உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w12 6/15 பக். 3-6
  • ஊழியம் கற்றுத்தந்த ‘ரகசியம்’

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஊழியம் கற்றுத்தந்த ‘ரகசியம்’
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2012
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • வட்டார வேலை
  • ஒதுக்குப்புறத்திலிருந்த தொகுதிகளைச் சந்தித்தபோது...
  • பயணத்தில் சந்தித்த சவால்கள்
  • முழுநேர ஊழியம் செய்ய மற்றவர்களை உற்சாகப்படுத்தினோம்
  • உங்கள் ஊழியத்தை விரிவாக்க வழிகள்
    யெகோவாவின் விருப்பத்தைச் செய்யும் அமைப்பு
  • வட்டார கண்காணியின் சந்திப்புக்கு ஆதரவு கொடுங்கள்
    நம் ராஜ்ய ஊழியம்—1989
  • பயணக் கண்காணிகள்சத்தியத்தில் உடன்வேலையாட்கள்
    கடவுளுடைய சித்தத்தைச் செய்தல்
  • ‘பவுல் கடவுளுக்கு நன்றி சொல்லி, தைரியம் அடைந்தார்’
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2019
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2012
w12 6/15 பக். 3-6

வாழ்க்கை சரிதை

ஊழியம் கற்றுத்தந்த ‘ரகசியம்’

ஓலிவியே ரன்ட்ரியமூரா சொன்னபடி

“குறைவான பொருள்களோடும் எனக்கு வாழத் தெரியும், ஏராளமான பொருள்களோடும் எனக்கு வாழத் தெரியும்; வயிறார உண்ணும்போதும் சரி பட்டினி கிடக்கும்போதும் சரி, . . . எந்தச் சூழ்நிலையிலும் எல்லாவற்றிலும் திருப்தியுடன் இருப்பதற்கான ரகசியத்தை நான் கற்றுக்கொண்டேன். என்னைப் பலப்படுத்துகிற கடவுள் மூலமாக எல்லாவற்றையும் செய்ய எனக்குப் பலம் உண்டு.”—பிலி. 4:12, 13.

அப்போஸ்தலன் பவுலின் இந்த வார்த்தைகள்தான் இன்றுவரை எனக்கும் என் மனைவி யூலிக்கும் “எனர்ஜி டானிக்.” இங்கே மடகாஸ்கர் தீவில் ஊழியம் செய்கையில் பவுலைப் போலவே முழுக்க முழுக்க யெகோவாவைச் சார்ந்திருப்பதன் மூலம் அந்த “ரகசியத்தை” கற்றுக்கொண்டிருக்கிறோம்.

1982-ல் யூலியின் அம்மாவுக்கு யெகோவாவின் சாட்சிகள் பைபிள் படிப்பு நடத்த ஆரம்பித்தார்கள். அந்தச் சமயத்தில் எனக்கும் யூலிக்கும் திருமணம் நிச்சயமாகியிருந்தது. சாட்சிகளிடம் நானும் பைபிள் படிக்க ஆரம்பித்தேன். கொஞ்ச நாட்கள் கழித்து யூலியும் படிக்க ஆரம்பித்தாள். 1983-ல் நாங்கள் திருமணம் செய்துகொண்டோம். 1985-ல் ஞானஸ்நானம் பெற்றோம். அதன் பின் சீக்கிரத்திலேயே துணை பயனியர் ஊழியம் செய்ய ஆரம்பித்தோம். 1986, ஜூலை மாதம்முதல் ஒழுங்கான பயனியர் சேவையைத் தொடங்கினோம்.

