பயனியர்களுக்கு ஆதரவைக் காண்பித்தல்
1 கடவுளுடைய ஜனங்கள் ஊழியத்தில் வைராக்கியமாக பங்குகொள்வதற்கு நன்கு அறியப்பட்டிருக்கின்றனர். பயனியர் செய்வதற்கு எல்லாருடைய சூழ்நிலைமைகளும் அனுமதிக்காவிட்டாலும் பயனியர் ஆவியை வளர்க்க நாம் முயற்சி செய்ய வேண்டும். நாம் செய்யும் காரியங்களில் முழு ஆத்துமாவோடு ஈடுபட வேண்டும். பயனியர் சேவை செய்ய இயலும் அநேகரோடும் சேர்ந்து நாம் சந்தோஷப்படுகிறோம், உற்சாகப்படுத்துகிறோம்.
2 பயனியராக ஆவதும், பயனியராக நிலைத்திருப்பதும் ஒரு பெரும் பொறுப்பாகும். பிரசங்கிக்கும் வேலையிலும், கற்பிக்கும் வேலையிலும் பயனியர்கள் ஒரு பெரும் பாகத்தை ஏற்றுக்கொள்கின்றனர். அதிக முயற்சியும் தியாகமும் இன்றி இது நிறைவேற்றப்படுவதில்லை. இப்படிப்பட்ட வைராக்கியமுள்ள முழு-நேர ஊழியர்களை மற்றவர்கள் எவ்வாறு ஆதரித்து உற்சாகப்படுத்தலாம்?
3 என்ன செய்யப்படலாம்: மூப்பர்களின் ஆதரவு பயனியர்களுக்கு தேவைப்படுகிறது. மூப்பர்கள் பயனியர்களோடு வேலை செய்கையில் அதிக உற்சாகம் கொடுக்கப்படுகிறது. வருடத்துக்கு ஒரு முறையாவது சபையிலிருக்கும் ஒவ்வொரு பயனியரோடும் வேலை செய்ய அநேக மூப்பர்கள் முயற்சி செய்கின்றனர். இந்த விதத்தில் மூப்பர்கள் பயனியர்கள் செய்யும் வேலைக்கு பாராட்டு தெரிவிக்கின்றனர், அவர்கள் கூடுதலான முன்னேற்றம் செய்வதற்கு உதவி செய்கின்றனர். மூப்பர்களுக்கு கிடைக்கக்கூடிய நேரத்தில் ஊழியத்தில் அவர்களோடு இருப்பதற்கு பயனியர்கள் தங்கள் அட்டவணையை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டியிருக்கலாம். தொகுதிகளுக்கு போதுமான பிராந்தியம் இருக்கிறதா என்பதையும்கூட மூப்பர்கள் நிச்சயப்படுத்திக் கொள்ள விரும்புவர். பயனியர்களின் அட்டவணைக்கு ஏற்ப கூடுதலான வெளி ஊழியத்திற்கான கூட்டங்கள் பிற்பகலிலோ அல்லது மாலையிலோ ஏற்பாடு செய்யலாம். துணைப்பயனியர்கள் அதிகமாக இருக்கும் மாதங்களில் இது விசேஷமாக உண்மையாக இருக்கிறது.—ஏசா. 40:11.
4 சபை ஏற்பாடுகளை ஊக்கமாக கவனித்துக் கொள்வதன் மூலமும், ஊழியத்தில் பயனியர்களை ஆதரிப்பதன் மூலமும் உதவி ஊழியர்கள் பயனியர்களுக்கு உதவி செய்வதற்கு சிறந்த நிலையில் இருக்கின்றனர். வெளி ஊழிய தொகுதிகளை ஒழுங்கமைப்பதில் சகோதரர்கள் முன்நின்று நடத்துவதை பயனியர் சகோதரிகள் போற்றுகின்றனர். பிரசுரங்களையும் பத்திரிகைகளையும் கையாளுபவர்கள் தேவைக்குப் போதுமான அளவு அவைகள் இருக்கின்றனவா என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளலாம். இப்படிப்பட்ட விஷயங்களை கவனித்துக் கொள்வது பயனியர்கள் தங்கள் ஊழியத்தில் தங்கள் கவனத்தை ஒருமுகப்படுத்த உதவி செய்கிறது.
5 ஒவ்வொருவரும் உதவி செய்யலாம்: பயனியர்களோடு அடிக்கடி வேலை செய்வதற்கு முன்வருவதன் மூலம் பிரஸ்தாபிகள் உதவி செய்யலாம். பயனியர்கள் மற்ற பிரஸ்தாபிகளின் கூட்டுறவையும் ஆதரவையும் அனுபவிக்கின்றனர். வாரத்துக்கு ஒரு முறையாவது அல்லது மாதத்துக்கு இரண்டு முறையாவது பயனியர்களோடு வேலை செய்ய நீங்கள் ஏற்பாடு செய்யலாம். பொருள் சம்பந்தமான காரியங்களை பயனியர்களோடு பகிர்ந்து கொள்ளலாம், இந்தத் தாராள மனப்பான்மையை பயனியர்கள் வெகுவாக போற்றுகின்றனர்.—பிலிப். 4:14-19.
6 பயனியர் செய்யும் தங்கள் குடும்ப அங்கத்தினர்களுக்கு உதவி செய்ய குடும்பங்கள் அதிகம் செய்யலாம். குடும்ப அங்கத்தினர்களில் ஒருவராவது அல்லது அதற்கும் மேற்பட்டவர்களாவது பயனியர் செய்வதற்கு வீட்டு வேலைகள் அவ்வப்போது மாற்றி அமைக்கப்படலாம். மூன்று பிள்ளைகளையுடைய ஒரு சகோதரி ஒரு வாரத்தில் இரண்டு நாட்கள் வேலை செய்கிறார். கடைக்குச் செல்வது, வீட்டைச் சுற்றி வேலை செய்வது, போன்ற வேலைகளைச் செய்வதன் மூலம் அவருடைய மகன்கள் உதவி செய்வர். சுத்தம் செய்வது, சமைப்பது போன்ற வேலைகளில் மகள் உதவி செய்வாள். படிப்பை முடித்ததிலிருந்து அவளும்கூட பயனியர் செய்ய ஆரம்பித்திருக்கிறாள், ஒரு நாள் விட்டு மறுநாள் அவளும் அவளுடைய தாயும் மாறி மாறி வீட்டு வேலைகளைச் செய்கின்றனர். இப்படிப்பட்ட ஒத்துழைப்பு குடும்பத்துக்குள் இருப்பது இன்னும் அதிகமான அங்கத்தினர்கள் பயனியர் செய்வதற்கு உதவுகிறது. குடும்பத்துக்கு ஆசீர்வாதங்களைக் கொண்டு வருகிறது.
7 ஊக்கமுள்ள பயனியர்கள் அநேக வழிகளில் சபைக்கு ஆசீர்வாதமாக தங்களை நிரூபிக்கின்றனர். அவர்களுடைய வைராக்கியமும் முன்மாதிரியும் ஊழியத்தில் இன்னும் அதிகம் செய்வதற்கு அநேகரை உற்சாகப்படுத்துகிறது. அவர்களுக்கு ஆதரவு கொடுப்பதற்கு நம்மால் முடிந்ததை நாம் நிச்சயமாக செய்ய வேண்டும். இப்படிப்பட்ட ஒன்றுசேர்ந்த முயற்சிகள் அனைவருக்கும் மகிழ்ச்சியையும், யெகோவாவுக்கு துதியையும் கொண்டு வருகின்றன.