மாற்றங்கள் செய்தேன், ஆசீர்வாதங்கள் பெற்றேன்
ஜேம்ஸ் ஏ. தாம்ஸன் சொன்னபடி
1928-ல் ஐக்கிய மாகாணங்களின் தென்பகுதியில் நான் பிறந்தேன். அச்சமயத்தில் கறுப்பர்களும் வெள்ளையர்களும் தனித்தனியே பிரிந்திருக்க வேண்டுமென்ற சட்டம் இருந்தது. அந்தச் சட்டத்தை மீறுபவர்கள் சிறையில் தள்ளப்பட்டார்கள் அல்லது வேறு கடும் தண்டனைகள் அளிக்கப்பட்டார்கள்.
அமெரிக்காவின் சில பகுதிகளில், யெகோவாவின் சாட்சிகளாக மாறியிருந்த கறுப்பர்களுக்கும் வெள்ளையர்களுக்கும் அச்சமயத்தில் தனித்தனி சபைகளும் வட்டாரங்களும் மாவட்டங்களும் நடத்த வேண்டியிருந்தன. 1937-ல், டென்னெஸீயில் சாட்டனூகாவிலுள்ள கறுப்பர்களின் சபையில் என் அப்பா கம்பெனி சர்வென்ட்டாக (இன்று அழைக்கப்படுகிறபடி, மூப்பர் குழுவின் ஒருங்கிணைப்பாளராக) ஆனார். வெள்ளையர்களின் சபையில் சகோதரர் ஹென்றி நிக்கால்ஸ் கம்பெனி சர்வென்ட்டாக இருந்தார்.
சிறு வயதில் நடந்த பல சம்பவங்கள் இன்னும் என் நெஞ்சில் இனிய நினைவுகளாகப் பதிந்திருக்கின்றன. ராத்திரியில் எங்கள் வீட்டிற்கு வெளியே உட்கார்ந்து, அப்பாவும் சகோதரர் நிக்கால்ஸும் பேசுவதை நான் கேட்பேன். அவர்கள் பேசிய எல்லாமே எனக்குப் புரியாவிட்டாலும், அப்பாவோடு இருக்க விரும்பினேன்; அதோடு, அன்றைய சூழ்நிலையில் பிரசங்க வேலையை எப்படிச் சிறப்பாகச் செய்யலாம் என அவர்கள் பேசுவதை ஆர்வமாகக் கேட்டேன்.
சில வருடங்களுக்கு முன்பு, அதாவது 1930-ல், எங்கள் குடும்பத்தை ஒரு பேரிடி தாக்கியது. 20 வயதே ஆன என் அம்மா இறந்துவிட்டார். நான்கு வயதான என் அக்கா டாரிஸையும் இரண்டு வயது நிரம்பிய என்னையும் என் அப்பா தனியாக வளர்க்க வேண்டியதாகிவிட்டது. அப்பா கொஞ்சக் காலத்திற்கு முன்புதான் ஞானஸ்நானம் எடுத்திருந்தார்; என்றாலும், ஆன்மீக ரீதியில் நன்கு முன்னேறினார்.
என் வாழ்வை வடிவமைத்த சிலர்
1933-ல், லில்லி மே க்வென்டலன் என்ற ஓர் அருமையான கிறிஸ்தவச் சகோதரியை என் அப்பா சந்தித்தார்; இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள். யெகோவாவை உண்மையோடு சேவிப்பதில் எனக்கும் டாரிஸ் அக்காவுக்கும் அவர்கள் சிறந்த முன்மாதிரி வைத்தார்கள்.
