மக்கள் மனங்களில் நித்திய ஜீவ நம்பிக்கையை விதையுங்கள்
1 வயதாவதை தடுக்கவேண்டும், ஆயுளை அதிகரிக்க வேண்டும் என்று எத்தனையோ வழிகளை மனிதன் ஆராய்ந்துவிட்டான், ஆனாலும் வயதாவதும் இறப்பதும் நின்றபாடில்லை. மனிதர்களுக்கு ஏன் வயதாகிறது, அவர்கள் ஏன் இறக்கிறார்கள், முதுமையின் கோரப்பிடி தளர்ந்து எப்படி இளமை திரும்பும், மரணம் எப்படி நிரந்தரமாக ஒழிக்கப்படும் என்று பைபிள் நமக்கு விளக்கம் தருவதால் நாம் நன்றியுள்ளவர்களாக இருக்கவேண்டும். நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு புத்தகத்தில் இத்தகைய சத்தியங்கள் நம்பத்தகுந்த விதத்தில் வழங்கப்பட்டுள்ளன. உயிரைப் பற்றியும், இறப்பைப் பற்றியும் மனதை குழப்பும் கேள்விகளுக்கு இப்புத்தகம் தெளிவான பதிலை அளிக்கிறது. மறுபடியும் பரதீஸ் நிலைநாட்டப்படும் காலத்தையும் இது வாசகருக்கு சுட்டிக்காட்டுகிறது.
2 மார்ச் மாதத்தில் பைபிள் படிப்புகளை ஆரம்பிக்க வேண்டும் என்ற இலட்சியத்தோடு அறிவு புத்தகத்தை அளிப்போம். (மத். 28:19, 20) ராஜ்ய செய்திக்கு ஆர்வம் காட்டிய அனைவரையும் நாம் மறுசந்திப்பு செய்வோம். இவ்வாறாக, மக்கள் மனங்களில் நித்திய ஜீவ நம்பிக்கையை நாம் விதைக்கலாம். (தீத். 1:3) இதைச் செய்ய பின்வரும் ஆலோசனைகள் உங்களுக்கு உதவியாய் இருக்கலாம்.
3 முதல்முறை சந்திக்கும்போது, இந்தக் கேள்வியை கேட்கலாம்:
◼ “மனிதர்கள் ரொம்ப காலம் வாழ ஆசைப்படுகிறார்கள். ஏன் என்று நீங்க எப்பவாவது யோசிச்சிருக்கீங்களா? [பதில் சொல்ல அனுமதியுங்கள்.] இறந்துபோன பிறகும் வாழ்க்கை இருக்கிறது என்ற நம்பிக்கை புத்த மதத்தவர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும், இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும், இன்னும் மத்தவங்களுக்கும் இருக்குது.” அறிவு புத்தகத்தில், “நாம் ஏன் முதியோராகி மரிக்கிறோம்?” என்ற 6-ம் அதிகாரத்திற்குத் திருப்பி 3-ம் பாராவை வாசியுங்கள். இடக்குறிப்பு கொடுக்கப்பட்டுள்ள வசனங்களை சிந்தனையைத் தூண்டும் வண்ணம் எடுத்துக்கூறுங்கள். பாராவின் கடைசியில் கொடுக்கப்பட்டுள்ள இரண்டு கேள்விகளையும் வீட்டுக்காரரிடம் சுட்டிக்காட்டி, அவராகவே விடைகளை கண்டுபிடிக்க விரும்புகிறாரா என்று கேட்டுவிடுங்கள். அவருக்கு விருப்பம் என்றால், தொடர்ந்து ஒருசில பாராக்களை கலந்து பேசுங்கள். இதோ, ஒரு பைபிள் படிப்பு துவங்கியாயிற்றே! இல்லையென்றால், புத்தகத்தை அவருக்கு அளியுங்கள்; மறுபடியும் வந்து சந்திக்க ஏற்பாடு செய்யுங்கள்; கூடுமானால் இரண்டொரு நாட்களில் திரும்பிப்போய் விடைகளை கலந்தாராயுங்கள்.
4 “அறிவு” புத்தகத்தை கொடுத்தப்பின், மறுபடியும் போகும்போது இப்படி சொல்லலாம்:
◼ “மரணத்தைப் பத்திய அந்த இரண்டு கேள்விகளுக்கு பதில் பார்க்காமலே நாம் விட்டுவிட்டோமே, அதை கொஞ்சம் கலந்தாராயலாமுன்னு வந்தேன்.” அந்தக் கேள்விகளை வீட்டுக்காரருக்கு மறுபடியும் ஞாபகப்படுத்துங்கள். பிறகு 6-ம் அதிகாரத்தில், “வஞ்சனையான ஒரு சதித்திட்டம்” என்ற உபதலைப்பில் கொடுக்கப்பட்டுள்ள விஷயத்தை கலந்து பேசுங்கள். சூழ்நிலைக்கு ஏற்ப படிப்பை தொடருங்கள் அல்லது 7-வது பாராவின் கடைசியில் கொடுக்கப்பட்டுள்ள கேள்வியை கேட்டு, அடுத்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்துவிட்டு வாருங்கள். மறுபடியும் போய் சந்திக்க திட்டவட்டமாக முடிவுசெய்யுங்கள். வீட்டுக்காரரிடம் கைப்பிரதி ஒன்றை கொடுத்து, சபையில் கூட்டங்கள் எப்படி நடைபெறும் என்பதை சுருக்கமாக சொல்லுங்கள். கனிவோடு அவரை கூட்டங்களுக்கு அழையுங்கள்.
