2004 “கடவுளோடு நடவுங்கள்” யெகோவாவின் சாட்சிகளுடைய மாவட்ட மாநாடு
1 நம் வருடாந்தர மாவட்ட மாநாடுகளை எது உங்களுக்கு விசேஷித்ததாக ஆக்குகிறது? ‘உண்மையும் விவேகமுமுள்ள அடிமை’ தயாரித்தளிக்கும் கட்டியெழுப்பும் பேச்சுகளும் நாடகமுமா? (மத். 24:45-47, NW) காலத்துக்கேற்ற ஆவிக்குரிய போஷாக்கை அளிக்கும் புதிய வெளியீடுகளா? பைபிள் தங்கள் வாழ்க்கைத் தரத்தை மாற்றிய விதத்தைப் பற்றி சகோதர சகோதரிகள் சொல்லும் அனுபவங்களா? வேறு நாடுகளில் ராஜ்ய பிரசங்கிப்பு வேலை எந்தளவுக்கு முன்னேறுகிறது என்பதைப் பற்றிய அறிக்கைகளா? பெரியோர், சிறியோர் என சக விசுவாசிகளுடன் கூட்டுறவை அனுபவித்துக் களிப்பதா? ஆம், இவற்றிற்காகவும் வேறு பல காரணங்களுக்காகவும் மாநாடுகளை அதிக ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறோம்!
2 மூன்று நாட்களும் கலந்துகொள்ளுங்கள்: ‘கேட்டு, கற்றுக்கொள்ளும்படி . . . ஜனத்தைக் கூட்டு’ என மோசே மூலம் யெகோவா கட்டளையிட்டார். (உபா. 31:12, 13) உண்மையும் விவேகமுமுள்ள அடிமை வகுப்பின் மூலம் நம் மாநாட்டில் ஒவ்வொரு நாளும் விசேஷ போதனா திட்டத்தை யெகோவா ஏற்பாடு செய்திருக்கிறார். ‘நமக்கு பிரயோஜனமாயிருக்கிறதை’ அவர் போதிக்கிறபடியால் அவருடைய போதனைகள் அனைத்தையும் கேட்பதற்காக நாம் அங்கிருக்க விரும்புகிறோம். (ஏசா. 48:17) எனினும் கடந்த வருடம் நடைபெற்ற “தேவனை மகிமைப்படுத்துங்கள்” மாவட்ட மாநாடுகளில் சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்களில் வந்திருந்தவர்களைவிட வெள்ளிக்கிழமை வந்திருந்தவர்களின் எண்ணிக்கை வெகு குறைவாக இருந்தது. மாநாட்டின் முக்கிய தகவல்களை நம் சகோதரர்களில் பெரும்பாலோர் கேட்கத் தவறிவிட்டார்கள் என்பதையே இது குறிப்பிட்டுக் காட்டுகிறது. அவர்கள் சக விசுவாசிகளுடன் அருமையான கூட்டுறவையும் அனுபவிக்கத் தவறிவிட்டார்கள்.
3 பிற கவலைகள் குறுக்கிட இடங்கொடுக்காதீர்கள்: எங்கே வேலை பறிபோய்விடுமோ என்ற பயமே சிலர் வெள்ளிக்கிழமை வராததற்குக் காரணமாக இருந்திருக்கலாம். இன்னும் சிலர் வேறு காரியங்களுக்காக தங்கள் விடுப்பை அல்லது பண செலவை மிச்சம் பிடித்திருக்கலாம். உங்கள் முதலாளி விடுப்பு கொடுக்க மாட்டார் என நீங்களாகவே நினைத்துக் கொள்ளக் கூடாது, அல்லது மாநாட்டிற்கு ஓரிரு நாட்கள் போகாவிட்டால் பரவாயில்லை என்ற முடிவுக்கும் வந்துவிடக் கூடாது. விடுப்பு எடுப்பதற்கு உங்கள் முதலாளியிடம் கேட்க வேண்டுமென்றால் நெகேமியாவின் தைரியமான முன்மாதிரியைப் பின்பற்றுங்கள்; அவரைப் போலவே யெகோவாவிடம் ஜெபித்துவிட்டு முதலாளியிடம் கேளுங்கள். (நெ. 1:11; 2:4) பின்னர், வாழ்க்கையில் ஆவிக்குரிய தேவைகளுக்கு முதலிடம் கொடுக்கும்போது பொருள் சம்பந்தமாக தேவையானவற்றை எல்லாம் யெகோவா தருவார் என்பதை உணர்ந்தவர்களாக, உங்கள் முழு நம்பிக்கையையும் அவருடைய வாக்குறுதிகளின் மீது வையுங்கள். (மத். 6:33; எபி. 13:5, 6) மேலும், விசுவாசத்தில் இல்லாத உங்கள் குடும்பத்தாரிடம் முடிந்த மட்டும் சீக்கிரத்தில் உங்கள் மாநாட்டு திட்டங்களைப் பற்றி சொல்லுவது அன்பான செயலாகும்.