மூப்பர்களை அந்தந்த சபையினரே ஓட்டுப்போட்டுத் தேர்ந்தெடுப்பதற்குப் பதிலாக, நியு யார்க், புருக்லினில் இருந்த தலைமையகம் அவர்களை நியமிக்கும் என்ற தீர்மானம் 1938-ல் எடுக்கப்பட்டது; இதை ஆதரிக்கும்படி யெகோவாவின் சாட்சிகளுடைய சபைகள் கேட்டுக்கொள்ளப்பட்டன. சாட்டனூகாவில் இருந்த சிலர் அந்த மாற்றத்தை ஏற்றுக்கொள்ளத் தயங்கினார்கள், ஆனால் என் அப்பா அதற்கு முழு ஆதரவு தெரிவித்தார். அவர் உத்தமத்தைக் காட்டுவதில் சிறந்து விளங்கினார், அம்மாவும் அவருக்கு முழு ஒத்துழைப்புக் கொடுத்தார்; அவர்கள் இருவரது முன்மாதிரியும் இன்றுவரை எனக்குக் கைகொடுத்திருக்கிறது.
ஞானஸ்நானமும் முழுநேர ஊழியமும்
1940-ல், நாங்கள் சபையாக ஒரு பஸ்ஸை வாடகைக்கு எடுத்து மிச்சிகன், டெட்ராய்ட்டில் நடந்த மாநாட்டிற்குச் சென்றோம். எங்கள் சபையைச் சேர்ந்த சிலர் அங்குதான் ஞானஸ்நானம் பெற்றார்கள். ஐந்து வயதிலிருந்தே நான் பக்திவைராக்கியத்தோடு ஊழியம் செய்து வந்திருந்ததால், நான் ஏன் அன்று ஞானஸ்நானம் எடுக்கவில்லை என்று சிலர் யோசித்தார்கள்.
அதைப் பற்றி அவர்கள் என்னிடம் கேட்டபோது, “ஞானஸ்நானத்தைப் பற்றி எனக்கு இன்னும் முழுசாகப் புரியவில்லை” என்றேன். இதைக் கேட்ட என் அப்பா அதிர்ச்சியடைந்தார். அதுமுதல், ஞானஸ்நானத்தின் அர்த்தத்தையும் முக்கியத்துவத்தையும் எனக்குப் புரியவைக்க அதிக முயற்சி எடுத்தார். நான்கு மாதங்களுக்குப் பிறகு பயங்கரக் குளிராக இருந்த ஒரு நாளில், அதாவது அக்டோபர் 1, 1940-ல், சாட்டனூகாவுக்கு வெளியே இருந்த ஒரு குளத்தில் ஞானஸ்நானம் பெற்றேன்.
14 வயதில், கோடை விடுமுறையின்போது பயனியர் செய்ய ஆரம்பித்தேன். டென்னெஸீயிலுள்ள சிறு ஊர்களிலும் அருகிலிருந்த ஜார்ஜியாவிலும் ஊழியம் செய்தேன். அதிகாலையிலேயே எழுந்து, சாப்பாடு கட்டிக்கொண்டு, 6 மணி ரயிலை அல்லது பஸ்ஸைப் பிடித்து என் பிராந்தியத்திற்குச் சென்றேன். மாலை சுமார் 6 மணிக்கு வீடு திரும்பினேன். பொதுவாக மதியவேளைக்கு முன்பாகவே சாப்பாட்டைக் காலி செய்துவிடுவேன். கையில் காசு இருந்தபோதிலும் நான் கறுப்பனாக இருந்ததால் உணவு வாங்க எந்தக் கடையிலும் நுழைய முடியவில்லை. ஒருமுறை, கோன் ஐஸ்க்ரீம் வாங்க ஒரு கடைக்குள் போனேன்; உடனடியாகத் துரத்தப்பட்டேன். ஆனால், ஒரு வெள்ளைக்காரப் பெண் பரிதாபப்பட்டு எனக்கு ஒரு ஐஸ்க்ரீம் எடுத்துவந்து தந்தார்.
