முன்தயாரிப்பால் உள்ளத்தில் பொங்கும் சந்தோஷம்
1 வெளி ஊழியத்தில் கலந்துகொள்வது அதிக சந்தோஷத்தை கொடுக்கிறது. (சங். 89:15, 16) அந்த சந்தோஷத்தை முழுமையாக அனுபவிக்க, தயாரிப்பு மிக அவசியம். எந்தளவு நன்றாக தயாரிக்கிறோமோ, அந்தளவு அதிகத்தை சாதிக்க முடியும். எந்தளவு அதிகத்தை சாதிக்கிறோமோ அந்தளவு அதிகமான சந்தோஷத்தைப் பெற முடியும்.
2 உபகரணங்களை பயன்படுத்துதல்: நம் ராஜ்ய ஊழியத்திலுள்ள கட்டுரையை தயாரிக்கும்போது முதலில் வாசியுங்கள். பின்பு அதைப் பற்றி கவனமாக சிந்தித்து நன்றாக புரிந்துகொள்ளுங்கள். ராஜ்ய செய்தியை எளிமையாகவும் திறமையாகவும் சொல்வதற்கு ஏற்ப, நன்கு தயாரிக்கப்பட்ட பிரசங்கங்கள் இக்கட்டுரையில் உள்ளன. பொதுவாக ஜனங்கள் எதிர்ப்பு தெரிவிக்கையில் எப்படி சமாளிப்பது என்பதற்கு சில உதாரணங்களும் அதில் உள்ளன. ஒரு பைபிள் படிப்பை ஆரம்பிக்க வேண்டும் என்கிற நோக்கத்தோடு, திறமையாக மறுசந்திப்புகளை எப்படி செய்யலாம் என்பதற்கு திட்டவட்டமான குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. எந்த சந்தர்ப்பங்களில் இந்த அளிப்புகள் பொருத்தமாய் இருக்குமென நீங்கள் நினைக்கிறீர்களோ, அந்த சந்தர்ப்பங்களில் பயன்படுத்தலாம். அதுமட்டுமல்ல, நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகமும் உங்களுக்கு இருக்கிறது. ஊழியத்தில் பயன்படுத்துவதற்கு வித்தியாசமான பல அறிமுகங்கள் அதில் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், உரையாடலை நிறுத்தும் வீட்டுக்காரர்களுக்கு நீங்கள் எவ்வாறு மறுமொழியளிக்கலாம் என்பதையும் இப்புத்தகம் விளக்குகிறது. நீங்கள் எதிர்ப்படும் பல சந்தர்ப்பங்களை திறமையாக சமாளிக்க இது கைகொடுக்கிறது.
3 நீங்கள் கொடுக்கப்போகும் பிரசுரத்தை நன்கு ஆராய்ந்து, வீட்டுக்காரரிடம் காட்டுவதற்காக ஆர்வத்தைத் தூண்டும் ஒன்று அல்லது இரண்டு குறிப்புகளை தேர்ந்தெடுங்கள். நீங்கள் வாசித்த அல்லது கேள்விப்பட்ட சுவாரஸ்யமான செய்தியை உபயோகித்து உரையாடலை ஆரம்பிக்கலாம். நீங்கள் எதிர்ப்பட போகும் எதிர்ப்புகளை முன்னதாக யோசித்து, அதற்கு நீங்கள் எப்படி பதிலளிக்கலாம் என்பதையும் மனதிலேயே சொல்லிப் பாருங்கள். பிறகு, வீட்டுக்காரரிடம் என்ன பேசப் போகிறீர்கள் என்பதை சில நிமிடங்கள் பழகிப் பாருங்கள்.
4 எல்லா ஊழியக் கூட்டத்திற்கும் ஆஜராகுங்கள்: நம் ராஜ்ய ஊழியத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் ஆலோசனைகளை சிந்திக்கும்போதும் மறுபரிசீலனை செய்யும்போதும் நடித்துக் காட்டும்போதும் கவனமாக செவிகொடுத்து கேளுங்கள். உங்களுடைய பிரசங்கங்களில் எவற்றை நீங்கள் பயன்படுத்த விரும்புகிறீர்களோ அவ்விஷயங்களை குறித்துக்கொள்ளுங்கள். ஊழியத்தில் நீங்கள் எதிர்ப்பட்ட சூழ்நிலைகளில் சிலவற்றை மனதிற்கு கொண்டு வாருங்கள். அவற்றைப் போன்ற சூழ்நிலை இனி ஏற்படுகையில் இன்னும் திறமையாக சமாளிக்க வழிகளை யோசியுங்கள். இந்த விஷயங்களைப் பற்றி, கூட்டத்திற்கு முன்பும் பின்பும் மற்ற பிரஸ்தாபிகளோடு கலந்து பேசுங்கள்.
5 நீங்கள் ‘எந்த நற்கிரியைக்கும் ஆயத்தமாக’ இருந்தால், நிச்சயமாகவே உங்கள் உள்ளத்தில் சந்தோஷம் பொங்கும். மற்றவர்களை ஜீவப்பாதைக்கு வழிநடத்துவதில் வெற்றியும் உறுதி.—2 தீ. 2: 21.