சத்தியத்தில் இல்லாத துணைக்கு நாம் எப்படி உதவலாம்?
1 யெகோவாவுக்கு ஊழியராயிருக்கும் அநேகரது விவாகத் துணைகள், சாட்சிகளிடம் சிநேகப்பான்மையுடன் நடந்துகொள்கின்றனர், சபை காரியங்களில் அக்கறையும் காட்டுகின்றனர்; ஆனால் கடவுளுக்கு ஊழியராகும் விஷயத்திலோ பின்வாங்குகின்றனர். ஒரு கணவர் இவ்வாறு ஒத்துக்கொண்டார்: “வீடு வீடாகப் போக வேண்டியதை நினைத்தாலே எனக்கு மலைப்பாக இருந்தது.” மற்றவர்களோ, பைபிளுக்கு முரணான தங்கள் பழக்க வழக்கங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியிருக்கலாம், அல்லது தங்கள் விவாகத் துணைகளைப் போல தங்களாலெல்லாம் தேவராஜ்ய காரியங்களை மும்முரமாக செய்ய முடியாது என்பதாக உணரலாம். அப்படிப்பட்டவர்களுக்கு நாம் எப்படி உதவலாம்?
2 தனிப்பட்ட அக்கறை காட்டுங்கள்: தனிப்பட்ட அக்கறை காட்டுவதும், அவர்களுடைய தயக்கத்தை கருத்தில் கொள்வதும், சத்தியத்திற்குள் வர அவர்களுக்கு வழி திறக்கலாம். (பிலி. 2:4) ஒருகாலத்தில் சத்தியத்தில் இல்லாத துணைகள், தங்களிடத்தில் சாட்சிகள் அன்போடு காட்டின அக்கறையைப் பற்றி அடிக்கடி சொல்கிறார்கள். “சபை மூப்பரான ஹோசே என்னிடம் ஒரு தனி அக்கறை காட்டினார்” என்றார் முன்பு குறிப்பிடப்பட்ட அந்தக் கணவர். “அவர் தந்த உற்சாகம்தான் என்னை கடைசியில் சீரியஸாக பைபிளை படிக்க வைத்தது என்று சொல்வேன்.” தன்னை சந்திக்க வந்த சகோதரர்கள் தனக்கு விருப்பமான விஷயங்களைப் பேச சிரத்தை எடுத்துக்கொண்டதை மற்றொரு கணவர் சொல்கிறார். “[என் மனைவியின்] மதத்தை முற்றிலும் வித்தியாசமான கோணத்தில் பார்க்க ஆரம்பித்தேன்” என்றார் அவர். “அவளுடைய நண்பர்கள் எல்லாம் பல்வேறு விஷயங்களை தெரிந்து வைத்திருக்கும் படுபுத்திசாலிகள், எதைப் பற்றிப் பேசவும் சளைக்காதவர்கள்.”—1 கொ. 9:20-23.
3 நடைமுறை உதவி அளியுங்கள்: மற்றவர்கள் தங்களுக்கு தயவுடன் உதவியதைக் கண்டும் சத்தியத்தில் இராத துணைகள் உள்ளம் நெகிழ்ந்திருக்கின்றனர். (நீதி. 3:27; கலா. 6:10) சத்தியத்தில் இராத ஒரு கணவரின் கார் மக்கர் செய்தபோது, ஓர் இளம் சாட்சி அவருக்கு உதவினார். “அது என்னை பெரிதும் கவர்ந்துவிட்டது” என்று அவர் சொல்கிறார். ஒரு சகோதரியின் கணவர் சத்தியத்திற்கு வருவதற்கு முன்பு, அவருடைய நிலத்திற்கு வேலி போடுவதற்கு ஒரு சகோதரர் ஒரு நாள் முழுக்க அவருக்கு உதவினார். பேசிக்கொண்டே இருவரும் வேலை பார்த்ததால் அவர்களுக்கிடையே நட்பு மலர்ந்தது. இரண்டு வாரங்கள் கழித்து அவர் இந்த சகோதரரை அணுகி, “என் வாழ்க்கையில் சில மாற்றங்களை செய்வதற்கான சமயம் வந்துவிட்டது. நீங்கள் எனக்கு பைபிள் படிப்பு நடத்துகிறீர்களா?” என்று கேட்டார். பிறகு அவர் கிடுகிடுவென முன்னேற்றம் செய்து இப்போது ஒரு முழுக்காட்டப்பட்ட சாட்சியாக இருக்கிறார்.
4 நம் பிராந்தியத்தில் தகுதியானவர்களை தேடிக்கொண்டே இருக்கையில், உடன் விசுவாசிகளின் விவாகத் துணைகளுக்கும் தொடர்ந்து உதவுவோமாக.—1 தீ. 2:1-4.