சீஷர்களை உண்டுபண்ணுகிற பைபிள் படிப்புகள்
1 எத்தியோப்பிய மந்திரியிடம் பிலிப்பு, “இயேசுவைப் பற்றிய நற்செய்தியைப் பிரசங்கித்தார்.” அதன் பின்பு அவர் பிலிப்புவினிடமாக “எனக்கு முழுக்காட்டுதல் கொடுப்பதற்கு தடையென்ன?” என்று கேட்டார். (அப். 8:27-39, NW) மந்திரியுடைய விஷயத்தில், அவருக்கு ஏற்கெனவே கடவுளால் ஏவப்பட்டு எழுதப்பட்ட வார்த்தைகளின்மீது ஆர்வம் இருந்தது, மேலும் பிலிப்புவிடமிருந்து ஆவிக்குரிய விஷயத்தில் உதவியைப் பெற்ற பின்பு சீஷராக தயாராகியிருந்தார். ஆனால் எல்லா மக்களும் பைபிளை தாங்களே ஆராய்ந்து பார்க்கவேண்டும் என்பதை நம்புவதில்லை.
2 யெகோவாவின் அமைப்பானது, கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்? என்ற சிற்றேட்டை நமக்கு உருவாக்கித் தந்தமைக்காக நன்றியுள்ளவர்களாய் இருக்கலாம். இந்தச் சிற்றேடானது, மிகக் குறுகிய காலத்தில் மக்கள் நம் நாளிற்கான பைபிள் செய்தியை அறிந்துகொள்வதற்கு உதவிசெய்கிறது. இந்தச் சிற்றேட்டிலுள்ள விஷயங்கள், படித்திருக்கின்ற ஆனால் பைபிளைப் பற்றி சிறிதே அறிந்திருக்கின்ற நேர்மையான மக்களுடைய மனதைக் கவருவதாய் இருக்க வேண்டும். மக்கள் பைபிளை ஆராயத் தூண்டும் வகையில் இந்த அருமையான சிற்றேடு வடிவமைக்கப்பட்டுள்ளது.
3 அறிவு புத்தகத்தை பயன்படுத்தி நாம் எவ்விதத்தில் பலன்தரும் பைபிள் படிப்பை நடத்தலாம் என்பதற்கான சிறந்த ஆலோசனைகள் ஜூன் 1996 நம் ராஜ்ய ஊழியத்தின் உட்சேர்க்கையில் கொடுக்கப்பட்டுள்ளன. புதிய படிப்புகளை ஆரம்பிக்கையில் இவற்றை நீங்கள் மறுபார்வை செய்வது உதவியளிப்பதாய் இருக்கும். படிப்பு நடத்தும்போது மாணாக்கரின் முன்னேற்றத்தைக் கவனியுங்கள்; இது எந்த விஷயங்களில் உதவி தேவை என்பதை அறிந்துகொள்ள உங்களுக்கு உதவும். அதிகாரங்களையும் அதிலுள்ள வேத வசனங்களையும் முன்பாகவே நன்கு தயாரிக்க மாணாக்கரை ஊக்குவியுங்கள். சொந்த வார்த்தைகளில் அவர் சொல்லும் பதில்கள் சத்தியத்திற்கு அவர் இருதயப்பூர்வமான போற்றுதல் காண்பிக்கிறார் என்பதை வெளிப்படுத்தும். சங்கத்தின் பிரசுரங்களைக் கூடுதலாக தொடர்ந்து படிப்போரும், சபை கூட்டங்களுக்குத் தொடர்ந்து ஆஜராவோரும் பொதுவாக விரைவில் முன்னேற்றம் செய்கின்றனர். அவர் கற்றுக்கொண்ட காரியங்களை மற்றவர்களிடமாக சந்தர்ப்பவசமாக பேசும்படி ஊக்குவியுங்கள். ஆவிக்குரிய விதத்தில் அவர் முன்னேற என்ன செய்ய வேண்டும் என்பதை அவருக்குக் கனிவுடன் காட்டுங்கள். முன்னேற்றம் காண்பிக்காத நபர்களிடம் காலங்காலமாக தொடர்ந்து படிப்பு நடத்தக் கூடாது. மாணாக்கர் கற்றுக்கொள்ளவும், சத்தியத்திற்கான உறுதியான நிலைநிற்கை எடுக்கவும், மேலும் ஒப்புக்கொடுத்து முழுக்காட்டுதல் பெறுவதற்கான படிகளை எடுக்கவும் அவர்களே முன்வந்து செயல்பட வேண்டும்.
4 சில வீடுகளில் ஒன்றிற்கு மேற்பட்டப் படிப்புகள் குடும்பங்களிலுள்ள பல நபர்களிடமாக தனித்தனியாக நடத்தப்படுகின்றன. எனினும், முழுக்குடும்பத்தையும் இணைத்து ஒரு படிப்பாக எடுப்பது அநேகருடைய விஷயங்களில் நல்லதாக இருக்கும். ஏனென்றால், இவ்வாறு செய்வது முழுக்குடும்பத்தையும் ஆவிக்குரிய விதத்தில் கட்டியெழுப்ப உதவும்.
5 நாம் போய் சீஷர்களை உண்டுபண்ணவேண்டும் என்பது இயேசு கிறிஸ்து கொடுத்த கட்டளை. (மத். 28:19) இதைச் செய்வதற்கு, மற்றவர்கள் முன்னேறி அவர்களாகவே “எனக்கு முழுக்காட்டுதல் கொடுப்பதற்கு தடையென்ன?” என்று கேட்கும் அளவிற்கு உதவிசெய்வதாக நாம் பைபிள் படிப்பு நடத்தும்விதம் இருக்க வேண்டும்.