ஏப்ரல்—‘நாம் கடினமாக உழைத்து, மும்முரமாய் ஈடுபடுவதற்கான’ சமயம்
1 நினைவு ஆசரிப்புக் காலம், யெகோவாவின் ஜனங்கள் சில முக்கிய விஷயங்களை சிந்தித்துப் பார்ப்பதற்கான சமயம். கிறிஸ்துவின் மரணத்தால் கிடைத்த பலன்களையும், அவர் சிந்திய இரத்தத்தால் சாத்தியமாகும் கடவுள் கொடுத்த நம்பிக்கையையும் நினைத்து பார்ப்பதற்கான சமயம். கடந்த வருடம் ஏப்ரல் 19-ம் தேதி என்றதும் எது உங்கள் நினைவுக்கு வருகிறது? அன்றைய மாலைப் பொழுதில் யார் யாரைக் கண்டீர்கள் என சொல்ல முடியுமா? அந்த நினைவு ஆசரிப்பில் நிலவிய மதிப்புமிக்க ஆன்மீக சூழல் ஞாபகத்தில் இருக்கிறதா? கருத்தார்ந்த பைபிள் கலந்தாலோசிப்பும் இதயப்பூர்வமான ஜெபங்களும் எண்ணத் திரையில் ஓடுகின்றனவா? யெகோவாவும் இயேசுவும் காண்பித்திருக்கும் அன்புக்கு உங்கள் போற்றுதலை இன்னும் அதிகமாய் வெளிக்காட்ட ஒருவேளை நீங்கள் தீர்மானித்திருப்பீர்கள். அப்படி சிந்தித்தது இப்போது எப்படி உங்களை செயல்பட தூண்டுகிறது?
2 யெகோவாவின் ஜனங்கள் தங்கள் நன்றியை சொல்லிக்கொள்வதோடு நிறுத்திக்கொள்ளாமல் செயல்களில் காட்டுவது தெளிவாக தெரிகிறது. (கொலோ. 3:15, 17) கடந்த ஏப்ரல் மாதம், கிறிஸ்தவ ஊழியத்தில் அதிகளவு கலந்துகொண்டு இரட்சிப்பிற்கான யெகோவாவின் ஏற்பாடுகளுக்கு நம்முடைய போற்றுதலைக் காட்டினோம். இப்படி, நூற்றுக்கணக்கானோர் துணைப் பயனியர் ஊழியம் செய்ததால் அந்த எண்ணிக்கையில் இந்தியாவின் முந்தைய உச்சநிலையைவிட 34 சதவீதம் அதிகரிப்பிருந்தது. இவர்களுடன் மற்ற ராஜ்ய அறிவிப்பாளர்களும் சேர்ந்து கொண்டது அநேக நல்ல பலன்களை அளித்தது; மணிநேரம், பிரசுர அளிப்பு, மறுசந்திப்புகள் ஆகியவற்றில் புதிய உச்சநிலையை ஏற்படுத்தியது. இதன் விளைவாக ஆயிரக்கணக்கான புதிய பைபிள் படிப்புகள் ஆரம்பிக்கப்பட்டதும், நினைவு ஆசரிப்பில் கலந்துகொண்டவர்களின் புதிய உச்சநிலை எண்ணிக்கையும் அதிக ஆனந்தத்தைத் தந்தது!
3 நம்மிடமுள்ள அசைக்க முடியாத நம்பிக்கை உண்மையிலேயே நம்மை செயல்பட தூண்டுகிறது. “ஜீவனுள்ள கடவுளில் நம்பிக்கை வைத்திருப்பதால்தான் ஊழியத்தில் நாம் கடினமாக உழைத்து, மும்முரமாய் ஈடுபட்டு வருகிறோம். அவரே எல்லாருக்கும், முக்கியமாக விசுவாசிகளுக்கும் மீட்பர்” என அப்போஸ்தலன் பவுல் எழுதியதற்கு இசைவாக இது உள்ளது.—1 தீ. 4:10, NW.
4 இந்த வருட நினைவு ஆசரிப்பு சமயத்தில், ஜீவனைப் பெற யெகோவா செய்திருக்கும் ஏற்பாடுகளில் உங்களுக்கு இருக்கும் நம்பிக்கையை எப்படி வெளிக்காட்டப் போகிறீர்கள்? இந்தியாவில் இதுவரை பதிவாகியுள்ள பிரஸ்தாபிகளின் எண்ணிக்கையில் இரண்டாவது உச்சநிலை எண்ணிக்கையை கடந்த ஏப்ரலில் கண்டோம். இந்த வருட ஏப்ரல் மாதத்தில் அந்த எண்ணிக்கையை தாண்ட முடியுமா? இது நிச்சயம் முடியும்! ஆனால் அதற்கு முழுக்காட்டப்பட்ட, முழுக்காட்டப்படாத பிரஸ்தாபிகள் அனைவரும் பிரசங்கிப்பில் பங்கேற்பது அவசியம். புதியவர்கள் பலரும் இதில் பங்குகொள்ளும் அளவிற்கு தகுதிகளைப் பெறலாம். இவ்வாறு, இந்த ஏப்ரல் மாதத்தில் கடினமாக உழைத்து, மும்முரமாய் ஈடுபடுவதற்கு நீங்கள் திட்டமிடுகையில், புதியவர்களை, அதிக அனுபவமில்லாதவர்களை எப்படி உற்சாகப்படுத்தி உடன் அழைத்துச் செல்லலாம் என யோசியுங்கள்.
