யெகோவா உங்களுக்குச் செய்தவற்றையே சிந்தியுங்கள்
இயேசு உயிர்த்தெழுப்பப்பட்டதற்குச் சற்று பின்பு, அவருடைய சீடர்களில் இருவர் பேசிக்கொண்டே எருசலேமிலிருந்து எம்மாவுக்கு நடந்து போய்க்கொண்டிருந்தார்கள். “இப்படி அவர்கள் பேசிக்கொண்டு போனபோது, இயேசுவே அங்கு வந்து அவர்களோடு சேர்ந்து நடக்க ஆரம்பித்தார். ஆனால், அவரை அடையாளம் கண்டுகொள்ள முடியாதபடி அவர்களுடைய கண்கள் மறைக்கப்பட்டிருந்தன” என்று லூக்காவின் சுவிசேஷம் சொல்கிறது. அப்போது இயேசு அவர்களிடம், “‘நீங்கள் ஒருவருக்கொருவர் எதைப் பற்றி விவாதித்துக்கொண்டே போகிறீர்கள்?’ என்று கேட்டார். அவர்கள் முகவாட்டத்தோடு அப்படியே நின்றார்கள்.” அவர்கள் ஏன் கவலையாக இருந்தார்கள்? இஸ்ரவேலரைப் புறதேசத்தாரின் ஆதிக்கத்திலிருந்து அப்போதே இயேசு விடுவிப்பார் என அந்தச் சீடர்கள் நினைத்தார்கள்; ஆனால் அவர்கள் எதிர்பார்த்தபடி நடக்கவில்லை. அதற்குப் பதிலாக, இயேசு கொலை செய்யப்பட்டார். அதனால்தான் அவர்கள் சோகமாக இருந்தார்கள்.—லூக். 24:15-21; அப். 1:6.
அப்போது, சீடர்களிடம் இயேசு பேச ஆரம்பித்தார். “அவர்களுக்கு மோசேயின் புத்தகங்கள்முதல் அனைத்து தீர்க்கதரிசிகளின் புத்தகங்கள்வரை வேதாகமத்தில் தம்மைப் பற்றி எழுதப்பட்டுள்ள எல்லாவற்றையும் விளக்கினார்.” விசுவாசத்தைப் பலப்படுத்துகிற பல முக்கியச் சம்பவங்கள் அவருடைய ஊழியக் காலத்தின்போது நடந்தனவே! இயேசு சொன்னதைக் கேட்டதும் சீடர்களுடைய மனநிலை அப்படியே மாறியது; அவர்களுடைய முகத்திலிருந்து சோகம் நீங்கி சந்தோஷம் மலர்ந்தது. பிறகு அன்று சாயங்காலம், “வழியில் அவர் நம்மோடு பேசி, வேதவசனங்களை நமக்கு முழுமையாக விளக்கிக் காட்டியபோது நம்முடைய இருதயம் பரவசமடைந்தது அல்லவா?” என்று சொன்னார்கள். (லூக். 24:27, 32) இயேசுவின் சீடர்களிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
நம் எதிர்பார்ப்புகள் நிறைவேறாமல் போகையில்...
எம்மாவுக்குச் சென்றுகொண்டிருந்த சீடர்கள் எதிர்பார்த்த காரியங்கள் நடக்காமல் போனதால் அவர்கள் சோகமாய் இருந்தார்கள். “நெடுநாள் எதிர்நோக்கியிருப்பது மனச்சோர்வை உண்டாக்கும்” என்பதை சொந்த அனுபவத்தில் கண்டார்கள். (நீதிமொழிகள் 13:12, பொது மொழிபெயர்ப்பு) அது போலவே, இன்று பல வருடங்களாக யெகோவாவுக்கு உண்மையோடு சேவை செய்துவந்திருக்கிற சிலர், இதற்குள் ‘மிகுந்த உபத்திரவம்’ வந்திருக்க வேண்டுமே என நினைத்தார்கள். (மத். 24:21; வெளி. 7:14) எதிர்பார்ப்புகள் நிறைவேறாமல் போகும்போது சில சமயங்களில் சோர்வடைவது சகஜம்தான்.
ஆனால் இதைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்: ஏற்கெனவே நிறைவேறிய தீர்க்கதரிசனங்களை, அதுவும் சீடர்களுடைய காலத்திலேயே நிறைவேறிய தீர்க்கதரிசனங்களை, சிந்தித்துப் பார்க்க இயேசு உதவியபோது அவர்கள் இழந்த சந்தோஷத்தை மீண்டும் பெற்றார்கள். அது போல, நமக்கும்கூட சோர்வு ஏற்படும்போது அதைச் சமாளித்து மன மகிழ்ச்சியோடு இருக்க முடியும். மைக்கேல் என்ற அனுபவமுள்ள மூப்பர் சொன்னது இதுதான்: “யெகோவா இன்னும் செய்யாதவற்றைப் பற்றி யோசிக்காமல் ஏற்கெனவே செய்தவற்றைப் பற்றி யோசித்துப் பாருங்கள்.” உண்மையிலேயே ஒரு நல்ல ஆலோசனை, அல்லவா!
