சிற்றேடுகள்—ஊழியத்திற்கான மதிப்புவாய்ந்த கருவிகள்
1 ஒவ்வொரு குறிப்பிட்ட வேலைக்காகவும் வடிவமைக்கப்பட்டிருக்கும் பலதரப்பட்ட கருவிகளை திறமைவாய்ந்த கைவினைஞர் பொதுவாக கொண்டுசெல்கிறார். இராஜ்ய பிரசங்கிகளாக நாம் பிரசங்கிக்கும் ஆட்களின் ஆவிக்குரிய தேவைகளைத் திறம்பட்ட விதத்தில் கையாள நமக்கு உதவும் அதிகளவான பலதரப்பட்ட சிற்றேடுகளை நாம் கொண்டிருக்கிறோம். (நீதி. 22:29, NW) ஒரு வீட்டில், சோர்வுற்றிருக்கும் ஒருவரை நீங்கள் காணலாம். மற்றொரு வீட்டில், வீட்டுக்காரர் நேர்மையான அரசாங்கத்திற்காக ஆவலோடிருக்கலாம், அதேசமயத்தில் இன்னொருவர் வாழ்வதில் ஏதேனும் நோக்கமிருக்கிறதா என யோசிக்கலாம். இந்த ஆட்களுக்கு உதவிசெய்ய நாம் எவ்வாறு நம்முடைய சிற்றேடுகளை உபயோகிக்கலாம்? நம்முடைய பிரச்னைகள் சிற்றேட்டை நாம் எவ்வாறு அளிக்கலாம் என்பதற்கான ஆலோசனைகளுக்கு நம் ராஜ்ய ஊழியம், ஜூலை 1993, பக். 4-ஐயும் ஆகஸ்ட் 1992, பக்கங்கள் 1-ஐயும் 4-ஐயும் பார்க்கவும்.
2 “கடவுள் உண்மையில் நம்மைப்பற்றி அக்கறை உள்ளவராக இருக்கிறாரா?,” என்ற சிற்றேட்டை அளிக்கையில் இதுபோன்ற ஒன்றை நீங்கள் சொல்லலாம்:
◼ “உலகத்தில் உள்ள துன்பங்களையும் அநீதிகளையும் கவனிக்கிற ஆட்கள் அவற்றிற்கெல்லாம் கடவுளை குறைகூறுகின்றனர். கடவுள் சர்வவல்லமை உள்ளவராக இருப்பதால், அவர் உண்மையிலேயே நம்மேல் அக்கறை உள்ளவராயிருந்திருந்தால் நம்முடைய துன்பங்களுக்கு அவர் ஒரு முடிவைக் கொண்டுவந்திருப்பார் என்று அவர்கள் காரணம் சொல்லுகின்றனர். அதைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? [பதிலளிக்க அனுமதியுங்கள்.] உண்மையிலேயே கடவுள் நம்மேல் அக்கறையுள்ளவராக இருக்கிறார் என்று சங்கீதம் 72:12-14 காட்டுகிறது. துன்பத்துக்கும் அநீதிக்கும் அவர் காரணமில்லை. பொல்லாத ஆட்களை சீக்கிரத்தில் நீக்கிவிடப்போவதாக அவர் வாக்குக்கொடுத்திருக்கிறார். கடவுள் உண்மையில் நம்மைப்பற்றி அக்கறை உள்ளவராக இருக்கிறாரா? என்ற இந்தச் சிற்றேடு அவர் என்ன செய்யப்போகிறார், நாம் எப்படி பலனடையலாம் என்பதைக் காட்டுகிறது.” பக்கம் 27, பாரா 22-ல் உள்ள குறிப்புகளுடன் நீங்கள் உங்கள் சம்பாஷணையைத் தொடரலாம்.