நான் மேல்நிலைப் பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்தபோது, தெற்கே இருந்த மக்கள் சம உரிமைக்காக மிகத் தீவிரமாய்ப் போராடி வந்தார்கள். கலப்பின மக்கள் தேசிய முன்னேற்றச் சங்கம் போன்ற அமைப்புகள், சம உரிமைக்காகப் போராடும்படி மாணவர்களைத் தூண்டின. நாங்களும் அதில் சேரும்படி வற்புறுத்தப்பட்டோம். எல்லா மாணவர்களையும் அதில் சேர வைக்க வேண்டுமென்பதில் என்னுடைய பள்ளியும் கறுப்பர்களின் வேறு பல பள்ளிகளும் குறியாக இருந்தன. “நம் இனத்திற்காகப் போராடு” எனச் சொல்லி என்னையும் கட்டாயப்படுத்தினார்கள். ஆனால், நான் மறுத்துவிட்டேன்; கடவுள் பாரபட்சம் காட்டாதவர் என்றும் இனப்பாகுபாடு இல்லாதவர் என்றும் விளக்கினேன்; அதோடு, இப்படிப்பட்ட அநியாயங்களைக் கடவுளால்தான் தீர்க்க முடியும் என நம்புவதாகச் சொன்னேன்.—யோவா. 17:14; அப். 10:34, 35.
மேல்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்த கொஞ்ச நாளிலேயே நியு யார்க் நகருக்குக் குடிமாறிப் போகத் தீர்மானித்தேன். என்றாலும், வழியில் பென்ஸில்வேனியாவிலுள்ள பிலடெல்ஃபியாவுக்குப் போய், முன்பு ஒரு மாநாட்டில் சந்தித்த நண்பர்களைப் பார்த்தேன். இரு இனத்தாருமே கலந்திருந்த சபைக்கு அப்போதுதான் முதன்முதலில் சென்றேன். அங்கு வந்திருந்த பயணக் கண்காணி என்னைத் தனியே அழைத்துப் போய், அடுத்த கூட்டத்தில் நான் ஒரு பகுதியைக் கையாள வேண்டுமென்று சொன்னார். அப்போதுதான், அங்கேயே தங்கிவிடத் தீர்மானித்தேன்.
பிலடெல்ஃபியாவில் எனக்குக் கிடைத்த நண்பர்களில் குறிப்பிடத்தக்கவள் ஜெரல்டின் வைட் என்ற இளம் சகோதரி; அவளை ஜெரி என அழைத்தேன். அவள் பைபிளை நன்கு கரைத்துக் குடித்திருந்தாள், வீட்டுக்கு வீடு ஊழியத்தில் மிக அருமையாகப் பேசினாள். எல்லாவற்றிலும் முக்கியமாக, என்னைப் போலவே பயனியர் ஊழியம் செய்ய வேண்டுமென்ற லட்சியத்தோடு இருந்தாள். நாங்கள் ஏப்ரல் 23, 1949-ல் திருமணம் செய்துகொண்டோம்.
கிலியட்டிற்கு அழைப்பு
கிலியட் பள்ளிக்குச் சென்று வெளிநாட்டில் மிஷனரி ஊழியம் செய்ய வேண்டும் என்பதுதான் ஆரம்பத்திலிருந்தே எங்கள் லட்சியமாக இருந்தது. அதற்குத் தகுதிபெற நாங்கள் சந்தோஷமாகச் சில மாற்றங்களைச் செய்தோம். சீக்கிரத்தில், நியூ ஜெர்ஸியிலுள்ள லான்சைட்டிற்குப் போகும்படி கேட்டுக்கொள்ளப்பட்டோம்; அதன்பின் பென்ஸில்வேனியாவிலுள்ள செஸ்டரிலும்... கடைசியாக, நியூ ஜெர்ஸியிலுள்ள அட்லாண்டிக் சிட்டியிலும்... ஊழியம் செய்ய நியமிக்கப்பட்டோம். அட்லாண்டிக் சிட்டியில் இருந்தபோது கிலியட் பள்ளிக்கு விண்ணப்பம் செய்யும் தகுதியைப் பெற்றோம்; ஏனென்றால், எங்களுக்குத் திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆகியிருந்தன. ஆனால், நாங்கள் உடனடியாக அழைக்கப்படவில்லை. ஏன் தெரியுமா?