5 மீண்டும் ஊழியத்தில் ஈடுபட உதவுதல்: ஓரிரு மாதங்களுக்கு வெளி ஊழியத்தில் கலந்துகொள்ளாத யாரேனும் இருந்தால் அவர்களை உற்சாகப்படுத்தி, உங்களுடன் ஊழியத்திற்கு அழைத்துச் செல்லலாம். சபையில் யாரேனும் செயலற்றவர்கள் இருந்தால், மீண்டும் அவர்களை சந்தித்து ஏப்ரல் மாதத்தில் ஊழியத்தில் கலந்துகொள்ளும்படி உற்சாகப்படுத்த மூப்பர்கள் விசேஷ முயற்சி எடுப்பார்கள்.
6 யெகோவாவின் ஊழியத்தில் நம்மை பலப்படுத்துவதற்கு அவருடைய ஆவியை தரும்படி தொடர்ந்து ஜெபிக்க வேண்டும். (லூக். 11:13) அந்த ஆவியைப் பெறுவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? ஏவப்பட்டு எழுதப்பட்ட கடவுளுடைய வார்த்தையை தொடர்ந்து வாசிக்க வேண்டும். (2 தீ. 3:16, 17) ‘ஆவி சபைகளுக்குச் சொல்லுகிறதைக் கேட்பதற்கு’ ஒவ்வொரு வாரமும் நடக்கும் ஐந்து கூட்டங்களிலும் கலந்துகொள்ள வேண்டும். (வெளி. 3:6) ஒழுங்கற்றவர்களும் செயலற்றவர்களும் தங்கள் படிப்பு பழக்கங்களில் முன்னேற்றம் செய்யவும் தவறாமல் கூட்டங்களில் கலந்துகொள்ளவும் உதவுவதற்கு இதுவே தகுந்த சமயம். (சங். 50:23) இவ்வாறு செய்கையில் நம்முடைய ஆவிக்குரிய நலனைப் பாதுகாத்துக் கொள்வதிலும் தொடர்ந்து கவனமாய் இருப்போமாக. எனினும் வேறொன்றும் அவசியம்.
7 ‘அரசராக தமக்குக் கீழ்ப்படிகிறவர்களுக்கு’ கடவுள் பரிசுத்த ஆவியைக் கொடுக்கிறார் என அப்போஸ்தலன் பேதுரு விளக்கினார். (அப். 5:32, NW) அத்தகைய கீழ்ப்படிதல், ‘ஜனங்களுக்குப் பிரசங்கிக்கவும் முழுமையாய் சாட்சி பகரவும்’ கொடுக்கப்பட்ட கட்டளையை ஏற்றுக்கொள்வதை உட்படுத்துகிறது. (அப். 1:8; 10:42, NW) பிரசங்கிப்பதில் நம்மைப் பலப்படுத்துவதற்கு கடவுளுடைய ஆவி தேவை என்பது உண்மை; ஆனாலும், யெகோவாவைப் பிரியப்படுத்த விரும்புகிறோம் என்பதை வெளிக்காட்ட ஆரம்பிக்கையில் அவர் இன்னும் அதிகமாய் நமக்கு உதவுகிறார் என்பதும் உண்மை. மனமார கீழ்ப்படிவதற்கான ஆரம்ப படிகளை எடுப்பதன் முக்கியத்துவத்தை நாம் ஒருபோதும் குறைவாக எடைபோடாதிருப்போமாக!
8 பிள்ளைகளுக்கு உதவுதல்: சத்தியத்தைப் பற்றி மற்றவர்களிடம் பேச உங்கள் பிள்ளைகள் முயற்சி செய்வதை பெற்றோர்களாகிய நீங்கள் பார்த்திருக்கிறீர்களா அல்லது கேட்டிருக்கிறீர்களா? உங்களுடன் அவர்கள் வெளி ஊழியத்திற்கு வருகிறார்களா? அவர்கள் நடத்தையில் சிறந்த முன்மாதிரி வைப்பவர்களா? அப்படியானால் ஏன் இன்னும் தயக்கம்? சபை ஊழிய குழுவிலுள்ளவர்களில் ஒருவரை அணுகி, இந்த ஏப்ரலில் பிரஸ்தாபியாக ஆவதற்கு உங்கள் பிள்ளைக்கு தகுதியிருக்கிறதா என்பதை கேளுங்கள். (நம் ஊழியம் புத்தகத்தில் பக்கங்கள் 99-100-ஐக் காண்க.) இந்த நினைவு ஆசரிப்பு சமயத்தில் யெகோவாவுக்கு ஏறெடுக்கும் துதியின் சத்தம் அதிகரிப்பதற்கு உங்கள் பிள்ளைகளாலும் உதவ முடியும் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.—மத். 21:15, 16.
