ராஜ்யமன்ற அழைப்பிதழ்களைப் பயன்படுத்துகிறீர்களா?
ஒருநாள், 11 வயது சிறுவன் ஒருவன் ஓர் அழைப்பிதழைக் கண்டான். நரகத்தைப் பற்றிய ஒரு பொதுப் பேச்சுக்கான அழைப்பிதழ் அது. அவன் இவ்வாறு சொல்கிறான்: “அந்தத் தலைப்பு என்னை ரொம்பவே கவர்ந்தது. நான் எப்போதும் தப்பு செய்துவந்ததால் இறந்த பிறகு நிச்சயம் நரகத்திற்குத்தான் போவேன் என்று பயந்துகொண்டிருந்தேன்.” அந்தப் பேச்சைக் கேட்க அவன் சென்றிருந்தான். அதன்பின் ஏறக்குறைய ஓர் ஆண்டு பைபிளைப் படித்தான், பிறகு முழுக்காட்டுதல் பெற்றான். இப்படித்தான் தொடங்கியது, கார்ல் கிளைனின் கிறிஸ்தவ வாழ்க்கை. பிறகு இவர் பல வருடங்களாக யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழுவின் ஓர் உறுப்பினராகச் சேவை செய்தார். தெருவில் கிடந்த அந்தச் சிறிய அழைப்பிதழ்தான் இதையெல்லாம் ஆரம்பித்து வைத்தது.
இன்றும்கூட ராஜ்யமன்ற அழைப்பிதழ்கள் சாட்சி கொடுப்பதற்குச் சிறந்த கருவிகளாக இருக்கின்றன. ஆட்களிடம் தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு, பேச்சை ஆரம்பிக்க அந்த அழைப்பிதழைக் கொடுப்பதே சுலபமான வழி என அநேக பிரஸ்தாபிகள் உணருகிறார்கள். பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளை ஊழியத்தில் பங்குகொள்ள பயிற்றுவிப்பதற்கு, ராஜ்யமன்ற அழைப்பிதழ்களைக் கொடுக்கச் சொல்லலாம். கடிதம் மூலம் சாட்சி கொடுக்கும் பிரஸ்தாபிகளும் கடிதத்தோடு ஓர் அழைப்பிதழை வைத்து அனுப்புவதன் மூலம் சபை கூட்டங்களைப் பற்றி தெரியப்படுத்தலாம். அதோடு, ஆர்வம் காட்டுகிறவர்களையும் நம்முடைய பைபிள் மாணாக்கரையும் கூட்டங்களுக்கு அழைப்பதற்கான எளிய வழியாகவும் அது இருக்கிறது.
உங்களுடைய ஊழியத்தில் ராஜ்யமன்ற அழைப்பிதழ்களை நன்கு பயன்படுத்துகிறீர்களா?