1950-களின் ஆரம்பத்தில், கொரியாவில் நடந்த போரில் ஈடுபடுவதற்காக அநேக இளைஞர்கள் கட்டாயமாக ராணுவத்தில் சேர்க்கப்பட்டார்கள். பிலடெல்ஃபியாவில் ராணுவத்துக்கு ஆட்களைச் சேர்த்த குழுமம், எனக்கு விலக்களிக்க மறுத்தது; போர்களில் கலந்துகொள்ளாத காரணத்துக்காக யெகோவாவின் சாட்சிகளை அது வெறுத்ததாய்த் தெரிந்தது. கடைசியில், FBI என்னைப் பற்றி விசாரித்ததாகவும் நான் நடுநிலை வகித்தது உண்மையெனக் கண்டறிந்ததாகவும் ஒரு நீதிபதி தெரிவித்தார். ஆகவே, ஜனவரி 11, 1952-ல் மத ஊழியர் என்ற அடிப்படையில் ராணுவச் சேவையிலிருந்து விலக்களிக்கப்பட்டேன்.
அந்த வருட ஆகஸ்ட் மாதத்தில், கிலியட் பள்ளியின் 20-வது வகுப்புக்கு நானும் ஜெரியும் அழைக்கப்பட்டோம்; அது செப்டம்பரில் துவங்கவிருந்தது. டாரிஸ் அக்கா கிலியட் பள்ளியின் 13-வது வகுப்பில் பட்டம் பெற்று, பிரேசிலில் ஊழியம் செய்து வந்தார். நாங்கள் கிலியட் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது, வெளிநாடு ஒன்றில் நியமிக்கப்படுவோம் என எதிர்பார்த்தோம். ஆனால், ஆச்சரியம் காத்திருந்தது; வட்டாரக் கண்காணியாக, தெற்கேயிருந்த அலபாமாவில் கறுப்பர்களின் சபைகளைச் சந்திக்க நியமிக்கப்பட்டேன்! வெளிநாட்டில் சேவை செய்வதை ஆசை ஆசையாக எதிர்பார்த்திருந்த எங்களுக்கு, இது கொஞ்சம் ஏமாற்றமாகத்தான் இருந்தது.
நாங்கள் சந்தித்த முதல் சபை ஹன்ட்ஸ்வில்லில் இருந்தது. அங்கு போனதும், நாங்கள் தங்கவிருந்த ஒரு சகோதரியின் வீட்டிற்குச் சென்றோம். எங்கள் சாமான்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தபோது, “பிள்ளைகள் வந்துவிட்டார்கள்” என்று அவர் ஃபோனில் சொல்வது காதில் விழுந்தது. எங்களுக்கு அப்போது 24 வயதுதான், பார்ப்பதற்கு அதைவிட இளையவர்களாகத் தெரிந்தோம். அந்த வட்டாரத்தில் ஊழியம் செய்த காலமெல்லாம் பிள்ளைகள் என்ற செல்லப்பெயராலேயே அழைக்கப்பட்டோம்.
தெற்குப் பகுதி பொதுவாக “பைபிள் மண்டலம்” என்று அழைக்கப்பட்டது; ஏனென்றால், அங்கிருந்த பெரும்பாலோர் பைபிளை மிக உயர்வாய் மதித்தார்கள். அதனால், பெரும்பாலும் இந்த மூன்று குறிப்புகளைச் சொல்லி நாங்கள் பேச ஆரம்பிப்போம்:
(1) உலக நிலைமைகள் (சுருக்கமாக).
(2) பைபிள் தரும் நம்பிக்கை.
(3) பைபிளின்படி நாம் என்ன செய்ய வேண்டும்.
அதன்பின் பொருத்தமான பைபிள் பிரசுரத்தை அளிப்போம். இந்த அணுகுமுறை நல்ல பலன் தந்ததால், 1953-ல் நியு யார்க்கில் நடைபெற்ற புதிய உலகச் சமுதாயம் என்ற மாநாட்டில் ஒரு பகுதியைக் கையாள நியமிக்கப்பட்டேன். அங்கு, இந்த மூன்று குறிப்புகளையும் ஊழியத்தில் சொல்வதுபோல் நடித்துக் காட்டினேன்.