9 அமெரிக்கா, ஜியார்ஜியாவிலுள்ள ஒரு கிறிஸ்தவ தாய் யெகோவாவைப் பற்றி மற்றவர்களிடம் பேசும்படி எப்போதும் தன்னுடைய சின்னஞ்சிறு மகளை ஊக்குவித்து வந்தாள். கடந்த வருடம் அந்த சிறுமி தன் தாயுடன் வெளி ஊழியம் செய்கையில் தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டை ஒருவருக்கு அளித்து அதன் பொருளடக்கத்தை சுருக்கமாக விளக்கினாள். “உனக்கு எத்தனை வயசாச்சு?” என அந்த நபர் கேட்டார். “ஏழு வயசு” என சொன்னாள். இத்தனை அருமையாய் விளக்கியதைக் கண்டு அவர் அசந்துபோனார். சொல்லப்போனால் அந்த நபர் சத்தியத்தில் வளர்க்கப்பட்டவர், ஆனால் அதற்கு அந்தளவு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அதன் பின் சீக்கிரத்திலேயே அவருக்கும் அவருடைய மனைவிக்கும் மகளுக்கும் பைபிள் படிப்பு ஆரம்பிக்கப்பட்டது.
10 இளம் பிள்ளைகளில் அநேகர் ஏற்கெனவே பிரஸ்தாபிகளாக இருக்கின்றனர்; நம்மோடு சேர்ந்து அவர்கள் ஊழியம் செய்கையில் சந்தோஷப்படுகிறோம். இந்த இளைஞர்கள் சகவயதுள்ள மற்றவர்களையும் உற்சாகப்படுத்துகின்றனர். இந்த ஏப்ரல் மாதம், குடும்பமாக பரிசுத்த சேவை செய்கையில், குடும்ப பந்தத்தைப் பலப்படுத்திக் கொள்வதற்கும் ஆவிக்குரிய தன்மையை வளர்த்துக்கொள்வதற்கும்கூட சரியான சமயம். குடும்பத் தலைவர்கள் இதில் முன்னின்று நடத்த வேண்டும்.—நீதி. 24:27.
11 புதியவர்களுக்கு உதவுதல்: உங்களோடு பைபிளைப் படித்து வரும் புதியவர்களுக்கு உதவ முடியுமா? இந்த ஏப்ரல் மாதத்தில் எடுக்கும் விசேஷ முயற்சியில் அவர்களும் பங்கேற்க முடியுமா? அறிவு புத்தகத்தில் 2-ம் அதிகாரம் 22-வது பாராவை அல்லது 11-ம் அதிகாரம் 14-வது பாராவை கலந்தாலோசிக்கையில் கற்றவற்றை மற்றவர்களுக்கும் சொல்ல தங்களுக்கு ஆசை இருப்பதாக அவர்கள் தெரிவித்திருக்கலாம். இந்தப் புத்தகத்தை படித்து முடிக்கும் தறுவாயில் இருக்கிறீர்களா? அப்படியென்றால், 18-ம் அதிகாரத்தில் 8-வது பாராவை சிந்திக்கையில், “ஒருவேளை நீங்கள் கற்றுக்கொள்ளும் காரியங்களைப் பற்றி உங்கள் உறவினர்கள், நண்பர்கள் இன்னும் மற்றவர்களிடம் சொல்வதற்கு நீங்கள் ஆவலாயிருக்கலாம். உண்மையில் இதை நீங்கள் ஏற்கெனவே செய்து வரலாம். தற்செயலாக அமைந்த சந்தர்ப்பங்களில் இயேசு நற்செய்தியை மற்றவர்களோடு பகிர்ந்துகொண்டதுபோலவே நீங்கள் செய்துகொண்டிருக்கலாம். (லூக்கா 10:38, 39; யோவான் 4:6-15) இப்பொழுது நீங்கள் அதிகத்தைச் செய்ய விரும்பலாம்” என்ற பகுதியை தெளிவாக கலந்தாலோசிக்க தயாராக இருங்கள். உங்களிடம் பைபிள் படித்து வருபவர்களும் இப்படித்தான் எண்ணுகிறார்களா?
12 கடவுளுடைய வார்த்தையை உங்கள் மாணாக்கர் நம்புகிறாரா? அவர் பைபிள் நியமங்களுக்கு இசைவாக நடக்கிறாரா? கடவுளுடைய தராதரங்களுக்கு இசைய தன்னுடைய வாழ்க்கையில் மாற்றங்கள் செய்திருக்கிறாரா? சபை கூட்டங்களுக்கு தவறாமல் வருகிறாரா? யெகோவா தேவனுக்கு சேவை செய்ய விரும்புகிறாரா? அப்படியென்றால், அவர் முழுக்காட்டப்படாத பிரஸ்தாபியாவதற்கும், ஏப்ரல் மாதத்தில் உங்களோடு சேர்ந்து ஊழியம் செய்வதற்கும் தகுதியானவரா என்பதை மூப்பர்கள் தீர்மானிக்க அவர்களிடம் பேசும்படி அவரை ஏன் உற்சாகப்படுத்தக் கூடாது? (நம் ஊழியம் புத்தகத்தில் பக்கங்கள் 97-9-ஐக் காண்க.) இவ்வாறு செய்வதன் மூலம், யெகோவாவை சேவிப்பதற்கு அவர் எடுக்கும் முயற்சிகளில் அமைப்பு அவருக்கு உதவப்போகும் விதத்தை அவரே அனுபவிக்கலாம்.