1987, செப்டம்பர் மாதம்முதல் விசேஷ பயனியர்களாகச் சேவை செய்ய ஆரம்பித்தோம். முதன்முதலாக, மடகாஸ்கரின் வடமேற்கு பகுதியிலிருந்த ஒரு சிறிய நகரத்தில் ஊழியம் செய்ய அனுப்பப்பட்டோம். அங்கே ஒரு சபைகூட இல்லை. அந்தப் பகுதியில் சுமார் 18 முக்கிய இனத்தொகுதியினர் வசித்து வந்தார்கள். எண்ணற்ற இனப் பிரிவினரும் இருந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவருடைய பழக்கவழக்கங்களும் பாரம்பரியங்களும் முற்றிலும் வேறுபட்டிருந்தன. இங்கே மலகாஸிதான் அரசு மொழி. என்றாலும், வேறு கிளைமொழிகளும் பேசப்படுகின்றன. எனவே, இந்தப் புதிய இடத்திற்கு வந்தபோது அங்கு பேசப்பட்டு வந்த மொழியைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்தோம். அதனால், அங்கிருந்தவர்கள் நாங்கள் சொன்ன செய்தியைக் காதுகொடுத்துக் கேட்டார்கள்.

ஆரம்பத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நான் பொதுப் பேச்சுக் கொடுத்தேன். யூலியும் தவறாமல் கைதட்டினாள். ஏனென்றால், நாங்கள் இருவர்தான் அங்கே இருந்தோம். அதோடு, தேவராஜ்ய ஊழியப் பள்ளியையும் நடத்தினோம். அப்போது யூலி, தன் கற்பனை வீட்டுக்காரியுடன் சேர்ந்து பேச்சுக்கொடுத்தாள். அன்பான வட்டாரக் கண்காணி ஒருவர் எங்கள் சூழ்நிலைகளுக்கு ஏற்றபடி கூட்ட நிகழ்ச்சிகளில் சில மாற்றங்களைச் செய்ய அறிவுரை கொடுத்தபோது நிம்மதிப் பெருமூச்சுவிட்டோம்!

கடிதப் போக்குவரத்தை நம்ப முடியாதிருந்ததால் மாதாமாதம் எங்களுக்கு வந்து சேர வேண்டிய உதவித்தொகை ஒழுங்காகக் கிடைக்கவில்லை. எனவே, கொஞ்சநஞ்சப் பொருள்களை வைத்துக்கொண்டே சந்தோஷமாய் வாழக் கற்றுக்கொண்டோம். ஒரு சமயம், வட்டார மாநாட்டுக்கு பஸ்ஸில் போகவேண்டியிருந்தது. கையிலோ காசில்லை. சுமார் 130 கிலோமீட்டர் (80 மைல்) தூரத்தில் அந்த மாநாடு நடைபெறவிருந்தது. “உங்க பிரச்சினைகளை சொல்லி யெகோவாகிட்ட ஜெபம் பண்ணுங்க. நீங்க அவருடைய வேலையத்தான செய்றீங்க, அவர் உங்களப் பாத்துக்க மாட்டாரா?” என்று எப்போதோ ஒரு சகோதரர் சொன்ன மணியான அறிவுரைதான் அப்போது நினைவுக்கு வந்தது. எனவே, நாங்கள் ஜெபம் செய்தோம், நடந்தே போகத் தீர்மானித்தோம். அப்படிப் புறப்படவிருந்த சமயத்தில் திடுதிப்பென்று ஒரு சகோதரர் எங்களைப் பார்க்க வந்தார். அவர் அன்பளிப்பாகக் கொடுத்த தொகை பஸ் கட்டணத்திற்குச் சரியாக இருந்தது!

வட்டார வேலை

1991, பிப்ரவரி மாதத்தில் வட்டாரக் கண்காணியாக நியமிக்கப்பட்டேன். அந்தச் சமயத்தில், எங்களுடைய சிறிய தொகுதியிலிருந்த பிரஸ்தாபிகளின் எண்ணிக்கை ஒன்பதாக அதிகரித்திருந்தது. அவர்களில் 3 பேர் ஞானஸ்நானம் எடுத்திருந்தார்கள். கூட்டத்திற்குச் சுமார் 50 பேர் வந்தார்கள். வட்டாரக் கண்காணியாகச் சேவை செய்வதற்கு நான் பயிற்சி பெற்ற பிறகு, தலைநகரான அன்டனனரிவோவில் உள்ள ஒரு வட்டாரத்தில் சேவை செய்ய நியமிக்கப்பட்டோம். 1993-ல் நாட்டின் கிழக்குப் பகுதியிலுள்ள ஒரு வட்டாரத்திற்கு அனுப்பப்பட்டோம். நகரத்தைப் போல் அங்கு வாழ்க்கை வசதியாக இருக்கவில்லை.