1953-ன் கோடை காலத்தில், தெற்கேயிருந்த கறுப்பர்களின் வட்டாரங்களைச் சந்திக்க மாவட்டக் கண்காணியாக நியமிக்கப்பட்டேன். வர்ஜீனியா முதல் ப்ளோரிடா வரையும்... மேற்கே அலபாமா மற்றும் டென்னெஸீ வரையும்... பரந்து விரிந்திருந்த பிராந்தியத்தைச் சந்தித்தேன். பயணக் கண்காணிகள் எல்லாவற்றையும் அனுசரித்துப் போக வேண்டியிருந்தது. உதாரணத்திற்கு, நாங்கள் தங்கியிருந்த வீடுகளில் பெரும்பாலும் குழாய் வசதி இல்லை; அதனால் சமையலறையில் அடுப்பின் பின்புறமாக வைக்கப்பட்டிருந்த ஒரு தகரத் தொட்டியில்தான் குளிக்க வேண்டியிருந்தது. அதுதான் அந்த வீட்டிலேயே கொஞ்சம் கதகதப்பான இடம் என்பது ஒரு ஆறுதலான விஷயம்!
இனப் பாகுபாடு என்ற சவால்
தெற்கே சபைகளைச் சந்தித்து வந்த சமயத்தில், சில விஷயங்களை மிகவும் யோசித்து சாமர்த்தியமாகச் செய்ய வேண்டியிருந்தது. உதாரணத்திற்கு, துணி துவைக்கும் இடங்களில் கறுப்பர்கள் அனுமதிக்கப்படவில்லை. ஆகவே, ஜெரி எங்களுடைய துணிமணிகளை அங்கு கொண்டு போய், இது “திருமதி தாம்ஸனுக்கு” என்பாள். அவள் திருமதி தாம்ஸனின் வேலைக்காரி என்று அநேகர் நினைத்துவிடுவார்கள். ஒரு சந்தர்ப்பத்தில், புதிய உலகச் சமுதாயம் செயலில் என்ற படத்தை மாவட்டக் கண்காணியாக நான் எல்லாருக்கும் போட்டுக் காட்ட வேண்டியிருந்தது; அதற்காக ஒரு பெரிய திரையை வாடகைக்கு எடுக்க நான் கடைக்கு ஃபோன் செய்து “தாம்ஸன் சாருக்கு” என்பேன். பின்பு அங்கு போய் அதை எடுத்து வருவேன். இப்படி நாங்கள் எப்போதுமே பக்குவமாகப் பேசினோம்; ஊழியத்தில் பெரிதாக எந்த எதிர்ப்பும் எங்களுக்கு வரவில்லை.
தெற்கே இன்னொரு பிரச்சினை இருந்தது; அங்கிருந்த பலர் வடக்குப் பகுதியைச் சேர்ந்தவர்களை வெறுத்தார்கள். ஒருமுறை, நியு யார்க்கின் உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டியைச் சேர்ந்த ஜேம்ஸ் ஏ. தாம்ஸன் ஜூனியர் ஒரு மாநாட்டில் பேசுவார் என ஒரு செய்தித்தாள் அறிக்கை செய்தது. இதைப் படித்த சிலர் நான் நியு யார்க்கிலிருந்து வந்ததாக நினைத்துவிட்டார்கள்; அதனால், மாநாட்டிற்காகப் பள்ளி ஆடிட்டோரியத்தைப் பயன்படுத்த நாங்கள் அனுமதிக்கப்படவில்லை. அந்தப் பள்ளி நிர்வாகத்திடம் சென்று, சாட்டனூகாவில் இருந்த பள்ளியில் நான் படித்ததாக விளக்கினேன். அதன் பின்புதான், வட்டார மாநாட்டை நடத்த எங்களுக்கு அனுமதி கிடைத்தது.
