பார்த்துக்கொண்டார். ஆயினும் கடவுளுடைய சட்டத்தைக் குறித்து உபாகமம் 4:2-ல் மோசே இவ்வாறு சொன்னார்: “நான் உங்களுக்குக் கற்பிக்கும் உங்கள் தேவனாகிய கர்த்தரின் கட்டளைகளை நீங்கள் கைக்கொள்ளும்படி, நான் உங்களுக்குக் கற்பிக்கிற வசனத்தோடே நீங்கள் ஒன்றும் கூட்டவும் வேண்டாம், அதில் ஒன்றும் குறைக்கவும் வேண்டாம்.” ஃபிலோ நல்ல எண்ணத்துடன் வசனங்களுக்கு விளக்கங்களைக் கொடுத்தபோதிலும், அவரது ஊகங்கள் கடவுளுடைய வார்த்தையை புகைபோல் சூழ்ந்து அதன் தெளிவான போதனைகளை மறைத்துவிட்டன.
“நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வல்லமையையும் வருகையையும் பற்றி நாங்கள் உங்களுக்குத் தெரிவித்தபோது சூழ்ச்சியாகப் புனைந்த கதைகளை ஆதாரமாகக் கொண்டு பேசவில்லை” என்று அப்போஸ்தலன் பேதுரு சொன்னார். (2 பேதுரு 1:16, பொது மொழிபெயர்ப்பு) பூர்வ கிறிஸ்தவ சபைக்கு பேதுரு அளித்த போதனைகள் ஃபிலோவின் போதனைகளைப் போல் இல்லாமல் உண்மையான ஆதாரங்களையும் “சத்திய ஆவியாகிய” கடவுளுடைய ஆவியையும் அடிப்படையாகக் கொண்டிருந்தன. அவை சத்தியத்திடம் வழிநடத்தின.—யோவான் 16:13.
ஒருவேளை நீங்கள் பைபிள் சொல்கிற கடவுளை வணங்க விரும்பினால் உங்களுக்கு தேவை உண்மையான வழிநடத்துதல், மனித சிந்தனைகளின் அடிப்படையில் அமைந்த விளக்கங்கள் அல்ல. யெகோவாவைப் பற்றியும் அவருடைய சித்தத்தைப் பற்றியும் திருத்தமான அறிவு உங்களுக்கு தேவை. நேர்மை மனதோடு பைபிளைப் படிக்க மனத்தாழ்மையும் தேவை. அப்படிப்பட்ட சரியான மனநிலையுடன் நீங்கள் பைபிளைப் படித்தால் ‘கிறிஸ்து இயேசுவைப் பற்றும் விசுவாசத்தினாலே உங்களை இரட்சிப்புக்கேற்ற ஞானமுள்ளவராக்கத்தக்க பரிசுத்த வேத எழுத்துக்களை’ புரிந்துகொள்ள முடியும். கடவுளுடைய வார்த்தை உங்களை ‘தேறினவராகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவராகவும்’ மாற்றுவதை நீங்களே காண்பீர்கள்.—2 தீமோத்தேயு 3:15-17.
[அடிக்குறிப்பு]
a ஆத்துமாவைப் பற்றி 1910-ம் ஆண்டில் வெளியிடப்பட்ட த ஜூயிஷ் என்ஸைக்ளோப்பீடியா இவ்வாறு சொல்கிறது: “உடல் செத்த பிறகும் ஆத்துமா தொடர்ந்து வாழும் என்ற நம்பிக்கை தத்துவ அல்லது மத ஊகமே தவிர உண்மையான விசுவாசத்தை சார்ந்ததல்ல. பரிசுத்த வேதாகமத்தில் எங்குமே அப்படித் திட்டவட்டமாக சொல்லப்படவில்லை.”
[பக்கம் 10-ன் பெட்டி/படம்]
ஃபிலோ வாழ்ந்த பட்டணம்
ஃபிலோ எகிப்திலுள்ள அலெக்சாண்டிரியாவில் தங்கி வேலை செய்தார். பல நூற்றாண்டுகளுக்கு அந்தப் பட்டணம் புத்தகங்களுக்கும் மேதைகளின் கருத்துப் பரிமாற்றங்களுக்கும் உலக தலைநகராக விளங்கியது.
பட்டணத்து கல்விக்கூடங்களில், பிரபலமான அறிஞர்களிடத்தில் மாணவர்கள் கல்வி பயின்றார்கள். அலெக்சாண்டிரியாவின் நூலகம் உலக புகழை பெற்றது. அதன் நூலகர்கள், அதுவரை எழுதப்பட்டிருந்த அனைத்துப் பதிவுகளையும் பெற்றுக்கொள்ள முயன்றதால் நூல்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் இருந்தது.
