திருத்தமான அறிவைப் பகிர்ந்துகொள்ளுங்கள்
1 டிசம்பர் மாதத்தில் நம்முடைய வெளி ஊழியத்தில், எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர் புத்தகத்தைச் சிறப்பித்துக் காட்டுவோம். காலத்திற்கேற்ற ஒரு பைபிள் கலந்தாலோசிப்பைத் துவங்குவதற்கு நீங்கள் என்ன சொல்வீர்கள், இந்தச் சிறந்த பிரசுரத்தை எவ்வாறு அறிமுகப்படுத்துவீர்கள்?
2 நம்முடைய துண்டுப்பிரதிகளைப் பயன்படுத்துவது: ஒரு நபருடைய ஆர்வத்தைத் தூண்டுவதற்கு மற்ற பிரசுரங்களை அளிப்பதற்கு முன்பாகவே துண்டுப்பிரதிகளைப் பயன்படுத்துவதில் சில பிரஸ்தாபிகள் வெற்றிகண்டிருக்கின்றனர். இதை நிறைவேற்ற நாம் எவ்வாறு உதவி பெறக்கூடும்? இந்த உலகம் தப்பிப்பிழைக்குமா? என்ற துண்டுப்பிரதியை சிறப்பித்துக் காண்பிப்பதன் மூலமாகும்.
ஒரு நபர் பைபிளில் நம்பிக்கையுள்ள ஒரு பின்னணியைக் கொண்டிருந்தால் நீங்கள் இவ்வாறு சொல்லலாம்:
◼ “எக்காலத்திலும் வாழ்ந்தவருள் இயேசு கிறிஸ்துதான் மிகப் பெரிய மனிதர் என்பதை ஜனங்கள் ஒப்புக்கொள்கிறார்களா என்று நாங்கள் அவர்களிடம் கேட்கிறோம். [பதில்சொல்ல அனுமதியுங்கள்.] சந்தேகமில்லாமல், அநேக ஆட்கள் மனித விவகாரங்களின் போக்கில் செல்வாக்கு செலுத்தியிருக்கின்றனர், மற்றும் சிலர் மனித குலத்தின் வளர்ச்சிக்கு பங்களித்திருக்கின்றனர், ஆனால் மற்ற எல்லாரிலிருந்தும் இயேசு கிறிஸ்துவைத் தனித்துக் காண்பிப்பது எது என்பதைக் கவனியுங்கள். [யோவான் 17:3-ஐ வாசியுங்கள்.] மனிதவர்க்கத்துக்கு நித்திய ஜீவனைக் கொடுப்பதற்கு வேறு எவருக்குமே வல்லமையில்லை. [துண்டுப்பிரதியின் 3-ஆம் பக்கத்துக்குத் திருப்புங்கள்.] இயேசு பூமியிலிருந்தபோது, உலக முடிவுக்கு முன்பு நடக்கவிருந்த சம்பவங்களை விளக்கினார். ஆனால் இந்த சம்பவங்கள் மீட்பு சமீபித்திருப்பதை அர்த்தப்படுத்தும் என்ற காரணத்தினால் களிகூரும்படியாக அவர் தம்முடைய சீஷர்களை உற்சாகப்படுத்தவும் செய்தார்.” கிறிஸ்துவின் வந்திருத்தலினுடைய அடையாளத்தின் சில அம்சங்களை சுருக்கமாகக் கலந்துபேசினபின்பு, அவருடைய ராஜ்ய ஆட்சியினுடைய சில ஆசீர்வாதங்களைக் காண்பிக்கும் பின்பக்கத்திற்கு கவனத்தைத் திருப்புங்கள்.
3 ஒரு இளம் பிரஸ்தாபி அல்லது புதிய அல்லது அனுபவமற்ற ஒருவர் அறிமுகம் செய்வதற்கான ஒரு வழியாக துண்டுப்பிரதியிலுள்ள படங்களைச் சிறப்பித்துக் காட்டலாம்.
