உங்கள் பழக்கம் எப்படிப்பட்டது?
1 யெகோவாவின் வழிபாட்டில் கிறிஸ்தவ கூட்டங்கள் இன்றியமையாத பங்கை வகிக்கின்றன. சபை கூடிவருவதை சிலர் “பழக்கமாக” விட்டுவிடுவதைப் போல் நாம் விட்டுவிடக்கூடாது என்று பொருத்தமாகவே பவுல் உற்சாகம் அளிக்கிறார்.—எபி. 10:25, NW.
2 கிறிஸ்தவ கூட்டங்களில் உங்கள் சகோதரர்களுடன் கூடிவருவதைப் பற்றி அவரைப் போலவே நீங்களும் உணருகிறீர்களா? இந்த விஷயத்தில் உங்கள் பழக்கம் எதை வெளிப்படுத்துகிறது? சபை புத்தகப் படிப்பு உட்பட எல்லா கூட்டங்களுக்கும் தவறாமல் செல்கிறீர்களா? அல்லது கூட்டங்களுக்கு போகாமல் இருப்பதுதான் உங்கள் பழக்கமா? உங்கள் வாழ்க்கையில் கூட்டங்கள் எந்த இடத்தை வகிக்கின்றன? தவறாமல் கூட்டங்களுக்கு செல்லும்படி மற்றவர்களை உற்சாகப்படுத்துகிறீர்களா? நினைவு ஆசரிப்பு நாளுக்கு வந்தவர்களை தொடர்ந்து கூட்டத்துக்கு வரும்படி உற்சாகம் அளித்து வந்திருக்கிறீர்களா?
3 நம்முடைய அன்றாட வேலை எப்படியிருந்தாலும், பவுலின் அறிவுரையை லேசானதாக நினைத்துவிட முடியாது. மோசமான உடல்நிலை, கட்டுப்படுத்த முடியாத மற்ற சூழ்நிலைகள் காரணமாக ஒருவர் அவ்வப்போது ஒரு கூட்டத்தை தவறவிடக்கூடும் என்பது புரிந்துகொள்ளத்தக்கதே. என்றாலும் அது நிச்சயமாகவே அவருடைய பழக்கமாகிவிடக் கூடாது. (ரோ. 2:21) அநேக தேவராஜ்ய நடவடிக்கைகளையும் உட்படுத்தும் பல பொறுப்புகள் நமக்கு இருக்கின்றன. எனவே ஒரு கிறிஸ்தவர் அதிமுக்கியமான காரியங்களை நிச்சயப்படுத்திக் கொள்வது அவசியம். (பிலி. 1:10, NW) ஒரு கிறிஸ்தவருக்கு அதிமுக்கியமான காரியங்களில் கூட்டங்களும் அடங்கும்; நம் ஆவிக்குரிய நலனுக்கு அவை இன்றியமையாதவை.
ஒருவரையொருவர் உற்சாகப்படுத்துங்கள்
4 பவுல் ரோமருக்கு எழுதியபோது, அவர்களை காண ஆவலாக இருந்ததாக சொன்னார். ஏன்? அவர்கள் “ஸ்திரப்படுவதற்காக” சில ஆவிக்குரிய வரங்களை கொடுப்பதற்கே. (ரோ. 1:10) கூட்டுறவு முக்கியமானது, அவசியமானதும்கூட என்பதை அவர் உணர்ந்தார். ஏனென்றால் “உற்சாக பரிமாற்றம் இருக்கும்படியாக” என்று அவர் தொடர்ந்து சொல்கிறார். ஆங்கில துணைகுறிப்புகளுள்ள பைபிள் அடிக்குறிப்பில் சொல்கிறபடி, “ஒன்றாக சேர்ந்து உற்சாகம் பெற.” (ரோ. 1:12, NW) அப்போஸ்தலராக இருந்த பவுல்கூட, கிறிஸ்தவ கூட்டுறவின் மூலம் கிடைக்கும் உற்சாகத்தின் தேவையை உணர்ந்தார்.
5 அதேவிதமாகவே, நம்முடைய கூட்டங்களில் ஒருவரையொருவர் அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் தூண்ட வேண்டும். சிநேகமுள்ள புன்முறுவலும் அன்பான வாழ்த்துதலும் மற்றவர்களில் நல்ல பாதிப்பை ஏற்படுத்தும். கட்டியெழுப்பும் குறிப்புகளும், கூட்டங்களில் நன்கு தயாரித்து அளிக்கப்படும் நிகழ்ச்சிகளும், மற்றவர்களின் ஆவிக்குரிய முன்னேற்றத்தை பார்ப்பதும், கூட்டங்களில் சகோதரர்கள் மத்தியில் இருப்பதும்தானே மிகவும் உற்சாகமளிப்பதாய் இருக்கலாம். ஒரு நாளின் முடிவில் களைத்துப்போய் இருந்தால்கூட, கூட்டங்களுக்கு போய் வந்தபின் மிகவும் நன்றாக இருப்பதாக பெரும்பாலும் உணருவீர்கள். கிறிஸ்தவ நட்புறவும் நம் சகோதரர்கள் நம்மிடம் காட்டும் அன்பும், “நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓட” உற்சாகம் அளிக்கும். (எபி. 12:1) கடவுளுடைய வார்த்தைக்கு கவனமாக செவிசாய்ப்பதன் மூலம், நம்முடைய நம்பிக்கையை அறிக்கையிடுகிறதில் அசைவில்லாமல் உறுதியாயிருக்க தயாராக இருக்கலாம். உண்மையிலேயே, கூட்டங்களுக்கு வருவதால் அநேக ஆசீர்வாதங்கள் கிடைக்கின்றன.
6 முன்னொருபோதும் இல்லாத அளவில் தற்போது நாம் விசுவாசத்தில் உறுதிப்பட்டு அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் மற்றவர்களை தூண்ட வேண்டும். ஒன்றுகூடி வருவதை விட்டுவிடும் பழக்கத்திற்கு உள்ளாகிவிடக் கூடாது. நினைவு ஆசரிப்புக்கு வருகிறவர்கள் உட்பட மற்றவர்களை கூட்டங்களுக்கு தவறாமல் வரும்படி உற்சாகப்படுத்தி உதவ மனப்பூர்வமாக முயல வேண்டும். இவ்வாறு மற்றவர்களுக்கு நம் அன்பையும் கிறிஸ்தவ கூட்டங்களுக்கு நம் போற்றுதலையும் காட்டுவோம்.