அலெக்சாண்டிரியாவும் அதனுடைய அறிவு களஞ்சியங்களும் பெற்றிருந்த உலகப் புகழ் பிற்காலத்தில் கொஞ்சம் கொஞ்சமாக மங்கிவிட்டது. ரோமிலிருந்த பேரரசர்கள் அவர்களுடைய சொந்த நகரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்ததால் ஐரோப்பா கலாச்சார மையமாக மாறியது. பொ.ச. ஏழாம் நூற்றாண்டில் எதிரிகள் அலெக்சாண்டிரியா பட்டணத்தை கைப்பற்றியபோது அது முற்றிலும் வீழ்ச்சியடைந்தது. இந்நாள்வரை சரித்திர ஆசிரியர்கள் நூலகம் அழிந்துவிட்டதைக் குறித்து மனம் வருந்துகிறார்கள். அங்கு நாகரிக வளர்ச்சி ஆயிரம் வருடங்களுக்கு தடைபட்டது என்றும் அவர்களில் சிலர் சொல்கிறார்கள்.
[படத்திற்கான நன்றி]
L. Chapons/Illustrirte Familien-Bibel nach der deutschen Uebersetzung Dr. Martin Luthers
[பக்கம் 12-ன் பெட்டி]
இன்றும் தொடர் உருவக விளக்கம்
பொதுவாக தொடர் உருவகம் என்றால் “சின்னங்கள் மூலமாகவும் மறை குறிப்புகள் மூலமாகவும் கூடுதலான பொருளையோ அல்லது பொருள்களின் தொகுதியையோ தெரிவிப்பதாகும்.” தொடர் உருவகங்கள், எழுத்துப் பதிவுகளில் புதைந்திருக்கும் மிக முக்கியமான காரியங்களுக்கு அடையாளமாக இருப்பதாய் சொல்லப்படுகிறது. அலெக்சாண்டிரியாவின் ஃபிலோவைப் போல இன்றைய மத போதகர்கள் சிலர் பைபிளை விளக்குவதற்கு தொடர் உருவகத்தை பயன்படுத்துகிறார்கள்.
மனிதர் படைக்கப்பட்டது தொடங்கி, பாபேல் கோபுரம் கட்டப்படுகையில் அனைவரும் சிதறிப்போனது வரையான சரித்திரத்தை உள்ளடக்கும் ஆதியாகமம் 1-11 அதிகாரங்களை கவனியுங்கள். கத்தோலிக்க மொழிபெயர்ப்பான த நியூ அமெரிக்கன் பைபிள், இந்தப் பகுதியைக் குறித்து இவ்வாறு சொல்கிறது: “இந்த அதிகாரங்களில் அடங்கியுள்ள கருத்துக்களை இஸ்ரவேல் மக்களின் மனதில் பதிய வைக்கும் வகையில் அதை அவர்களுக்குப் புரிய வைப்பதற்கு, அச்சமயத்தில் அவர்களுக்கு நன்கு பழக்கமாயிருந்த விஷயங்களை வைத்து அவற்றை போதிக்க வேண்டியிருந்தது. இந்தக் காரணத்திற்காகவே உண்மையான கருத்துக்களை இலக்கிய போர்வையிலிருந்து பிரித்துக் காட்ட வேண்டும்.” இந்த மொழிபெயர்ப்பின்படி, ஆதியாகமம் 1-11 அதிகாரங்களை சொல்லர்த்தமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. அவர்களுடைய கருத்தின்படி, உடைக்குள் உடல் மறைந்திருக்கிறது போல, சொற்களுக்குள் ஆழமான கருத்துக்கள் மறைந்திருக்கின்றன.
என்றாலும் ஆதியாகமத்தின் ஆரம்ப அதிகாரங்கள் சொல்லர்த்தமான அர்த்தமுள்ளவை என்று இயேசு போதித்தார். (மத்தேயு 19:4-6; 24:37-39) அப்போஸ்தலர்களான பவுலும் பேதுருவும் அப்படியே போதித்தார்கள். (அப்போஸ்தலர் 17:24-26; 2 பேதுரு 2:5; 3:6, 7) பைபிளுக்கு முரண்பாடாக இருக்கும் விளக்கங்களை நேர்மையான பைபிள் மாணாக்கர்கள் ஏற்றுக்கொள்வதில்லை.
[பக்கம் 9-ன் படம்]
அலெக்சாண்டிரியாவின் மிகப் பெரிய கலங்கரை விளக்கம்
[படத்திற்கான நன்றி]
Archives Charmet /Bridgeman Art Library