3 நீங்கள் “வாழ்க்கையின் நோக்கம்” சிற்றேட்டை உபயோகிக்கிறீர்களென்றால், நீங்கள் இந்த விதமாக ஆரம்பிக்க விரும்பலாம்:
◼ “கடைசியில் ஒவ்வொருவரும் வாழ்க்கையின் நோக்கம் என்னவென்று யோசிக்கிறார்கள். வெறுமனே 70 அல்லது 80 வயதுவரைக்கும் வாழ்ந்துவிட்டு அதற்குப்பின் மரிப்பதற்கா? அல்லது வாழ்க்கைக்கு அர்த்தமிருக்கிறதா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? [பதிலளிக்க அனுமதியுங்கள்.] இங்கே சங்கீதம் 37:29-ல் மனிதனுக்கும் பூமிக்குமான கடவுளுடைய அழகான நோக்கத்தை நாம் பார்க்கிறோம்.” அந்த வசனத்தை வாசித்த பிறகு, பக்கம் 31-ல் உள்ள படத்திற்கு திருப்புங்கள். பரதீஸில் வாழ்வதென்பது எதைக்குறிக்கும் என்பதைப் பற்றி மேலும் சொல்லுங்கள்.
4 அட்டையிலுள்ள முழுப்படத்தையும் காண்பிப்பதன்மூலம் “இதோ!” சிற்றேட்டை அறிமுகப்படுத்தி இவ்வாறு கேட்கலாம்:
◼ “பூமி பார்ப்பதற்கு இந்த மாதிரி இருக்கவேண்டுமென்றால் என்ன செய்யப்பட வேண்டுமென்று நீங்கள் நினைக்கிறீர்கள்? [குறிப்புசொல்ல அனுமதியுங்கள்.] இந்தப் படத்தில் உள்ள எல்லாருக்கும் ஒரு வீடும் சந்தோஷத்தைக் கொடுக்கிற வேலையும் இருக்கிறது. அவர்களுக்கு சமாதானமும் சாப்பிடுவதற்கு ஏராளமானதும் இருக்கிறது, பூமி தூய்மைக்கேடு இல்லாமல் இருக்கிறது. எவ்வளவு கடினமாக முயற்சி செய்தாலும் இப்படிப்பட்ட ஒரு பூமியை மனித அரசாங்கங்கள் நடைமுறைப்படுத்த முடியாது என்பதை அவை அறிந்திருக்கின்றன. ஆனாலும், கடவுள் ‘சகலத்தையும் புதிதாக்குவதாக’ பைபிள் நமக்கு உறுதியளிக்கிறது. [பக்கம் 30-க்குத் திருப்பி, வெளிப்படுத்துதல் 21:3, 4-ஐ வாசிக்கவும்.] இந்தச் சிற்றேடு அந்தப் புதிய உலகத்தில் வாழ்வதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைக் கற்றுக்கொள்ளுவதற்கு உங்களுக்கு உதவலாம்.” போதுமான ஆர்வம் காட்டப்பட்டால் பக்கம் 3-க்குத் திருப்பி, நாம் பைபிள் படிப்பை எப்படி நடத்துகிறோம் என்பதை நடித்துக்காட்டவும்.
5 இந்த அணுகுமுறையை “வாழ்க்கையை மகிழ்வுடன் அனுபவியுங்கள்” சிற்றேட்டிற்கும் உபயோகிக்கலாம்:
◼ “அநேக ஆட்கள் நித்திய ஜீவனை அனுபவிப்பதற்கு அவர்கள் பரலோகத்திற்குப் போக வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் பூமியில் என்றென்றைக்கும் வாழ்வதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? [பதிலளிக்க அனுமதியுங்கள்.] நித்திய ஜீவன் கூடியகாரியந்தான் என்று பைபிள் நமக்கு உறுதியளிக்கிறது, அந்த இலக்கை நாம் எப்படி அடையலாம் என்று அது நமக்குச் சொல்லுகிறது.” யோவான் 17:3-ஐ வாசிக்கவும். அதன்பிறகு 49-வது படத்தை வீட்டுக்காரருக்கு காண்பித்து, இவ்வாறு கேட்கவும்: “இந்த மாதிரியான உலகத்தில் வாழ்வதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” சிற்றேட்டை அளித்து மறுசந்திப்புக்கு ஏற்பாடு செய்யுங்கள்.
6 சிற்றேடுகள் காலத்துக்கேற்ற பொருள்களை கலந்தாலோசிக்கின்றன, ஜனங்களுடைய கேள்விகளுக்கு பதிலளிக்கின்றன, ஆறுதலளிக்கின்றன. நாம் இந்தக் கருவிகளைத் திறம்பட்ட விதத்தில் உபயோகிப்பதன்மூலம் உண்மை மனமுள்ள ஆட்கள் “சத்தியத்தை அறிகிற அறிவை அடைய,” உதவிசெய்யலாம்.—1 தீ. 2:4.