13 சிலர் மற்றவர்களைவிட வெகு சீக்கிரத்தில் முன்னேற்றம் செய்வது உண்மை. இவ்வாறு, ஜூன் 2000, நம் ராஜ்ய ஊழியத்தில் பக்கம் 4, பாராக்கள் 5-6-ல் சொல்லப்பட்டிருப்பதற்கு இசைய, ஆரம்பத்தில் ஆர்வம் காட்டியவர்களுடன் இரண்டாவது புத்தகத்தை அநேகர் படித்து வரலாம்; அவர்கள் பிரஸ்தாபிகளாக முன்னேற இன்னும் உதவி தேவைப்படலாம். இந்த நல்மனமுள்ளவர்கள், “குறுகிய காலத்திலாயிருந்தாலும் சரி, நெடுங்காலத்திலாயிருந்தாலும் சரி” கிறிஸ்துவின் உண்மையான சீஷர்களாக ஆவார்கள் என்ற நம்பிக்கையை நாம் ஒருபோதும் இழக்கவே மாட்டோம். (அப். 26:29, பொ.மொ.) எனினும், ‘நெடுங்காலமாக’ என சொல்லும் அளவிற்கு அவருடன் நீங்கள் நீண்ட காலம் படிப்பு நடத்தி வந்திருக்கலாம்; இந்த நினைவு ஆசரிப்பு சமயத்தில், கிறிஸ்துவின் மீட்கும் பலிக்கு ஆழ்ந்த போற்றுதலை செயலில் காட்ட இதுவே அவருக்கு சரியான சமயம் அல்லவா?
14 பங்குகொள்ள எப்படி அவர்களுக்கு உதவுவது: இயேசு மற்றவர்களுக்கு அளித்த பயிற்சியை ஆராய்வதன் மூலம் ஊழியத்தில் காலடி வைக்க தகுதியானவர்களுக்கு எப்படி உதவலாம் என்பதை தெரிந்துகொள்ளலாம். ஒரு கூட்டத்தாரைப் பார்த்ததும், அவர்களிடம் போய் பேசும்படி தம் அப்போஸ்தலர்களுக்கு அவர் சொல்லவில்லை. முதலாவது ஏன் பிரசங்கிக்க வேண்டும் என்பதை தெளிவாக விளக்கினார், பிறகு, ஜெப சிந்தையுடன் செயல்படும்படி உற்சாகப்படுத்தினார், அதையடுத்து, மூன்று காரியங்களுக்கு வழிசெய்தார். அவை: உடன் செல்ல ஒருவர், பிரசங்கிக்க பிராந்தியம், சொல்வதற்கு செய்தி. (மத். 9:35-38; 10:5-7; மாற். 6:7, பொ.மொ.; லூக். 9:2, 6) நீங்களும் அதையே பின்பற்றலாம். உங்கள் பிள்ளைக்கோ, புதிய மாணாக்கருக்கோ, அல்லது சில காலமாக ஊழியத்திற்கு செல்லாதிருந்தவருக்கோ உதவுவதற்கு, பின்வரும் நோக்குநிலைகளை அவர்கள் பெற விசேஷ முயற்சி எடுப்பது பொருத்தமானது.
15 தேவையை வலியுறுத்துங்கள்: பிரசங்க ஊழியத்தின் முக்கியத்துவத்தை அந்த நபரின் மனதில் பதிய வையுங்கள். அதற்கு சாதகமாகவே பேசுங்கள். ஊழியத்தில் சபை எந்தளவுக்கு ஈடுபடுகிறது என்பதைக் குறிப்பிடுங்கள். மத்தேயு 9:36-38-ல் இயேசு வெளிக்காட்டிய அதே மனநிலையைக் காட்டுங்கள். பிரஸ்தாபியாக ஆகப் போகிறவரை அல்லது செயலற்றிருப்பவரை, ஊழியத்தில் பங்குகொள்வதற்கும் உலகளாவிய ஊழியம் பலன்தருவதற்கும் ஜெபிக்கும்படி உற்சாகப்படுத்துங்கள்.
16 எவ்வாறெல்லாம் சாட்சி கொடுக்கலாம் என்று யோசிக்க உதவுங்கள்: வீட்டுக்கு வீடு ஊழியத்திற்காக புத்தகப் படிப்பு தொகுதியுடன் கூடிவரலாம் என்பதைச் சொல்லுங்கள். சொந்த பந்தங்களிடமும் நண்பர்களிடமும் பேசும்படி அல்லது உடன் வேலை செய்பவர்களிடமும் சக மாணவர்களிடமும் உணவு இடைவேளையில் பேசும்படி சொல்லுங்கள். பயணிக்கையில் சகபயணியிடம் அக்கறையோடு பேச்சுக் கொடுப்பது பெரும்பாலும் நல்ல உரையாடலுக்கு வழிநடத்தியிருக்கிறது. நாம் முதலாவதாக முன்முயற்சி எடுக்கும்போது சிறந்த விதத்தில் சாட்சி கொடுக்க உதவுகிறது. “நாள்தோறும்” மற்றவர்களுடன் நம் நம்பிக்கையை பகிர்ந்துகொள்ள உண்மையிலேயே அநேக வாய்ப்புகள் உள்ளன.—சங். 96:2, 3, பொ.மொ.