5 வீட்டுக்கு வீடு ஊழியம் செய்யும்போதோ சந்தர்ப்ப சாட்சிகொடுக்கும்போதோ இப்படி சொல்லி பேச்சை ஆரம்பிக்கலாம்:
◼ “நம் எதிர்காலமும் இந்தப் பூமியோட எதிர்காலமும் எப்படி இருக்கும்னு நீங்க நினைச்சுப்பாத்தீங்களா? [பதில் சொல்ல அனுமதியுங்கள்.] நம் முழு எதிர்காலத்தையும் பாரடைஸ் (பரதீஸ்) என்ற ஒரு வார்த்தைக்குள் அடக்கிவிடுகிறது பைபிள்! முதல்லே கடவுள் இந்தப் பூமியோட ஒரு பகுதியை பரதீஸ் எனப்படும் அழகான ஒரு பூங்காவா மாத்தி, அதில் முதல் மனுஷ ஜோடிகளை குடியிருக்கும்படி வைச்சாரு என்று பைபிள் விளக்குது. அவங்க இந்த பூமியை தங்களோட புள்ளக்குட்டிகளாலே நிரப்பி, மெது மெதுவா முழு பூமியையும் ஒரு பரதீஸா மாத்தணும். அப்போ இதுமாதிரித்தான் இருந்திருக்கும்.” அறிவு புத்தகத்தில் 8-ம் பக்கத்தை திருப்பி, “பரதீஸில் வாழ்க்கை” என்ற உபதலைப்பின்கீழ் 9-ம் பாராவை வாசியுங்கள். பிறகு 10-ம் பாராவில் உள்ள குறிப்புகளை கலந்தாராய்ந்து, இடக்குறிப்பு கொடுக்கப்பட்டுள்ள ஏசாயா 55:10, 11-ஐ வாசித்து காட்டுங்கள். திரும்ப நிலைநாட்டப்பட்ட பரதீஸில் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்ள கலந்தாலோசிப்பை தொடரலாமா என்று கேட்டு, 11-16 பாராக்களை முடித்துவிடுங்கள். அல்லது அவரையே படித்து பார்க்கும்படி ஊக்கம் தந்து, மறுபடியும் உரையாட ஏற்பாடு செய்துவிட்டு வாருங்கள்.
6 ஒருவேளை முதல்சந்திப்பில் பைபிள் படிப்பை ஆரம்பிக்க முடியவில்லையென்றால், மறுசந்திப்பில் இவ்வாறு சொல்லி ஆரம்பிக்கலாம்:
◼ “இந்த முழு பூமியை ஒரு பரதீஸாக மாற்றவேண்டும் என்று கடவுள் நினைத்திருந்தார் என்பதைப் பற்றி நாம் போனமுறை பேசினோம். அப்போ, பரதீஸ் என்றால் எப்படியிருக்கும் என்ற கேள்வி எழுகிறது.” அறிவு புத்தகத்தில் முதல் அதிகாரத்திற்கு திருப்பி, “திரும்ப நிலைநாட்டப்பட்ட பரதீஸில் வாழ்க்கை” என்ற உபதலைப்பின்கீழ், 11-16 பாராக்களை படியுங்கள். பிறகு, 4-5 பக்கங்களில் கொடுக்கப்பட்டிருக்கும் படத்தை காண்பித்து, அத்தகைய அழகான சூழலில் வாழ அந்த நபருக்கு விருப்பமா என்று கேளுங்கள். அதன்பிறகு, 10-ம் பக்கத்தில், 17-ம் பாராவின் முதல் வரியை வாசியுங்கள். சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு, படிப்பை தொடருங்கள் அல்லது நிலைநாட்டப்பட்ட பரதீஸில் வாழவேண்டும் என்றால் ஒருவருக்கு என்ன தேவை என்பதை விளக்க நீங்கள் மறுபடியும் வருவதாக சொல்லுங்கள். கைப்பிரதியை கொடுத்து, கூட்டத்தின் நேரங்களை விளக்கி, ராஜ்ய மன்றத்திற்கு வரும்படி அந்த நபரை அன்போடு அழையுங்கள்.
7 கடவுள் வாக்குக்கொடுத்திருக்கும் ‘நித்திய ஜீவனை’ பற்றி மக்களுக்கு தெரிவிக்க அறிவு புத்தகம் ஒரு சிறந்த கருவியாக உள்ளது. நீங்கள் பைபிள் படிப்புகளை நடத்துவதன் மூலம், “பொய்யுரையாத தேவன்” ஆவியால் ஏவிய இந்த அருமையான நம்பிக்கையை மக்கள் மனங்களில் உங்களால் விதைக்க முடியும்.