4 ‘அதிமுக்கியமான காரியங்களுக்கு’ போற்றுதல் காட்டுவதே முக்கிய அம்சமாகும். (பிலி. 1:10, 11, NW; சங். 27:4) யெகோவாவின் இந்த முக்கிய ஏற்பாட்டிலிருந்து முழுமையாய் பயனடைய திட்டங்களைப் போடும்படி இது நம்மை தூண்டுகிறது. இப்போதே திட்டவட்டமான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பியுங்கள், நீங்கள் மூன்று நாட்களும் கலந்துகொள்வதற்கு தீர்மானமாய் இருங்கள்.
5 தங்கும் வசதி: கடந்த வருடத்தைப் போலவே தங்குவதற்கு எளிய அறைவசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஹோட்டலில் தங்குவதற்கு அறைவசதி இலாகா முன்கூட்டியே எந்த புக்கிங்கும் செய்யாது. மாறாக, அது சிபாரிசு செய்யும் ஹோட்டல்களின் பட்டியலையும் அதன் வாடகை பற்றிய விவரத்தையும் சபைகளுக்கு அனுப்பி வைக்கும்; ஹோட்டலில் அறையை புக் செய்ய விரும்புகிறவர்கள் நேரடியாக அதன் நிர்வாகத்தாருடன் தொடர்பு கொண்டு தேவைப்படும் அறைகளை புக் செய்து கொள்ளலாம். மாநாட்டு இலாகாவால் டார்மட்டரி போன்ற தங்குமிடத்திற்கு மட்டுமே ஏற்பாடு செய்ய முடியும். இது பற்றிய மேலுமான விவரத்தை மாநாட்டு அறைவசதி இலாகாவிலிருந்து சபைகள் பெற்றுக்கொள்ளும். டார்மட்டரியில் தங்குவதற்கான விண்ணப்பத்தை முன்கூட்டியே அனுப்பி வையுங்கள். பக்கம் 4-லுள்ள “அறை வசதி ஏற்பாடுகளுக்கு நீங்கள் எப்படி ஆதரவு அளிக்கலாம்” என்ற பெட்டியிலுள்ள குறிப்புகளை மறுபார்வை செய்யுங்கள்.
6 விசேஷ தேவைகள்: “யாவருக்கும், விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும், நன்மை செய்யக்கடவோம்” என கலாத்தியாவிலுள்ள சபைகளுக்கு அப்போஸ்தலன் பவுல் நினைப்பூட்டினார். (கலா. 6:10) வயதான சகோதர சகோதரிகள், சுகவீனர், ஒற்றைப் பெற்றோர், அல்லது முழுநேர ஊழியம் செய்வோர் உங்களிடம் உதவி கேட்காதிருக்கலாம், ஆனால் மாநாட்டில் கலந்துகொள்வதற்கு அவர்கள் சில பிரச்சினைகளை சமாளிக்க வேண்டியிருக்கலாம். உங்களால் அவர்களுக்கு ‘நன்மை செய்யவும்’ ஏதேனும் உதவி அளிக்கவும் முடியுமா? இத்தகையவர்களின் சூழ்நிலைகளைக் குறித்து முக்கியமாக கிறிஸ்தவ உறவினர்களும் மூப்பர்களும் அறிந்திருக்க வேண்டும்.
7 பிரஸ்தாபி ஒருவர் ஸ்பெஷல் நீட்ஸ் ரூம் ரிக்வெஸ்ட் படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்தால் அதிலுள்ள வழிகாட்டுக் குறிப்புகளின் அடிப்படையில் சபை ஊழியக் குழு அதை பரிசீலிக்கும். அந்தத் தேவையை சபையே கவனித்துக் கொள்ள முடியுமா என அக்குழுவினர் சிந்திக்க வேண்டும். பிரஸ்தாபிகள் நல்ல நிலைநிற்கை உள்ளவர்களாகவும் அவர்களுடைய பிள்ளைகள் ஒழுங்காக நடந்துகொள்கிறவர்களாகவும் இருந்தால் மட்டும் இந்த ஏற்பாடு செய்து தரப்படும். ஸ்பெஷல் நீட்ஸ் ரிக்வெஸ்ட் சம்பந்தமாக அறைவசதி இலாகாவினருக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் அவர்கள் சபை செயலருடன் தொடர்பு கொள்வார்கள்.