சபைகளையும் ஒதுக்குப்புறத்தில் இருந்த தொகுதிகளையும் சந்திப்பதற்கு நாங்கள் நடந்தே போக வேண்டியிருந்தது. சில சமயங்களில் 145 கிலோமீட்டர் (90 மைல்) தூரம்வரை மலைப்பகுதிகளில் அடர்ந்த காடுகள் வழியாக நடக்க வேண்டியிருந்தது. மூட்டைமுடிச்சுகளை முடிந்தவரை குறைத்துக்கொண்டோம். அந்தக் காலத்தில் வட்டாரக் கண்காணி கொடுக்கும் பொதுப் பேச்சில் சில சமயங்களில் படக்காட்சிகளைக் காட்ட வேண்டியிருந்தது. அப்போதெல்லாம் எங்கள் சுமை கொஞ்சம் கூடவே இருக்கும். படக்காட்சிக்கான “ப்ரொஜெக்டரை” யூலி தூக்கிக்கொள்ள... 12 வோல்ட் கார் பாட்டரியை நான் தூக்கிக்கொள்ள... இரண்டு பேரும் ‘லொங்கு லொங்கு’ என்று நடப்போம்.

பெரும்பாலும் ஒரு சபையிலிருந்து அடுத்த சபைக்குச் செல்ல ஒரு நாளைக்குச் சுமார் 40 கிலோமீட்டர் (25 மைல்) தூரம்வரை நடந்தோம். அப்போதெல்லாம் மூச்சுவாங்க மலைப்பாதைகளில் ஏறியிறங்கினோம், தட்டுத்தடுமாறி ஆறுகளைத் தாண்டிச் சென்றோம், ‘சலக்புலக்’கென சேறுசகதிகளைக் கடந்தோம். பொதுவாக, பக்கத்தில் ஏதாவது கிராமம் தென்படுகிறதாவெனப் பார்த்து இரவு அங்கே போய்த் தங்கினோம். இல்லையென்றால் சாலையோரம் படுத்துத் தூங்கினோம். சில சமயங்களில் முன்பின் தெரியாத ஆட்களிடம் இரவில் தங்க இடம் கேட்டோம். இடம் கிடைத்தால் உடனடியாகச் சமைக்கத் தொடங்குவோம். சமைப்பதற்காக யூலி ஒரு பாத்திரத்தைக் கடன்வாங்கிக் கொண்டு, பக்கத்திலிருக்கும் ஆற்றிலோ குளத்திலோ இருந்து தண்ணீர் எடுத்து வருவாள். அதற்கிடையில் நான் ஒரு கோடாலியைக் கடன்வாங்கி... சமைப்பதற்குத் தேவைப்பட்ட விறகுக்கு வழிசெய்வேன். இதற்கெல்லாம் நிறைய நேரம் எடுத்தது. எப்போதாவது ஒருமுறை, கோழியை உயிரோடு வாங்கி வந்து, அடித்து, சுத்தம் செய்து, சமைத்துச் சாப்பிட்டோம்.

சாப்பாட்டுக்குப் பிறகு, மீண்டும் தண்ணீர் எடுத்து வந்து குளித்தோம். சில சமயங்களில் சமையலறையிலேயே படுத்துத் தூங்கினோம். மழை பெய்த சமயங்களில் கூரையிலிருந்து தண்ணீர் ஒழுகியபோது சுவற்றில் சாய்ந்தவாறே தூங்கினோம்.