17 துவக்கத்தில் நீங்களும் அந்த புதிய பிரஸ்தாபியும் சேர்ந்து வீட்டுக்கு வீடு ஊழியம் செய்வது நல்லது. நீங்கள் ஏப்ரலில் ஊழியத்தில் அதிகளவு நேரத்தை செலவழிக்க ஏற்கெனவே தீர்மானித்திருந்தால் உங்களுக்கு அருகிலுள்ள பிராந்தியத்திலேயே ஊழியம் செய்ய முடியுமா என்பதை பிராந்திய ஊழியரிடம் கேளுங்கள். அப்படி கிடைத்தால், அந்தப் பகுதியில் முழுமையாக ஊழியம் செய்ய அது வாய்ப்பளிக்கும். உதாரணமாக, நீங்கள் ஊழியத்தை முடித்துக்கொண்டு வீடு திரும்புகையில் அல்லது கூட்டங்களுக்கோ மற்ற இடங்களுக்கோ பயணப்படுகையில் முன்பு பூட்டிக் கிடந்த வீட்டில் ஆளிருப்பதைக் காணலாம். அவர்கள் ஒருவேளை புதிதாக வந்தவர்களாக அல்லது முன்பு நற்செய்தியிடம் ஆர்வம் காட்டியவர்களாக இருக்கலாம். முடிந்தால், அவர்களுக்கு சௌகரியமான சமயத்தில் போய் சந்தித்து பேசிவிட்டு வரலாம். இது, ஊழியத்தை முழுமையாய் செய்த திருப்தியையும் சந்தோஷத்தையும் தரும்.
18 மனதைக் கவரும் செய்தியை தயாரியுங்கள்: ஒருவர் ராஜ்ய செய்தியை அறிவிப்பது என்பது ஒரு விஷயம், ஆனால் அதே செய்தியை நல்ல விதத்தில் தன்னம்பிக்கையுடன் அறிவிப்பது என்பது வேறு விஷயம். அதுவும் ஊழியத்தில் புதிதாக கலந்துகொள்பவருக்கு அல்லது வெகு நாட்களுக்கு பின் ஊழியத்தில் பங்குகொள்பவருக்கு இது பொருந்தும். அப்படிப்பட்டவர்கள் ஊழியத்திற்கு தயாரிக்க உதவுவதற்கு நீங்கள் செலவிடும் நேரம் வீண்போகாது. ஊழியக் கூட்டங்களும் வெளி ஊழியத்திற்கான கூட்டங்களும் உதவியளிக்கும் ஆலோசனைகளைத் தந்தாலும் தனிப்பட்ட விதத்தில் தயாரிப்பதற்கு அவை எதுவும் ஈடாகாது.
19 ஊழியத்திற்கு தயாரிப்பதில் புதியவர்களுக்கு நீங்கள் எப்படி உதவலாம்? முதலில் பத்திரிகைகளை அளிக்க உதவுங்கள். அது எளிய, சுருக்கமான அளிப்பாக இருக்க வேண்டும்! பிராந்தியத்தில் உள்ளவர்களின் ஆர்வத்தைத் தூண்டும் என்ன விஷயங்களை அளிப்பில் பயன்படுத்தலாம் என்பதை சிந்திக்க சொல்லுங்கள். பின்னர் அவற்றோடு சம்பந்தப்பட்ட ஒரு குறிப்பை சமீபத்திய பத்திரிகைகளிலிருந்து கண்டுபிடிக்கச் சொல்லுங்கள். அளிப்பை சேர்ந்து பழகிப் பாருங்கள், முடிந்த வரை சீக்கிரத்தில் அதை ஊழியத்தில் உபயோகிக்க முயலுங்கள்.
20 எதிர்கால அதிகரிப்புக்கு நம் திறமையை முன்னேற்றுவித்தல்: கடந்த வருடம் உலகம் முழுவதும் நினைவு ஆசரிப்புக்கு வந்திருந்தவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 48 லட்சத்தைத் தாண்டியது. பிரஸ்தாபிகளாக அறிக்கை செய்தவர்களின் எண்ணிக்கையோ 60 லட்சத்திற்கு சற்றே அதிகம். அப்படியென்றால் இந்த விசேஷ நிகழ்ச்சிக்கு ஆர்வத்தோடு வந்த புதியவர்களின் எண்ணிக்கை சுமார் 88 லட்சம்; அங்கே பைபிளின் முக்கிய போதனை விளக்கப்படுவதை இவர்கள் கேட்டனர். அவர்களுக்கு நம்மில் சிலரை நன்கு தெரியும்; அதுவே ஒருவேளை அவர்கள் மனம் கவரப்பட காரணமாக இருக்கலாம். அவர்களில் பலர் நம்மைப் பற்றி பெருமையாய் பேசுகின்றனர், நம் உலகளாவிய வேலைக்கு நன்கொடை அளிக்கின்றனர், மற்றவர்களுக்கு முன்பு நமக்கு ஆதரவாக பேசுகின்றனர். இந்தப் பெரும் கூட்டத்தார் எதிர்கால அதிகரிப்புக்கு வாய்ப்பிருப்பதை சொல்லாமல் சொல்கின்றனர். அவர்கள் மேலும் முன்னேற நாம் எவ்வாறு உதவலாம்?