பைபிளில் நம்பிக்கையில்லாத ஒரு நபரிடம் பேசும்போது, ஒரு பிரஸ்தாபி “இந்த உலகம் தப்பிப்பிழைக்குமா?” என்ற துண்டுப்பிரதியினுடைய 3, 4-ம் பக்கங்களுக்குத் திருப்பி, இவ்வாறு சொல்லலாம்:
◼ “இந்த இரண்டு படங்களையும் கவனியுங்கள். ஒன்று போரின்போது குண்டுகளை வீசுகிற ஒரு விமானத்தின் படமும் மற்றொன்று பட்டினியினால் வருந்தும் ஒரு பிள்ளையின் படமுமாகும். [5-ம் பக்கத்திற்குத் திருப்புங்கள்.] ஒரு பூமியதிர்ச்சி மற்றும் மருத்துவமனை படுக்கையிலிருக்கும் நோய்வாய்ப்பட்ட ஒரு நபரின் இந்தப் படங்களைக் கவனியுங்கள். [இடை நிறுத்தம் செய்யுங்கள்.] இப்படிப்பட்ட பயங்கரமான காரியங்கள் சீக்கிரத்தில் ஒரு முடிவுக்கு வருமென்பதாக பைபிள் காண்பிக்கிறது.”
4 பின்பு நீங்கள் பைபிளிலிருந்து நேரடியாகவோ அல்லது துண்டுப்பிரதியில் பக்கம் 6-ல் மேற்கோள் காட்டப்பட்டிருப்பதிலிருந்தோ வெளிப்படுத்துதல் 21:3, 4-ஐ வாசிக்கலாம். காண்பிக்கப்படும் ஆர்வத்தைப் பொருத்து, கூடுதலானத் தகவலை நீங்கள் குறிப்பிட்டுக் காண்பிக்கலாம். மிகப் பெரிய மனிதர் புத்தகம் அல்லது என்றும் வாழலாம் புத்தகம், எது மிகவும் பொருத்தமானதாகத் தெரிகிறதோ அதை அளியுங்கள். என்றும் வாழலாம் புத்தகத்தில் 150-153 மற்றும் 156-162-ம் பக்கங்களில் உள்ள படங்களைக் காண்பிப்பதன் மூலமாக தற்போதைய நிலைமைகளை கடவுளுடைய ராஜ்யத்தின் கீழுள்ள எதிர்கால நிலைமைகளோடு நீங்கள் ஒப்பிட்டுக் காண்பிக்கலாம்.
5 ஒரு எதிர்காலச் சந்திப்பிற்காக அடித்தளம் போடுங்கள்: சந்தேகமில்லாமல், நாம் ஒரு துண்டுப்பிரதியை, மிகப் பெரிய மனிதர் புத்தகத்தை அல்லது வேறு பிரசுரங்களை விட்டுச்சென்றோமென்றாலும் சரி, அல்லது வெறுமனே ரம்மியமாக உரையாடியிருந்தாலும் சரி, நாம் இவ்வாறு சொல்லலாம்: “நான் அடுத்த முறை வரும்போது, கடவுளுடைய ராஜ்யம் சீக்கிரத்தில் கொண்டுவரப்போகும் மாற்றத்தைக் குறித்து மற்றுமொரு ஆர்வமளிக்கும் உண்மையை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.” இந்தச் சந்திப்பைக் குறித்தும் காண்பிக்கப்பட்ட ஆர்வத்தைக் குறித்தும் கவனமாகக் குறிப்பெடுத்துக்கொள்ள நிச்சயமாயிருங்கள்.
6 இந்த ராஜ்யம் மனிதவர்க்கத்திற்கு ஒரே உண்மையான நம்பிக்கையை அளிக்கிறது. நாம் சந்திக்கிற அனைவரிடமும் “தேவனுடைய பரிசுத்த இரகசியமாகியக் கிறிஸ்துவைக் குறித்த திருத்தமான அறிவை” பகிர்ந்துகொள்ள நம்முடைய ஊக்கமான ஆர்வத்தைக் காண்பிப்போமாக.—கொலோ. 2:2, NW.