ஆனால், யார் வீட்டில் தங்கினாலும் மறக்காமல் அவர்களுக்கு நற்செய்தியை அறிவித்தோம். நாங்கள் சந்திக்க வேண்டிய சபைக்குப் போய்ச் சேர்ந்ததும், அங்குள்ள சகோதர சகோதரிகள் எங்களைக் கரிசனையோடு உபசரித்தார்கள். அவர்களுடைய அன்புமழையில் திக்குமுக்காடினோம். நாங்கள் சந்திக்க வந்ததற்காக அவர்கள் ரொம்பவே சந்தோஷப்பட்டார்கள். அதைப் பார்த்தபோது வழியில் பட்ட கஷ்டங்களையெல்லாம் மறந்தே போனோம்.

சகோதர சகோதரிகளின் வீட்டில் தங்கியபோது, அவர்களுக்குக் கூடமாட இருந்து உதவிசெய்தோம். இதனால், அவர்களும் எங்களோடு வெளி ஊழியத்தில் கலந்துகொள்ள முடிந்தது. நாங்கள் தங்குவதற்குச் சகல வசதிகளும் செய்து தர வேண்டுமென்றோ விதவிதமான, ருசிருசியான உணவுகளைச் சமைத்துத் தர வேண்டுமென்றோ சகோதரர்களிடம் எதிர்பார்த்ததே இல்லை.

ஒதுக்குப்புறத்திலிருந்த தொகுதிகளைச் சந்தித்தபோது...

ஒதுக்குப்புறத்திலிருந்த தொகுதிகளைப் போய்ச் சந்தித்தது சுவையான, சுவாரஸ்யமான அனுபவம். அங்கிருந்த சகோதரர்கள் எங்களை அன்போடு வரவேற்றதோடு எங்களுக்காகப் பெரிய அட்டவணையும் போட்டு வைத்திருந்தார்கள். சில சமயங்களில் ‘கொஞ்சம் ஓய்வெடுக்கலாம்’ என்று நினைப்போம். ஆனால் நேரமே இருக்காது. (மாற். 6:31) ஒரு சபையைச் சந்திக்கச் சென்றபோது, அங்கிருந்த ஒரு தம்பதியர் 40 பேருக்குப் பைபிள் படிப்பு நடத்தி வந்தார்கள். அவர்கள் எல்லாரையும் தங்கள் வீட்டுக்கு அழைத்திருந்தார்கள். நாங்களும் படிப்பில் கலந்துகொள்ள வேண்டும் என்பதற்காக இந்த ஏற்பாட்டைச் செய்திருந்தார்கள். அந்தச் சகோதரியுடன் யூலியும் அந்தச் சகோதரருடன் நானும் படிப்பில் கலந்துகொள்ள கிட்டத்தட்ட 20/20 பேருக்கு அவர்கள் படிப்பு நடத்தினார்கள். ஒரு மாணாக்கர் படித்துவிட்டு எழுந்ததும் அடுத்தவர் வந்து உட்கார்ந்துகொள்வார். அன்று மாலையில் சபைக் கூட்டங்களுக்காக மட்டுமே படிப்பை இடையில் நிறுத்தினோம். பிறகு மீண்டும் படிப்பு நடத்த உட்கார்ந்தோம். ஒவ்வொரு நாளும் காலையில் தொடங்கிய எங்கள் “ஓட்டம்” இரவு எட்டு மணிக்குப் பிறகுதான் நின்றது!