21 நினைவு ஆசரிப்புக்கு வந்த புதியவர்களில் பெரும்பாலோர் நம் தனிப்பட்ட அழைப்பை மதித்து அதில் கலந்துகொண்டனர். பொதுவாக இது, சபையாரில் ஒருவரையாவது அவர்களுக்குத் தெரியும் என்பதை அர்த்தப்படுத்துகிறது. நம் அழைப்புக்கு இணங்கி யாரேனும் வந்திருந்தால் அவர்களை அன்பாக வரவேற்று, அந்த நிகழ்ச்சியிலிருந்து முழுமையாய் பயனடைய உதவ வேண்டியது நம் கடமை. மன்றத்தில் எக்கச்சக்கமான கூட்டம் இருக்குமாதலால் அவர் அமருவதற்கு இருக்கை பார்த்து கொடுங்கள். பைபிளையும் பாட்டு புத்தகத்தையும் அவருடன் பகிர்ந்துகொள்ளுங்கள். அவர் ஏதேனும் கேள்விகள் கேட்டால் அவற்றிற்குப் பதில் சொல்லுங்கள். இப்படி நீங்கள் கனிவாக கவனித்துக் கொள்வது அவருடைய ஆர்வத்தை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கலாம். இந்த பொறுப்பு நம் எல்லாருக்குமே இருக்கிறது; முன்பின் அறிமுகமில்லாத ஒருவர் வருகையில் அவருக்கு வணக்கம் சொல்லி வரவேற்று, அவரோடு பரிச்சயமாகுங்கள்.
22 நினைவு ஆசரிப்புக்கு ஒருவர் வருவதே அவருடைய மனதில் நல்ல பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது. அவர் பல்வேறு இடங்களில் தேடி அலைந்த சத்தியம் எங்கேயும் கிடைக்காததால், நாம் அதை போதிக்கிறோமா என்பதை கண்டறிய இங்கு வந்திருக்கிறார். யெகோவாவின் எல்லையற்ற அன்பைப் பற்றி எதுவும் அறியாத ஒருவருக்கு அருமையான மீட்கும் பலி ஏற்பாட்டைப் பற்றிய விளக்கம் மனக்கண்களைத் திறந்ததைப் போலிருக்கும். நேர்மையாக, சிநேகமாக, அன்பாக, மரியாதையாக நடந்துகொள்வதிலிருந்து நாம் வித்தியாசமானவர்கள் என்பதை அவர் உடனடியாக கண்டுகொள்ளலாம். சிலைகளையும் அர்த்தமற்ற சடங்காச்சாரங்களையும் பின்பற்றும் மற்ற சர்ச்சுகளிலிருந்து நம் மன்றம் முற்றிலும் வித்தியாசமாய் இருப்பதை கவனித்திருக்கலாம். பல்வேறு சமூக பொருளாதார பின்னணியைச் சேர்ந்தவர்கள் கூட்டத்தாரில் இருப்பதை அவர் கவனிக்கலாம். காணிக்கை தட்டுகள் நீட்டப்படாததையும் அவர் நிச்சயம் கவனிக்கலாம். இந்த அனுபவம் மீண்டும் கூட்டங்களுக்கு வர தூண்டுதலாய் அவருக்கு அமையலாம்.
23 நினைவு ஆசரிப்புக்குப் பின்பு, வந்திருந்த புதியவர்களை மீண்டும் சென்று சந்திப்பதில் எல்லாருமே கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் புதியவர்களை அழைத்திருந்தால் உங்களுக்கு விசேஷ பொறுப்பிருக்கிறது. அவர்கள் அங்கிருந்து செல்வதற்கு முன்பு ராஜ்ய மன்றத்தில் நடைபெறும் மற்ற கூட்டங்களைப் பற்றி சொல்ல மறந்துவிடாதீர்கள். அடுத்த வார பொதுப் பேச்சின் தலைப்பை சொல்லுங்கள். அவர்கள் வீட்டிற்கு அருகில் சபை புத்தகப் படிப்பு நடைபெறும் இடத்தையும் நேரத்தையும் அவர்களுக்குச் சொல்லுங்கள். பின்னர், படைப்பாளர் புத்தகம் ஒன்றைக் கொடுத்து ஏப்ரல் 30-ல் துவங்கும் வாரத்தில் “ஒரு புத்தகத்திலிருந்து நீங்கள் படைப்பாளரைப் பற்றி என்ன கற்றுக்கொள்ளலாம்?” என்ற பகுதியைக் கலந்தாலோசிக்கப் போவதைப் பற்றி அவர்களுக்குச் சொல்லுங்கள். (அல்லது, “இதோ! நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்” சிற்றேடு ஒன்றைக் கொடுத்து ஏப்ரல் 30-ல் துவங்கும் வாரத்தில் “யெகோவாவின் சிருஷ்டிப்புகளும் அற்புதங்களும்” என்ற உபதலைப்பில் பாராக்கள் 21 முதல் 37 வரை கலந்தாலோசிக்கப் போவதைப் பற்றி அவர்களுக்குச் சொல்லுங்கள்.) சீக்கிரத்தில் நடைபெறவிருக்கும் வட்டார மாநாட்டில் அல்லது விசேஷ மாநாட்டு தினத்தில் சபையார் அனைவரும் ஏன் கலந்துகொள்ள போகிறோம் என்பதை அவர்களுக்கு விளக்குங்கள்.