1950-களின் மத்திபத்தில், இனப் பகைமை கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது; சிலசமயங்களில் வன்முறை வெடித்தது. 1954-ல், பல மாவட்ட மாநாடுகளில் கறுப்பு இனத்தைச் சேர்ந்த எந்தச் சகோதரர்களுக்கும் பேச்சு கொடுக்க வாய்ப்புக் கிடைக்காததால் சிலர் கோபித்துக்கொண்டார்கள். கொஞ்சம் பொறுமையாக இருக்கும்படி அவர்களைக் கேட்டுக்கொண்டோம். அடுத்த கோடை காலத்தில், நான் ஒரு பேச்சாளராக நியமிக்கப்பட்டேன். அதன்பின், தெற்குப் பகுதியைச் சேர்ந்த இன்னுமதிக கறுப்புச் சகோதரர்கள் பேச்சுகள் கொடுக்க நியமிக்கப்பட்டார்கள்.
காலப்போக்கில், தெற்கே நடந்த இனக் கலவரம் குறைந்தது; வெள்ளையர், கறுப்பர் என இரு இனத்தைச் சேர்ந்த சகோதரர்களும் ஒன்றுசேர்ந்து கூட்டங்களில் கலந்துகொள்ள ஆரம்பித்தார்கள். இதனால் பிரஸ்தாபிகள் சிலரை வேறு சபைகளில் நியமிக்க வேண்டியிருந்தது... சபை பிராந்தியங்களை மாற்ற வேண்டியிருந்தது... கண்காணிகள் புதிய பொறுப்புகளைக் கையாள வேண்டியிருந்தது. இரு இனத்தைச் சேர்ந்த சகோதரர்களிலுமே சிலர் இந்தப் புதிய ஏற்பாட்டை விரும்பவில்லை. என்றாலும், பெரும்பாலோர் நம் பரலோகத் தகப்பனைப் போல் பாரபட்சமில்லாமல் நடந்துகொண்டார்கள். சொல்லப்போனால், பலர் வேறு இனத்தவரிடம் நெருங்கிப் பழகினார்கள். 1930-களிலும் 1940-களிலும் நான் வளர்ந்து வந்த சமயத்தில், என் குடும்பத்திலேயே இதைக் கண்கூடாகப் பார்த்தேன்.
ஒரு புதிய நியமிப்பு
ஜனவரி 1969-ல், தென் அமெரிக்காவிலுள்ள கயானாவில் ஊழியம் செய்யும்படி நானும் ஜெரியும் நியமிக்கப்பட்டோம்; அதைச் சந்தோஷமாக ஏற்றுக்கொண்டோம். முதலில் நியு யார்க்கிலுள்ள புருக்லினுக்குப் போனோம்; அங்கு, கயானாவில் பிரசங்க வேலையைக் கண்காணிக்க நான் பயிற்றுவிக்கப்பட்டேன். ஜூலை 1969-ல் கயானாவுக்குப் போய்ச் சேர்ந்தோம். 16 ஆண்டுகளாகப் பயண வேலை செய்த பிறகு, ஒரே இடத்தில் இருந்து சேவை செய்வது ஒரு பெரிய மாற்றமாக இருந்தது. ஜெரி பெரும்பாலான நாட்கள் மிஷனரியாக வெளி ஊழியம் செய்தாள், நான் கிளை அலுவலகத்தில் வேலை செய்தேன்.
புல் வெட்டுவது, 28 சபைகளுக்குப் பிரசுரங்கள் அனுப்புவது, தலைமையகத்திற்குக் கடிதம் எழுதுவது போன்ற எல்லா வேலைகளையும் செய்தேன். தினமும் 14 முதல் 15 மணிநேரம் வேலை செய்தேன். இருவருமே கடினமாக உழைக்க வேண்டியிருந்தது, ஆனால் எங்களுக்கு அதிக சந்தோஷம் கிடைத்தது. நாங்கள் முதலில் கயானாவுக்கு வந்தபோது 950 பிரஸ்தாபிகள்தான் இருந்தார்கள், இன்று அந்த எண்ணிக்கை 2,500-ஐத் தாண்டிவிட்டது.