அடுத்த தொகுதியைச் சந்திக்கச் சென்றபோது... பக்கத்து கிராமத்தில் ஊழியம் செய்வதற்காகக் காலை சுமார் எட்டு மணிக்கு நாங்கள் புறப்பட்டோம். எல்லாருமே பழைய உடையை அணிந்திருந்தோம். காட்டு வழியாக நெடுநேரம் நடந்து சென்று கிட்டத்தட்ட உச்சிப்பொழுதில் அந்தக் கிராமத்தை அடைந்தோம். உடனடியாகச் சுத்தமான உடையை மாற்றிக்கொண்டு, வீட்டுக்கு வீடு ஊழியத்தில் இறங்கினோம். வீடுகளோ குறைவு, பிரஸ்தாபிகளோ அதிகம். அதனால், சுமார் 30 நிமிடத்திற்குள் எல்லா வீடுகளையும் சந்தித்துவிட்டோம். பிறகு, அடுத்த கிராமத்திற்குச் சென்றோம். அங்கு ஊழியம் செய்த பிறகு, வீடு திரும்ப நீண்ட தூரம் நடந்தோம். இப்படி ஊழியம் செய்வது முதலில் எங்களுக்கு ரொம்பவே கஷ்டமாக இருந்தது. இவ்வளவு நேரம் செலவிட்டும், இவ்வளவு முயற்சி எடுத்தும் வீட்டுக்கு வீடு ஊழியத்தில் சுமார் ஒரு மணிநேரமே செலவிட முடிந்தது. என்றாலும், அங்கிருந்த சகோதரர்கள் யாருமே முணுமுணுக்கவோ குறைகூறவோ இல்லை. எப்போதுமே உற்சாகமாய் ஊழியத்தில் ஈடுபட்டார்கள்.

டவிரனம்போ என்ற இடத்திலிருந்த ஓர் ஒதுக்குப்புறத் தொகுதிக்குச் சென்றோம். அது கிட்டத்தட்ட மலை உச்சியில் இருந்தது. அங்கே ஒரு சகோதரருடைய வீடு இருந்தது. அவருடைய குடும்பத்தார் ஒரேவொரு அறையுள்ள வீட்டில் குடியிருந்தார்கள். பக்கத்திலே இருந்த சிறிய அறையைச் சபைக் கூட்டம் நடத்தப் பயன்படுத்தினார்கள். திடீரென இந்தச் சகோதரர் “பிரதர்ஸ்...!” என்று காற்று கிழியக் கத்தினார். பக்கத்து மலையிலிருந்து “என்ன...?” என்று ஒரு குரல் கேட்டது. மறுபடியும் இந்தச் சகோதரர் “வட்டாரக் கண்காணி வந்திருக்காரு...” என்று செய்தி சொல்ல, “அப்படியா...!” என்று பதில் வந்தது. இப்படி எல்லாருக்குமே காற்றிலேயே தூது அனுப்பப்பட்டது. சீக்கிரத்திலேயே மக்கள் மளமளவென வந்து குவிய ஆரம்பித்தார்கள். சபைக் கூட்டம் தொடங்கியபோது 100-க்கும் அதிகமானோர் வந்து குவிந்திருந்தார்கள்.

பயணத்தில் சந்தித்த சவால்கள்

1996-ல் அன்டனனரிவோவுக்குப் பக்கத்திலுள்ள ஓர் இடத்தில் ஊழியம் செய்ய அனுப்பப்பட்டோம். அது நாட்டின் மத்தியிலிருந்த ஒரு மேட்டுநிலப் பகுதி. இந்த வட்டாரத்திலும் பிரத்தியேக சவால்களைச் சந்தித்தோம். தூர இடங்களுக்குச் செல்ல அங்கு போதுமான போக்குவரத்து வசதி இல்லை. பேயன்கனா (பேசாகே) என்ற இடத்திலிருந்த ஒரு தொகுதியைப் போய்ச் சந்திக்கத் திட்டமிட்டிருந்தோம். இந்த இடம் அன்டனனரிவோவில் இருந்து சுமார் 240 கிலோமீட்டர் (150 மைல்) தொலைவில் இருந்தது. அந்த வழியாக போய்க்கொண்டிருந்த ஒரு சிறிய டிரக்கை நிறுத்தி, டிரைவரிடம் பேசி, சம்மதம் வாங்கிக்கொண்டு வண்டியில் ஏறினோம். ஏற்கெனவே அதில் சுமார் 30 பேர் இருந்தார்கள். சிலர், உள்ளேயும், சிலர் வண்டிக்கு மேலேயும் இருந்தார்கள். இன்னும் சிலர் பின்புறத்தில் வௌவால்போல் தொங்கிக்கொண்டிருந்தார்கள்.