24 நட்பு முறையில் அவர்களுடைய வீட்டிற்கு சென்று வர ஏற்பாடு செய்யுங்கள். தேவைப்படுத்துகிறார் சிற்றேடும் அறிவு புத்தகமும் அவர்களிடம் இருக்கிறதா என்பதை ஊர்ஜிதம் செய்துகொள்ளுங்கள்; அவை பைபிளின் அடிப்படை போதனைகளை தெரிந்துகொள்ள அவர்களுக்கு உதவும். அவர்களுக்கு இதுவரை பைபிள் படிப்பு ஆரம்பிக்கவில்லை என்றால் படிப்பு நடத்த ஏற்பாடுகளை செய்யுங்கள். யெகோவாவின் சாட்சிகள் சிற்றேட்டை வாசிக்கும்படி சொல்லுங்கள், ஓர் அமைப்பாக நாம் எவ்வாறு செயல்படுகிறோம் என்பது அதில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. நம் சகோதர கூட்டுறவு போன்ற வீடியோக்களையும் காண அழையுங்கள். சபையிலுள்ள மற்றவர்களையும் அவர்கள் சந்திக்க ஏற்பாடு செய்யுங்கள். அதைத் தொடர்ந்துவரும் மாதங்களிலும் புதியவர்களை தவறாமல் சந்தியுங்கள்; வட்டாரக் கண்காணியின் சந்திப்பு அல்லது மாவட்ட மாநாடு போன்ற கூட்டங்களுக்கு அழையுங்கள். அவர்கள், ‘நித்திய ஜீவனுக்காக சரியான மனச்சாய்வுள்ளவர்களாக’ நிரூபிப்பதற்கு எல்லா வாய்ப்புகளையும் அவர்களுக்கு அளியுங்கள்.—அப். 13:48, NW.
25 மூப்பர்கள் என்ன செய்யலாம்: இந்த ஏப்ரல் மாதத்தில் மும்முரமாய் ஊழியம் செய்ய எடுக்கும் முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைப்பது மூப்பர்களையே பெரிதும் சார்ந்திருக்கிறது. நீங்கள் புத்தகப் படிப்பு நடத்துனரா? இந்த விசேஷ ஊழியத்தில் பங்குகொள்ள உங்கள் புத்தகப் படிப்பு தொகுதியில் உள்ள ஒவ்வொருவருக்கும் உதவ என்ன செய்யலாம் என பட்டியல் தயாரியுங்கள். உங்கள் தொகுதியில், பிள்ளைகள், புதியவர்கள், ஒழுங்கற்றவர்கள் அல்லது செயலற்றவர்கள் யாராவது இருக்கிறார்களா? பெற்றோர்களோ, பயனியர்களோ, மற்ற பிரஸ்தாபிகளோ ஏற்கெனவே இவர்களுக்கு உதவ ஆரம்பித்துவிட்டார்களா என்பதை அறிந்துகொள்ளுங்கள். தனிப்பட்ட விதத்தில் உங்களால் அளிக்க முடிந்த அனைத்து உதவிகளையும் அளியுங்கள். இரண்டு ஆண்டுகளாக ஒழுங்கற்றவராக இருந்துவந்த ஒரு சகோதரி கடந்த ஏப்ரல் மாதத்தில் 50 மணிநேரத்திற்கும் அதிகமாக ஊழியத்தில் செலவழித்தார்கள். இந்த மாற்றம் எப்படி ஏற்பட்டது? மூப்பர்களின் உற்சாகமூட்டும் மேய்ப்பு சந்திப்புதான் காரணம் என்றார் அந்த சகோதரி.
26 வரவிருக்கும் மாதங்களில் ஊழியம் செய்வதற்கு போதுமான பிராந்தியம், பத்திரிகைகள், பிரசுரங்கள் இருக்கின்றனவா என்பதை அறிய மூப்பர்களும் உதவி ஊழியர்களும் சேர்ந்து உழைக்க வேண்டும். இன்னும் அதிக வெளி ஊழியத்திற்கான கூட்டங்களை ஏற்பாடு செய்ய முடியுமா? முடியுமானால் அதற்கான விசேஷ ஏற்பாடுகளை அறிவிப்பு செய்யுங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, உங்களுடைய பொதுவான மற்றும் தனிப்பட்ட ஜெபங்களில் அதிகளவு ஊழியம் செய்ய தீர்மானித்திருக்கும் இந்த மாதத்தில் யெகோவாவின் ஆசீர்வாதத்திற்கு விண்ணப்பியுங்கள்.—ரோ. 15:30-32; 2 தெ. 3:1, 2.