யெகோவா செய்திருப்பவை...
யெகோவா ஏற்கெனவே செய்திருக்கிற மகத்தான சில காரியங்களைச் சிந்தித்துப் பாருங்கள். “என்மீது விசுவாசம் வைக்கிறவன் நான் செய்கிற செயல்களைச் செய்வான், அவற்றைவிடப் பெரிய செயல்களையும் செய்வான்” என்று இயேசு குறிப்பிட்டார். (யோவா. 14:12) இன்று, ஊழியத்தில் பிரமாண்டமான செயல்களை கடவுளுடைய ஊழியர்கள் செய்கிறார்கள். வரப்போகும் மிகுந்த உபத்திரவத்திலிருந்து தப்பிப்பிழைப்பதை எழுபது லட்சத்திற்கும் அதிகமானோர் ஆவலோடு எதிர்பார்த்திருக்கிறார்கள். சரித்திரம் காணாத அளவுக்கு இத்தனை அநேக ஊழியர்கள் இத்தனை அநேக நாடுகளில் கடவுளுடைய வேலையை மும்முரமாகச் செய்துவருவதைச் சற்று கற்பனை செய்து பாருங்கள்! “பெரிய செயல்களை” செய்வார்கள் என்று இயேசு முன்னறிவித்ததை உண்மையிலேயே யெகோவா நிறைவேற்றியிருக்கிறார்.
நமக்காக யெகோவா வேறென்ன செய்திருக்கிறார்? நல்மனமுள்ள ஆட்களை இந்தப் பொல்லாத உலகத்திலிருந்து விடுவித்து, தமது ஆன்மீக பூஞ்சோலைக்குள் கொண்டு வந்திருக்கிறார். (2 கொ. 12:1-4) இந்தப் பூஞ்சோலையில் அனுபவிக்கிற சில காரியங்களைப் பற்றித் தியானித்துப் பார்க்க நேரம் ஒதுக்குங்கள். உதாரணமாக, உங்கள் வீட்டிலுள்ள அல்லது ராஜ்ய மன்றத்திலுள்ள நூலகத்தைப் பார்வையிடுங்கள். உவாட்ச் டவர் பப்ளிக்கேஷன்ஸ் இன்டெக்ஸை புரட்டிப் பாருங்கள் அல்லது கம்ப்யூட்டரில் உவாட்ச்டவர் லைப்ரரியை அலசிப் பாருங்கள். பைபிள் நாடகத்தைப் போட்டு கேளுங்கள். சமீப மாநாட்டில் கேட்டவற்றை... பார்த்தவற்றை... மனத்திரையில் ஓடவிடுங்கள். அதோடு, நம் சகோதர சகோதரிகளுடன் அனுபவிக்கிற இனிய தோழமையையும் எண்ணிப் பாருங்கள். கொடை வள்ளல் யெகோவா ஆன்மீக உணவை அள்ளி வழங்கியிருப்பதோடு அன்பான சகோதர சகோதரிகளையும் தந்திருக்கிறார்! இது உண்மையிலேயே ஓர் ஆன்மீகப் பூஞ்சோலை, அல்லவா?
சங்கீதக்காரன் தாவீது இவ்வாறு குறிப்பிட்டார்: “என் தேவனாகிய கர்த்தாவே, நீர் எங்கள் நிமித்தஞ்செய்த உம்முடைய அதிசயங்களும் உம்முடைய யோசனைகளும் அநேகமாயிருக்கிறது.” (சங். 40:5) ஆம், யெகோவா ஏற்கெனவே நமக்காகச் செய்திருக்கிற அதிசயமான செயல்களைச் சிந்தியுங்கள்; நம்மைக் குறித்து அவர் அன்போடு நினைத்துப் பார்க்கிறார் என்பதைத் தியானியுங்கள்; அப்போது, சோர்வடையாமல் நம் பரலோகத் தகப்பனாகிய யெகோவாவுக்கு முழு இருதயத்தோடு சேவை செய்ய புதுத்தெம்பு கிடைக்கும்.—மத். 24:13.
[பக்கம் 31-ன் படம்]
யெகோவா ஏற்கெனவே செய்தவற்றைச் சிந்தித்துப் பார்க்க சீடர்களுக்கு இயேசு உதவினார்
[பக்கம் 32-ன் படங்கள்]
சமீப மாநாட்டில் கேட்டவற்றையும் பார்த்தவற்றையும் மனத்திரையில் ஓடவிடுங்கள்