எப்போதும்போல் வண்டி ரிப்பேராகி நின்றுபோனது. நாங்கள் நடக்க ஆரம்பித்தோம். சில மணிநேரங்கள் நடந்தபின் ஒரு பெரிய டிரக் அந்தப் பக்கம் வந்தது. அதிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது, சரக்கும் எக்கச்சக்கமாக இருந்தது. என்றாலும், அந்த டிரைவர் பெரிய மனதோடு வண்டியை நிறுத்தினார். நாங்கள் ஏறிக்கொண்டோம். அதில் நிற்பதற்கு மட்டுமே இடமிருந்தது. ஓர் ஆற்றுப் பக்கம் டிரக் சென்றுகொண்டிருந்தபோது பாலத்தைப் பழுதுபார்க்கும் பணி நடந்துகொண்டிருந்தது. அதனால், அதற்கு மேல் வண்டி போக முடியாமல் நின்றுவிட்டது. மீண்டும் பழையபடி இறங்கி நடக்க ஆரம்பித்தோம். எப்படியோ ஒரு சிறிய கிராமத்தை வந்தடைந்தோம். அங்கே சில விசேஷ பயனியர்கள் வசித்து வந்தார்கள். அவர்களைப் போய்ச் சந்திப்பது எங்கள் அட்டவணையில் இல்லை. என்றாலும், அந்தப் பாலத்தைப் பழுதுபார்த்து முடிக்கும் வரைக்கும்... வேறொரு வண்டி கிடைக்கும் வரைக்கும்... அவர்களுடன் சேர்ந்து ஊழியம் செய்தோம்.

ஒரு வாரம் கழித்து அந்தப் பக்கமாக ஒரு வண்டி வந்தது. நாங்கள் மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தோம். சாலை முழுவதும் குண்டும் குழியுமாக இருந்தது. முழங்கால்வரை தண்ணீர் உள்ள இடங்களில் பெரும்பாலும் வண்டியைவிட்டு இறங்கி அதைத் தள்ள வேண்டியிருந்தது. அந்தச் சமயங்களில், அடிக்கடி தடுக்கி விழுந்தோம். விடியற்காலையில், ஒரு சிறிய கிராமத்தை அடைந்ததும் வண்டியிலிருந்து இறங்கினோம். பிரதான சாலையைவிட்டு இறங்கி நடந்தோம். வழிநெடுக இருபுறமும் நெல் வயல்கள் நிற்க... இடுப்புவரை சேறும் சகதியும் நிறைந்த தண்ணீரில் நடந்து சென்று நாங்கள் போக வேண்டிய இடத்தை அடைந்தோம்.

இந்த இடத்திற்கு நாங்கள் போவது இதுவே முதல் தடவை. எனவே, அந்த வயல்களில் வேலை செய்துகொண்டிருந்த சிலரிடம் நற்செய்தியை அறிவிக்கலாம் என்றும், யெகோவாவின் சாட்சிகள் எங்கே வசிக்கிறார்கள் என்பதை அவர்களிடமே கேட்டுத் தெரிந்துகொள்ளலாம் என்றும் நினைத்தோம். ஆனால், அவர்கள் எல்லாருமே யெகோவாவின் சாட்சிகள்தான், எங்கள் அன்புச் சகோதரர்கள்தான் என்பதை அறிந்தபோது எங்களுக்கு ரொம்ப சந்தோஷமாகிவிட்டது.