27 கடந்த ஏப்ரலில் வட கரோலினாவிலுள்ள ஒரு சபையின் மூப்பர்கள் ஊழியத்தில் அதிகளவு ஈடுபட உண்மையிலேயே எல்லாரையும் உற்சாகப்படுத்தினார்கள். ஒவ்வொரு வார கூட்டத்திலும் துணைப்பயனியர் ஊழியம் செய்ய முடியுமா என்பதை ஜெபத்தோடு சிந்திக்கும்படி பிரஸ்தாபிகளிடம் சொன்னார்கள். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மூப்பர்களும் உதவி ஊழியர்களும் எப்போதும் இல்லாதளவுக்கு ஏப்ரல் மாதத்தை சிறந்த மாதமாக்குவதைப் பற்றி உற்சாகத்தோடு பேசினார்கள். விளைவு? எல்லா மூப்பர்களும் உதவி ஊழியர்களும் உட்பட 58 சதவீத பிரஸ்தாபிகள் அந்த மாதத்தில் பயனியர் ஊழியம் செய்தனர்!
28 முழுமையாய் பங்கெடுக்கையில் கிடைக்கும் சந்தோஷம்: ஊழியத்தில் ‘கடினமாக உழைத்து, மும்முரமாய் ஈடுபடுகையில்’ கிடைக்கும் ஆசீர்வாதங்கள் என்ன? (1 தீ. 4:10) கடந்த ஏப்ரலில் தங்கள் சபையினர் ஊழியத்தில் வைராக்கியத்துடன் ஈடுபட்டதைப் பற்றி முன்னர் குறிப்பிட்ட மூப்பர்கள் இவ்வாறு எழுதினார்கள்: “ஊழியத்தில் அதிகளவு கலந்துகொள்ள ஆரம்பித்ததால் தங்களுக்கிடையே அன்பும், நெருக்கமும் அதிகரித்திருப்பதாக சகோதர சகோதரிகள் அடிக்கடி பேசிக்கொள்கிறார்கள்.”
29 சரிவர நடக்க இயலாத ஓர் இளம் சகோதரன் கடந்த ஏப்ரல் மாதத்தின் விசேஷ ஊழியத்தில் கலந்துகொள்ள ஆசைப்பட்டான். கவனமாக திட்டமிட்டதாலும், அவனுடைய அம்மா மற்றும் ஆவிக்குரிய சகோதர சகோதரிகள் உதவியதாலும் துணைப் பயனியர் ஊழியம் செய்தான். அதன் சந்தோஷத்தை அவனும் அனுபவித்தான். அதைக் குறித்து அவன் எப்படி உணருகிறான்? “இப்பத்தான் வாழ்க்கையிலேயே முதல் முதலா திடகாத்திரமாய் இருப்பதாக உணருகிறேன்” என சொன்னான்.
30 யெகோவாவின் அரசாட்சியைப் பற்றி மற்றவர்களிடம் பேசுவதை பெரும் சிலாக்கியமாய் கருதுபவர்களை அவர் அபரிமிதமாக ஆசீர்வதிக்கிறார் என்பதில் சந்தேகம் ஏதுமில்லை. (சங். 145:11, 12) கர்த்தரின் மரணத்தை நாம் ஆசரிக்கையில் தேவ பக்தியால் வரும் ஆசீர்வாதங்கள் எதிர்காலத்தில் இன்னும் அதிகமாய் இருக்கும் என நம்புகிறோம். நித்திய வாழ்க்கை என்ற பரிசைப் பெற அப்போஸ்தலன் பவுல் வெகு ஆவலாய் காத்திருந்தார். எனினும், அதற்காக எந்த முயற்சியும் செய்யாமல் வெறுமனே நம்பிக்கையுடன் காத்திருந்தால் மட்டும் போதாது என்பதையும் அவர் அறிந்திருந்தார். “அதற்காக நான் எனக்குள்ளே வல்லமையாய்க் கிரியை நடப்பிக்கிற அவருடைய பலத்தின்படி போராடிப் பிரயாசப்படுகிறேன்” என அவர் எழுதினார். (கொலோ. 1:29) ஜீவனைக் காக்கும் ஊழியத்திற்காக பவுலை இயேசுவின் மூலம் யெகோவா பலப்படுத்தினார்; அவ்வாறே நம்மையும் பலப்படுத்த அவரால் முடியும். அந்த அனுபவத்தை இந்த ஏப்ரலில் நீங்கள் பெறப் போகிறீர்களா?
[பக்கம் 3-ன் பெட்டி]
ஏப்ரலில் ஊழியம் செய்ய யாரை நீங்கள் உற்சாகப்படுத்தலாம்?
உங்கள் பிள்ளையையா?
பைபிள் மாணாக்கரையா?
செயலற்ற ஒருவரையா?