8 வேறொரு மாநாட்டில் கலந்துகொள்வது: உங்கள் சபை கலந்துகொள்ளும்படி நியமிக்கப்பட்ட மாநாட்டிற்கு செல்ல முடியாமல் வேறொன்றிற்கு செல்ல வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படலாம். அந்த இடத்தில் நடைபெறும் மாநாட்டைப் பற்றிய தகவல் தேவைப்பட்டால் தயவுசெய்து உங்கள் சபை செயலரிடம் கேளுங்கள். இந்தியாவில் இந்த வருடம் நடைபெற உள்ள மாநாடுகளின் தேதிகளும், ஒவ்வொரு மாநாட்டின் தலைமை அலுவலகங்களின் விலாசங்களும் தேதிவாரியாக இனிவரும் நம் ராஜ்ய ஊழியத்தில் பிரசுரிக்கப்படும். சுயவிலாசம் எழுதி ஸ்டாம்பு ஒட்டப்பட்ட கவருடன் உங்கள் விண்ணப்பத்தை பொருத்தமான விலாசத்திற்கு அனுப்பி வையுங்கள். ஒன்றுக்கு மேற்பட்ட மாநாடுகள் அந்த நகரத்தில் நடைபெற்றால் நீங்கள் கலந்துகொள்ள விரும்பும் மாநாட்டின் தேதிகள் அந்த விண்ணப்பத்தில் சரியாக குறிப்பிடப்பட்டிருக்கின்றனவா என்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள். இந்த மாநாட்டிற்கான அறைவசதி இலாகா, சிபாரிசு செய்யப்படும் தங்குமிடங்களுக்கான சமீபத்திய பட்டியலை உங்களுக்கு அனுப்பி வைக்கும்.
9 சுமார் 2,500 வருடங்களுக்கு முன்பு யெகோவாவின் ஜனங்கள் கூடிவந்த ஒரு மாநாட்டில் எஸ்றாவும் சக லேவியர்களும் கடவுளுடைய வார்த்தையை வாசித்து அங்கிருந்தவர்களுக்கு அதை விளக்கினார்கள். அதன் பலன்? ‘ஜனங்கள் எல்லாரும் தங்களுக்கு அறிவிக்கப்பட்ட வார்த்தைகளை உணர்ந்துகொண்டபடியால், . . . மிகுந்த சந்தோஷம் கொண்டாட போனார்கள்’ என நெகேமியா 8:12 நமக்குச் சொல்லுகிறது. எஸ்றாவையும் சக லேவியர்களையும் போல அபிஷேகம் செய்யப்பட்ட அடிமை வகுப்பார் கடவுளுடைய வார்த்தையைப் பயன்படுத்துகிறார்கள், அதற்கு விளக்கமளிக்கிறார்கள், நம் வாழ்க்கையில் பின்பற்றுவதற்கான வழிகளைக் காட்டுகிறார்கள்; அதற்காக நாம் நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோம் அல்லவா? அவ்வாறு செய்வதன் மூலம் அடிமை வகுப்பார், யெகோவாவுடைய ஜனத்தார் அனைவரிடமும் அவருடைய உண்மையான அன்பையும் கரிசனையையும் பிரதிபலிக்கிறார்கள். “கடவுளோடு நடவுங்கள்” மாவட்ட மாநாட்டில் ஒரு நாளைக்கூட தவறவிடாதிருக்க தீர்மானமாய் இருங்கள்!
[பக்கம் 3-ன் பெட்டி]
நிகழ்ச்சிநிரல் நேரம்
வெள்ளி, சனி
காலை 9:30 - மாலை சுமார் 5:10
ஞாயிறு
காலை 9:30 - மாலை சுமார் 4:05
[பக்கம் 4-ன் பெட்டி]
அறை வசதி ஏற்பாடுகளுக்கு நீங்கள் எப்படி ஆதரவு அளிக்கலாம்
◼ பட்டியலிலுள்ள எல்லா ஹோட்டல்களுக்கும் போன் செய்தும் அறைகள் கிடைக்காவிட்டால் அல்லது ஹோட்டல் புக்கிங்கில் பிரச்சினை ஏற்பட்டால் உங்கள் சபை செயலரிடம் தெரிவியுங்கள். அவர் மாநாட்டின் அறைவசதி இலாகாவுடன் தொடர்பு கொள்வார்.
◼ உங்களுக்குத் தேவையான அறைகளை மட்டுமே புக் செய்யுங்கள்.
◼ முதலில் புக் செய்த ரூமை மாற்றாதீர்கள்.
◼ அறைவசதி இலாகாவால் டார்மட்டரியில் மட்டுமே தங்குவதற்கு ஏற்பாடு செய்து கொடுக்கப்படும். எனவே ஹோட்டல் அறைகளை புக் செய்வதற்காக அறைவசதி இலாகாவிற்கு தயவுசெய்து பணத்தை அனுப்பாதீர்கள்.
◼ உங்கள் வேண்டுகோளின் பேரிலேயே சத்திரங்கள் புக் செய்யப்படுகின்றன. எனவே தயவுசெய்து உங்களுக்கு நியமிக்கப்படும் சத்திரத்திலேயே தங்குங்கள். விண்ணப்பத்தை அனுப்புகையில் எத்தனை பேர் தங்குவீர்கள் என குறிப்பிட்டிருந்தீர்களோ அதற்கும் அதிகமானோரை தங்க வைக்கும்படி எதிர்பார்க்காதீர்கள்.
◼ மாநாடு முடிந்து செல்வதற்கு முன்பாக டார்மட்டரியில் தங்கியதற்கான வாடகைப் பணம் முழுவதையும் மறக்காமல் அறைவசதி இலாகாவிடம் கொடுத்துவிட்டு செல்லுங்கள்.