மிதமான தட்பவெப்பம், காய்கறிகள், பழங்கள் போன்ற எல்லாவற்றையும் இங்கு நாங்கள் அனுபவித்து மகிழ்ந்தோம் என்பது உண்மைதான்; ஆனால், மனத்தாழ்மையுள்ள மக்கள் பைபிள் சத்தியத்தைக் கற்றுவந்ததைப் பார்த்தபோதுதான் உண்மையான சந்தோஷத்தைப் பெற்றோம். ஜெரி வாராவாரம் பெரும்பாலும் 20 பைபிள் படிப்புகள்வரை நடத்தினாள்; அவர்களில் அநேகர் ஞானஸ்நானம் பெற்றார்கள். அவர்களில் சிலர் காலப்போக்கில் பயனியர்களாக, சபை மூப்பர்களாக, மிஷனரிகளாக ஆனார்கள்.
சுகவீனமும் மற்ற சவால்களும்
1983-ல், அமெரிக்காவிலிருந்த என் பெற்றோருக்கு உதவி தேவைப்பட்டது. டாரிஸ் அக்காவும் நானும் ஜெரியும் ஒன்றுகூடிப் பேசினோம். பிரேசிலில் 35 ஆண்டுகளாக மிஷனரி ஊழியம் செய்து வந்திருந்த டாரிஸ் அக்கா, அமெரிக்காவுக்குத் திரும்பி அம்மா அப்பாவைப் பார்த்துக்கொள்ளத் தீர்மானித்தார். இரண்டு பேர் மிஷனரி ஊழியத்தைவிட்டுப் போவதற்குப் பதிலாக ஒருவர் போவது மேல் என அவர் சொன்னார். எங்கள் பெற்றோர் இறந்த பிறகு அவர் சாட்டனூகாவிலேயே தங்கி விசேஷ பயனியராகச் சேவை செய்து வருகிறார்.
1995-ல் விந்துசுரப்பி புற்றுநோய் என்னைத் தாக்கியதால் அமெரிக்காவுக்குத் திரும்ப வேண்டியதாயிற்று. வட கரோலினாவிலுள்ள கோல்ட்ஸ்போரோவுக்குக் குடிமாறினோம்; ஏனென்றால், என் குடும்பத்தார் வசித்த டென்னெஸீக்கும் ஜெரியின் குடும்பத்தார் வசித்த பென்ஸில்வேனியாவுக்கும் மத்தியில் அது அமைந்திருந்தது. என் புற்றுநோய் இப்போது கட்டுப்பாட்டில் இருக்கிறது. நாங்கள் கோல்ட்ஸ்போரோ சபையில் உடல்நலம் குன்றிய விசேஷ பயனியர்களாகச் சேவை செய்து வருகிறோம்.
கடந்த 65 வருடங்களுக்கும் மேலாக முழுநேர ஊழியம் செய்ததை எண்ணிப் பார்க்கையில், யெகோவாவுக்கு மிகுந்த நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்; அவரைச் சேவிக்க வாழ்க்கையில் மாற்றங்கள் செய்ததற்காக அவர் எங்களை ஆசீர்வதித்திருக்கிறார். ‘[யெகோவா] மாறா அன்பர்க்கு மாறா அன்பராக விளங்குவார்’ என்று தாவீது சொன்ன வார்த்தைகள் நூற்றுக்கு நூறு உண்மை!—2 சா. 22:26, பொது மொழிபெயர்ப்பு.
[பக்கம் 3-ன் படம்]
அப்பாவும் சகோதரர் நிக்கால்ஸும் எனக்குச் சிறந்த முன்மாதிரி வைத்தார்கள்
[பக்கம் 4-ன் படம்]
1952-ல் ஜெரியுடன், கிலியட் பள்ளிக்குச் செல்லத் தகுதி பெற்றபோது
[பக்கம் 5-ன் படம்]
கிலியட்டில் படித்த பிறகு தெற்கே பயண ஊழியம் செய்ய நியமிக்கப்பட்டோம்
[பக்கம் 6-ன் படம்]
1966-ல், எல்லா இனத்தாருக்குமான மாவட்ட மாநாட்டிற்குத் தயாராகிய பயணக் கண்காணிகளும் அவர்களது மனைவிகளும்
[பக்கம் 7-ன் படம்]
கயானாவில் மிஷனரி ஊழியம் பெருமகிழ்ச்சி தந்தது