அக்கறை காண்பித்தவர்களை பகுத்துணர்வோடு மீண்டும் சந்தியுங்கள்
1 நம்முடைய செய்தியில் அக்கறை காண்பித்த சிலர் தங்களுடைய விடுமுறை நடவடிக்கைகளில் மும்முரமாயிருக்கும் ஒரு மாதம்தான் டிசம்பர். மற்ற அநேகர் தங்களுடைய தினசரி நடவடிக்கைகளில் எப்பொழுதுமே மும்முரமாயிருப்பதாகத் தோன்றுகிறது. ஆகவே, அக்கறை காண்பித்தவர்களை மீண்டும் சந்திக்கும்போது, நாம் பகுத்துணர்வோடு செயல்படவேண்டியது அவசியம். மேலுமாக ஒரு நீண்டநேர உரையாடலுக்கு வீட்டுக்காரர் ஆர்வத்தைக் காண்பித்தால் தவிர, குறிப்புக்கு உடனடியாகச் செல்வதற்கு நாம் ஒருவேளை தயாராயிருக்க வேண்டும்.
2 நாம் என்ன சொல்லப்போகிறோமோ அதற்கு முன்கூட்டியே சிந்தனை செலுத்துங்கள்: நாம் என்ன சொல்ல விரும்புகிறோமோ அதை நாம் எப்போதும் மனதில் தெளிவாகக் கொண்டிருக்கவேண்டும். முந்தின சந்திப்பின்பேரிலுள்ள நம்முடைய குறிப்புகளைப் பார்ப்பது மற்றும் உரையாடலில் நாம் பேசின குறிப்புகளையும் வீட்டுக்காரரிடம் விட்டுச்சென்ற பதிலளிக்கப்படாத கேள்விகளிருக்குமேயானால் அவற்றையும் ஞாபகப்படுத்திக்கொள்வதை இது தேவைப்படுத்துகிறது.
3 இயேசுவில் விசுவாசமிருப்பதாகச் சொல்லிக்கொள்ளும் ஒரு நபரை மீண்டும் சந்திக்கும்போது நாம் இவ்வாறு சொல்லலாம்:
◼ “வருடத்தின் இந்தச் சமயத்தில், அநேகர் கிறிஸ்துவினுடைய பிறப்பைக் குறித்து யோசித்துக்கொண்டிருக்கின்றனர். சென்றமுறை நாம் பேசினபோது, மற்ற எல்லாரிலிருந்தும் தனித்து நிற்கக்கூடிய, இயேசு கிறிஸ்து ஒரு தனித்தன்மை வாய்ந்த நபர் என்பதைக் குறிப்பிட்டிருந்தேன். இயேசு பெத்லகேமில் பிறப்பார் என்பதாக 700 வருடங்களுக்கு முன்பாகவே பைபிள் முன்னறிவித்ததென்பது உங்களுக்குத் தெரியுமா?” பதில் சொல்ல அனுமதியுங்கள். பின்பு, மீகா 5:2-ஐ வாசித்தபிறகு, நீங்கள் இவ்வாறு சொல்லலாம்: “அது ஒரு ஆச்சரியமூட்டும் தீர்க்கதரிசனம், அல்லவா? இது அக்கறையூட்டும் பைபிள் சம்பந்தமான ஒரு உண்மையாயிருக்கும்போது, நம்முடைய காலங்களிலுங்கூட பைபிள் தீர்க்கதரிசனங்கள் நிறைவேறிவருவது உங்களுக்குத் தெரியுமா?” அந்த நபருக்கு நேரமிருக்குமேயானால், நாம் உரையாடலைத் தொடரலாம், அல்லது அவர் அதிக வேலையுள்ளவராயிருந்தால், அவரை மறுபடியுமாகச் சந்தித்து கூடுதலாக இதைக் குறித்து கலந்துபேசுவதாகச் சொல்லலாம்.
4 பைபிள் அறிவுடைய ஒரு பின்னணியில்லாத எவரிடமாவது “இந்த உலகம் தப்பிப்பிழைக்குமா?” என்ற துண்டுப்பிரதி கொடுக்கப்பட்டிருந்தால், நாம் பின்வருமாறு சொல்லலாம்:
◼ “‘அந்த அடையாளம்’ என்ற உபதலைப்பின்கீழ், பக்கம் 3-ல் குறிப்பிடப்பட்டுள்ளதைக் கவனியுங்கள். இது தற்போதைய உலகத்தின் கடைசி நாட்களை அடையாளப்படுத்தும் என்பதாக இயேசு சொன்ன தீர்க்கதரிசனங்களைப் பற்றியது. [இரண்டு அல்லது மூன்று தீர்க்கதரிசனங்களை வீட்டுக்காரரோடு சிந்தியுங்கள்.] இந்தத் தீர்க்கதரிசனங்கள் நம்முடைய நாளில் நிறைவேறி வருவதற்கான சான்றிருப்பதாக நீங்கள் சொல்வீர்களா?” இப்பொழுது வீட்டுக்காரர் என்றும் வாழலாம் புத்தகத்தை அல்லது மிகப் பெரிய மனிதர் புத்தகத்தைப் பெற்றுக்கொள்ளும்படியாக அவருக்கு யோசனை கூற நீங்கள் ஒருவேளை விரும்பலாம். இயேசு கொடுத்த அந்த அடையாளத்தைக் குறித்து என்றும் வாழலாம் புத்தகத்தில் 18-ம் அதிகாரம் அல்லது மிகப் பெரிய மனிதர் புத்தகத்தில் 111-ம் அதிகாரம் எவ்வாறு இன்னும் அதிக விவரமாகச் சொல்கிறதென்பதைக் காண்பியுங்கள்.
5 ஒரு வீட்டு பைபிள் படிப்பை அளித்தல்: மிகப் பெரிய மனிதர் புத்தகத்தை நாம் வீட்டுக்காரரிடம் விட்டு வந்தால் அல்லது அவரிடம் ஏற்கெனவே ஒரு பிரதியிருக்குமேயானால், அதிகாரம் 111-ஐ பயன்படுத்தி ஒரு வீட்டு பைபிள் படிப்பை நடித்துக் காட்டுவது நன்றாயிருக்கும். சபை புத்தகப் படிப்பில் பயன்படுத்துவது போன்ற ஒரு முறையை நாம் பயன்படுத்தலாம். படிப்பு தொடர்ந்து முன்னேற்றமடைந்தால், சிற்றேடுகளில் ஒன்றிற்கு அல்லது நேரடியாகவே என்றும் வாழலாம் புத்தகத்திற்கு நாம் படிப்பை மாற்றிக்கொள்ளலாம்.
6 அக்கறை காண்பித்த அனைவரையும் மீண்டும் சந்திக்க நாம் எப்பொழுதுமே தயாராயிருப்போமாக. நாம் பகுத்தறிகிறவர்களாயிருந்து, ஒவ்வொரு உரையாடலின் முடிவிலும் ஆர்வத்தைத் தூண்டும் கேள்விகளை எழுப்புவதன் மூலமாக ஒரு எதிர்கால சந்திப்பிற்கு வழியை உண்டாக்க எப்போதும் முயற்சி செய்யவேண்டும். இது “எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவ”ர்களாயிருக்க நமக்கு உதவும்.—2 தீ. 3:16.