முழுநேர ஊழியம் செய்ய மற்றவர்களை உற்சாகப்படுத்தினோம்

இத்தனை வருடங்களில்... முழுநேர ஊழியம் செய்யும்படி மற்றவர்களை உற்சாகப்படுத்தியதற்குச் சிறந்த பலன் கிடைத்திருப்பதை நினைத்து சந்தோஷப்படுகிறோம். ஒரு சபையைச் சந்திக்கப் போனபோது அங்கே ஒன்பது ஒழுங்கான பயனியர்கள் இருந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் ஆளுக்கொரு பிரஸ்தாபியை ஒழுங்கான பயனியராக்குவதற்கு இலக்கு வைக்கும்படி அவர்களை உற்சாகப்படுத்தினோம். அடுத்த ஆறு மாதங்களுக்குப் பிறகு அந்தச் சபையைச் சந்திக்கச் சென்றபோது, ஒழுங்கான பயனியர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்திருந்தது. பயனியர் சகோதரிகள் இருவர் மூப்பர்களாகச் சேவை செய்து வந்த தங்கள் அப்பாக்களை ஒழுங்கான பயனியராகும்படி உற்சாகப்படுத்தியிருந்தார்கள். இந்தச் சகோதரர்கள் மற்றொரு மூப்பரை உற்சாகப்படுத்தி ஒழுங்கான பயனியராகச் செய்திருந்தார்கள். சீக்கிரத்தில் இந்த மூன்றாவது மூப்பர் விசேஷ பயனியராக நியமிக்கப்பட்டார். பிறகு, அவரும் அவருடைய மனைவியும் வட்டார ஊழியத்தில் ஈடுபட ஆரம்பித்தார்கள். முதல் இரண்டு மூப்பர்கள்? ஒருவர், வட்டாரக் கண்காணியானார், மற்றொருவர் ராஜ்ய மன்ற கட்டுமான வாலண்டியரானார்.

யெகோவா செய்கிற உதவிக்காகத் தினம்தினம் அவருக்கு நன்றி சொல்கிறோம். ஏனென்றால், அவரது உதவி இல்லாமல் இதையெல்லாம் சாதித்திருக்க முடியாது. சில சமயங்களில் நாங்கள் சோர்ந்து போகிறோம், சுகவீனம் அடைகிறோம் என்பது உண்மைதான். என்றாலும், ஊழியத்தில் பெற்ற ஆசீர்வாதங்களை எண்ணிப் பார்க்கையில் மகிழ்ச்சி அடைகிறோம். தம்முடைய வேலை நடைபெறுவதற்கு யெகோவா வழிசெய்கிறார். அதில் எங்களையும் பயன்படுத்திக்கொள்வதை நினைத்துச் சந்தோஷப்படுகிறோம். இப்போது நாங்கள் விசேஷ பயனியர்களாகச் சேவை செய்கிறோம். யெகோவாவைச் சார்ந்திருப்பதன் மூலம் அந்த “ரகசியத்தை” நாங்கள் கற்றுக்கொண்டிருக்கிறோம். ஏனென்றால், அவர்தான் ‘எங்களைப் பலப்படுத்துகிறார்.’

[பக்கம் 6-ன் சிறு குறிப்பு]

யெகோவாவைச் சார்ந்திருப்பதன் மூலம் அந்த “ரகசியத்தை” நாங்கள் கற்றுக்கொண்டிருக்கிறோம்

[பக்கம் 4-ன் தேசப்படம்/படங்கள்]

பெரிய செந்தீவு என்று அழைக்கப்படும் மடகாஸ்கர் உலகிலேயே நான்காவது மிகப் பெரிய தீவு. இந்தச் செம்மண் பூமிக்கே உரிய உயிரினங்கள் ஏராளம்

[பக்கம் 5-ன் படம்]

பயணம்—நாங்கள் சந்தித்த மிகப் பெரிய சவால்

[பக்கம் 5-ன் படங்கள்]

பைபிள் படிப்புகளில் கலந்துகொள்ள எங்களுக்கு ரொம்பப் பிடிக்கும்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்